அவனின் மோனநிலையை கரடியாய் கைப்பேசியின் அழைப்பு கலைக்க, நொடியில் வேகமாக விலகிக் கொண்டான்.
அவளுக்கும் சொல்ல முடியாத ஒருவித அவஸ்தை!
இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்வோம், வாழ்க்கையாக இங்கே இப்படி நம்மைக் கொண்டு வந்து நிறுத்த நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும் என்று ஆழ் மனம் அவளுக்கு சொல்லிக் கொண்டே இருந்ததன் விளைவே இந்த திருமணத்தின் மீது தோன்றிய பற்று!
என்னதான் திருமணத்தை மனம் அங்கீகரித்த போதிலும், இப்படி அவனை உன்னிடம் இந்தளவு நெருங்க விடுகிறாயே? ஏன்? என்று அவள் மனமே காரணம் புரியாமல் படபடத்தது.
ஆதியை பார்த்ததிலிருந்து அந்நியத்தன்மையை அவள் உணர்ந்ததே இல்லை. அதிலும் அவன் புகழைக் கேள்விப்பட்ட பிறகு, அவன் செய்த செயல்களை எல்லாம் கூகுள் ஆண்டவரின் உதவியோடு தெரிந்து கொண்டதிலிருந்து அவன் மீது அபரிமிதமான மதிப்பும், மரியாதையும்.
அவன் மீது கொண்ட நன்மதிப்பும், உள் உணர்வின் நம்பிக்கையும் கல்யாணத்தை அங்கீகரித்தது வரை சரிதான்! ஆனால், மற்ற விஷயத்தில் அவசரம் வேண்டாமே என்பது தான் அவளது எண்ணம். ஆனால், சற்றுமுன் அவன் நெருங்கும் போது அந்த எண்ணமே நினைவில் இல்லாதது ஏன் என்று தான் புரியவில்லை.
படபடப்பும் குழப்பமுமாக நின்றிருந்தவள், அவனது கைப்பேசி உரையாடலைக் கவனிக்கவில்லை.
ரஞ்சித் தந்த தகவல்களை எல்லாம் கேட்டவனுக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசனை. வழக்கம்போல தன் கைவிரல் மோதிரத்தை உருட்டியபடி சிறிது நேரம் யோசித்து கொண்டு நின்றிருந்தான்.
தாராவும் இவனை அப்பொழுது தான் பார்த்தவள், அவன் தோற்றத்தைப் பார்த்தே ஏதோ யோசனை என்று புரிந்து கொண்டாள். அவன் விரல்களால் தீண்டிய கன்னங்கள் வேறு குறுகுறுத்தது. இங்கேயே நின்று மீண்டும் அவனை எதிர்கொள்ளும் திராணி இல்லாதவளாய் மெல்ல நழுவப் பார்க்க,
“ஒரு நிமிஷம்…” என்றிருந்தான். மெல்ல நின்று அவனை நோக்கித் திரும்பி, சுருங்கிய அவன் புருவங்களை பாத்தவாறே, “சொல்லுங்க…” என்றிருந்தாள்.
“உனக்கு கனிகாவை எப்படி தெரியும்?”
இந்த கேள்வியை அவள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அதுவும் இத்தனை நாட்கள் கழித்து. அவள் மெதுவான குரலில், “தெரிஞ்ச பொண்ணு தான். எங்க ஹாஸ்பிட்டல் வந்திருக்கா. அந்த பொண்ணும் பீகார்ல தான் இருக்கா… சௌத் இந்தியன் பொண்ணு வேற… அப்படி பழக்கம்” என்றாள்.
“ஆனா அவ உன்னை அவளோட சீனியர்ன்னு சத்யா கிட்ட சொல்லி இருக்கா…”
தராவிற்கு கனிகா ஏன் அப்படி சொன்னாள் என்று புரியவில்லை. அவள் யோசித்துக் கொண்டிருக்க, “நீ டாக்டர்ன்னு சத்யாவுக்குத் தெரியாதா?” என்றான்.
“அவர்கிட்ட அதிகம் பேசினது இல்லையே…”
“நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் கூடவா?”
‘இவர்கிட்டயே பேசி இன்னும் பழகலையாம். இதுல சத்யா கிட்ட எங்கே பேச?’ என எண்ணியவளுக்கு அப்பொழுது தான் விளங்கியது, கிட்டத்தட்ட திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது என்பது.
அதற்குள்ளா என்று வியந்தவள், “அது பாட்டி மட்டும் அப்பப்ப பேசுவாங்க. சத்யா கிட்ட பேசலையே…” என்றாள்.
அவள் பேசும்போது பாதியில், “எதுக்கு?” என்றிருந்தான்.
