“அதுதான் சார், உடனே உங்ககிட்ட சொல்லாம இன்னொருமுறை சரிபார்த்துட்டு உங்ககிட்ட சொல்லலாம்ன்னு இருந்தோம். ஆனா நம்ம பேட் லக் இந்த ரிப்போர்ட் நிஜம் சார்” என்று சொன்னவர்களின் முகத்திலும் பெரும் சோகம். யாராலுமே இந்த தகவல் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“அதெப்படி???” என்ற ஆதிக்கு ஒன்றும் புரியவில்லை. தான் சந்தேகப்பட்டியலில் வைத்திருந்த பள்ளிகள், கல்லூரிகளில் எல்லாம் ஏதோ தவறு நடப்பது புரிந்தது தான்! இன்னதென்று கண்டுபிடிக்கும் முன்னர் இந்த மாதிரி ஒரு ரிப்போர்ட்.
மனதில் பெரும் பாரம் ஏறிக்கொண்டது. மீளவே முடியாத நரகத்தில் மாட்டிக்கொண்டவர்களை இறப்பை எதிர்நோக்கி காத்திருங்கள் என சொல்லிவிட்டு கையைக் கட்டிக்கொண்டு இனி வேடிக்கை பார்க்க வேண்டுமா? அதைவிட வலி வேறு என்ன இருக்கப் போகிறது?
அரசாங்கம், பணம், பதவி எதுவுமே அவர்களைக் காக்கவோ மீட்கவோ முடியாது. எத்தனை கொடுமையான கையறு நிலை!
உலகையே தன் அடிமை என எண்ணி இறுமாந்திருக்கும் மனித இனத்தை இயற்கை தண்டிக்க ஒருபோதும் தவறுவதே இல்லை. ஆனால் வாழ்க்கையை அன்பவிக்கும் வயதில் எதற்கு அவர்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை? ஒவ்வொரு நாளும் வலி, வேதனையுடன் கழித்து, வாழவும் முடியாமல் இறப்பும் நெருங்காமல் நொடிந்து, மற்றவர்கள் துட்சமாய் பார்க்கும் பார்வையைச் சகித்து அவர்கள் வாழ வேண்டும், எத்தனை கொடுமை?
ஆதி துக்கம் தேங்கிய குரலில், “இது நிஜமா இருக்கும்பட்சத்தில் இதுக்கான சோர்ஸ் என்ன? எப்படி இத்தனை பேருக்கு ஸ்ப்ரெட் ஆகும். இந்த வயசுல பிராசிடியூட் கிட்ட போறது இல்லை கே ரிலேஷன்ஷிப் மாதிரி எதுவும் அவங்களுக்குள்ள?” எப்படி இத்தனை பேருக்கு பரவியது என்று குழப்பத்துடன் கேட்கத் தொடங்கியவன், சட்டென்று யோசித்தவனாக, கையோட “டிரக் எதுவும் எடுத்திருக்காங்களான்னும் செக் பண்ண சொன்னேனே” என்றான் வேகமாக.
“யூ ஆர் ரைட் சார். ஆல் ஆர் டிரக் அடிக்ட்ஸ். இப்ப ரீசண்ட்டா யூஸ் பண்ணலை சார், மே பீ பிளட் டெஸ்ட் தரதுக்காக கேப் விட்டிருக்கலாம். பட் தெயர் பிளட் சேம்பிள் ப்ரூவ்ஸ் தே வேர் அடிக்டேட்” என்று சொல்லவே வெட்கமாக இருந்தது. போதைப்பொருள் தாராளமாகப் புழங்க விட்டிருக்கிறோமே என்னும் குற்றவுணர்வு! அதில் இவர்களின் தவறு எதுவும் இல்லை தான், ஆனாலும் மனம் அடித்துக் கொண்டது.
