ஐயோ கண்டுகொண்டானே என்ற பதற்றத்தில், “அ… அது… சார்…” என பாவமாகத் தொடங்க,

அவனோ வெகு இலகுவாக அவளை நோக்கி நடந்து வந்து, “சாரா? இல்லை சேட்டாவா?” என்றான் புருவம் உயர்த்தி.

‘இவன் ஏன் கண்ணுக்கு இத்தனை அழகாகத் தெரிகிறான்?’ எனப் பரிதாபமாக அவனைப் பார்த்து வைத்தாள். அவன் அழைக்கச் சொன்ன சேட்டா வேறு எக்கச்சக்கமாகப் படபடப்பைத் தந்தது.

ஐயோ! ஏன் இப்பொழுது நெருங்கி வருகிறான், பூனைக்குட்டி சுருண்டு படுக்க ஆட்டுக்கல்லு குழியைத் தேடுவது போல, இவளுக்கும் பதுங்க இடம் கிடைக்குமா என்பது போல விழிகளை சுழல விட்டு யோசிக்கத் தொடங்கி விட்டாள்.

“சாரா? இல்லை சேட்டாவான்னு கேட்டேன்” மீண்டும் கேட்டவன் அவளின் அருகில் வந்திருந்தான்.

வேகமாக, “சேட்டா தான்…” என்றாள் தலையைக் குனிந்து முணுமுணுப்பாக.

“இந்த கல்யாணத்தை ஒத்துக்க மனசு தான் வர மாட்டேங்குது என்ன?”

“அதெல்லாம் இல்லை சா… சேட்…” என அவள் தடுமாற, “வராட்டி கஷ்டப் படாத… ஆனா சார்ன்னு மட்டும் கூப்பிட வேண்டாம் சரியா?”

“ஹ்ம்ம்… சரிங்க…” என்றவளுக்கு இயல்பாகச் சார் இல்லை என்றதும் வாங்க போங்க வந்திருந்தது.

“நான் உன்னை அப்படி பார்த்துப்பேன்… இப்படி பார்த்துப்பேன்னு எல்லாம் என்னால பொய்யா வாக்கு கொடுக்க முடியாது. எத்தனை சண்டை, சச்சரவு வந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு, தேவையான நேரத்துல விட்டுக் கொடுத்து, எல்லா நேரத்துலயும், எல்லா பிரச்சினையையும் ஒத்துமையா சமாளிக்க ஆசைப்படறேன். சரியா?” என்க, புரிகிறதோ இல்லையோ தலையை மட்டும் வேகமாக ஆட்டினாள்.

இதற்கு மேல் விட்டால் அழுதே விடுவாள் போல என பாவம் பார்த்தவன், “ஓகே… குட் நைட்… இனி நீ சோபாவுல தூங்க வேணாம். அந்த மெத்தையவே யூஸ் பண்ணிக்க…” என்றுவிட்டு தன் அறைக்குள் போனவனுக்கு, அவளுக்கு உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என்று ஆயாசமாக இருந்தது. பாட்டி இந்த உண்மை தெரிந்தால் என்னை என்னவென்று நினைப்பார்கள்? என அதைக்குறித்தும் யோசிக்கவே முடியவில்லை.

இதற்குப் பயந்து தான் இவளைத் தேடி அவன் போனதே இல்லை… இப்பொழுது?

பெருமூச்சு தான் வந்தது. பெற்றவர்களுக்குத் துரோகி ஆகியாயிற்று. ஆனாலும், தாராகேஸ்வரி அவர்களுக்குப் பிரியமானவள் ஆயிற்றே கண்டிப்பாக என்னை மன்னித்து விடுவார்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டு படுக்கையில் சரிந்தான்.

“சாரிப்பா… சாரிம்மா… உங்களுக்கு நான் நியாயம் செய்யவே இல்லை. ரொம்ப தப்புதான். ஆனா, கண்டிப்பா உங்க இறப்புக்குக் காரணமானவனை சும்மா விட மாட்டேன்… அவனோட தண்டனை முடிஞ்சு எப்படியும் இங்கதானே வந்தாகணும்… அப்ப அவனை…” என மனதில் எண்ணியவனின் இதழ்கள் வன்மையாய் புன்னகைத்துக் கொண்டது.

லேசாக மூட தொடங்கிய விழிகளின் உள்ளே வந்து, தன் தாயைக் கட்டி அணைத்துக் கொண்டு அழுது கரைந்த எட்டு வயது தாராகேஸ்வரி கண்ணுக்குள் வந்தாள். அவளின் அழுது சிவந்த விழிகள், ‘நான் காலம் முழுக்க அழுகணுமா?’ என கேட்டதும் இன்னும் பதறி துடித்து அழுதது.

இவன் உயிரையே அந்த அழுகுரல் வதைப்பது போல உணர்ந்தவன், சட்டென்று எழுந்து விட்டான்.