“அது… பேஷண்ட் ஹிஸ்டரி, டீடெயில்ஸ் எல்லாம் டாக்டரா நான் சொல்ல கூடாதே…” என்றாள் கண்டிப்புடன்.
அவன் கூர்ந்து பார்க்க, “இல்லை நான் சொல்ல மாட்டேன்” என்றாள் மீண்டும் உறுதியாக.
“ம்பச்… இவ்வளவு விசாரிச்சு தெரிஞ்சுக்கிறவனுக்கு இது தெரியாமையா இருக்கும்… ஷீ கேம் பார் ஹைமனோபிளாஸ்டி சர்ஜரி ரைட்?” என்று அவன் நேரடியாகக் கேட்டுவிட, அவள் விழிகள் விரிந்து போனது.
இது எல்லாம் மிகவும் ரகசியமானது. அவ்வளவு எளிதில் இந்த விவரங்களை வெளியில் கசிய விட மாட்டார்கள். அப்படிப்பட்ட விஷயத்தை மிக இலகுவாக அவன் கண்டுபிடித்துக் கேட்க, அவளுக்கு ஓரிரு நொடிகள் பேச்சற்ற நிலை.
உடனே சுதாரித்தவள், “நான் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டேன். நீங்க மறுபடியும் இதுவா அதுவான்னு கேட்டா என்ன அர்த்தம்?” என முகத்தைச் சிறு கோபத்துடன் திருப்பினாள்.
ஆதியின் நிலை இன்னும் மோசம். ஒவ்வொரு நாளும் அவனுக்கு வரும் தகவல்கள் எல்லாம் அவனின் கொதிநிலையை வெகுவாக அதிகரிக்கச் செய்து கொண்டிருந்தது.
துரோகங்கள் அவனுக்கு புதிதல்ல… அவனுக்கு குழி பறிக்கப் பார்ப்பவர்களையும் அவன் கடந்து வந்து கொண்டே தான் இருக்கிறான். எல்லாம் தன் அளவில் என்றவரை சரி… அதே பாதிப்பு அவனை சார்ந்தவர்களை அணுகினால் அவ்வளவு தான் எரிமலையாய் வெடித்து விடுவான்.
இப்பொழுதும் அப்படித்தான் சத்யாவை சுற்றிப் பின்னியிருந்த வலையை மிகவும் தாமதமாகக் கண்டுபிடித்திருக்கிறான். அதுவும் சத்யாவாக உளறிய பிறகு…
சத்யாவின் பயந்த சுபாவமும், அவனது காரணமற்ற குழப்பங்களும், அச்சமும், அவனால் அவ்வளவு எளிதாக ஏமாற்றங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை எதிர்த்துப் போராடும் மன வலிமை அவனிடம் மிகவும் குறைவு.
சத்யாவைத் தேற்ற ஆதி எவ்வளவோ முயன்றிருக்கிறான். இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. அவனைத் தனியே தங்க வைத்திருப்பதே அதற்காகத்தான். பாட்டியின் அரவணைப்பிலோ தன் அரவணைப்பிலோ அவன் இருப்பதைக் காட்டிலும், தனியாக அவன் இந்த உலகத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் அவனை ஹாஸ்டலில் விட்டிருக்கிறான். மற்றபடி அவனுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதெல்லாம் ஆதிக்குப் பெரிய விஷயமே இல்லை.
அப்படி ஒரு பொய்யைச் சொல்லி அடிக்கடி தன்னை தேடி வராமல் தடுத்திருக்கிறான் அவ்வளவுதான். இல்லாவிட்டால் தொட்டதுக்கும் அவனுக்கு அண்ணா வேண்டும். இந்த ஒரு சில ஆண்டுகள் தனியாக இருந்ததில் கொஞ்சம் முன்னேற்றம் இருந்தாலும், பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஆதி சத்யாவிடம் எதிர்பார்த்த முன்னேற்றம் என்பது தைரியமாக இல்லாமல் அசட்டுத் துணிச்சலாக இருப்பது ஆதிக்கு இன்னும் பெரிய தலைவலி. அந்த அசட்டுத் துணிச்சலில் தான் சத்யா காதலிப்பது, தாராவுக்கு யாரிடமும் சொல்லாமல் அடைக்கலம் தந்தது என்பது போன்ற சாகசங்கள்.
இப்பொழுது அவன் காதல் கொண்டு பிரச்சினை எனும்பொழுது அதை எப்படி அவன் எதிர்கொள்வான் என்கிற பதற்றம், தவிப்பு, கோபம் ஆதிக்கு.
அந்த பிரச்சினையில் தாராவிடம் விசாரித்தால், இவள் இப்பொழுது தான் முழு மருத்துவர் அவதாரம் எடுத்து அவனை சோதித்துக் கொண்டிருக்கிறாள்.