ஆதி, “ஷிட்….” என்றவன் நெற்றியிலேயே அறைந்து கொண்டான். அவர்களின் எதிர்காலமே நோயின் பிடியில் சிக்கிக்கொண்டதே! இனி என்ன செய்து என்ன பயன்?
“சார் இஸ்யூ பெருசா இருக்கும் போல… பிரதமர் ஆபிஸ்க்கு தகவல் சொல்லிடலாமா?” என தென்னரசு கேட்க,
“கண்டிப்பா சொல்லணும். அதோட இது நம்ம எதிர்பார்க்கிறதை விட இன்னும் பெருசுன்னு தோணுது” என்று ஆதி யோசனையுடன் சொன்னவன், “நம்ம லிஸ்ட்ல இருக்க மொத்த ஸ்கூல்ஸ், காலேஜஸ் எல்லாத்துலயும் இதே கேம்ப் உடனே நடத்துங்க” என்று கட்டளையிட, எதற்கு எல்லா இடங்களிலும் என மற்றவர்கள் குழம்பினார்கள்.
“எத்தனை பேரை வேலைக்கு இறக்குவீங்களோ தெரியாது, எனக்கு எல்லா இடத்துலேயும் இந்த கேம்ப் நடந்து ரிசல்ட் ஒன் வீக்ல வந்தாகணும்” என்று சொல்ல, அவன் தோரணையில் அரண்டவர்கள், மறுபேச்சு பேசாமல், “இப்பவே வேலையை தொடங்கிடறோம் சார்…” என்றுவிட்டு வேகமாக வெளியேறினார்கள்.
ஆதி இந்த தொனியில் பேசினால் வேலை நடந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் அவன் எடுக்கும் ஆக்ஷன் பயங்கரமாக இருக்கும் என்று அனுபவப்பட்டவர்கள் என்பதால் துரிதமாக செயல்பட்டார்கள்.
“தென்னரசு திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரிங்க யார்கிட்டயாச்சும் பேசணும். உடனே ஏற்பாடு பண்ணு” என்று உதவியாளுக்கும் கட்டளை பிறப்பித்தவன், பிரதமர் அலுவலகத்திற்கும் தகவலை அனுப்பி விட்டான்.
ஆதிக்குப் பல மாதங்களாகவே என்னவோ சரியில்லை என்றளவில் புரிந்தது. ஆனால், போதைப்பழக்கம் தான் என உறுதியாகச் செல்லும்படியும் ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அதனால் தான், இப்பொழுது எய்ட்ஸ் சோதனையை மேற்கொள்ளும்போது இந்த சோதனையையும் செய்து பார்க்கச் சொன்னான்.
அவன் எண்ணியதுபடியே எல்லாரும் போதைக்கு அடிமையானவர்கள். ஆனால், யாரோ ஒருவருக்கு எய்ட்ஸ் இருக்கலாம் என்ற கணிப்பு மட்டும் பொய்யாகிப் போனது.
பிரதமர் அலுவலகத்திலிருந்து அறிக்கைகளைப் பார்த்ததும் இவனது பாதுகாப்புக்கு உடனேயே ஆட்கள் வந்துவிட்டார்கள். வேறு ஏதேனும் உதவி வேணுடுமென்றாலும் தொடர்பு கொள்ளுமாறு செய்தி வந்தது.
ஆதீஸ்வரன் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த செய்தி வெளியில் கசியவில்லை. மொத்த ரிப்போர்ட்டும் வந்த பிறகு செய்தியை வெளியிடலாம் என்பது அவனது திட்டம்.
இப்படியாக மிகுந்த பரபரப்புடன் இங்கு ஒரு வாரம் கடந்த நிலையில், ஆதி எண்ணி பயந்தது போலவே மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி வந்தடைந்தது.
மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட (220) பள்ளிகள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட (24) கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களுக்குச் சோதனை மேற்கொண்டதில், ஹெச்.ஐ.வி தொற்று 828 மாணவ, மாணவிகளுக்குப் பரவியுள்ளது என்று உறுதிசெய்யப்பட, அந்த அறிக்கைகளை மேற்கொண்ட ஆதியின் மொத்த அணியுமே ஸ்தம்பித்துப் போனது.
