காவியத் தலைவன் – 26

சத்யேந்திரனால் மருத்துவமனையில் இருக்கவே முடியவில்லை. மனதில் அளவுக்கதிகமான அழுத்தம்.

நிதர்சனம் புரிகிறது தான்! அவனாலுமே அப்படி தன் அண்ணன் ஆதீஸ்வரன் வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டு தன் சொந்த அன்னை, தங்கை தான் என்றாலும் அவர்களோடு சென்றுவிட முடியாது தான்!

உணர்வுகளால் பிணைந்துவிட்ட உறவைத் துறப்பது பெரிய கொடுமை என்று அவன் மனதிற்கும் புரியாமல் இல்லை.

ஆனால், அன்னை என்பவளின் அன்பு வேறல்லவா? அது மறுக்கப்படும் இடத்தில் தான் இருக்கிறோம் என்பதை அவனால் இன்னமும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மனம் வேதனையைத் தாங்கமாட்டாமல் துடித்துக் கொண்டிருந்தது.

அதிலும் சுந்தரி பிடிவாதமாக சத்யேந்திரனை பார்ப்பதை, அவனுடன் பேசுவதைத் தவிர்த்தபடி தவம் போல அமர்ந்திருக்க, அவரின் செய்கையில் மனதளவில் பலமாக அடி வாங்கினான்.

ஆதிக்கு தம்பியை எப்படித் தேற்றுவது என்றே புரியவில்லை. ஆறுதலாக எதையும் சொல்வதற்கான மனதிடமும் அவனிடம் இல்லை. அந்தளவிற்கு அவனே உடைந்து போயிருந்தான்.

விவேக் ஒருபுறம் இன்னும் சுயநினைவின்றி இருக்க, அவனை நம்பி இருக்கும் இரு பெண்களின் நிலையை ஆதியால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அவர்களைக் காணக் காண குற்றவுணர்வில் மருகி போனான். இவர்களுக்கு இப்படியொரு நிலை வரும் என்று தெரிந்தும் விவேக் ஏன் துணிந்து இப்படி ஒரு காரியத்தைச் செய்தான்? விபத்து என்பது வேறு, தியாகம் என்பது வேறல்லவா? இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்தவனுக்குத் தான் உண்மையான அண்ணன் என்பது கூட தெரிந்திருக்க நியாயமில்லையே!

விவேக் செய்த தியாகத்தின் பெருமதிப்பின் முன்பு ஆதிக்குத் தன்னை நினைத்தே மிகவும் வெட்கமாக இருந்தது. இப்பேர்ப்பட்ட தம்பியைத் தேடிக்கூடப் போக வேண்டாம். அவன் உறவே நமக்கு வேண்டாம் என்ற முடிவை எடுக்கத் துணிந்தேனே! இப்பொழுது சத்யா தன் சொந்த அன்னையின் அன்பைப் பெற முடியாமல் துடிப்பது போல தானே, உண்மை தெரியும்போது விவேக்கும் துடித்திருப்பான். தான் ஏன் இத்தனை கொடூரமாக யோசித்தோம் என இப்பொழுது எண்ணி வெட்கிப் போனான். மனம் தளும்பலாக இருந்தது. ஆசுவாசமின்றி, நிம்மதியின்றி தவித்துக் கொண்டிருந்தான்.

சத்யா மேலும் இங்கேயே இருப்பது அவனது மனதை வருத்தும் என்று புரிந்தாலும், அவனை வீட்டிற்கு அனுப்பும் எண்ணமும் ஆதியிடம் இல்லை.

அவன் இங்கேயே இருக்கட்டும் என்று எண்ணிய ஆதிக்கு ஏனோ இந்தநேரம் மனைவியின் உதவியும் அருகாமையும் மிகவும் தேவையாக இருந்தது. ஆனால், நிலைமையை எந்தளவிற்கு விளக்கினால் அவளால் முன்கதையை யூகிக்க முடியாததாக இருக்கும் என்று வெகுவாக யோசித்தவன், ஓரளவு தெளிவு வந்தபிறகே அவளுக்கு அழைத்து அவளால் அவர்கள் யார் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு நடந்த விஷயங்களைச் சொன்னான்.

