பாட்டிக்கு கொஞ்சம் சிரிப்பு வந்துவிட்டது. “வந்ததுல இருந்து ஏழுமலை ஏழுமலைன்னு இவன் பேரை ஏலம் விடறேன். இன்னும் இவன் யாருன்னு நீ கண்டுபிடிக்கலையா?” என்று கேட்க, “பேரை சொன்னாலே எனக்கு தெரியுமா? அப்படி யாரா இருக்கும்” என்று வாய்விட்டே புலம்பியவன், “நிஜமா தெரியலையே பாட்டி” என பாவமாக அவரின் முகம் பார்த்தான்.
“அதுசரி, பேருக்கு தான் தாரா தாரான்னு அவ வால் பிடிச்சிட்டே சின்ன வயசுல சுத்திட்டு இருந்த, அவளும் எப்பவும் உன்னை விட்டுட்டு இருந்ததே இல்லை. இப்ப ரெண்டு பேரும் இத்தனை மாசத்துல ஒரு நாள் கூட அடையாளம் கண்டுபிடிச்சுக்கலை. ஆனா, என் மூத்த பேரன், ஒரே நாள் பார்த்ததிலேயே அவன் மாமன் பொண்ணை கண்டும் பிடிச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்டான்” என்று பாட்டி பெருமிதமாக முடித்தபோது, அவன் கண்கள் அகலமாக விரிந்திருந்தது.
“அப்படின்னா பாட்டி… பாட்டி… அண்ணி…” என அதிர்ச்சியில் அவன் தந்தியடிக்க, “உங்க அண்ணி தான்டா” என்று அப்பொழுதும் அவனைப் பார்த்து சிரித்தார்.
“அச்சோ பாட்டி, அண்ணி… தாரா… ஏழுமலை மாமாவோட பொண்ணு…” என இன்னமுமே அதிர்ச்சியிலிருந்து அவனால் மீள முடியவில்லை.
கொஞ்சம் கண்ணீர் கூட பொங்கி விட்டது. “என்னோட தாரா என்கிட்டயே வந்துட்டா பாருங்க பாட்டி” என்று வேகமாகச் சொல்ல,
“உதை வாங்காதடா. எப்பவும் போல அண்ணின்னு சொல்லு” என்று பாட்டி தன் பொறுப்பை நிரூபித்தார்.
“அச்சோ நீங்க வேற பாட்டி, என் நிலைமை புரியாம விளையாடிட்டு. ஏன் என்கிட்டே முதல்லயே சொல்லலை” என்று ஆதங்கப் பட்டான். ஆனால், முகத்தில் அப்படியொரு பரவசம்!
பூஜிதா தான், “சத்யா பாவம் அவங்க, அவங்களை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடு. எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம்” என்று சொல்ல, “ஹே நான் தாராவை எவ்வளவு மிஸ் பண்ணினேன்னு உனக்கு தெரியும் தானே? கண்ணு முன்னாடியே இருந்திருக்கா, பாரு நான் கண்டு பிடிக்கவே இல்லை. அண்ணன் மட்டும் எப்படி கண்டுபிடிச்சிருப்பான்?” என்றான் பரவசமும், குழப்பமுமாக.
அவன் கேட்ட தோரணையில் சிரிப்பு பொங்கியது. “உனக்கு தாரா பிரண்ட், உங்க அண்ணனுக்கு அப்படி இல்லை போல” என்று கொஞ்சம் கூச்சமும் வெட்கமும் கலந்த குரலில் சொன்னாள்.
இவளுக்கு ஏன் கூச்சம், வெட்கம் என்றுதான் பெரியவர்களுக்குப் புரியவில்லை. இவள் செய்கைக்கும் சேர்த்துச் சிரித்துக் கொண்டனர்.
சத்யா வேகமாக, “ச்சு… அப்படி எல்லாம் இருந்திருக்காது, தாராவை நாங்க பிரிஞ்சப்ப அவளுக்கு மீறிப்போனா எட்டு வயசு தான் இருக்கும்” என்று சொல்ல, ‘அட! மட சாம்பிராணியே!’ என்று பூஜிதா எண்ணியபடி இப்பொழுதும் கேலியாகத் தான் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
அர்த்தம் புரிந்து கொண்டு அசடு வழிந்தவன், “பாட்டி, மாமா நீங்க ரெண்டு பெரும் போய் ரெஸ்ட் எடுங்க. இன்னைக்கு கண்டிப்பா கோயிலுக்கு போறோம்” என உற்சாகமாகச் சொன்னவனுக்கு நீண்ட நாட்கள் கழித்து மனம் நிறைந்திருந்தது.
அதன்பிறகு தாரா, சத்யாவின் பாசப்பிணைப்பு அங்கிருந்தவர்களை மேலும் மேலும் ரசித்துச் சிரிக்க வைத்தது.
