என் விழியில் உன் பிம்பம்-2

 

அல்லிக்குளத்தின் ஊர் எல்லையில் இருந்தது அந்த பெரிய வீடு.முகப்பு வாயில்,கலியாணக் கொட்டகை, பெரிய முற்றம்,இரண்டாங்கட்டு,பந்திக்கட்டு, சமையல் கட்டு என அரண்மனை போன்று இருந்தது அது.

 

வீடு முழுவதும் வேலையாட்கள் அவரவர் வேலையை வேகமாக செய்துக் கொண்டிருந்தனர்.பின் கட்டில் இரண்டு மூன்று ஆட்கள் இருந்தனர்.ஒருவன் வெண்ணீர் அடுப்பை ஊதிக் கொண்டிருந்தான்.இன்னுமிருவர் அவர்களின் முதலாளிக்கு எண்ணெய் தேய்த்து நீவி விட்டுக் கொண்டிருந்தனர்.ஆறு அடி உயரத்தில் கோதுமை நிறத்தில் ஆணழகனாக இருந்த அவனுக்கு எண்ணெய் தேய்ப்பதில் நான் நீ என்று போட்டியிடுவர் அவனின் ஆட்கள்.

 

ரங்கைய்யா!துரைய்யா!என அவரவருக்கு விருப்பமான பெயர்களில் அவனை மரியாதையோடு அழைத்து அவன் காலால் இடத்தை தலையால் செய்வர் அவனின் குடி ஆட்கள்.அவன் இம்மென்றால் அவனுக்காக உயிரையும் விட்டுவிடுவர் அவர்கள்.ஆனால் சுத்துப்பட்டு ஊர்களில் முரடன் என்றும் ரவுடி என்றும் அவன் வழியில் குறுக்கிட்டவரை தூக்கி எறிந்து விடுவான் என்றும் பெயர் வாங்கியிருந்தான்.பெற்றோரை சிறு வயதிலேயே இழந்தவனுக்கோ கூடப் பிறந்தோரும் இல்லை.பரம்பரையாக வந்த நிலம் நீச்சோடு இவனாக ஆரம்பித்த அரிசி மில்,கறும்பு ஆலை,டவுனிலிருந்த ஐந்தாறு கடைகள் என பணத்திற்கு எந்த குறையும் இல்லை.ஆனால் இவனின் முரட்டு குணத்தால் சொந்த பந்தங்கள் கூட ஏதாவது விசேஷம் என்றால் மட்டுமே வீட்டிற்கு வருவர்.ஆனால் உதவி என்று அவனிடம் யாராவது கேட்டுவிட்டால் எப்பாடு பட்டாகிலும் அந்த உதவியை செய்வான்.அவனோடு நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே அவனின் நல்ல உள்ளத்தைப் பற்றித் தெரியும்.

 

நல்ல வென்னீரில் குளித்து தலையைத் தோட்டியபடி ரங்கதுரை நின்றபோது வெளியிலிருந்து வந்த வேலையாள் ஒருவன்

 

“எசமான்!உங்கள பாக்க ஒரு பொண்ணு வந்து வெளியில காத்துகிட்டு இருக்குங்க”

 

எனவும் அங்கிருந்தவர் அனைவரும் தங்கள் வேலையை விட்டு திகைத்து நின்று விட்டனர்.ஏனென்றால் இது வரை ரங்கதுரையைத் தேடி எந்த பெண்ணும் வீடு வரை வந்ததில்லை.எந்த விஷயமானாலும் அவன் விவகாரமெல்லாம் இதுவரை வெளியிலேயே இருக்கும்.இத்தனை நாட்கள் இல்லாத வண்ணம் பெண் ஒருத்தி வந்திருக்கிறாள் எனவும் அவர்கள் திகைத்ததில் வியப்பில்லை.

 

ரங்கதுரையை சிறு வயது முதலே அந்த வீட்டில் வேலை செய்யும் சித்தையன் என்பவனுக்கு அவனிடம் சலுகை அதிகம் அந்த தைரியத்தில் விவரம் சொல்லியவனிடம்

 

“ஏலே கருப்பா!வந்த புள்ளக்கி என்ன வயசிருக்கும்?”

 

என்று அவன் வினவவும் சுற்றி நின்றிருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.அவர்கள் சிரிக்கவும் துரை

 

“ம்…..என்ன சிரிப்பு..போங்க போயி அவிங்கவிங்க வேலையப் பாருங்க”என அவர்களை விரட்டவும் அனைவரும் சத்தமில்லாமல் அங்கிருந்து அகன்றனர்.சேதி சொன்னவனிடம் திரும்பி

 

“கருப்பா!வந்தவங்க உள்ளாற ஒக்கார்த்தி வைச்சு கண்ணம்மா ஆச்சிக்கிட்ட சொல்லி காபி தண்ணி கொடுக்க சொல்லு…நா பத்து நிமிட்டுல வரேன்”என்றபடி பின்கட்டிலிருந்த அறைக்கு விரைந்தான்.

