காவியத் தலைவன் – 32

அப்பா இவ்வாறு சொன்னதும் தாரகேஸ்வரி பதறி  நிமிர்ந்தாள். அவளுக்கும் உண்மையில் இப்படியான ஒரு அக்கறை தேவையாகத்தான் இருந்தது! இத்தனை நாட்கள் தனியாகவே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும், தனியாகவே எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்றிருந்த நிலை, இப்பொழுது தந்தை என்ற உறவு அவள் வாழ்வில் வந்ததும் மாறி விட்டதில் அவளுக்கும் சந்தோசம் தான்!

ஏதோவொரு ஆதங்கத்தில், கோபத்தில் தான் தந்தையிடம் கூட கேள்வி கேட்டிருந்தாள். ஆனால் அதையே அவளின் தந்தையும் வழிமொழியவும் அவளுக்கு மூச்செடுக்க முடியாத நிலை! அதிலும் பாட்டியின் முகத்தை அவளால் பார்க்கவே முடியவில்லை. குற்றவுணர்வு வாட்ட, கண்கள் கலங்க, தளர்ந்து போய் நின்றிருந்தவரின் தோற்றத்தில் தான் ஏதோ பெரிதாகத் தவறு செய்தவள் போலக் குன்றலாக உணர்ந்தாள்.

அதிலும் அவளின் காதிற்குள், ‘என்ன முடிவு எடுக்கிறதா இருந்தாலும் நான் திரும்பி வரும்வரை மட்டும் எனக்காக காத்திரு பிளீஸ்’ என்று நடுங்கிய குரலில் ஆதீஸ்வரன் கேட்டது ஒலிக்க, ஒரு கணம் அவளின் மேனி லேசாக நடுக்கம் கண்டு மீண்டது.

‘அவனை மறந்து, அவனை மறுத்து உன்னால் இங்கிருந்து போய் விட முடியுமா என்ன?’ என்று அவளின் மனமே அவளிடம் சவாலாகக் கேட்க, என்னவோ தான் அப்படி யோசித்தது கூட தவறு என்பது போல அவளுக்குத் தோன்றியது.

பரிதாபமாக தந்தையைப் பார்த்தவள், “ஏதோ கோபத்துல நீங்க திட்டவும் சொல்லிட்டேன் பா. மத்தபடி அவரை விட்டு வரதை பத்தி என்னால யோசிக்கக்கூட முடியாது” என்றாள் கண்களில் நீர் நிறைய சிறு தேம்பலுடனும் பெரும் குற்றவுணர்வுடனும். அனைவரின் முன்பும் இப்படி சொல்கிறோமே என்கிற யோசனை கூட அவளிடம் இல்லை.

‘அதெப்படி நீ அப்படி உன் தந்தையிடம் கேட்கலாம்?’ என்ற ஆழ்மனதின் உலுக்கலுக்கு நியாயம் செய்யும் விதமாக அதிவேகமாக இவ்வாறு சொல்லி விட்டிருந்தாள்.

இறுக்கம் தளர்ந்து மற்றவர்கள் லேசாகப் புன்னகைக்கும்படி இருந்தது அவளின் பதில்.

“ரெஸ்ட் உனக்கோ எனக்கோ இப்போ தேவை இல்லை ஏழுமலை. என் பேத்திக்கு தான் வேணும். அவளோட மனப்போராட்டம் தான் அதிகம்” என்று ஆண்டாள் பாட்டி சொல்ல, தந்தையின் மனதிலும் அதுதான் இருந்தது போலும்! மகளின் தலையை ஆதுர்யமாக வருடி, “நீ கொஞ்சம் தூங்கி எழுந்திரும்மா. நம்ம மத்ததை எல்லாம் நிதானமா பேசிக்கலாம்” என்று சொல்ல,

அவளுக்கும் ஓய்வு தேவையாகத்தான் இருந்தது. இல்லையேல் எங்கு இதுபோல வார்த்தை அம்புகளை வீசி மற்றவர்களை நோகடித்து, தானும் அதனால் நொந்து சூழலை மேலும் மேலும் இறுக்கமாக மாற்றி விடுவோமோ என்ற அச்சம் அவளுள் வியாபித்திருக்கத் தந்தையிடம் லேசாகத் தலையசைத்து விட்டு, பூஜிதாவை பார்த்தவள், “பாட்டியையும் அப்பாவையும் கவனிச்சுக்க” என்று சொல்லிவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றாள்.

