காவியத் தலைவன் – 8

சில நாட்களாக ஆதி நேரடியாக முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லவில்லை அவ்வளவு தான் வித்தியாசம். மற்றும்படி தாராவிடம் நின்று ஒரு வார்த்தை பேசுவதில்லை. சிறு தலையசைப்பு, புன்னகை என எதுவுமே இல்லாத பஞ்ச நிலை தான்.

தாராகேஸ்வரிக்கு கணவனின் இந்த செயலில் மிகுந்த கோபம்.

‘இதே போல இவனிடம் போய், இவன் கொள்கைக்கு, தர்மத்திற்கு விரோதமாக எதையேனும் செய்யச் சொன்னால் செய்வானா என்ன? நான் மட்டும் எப்படி என் தொழில் தர்மத்தை மீற வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்?’ என அவளின் மனம் அவனைத் திட்டி தீர்த்தது.

நியாயத்திற்குக் கோபம் வரவேண்டியது எனக்கு… இங்கானால் இவன் முறுக்கிக்கொண்டு திரிகிறானே என்று தாரா எண்ணினாலும், அவனின் பாராமுகம் அவளின் மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. அவளுக்கென்று இருக்கும் ஒற்றை உறவு இப்பொழுது அவன் மட்டும் தானே!

முன்பு போல திருமணத்தை ஏற்பதா வேண்டாமா என்ற குழப்ப மனநிலை என்றால், இந்தளவு பாதித்திருக்காதோ என்னவோ… இப்பொழுது இவன் என் கணவன் என்ற எண்ணத்தை தனக்குள் விதைத்துக் கொண்டாள். அவனை ஏற்றுக்கொள்வதற்கு அவன் நல்லவன், நேர்மையானவன் என்பது மட்டுமே அவளுக்கு போதுமானதாக இருந்தது. அவனை ஏற்கும் நிலையில் இருந்ததால் தானோ என்னவோ அவனின் விலகல் அவளை மிகவும் பாதித்தது.

ஓரிரு நாட்களில் இந்த நிலை மாறும் என அவள் எதிர்பார்த்திருக்க, கோபத்தை வலுவாக இழுத்துப் பிடித்துக் கொண்டு நடமாடும் அவன் பிடிவாதத்தில் அயர்ந்து போனாள்.

அவனளவு பிடிவாதமாய் அவளால் இருக்க முடியவில்லை. ஐந்தாம் நாளுக்கு மேல் சுத்தமாக தாக்குப் பிடிக்க முடியாமல், அவன் வெளியில் கிளம்பும் நேரம், “ஈவினிங் எப்ப வருவீங்க?” என கேட்டாள்.

அவன் திரும்பி வரும் நேரத்தை வைத்து அவளுக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை என்றபோதிலும், எதையாவது பேச வேண்டுமே என்று கேட்டு வைத்தாள்.

அவளின் குரலில் ஒரு நொடி தேங்கி நின்றவன், பிறகு எந்த பதிலும் சொல்லாமல் விறுவிறுவென வெளியேறி விட்டான். அவள் முகத்தைக் கூட திரும்பிப் பார்க்கவில்லை. ஆதியின் அலட்சியத்தால் தாரா ஓய்ந்து போனாள்.

‘போயேன் எனக்கென்ன?’ என வீம்பு துளிர்த்தது.

ஆதீஸ்வரனுக்கு தன் தம்பி சத்யாவை எண்ணி மிகுந்த கவலை. கனிகாவை குறித்து தம்பியிடம் எச்சரிக்கை செய்தான். அவனது அருமை தம்பியோ காதல் மயக்கத்திலோ… இல்லை ஏதோ ஒருவித சஞ்சலத்திலோ அண்ணனின் பேச்சைக் கேட்டுக் கொள்ளவில்லை.

“நீ எதை சொன்னாலும் கேட்கிறேன் அண்ணா. ஆனா கனிகா… அவ என்னோட மனைவி ஸ்தானம். அவளை மட்டும் என்கிட்ட இருந்து பிரிச்சு விட்டுடாதண்ணா. அப்பறம் நான் பெரிய பாவம் செஞ்சவனா ஆயிடுவேன்…” என்று ஆதிகால வசனங்கள் பேசி கெஞ்சிக் கேட்க, மூத்தவனுக்குத் தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது.

‘எங்கே இருந்து தான் இந்த மாதிரி வசனம் எல்லாம் பிடிப்பானோ’ என கிளர்ந்த கோபத்தைக் கட்டுப்படுத்த மிகுந்த பிரயத்தனப்பட்டான்.