கேட்ட அவளுக்கு மிகவும் சங்கடமாகிப் போனது. அவன் வாழ்வில் இத்தனை கொடுமைகளா? அதுவும் நல்லவன் போல கூட இருந்தவன் எத்தனை நயவஞ்சகனாக இருந்திருக்கிறான். அதுக்கூட தெரியாமல் இத்தனை நாட்களாக உறவாடியவர்களுக்கு எத்தனை வேதனையாக இருக்கும்.

உண்மையான தம்பி என்று அறியப்பட்டவன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான். இத்தனை நாட்களும் உயிராய் வளர்ந்தவன் உடன்பிறந்தவன் இல்லை என்று தெரியவந்திருக்கிறது. சத்யாவின் நிலையும் பாவம், அவனையும் தேற்றியாக வேண்டும்.

கணவன் அவளை வா என்று அழைக்கும் முன்பு அவளாகவே, “அச்சோ நிங்களுட தம்பியும் பாவம். நான் அவ்விட வரட்டா? அவ்விட ஹாஸ்பிடல்ல துணைக்கு இருக்கேன்” என்று கேட்டிருந்தாள்.

தன் தேவை அவளுக்கு புரிகிறது என்பதில் சொல்லொணா ஆசுவாசம் அவனுக்கு. “ஆமாம் தாரா. நீ கிளம்பி வா. அதோட நான் எப்ப வேணும்ன்னாலும் வேலை விஷயமா இங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும். இப்படியொரு சூழல்ல இங்கே இருக்க முடியாம கிளம்ப வேண்டியதை நினைச்சு கஷ்டமா தான் இருக்கு, ஆனாலும் அங்கே வேலையை ஆட்கள் கிட்ட ஒப்படைச்சிட்டு வந்திருக்கேன், கண்டிப்பா மீதியை நான் தான் போய் பாத்தாகணும். அப்பறம் இங்கே அந்த அம்மா வேற சத்யா கிட்ட பேசவே மாட்டீங்கறாங்க. சத்யாவும் ரொம்ப உடைஞ்சு போயிருக்கான். நீ கூட இருந்தா நல்லா இருக்கும்” என்று கேட்டவனின் குரல் ஓய்ந்து போய் ஒலித்தது.

அனைவருக்கும் அவனுடைய தேவை இருக்கிறது. ஆனால், ஒற்றை ஆளாய் அவனும் எத்தனை அல்லாடுவான் என தாராவின் மனம் அவனுக்காகப் பரிதாபப்பட்டது.

“சேட்டா ஓகே தன்னே?” அவன் எப்பொழுதோ சேட்டா என்று அழைக்கச் சொல்லியிருந்த அழைப்பு, இதுவரையிலும் அழைத்திராதவள் இன்று தன்னிலை மறந்து அழைத்திருந்தாள்.

ஆதியின் மனதில் அவளின் அழைப்பில் ஏனோ சொல்லத் தெரியாத இதம்! இத்தனை நேரமிருந்த ஆர்ப்பாட்டம் குறைவது போல உணர்ந்தான். அவன் மனதின் தளும்பல் நிலையானது போல ஆசுவாசம். இத்தனை நாட்களாக எதிர்பார்த்த அங்கீகாரத்தை மனைவி ஒற்றை வார்த்தையில் கொடை வள்ளலென வாரி இரைத்ததில் அவன் மனம் அடைந்த அமைதியை, நிம்மதியை வார்த்தையில் விவரிக்க முடியாது.

‘ரொம்ப தேங்க்ஸ் கரகாட்டக்காரி…’ என்று அவன் இதழ்கள் மென்மையாக முணுமுணுத்துக் கொண்டது. குரலை செருமியவன், “தமிழ்நாட்டுல சேட்டாவை மாமான்னு சொல்லுவாங்க” என்றவனின் குரல் லேசாக பிசிரடித்தது. இன்னும் முழுமையான அங்கீகாரம் எதிர்பார்க்கிறது போல அவனின் மனம்! பேராசை என்று புரியாமல் இல்லை! ஆனால், சிறுபிள்ளையென எதிர்பார்க்கும் மனதை வைத்துக் கொண்டு அவனும் என்னதான் செய்வான்?

இப்ப இந்த கரெக்ஷன்ஸ் ரொம்ப அவசியமா என்று எண்ணியதைத் தைரியமாகக் கேட்கவும் செய்தவள், “நான் உடனே ஹாஸ்பிட்டல் கிளம்பி வரேன்” என்று சொல்லி அழைப்பை வைத்திருக்க, இப்பொழுது மெல்லிய ஏமாற்றம் அவனிடம்!