‘ம்ம்ம்… ம்ம்ம்… ஹே…ஏஏ… பிரண்ட்ஷிப்… ம்ம்ம்… ம்ம்ம்… ஹே…ஏஏ… பிரண்ட்ஷிப்… பிரண்ட்ஷிப் ஈஸ் வாட் வீ லுக்கிங் பாஃர்…’ என்று பாடல் பாடாத குறையாக மீண்டும் பால்ய காலத்திற்கே சென்றவர்கள் போல ஒட்டித் திரிந்தார்கள், ஆர்ப்பாட்டம் செய்தார்கள், நிறைய கதைகளைப் பேசி பேசி சலித்தார்கள்.
இந்த சமயத்தில் தான் ஆதீஸ்வரன் திரிபுராவில் குற்றங்களை எல்லாம் கண்டுபிடிக்கத் தொடங்கியிருந்தான். டீவி செய்திகளில், இன்டர்நெட்டில் எல்லாம் அவன் தான் மீண்டும் மீண்டும் வந்தான். நாளுக்கு நாள் அவனைப்பற்றிய செய்திகள் வந்து குவியத் தொடங்கியது. நாடே இந்த பெரும் குற்றத்திற்கு எதிராகக் கொந்தளித்தார்கள். இத்தனை பெரிய பிரச்சினையை வெளியில் கொண்டு வந்ததற்காக அவனை இந்தியா முழுவதும் கொண்டாடி தீர்த்தார்கள்.
குடும்பத்தினர் மொத்த பேரும் அவனை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்க, தாராவின் மனதில் மட்டும் தன்னை இத்தனை தூரம் ஏமாற்றியவன் மீது கொஞ்சம் கோபமும் சேர்ந்தே இருந்தது.
ஒருவழியாகத் திரிபுராவில் மொத்த பிரச்சினைகள் ஓய்ந்த பிறகும் ஆதீஸ்வரன் வீடு திரும்பவில்லை. அவனை இவர்களால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. குடும்பம் மொத்தமும் இப்பொழுது ஸ்தம்பித்துப் போனது. அவன் கையாண்டது சாதாரண பிரச்சினை அல்லவே! பல டிரக் டீலர்களை வேரோடு அழித்திருக்கிறான். அவர்களால் அவனுக்கு எதுவும் ஆபத்து வந்துவிட்டதோ என்று அஞ்சினார்கள்.
தென்னரசு மட்டும் சென்னைக்குத் திரும்பி வந்திருந்தான். இவர்களுக்கு சமாதானம் சொன்னதும் அவன் தான்! “சாருக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சீக்கிரம் வந்துடுவாரு” என்று மட்டும் தான் சொன்னான். ஆதி எங்கு சென்றிருக்கிறான் என்று அவனுக்கே தெரியாதபோது இவர்களுக்கு என்ன விளக்கம் சொல்ல முடியும் அவனால்?
அவன் வார்த்தைகளில் யாருக்கும் நம்பிக்கை வர மறுத்தது. குடும்பம் மொத்தமும் கலக்கத்துடனும், அச்சத்துடனும் ஆதீஸ்வரனை எதிர்நோக்கி தங்கள் நாட்களை கழித்துக் கொண்டிருந்தனர்.
தென்னரசு, முதல் வேலையாக இந்துஜா மீதிருக்கும் கேஸை முடுக்கி விட்டான். அவளுக்கு தன்னுடைய பெயர் கெடாமல் இதுவரை மறைமுகமாக உதவி செய்து வந்திருந்த வீரராகவன் இப்பொழுது எங்கிருக்கிறார் என்றே தெரியாத காரணத்தினால், அவளால் அவள் செய்த குற்றங்களிலிருந்து அதற்கு மேலும் தப்பிக்க முடியவில்லை.
இந்துஜா மோசடி செய்து கலெக்டர் பதவியைப் பெற்றதாலும், அந்த பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாலும் அவளுக்கு ஒரு வழியாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.
இங்கு வீரராகவன் பல சித்திரவதைகளை அனுபவித்து, கொஞ்சம் கொஞ்சமாக உயிரை இழந்து கொண்டிருந்தார். ஆமாம், இன்னும் முழுதாக இறக்கவில்லை. இறப்பே மேல் என்று எண்ணும் அளவிற்குத் தினமும் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவரை தேடவோ, எங்கிருக்கிறார் என்று கவலைப்படவோ ஆள் இல்லை.
இந்துஜா குறித்த செய்திகள் எல்லாம் வந்து சேர்ந்தபோதும், ஆதீஸ்வரன் வீடு வந்து சேரவில்லை. நாளுக்கு நாள் தாராவின் பயம் அதிகரித்தது. அவன் மீதிருந்த கோபம் எல்லாம் மறந்து போகுமளவு அவளுள் கவலை நிறைந்தது. அவனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்கிற ஒற்றை வேண்டுதலோடு அவனுக்காக காத்திருந்தாள்.