*** சத்யேந்திரனுக்கு அண்ணன் கனிகா விஷயத்தில் பிடிகொடுக்காமல் பேசியது மிகவும் கவலையாக இருந்தது.

அவனுக்கு தெரியும் அண்ணனுக்கு வீரராகவன் மீது மிகுந்த மரியாதை என்று! அவர் தன் மகள் இந்துஜாவை தான் அண்ணனுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என எண்ணியிருந்தார். பாட்டியும் அதே எண்ணத்தில் தான் இருந்தார்.

என்னவோ ஆரம்பத்திலிருந்தே இந்து மீது பிடிப்பில்லாமல் இருந்த ஆதீஸ்வரன், அந்த திருமணம் ஒத்துவராது என்பதால், தம்பியிடம், “வீரராகவனின் இளைய மகள் பூஜிதாவை உனக்குப் பேசலாமா?” என்று கேட்டபோது, அப்பொழுது கனிகா சத்யாவின் வாழ்வில் இல்லை. ஆக, சத்யேந்திரனும் சம்மதம் சொல்லி வைத்திருந்தான்.

இப்பொழுது வாக்கு தவறியவனாக நிக்கிறான்.

இந்த கோபம் அண்ணனுக்கு இருக்கும் என தெரியும்… ஆனால், அவனையும் மீறி தோன்றிவிட்ட காதலுக்கு அவனும் தான் என்ன செய்வான் என்று தான் சத்யாவின் எண்ணம்.

“அண்ணனுக்கு என்ன தெரியும் காதல் பத்தி எல்லாம்…” என அங்கலாய்த்துக் கொண்டவனுக்குத் தெரியவில்லை, இவனது நேசம் உண்மையானது அல்ல, கனிகாவிண் தூண்டுதலால் வந்தது என்று… பின்னே இவன் நேசத்தைப் பெற அவள் தன்னையே அல்லவா இவனுக்கு அர்ப்பணித்திருக்கிறாள். கள்ளுண்ட வண்டின் நிலையில் இருப்பவனுக்குக் காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் தெரியாத வயதும் பக்குவமும்.

கனிகாவை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தபடியால், அவளிடம் பேச வேண்டும் என்று தோன்ற, அவளுக்கு உடனே அழைத்திருந்தான்.

“என்ன சத்தி… உங்க அண்ணாகிட்ட நம்மளை பத்தி பேசுனியா இல்லையா?”

“இப்ப தான் அண்ணா கல்யாணம் முடிஞ்சிருக்கு. அந்த பிரச்சினையை பார்க்கிறவன்கிட்ட புதுசா எப்படி இதை கொண்டு போக… நான் தான் ஏற்கனவே அண்ணன் கிட்ட சொல்லிட்டேனே… இனி அவரே கூப்பிட்டு விசாரிச்சா தான்…”

“உங்க புது அண்ணிக்கும் புது நம்பர் வாங்கி தந்திருப்பாரு போல… அவங்களை அவ்வளவு சீக்கிரம் ரீச் பண்ண முடியலை…” கனிகா கொஞ்சம் நக்கலாகக் கேட்க,

“இப்ப அவங்க பொசிஷன் என்னன்னு நீ தான் மறந்துட்டு பேசற கனி…” என்றான் பொறுமையாக. கொஞ்சம் எரிச்சலும் எட்டிப் பார்த்தது. இவள் கொஞ்சம் ஆசையாகப் பேசினால் தான் என்ன? எப்பொழுது பார்த்தாலும் யாராவது ஒருவரை பற்றிப் பேசிக்கொண்டு என்று.

“ஆமாம் பொல்லாத பொசிஷன்… நான் தந்த வாழ்க்கை அவங்களுக்கு…”

சத்யேந்திரன் யோசனையானான். “ஏன் கனி நிஜமாவே உனக்கு அந்த பிரவீணா செஞ்சது தெரியாதா?” என ஆராய்ச்சியாக அவன் கேட்க,

உடனே சுதாரித்தவள், குரலில் குழைவைக் கொண்டு வந்து, “தெரிஞ்சிருந்தா அப்பவே உன்கிட்ட சொல்லி இருக்க மாட்டேனா… எனக்கே தெரியாம இப்படி நடந்துடுச்சு…” என்றாள் பாவமாக.

“இல்லை… என்னவோ எனக்கு உறுத்திட்டே இருக்கு… என்ன நடக்க போகுதுன்னு தான் புரியலை… சம்திங் பிஸ்ஸி…” என்று சத்யா சொன்னான்.

“ம்ப்ச்… உங்க அண்ணா கல்யாணம் நடந்தது நல்ல விஷயம் தானே? அதை போயி ஏன் இப்படி கன்பியூஸ் பண்ணிக்கிற…” என்று கனிகா சொன்ன வேகத்தில்,

“நான் எப்ப கல்யாணத்தைப் பத்தி பேசுனேன். எனக்கு வேற ஏதோ குழப்பம்…” என்று சொன்னவனின் மனம் ஒருநிலையில் இல்லை.