 

பளிச்சென்ற வேட்டி சட்டையில் முற்றத்திற்கு வந்தவன் முதலில் பார்த்தது அங்கு பெரிதாக மாட்டியிருந்த அவனின் பெற்றோரின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏந்திழையைத் தான்.ஆம் அந்த பெண் நம் இந்துமதி.

 

காலை எல்லா வேலையும் விரைவாக செய்த இந்து வீட்டில் தோழிக்கு உடல்நலம் சரியில்லாததால் அவளைப் பார்த்து வருவதாகக் கூறி அல்லிக் குளத்திற்கு புறப்பட்டு விட்டாள்.அன்று கல்லூரி வேறு விடுமுறையாதலால் அவளுக்கு இன்னும் சுலபமாகி விட்டது.

 

பிரம்மாண்டமாக நின்றிருந்த அந்த வீட்டையும் ஆள் பலத்தையும் கண்டு அவளுக்கு உள்ளுக்குள் சிறிது பயமாகத்தான் இருந்தது.ஆனால் தோழிக்காக தைரியத்தைத் திரட்டியவள் வீட்டின் அருகில் சென்று நின்ற போது அங்கிருந்த வேலையாள்

 

“யாரும்மா நீங்க?யாரைப் பாக்க வந்திருக்கீங்க?”

 

“நா இந்த வீட்டவங்கள பாக்கனும்… கொஞ்சம் வர சொல்றீங்களா?”

 

ஒரு இளம்பெண் ஐயாவைத் தேடிக் கொண்டு வந்ததைக் கண்டு பதில் சொல்லாமல் மலைத்து நின்றுவிட்டான் அவன்.

 

“பாருங்க..நா அவருக்கிட்ட ரொம்ப அவசரமா பேசனும்…அவர வர சொல்றீங்களா?”

என மீண்டும் கேட்டாள்.

 

திகைப்பிலிருந்து வெளியே வந்தவன்

 

“உள்ள வந்து ஒக்காருங்க ஐயாவ கேட்டிட்டு வரேன்”

 

என்றவன் உள்ளே சென்று விட்டான்.

 

அவன் பார்வையில் இருந்த திகைப்பைக் கண்ட இந்துவிற்கு அவன் தன்னைப் பற்றி என்ன தவறாக எண்ணுவது தெள்ளத்தெளிவாக புரிந்தது.பின்னே ஒரு வயது பெண் ஒரு ஆணைத் தேடிக் கொண்டு வந்தால் அவளைப் பற்றி இந்த உலகம் தவறாகத் தான் நினைக்கும்.வீட்டில் வேலைக்காரனே இப்படி ஒருமாதிரியாகப் பார்க்கும் போது உள்ளே இருக்கும் அந்த ரங்கதுரையின் மனைவி வந்து தன்னை யார் என்ன என்று கேள்விக் கேட்டால் என்னவென்று சொல்வது என்று படபடப்பாக இருந்தது அவளுக்கு.அவர் மனைவி வீட்டில் தான் இருக்கிறாரா? என்று யாரைக் கேட்பது?கேட்டால் அவர்கள் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தது போல் ஆகிவிடும்…’

 

இப்படி எதையெதையோ எண்ணி குழம்பினாள்.மனதை மாற்றும் விதமாக அங்கே மாட்டியிருந்த படங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.அங்கே நடுநாயகமாக மாட்டியிருந்த படத்தில் தன் கணவரோடு நின்றிருந்த பெண்ணின் அழகை மெய்மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“அவங்க இந்த வீட்டு பெரியவங்க..இப்ப ரெண்டு பேருமே இல்ல”

 

என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் இந்து.அங்கே நின்றிருந்தவனை விழி விரியப் பார்த்தாள்.

 

“நீங்க?!”என்றான் துரை.

 

அவன் ஏதோ அந்த பெரிய மனிதரின் காரியதரிசியாக இருக்க வேண்டும் என எண்ணிய இந்து

 

“நா இந்துமதி!பக்கத்துல பூங்குளம் தான் என் ஊரு… இந்த வீட்டு பெரியவரைப் பாக்கனும்”

 

‘பெரியயயவரா?!!!’என மனதிற்குள் சிரித்துக் கொண்ட துரை அவளின் தவறான கணிப்பையேத் தொடர்வோம் என எண்ணி

 

“ஆமா அவர நீங்க எதுக்கு பாக்கனும்…அவர உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?”

