காவியத் தலைவன் – 9

கடலின் அலைகளைப் போன்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது சத்யேந்திரனின் மனம். அவன் எதிர்பாராத நேரத்தில் விழுந்த பலமான அடியால் மொத்தமாக நிலைகுலைந்து போயிருந்தான். இதயத்தைப் பிடுங்கி எரிந்தது போல வலி. வலியை தாங்கிக்கொள்ள முடியாத ஆத்திரம், கோபம், ஆக்ரோசம்.

அவனது அறையிலிருந்த பொருட்கள் எல்லாம் திசைக்கொன்றாக சிதறி சின்னாபின்னமானது.

அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்து, “ஆஆ…” என ஆக்ரோசமாக கத்தினான். ஆத்திரம் அடங்க மறுத்தது.

கண்கள் சிவந்து, முகமெல்லாம் வியர்த்து இருந்தவன், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கைகளை இறுக மூடி தரையில் வேகமாகக் குத்திக் கொண்டான். அதிக வலியை தந்திருக்கும். அதை உணரும் நிலையில் அவன் இல்லை.

அந்தளவிற்கு மனம் எங்கும் ரணம். பச்சை புண்ணாய் வலித்தது. அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியும் இல்லை. எதிர்த்துப் போராடும் மனவலிமையும் இல்லை.

சின்ன வயதில் கொண்ட காயத்திற்கே இன்னும் மருந்தைத் தேடிக் கொண்டிருப்பவன், அந்த வயதின் அச்சமோ அல்லது பக்குவமற்ற தன்மையோ… அப்படியே அன்றைய காயத்தை அடியாழத்தில் புதைத்துவிட்டான்.

அதன் கனம் அதிகம் என்பதால் அவனே அதனைச் சுத்தமாக மறந்தும் விட்டு, காரணமற்ற அச்சத்தோடு நடமாடிக் கொண்டிருக்கிறான்.

இப்பொழுது அவனிடம், அவன் கொண்டிருக்கும் அதீத அச்சமும் பாதுகாப்பின்மையும் எதற்கென்று கேட்டால் அவனே அறிந்திருக்க மாட்டான். அவனது மனதின் அடியாழத்தில் புதைந்திருந்த உண்மை வெளிவரும் காலம் வரை அவனது குடும்பம் துரோகத்தின் பிடியில் தான் சிக்குண்டு இருக்கப் போகிறது அவர்களே அறியாமல்.

அறையின் வெளியில் அவன் நண்பர்கள் கதவைத் தட்டி தட்டி ஓய்ந்து போனார்கள். எல்லாருக்கும் பயம் பிடித்துக் கொண்டது. உள்ளே அவன் என்ன செய்கிறானோ என்ற பதற்றம். இவன் என்ன காதல் தோல்விக்கு இந்த பாடு படுகிறான் என்று நொந்து போனார்கள்.

“டேய்… அவங்க அண்ணா கிட்ட சொல்லிடலாம். இவன் இன்னும் கதவை வேற திறக்க மாட்டேங்கறான். எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு. அவங்க அண்ணாவோட பி. ஏ., நம்பர் என்கிட்ட இருக்கு…” என்று ஒருவன் யோசனை சொல்ல,

“அப்ப சீக்கிரம் அவருக்கு போனை போடுடா… இவன் வேற எப்ப என்ன செய்வான்னு தெரியலை” என வேகமாகப் பதில் சொல்லியிருந்தான் இன்னொருவன்.

இங்கு இவர்கள் தென்னரசு மூலம் ஆதீஸ்வரனுக்கு தகவல் சொல்லியிருக்க, இவர்கள் பயந்தது சரி தான் என்பது போல… ஏமாற்றத்தின் உச்சத்திலிருந்த சத்யேந்திரன் தன் சுயகட்டுப்பாட்டிலேயே சுத்தமாக இல்லாமல், கைக்கு அகப்பட்ட மது பாட்டிலை எடுத்து கணக்கின்றி குடித்துக் கொண்டிருந்தான்.

காதல் எந்தளவு அவனுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்கியதோ அதற்கு நிகராக அதன் தோல்வி அவனுக்கு சோகத்தையும், அனுபவிக்க முடியாத வலியையும் பரிசளித்து கொண்டிருந்தது.

