திருமணம் முடிந்து ஒன்றிரண்டு நாட்கள் தான் தாராவின் கண்களில் ஆதிஸ்வரன் பட்டிருப்பான். அதன் பிறகு ஆளையே காணவில்லை.
இவர்களின் திருமணம் முடிந்த பிறகு வீட்டின் காவல் பல மடங்கு பலப்பட்டு இருப்பதை அவளால் பார்க்க முடிந்தது. முன்பு இங்கேயே தன்னை மறைத்து வாழ்ந்த போது வாசலின் முன்புறம், பின்புறம் என்று இரண்டு காவலாளிகளை மட்டும் பார்த்திருக்கிறாள். மற்றபடி பகலில் வீட்டு வேலை செய்ய ஆட்கள் வந்துவிட்டுட்டு போய் விடுவார்கள்.
இப்பொழுது வீட்டில் எந்நேரமும் வேலையாட்கள், காவலுக்கென்று தனியாக மூன்று, நான்கு பேர், அது போக வீட்டைச் சுற்றிக் காவலுக்கென்று நாட்டு ஜாதி நாய்கள்… இதெல்லாம் இவள் வந்த பிறகு என்று சீதாம்மாவும் ஒரு முறை சொல்லி இருந்தார்.
சீதாம்மா நிறைய பேசுவார். எதைப்பற்றிப் பேசினாலும் அதிகம் மிகைப்படுத்தித் தான் பேசுவார். ரொம்பவும் வெள்ளந்தி. ஆதியும் உனக்கு இங்குள்ள தேவைகளை இவர் கவனித்துத் தருவார் என்று தாராவிடம் சொல்லிவிட்டுச் சென்றிருக்க, அவளுக்கும் அவர் பேச்சு, எதார்த்தம் எல்லாம் ரொம்ப பிடித்துப் போனது. அவரோடு நன்றாக ஒன்றிக் கொண்டாள்.
“நீ இந்த வீட்டுக்கு வரணும்ன்னு இருந்திருக்கு… இல்லைன்னா அந்த இந்துஜா புள்ள இல்லை வந்திருக்கும். நெஞ்சே நடுங்குது அதை நினைச்சா… ஐயா இத்தனை காலமும் பிடிகொடுக்காம சமாளிச்சிடுச்சு. எங்கே அவங்க பாட்டி வற்புறுத்திக் கேட்டு அந்த இந்துவையே கட்டிக்குமோன்னு பயந்தே போயிட்டேன்…” என கதை சொல்ல, ஏதோ உறவு பெண் போல என நினைத்துக் கொண்டாள்.
அதிலும் ‘நெஞ்சே நடுங்குது…’ என சீதாம்மா சொல்லும்போது அவர் தந்த ரியாக்ஷன் அல்டிமேட்டாக இருந்தது. ஆர்வமாகக் கதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அவங்க அப்பா வீரா ஐயாவுக்கு இந்நேரம் உங்க கல்யாண சேதி போயிருக்கும். தாம் தூம்ன்னு குதிச்சிட்டு இங்கே வந்து ஆடுவாருன்னு பார்த்தேன். அதுக்குள்ள அந்த அழகு ராணி அங்கே என்னவோ பிரச்சினை பண்ணிட்டா போல! அவளை காப்பாத்த அங்கே ஓடியிருக்காரு… வடக்க ஏதோ மாநிலம் சொன்னாங்க…” என சீதாம்மா சொன்னதில், அவளுக்குப் பாதி புரிய வேறு இல்லை. வெறுமனே தலையை மட்டும் உருட்டி வைத்தாள்.
அவர் வர்ணித்த ‘அழகு ராணி’ வேறு சிரிப்பைத் தந்தது. யாரு அம்மா வாயில வறுபடறாங்கன்னு தெரியலையே… என அப்பொழுதும் தாரா விளையாட்டாகத் தான் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அதெப்படிம்மா கலெக்டர் படிப்புல ஏமாத்த முடியுது…” என்றபோது தான் தாரா கொஞ்சம் சுதாரிக்கவே செய்தாள்.