 

“அவர நேரப் பாத்தது இல்ல…அவருக்கிட்ட முக்கியமான விஷயம் ஒண்ணு பேசுனும்… கொஞ்சம் அவருக்கிட்ட சொல்றீங்களா?”

 

“முக்கியமான விஷயமா?ஏம்மா அவர இதுவரைக்கும் பாத்தது இல்லேன்னு சொல்றீங்க…அப்பிடி இருக்கும் போது அவருக்கும் உங்களுக்கும் பேச என்ன இருக்கு?”

 

‘என்னடா இது!இவன் கேள்வி மேல கேள்விக் கேட்டு கடுப்ப கெளப்பறான்…இவங்கிட்ட என்னத்தேன்னு சொல்றது?’என மனதிற்குள் அவனைத் திட்டினாள்.

 

“என்னங்க இது…அவர முன்னயே தெரியும்ன்னா தான் அவர பாக்க வரணுமா?அவரு பெரிய மனுசரு அவருக்கிட்ட ஏதோ உதவிக் கேக்லாம்னு வந்தா…என்னமோ வக்கீலாட்டம் குறுக்குக் கேள்விக் கேக்கறீங்க”

 

அவள் கோபத்தைக் கண்டு அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.ஏனோ அவளோடு இதே போல் விளையாடிப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது அவனுக்கு.அவன் மனதை எண்ணி அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.இத்தனை ஆண்டுகளில் எந்தப் பெண்ணோடும் அதைப் போல அவன் உணர்ந்ததே இல்லை.அவன் தாய் இறந்த பின் வேறு எந்த பெண்ணுக்கும் அவள் வாழ்வில் இடமே இருந்தது இல்லை.ஆனால் இந்த பெண்ணைப் பார்த்து சில மணித்துளிகள் தான் ஆகியிருந்தது.ஆனால் ஏனோ காலங்காலமாக அவளோடு பழகியது போல் ஓர் உணர்வு தோன்றியது.அவன் யாரென்று அறியாமலே அவனோடு வாதம் செய்யும் அழகை ரகசியமாக ரசித்தான் அவன்.வேலையாட்கள் யாரும் வராமல் இருக்க வேண்டுமே என தவித்தது அவன் மனம்.வந்தால் அவன் ஆட்டம் முடிந்து விடுமே.அவன் தன்னிலேயே முழுகி இருந்த போது இந்துவின் குரல் அவனை நினைவுலகத்திற்கு அழைத்து வந்தது.

 

“சார் தயவு செஞ்சு ஐயாவ கூப்பிட்றீங்களா?நா ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு போயிட்றேன்”

 

“இத பாருங்க…ஐயா ஊர்ல இல்ல…வெளியூர் போயிருக்காரு…திரும்பி வரத்துக்கு நாலு நாள் ஆகும்… நீங்க போயிட்டு நாலு நாள் கழுச்சி வாங்க…”

 

“ஐயோ நாலு நாளா?அதுக்குள்ள அவ உயிரையே விட்றுவா…”

 

“என்னது…உயிர விடுவாங்களா…யாரு?ஏன் அப்படி பண்ணனும்…”

 

தான் மனதில் நினைத்ததை வாய் விட்டே பேசியதை அப்போது தான் உணர்ந்தாள் இந்து.அவனை இப்போது எப்படி சமாளிப்பது? என்னவென்று சொல்வது?எனக் குழம்பினாள்.

 

“இத பாருங்க எதா இருந்தாலும் சொல்லுங்க… யாருக்கு என்ன கஷ்டம்… எதுக்கு அவங்க உயிர விடனும்?இப்ப சொல்றீங்களா?இல்லையா?”

 

ஏனோ அவனிடம் சொல்லலாம் எனத் தோன்றியது அவளுக்கு.எப்படியும் பெரியவர் ஊரில் இல்லை.அவர் ‌திரும்பி வரும்வரை பத்மாவின் நிலை மோசமாகிவிடும்.எப்படியும் இவனும் இங்கேயே வேலைப் பார்ப்பதால் அந்த சுரேஷை இவனுக்கு தெரிந்திருக்கலாம்.இவனே அவனிடம் பேசி இந்த பிரச்சனையை சரி செய்யக் கூடுமே?!!என்ற நினைவில் அவள் கூறத் தொடங்கும் முன்

 

“நீங்க மொதல்ல இங்க ஒக்காருங்க…ஒக்காத்துகிட்டு நிதானமா எல்லாத்தையும் சொல்லுங்க”என்று அருகிலிருந்த நாற்காலியில் அவளை உட்கார சொன்னான்.

 

சிறிது நேரம் தயங்கியவள் பின் மனதைத் திடப்படுத்திக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்.