சத்யேந்திரனுக்கு கனிகா ஒரு நல்ல தோழியாக தான் அறிமுகம் ஆனாள். அவள்மீது எந்த ஈடுபாடும் அவனுக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்ததே இல்லை. மற்ற நண்பர்களைப் போன்று தான் அவளையும் பார்த்தான்.

நாளாக நாளாக அவளுடனான நெருக்கம் சத்யாவிற்கு அதிகமானது. உண்மையில் அது கனிகாவின் கைங்கரியம், சாமர்த்தியம். தினமும் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்தவள், அன்பாக இருப்பவள் போல, அவன் மீது அக்கறையைக் கொட்டுபவள் போலப் பல அவதாரங்களைக் காட்டி அவனை மயக்கத் தொடங்கினாள்.

இதற்கும் பீகாரில் ஒருவனோடு காதல் கொண்டு சுத்திக் கொண்டிருப்பவள், அவளது தந்தை பிரதாபன் சொல் தட்டாத பிள்ளையாக சத்யாவையும் ஏமாற்றத் தொடங்கியிருந்தாள். இது அறியாத அவனும் அவள் வலையில் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியத் தொடங்கியிருந்தான்.

ஆனாலும் அண்ணா, பாட்டி என்ற சத்யாவின் தொடர் புராணம் தாங்காது, அவனை மொத்தமாக மயக்கும் பொருட்டு தான், கனிகா ஏற்கனவே இழந்திருந்த கற்பை ஹைமனோபிளாஸ்டி சர்ஜரி மூலம் மீண்டும் மீட்டெடுத்து, இயல்பாக அமைவது போல, அவனுடனான உறவையும் ஏற்படுத்திக் கொண்டு, அதைக்கொண்டு அவனின் பிடியை மொத்தமாக தன் கைக்குள் கொண்டு வந்திருந்தாள்.

சத்யாவை பொறுத்தவரை கனிகா என்ற பெண் அவனின் ஜீவன். தன் பெண்மையையே ஒரு பெண் தனக்காக அர்ப்பணிக்கிறாள் என்றால் எந்தளவுக்கு தன் மீது நம்பிக்கையும் காதலும் கொண்டிருப்பாள் என்று பிரமித்துக் கொண்டிருந்தான். அதனால் தான் அவளை அனைவரை விடவும் ஒரு படி மேலே வைத்திருந்தான். அவள்மீது பாசமும் அதிகம். நம்பிக்கையும் அதிகம். அவர்களுக்குள் என்ன சலிப்பு வந்தாலும், கோபம் எழுந்தாலும் ஏதோ ஒரு புள்ளியில் நிச்சயமாக இவன் விட்டுக்கொடுத்துப் போய் விடுவான்.

உயிர் நேசம் என இவன் எண்ணியிருக்க, திடீரென்று அவளுடனான தொடர்பு மொத்தமாக விட்டுப் போனால் அவனும் தான் என்ன செய்வான். எங்கே போனாள்? என்ன ஆனாள்? என எந்த விவரங்களும் தெரியவில்லை. அவளைத் தேடிக்கொண்டு பீகார் வரை சென்று பார்த்து விட்டும் வந்து விட்டான். ஏமாற்றம் தான் மிச்சம். அவளைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அவன் உயிரே கூட்டை விட்டுப் பிரிந்தது போல ஆனது. மொத்தமாக நிலைகுலைந்து போனான்.

என்னவோ இதற்கெல்லாம் காரணம் அண்ணனாகத் தான் இருக்கும். அவனுக்கிருக்கும் அரசியல் செல்வாக்காகத் தான் இருக்கும் என்று பைத்தியகாரத்தனமான எண்ணம். அண்ணன் மீது ஆத்திரமாக வந்தது. காரணமே இல்லாமல் பூஜிதாவை வெறுத்தான். எல்லாம் அவளால் தான் என கோபம் கோபமாக வந்தது.

விரக்தி நிலை கொஞ்சம் கொஞ்சமாக முற்றி அவளைக் காண முடியாத, அவளுடன் பேச முடியாத இந்த சில நாட்களுக்குள் அதிக மன அழுத்தத்தில் இருந்தவன், இன்று மிகவும் நம்பகமான இடத்திலிருந்து கிடைத்த உறுதியான தகவல் மூலம், இதற்குக் காரணம் அண்ணன் தான் என முழுமையாக நம்பினான்.

