காவியத் தலைவன் – 28

காலையில் எழுந்ததிலிருந்தே ஆதீஸ்வரன் ஒரு நிலையில் இல்லை. அவன் பாட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தாலும் என்னென்னவோ யோசனைகள். நெஞ்சம் படபடத்துக் கொண்டிருந்தது. அடிக்கடி திரும்பி மனைவியைப் பார்த்துக் கொண்டான். பார்வையில் அச்சம், ஏக்கம், தவிப்பு என்று கலவையான உணர்வுகள்.

தாராவுக்கும் ஒருகட்டத்தில் கணவன் மிகுந்த அலைப்புறுதலோடு இருக்கிறான் என்றளவில் புரிந்தது. ஆனால், காரணம் இன்னதென்று சரியாகக் கணிக்க முடியவில்லை.

“இப்ப விவேக் நல்லா இருக்காருன்னு தானே சொன்னாங்க. கவலைப்படாம போயிட்டு வாங்க, அவருக்கு சீக்கிரமே குணமாயிடும்” என்று ஆறுதலாக சொன்னாள். அவன் எதுவும் பேசாமல் அவளையே சில நொடிகள் பார்த்துவிட்டு மீண்டும் தனக்குத் தேவையானது எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

யோசனையுடன், “விவேக்கை நினைச்சு இல்லையா?” என்றாள். மறுப்பாகத் தலையசைத்தவனிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே!

“சத்யா குறிச்சா?” என்று தாரா அடுத்துக் கேட்டபோது அவனுக்கு ஆயாசமாக இருந்தது.

ஆதிக்கு அவளிடம் எப்படி விளக்கம் சொல்வது என்று புரியவில்லை. அவனுக்கு விவேக், சத்யா இருவரைக் குறித்தும் நிறைய கவலை இருக்கிறது தான். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி விடுதலையாகி வரும் ஏழுமலையை பார்த்த பிறகு தாராவின் நிலை என்னவாக இருக்கும்? அவள் என்ன முடிவை எடுப்பாள்? என்கிற தவிப்பு தான் அதிகம் என்று அவளுக்கு எப்படிப் புரிய வைக்க முடியும் அவனால்?

ஒன்றுமே பேச முடியாமல் இறுகிப்போய் நின்றிருந்தான். தான் இந்தளவிற்கு சூழலை எதிர்கொள்ளப் பயந்து தடுமாறி நிற்போம் என்று அவன் ஒருநாளும் எண்ணியதில்லை.

அவனின் அடர்ந்த அமைதியைத் தொடர்ந்து புருவங்கள் யோசனையில் சுருங்க கணவனை நெருங்கியவள், “என்னன்னு சொல்லலாமே சேட்டா?” என ஆதரவுடன் கேட்டாள். அவனின் இந்த தோற்றம் அவளின் மனதை வெகுவாக தடுமாறச் செய்தது. கம்பீரமாக அவனை பார்த்தால் தான் அவள் மனதிற்கும் இதம் சேர்க்கும் என அவனின் இந்த வாடிய தோற்றம் அவளுக்கு உணர்த்தியிருந்தது.

நிலைகொள்ள முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்தவனுக்கு சேட்டா என்கிற அழைப்பு வழக்கம் போல அவனுள் ஆசுவாத்தை, இதத்தைப் பரப்பியது. இந்த அங்கீகாரத்தை இழந்து விடுவோமோ என்கிற அச்சமும் மனதிற்குள் ஆக்கிரமிப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. சட்டென்று அவளை ஏறிட்டுப் பார்த்து, “தாரா…” என்றவனுக்கு அடுத்த வாரத்தைப் பேசுவதற்குக் குரலே எழும்பவில்லை. தொண்டையில் என்னவோ பெரிதாக அடைத்துக் கொண்டது.