அப்பொழுதும் மிகவும் பொறுமையாக, “இது சரியா வராது. ஏமாந்து நிக்காதடா… நான் சொல்ல வரதை கவனமா கேளு…” என ஆதி என்ன முயற்சி செய்தாலும், புரிந்து கொள்ளாமல் சத்யேந்திரன் விதண்டாவாதம் பேசினான்.

அதுவும் ஓய்ந்த குரலில், “அப்ப நீ தான் இல்லையாண்ணா… நீ அவளை எதுவோ மிரட்டி இருக்கணும். அதுதான் அவ என்னை காண்டாக்ட் செய்யவே இல்லை…” என சத்யா புலம்ப, இது என்னடா புது பழி என ஆதி குழம்பி போனான்.

“இதுல மட்டும் தலையிடாதண்ணா… அவளை எதுவும் செய்யாதீங்க… ப்ளீஸ்…” என்றான் பாவமாக.

“நான் எதுவும் பண்ணலைடா. உளறாம என்னை பேச விடு…” என்று பொறுமை இழந்து கத்தினான்.

“அண்ணா ப்ளீஸ் போதும்… பூஜிதா பேச்சை இனிமே என்கிட்டே எடுக்காதீங்க. எனக்கு அவ வேணாம். நீங்க கூட தானே இந்துஜாவை வேண்டாம்ன்னு சொன்னீங்க. உங்களுக்கு மறுக்க இருக்க அதே உரிமை எனக்கும் இல்லையா?” என நியாயம் கேட்டான்.

“டேய்… நான் உன்கிட்ட கேட்டப்ப நீ சம்மதம்ன்னு தானே சொன்ன?” ஆதி பல்லைக்கடித்துக் கொண்டு கேட்க, “அப்ப இருந்த நிலைமை வேற… இப்ப இருக்கிற நிலைமை வேறண்ணா…” என்றான் வேகமாக.

கடுங்கோபத்தில், “மண்ணாங்கட்டி…” என ஆத்திரமாகக் கத்தி விட்டான். ச்சே! சொல்ல வரதை சொல்ல விடறானா பாரு என அவனுக்கு ஆற்றாமையாக இருந்தது.

பிறகு, நீண்ட மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டு தன்னை சமன் படுத்தியவன், “சரி நீ வலை வீசி தேடி கண்டுபிடிச்ச உன்னோட ஆளு உன்னை கைகழுவிட்டு போக போறா… அப்ப கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்க ட்ரை பண்ணு… எந்த வலியும் நிரந்தரம் இல்லை… புரியுதா?” என பக்குவமாகச் சொல்ல,

சத்யாவோ, “ஏன் இப்படி சாபம் கொடுக்கறீங்கண்ணா…” என்று ஆற்றாமையாகக் கேட்டு ஆதியின் பொறுமையை வெகுவாக சோதித்தான்.

இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் சுத்தமாகப் போய்விட, “உனக்கு எல்லாம் பைத்தியம் முத்தி போச்சுடா… இதுல நான் சொல்லறதுக்கு எதுவும் இல்லை…” என சத்தம் போட்டுவிட்டு அலைப்பேசியின் அழைப்பைத் துண்டித்து விட்டு, அறையை விட்டு வெளியே வந்த சமயம் தான் தாரா சமாதானத்தின் முதல் அடியை எடுத்து வைத்தது. ஏற்கனவே இருந்த கடுங்கோபத்தில் இவளின் இந்த முயற்சிக்கு அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போய் விட்டது.

இவள் மட்டும் கனிகாவின் பொய்யை சத்யாவிடம் எடுத்துச் சொல்லியிருந்தாளானால், இவன் இந்தளவு தம்பியிடம் கெஞ்சிக்கொண்டு நிற்கும் நிலை வந்திருக்காது என்ற கோபம் அவனுக்கு.

அதுவும் சத்யாவிற்குத் தாரா மருத்துவர் என்று தெரியும் போல… கனிகா படிக்கும் இஞ்சினியரிங்கும் இவள் படிக்கும் மருத்துவமும் எந்த புள்ளியில் இணைந்தது என்று… கனிகா தாராவை சீனியர் என்று சொன்னதை கூட சத்யா அப்படியே ஏற்றுக்கொள்கிறான் என்று தான் ஆதிக்கு புரியவில்லை.

அதுவும் கனிகா மேற்கொண்ட சிகிச்சை, அதையடுத்து அவள் சத்யாவிடம் காட்டிய நெருக்கம், இன்னமும் கனிகா பீகாரில் தொடர்ந்து வரும் அவளின் பழைய காதல் என எதை யோசித்தாலும் சத்யா இந்த பெண் விஷயத்தில் பலமாக மாட்டிக்கொண்டான் என்று மட்டும் ஆதிக்குப் புரிந்தது. மீட்கும் வழி தான் தெரியவில்லை.