அண்ணன் ஏதோ சதி செய்து கனிகாவை தன் வாழ்க்கையிலிருந்து விலக்கி விட்டான். அவள் இனி தன் வாழ்வில் திரும்பவும் வரவே மாட்டாள் என அவனாக எண்ணிக்கொண்டு அவதிப்படுகிறான்.

பாவம் அவள் எங்கு சென்றாளோ? நான் இல்லாமல் எப்படி கஷ்டப்படுகிறாளோ? இப்படி என்னையும் அவளையும் பிரிக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? என்ற கோபம் தான் இப்பொழுது உச்சக்கட்டத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

சத்யேந்திரனின் நண்பர்கள் அழைத்த பொழுது தான், இன்ஸ்பெக்டர் விவேக்குடனான சந்திப்பை முடித்திருந்தான் ஆதீஸ்வரன்.

விவரம் கேள்விப்பட்டதும், வேகமாகத் தம்பிக்கு அழைக்க அவனுக்கு அண்ணன் மீதிருந்த கோபத்தில் அண்ணனின் பெயர் தாங்கி சிணுங்கிய கைப்பேசியைக் கண்டதுமே, அதனைத் தூக்கி வீசிட, அந்தோ பரிதாபம் அவனின் கைப்பேசி சுவற்றில் பட்டு உயிரை தொலைத்திருந்தது.

ஆதீஸ்வரன், “ம்ப்ச்…” என்று சலிப்புடன் தலையில் தட்டிக்கொள்ள, “என்ன ஆச்சு சார்?” என காரை ஓட்டிக்கொண்டிருந்த தென்னரசு பதற்றத்துடன் கேட்டான்.

“போன் எடுக்க மாட்டீங்கறான்” என அலுப்புடன் சொன்னவன், விவேக் தந்த புகைப்படங்களான பிரதாபன், கனிகா, அவளின் அம்மா இருக்கும் புகைப்படங்களை எல்லாம் சத்யாவிற்கு அனுப்பி விட்டு, மீண்டும் அவனுக்கு முயற்சி செய்ய, இந்த முறை அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்த தகவல் கிடைத்தது.

“என்ன செய்யறான் இவன்” என வாய் விட்டே புலம்பியவன், அவனது நண்பர்களுக்கு அழைத்து, “என்ன செய்யறான் போன் எல்லாம் ஆப் பண்ணிட்டு…” என டென்ஷனாக கேட்க,

“சார்… சொல்ல சொல்ல கேட்காம இப்ப தான் கார் கீ எடுத்துட்டு வேகமா போறான். நாங்க எவ்வளவு தடுத்தும் முடியலை. குடிச்சு வேற இருப்பான் போல சார். எங்க பிரண்ட்ஸ் ரெண்டு பேர் அவனை பாலோ பண்ணிட்டு போயிருக்காங்க” என்று அவன் நண்பன் பதற்றமாக சொல்ல, ஆதிக்கு தலையில் இடி விழுந்த உணர்வு.

குடித்துவிட்டு வாகனம்… அதுவும் அவன் இருக்கும் விரக்தி நிலையில்… தன் இதயக்கூடு அதிர்ந்து வேகமாகத் துடிப்பது துல்லியமாக அவனது செவியில் விழுந்தது.

செய்வதறியாத நிலையில் திகைப்பூண்டை மிதித்தவன் போல, திகைத்துப் போய் இருந்தான்.

சத்யாவின் உணர்வுகள் மிகவும் நூதனமானது. ஏழு வயது சிறுவனாய் இருந்தவரை ராஜ வாழ்க்கை வாழ்ந்தவனின் வாழ்வு ஒரே நாளில் தலைகீழ் மாற்றம். அவன் அப்பொழுதே மொத்தமாக சரிந்திருந்தான். மீண்டும் அந்த இளங்குருத்தை கட்டமைக்க யாருக்கும் நேரமோ, பக்குவமோ இல்லை.

அவன் வாழ்வில் விளையாடி கனிகா பெரும் தவறிழைத்து விட்டாள்.

தென்னரசு ஆதியின் அதிர்ந்த தோற்றத்தில் வேகமாக வண்டியை ஓரத்தில் நிறுத்தி விட்டிருந்தான். ஆதீஸ்வரன் தனக்கு ஒன்று என்பதை விடவும், தன் தம்பிக்கோ, பாட்டிக்கோ ஒன்று என்றால் மொத்தமாகத் தடுமாறிப் போய் விடுவான். அவர்கள் மீது அந்தளவிற்கு அன்பும் பாசமும் அதிகம்.