பாட்டி பெருமூச்சுடன் தளர்ந்து போய் இருக்கையில் அமர்ந்தார்.

“விடுங்க அத்தை, போகப் போக சரியாயிடுவா” என்று அவர் அருகே வந்து அமர்ந்து ஏழுமலை சமாதானமாகச் சொல்ல,

“அவ அவளோட கோபத்தைக் கொட்டும்போது விட்டுடணும் ஏழுமலை. கோபம் எல்லாம் இப்படி வெளிய வந்துட்டா அவளே கூடிய சீக்கிரம் சரி ஆயிடுவா. அதை விட்டுட்டு அவகிட்ட இதெல்லாம் தப்பு செய்யாதேன்னு சொல்லிட்டு இருக்க, அதுனாலதான் இப்ப இன்னும் பொங்கிட்டு போறா” என்று ஆண்டாள் அவரின் கணிப்பைச் சொன்னதற்கு, ‘அது சரி’ என்று தான் பெற்றவருக்குத் தோன்றியது.

பூஜிதா பொறுப்பாக இருவரையும் உணவுண்ண அழைத்துச் செல்ல, ‘இந்த பொண்ணு யாரா இருக்கும்?’ என்று தான் ஏழுமலை யோசித்தார்.

உணவை முடித்துவிட்டுக் கேட்டுக்கொள்ளலாம் என்று தோன்றியதால், அதன்பிறகு தன் அத்தையிடம் விசாரிக்கவும் செய்தார்.

“சத்யாவுக்கு பார்த்திருக்கிற பொண்ணு” என்று மட்டும் ஆண்டாள் சொல்லிட, “எனக்கு இனி ஒரு வேலையும் இல்லை போலவே… இவர்களுக்கும் கல்யாணம் முடிஞ்சிட்டா, பேரன் பேத்தின்னு என் காலம் போயிடும்” என்று அவர் வெகுளியாகச் சொல்ல, அந்த சொற்கள் ஏனோ பாட்டியின் மனதை முள்ளெனத் தைத்தது.

விரக்தி சிரிப்புடன், “பொண்டாட்டி, புள்ளைன்னு உன் காலத்தைப் போக்க விடாம நான் செஞ்ச பாவம் இன்னும் அப்படியே தான் இருக்கல்ல. என்னை எப்படி மன்னிச்ச ஏழுமலை?” என்று ஆதங்கமாகக் கேட்க,

“அத்தை போதும் இந்த பேச்சு வேண்டாம்ன்னு எவ்வளவு தடவை சொல்லறது? நடந்த எதையும் யாராலையும் மாத்திட முடியாது” என்றார் வேகமாக. அதில் இன்னும் தான் பாட்டிக்குக் குற்றவுணர்வு தாக்கியது.

ஏழுமலையே அந்த பேச்சை மாற்றும் விதமாக சத்யாவிடம், “கல்யாணம் எப்ப சின்ன மருமகனே?” என்று கேட்க, அவரின் உரிமையான பேச்சில் ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. தடுமாறியபடியே, “இன்னும் அதுக்கெல்லாம் வருஷக்கணக்கு ஆகும் மாமா. இந்த வயசுலயே எனக்கு கல்யாணமா?” என்று பதில் சொன்னான்.

“உங்க அப்பா, அம்மா எல்லாம் என்ன பண்ணறாங்கம்மா?” என்று  பூஜிதாவிடம் கேட்க, அங்கே யாருக்கும் என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. அப்படியே மௌனம் ஆகி விட்டவர்கள், ஒருவர் முகத்தை மற்றவர்கள் பார்த்து வேறு கொள்ள, ஏழுமலையின் முகம் யோசனையானது.

அதில் புரியாமல் தன் அத்தையைப் பார்க்க, “இவ வீரராகவனோட ரெண்டாவது பொண்ணுப்பா” என்றார் அவர். ஆண்டாள் பாட்டியிடம் சத்யாவைக் குறித்து மொத்த விஷயத்தையும் தான் ஆதி சொல்லிவிட்டு சென்றிருந்தான்.

அத்தனை நேரமும் அமர்ந்திருந்த ஏழுமலை இந்த பதிலைக் கேட்டதும், “என்ன?” என்று அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டார். அந்த வீரராகவன் செய்த பாவங்கள் என்ன? தங்கள் குடும்பங்களுக்கு செய்திருக்கும் அநியாயங்கள் என்ன? அவனுடைய மகளை மருமகளாக ஏற்கத் தயாராக இருக்கிறார்களா? அதெப்படி முடியும்? என்று பெரிதாக அதிர்ந்து போனார்.