அவர்கள் களையெடுக்க வந்தது ஏதோ ஒன்று! போதைப் பொருட்களின் புழக்கம் தான் என உறுதியாகக் கண்டறிந்திருந்தால், அதை தடுக்க தங்களாலான மொத்த முயற்சியையும் போட்டிருப்பார்கள். மாணவர்களின் எதிர்காலத்தைப் பேணி காக்க தங்கள் உயிரையே பணயம் வைத்திருக்கவும் தயங்கியிருக்க மாட்டார்கள்.
ஆனால், இங்கு போதை பழக்கம் அவர்களை அடுத்த இக்கட்டில் அல்லவா கொண்டு சேர்த்திருக்கிறது. மீளவே முடியாத, மீள் வழியே இல்லாத இந்த இக்கட்டிலிருந்து அவர்களை எப்படி காப்பாற்ற முடியும்?
இனி இத்தனை மாணவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு என்ன வழிவகை செய்வது?
அனைவருக்குமே மனது அடித்துக் கொண்டது. வேறு வழியே இல்லையே என்று ஆற்றாமையுடன் எண்ணும்போதே நெஞ்சமெல்லாம் பாறாங்கல்லைச் சுமப்பது போல கனத்து போனது.
அதிலும் 47 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத் தகவல் வர, அவர்கள் அனைவருக்குமே உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்பட்டிருக்க, ஆதியால் இதற்கு என்ன தீர்வை யோசிக்க என்றே புரியவில்லை.
அநியாயமாக பாதிக்கப்பட்ட தான்பாபு, அலக்கியாவின் நிலைக்காகவே அவனின் மனம் அத்தனை கலங்கியது. இங்கு என்னவென்றால் ஒரு மாநிலத்தின் இளைய சமுதாயமே நோயுக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த தொற்று மாணவர்களிடையே ஊசி மூலமும், போதைப்பொருள் பயன்பாடு மூலமும் பரவியிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் கண்டுபிடித்திருந்தனர்.
அரசுப் பணிகளில் பணிபுரியும் பெற்றோர், வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்தான் இந்த தொற்றுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
எத்தனை பணம் கொட்டிக்கிடந்து என்ன பிரயோஜனம்? யாரால் தங்களின் பிள்ளைகளை மீட்டுக்கொடுக்க முடியும்? வாழ்க்கையே இனி சூனியமாகிப் போனதே! காலத்துக்கும் எங்கள் பிள்ளைகள் நோயில் அவதிப்பட்டுத் துடிதுடித்து இறப்பதை பார்ப்பது தான் இனி எங்களின் தலையெழுத்தா? என்று பெற்றவர்கள் கதறி துடிப்பது பார்ப்பவர்கள் நெஞ்சை எல்லாம் கலங்கச் செய்தது.
எப்படியாவது எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுத்து விடுங்கள் என்று மருத்துவர்களிடம் மன்றாடும் பெற்றோர்களின் நிலையைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை.
செய்தி வெளியானதும் மொத்த மாநிலமே அல்லோலகல்லோலப்பட்டது. இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் செய்தி பரவ, அனைத்து இடங்களிலும் மிகவும் பரபரப்புடன் பேசப்பட்டது. கண்டனம் தெரிவித்த கூட்டம் ஒருபுறம், இப்படியாகிவிட்டதே என்று வருந்திய கூட்டம் ஒருபுறம், போராட்டம் நடத்த திட்டமிட்ட கூட்டம் ஒருபுறம் என இந்தியா முழுவதும் பல அதிர்வலைகளை இந்த செய்தி ஏற்படுத்தியது.