 

விஷயத்தை அறிந்த ரங்கதுரையின் முகம் செந்தணல் போல் கோபத்தில் எரிந்தது.பொங்கியக் கோபத்தை எதிரே இருப்பவளுக்காக கை முஷ்டியை இறுக்கி அடக்கினான்.நல்லவேளை இது போன்ற ஒரு விஷயத்தை அன்னியனான ஒருவனிடம் சொல்ல நேர்கிறதே என இந்து தலையைக் குனிந்தவாறே தான் சொன்னாள்.இல்லையென்றால் அவனின் கோபத்தைக் கண்டு நடுநடுங்கி போயிருப்பாள்.

 

ரங்கதுரை எப்போதுமே தெரிந்தே தவறு செய்பவரை மன்னிக்கவே மாட்டான்.அதிலும் பெண்கள் விஷயத்தில் யாரேனும் தவறு செய்தால் முதலில் பேசுவது அவன் கைதான்.அப்படி தவறு செய்தவன் அவனிடமே வேலை செய்கிறான் என்ற போது அவனைக் கொன்று குவிக்கும் அளவு ரௌத்திரம் கொண்டான்.ஆனால் அவனைக் கொல்வதால் ஒரு பெண்ணின் வாழ்வு அந்நியாயமாக அழிந்து விடும்.அதனால் இதை பொறுமையாகத் தான் கையாள வேண்டும் என மனதிற்குள் தீர்மானித்தான்.தன் கோபத்தை சில நொடிகளில் கட்டுக்குள் கொண்டு வந்தவன் அங்கே தலையைக் குனிந்த வண்ணம் அமர்ந்திருந்த இந்துவை

 

“பாருங்க…இது பெரிய விஷயம்தான்…ஒரு பெண்ணோட வாழ்க்கையைக் கெடுத்துட்டு அவன் நிம்மதியா வாழ முடியாது…அப்படி அவன் அந்த பொண்ண கைவிட இந்த ஊர்காரங்களா இருந்துகிட்டு நாங்க விட மாட்டோம்… நீங்க நிம்மதியா போங்க… இன்னும் ரெண்டு நாள்ல சுரேஷ் அவன் வீட்டவங்களோட வந்து அந்த புள்ளய பொண்ணு கேட்பான்…அது இந்த வீட்ட நம்பி வந்த உங்களுக்கு நா பண்ற சத்தியம்”

 

அவனின் பேச்சில் அசந்து விட்டாள் இந்துமதி.அவளுக்கு மேலே பேச வாயே எழவில்லை.ஏனோ அவன் சொன்னதை செய்வான் என அவளின் உள் மனம் உறுதியாக நம்பியது.அதனால் வருகிறேன் என தலையை மட்டும் அசைத்தவள் அவனும் சரி என தலையை அசைக்கவும் அங்கிருந்து வெளியேறினாள்.

 

வீட்டிற்கு வந்த இந்துமதிக்கு அந்த இரண்டு நாளும் மனமே சரியில்லை.ஒவ்வொரு நொடியும் என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று எண்ணியபடி எதிலும் கவனமில்லாமல் சுற்றி வந்தாள்.ஒரு நொடி அந்த மனிதனை நம்பியது சரிதானா?அவனால் என்ன செய்ய முடியும்?அவனை நம்பி வேறு எதுவும் செய்யாமல் இருப்பது தவறோ என்று எண்ணுபவள் மறுநொடியே இல்லை இல்லை…அவன் கூறியது போல் கண்டிப்பாக இந்த பிரச்சினையை சரி செய்வான்…அவனை நம்பலாம்..என இருவேறு எண்ணங்களில் சிக்கித் தவித்தாள்.வீட்டிலிருந்தவர்கள் அவளுக்கு உடல் நிலை சரியில்லை என்று எண்ணி அவளை கல்லூரிக்கு அனுப்பவில்லை.பொங்கிய பாலை பார்க்காமலும் இலையில் அல்லாது தரையில் குழம்பை ஊற்றுவது என நிலைக் கொள்ளாமல் தவித்தாள் இந்து.

 

இரண்டாம் நாள் முடியும் முன்பே தோழியிடமிருந்து நல்ல சேதி வந்துவிட்டது.பத்மாவின் தம்பி சுந்தரே வந்து அக்காவை சுரேஷ் வீட்டினர் பெண் பார்க்க வந்ததாகவும் அப்போதே பரிசம் போட்டு சென்று விட்டார்கள் என்றும் இன்னும் ஒரே வாரத்தில் திருமணம் என்றும் கூறி அவள் இப்போதே வீட்டிற்கு வர வேண்டுமென அவளை அழைத்தான்.

 

சொல்லியதை நடத்திக் காட்டிய அந்த மாமனிதனிடம் மனதிற்குள் நன்றி கூறினாள் இந்துமதி.