“அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கம்மா… உன்னை பிடிச்சிருக்க போயி தான் அவன் கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிட்டு திரிஞ்சிருக்கான். நீ இப்பதான் டாக்டர் படிப்பை முடிச்சியாமே…” ஆசையாகக் கன்னம் வருடிப் பேசிக்கொண்டிருந்த மூதாட்டிக்கு தாராகேஸ்வரியால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை.
“பயப்படாதம்மா என்கிட்ட நல்லா பேசு…” என அழகாண்டாள் கணீர் குரலில் சொல்லிக் கொண்டிருக்க, வெறுமனே தலையை மட்டும் உருட்டி வைத்தாள்.
“அது சரி அவனும் பேசவே மாட்டான். நீயும் இப்படி அமைதியா இருக்க? ரெண்டு பேரும் ஜாடிக்கு ஏத்த மூடி தான்…” என்று பாட்டி பேசிக்கொண்டே போக, வேறு வழியில்லாமல் தலையைக் குனிந்து கொண்டு சிரித்து வைத்தாள்.
“என்கிட்ட பேசக்கூடாதுன்னு எதுவும் உன் புருஷன் சொல்லி வெச்சிருக்கானா?” என பாட்டி அப்பொழுதும் விடாமல் கேட்கவும்,
அவரின் கேலி புரியாமல், “ஐயோ! அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லைங்க பாட்டி” என்ற அவளின் வேகமான பதிலில் அந்த பெரியவருக்கு அப்படியொரு நிறைவு.
“எனக்கு சீக்கிரமே கொள்ளுப்பேரனை மட்டும் பெத்து கொடுத்துடு… வேற ஒன்னும் வேணாம்…” என்று அவள் தலையினை பாசமாகத் தடவிச் சொல்லிவிட்டு வெளியேறிவிட அவளுக்கு ஆயாசமாக இருந்தது.
இந்த திருமணமே அவள் விருப்பம் இல்லாமல் நடந்தேறி இருக்கிறது என்று புரியாமல், இந்த பாட்டி வேறு என சலித்து கொண்டவளுக்கு இந்த பாட்டியின் முக ஜாடை பரிட்சையப்பட்டது போலத் தோன்றியது. அவரது கணீர் குரலும்!
அந்த பாட்டி பேசியது பலவற்றை இருந்த அயற்சியில் தாரா சரியாகக் கவனிக்கவில்லை. ஒருவேளை கவனித்திருந்தால், இவர்கள் யார் என்று கண்டு கொண்டிருக்கலாம். ஆனால், கோட்டை விட்டிருந்தாள்.
பீகாரில் படிப்பை முடித்ததும், ஒரு வேலையில் சேர்ந்து கொண்டு மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று தான் எண்ணியிருந்தாள். அதற்குள் ஏதோ ஒரு பிரச்சினைக்கு இவளையும் சேர்ந்து பயப்படுத்தி, மறைந்து வாழச் சொல்லி, இங்கே அதற்காக வந்தால், இப்பொழுது அவள் நிலையே தலைகீழ். இனி என்ன செய்யப் போகிறாளோ?
சரி அலக்கியாவிற்காக தானே வந்தோம் என்று தன்னை தானே தேற்றிக் கொண்டாள்.
பாவம்! எங்கிருந்தாலும் அவள் நன்றாக இருந்தால் போதும். ஏற்கனவே தீராத நோய் அவளை ஆட்கொண்டு விட்டது, இனி இருக்கும் சொற்ப காலமாவது நிம்மதியாக இருக்கட்டும் என்பது தான் இவளுடைய எண்ணம். அவளின் உயிரோடு அவளின் குடும்பத்தின் உயிரும் சேர்ந்தல்லவா பணயத்தில் இருந்தது.
எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தவளைத் தேடி வந்து, “வாம்மா…” என இரு பெண்கள் அழைத்துச் சென்று ஆதியின் அறை வாயிலில் விட, அவளுக்கு மயக்கம் வராத குறை தான்! இனி இதை எப்படி சமாளிக்கப் போகிறாள்?