“யாரை சொல்லறீங்க சீதாம்மா…” என்றாள் அவள் புரியாமல்.
“நீங்க காலையில கூட செய்தி பார்த்துட்டு இருந்தீங்களே… கலெக்டர் கண் தெரியாதுன்னு ஏமாத்தி பரீட்சையில பாஸ் ஆனதா… அந்த பொண்ணை பத்தி தான் பேசிட்டு இருக்கேன்…”
“ஒடிசா சப் கலெக்டர் இந்துஜா வீரராகவனை பத்தியா சொல்லறீங்க…” என்றாள் தாரா பரபரப்புடன். அது தானே இப்பொழுது சென்சேஷனல் கேஸ்.
“ஆமாம் மா… இப்ப கூட அவங்க அப்பா புள்ளையை காப்பாத்த கூப்பிட்டாருன்னு தானே நம்ம ஐயா அங்கே போயிருக்காரு…” என்றதும் காரணமே இல்லாமல் தாராவின் முகம் பொழிவிழந்து விட்டது.
இவ்வளவு நேரம் கல்யாணம் செய்து கொள்ள காத்திருந்த முறைப்பெண் போல… அதிலும் ஆதிக்குப் பிடிக்காமல் வேறு இருந்திருக்கும் போல… என்று தான் தாரா எண்ணியிருந்தாள். ‘இவரை எல்லாம் திருமணம் செய்து கொள்வேன் என ஒரு பெண் அடம் செய்திருப்பாளா என்ன?’ என ஆதியுடைய ஆக்ரோஷத்தையும் கோபத்தையும் நேரில் பார்த்து மிரண்டவள் என்பதால், ஆச்சரியமும் சுவாரஸ்யமுமாகக் கதை கேட்டு வந்தாள். ஆனால், இப்பொழுது இந்த பேச்சு ஏனோ இம்மியும் ரசிக்கவில்லை.
இந்த திருமணம் அவள் முற்றிலும் எதிர்பாராதது. ஆனாலும் ஆதியின் செய்கைகளால் அவன் மீது நல்ல அபிப்ராயம் தான்.
அவன் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வதும், உறவுகளை மதித்து நடந்து கொள்வதும், பதவிக்கேற்ற ஆணவம் துளியும் இல்லாமல் நடமாடுவதும் என அவளின் மதிப்பில் ஒவ்வொரு செய்கையிலும் உயர்ந்து நின்றான்.
அதிலும் அவனது நேர்மையைப் பற்றி அவனது உறவான பிறகு தெரிந்து கொண்டவளுக்கு அவன் மீது தனி பிரமிப்பு தான்!
நேர்மையாக இருந்து, இந்தளவு உயர்ந்த பதவி, அதுவும் இந்த சின்ன வயதில் என்று அவள் பிரமிக்காத நாளே இல்லை.
அப்படிப்பட்டவன் இப்பொழுது தவறு செய்தவளுக்குத் துணை நிற்பதா?
தாராவின் மனம் ஏற்றுக்கொள்ளவே இல்லை.
அவளின் முகவாட்டம் பார்த்து, “அது நம்ம ஐயா சின்ன வயசா இருக்கும்போதே அவரோட அப்பா, அம்மா தவறிட்டாங்கம்மா… அப்ப வீரராகவன் ஐயா தான் இந்த குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருந்திருக்காரு. ஐயா தலையெடுக்கிற வரைக்கும் வீரா ஐயா ரொம்ப உதவி செஞ்சிருக்காரு… அதுதான் அவர் மேல மதிப்பு ஜாஸ்தி…” என்றார் சீதாம்மா சமாதானமாக.
இத்தனை நேரம் விளையாட்டாய் கதை கேட்ட பெண், திடீரென முகம் வாடவும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆக, இருக்கும் சூழலை அவருக்குப் புரிந்தவரையில் சொன்னார்.
ஆதியின் கதையைக் கேட்ட தாராவின் மனதில் பாரம் ஏறிப்போனது. அம்மா, அப்பா இல்லாமல் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என அவனுக்காகவும், சத்யாவுக்காகவும் இரக்கப்பட்டாள். ஆதீஸ்வரன் தன் பாட்டியின் மீது கொண்டிருக்கும் அபரிமிதமான மரியாதைக்குக் காரணம் புரிந்தது.