‘ஏன் இப்படி பரிதவிக்கிறான்?’ என்று அவள் தவிப்புடன் பார்க்கும் முன்பு, அவளின் கன்னம் தாங்கி முகத்தை உயர்த்தி கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தான். “என்ன முடிவு எடுக்கிறதா இருந்தாலும் நான் திரும்பி வரும்வரை மட்டும் எனக்காக காத்திரு பிளீஸ்” என்றவனின் குரல் வெளிப்படையாக நடுங்கியது.

அவனது குரல் உடைவது கூட மங்கைக்குப் பிடிக்கவில்லை. “ஏன் ஏதேதோ பேசறீங்க?” என தொடங்கித் தான் இருப்பாள், அதற்குள், “உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் தாரா… இப்ப இருந்து இல்ல, ரொம்ப வருஷமா? என்னைத் தாண்டி நீ போகக்கூடாதுன்னு கேட்கிற உரிமை எனக்கு இருக்கான்னு கூட புரியலை. ஆனா, நீ இல்லாம என்னால எதையும் சமாளிக்க முடியும்ன்னு தோணலை” என்று ஆதி பிதற்றிக் கொண்டே இருக்க, ‘என்ன சொல்கிறான் இவன், வருடக்கணக்காய் எப்படி என்னை பிடிக்கும்?’ என்று குழப்பத்தோடு தாரா பார்த்திருந்தாள்.

தாராவின் விழிகள் அலைப்புறுதலோடு அவன் முகத்திலேயே நிலைத்திருக்க, அவனோ மொத்தமாக தன்னிலை மறந்து அவள் முகம் முழுவதும் வேகமாக முத்தமிடத் தொடங்கியிருந்தான்.

அதில் அவன் பேசியது எல்லாம் என்ன சுற்றம் கூட மறந்து போய் விட்டிருந்தது பெண்ணுக்கு. ஏனோ அவனிடமிருந்து விலகவே தோன்றவில்லை. மொத்தமாகத் தன்னை ஒப்புக்கொடுத்து நின்றிருந்தாலும் கூச்சம் ஒருபுறம், கிறக்கம் மறுபுறம் என அவள் திணறி திணடாடிப் போனாள்.

அவனிடம் முழுவதுமாக அடைக்கலமாகியிருந்த நிலை எத்தனை நேரம் நீடித்ததோ அவளுக்கே தெரியவில்லை. உள்ளத்தோடு சேர்ந்து உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது அவனது அதிரடியில்!

ஆதிக்கோ எத்தனை முத்தங்களை வழங்கியும் தவிப்பு அடங்கவில்லை. ‘ஒருவேளை என்னை விட்டு போகலாம் என்ற முடிவை இவள் எடுத்து விட்டால், அடுத்து நான் என்ன செய்வேன்?’ என்கிற அச்சமே அவனை படுத்தியெடுத்தது. ஆசையாக ஒரு முத்தத்தைக் கூட அனுபவித்துக் கொடுக்கவில்லை அவன்.

ஆவேச முத்தங்கள் அவனது தவிப்பைச் சொன்னது. முதல்முறை முத்த மழையை பெரும் மனையாளுக்கு அதன் கிறக்கத்தில் அவனை கவனிக்கும் மனநிலை இல்லை.

அவ்வப்பொழுது சீண்டுவதற்காக ஒன்றிரண்டு முத்தங்கள் தருவான் தான்! ஆனால், ‘இன்று எதற்கு இத்தனை? அதுவும் அதிரடியாக…’ என்று பெண்ணவளுக்கு புரியவே இல்லை.

அவன் விடுவித்த வேகத்தில் தொய்ந்து போய் படுக்கையில் அமர்ந்தவளுக்குப் படபடப்பு குறைய மறுத்தது. சில நிமிடங்கள் பேச்சிழந்து போனாள். முத்தமிட்ட இடங்களில் தோன்றிய குறுகுறுப்பு ஒருபுறம் என்றால் கட்டுக்கடங்காத கூச்சம் மறுபுறம்.

ஓரளவு நிலைபெற்று அவனை மெதுவாக ஏறிட்டுப் பார்த்த கணத்தில் தன் உடைமைகளோடு வேகமாக அறையிலிருந்து வெளியேறிப் போனான். பேரதிர்ச்சியில் விழிகள் விரிந்து கொண்டது.