அதை நன்கு அறிந்திருந்த தென்னரசுவும், “சார் நம்ம ரீச் ஆக லேட் ஆயிடும். ரஞ்சித் கிட்ட சொல்வோம். நம்ம ஆளுங்களையும் அனுப்புவோம். அதோட சத்யா பாதுகாப்புக்கு அங்கே ரெண்டு பேரை நிறுத்தி இருக்கோம். அவனுங்களும் இந்நேரம் ஸ்டெப் எடுத்திருப்பாங்க” என்று வேகமாக நிலைமையை உணர்ந்து பேச,

“அவன் வண்டி உடனே நிக்கணும். டிரங்க் அண்ட் டிரைவ்… கண்டிப்பா நான் ஏத்துக்க மாட்டேன். அதால எந்த பிராப்ளம் வந்தாலும் நான் அவன்கூட நான் நிக்க போறதில்லை… அவனை உடனே ஸ்டாப் பண்ணு…” அழுத்தமாகக் கட்டளையிட்ட ஆதியின் குரல், தம்பியின் நினைவில் கரகரத்தும் கொண்டிருந்தது.

தென்னரசுவிற்கு ஆதியை இப்படிப் பார்க்க ரொம்பவும் கஷ்டமாகப் போனது. மனதளவில் மிகவும் தளர்ந்து போயிருக்கிறான் என்று புரிந்தது.

நேரத்தை வீணாக்காமல், வேகமாக ரஞ்சித்திற்கு அழைத்து தகவல் சொன்னான், சத்யாவைப் பின் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கும் நண்பர்களின் விவரங்களையும் கைப்பேசி எண்ணையும் தந்திருந்தான். அங்கே பாதுகாப்பிற்கு நியமித்திருக்கும் ஆட்களின் விவரங்களையும் தந்தான். வேலைகள் துரிதமானது.

இங்கே ஆந்திரா போகும் வழியிலிருந்து சென்னையை நோக்கி ஆதீஸ்வரன் வாகனம் விரைந்து கொண்டிருந்தது. ஆதிக்கு மனம் எல்லாம் சஞ்சலம் எதுவும் தவறாக நடந்து விடக்கூடாதென்ற அச்சம். அவனால் நிதானமாக இருக்க முடியவில்லை. நிம்மதியாக மூச்சுக் கூட விடமுடியவில்லை. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவதாக அவன் உள்ளுணர்வு தொடர்ந்து எச்சரித்து அவனை இம்சித்துக் கொண்டிருந்தது.

அவன் எண்ணியது போன்று தான் அங்கு நிலைமையும். சத்யாவை பின்தொடர்ந்து போன நண்பர்கள் அவனை எப்பொழுதோ தவற விட்டு அவனை தேடிக்கொண்டிருந்தனர். பாதுகாவலர்கள் அவன் வாகனத்தை முந்தியடித்து அதை நிறுத்த முயல, அது அவர்களால் முடியவே இல்லை. தென்னரசுவும் அவனுடன் சில ஆட்களும் விரைந்து சத்யாவின் வாகனத்தைப் பிடிக்க வந்து கொண்டிருந்தனர்.

ஆனால், அதற்குள் சத்யா என்ன நினைத்தானோ காரை வேண்டுமென்றே ஒரு இடத்தில் ஒடித்து திருப்பித் தாறுமாறாக ஸ்டியரிங்கை சுழல விட, சாலை ஓரத்தில் இருந்த மரம் ஒன்றில் நிலைதடுமாறி மோதி நின்றிருந்தது அவனது வாகனம். தலையிலிருந்து குருதி வழிய, மயங்கிச் சரிந்திருந்தவனின் விழிகளுக்குள் அன்னை, தந்தை உயிரிழந்த காட்சி தான் கடைசியாகத் தெரிந்தது. அவர்கள் இறப்பை நேரில் பார்த்தவன் அல்லவா!

மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தான் சத்யேந்திரன். மருத்துவக்குழு அவனுக்கான சிகிச்சையைத் தொடங்கியிருந்தது. அவனுக்குள் சென்றிருந்த மது அரக்கன் அவர்களின் வேலையை மெத்தனப்படுத்திக் கொண்டிருந்தான்.