பூஜிதாவின் முகம் வாடுவதைப் பார்த்து, வெளிப்படையாக தன் அதிர்ச்சியை வெளிக்காட்டி விட்ட தன் மடத்தனத்தை நொந்தபடி நெற்றியைத் தேய்த்துவிட்டபடி மீண்டும் அமர்ந்தவர், “எப்படி அத்தை?” என்றார் புரியாமல்.

“நான் செஞ்ச தப்புக்கு ஆதிக்கு தண்டனை கொடுக்க என் பேத்திக்கு எப்படி மனசில்லையோ அதே மாதிரி தான் அப்பன் செஞ்ச தப்புக்கு இந்த மகளுக்குத் தண்டனை கொடுக்க என் பேரனுங்க ரெண்டு பேருக்கும் மனசில்லை ஏழுமலை” என்றார் பெருமையான குரலில். இந்த வயதில் இவர்கள் எல்லாம் எத்தனை பெருந்தன்மையாக, பக்குவமாக நடந்து கொள்கிறார்கள் என்கிற வியப்பு பாட்டியிடம் இப்பொழுதும் எழுந்தது. தான் இப்படி நல்ல குணத்தோடு இல்லாமல் போனோமே என மனதிற்குள் நொந்து கொண்டார்.

குற்றம் செய்யும் போது ஒன்றும் தெரியாது. ஆனால், ஏதோ ஒரு சூழலில் அந்த குற்றத்திற்காக மனம் வருந்தும் நிலை வரும். அந்த நிலை வந்த பிறகு கண்டிப்பாக வாழ்க்கை நரகம் தான்! ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நம் மனமே நம்மை வெட்டி கூறுபோட்டு விடும். அதே நிலையில் தான் இப்பொழுது ஆண்டாள் பாட்டியும்.

ஏழுமலை பெருமூச்சுடன், “எனக்கு இப்ப புரியுது அத்தை. நான் குற்றவாளின்னு மனசுல பதிஞ்சு இருந்தப்பவும் ஆதி மாப்பிள்ளை எப்படி என் மகளை கல்யாணம் செஞ்சுட்டாருன்னு. அந்தளவுக்கு மேன்மையான குணம் அவருக்கு இருந்திருக்கு. ரொம்ப பக்குவமானவரா அவரை நீங்க வளர்த்து இருக்கீங்க. எனக்கு என் மருமகனை நினைச்சு, அவனை நீங்க வளர்த்த விதத்தை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு அத்தை. இந்த நாட்டுக்கு முக்கியமான தலைவரா இந்த வயசுலேயே அவர் இருக்க காரணம் இல்லாம இல்லை. நான் மனசார சொல்லறேன் அத்தை அவர் ஒரு சிறந்த தலைவன், உன்னதமான மனுஷன்” என்றார் நெகிழ்வுடன்.

பூஜிதாவையும் நோக்கி, “என்னை மன்னிச்சிடும்மா” என்று கேட்க, “ஐயோ அப்பா அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை. இன்னும் சொல்லப்போனா எனக்கே எங்க அப்பா செஞ்ச அநியாயம் எல்லாம் தெரிஞ்ச பிறகு நான் இந்த குடும்பத்துக்கு பொருத்தமானவ தானான்னு சந்தேகம் வந்துடுச்சு. சத்யாவுக்கு கூட என் மேல காதல் இருக்கு என்னை ஏத்துக்கிட்டாருன்னு வெச்சுக்கிட்டாலும், ஆதி மாமா அவர் இந்த குடும்பத்துல ஒருத்தியா என்னை ஏத்துக்கிட்டதை நினைச்சா இப்பவும் எனக்கு கண்ணு கலங்குது” என்றாள் நெகிழ்வுடன்.

“பாட்டி தாரா அண்ணி மலையாளி தானே? ஆனா அண்ணியோட அப்பாவை பார்த்தா தமிழ்காரங்க மாதிரி தெரியறாரு. அதோடு உங்களுக்கு எப்படி இவரைத் தெரியும்?” அதற்கு மேலும் சஸ்பென்ஸ் தாங்காது என்கிற நிலைக்கு வந்திருந்த சத்யா அவர்களின் பேச்சை இடையிட்டு கேட்டிருந்தான்.