*** ஆதீஸ்வரன் கட்சித் தலைவருடன் சந்திப்பை முடித்துவிட்டு வந்த சமயம், அவனுக்காகவே காத்திருந்தது போல தென்னரசு அவனை நெருங்கி வந்தான்.

அவன் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தவாறே என்னவென்று பார்வையால் விசாரிக்க, “சார் நம்ம ஏரியா இன்ஸ்பெக்டர் போன் பண்ணி இருந்தாரு…”

“விவேக்… ஹ்ம்ம் ஞாபகம் இருக்கு… என்ன சொன்னான்?” என ஆதி கேட்க, “சார் ரொம்ப முக்கியமான விஷயம் போனில் சொல்லாம நேரில் சொன்னா பெட்டர்ன்னு சொன்னாங்க சார்…”

ஓரிரு நொடிகள் யோசித்தவன், “தேர்ட்டி ஒன்…” என்று சொல்லிவிட்டு அர்த்தம் பொதிந்த பார்வையைப் பார்க்க, “ஓகே சார்…” என்ற தென்னரசு, பின் வெகுவாக குரலைத் தனித்து நேரத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டு அதை விவேக்கிடம் சொல்வதற்காக நகர்ந்தான்.

அவன் சொன்ன நம்பர் அவர்கள் கோட் வேர்ட்… ஒவ்வொரு எண்ணிற்கும் ஒவ்வொரு பிரத்தியேக இடம் வைத்திருக்கிறார்கள். தேர்ட்டி ஒன் என்பது ஆந்திரா செல்லும் ஒரு வழியை குறிக்கும். அங்கு குறிப்பிட்ட லோகேசனில் இரவில் கார் பயணத்தோடு சந்திப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.

தென்னரசு விவேக்கிடம் தகவல் சொல்ல, அவன் அதற்குத்தக்க தன் வேலைகளுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொண்டான்.

விவேக்கிற்கு சிறு வயதிலிருந்தே தன் தந்தையைப் பார்த்து காவல்துறை வேலையின் மீது பெரும் ஈர்ப்பு. அவன் தந்தையும் மகனின் ஆசையில் மிகவும் பெருமைப் பட்டார்.

“சாதாரணமா எல்லாம் வர கூடாது தம்பி. யூ.பி.எஸ்.ஸி எக்ஸாம் எழுதி, ஐ.பி.எஸ்., ஆபிசரா வந்து இறங்கணும்” என அடிக்கடி சொல்லுவார்.

என்ன தந்தையின் பூரிப்பு, ஐ.பி.எஸ்., கனவு எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயது வரை தான்… அதன்பிறகு அதைச் சொல்வதற்கு அவனின் தந்தை உயிரோடு இல்லை. யாரால் என்று தெரியவில்லை, ஆனால், மனிதரைக் கொன்றுவிட்டுப் போயிருந்தனர். இன்று வரையிலும் அந்த வழக்கு நிலுவையில் தான் இருந்தது.

மொத்த குடும்பமும் நிலைகுலைந்து நின்ற தருணம் அது! கல்லூரி படிப்பை முடித்து விட்டு யூ.பி.எஸ்.ஸி., தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த விவேக்கிற்கு உலகம் இருண்டுவிட்ட நிலை! அவனுடைய தாய் சுந்தரியும், பள்ளிப்படிப்பின் இறுதியில் இருந்த தங்கை நந்தினியும் அவனை விட மோசமான நிலையில் இருந்தனர்.

குடும்பத்தின் ஆணிவேரான தந்தையை இழந்து, கனவுகள் சிதைந்த நிலையில், தந்தையின் பணியை குடும்பத்தில் ஒருவருக்கு வழங்க இருந்த வாய்ப்பின் மூலம், விவேக் இன்ஸ்பெக்டர் ஆகியிருந்தான். அத்தோடு அவன் யூ.பிஎஸ்.ஸி., தேர்வுக்கு தயாராகி வந்ததும் நின்று போனது.

தந்தையின் எதிர்பாரா மரணம் தந்த அச்சம், அம்மாவிற்கும், தங்கைக்கும் தான் மட்டும் தான் ஆதரவு என்ற நிலை எல்லாம் அவனை கட்டிப்போட, நேர்மையாக, உறுதியாக இருக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்து கண்ட ஆசை, கனவெல்லாம் தவிடுபொடியாகி இருந்தது.

இவனும் யார் தவறையும் எதிர்த்து நின்று, அந்த விரோதத்தால் இவனையும் கொன்று வீசி விட்டால், தங்கள் குடும்பத்தின் கதி என்னவாகும்? என்ற எண்ணமே அவனை வளைந்து போக வைத்தது.