வெளியில் இறுகிப் போய் அமர்ந்திருந்த ஆதீஸ்வரனை நெருங்கும் தைரியம் யாருக்கும் இருக்கவில்லை.

இன்னும் யாருக்கும் விவரம் தெரிவிக்கப்படவில்லை. பாட்டி அழகாண்டாளின் வயோதிகத்தை கருத்தில் கொண்டு அவரிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கப் பட்டிருந்தது. ஆனால், மனைவியாக சில நாட்களாக வீட்டில் வசிப்பவளின் எண்ணம் ஏனோ ஆதிக்கு வந்திருக்கவில்லை போலும்.

உள்ளிருந்து மருத்துவர்கள் வந்து சொல்லும் செய்திக்காகக் காத்திருந்தவனின் மனம் உலைகலனாக கொதித்துக் கொண்டிருந்தது. அந்த நெருப்பு பிரதாபனை வேரோடு அழிக்கக் காத்திருந்தது.

மருத்துவர்கள் வருவதற்குச் சில மணி நேரங்கள் ஆனது. அது வரையிலும் ஆதி அந்த இடத்தை விட்டு அசையவில்லை. வெளியே வந்தவர்களை நோக்கி, அவன் வேகமாக எழுந்து நிற்க, “அடி நிறைய பட்டிருக்கு. சீட் பெல்ட் போடாம விட்டிருக்காரு… குடிச்சு வேற இருக்கார். அதுனால ட்ரீட்மெண்ட் கொடுக்கிறதை அவரோட உடம்பு ஏத்துக்கலை. தலையில அடி பலமா பட்டிருக்கு. காலுல பெரிய பிராக்ச்சர். தலையில பட்ட அடியால அவர் கிரிட்டிக்கல் ஸ்டேஜ் தான், பட் ரிக்கவரி பாசிபிலிட்டி எஸ் ஹை. டோன்ட் லூஸ் தி ஹோப்…” என்று சற்று சாதகமாகப் பேச, அவனுக்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது.

மருத்துவர் சென்ற பிறகு தளர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தவன், தன் முகத்தை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டான்.

சில நாட்களாக கனிகா தன் தம்பியின் வாழ்க்கையிலிருந்து விலகியதை ஆதி தெரிந்து தான் வைத்திருந்தான். சரி சத்யாவாக சரியாகட்டும் என இவன் தன் கண்காணிப்பு வளையத்திற்குள் மட்டும் அவனை நிறுத்தி, அவனை தொடர்ந்து கண்காணித்து மட்டும் கொண்டிருக்க, சீக்கிரம் சரியாகி விடுவான் என்ற இவனது எண்ணத்தை தவிடு பொடியாக்கி திடீரென்று இந்த நிலையில் இருக்கிறான்.

அவன் மனநிலை மோசமாக போய்விடும் என்று தெரிந்திருந்தும் தான் மெத்தனமாக இருந்து விட்டோமோ என அவனுக்கு உள்ளுக்குள் அத்தனை தவிப்பு.

உண்மையில் தேடிக் களைத்து, அவளாக விட்டு சென்று விட்டாள் என புரிந்து கொள்வான் என்று தான் நினைத்திருந்தான். இத்தனை தூரத்திற்கு சத்யா போயிருக்கக்கூடும் என்று ஆதி நினைக்கவே இல்லை.

தென்னரசுவும் ரஞ்சித்தும் அவன் அடுத்து தரும் கட்டளைக்காகக் காத்திருந்தனர். ரஞ்சித்திற்கு மிகுந்த சஞ்சலம் அவர் தன்னை நம்பி ஒப்படைத்த வேலையை இப்படி தவறவிட்டு விட்டோமே என்ற குற்றவுணர்வில் இருந்தான்.

மருத்துவர்கள் சற்று நம்பிக்கை தரும் விதமாக பேசிவிட்டதாலோ என்னவோ ஆதி கொஞ்சம் தெளிந்திருந்தான். அடுத்து செய்யவேண்டிய வேலைகள் நினைவுக்கு வர, ரஞ்சித்தையும் தென்னரசுவையும் நோக்கித் திரும்பி அழுத்தமாகப் பார்க்க, அவர்கள் வேகமாகச் சென்று அவன் அருகில் நின்றார்கள்.