மேற்படிப்புக்காக வெளி மாநிலங்களுக்குச் சென்ற திரிபுரா மாணவர்கள் அனைவரையும் திரும்பி சொந்த ஊருக்கு அழைக்கப்பட்டு சோதனையை மேற்கொள்ளச் சொன்னார்கள்.
(மேலே குறிப்பிட்டுள்ள செய்தி அனைத்தும் புள்ளி விவரங்களுடன் உண்மையானது. tiripura boys aids issue என்று நீங்கள் கூகிள் செய்து பார்த்தால், 2024-ஆம் ஆண்டு வெளியான அதற்கான செய்தி தொகுப்புகள் கிடைக்கும். in tamil என்று சேர்த்துப் போட்டால் தமிழ் செய்தித்தாள்களின் பக்கங்கள் கூட வரும். இந்த செய்தி ஒரு நாளோடு கடந்து போய்விட்டதிலிருந்தே எனது மனம் மிகவும் கனமாகி விட்டது.
இத்தனை பெரிய விஷயத்தை எப்படி ஊடகங்கள் தொடர்ந்து பேசவில்லை? இதற்காக ஏன் எந்த பெரிய தலைவர்களும் பெரிதாகக் கண்டனம் தெரிவிக்கவோ இந்த விஷயத்தை மக்கள் மனதில் அழுத்தமாகப் பதியவைக்கவோ இல்லை? பெரிதாகப் போராட்டங்கள் நடந்ததாகவோ கூட செய்திகள் வெளியாகவில்லை. ஒரு நடிகரோ, நடிகையோ தவறாக ஏதேனும் ஒரு விஷயத்தைப் பேசி விட்டால் கூட அது தொடர்பாக ஒரு வாரங்களுக்கு செய்தி வெளியாவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த செய்தி ஒரே ஒரு நாள் தான் பிரசுரமானது.
என்னால் ஏனோ இந்த செய்தியை அப்படியே கடந்து போக முடியவில்லை. இந்த செய்தியை எனது கதையின் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்பித்தான் இந்த கதையைத் தொடங்கினேன். யார் எப்பொழுது வாசித்தாலும் இந்த தகவல்கள் அவர்களுக்குப் போய்ச் சேரட்டும்)
ஆதீஸ்வரனுக்கு இத்தனை நாட்களாக என்ன என்று பிடிபட மறுத்த விஷயம் இன்று வெட்டவெளிச்சமாய் பிடிபட்டும், எத்தனை இக்கட்டில் மாநிலம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று மிகவும் குற்றவுணர்வாகிப் போனது. நாம் மட்டும் கொஞ்சம் முன்னரே கண்டுபிடித்திருக்க இன்னும் சிலரையாவது இந்த நோயிலிருந்து காப்பாற்றியிருக்கலாமே என்று எண்ணி வருந்தினான்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து வேண்டிய உதவி கிடைத்திருக்க, கிடைத்த அதிகாரத்தின் மூலம் அந்த மாநிலம் முழுவதும் போதைப் பொருள் விற்பனையிலிருந்த அத்தனை பேரையும் கூண்டோடு பிடித்திருந்தான், சிலரை தயவுதாட்சண்யம் பார்க்காமல் அழித்திருந்தான். முன்பெல்லாம் இந்தளவிற்கு இறங்க மாட்டான் தான்! ஆனால், பள்ளி மாணவர்கள் தொடக்கம் இப்படியொரு துர்ப்பாக்கிய நிலையில் இருக்க, அவனால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அந்த கூட்டத்தையே கூண்டோடு அழிக்க அவன் போட்ட அயராத உழைப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. அந்த கூட்டத்தை மொத்தமாகக் களையெடுத்த பின்னரே அவனுக்கு நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
இந்த வேலைகளோடு ஒருவழியாக அவன் மனதை மிகவும் பாதித்த, இந்த பெரும் குற்றத்தைக் கண்டுபிடிக்க ஆணிவேராக இருந்த தான்பாபு, அலக்கியாவையும் கண்டுபிடித்திருந்தான்.