காவியத் தலைவன் – 33

விவேக் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பியிருந்தான். அவன் மருத்துவமனையில் இருந்தவரையிலும் அங்கு சென்று விசாரிக்க முடிந்த சத்யேந்திரனால் அதன்பிறகு அவனைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. சுந்தரி அம்மா அதற்கு அனுமதிக்கவில்லை என்பது சரியாக இருக்கும்.

சத்யாவும் தாரா சொன்னதை மனதில் நிறுத்தி, தன் அம்மாவின் மறுப்பை மீறி அவர்களைச் சென்று பார்ப்பதை விரும்பவில்லை. கண்டிப்பாக அண்ணா தலையிட்ட பிறகு இந்த பிரச்சினை சுமூகமாகும், அதற்குள் விவேக்கும் கொஞ்சம் தேறி வரட்டும் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.

ஆழ்மனதில் தங்கை, அம்மா என்ற ஏக்கம் நிறைந்திருந்த போதும், எதையும் செய்ய முடியாத கையறு நிலை தான் அவனுடையது!

சுந்தரி அம்மாவுக்கும் செய்திகளின் வாயிலாக ஆதீஸ்வரனின் பதவி பலம், செல்வாக்கு எல்லாம் தெரிய வந்தது. திரிபுரா செய்திகள் வெளியான பிறகு அவனைத் தான் அடிக்கடி தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறதே!

ஆதியின் உயரம் அவரை வெகுவாக கலங்கச் செய்தது. அவர்களைப் பார்த்தபோதே மிகவும் பெரிய இடம் என்றளவில் புரிந்திருந்தவர் தான் என்றாலும், இந்தளவிற்கு இருப்பார்கள் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. இத்தனை செல்வாக்கானவர்களிடம் மோதி தங்களால் ஜெயிக்க முடியுமா என்று மனம் பதைபதைத்தது.

எப்பொழுதும் எதையோ பறிகொடுத்தது போன்ற தோற்றத்தில் அச்சத்துடன் வளைய வந்தார். எதையாவது யோசித்தபடி எந்த வேலையிலும் கவனம் செலுத்த மனமில்லாமல் அமர்ந்திருக்க தொடங்கினார்.

அவருடைய மகள் நந்தினிக்கும் அம்மாவின் அச்சம் விளங்கியது. எல்லாருடைய வீட்டைப் போல அவர்கள் வீட்டிலும் நந்தினி அப்பா செல்லம் என்றால், அண்ணன் விவேக் தான் அம்மா செல்லம். அண்ணனுக்கு ஒன்று என்றால் அம்மா துடித்துப் போய்விடுவார். அப்படி அவன் மீது உயிரையே வைத்திருக்கிறார். அவனைப் பிரிய நேர்ந்திடுமோ என்ற அம்மாவின் அச்சம் எந்தளவிற்கு இருக்கும் என்று அவளுக்குப் புரியாமல் இருக்குமா?

ஏன் ஒரு கட்டத்தில் விவேக் உண்மையான மகனில்லை என்கிற உண்மை தெரிய வந்தபோது கூட மதிமாறன், சுந்தரி தம்பதிகளால் அவனை இழப்பதைக் குறித்து யோசிக்க முடிந்ததில்லை. இப்பொழுது மட்டும் என்ன பெரிதாக மாறுதல் நடந்து விட்டது அந்த முடிவிலிருந்து மாறுவதற்கு?

பெற்ற பாசத்தை வளர்த்த பாசம் மிஞ்சுமா என்றால், இங்கு மிஞ்சி தான் நின்றது! பத்து மாதங்கள் கருவோடு சுமந்த சொந்த பிள்ளையைக் காட்டிலும், பாலூட்டி, சீராட்டி, அரவணைத்து இருபத்தி நான்கு ஆண்டுகள் வளர்த்த மகன் தான் பெரிதாகத் தெரிந்தான். எந்தளவிற்கு என்றால், தான் பெத்த மகன்தான் என்று தெரிந்த பிறகும் சத்யாவின் முகத்தில் விழிக்கக்கூடப் பிடிக்காத அளவிற்கு.

எங்கே சத்யா மீது பெற்ற பாசத்தைக் காட்டினால், விவேக்கை இழந்து விடுமோ என்கிற அச்சம் முழுமையாக ஆக்கிரமித்திருக்க, சத்யா தன்னுடைய சொந்த மகன் தான் என்கிற எண்ணம் கூட சுந்தரி அம்மாவுக்குத் தூரப் போனது.

சுந்தரி அம்மாவின் எண்ணத்தினை அதே வலுவுடன் வைத்திருக்க, சத்யாவைத் தேடிச்சென்ற தன் கணவர் பிணமாகத் திரும்பி வந்த காட்சியும் முக்கிய பங்காக இருந்தது. இன்னும் அவரது மனதை விட்டு நீங்காத அதன் வடு அவரை சத்யாவிடம் நெருங்க விடவில்லை.