பயந்தபடி உள்ளே போனவளை, ஆதீஸ்வரன் எதிர்பார்த்துக் காத்திருந்தது இன்னும் நடுக்கத்தைத் தான் தந்தது.
அவள் கதவை தாளிடாமல் வருவதை பின்னால் எட்டிப் பார்த்தவன், “கதவை சாத்திட்டு வா…” என்க, அவன் என்னவோ இயல்பாகத் தான் சொன்னான். அவளால் தான் எதையும் இயல்பாக செய்ய முடியவில்லை.
அவளுக்கு கதவைச் சாற்றிவிட்டு வருவதற்குள் இன்னும் படபடப்பு கூடிப் போனது.
இருவருக்கும் திருமணம் என்ற தகவல் அவளுக்கு வந்ததிலிருந்து அதைக் குறித்து இவனிடம் பேச முயற்சி செய்து கொண்டே இருக்கிறாள். ஆனால், இவன் அனுமதிக்கவே இல்லை. ஒன்று கண்ணில் படமாட்டான். பட்டாலும் சுற்றிலும் ஆட்களோடு இருப்பான்.
மீறி கிடைத்த சந்தர்ப்பத்தில், “உங்ககிட்ட பேசணுமே…” என போய் கேட்டு நின்றால், “பிறகு?” என்றுவிட்டு உடனே கிளம்பி விடுவான்.
தென்னரசுவும், சத்யாவும் வந்து இவளிடம் திருமணம் குறித்துச் சொன்னபோதே அவர்களிடம் மறுப்பை தான் வேகமாகச் சொன்னாள். அவர்களோ இவளை விசித்திரமாகப் பார்த்துவிட்டு போய்விட்டார்கள்.
அதன்பிறகு ஆதியோடு பேச முயற்சி செய்தால் அதுவும் முடியவில்லை. இப்பொழுது இங்கு வரை வந்தாயிற்று.
“என்ன யோசனை?” என்று ஆதி கேட்டபிறகே வெகுநேரம் ஒரே இடத்தில் நின்றுவிட்டது தெரிந்தது.
எதுக்கு இந்த கல்யாணம்? என்று வாய்வரை வார்த்தைகள் வந்த போதும், அது வெளியே வராமல் சண்டித்தனம் செய்ய, அமைதியாக அவனை ஏறிட்டுப் பார்த்தாள். முகத்தில் பரிதவிப்பும் கலக்கமும்.
அவள் நிலை அவனுக்கும் புரிந்தது. அதைக் காண முடியாமல் மனம் பிசையத்தான் செய்தது. ஆனால், அவனிடம் எந்த நியாயமான விளக்கங்களும் அவளுக்கு இல்லை.
பேச்சை மாற்றும் பொருட்டு, “இந்த ரூம் உனக்கு ஏற்கனவே பழக்கமானது தான்…” என ஆதி தொடங்க,
“ஐயோ சாரே நான் ஈ சோபா மாத்திரமான்னு உபயோகிச்சது…” என்று தாரா பதறிக்கொண்டு பதில் சொல்ல, அவளை விசித்திரமாகப் பார்த்தான்.
ஒன்று அவளின் பதற்றம்; அடுத்து அவள் நாவில் அடிக்கடி நாட்டியமாடும் மலையாளம். இரண்டுக்கும் காரணம் புரியவில்லை அவனுக்கு. அவளின் தாய்மொழி தமிழ் என்று அவனுக்குத் தெரியாதா என்ன?
தாராவோ அவன் பார்வையில், “நிஜம் சாரே…” என்றாள்.
“ஸ்ஸ்ஸ் தாரா முதல்ல ரிலாக்ஸ்… நீ இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இந்த கல்யாணம் உன் சம்மதம் இல்லாம நடந்து முடிஞ்சதுக்கு மட்டும் என்கிட்ட இப்ப எந்த விளக்கமும் இல்லை… ஆனா நடக்க வேண்டிய கட்டாயம்… நீயும் மத்தவங்க டிராப்ல விழுந்துட்ட… எனக்கும் இந்த பிரச்சினையை எத்தனை முறை சமாளிக்க அப்படிங்கிற யோசனை… ஆனா உன்னை முழுசா நம்பினதால மட்டும் தான் இந்த கல்யாணம்… ஆக, ஒவ்வொரு விஷயத்துக்கும் நீ சொல்லறதை நான் நம்புவேனா மாட்டேனான்னு பயப்படாத…” என்க, தாராவின் மனம் இந்த பதிலில் தன்னை மீறி இதத்தை உணர்ந்தது.