“திடீர்னு ஏன் இப்படி செஞ்சீங்க? என்னாச்சு?” என கேட்க நினைத்தவளுக்கு அவன் முதுகைக் காணும் பாக்கியம் தான் கிடைத்தது.

“என்ன ஆச்சு இவருக்கு? சொல்லாம கூட கிளம்பறாரு…” என வாய்விட்டே புலம்பியவள், வேகமாக அவன் பின்னேயே கீழே ஓடினாள். அதற்குள் அவனது கார் அருகே சென்றிருந்தான்.

“நானும் வரேன் இருங்க…” என்று சத்தமாக சொன்னபடி, வேக வேகமாக இறங்கி வந்தாள். திரும்பியவன், “எங்கேயாச்சும் விழுந்துடாத, மெல்ல வா” என்று கடிந்து கொண்டான்.

“ம்ம்… ஹ்ம்ம்… சரி விழ மாட்டேன்” என்றவளின் குரலில் குறும்பு தெரிந்தது. அவன் கண்டும் காணாமலும் காரில் ஏறினான்.

“பார்த்து போயிட்டு வாங்க, இந்தமுறை எந்த அலைச்சலும் இல்லாம உங்க வேலையெல்லாம் நல்லபடியா முடியும்” என்றாள் வாழ்த்து போல.

அவன் முகம் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தது. ‘ஏன் இப்படி இருக்கான்?’ என புரியாமல் அவள் தான் தவித்துப் போனாள்.

அவளின் பார்வை உறுத்த, காரில் அமர்ந்த வாக்கிலேயே அவளை ஏறிட்டு பார்த்தவன், “இன்னைக்கு பாட்டி வருவாங்க” என்று மட்டும் சொன்னான். சரி என்று மெதுவாக தலையசைத்தவள், “இங்கே எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன், நீங்க பத்திரமா போயிட்டு வாங்க” என்றாள் புன்னகையோடு.

எப்பொழுதும் அவள் இத்தனை பொறுப்போடு பேசியதில்லை. இன்று கணவனின் தோற்றம் அவளை என்னவோ செய்தது. மிகவும் பொறுப்பானவள் போல அரசியல்வாதியிடமே வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தாள்.

அவளையே ஆழ்ந்து பார்த்தவன், “ஐ லவ் யூ…” என்று வாய் மட்டும் அசைத்தான்.

தாராவுக்கு அர்த்தம் விளங்கி விட்டது. விழிகள் பெரிதாக விரிந்து கொண்டது. படபடக்கும் நெஞ்சத்தோடு அவனையே அசையாது பார்த்திருக்க, அவளுக்கு விடைபெறும் விதமாக கையை காட்டிவிட்டு டிரைவரிடம் காரை எடுக்க சொல்லியிருந்தான்.

கார் கண்ணிலிருந்து மறைந்த பிறகும் கூட அவன் சென்ற திசையையே பேச்சிழந்து பார்த்தபடி நின்றிருந்தாள் பெண்ணவள்.

‘கிளம்பும்போது தான் சொல்லுவாங்களா?’ என மங்கையவளின் மனம் செல்லமாகச் சலித்துக் கொண்டது. ‘கூட இருக்கும்போது சொல்லியிருந்தா மட்டும் பதில் சொல்லியிருப்பியா?’ அவள் மனசாட்சியே அவளிடம் கேள்வி கேட்டது. வெட்கம் சுமந்த முகத்துடன் சற்றுநேரம் அங்கேயே நின்றிருந்தாள்.

*** ஆதி திரிபுரா வந்து சேரவே மதியம் ஆகியிருந்தது. அவன் வழக்கமாகத் தங்கும் ஹோட்டலுக்கு சென்றதும், அவன் நியமித்த ஆட்கள் அவனைப் பார்க்க உடனேயே வந்திருந்தனர். அவர்கள் முகத்தில் பெரும் பதற்றம்.