ஆதியின் பதவி, உயரம் எல்லாம் தெரிய வந்தபிறகு, எப்பொழுது தன் மகனை தன்னிடமிருந்து அபகரித்து விடுவார்களோ என்கிற பதைபதைப்புடன் அவர் இருக்க, வீட்டின் பொறுப்பை அன்னையைத் தொந்தரவு செய்யாமல் நந்தினி ஏற்றுக் கொண்டாள்.

தங்கள் குடும்ப நிலை அவளுக்கும் தெரியும். தன் அண்ணன் வேறொரு பெரிய குடும்பத்தின் வாரிசு என்ற உண்மை, அவனை இழந்து விடுவோமோ என்கிற அச்சத்தை அவளுக்கும் கொடுத்தது தான்! கூடவே, தன் தந்தையின் சாயலில் அவள் கண்ட அவளுடைய சொந்த அண்ணனை அம்மாவைப் போல அவளால் முற்று முழுதாக தள்ளி வைக்க முடியவில்லை! அவளின் இளமனம் அண்ணனிடம் பேச வேண்டும் என்று ஆவல் கொள்கிறது. அவனை மீண்டும் எப்பொழுது காண்போம் என்ற ஏக்கம் அவளுக்குள் நிறைந்து கிடக்கிறது.

அதற்காக விவேக் வேண்டாம் என்பது பொருள் அல்ல! இத்தனை ஆண்டுகளாக சண்டையிட்டு, அடிதடி ஆர்ப்பாட்டம் செய்து, பாசம் கொட்டி, போட்டி போட்டுக்கொண்டு ஒன்றாக வளர்ந்தவர்கள் ஆயிற்றே! அதுவும் ஒரு கட்டத்தில் தந்தையைப் பறிகொடுத்த பிறகு, அண்ணன் மொத்த குடும்ப சுமையையும் தன் கனவுகளை எல்லாம் ஒதுக்கி வைத்து ஏற்றுக்கொண்டு நடத்தினானே! இப்பொழுது அவளுடைய தந்தையின் ஸ்தானம் அவளின் அண்ணன் அல்லவா! அவனை வேண்டாம் என்று சொல்ல அவளால் எப்படி முடியும்?

அவளுக்கு விவேக் அண்ணனையும் இழக்க முடியாது, அதே சமயம் சத்யா அண்ணனையும் புறக்கணிக்க முடியவில்லை.

ஆனால், அம்மாவிற்கு இதெல்லாம் பிடிக்காது. அவருக்கு விவேக் அண்ணன் தான் முக்கியம். அவரால் தன் அண்ணனை இழக்க முடியாது என்கிற நிதர்சனம் உரைக்க, இவளும் தன் உணர்வுகளை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.

விவேக் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்தான். அவனது உடல்நிலை நன்றாகத் தேறி வந்து கொண்டிருந்தது. அம்மா, தங்கை இருவரின் முகங்களிலும் ஒளியே இல்லை என்பதைக் காணக் காண அவன் மனம் பிசைந்தது. அவனைப் பொறுத்தவரை அவர்களின் இந்த நிலைக்குக் காரணம் தன் சுகமின்மை. சாவின் விளிம்பு வரை தான் போய்விட்டு திரும்பிய நிலை!

இவர்களைப்பற்றி ஒரு நொடி கூட யோசிக்காமல் ஏன் அப்படி ஒரு செயலை செய்தான் என்று இப்பொழுதும் அவனுக்குப் புரியவில்லை.

என்னதான் ஆதீஸ்வரன் மீது அபிமானம் நிறைந்திருந்தாலும், சத்யாவைக் காணும்போது தன் தந்தையின் சாயல் தோன்றுவதால் சத்யா மீது பற்றும் பாசமும் நிறைந்திருப்பதாக இருந்தாலும், அவர்களைக் காக்க எந்த எல்லைக்கும் போக மனம் உந்தினாலும் அதெப்படி தன்னையே நம்பியிருக்கும் இரு ஜீவன்களைப் பற்றி அவன் யோசிக்கத் தவறுவான்?

ஒருவேளை தனக்கு மட்டும் எதுவும் ஆகியிருந்தால், இவர்களின் நிலை என்று நினைப்பே பெரும் நடுக்கத்தைத் தர போதுமானதாக இருந்தது.

அதற்கு ஏற்றது போல எதையோ பறிகொடுத்தது போன்ற அம்மாவின் தோற்றம் அவன் மனதை சம்மட்டியால் அடித்தது போல வலியைக் கொடுக்க, அவர் அருகே அமர்ந்து, “என்னை மன்னிச்சிடுங்கம்மா…” என்றான் சிறுபிள்ளை போல!

நடுங்கிய கரங்களால் மகனின் முகத்தை வருடியவரின் கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீர் வந்தது.

“உனக்கு அம்மாவைப் பிடிக்கும் தானேடா தங்கம்?” தழுதழுத்த குரலில் கவலையாக விசாரித்தார்.