இந்துஜா விஷயத்தில் அவன் என்னவும் செய்து கொள்ளட்டும் என அந்த விஷயத்தை மனதில் ஏற்ற கூடாது என முடிவு செய்தாள். ஆனால், இரண்டு நாட்களாகியும் அந்த விஷயம் அவளின் மனதை அரித்துக் கொண்டே தான் இருந்தது.
தந்தையின் வருமானம் குறைவு, குடும்பம் வறுமையானது, உடலில் ஊனம், பார்வை குறைபாடு இருப்பதால் வேறொருவர் தேர்வு எழுத வேண்டும் எனப் போலியாகப் பல சலுகைகளை உபயோகித்து யூ.பி.எஸ்.ஸி., தேர்வில் தேர்வாகியிருந்தாள் இந்துஜா.
இது போதாதென்று வேலைக்குச் சேர்ந்த பிறகு, அவளுக்கு அடுத்த பதவியில் இருக்கும் கலெக்டரை மதிக்காமல், அவர் வேலைக்கு இடையூறு தந்ததோடு இல்லாமல், அவர் இல்லாத நேரத்தில் அவர் அறையில் அமர்ந்து மக்களைச் சந்திப்பது போன்ற வேலைகள் செய்து வந்திருக்கிறாள்.
அவளுக்குச் சொந்தமான ஆடி காரில் சைரன் வைத்துச் சென்றதும், அவள் பதிவுக்குத் தனியறை இல்லை என்று தெரிந்தும் அதைச் செய்து தரும்படி கட்டாயப்படுத்தியதும், நண்பர்கள் காவலர்களிடத்தில் மாட்டிக் கொண்டால், ‘நான் தான் கலெக்டர் பேசுகிறேன்’ என அதிகாரமாகப் பேசி, அவர்களுக்குச் சிபாரிசு செய்து விடுவிக்கச் செய்ததும் என நிறைய அதிகார துஷ்பிரயோகங்கள்,
பொதுமக்களுக்கு இடையூறாக நிறைய செய்கைகள் என இந்துஜா ஆடிய ஆட்டங்கள் எல்லாம் இப்பொழுது ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்திருக்க… ஒட்டுமொத்த நாட்டின் பார்வையும் அவள் மீது தான்.
அவள் ஏமாற்றி வாங்கிய பதவியைப் பறிக்க வேண்டும் என நாடே எதிர்பார்த்திருக்க, ஆதி அவளைக் காக்கச் சென்றிருக்கிறான் என்பதை என்னவோ என்ன முயன்றும் தாராவால் ஏற்கவே முடியவில்லை.
நேர்மையானவன் என இந்த சில நாட்களில் மனதில் பதிவாகிப் போனவன், இப்படி ஒரு சட்டவிரோத குற்றத்திற்கு, உறவு முறைக்காக, நன்றிக் கடனுக்காகத் துணை நின்று விடுவானோ என அல்லும் பகலும் வேதனையில் உழன்றாள்.
‘இதில் உனக்கென்ன வந்தது?’ என அவளின் புத்தியே அவளைச் சாடாமல் இல்லை. ஆனால், மனம் அதை ஏற்க வேண்டுமே!
தாராவிற்கு முகமெல்லாம் வாடி, சோர்ந்து போனது. மொத்தமாகத் தளர்ந்து போனாள். செய்தியை கைப்பேசி வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பார்ப்பதைக் கூட அறவே தவிர்த்தாள்.
அவளின் சோர்ந்த தோற்றம் பார்த்து, உடல்நிலை சரியில்லை போல என்று எண்ணி சீதாம்மா பரிவோடு கவனித்துக் கொண்டார்.
மேலும் ஓரிரு நாட்கள் கடந்த நிலையில், “நம்ம ஐயாவை பாருங்க… நன்றிக்கடனுக்காக கடமையை மறந்துடுவாரோன்னு நினைச்சேன். ஆனா அந்த இந்துவோட விஷயத்துல சின்ன துரும்பைக் கூட அசைக்கலை” என்று சீதாம்மா தகவல் சொல்ல, தாராவின் விழிகள் விரிந்து போனது.