அவர்கள் சந்திக்க வந்த வேகத்திலேயே என்னவோ என்று உறுத்தத் தொடங்கி விட்டது.

“நான் சொன்ன வேலை என்னாச்சு?” என்று ஆதி விசாரிக்க, “சார் ஆரம்பத்தில் அவ்வளவு சீக்கிரம் அப்ரோச் செய்ய முடியலை, ஆனா ஒரு பிளட் டொனேஷன் ஆர்கனைசேஷன் கூட டையப் வெச்சு ஒருவழியா மூவ் பண்ணிட்டோம் சார்” என்று சொன்னவர்களின் முகத்தில் இன்னும் டென்ஷன் குறையவில்லை.

“நான் தந்த நேம் லிஸ்ட்ல இருக்கிறவங்க யாரையும் மிஸ் பண்ணிடலை தானே?” என்று  வேகமாகக் கேட்டான்.

தான்பாபுவுக்கு திரிபுராவில் விபத்து நடந்ததும் அப்பொழுது உடனிருந்த அவனது நண்பர்கள் அனைவரும் போதையின் பிடியில் இருந்ததால், அவன் கேம்பஸில் அவனுடன் கல்வி கற்ற ஜுனியர் மாணவர்கள் ரத்தம் கொடுத்ததும் ஆதியிடமிருந்த தகவலில் கிடைத்திருந்தது. அதனாலேயே அன்று மருத்துவமனைக்குச் சென்ற ஜுனியர் மாணவர்களின் பட்டியல்களை கலெக்ட் செய்து தந்துவிட்டுச் சென்றிருந்தான். எல்லாரும் பெரிய இடத்துப் பையன்கள்! வேறு விதத்தில் அணுகினால் பல பிரச்சினைகள் வரக்கூடும்.

“சார்… அது…” என வந்தவர்கள் சொல்ல முடியாமல் திணறினார்கள்.

“என்ன ஆச்சு? ஒருத்தன் கூடவா கோஆபரேட் பண்ணலை” வேலை முடியவில்லை போல என்ற எண்ணத்தில் மிகுந்த அதிருப்தியுடன் ஆதி கேட்க,

அவர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியாத நிலை, “சார் நீங்க இந்த ரிப்போர்ட்டை கொஞ்சம் பாருங்க” என்று அவர்கள் சொல்லவும், பெரும் யோசனையுடன் அந்த ரிப்போர்ட்டை வாங்கி பார்த்தவன், அதிர்ந்து போனான்.

அன்று தான்பாபுவிற்கு ரத்ததானம் செய்தவன் மூலம் அவனுக்கு ஹெட்ச்.ஐ.வி., பரவி இருக்கிறதா என்று கண்டறிய நினைத்தவனுக்கு, மடையா இங்கு ஒருவர், இருவர் அப்படிப் பாதிக்கப்படவில்லை, கிட்டத்தட்ட நூற்றி முப்பத்தைந்து பேர் இதுவரை ஹெட்ச்.ஐ.வி.,யால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை சொல்ல,

அதிர்ச்சியில் வேகமாக எழுந்து நின்றவனின் கைகளிலிருந்து அந்த ரிப்போர்ட் கீழே சிதறி விழுந்தது.

‘நூற்றி முப்பத்தைந்து பேர்??? கடவுளே! எல்லாருமே இளைஞர்கள். இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தானே இருக்கிறது. அவர்களுக்கா இப்படியொரு நிலை? இத்தனை பேருக்கு எப்படி நோய் பரவியிருக்கும்’ தலையே சுற்றுவது போல இருந்தது.

இரு கைகளாலும் தலையைத் தாங்கி பிடித்துக் கொண்டவன், “என்ன இது? இதெப்படி சாத்தியம்?” என்றான் தடுமாறிய குரலில். மற்றவர்கள் முன்பு உடைந்து நின்று அவனுக்குப் பழக்கமில்லை. இன்று உடைந்து நின்றான், முகம் தன் கலக்கத்தை அப்பட்டமாகப் பறைசாற்றியது.