அம்மாவை மறந்து இவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்ளப் பார்த்தாயே என்று அன்னை குற்றம் சாட்டுவதாக எண்ணிக் கொண்டவன், “அது தெரியாம நடந்த விபத்தும்மா. அதுக்கு போய் ஏன் ஏதேதோ பேசறீங்க? இனி நான் ரொம்ப கவனமா இருக்கேன்” என்றான் வாக்கு போல!

இவனிடம் எப்படி கேட்பது என்கிற விரக்தி சுந்தரியிடம். “நான் அதைக் கேட்கலைப்பா. உனக்கு அம்மாவைப் பிடிக்கும் தானே?” என்று மீண்டும் கெஞ்சுதலாகக் கேட்டார். முகம் எல்லாம் காய்ந்து போய், அழுது சோர்ந்த விழிகளுடன், பொழிவென்பதே மருந்துக்கும் இல்லாமல் இருந்த அம்மாவின் தோற்றம் அவனுக்கு என்ன உணர்த்தியதோ,

“உங்களை பிடிக்காம போகுமா அம்மா? சின்ன பையனா இருக்கும்போது உங்க முந்தானையை பிடிச்சிட்டு சுத்தினேன். இப்ப இல்லை அவ்வளவு தான் வித்தியாசம்” என்றான் நெகிழ்ந்த குரலில்.

“நிஜமாலுமே ரொம்ப பிடிக்கும் தானே? என்னை எப்பவும் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்ட தானே?” என்று கேட்டவரிடம் சின்ன பிள்ளையின் அடமும் பிடிவாதமும் இருப்பது போல அவனுக்கு தோன்றியது.

‘அம்மா ஏன் இப்படியே கேட்டுட்டு இருக்காங்க’ என்று குழம்பியே போய்விட்டான். ஒருவேளை கல்யாணம் ஆனால், அவர் மீது வைத்திருக்கும் பாசம் குறைந்து போகும் என நினைத்து அச்சம் கொள்கிறாரோ என்று தோன்ற, அவரை நிதானப்படுத்துவதே முக்கியமாகப் பட, “எத்தனை பேரு வந்தாலும் என் அம்மா தான் எனக்கு ரொம்ப முக்கியம். அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றான் அம்மாவின் கையை அழுத்திப் பிடித்து.

சிறுபிள்ளை போல கரகரவென்று கண்ணில் நீரைப் பொழிந்தார். பார்க்கவே பாவமாக இருந்தது.

“குழந்தை மாதிரி அழாதீங்க மா…” என சமாதானப் படுத்தினாலும் போலீஸ்காரன் ஆயிற்றே, அம்மாவின் மனதை என்னவோ ஆழமாகப் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். அதன்பிறகு அம்மாவை விழித்திருக்கும் நேரங்களில் எல்லாம் ஊன்றி கவனிக்கத் தொடங்கினான்.

ஆதி அண்ணன் குறித்து செய்திகள் வந்தபோது இவன் என்னவோ அனைத்தையும் தானே சாதித்தது போல பெருமிதத்தில் ஆராவாரமாக பார்த்தபடி, தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள அம்மாவைத் தேடினான். அவரின் முகம் வழக்கத்திற்கு மாறாக மொத்தமாக மாறிப் போயிருந்ததைக் கவனித்தவனுக்கு ‘இப்பொழுது என்ன ஆனது’ என்ற குழப்பம் வந்தது.

‘அவர் தந்த வேலைக்காக நான் சென்றதால் தான் இந்த நிலை என நினைத்து அம்மா கலங்குகிறாரோ?’ என்று விவேக் யோசித்தாலும், ‘ஆனால், நான் அவர் சொன்ன வேலைக்குத் தான் சென்றேன் என அம்மாவிற்கு எப்படித் தெரிய வந்திருக்கும்?’ என்றும் குழம்பினான்.

எதற்கும் அவரைப் பற்றிப் பேசிப் பார்க்கலாம் என்று எண்ணியபடி, “மினிஸ்டர் சார் தெரியும் தானேம்மா? அவர் மேல எனக்கு மதிப்பும் மரியாதையும் நிறைய இருக்கு. ரொம்ப நல்ல மனுஷன் தெரியுமா? நான் தான் அவரை பத்தி நிறைய முறை உங்ககிட்ட பேசி இருக்கேனே” என்று சொல்லி அவரை கவனித்துப் பார்த்தான்.

அம்மாவின் முகத்தில் தன் வார்த்தைகளைக் கேட்டு மெல்ல மெல்ல அச்சமும் அதிர்ச்சியும் அதிகமாவதைப் புரியாமல் பார்த்திருந்தான்.

சுந்தரி அம்மாவோ, “அவங்கனால தான் உனக்கு இப்படி ஒரு நிலைமையும் கூட. அவங்க நிழல் கூட படாத இடத்துக்கு நாம போயிட முடியுமா தங்கம்? இந்த வேலையை விட்டுட்டு போறதுனாலும் எனக்கு சரிதான்” என்று பதற்றத்துடன் சொல்ல, அவனுக்கு இதில் வேறு என்னவோ இருக்கிறது என்று தோன்றியது.