“என்ன சொல்லறீங்க சீதாம்மா…” தாரா தன் வாட்டமெல்லாம் மறைந்து ஆர்வமாகி விட,
“என்னம்மா நீங்க தானே என்ன ஆச்சுன்னு செய்தியைப் பார்த்து சொல்லணும். என்கிட்ட கேட்கறீங்க… சரியா போச்சு போங்க…” என்று அலுத்துக்கொண்ட சீதாம்மா, இந்துஜா மீது விசாரணை கமிஷன் வைத்திருப்பதும், அவளது பதவியைத் தற்காலிகமாகப் பறித்து கொண்டதையும் சேர்த்தே சொன்னார்.
வேலை கண்டிப்பாகப் பறி போய்விடும் என செய்திகளில் சொல்கிறார்கள் என்றும் சீதாம்மா சொல்ல, “நீங்க தானே அவரு அங்கே போயிருக்காரு சொன்னீங்க. ஆளும் கட்சி எம்.பி., இவரோட பதவியை வெச்சு இவரு எதுவும் செய்யலையா? நியூஸ் ல அவரை பத்தி ஒன்னும் சொல்லலையா என்ன?” தான் ஏன் இவ்வளவு படபடக்கிறோம் என்றே அவளுக்கு தெரியவில்லை.
“அட! என்னம்மா எல்லாத்தையும் என்கிட்டயே கேட்கறீங்க? உங்க புருஷன் தானே அவர்கிட்ட தானே எல்லாம் கேட்கணும் நீங்க?”
சீதாம்மாவிற்கு தாரா இப்பொழுது பெரும் புதிராகிப் போனாள். கணவர் ஊருக்குச் சென்ற காரணத்தை நான் தான் சொல்ல வேண்டி இருக்கிறது… அவர் ஊருக்குப் போய் என்ன செய்தார் என்றும் நான் தான் சொல்ல வேண்டி இருக்கிறது… நிஜமாலுமே இந்த பெண்ணை பிடித்துப் போய் தான் நம்ம ஐயா திருமணம் செய்து கொண்டாரா? இல்லை வேறு வழி இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையாலா? எனக் குழம்பிப் போனார்.
“அவர் இந்த மாதிரி கிளம்பிப் போகும் போது சூழ்நிலை எப்படி இருக்குமோ… அதுனால அவரா போன் போடும்போது தான் பேசுவேன் சீதாம்மா… மத்தபடி அனாவசியமா அவரை தொல்லை செய்யறது எனக்குப் பிடிக்காது…” என அடித்து விட்டாள். பின்னே இப்படி வேலை செய்பவர்களுக்குத் தெரியும் விவரம் கூடவா தெரிந்து கொள்ளாமல் இருப்பாள். அதை அவர்களே கவனித்துக் கேட்குமளவு! தன் செய்கை தனக்கே அவளுக்கு ஒப்பவில்லை. அப்போதைக்கு அவசரமாக நிலைமையைச் சமாளித்தாள்.
அது புரியாத சீதாம்மாவோ, “ஐயாவுக்கு ஏத்த மகாராசிம்மா நீங்க…” என்று கன்னம் வழித்து ஆசையாகத் திருஷ்டி கழிக்க, இனி கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தாரா மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.
*** வீரராகவன் ஆதீஸ்வரனை அழைத்தது என்னவோ மகள் விஷயம் கைமீறி போய்விட்டதால் துணைக்காகத் தான்… முன்பே இவன் துணையை நாடியிருக்க, இத்தனை தூரம் சென்றிருக்காது என்று எண்ணித்தான் அவசரமாக இவனை அழைத்தார்!
ஆனால், ஆதீஸ்வரன் வந்து இந்துஜா விஷயத்தில் சிறு துரும்பையும் அசைக்கவில்லை. ‘மாமா கூப்பிட்டிருக்கிறார். அவருக்காக வந்து நிற்கிறேன்’ இதுதான் அவனது நிலைப்பாடாக இருந்தது.