“கல்யாண அலைச்சலா இருக்கும். கண்டதையும் குழப்பிக்காத. எது நடந்தாலும் நல்லதே நடக்கும்…” என்று ஆறுதலாகப் பேசிவிட்டு வைத்த கனிகா தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

“ச்சே! எல்லாம் இந்த அப்பாவால…” என வாய்விட்டே புலம்பியவள், அடுத்து அழைத்தது பிரதாபனுக்கு தான்.

“என்ன செல்லம்மா இந்த நேரத்துல… எப்படி இருக்கடா?” என்று நலம் விசாரித்த பிரதாபன், ஆதீஸ்வரன் கட்சி ஆள் தான். முன்பு நல்ல பதவியில் இருந்தவன், அவன் செய்து வைத்த பெரிய குழறுபடி ஆதியின் தயவால் வெளியில் வந்து விட்டதால், இப்பொழுது பல் பிடுங்கிய பாம்பு.

அதனால் ஆதி மீது வன்மத்தில் இருப்பவன், அவனுக்கு இடைஞ்சல் தருவதையே வேலையாக வைத்திருக்கிறான். இதுபோன்ற எத்தனை ஆட்களை ஆதி கடந்து வந்திருப்பான்! இவனது சதி வேலைகள் எல்லாவற்றையும் ஆதி எளிதாக முறியடித்திருக்க, ஒவ்வொரு முறையும் சலிக்காமல் புதிய புதிய சதி திட்டங்களோடு வருகிறான்.

இந்த முறை வெளியுலகிற்கு அதிகம் தெரியாத அவனது மூன்றாம் மனைவியின் மகள் கனிகாவை சதித் திட்டத்தில் இணைத்திருக்கிறான்.

“நாட் பைன் டாடி… போயும் போயும் அந்த சத்யேந்திரன்… அச்சோ செம மொக்கை டாடி அவன்… என் பிரீடமே போச்சு…”

ஆர்ப்பாட்டமாய் சிரித்தவன், “நீ எங்கயோ பீகார்ல இருக்க, அவன் சென்னையில இருக்கான். அப்பறம் என்ன செல்லம்மா… அவன் எல்லாம் ஒரு ஆளா உனக்கு? யாருக்கும் அடங்காம திரிஞ்சவனை காதலிக்க வெச்சுட்டியே… உன் சாதனை யாருக்கு வரும் சொல்லு…”

பிரதாபன் இப்படித்தான் இனிக்க இனிக்கப் பேசி சாமர்த்தியமாக மகளிடம் தன் காரியத்தைச் சாதிப்பான். அவனுக்குத் தேவை வேலையாக வேண்டும். மற்றும்படி கனிகா மீது பெரிதாகப் பாசம் எல்லாம் இல்லை. அவரை பொறுத்தவரை கனிகாவும், அவள் அம்மாவும் பெரிய இடைஞ்சல்கள் தான்.

“நீங்க சொல்லற அளவுக்கு எல்லாம் பில்டப் இல்லை. கொஞ்சம் மெனக்கெட்டேன் தான்… ஆனா இன்னும் எவ்வளவு நாள் பா…” என்று செல்லம் கொஞ்சினாள் மகள்.

“காரியம் முடிஞ்சதும்மா… இனி கொஞ்சம் கொஞ்சமா கழட்டி விட்டுடு…” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்த பிரதாபன்,

“அவங்க அம்மா மாதிரியே ஒன்னுக்கும் உதவ மாட்டா… அண்ணனை மடக்குன்னு சொன்னா, தம்பியை மடக்கி வெச்சிருக்கா… அதுக்கும் அத்தனை செலவை இழுத்து வெச்சா… சரியான தண்டம்…” மக்களிடம் இனிக்க இனிக்கப் பேசிவிட்டு, அவள் அழைப்பை துண்டித்ததும் பிரதாபன் கரித்துக் கொட்டினான் .

“நல்லவேளை அந்த பொண்ணு தாராவை பத்தி தெரிய வந்ததால அவளை இந்த விஷயத்துக்குள்ள தள்ளி விட்டேன். கல்யாணம் வரை போனா லாபம் குறைஞ்சபட்சம் பேரையாவது கெடுத்து விட்டுடணும்ன்னு நினைச்சேன். என் நல்ல நேரம் கல்யாணமே கூடி வந்துடுச்சு… அடேய் ஆதி… என் அனுபவம் என்னன்னு தெரியுமா? என்னையே போட்டு கொடுக்கறியா? நீ எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சன்னு எனக்கு தெரியலை. ஆனா அந்த பொண்ணு யாருன்னு கூடிய சீக்கிரம் உனக்குத் தெரிய வரும் அப்ப இருக்கு உனக்கு… உலகத்துலேயே அம்மா, அப்பாவை கொன்னவனோட பொண்ணை கல்யாணம் செஞ்சவன் நீயா தான் இருப்ப… உன் நிம்மதி மொத்தமும் போச்சுடா இனி…” என்று வாய்விட்டே சொல்லிக்கொண்டு வன்மமாய் சிரித்தான் பிரதாபன்.