முன்பின் தெரியாத தன்மீது இவனுக்கு எப்படி இந்தளவு நம்பிக்கை? அதுவும் அவன் உயரம் தெரியும், தகுதி தெரியும்… அப்படியிருக்க இவ்வளவு பெரிய முடிவை எதன் அடிப்படையில் எடுத்தான் என்று புரியாமல் குழம்பிப் போனாள்.
“அண்ட்… நீ நிறைய முறை என்கிட்ட பேச முயற்சி செஞ்ச… என்னால பேச முடியாம இல்லை… பேசினா இந்த கல்யாணம் வேணாம்ன்னு நீ கேட்பன்னு தோணுச்சு… அது என்னால அப்ப முடியாது… அதுதான் உன்கிட்ட நான் பேசவே இல்லை… உன் பிரண்ட்ஸ் செஞ்சு வெச்ச வேலையால என் பாட்டிகிட்ட என்னால எதுவுமே பேசவே முடியலை… இத்தனை வருஷமும் பாட்டிகிட்ட கல்யாணம் வேணாம்ன்னு சமாளிச்சவன் தான்… இப்ப நம்ம ரெண்டு பேரோட போட்டோஸ் வெச்சுட்டு பாட்டி கேட்கும்போது… நீ மயங்கி இருக்கேன்னு சொல்லறதை கூட அவங்க நம்ப மாட்டேங்கறாங்க…” என்றான் விளக்கமாக.
அவளும் அந்த புகைப்படங்களைப் பார்த்திருந்தாலே… அந்த பிரவீணா எடுத்த அழகில், காதலர்கள் போல தான் அந்த புகைப்படத்தில் தோன்றியது. “விடுங்க சார்… உங்க சூழ்நிலை புரியுது. தப்பு என்மேல தான்… நான் உங்க வீட்டுக்கே வந்திருக்க கூடாது… சரி அந்த பிரச்சினையை நீங்க சரி பண்ணும்போதே நான் விலகி இருக்கணும்… அதை விட்டுட்டு மறுபடியும் உங்ககிட்ட பேச வந்து புது பிரச்சினையைக் கிளப்பி விட்டுட்டேன்…” என்று அவள் சொல்லும்போது அவனுக்கு கொஞ்சம் மனம் முரண்டியது.
அப்படி இவள் வராது போயிருந்தால் இந்த திருமணம் சாத்தியமே இல்லையே என்று யோசித்தவனுக்கு, ஏனோ அதை யோசிக்கவும் பிடிக்கவில்லை.
ஆனால், நல்லவேளையாக தாராவே, “இதெல்லாம் நடக்கணும்ன்னு இருக்கும் போல சார்…” என்றிருக்க, அப்பொழுது தான் அவனுக்கு மனம் ஒருநிலைப்பட்டது..
“இந்த கல்யாணம் யாரையும் ஏமாத்த நடக்கலை. இது நிஜமான கல்யாணம் தான். என் மனசார தான் உன்னை என் மனைவியா ஏத்துக்கிட்டேன். ஆனா, உனக்கு இதெல்லாம் ஏத்துக்க அவகாசம் தேவைப்படும். அதுவரை இந்த ரூம் உனக்கு… உள்ளே இருக்கிற இன்னொரு ரூம் எனக்கு…” என அதே அறையில் இருந்த இன்னொரு கதவைக் காட்டினான்.
அத்தனை நேரமும் அவன் அருகே கூடப் போகாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு அப்பொழுதே ஆசுவாசமாய் மூச்சு வந்தது.
அது அவள் முகத்திலும் வெளிப்பட்டு விட, அவன் குறுகுறுவென பார்த்தான்.