“பாம்போட பல்லை பிடுங்கியதோட விட்டுடலாம்ன்னு பார்த்தா பாம்புக்கு அது மட்டும் போதாது போலவே, அதை இன்னும் நல்லா செத்த பாம்பு மாதிரி மாத்தணும்…” என பல்லைக்கடித்துக் கொண்டு சொல்ல,

இருவரும் வேகமாக, “பண்ணிடலாம் சார்…” என்றிருந்தார்கள்.

“கொஞ்சம் கூட பிசிறு தட்ட கூடாது… அப்பறம் அந்த பொண்ணு, அவ எங்க இருந்தாலும் நம்ம கண்காணிப்பு வட்டத்துல தான் இருக்கணும். எப்ப தேவைப் படறாளோ அப்ப, சத்யா முன்னாடி அவளை கொண்டு வந்து நிறுத்தணும். அதுக்குள்ள அவங்க அப்பனை என்ன செய்யணுமே சிறப்பா செஞ்சு விட்டுடுங்க…” என அவன் சொல்லிக்கொண்டிருக்க, இவர்கள் இருவரும் கேட்டுக்கொண்டிருந்த அதே நேரம், பதறியடித்துக் கொண்டு அவ்விடம் வீரராகவன் வந்து சேர்ந்திருந்தார்.

அதில் இவர்கள் இருவரும் வேகமாக விலகி நின்று கொள்ள, “என்ன ஆதி… எப்படி நடந்தது இந்த மாதிரி? இந்த நேரத்துல இவன் ஏன் காரை எடுத்துட்டு தனியா போனான்?” என பதற்றமாகக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

அத்தனை நேரம் இருந்த இறுகிய சூழலோ என்னவோ அவனுக்கும் அந்த நேரத்தில் மனம் தளர்ந்து பேச, ஆறுதல் சொற்களைக் கூற ஒருவர் தேவைப்பட்டார் போல!

அவரிடம் ஆறுதல் தேடி பேச தொடங்கியிருப்பானோ என்னவோ, அதற்குள் அவன் புருவங்கள் யோசனையாக சுருங்கிற்று. இன்னும் இந்த விஷயத்தை வெளியே ஒருவருக்கும் தெரிய படுத்தவில்லையே! இவர் எப்படி இங்கு வந்தார் என அவன் தலையை தேய்த்தபடி குழம்ப,

“இந்த சத்யா பையன் ரெண்டு நாளா போனே எடுக்கலை… சரி என்னன்னு அவன் தங்கியிருக்க இடத்துக்கு போனை போட்டு கேட்டா, அங்கே இருக்க அவன் பிரண்ட்ஸ்ங்க தான் சொன்னாங்க…” என்று அவர் பாட்டிற்கு சொன்னவர், “இவன் ஏன் இப்படி தனியா போனான்? இதுக்கு தான் இந்த வெளிய தங்க வைக்கறது எல்லாம் சரிப்பட்டு வராது… ஒன்னு ஈரோட்டுலயே இருக்கட்டும், இல்லாட்டி உன்கூட இருக்கட்டும்ன்னு சொன்னேன்” என அவர் பாட்டிற்கு புலம்ப, ஆதி கண்மூடி அமைதியாகவே இருந்தான்.

என்னவோ அவனுக்கு இப்பொழுது பேசும் மனநிலை சுத்தமாக இல்லை. ஒரு மாதிரி தவிப்பும், சஞ்சலமும் அவனை போட்டு அழுத்தியது.

அவன் நிலை உணர்ந்தவர் போல, “எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் ஆதி. டாக்டர் என்ன சொன்னாங்க” என வீரராகவன் ஆறுதலாக பேசிவிட்டு சத்யாவின் நிலையை விசாரிக்க தொடங்கினார். அவனும் சீரான குரலில் வீராவிற்கு விளக்கம் சொல்லி கொண்டிருந்தான்.

ஆதிக்கு எதிர்பாராமல் கிடைத்த இந்த அடியிலிருந்து அவன் மீண்டு வருமுன் அவனுக்குப் பல அடிகள் விழக் காத்திருந்தது. அதிலிருந்து அவன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற நிறைய போராட வேண்டியிருக்கும். காலத்தின் கணக்கு என்னவோ?