வீரராகவன், “உன்னால முடிஞ்சதை செய் ஆதி…” என்று கேட்டிருக்க, “மாமா விஷயம் கை மீறி போயிடுச்சு. எதுவும் சந்தேகமா பதிவாகலை… எல்லாமே ஆதாரத்தோட சொல்லற விஷயங்கள்… இதுல நம்ம தலையிடறது சரியா இருக்காது மாமா” என ஆதி அழுத்தம் திருத்தமாகச் சொல்லும்போது, வீராவாலும் மறுக்க முடியவில்லை.
“பெத்த மனசு அடிச்சுக்குது ஆதி. இவளுக்கு என்ன குறை வெச்சேன்? இவ கேட்டதை நடத்தித் தர நான் இல்லையா? எதுக்கு இத்தனை வேலை செஞ்சு கலெக்டர் ஆகணும். இவளே சொந்தமா படிச்சு கலெக்டர் ஆயிட்டதா நினைச்சு தலையில தூக்கி வெச்சு கொண்டாடிட்டு இருந்தேனே… ஆனா இவளை பாரு என்ன எல்லாம் வேலை செஞ்சு என்னை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கான்னு…” என வீரராகவன் உடைந்து போய் பேச, கேட்ட ஆதிக்கு மனதிற்குக் கஷ்டமாக இருந்தது.
இந்துஜா யூ.பி.எஸ்.ஸி., தேர்வில் வெற்றி பெற்றபோது எத்தனை தூரம் மகிழ்ந்தார் என அருகிலிருந்து பார்த்தவன் ஆயிற்றே! அவரின் மனவேதனையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
வீரராகவன் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வார். இவன் இருக்கும் அதே கட்சியில் உயரிய பதவியில் இருக்கிறார். எலெக்ஷனில் நிற்பதற்கு விருப்பம் இல்லாததால், தொழிலில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் நினைத்திருந்தால் இந்நேரம் நல்ல பதவியில் இருந்திருக்கலாம். ஆனால், ஏனோ அவருக்கு அதில் விருப்பம் இல்லை. மிகவும் திறமையானவர், நேர்மையானவர் அவருக்குப் போய் இப்படி ஒரு மகளா என்று ஆதியால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“விடுங்க மாமா… அவ செஞ்சதுக்கு நீங்க என்ன செய்வீங்க? இப்ப இந்த விஷயத்துல நாம தலையிட்டா… அந்த களங்கம் நம்ம பதவியையும் பாதிக்கும் மாமா…” என்று நிலைமையை விளக்கினான்.
“அதுக்காக அப்படியே விட்டுட்டு போகவும் மனசு வர மாட்டேங்குதே!” என மன வேதனையுடன் சொன்னார்.
எவ்வளவு நேர்மையான மனிதர், அவரையே பாசம் தடுமாற வைக்கிறதே என்று ஆதி நினைத்தான். எதுவும் செய்யும் மனம் இல்லை என்றாலும், அவர் மனவருத்தம் தாங்காமல், “என்ன செய்யலாம்னு சொல்லுங்க மாமா…” என்று ஆதி கேட்டு நிற்க, அவர் விரக்தியாக சிரித்தார்.
“இனிமேல் என்ன செய்ய முடியும் ஆதி? என் பதவியை இப்படி தப்பா உபயோகிச்சு, இந்தளவுக்கு செஞ்சிருக்காளே… இவளால எனக்கு எவ்வளவு அவமானம்…” வருத்தமும் ஆதங்கமுமாக அவர் கேட்க, என்ன சொல்லி தேற்ற என்று அவனுக்குத் தெரியவில்லை.
அவர்கள் இருவரின் பதவியை வைத்து கொஞ்சம் முயற்சி எடுத்து, இந்த பிரச்சினையை வேறு விதமாக திரித்திருக்கலாமோ என்னவோ… அப்படி முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் இதை ஊடகங்களைப் பேச விடாமலாவது செய்திருக்க முடியும்… ஆனால், இருவருக்கும் அதைச் செய்வதில் உடன்பாடில்லை.