“ஹே நீயா எதுவும் சொல்லலை. எல்லாம் ஏற்கனவே நான் கண்டுபிடிச்சது தான்… அதை ஆமான்னு ஒத்துக்க உனக்கு என்ன?” அவன் கடுப்பில் கத்தினான்.
தாரா துளியும் அசரவில்லை. எந்த பதிலும் தராமல் நின்றிருந்தாள்.
பொதுவாக டிரீட்மெண்ட் பற்றி, அடுத்தவர்களின் செயல்களைப் பற்றி எல்லாம் ஆதி விமர்சனம் செய்வதில்லை. அது அவனுக்கு ஒத்தும் வராதது. ஆனால், கனிகா தன் தம்பியை ஏமாற்ற அல்லவா இந்த சதி வேலையைச் செய்திருந்தாள். அது கொடுத்த ஆத்திரத்தில், “ஹைமனோபிளாஸ்டி சர்ஜரி பண்ணி என்ன செய்ய போறாங்க? யாரை ஏமாத்த இந்த சர்ஜரி? இதுவும் போர்ஜரி மாதிரி தான் தெரியுமல்ல?” என்று வார்த்தைகளை விட்டு விட்டான்.
தாராவிற்கு இதெல்லாம் பொறுத்துக்கொள்ளவே முடியாது. மருத்துவத்தின் சிறு முன்னேற்றத்திற்கும் எத்தனை உழைப்பு அதன் பின்னால் இருக்கிறது. அதை இப்படி பேசினால்? அதுவும் இந்த சர்ஜரி எத்தனையோ பெண்கள் இழந்து விட்டதாக எண்ணிக் கலங்கும் தன் மதிப்பு மிக்க கற்பை அல்லவா மீட்டு தருகிறது.
பாலியல் பலாத்காரம் செய்த பதினாறு வயது பெண், மோசமாகத் தாக்கப்பட்டிருந்ததால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தாள். அவளது மாதவிடாயின் போது, அவள் பட்ட சிரமங்களைத் தாரா நேரிலிருந்து பார்த்திருக்கிறாள். அந்த வயதில் அவள் ஏன் அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும். அதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் நீண்டு கிடக்கையில்!
அந்த பெண்ணிற்கு ஹைமனோபிளாஸ்டி சர்ஜரி செய்துகொள்ள இவளே பரிந்துரை செய்தாள். பெண்ணின் பிறப்புறுப்புக்குள் இருக்கும் மெல்லிய கருவளையத்தை அறுவை சிகிச்சை மூலம் மறுகட்டமைக்கும் இந்த சிகிச்சையால் அந்த பெண் தன் பழைய நிலையைப் பெருமளவிற்கு மீண்டும் பெறலாம்.
இப்படிப்பட்ட சிகிச்சையை ஆதி குறை சொன்னபோது அவளுக்குப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“போர்ஜரியா? வாட் டூ யூ மீன்? ஏன் பொண்ணுங்க போர்ஜரி செய்யணும்? இந்த சமுதாயம் அவங்களை உயிரா பார்க்காம… பொருள் மாதிரி பார்க்கும்போது இந்த போர்ஜரி அவங்களுக்கு தேவைப்படுதே! ஒரு பெண் அவளா விருப்பப்பட்டு காதல், காமம் செஞ்சாலும் தப்பு. அதுவே அவ மேல திணிக்கப்பட்டு அவளை யாரும் கற்பழிச்சாலும் தப்பு அவமேல தான்… அவளோட வாழ்க்கையே அதோட முடிஞ்சது அப்படித்தான? ஒரு பொண்ணு கல்யாணம் முடிஞ்சு முதல் ராத்திரி அப்ப கற்போட இருந்தே ஆகணுமே… இயற்கை பெண்களை பாதுகாக்கத் தந்திருக்கும் விஷயங்களைக் கூட, ஆண்கள் தங்களுக்கு சாதகமா மாத்தி வெச்சிருக்காங்க… அப்பறம் அவங்க வேற என்ன செய்வாங்க”
தாரா பேசியதில் நியாயமும் இருந்தது. ஆனால், அதை உணரும் பொறுமை தான் ஆதியிடம் இல்லை. அவளைச் சுட்டெரிக்கும் பார்வை பார்த்துவிட்டு அறையை விட்டு கோபமாக வெளியேறி விட்டான். இவள் சொல்லா விட்டால் எனக்கு விவரம் தெரியாமல் போய்விடுமா என்னும் வீம்பு அவனிடம்!
முகத்தில் அறைந்தது போல வேகமாகக் கதவை அடித்துச் சாத்தியதில், விக்கித்து நின்றிருந்தாள் தாரா.