“மேடம் நீங்க இவ்வளவு கவலைப்படற அளவுக்கு சாருக்கு ஒன்னும் இல்லை, அவர் சீக்கிரமே வந்துடுவாரு” என தென்னரசு தைரியம் தந்தும் பயனில்லை.
“மேடம், இன்னைக்கு ஈவினிங் அஞ்சு மணி பிளைட்ல சார் வராரு. ப்ளீஸ் இனியாச்சும் கொஞ்சம் சிரிங்க” என்று ஒருநாள் காலையில் வந்து தகவல் சொல்லிவிட்டுப் போனான்.
கேட்ட அவளுக்கு அப்பொழுதுதான் உயிரே வந்தது. இத்தனை நாட்களும் அவள் எவ்வளவு தவித்து விட்டாள்.
“சத்யா… உங்க அண்ணா வந்தா நான் பேசவே போறதில்லை. எங்கே போறேன், என்ன செய்யறேன்னு எதுவும் சொல்லாம திடீர்ன்னு காணாம போயி நம்மளை எவ்வளவு அலைக்கழிச்சிட்டாரு. அதுக்காக கண்டிப்பா அவர்கிட்ட நான் பேசவே போறதில்லை, ஏன் முகத்துல கூட விழிக்க மாட்டேன். அவருக்காக யாரும் என்கிட்ட பரிஞ்சு பேசக் கூடாது. இப்போவே சொல்லிட்டேன்” என்று கோபமாக அறிவித்தாள்.
எல்லாருக்கும் சிரிப்பு தான் வந்தது. தங்கள் எல்லோரை விடவும் வேதனையும் தவிப்பும் அச்சமும் அவளுக்குத் தான் அதிகம் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன?
ஆக, அமைதியாக அவளை வேடிக்கை பார்த்தார்கள்.
நேரம் நெருங்க நெருங்க அவளுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. வேகமாக அறைக்கு சென்று குளித்தாள். பிடித்ததாக ஒரு புடவையை எடுத்து கட்டிக் கொண்டாள். அவசரமாக சாமியறைக்கு சென்று விளக்கை ஏற்றி மனமுருக வேண்டினாள்.
இப்பொழுதும் அனைவரும் நமட்டு சிரிப்புடன், அவளை அமைதியாக வேடிக்கை பார்க்க, “என்ன இருந்தாலும் நிறைய சாதிச்சிட்டு வீட்டுக்கு வராரு. இந்த நாடே அவரை கொண்டாடுது. நம்ம உதாசீனம் செஞ்சுடக் கூடாதில்லை. அதுக்காகத் தான்” என்று கொஞ்சம் அசடு வழிய விளக்கம் சொன்னாள்.
அழகாண்டாள் பாட்டி தான், “நாங்க எதுவும் விளக்கம் கேட்கலையே” என்று சொல்ல, அவஸ்தையுடன் தலையை ஒதுக்கிவிட்டபடி, “சத்யா ஏர்போர்ட் போலாம் வா” என்று அழைக்க, அவளின் அலப்பறையில் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“ம்ப்ச் சிரிக்காதடா… நீ வேணா பாரு, பாராட்டு விழா முடிஞ்சதும், அவர்கிட்ட எப்படி கோபத்தை காட்டறேன்னு” என்று கொஞ்சம் ரோசத்துடன் சொல்ல, “ம்ம்ம்…” என்று அதற்கும் கேலியாகச் சிரித்தான். அவளுக்குத் தான் கோபம் வருவதற்குப் பதில் காரணமே இல்லாமல் வெட்கம் வந்து தொலைத்தது.
((நன்றி மக்களே! நான் சந்தேகம் கேட்டதும், முகநூல், சைட்ல எல்லாம் உங்களுக்கு தோணின பாயிண்ட்ஸ்களை எடுத்து சொன்னீங்க. ரொம்ப ஹேப்பி. அண்ட் தேங்க்ஸ் ஒன்ஸ் எகைன்.
அப்பறம் இதை சொல்ல மறந்துவிட்டேன், இந்துஜா விஷயமாக சொன்ன போர்ஜரி விஷயமும் முழுக்க முழுக்க உண்மை சம்பவம் தான். மஹாராஷ்டிராவை சேர்ந்த பூஜா கேத்கர் தான் இந்த வேலைகளை எல்லாம் செய்தது. நம்ம ஆதங்கத்தை எல்லாம் கதையில் அவங்களுக்கு தண்டனை தந்து குறைச்சுக்க வேண்டியது தான். வேற வழி…))