இந்துஜாவிற்கு இது எது குறித்தும் கவலையில்லை. இன்னும் அதே தோரணையோடு தான் வலம் வந்து கொண்டிருந்தாள்.
“இப்ப என்ன நடந்துடுச்சு… எல்லாம் அந்த கலக்டரால வந்தது. அந்த ஆளை உங்க பதவியை வெச்சு கொஞ்சம் தட்டி வையுங்க… இந்த செய்தி எல்லாம் கொஞ்ச நாளுல அதுவாவே அடங்கிடும். முடிஞ்சா என்னைப் பத்தி லீக்கான ஆடியோ, வீடியோஸ் எல்லாம் பொய்யா ஜோடிச்சதுன்னு நம்ப வையுங்க…” என்று இத்தனை களேபரம் நடந்த பிறகும் திமிராக வந்து பேச, வீரராகவன் பொறுத்துக்கொள்ள முடியாமல் மகளை ஓங்கி அறைந்திருந்தார்.
“அம்மா இல்லாத பிள்ளைங்கன்னு உங்களுக்கு ரொம்ப செல்லம் தந்து வளத்துட்டேன். எத்தனை வேலை செஞ்சு வெச்சிருக்க நீ?” என ஆவேசத்துடன் கத்த, இந்துஜா கன்னத்தில் கை தாங்கி, தன்னை அடித்த தந்தையை நம்ப முடியாமல் பார்த்தபடி நின்றிருந்தாள்.
தான் அங்கு அதிகப்படி என்று தோன்றியவன் போல, அங்கிருந்து வெளியேறி இருந்தான் ஆதீஸ்வரன். இந்துஜாவிடம் ஒரு வார்த்தை பேசவும் அவன் பிரியப்படவில்லை. குறைந்தபட்சம், ‘ஏன் இப்படியெல்லாம் செய்தாய்?’ என்று கூட கேட்கவில்லை.
அவள் செய்ததில் வருத்தமில்லை, கோபமில்லை, ஆத்திரமில்லை. மொத்தத்தில் அவள் அவனுக்கு ஒன்றுமே இல்லை என்று செய்கையில் காட்டிவிட்டுப் போயிருக்க, கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தாள் அவள்.
வெளியில் வந்த ஆதீஸ்வரனுக்கு, இந்துஜாவின் பேச்சைச் சகித்துக் கொண்டு இனி இருக்க முடியாது என்று தோன்றிவிட்டது. ஆனால், வேறு வழியும் இருக்கவில்லை. அடுத்த சில தினங்கள், பல்லைக்கடித்துக் கொண்டு பொறுத்து போனான்.
அடுத்தடுத்த நாட்களில் பிரச்சினை பூதாகரமாகி இந்துஜாவை பணி நீக்கம் செய்திருக்க, இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் ஆதியும், வீராவும் கிளம்பி சென்னைக்குக் கிளம்பி வந்திருந்தனர். இந்துஜா மட்டும் தனக்கு மாறுதல் வேண்டுமென்று கூறி ஹிமாச்சல பிரதேசத்துக்கு பயணப்பட்டிருந்தாள்.
அவள் என்ன செய்தால் எனக்கென்ன என்று தான் அப்பொழுதும் ஆதி இருந்தான். அது அவளை இன்னும் கோபப்படுத்தியது. ஏற்கனவே அவன் திருமணம் செய்து கொண்டான் என்ற வன்மமே அவள் மனதில் தீயாய் இருக்க, இப்பொழுது அவன் உதாசீனத்தினால் பெரும் கொந்தளிப்பில் இருந்தாள்.
ஆனால், பல் பிடுங்கிய பாம்பு போன்று இருக்கும் இன்றைய நிலையில் அவளால் எதையும் செய்யவும் முடியவில்லை. அதற்காக அப்படியே அவனை விட்டுவிடும் எண்ணமும் அவளிடம் இல்லை. தகுந்த நேரத்திற்காகக் குள்ளநரி போலக் காத்திருந்தாள்.