அடுத்த அரை மணி நேரத்தில் தாரா மருத்துவமனைக்கு வந்திருந்தாள்.

அனைவரின் முகத்திலும் அப்பட்டமான சோர்வு! இரண்டு குடும்பங்களை நிம்மதியின்றி தவிக்கச் செய்த கொடுபாதகமான செயலை அனாயசயமாக செய்துவிட்ட இந்துஜாவின் தந்தை மீது அவளுக்குக் கோபமாக வந்தது.

நேராக ஆதீஸ்வரனிடம் வந்தவள், “இதுக்கெல்லாம் காரணமானவரை நீங்க சும்மா விடக்கூடாது” என உரிமையோடு கணவனிடம் கேட்டு நின்றாள்.

ஆதி எதுவும் பேசாமல் அவளையே தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். இங்கிருந்த அனைவருக்கும் வீரராகவன் அநியாயம் செய்தது போல, இவளுக்கும் இவளின் பெற்றோருக்கும் சேர்த்துத் தானே அநியாயம் செய்திருக்கிறான்.

இவளின் தந்தை சிறையில், இவளின் அன்னையும், இவளும் எங்கோ கண்காணாத இடத்தில் சென்று இத்தனை ஆண்டுகள் சிரமப்பட்டு யார் துணையுமின்றி வாழும் நிலை! அந்த வேதனைகள் எல்லாம் போதாதது என்பது போல இடையில் பெற்ற அன்னையை இழந்து விட்டு நிர்க்கதியாய் நின்றபோது இவளின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?

அன்று அவளின் தந்தையைக் கைது செய்து அழைத்துச் செல்லும்போது கூட வலி நிறைந்த முகத்தோடு கதறி அழுது கொண்டிருந்தாளே! அந்த வயதில் என்ன புரிந்திருக்கும்? தங்களின் ஆதரவற்ற நிலையை உணரும் வயது கூட இல்லை. பெற்ற அன்னையோடு அநாதரவாக தெருவில் நின்றாளே! எந்த தவறும் செய்யாத இவளுக்கு ஏன் அப்படியொரு நிலை?

அந்த சூழலிலும் தன் பெற்றவர்களின் இறப்பைக் கேட்டு அப்படித் துடித்தாளே! இவனின் அம்மா அவளுக்கு இன்னொரு அன்னையல்லவா?

அந்த இழப்போடு சேர்ந்து, சொந்த தந்தையை அநியாயத்திற்குப் பலி கொடுத்து, அப்படியொரு வீண் பழியைச் சுமந்த காரணத்தால், சொந்தங்களை விட்டு, சொந்த ஊரை விட்டு அந்த வயதில் இவள் ஏன் அலைக்கழிக்கப் பட வேண்டும்?

இவளுக்கு நடந்ததும் பெரும் அநியாயம் அல்லவா!

அவன் கண்கள் நடந்த அக்கிரமங்களை எண்ணிக் கலங்கியது.

“என்னாச்சு? ஏன்?” அவள் என்ன பேச என புரியாமல் அவனின் கண்ணீர் கண்டு தடுமாறி அவனருகே கொஞ்சம் நெருங்கி நின்றாள்.

அவள் கரங்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டவன், “எனக்காக எப்பவும் நீ இருப்ப தானே?” என்றான் கரகரத்த குரலோடு. அவனுக்கு நன்கு தெரியும் உண்மைகள் தெரியவரும்போது தாரா எந்த முடிவினை எடுக்கவும் தயங்க மாட்டாள் என்று! அந்த அச்சம் அவனுக்குள் நிறைந்திருக்க, அப்படியொரு நிலையை மட்டும் தன்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்று நினைத்தான் போல!

‘எந்தினா இங்கானே சம்சாரிக்குது?’ என மலையாளத்தில் தொடங்கவிருந்தவள், சட்டென்று நிதானித்து, “ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?” என்று தமிழில் மாறி இருந்தாள். அவளுக்கும் அவன் துக்கம் தாக்கி தொண்டை அடைத்தது.

இவன் ஏன் இப்படி உடைகிறான் என புரியாமல் பெண்ணவளின் மனம் தடுமாறியது.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லேன்” என்றான் ஏக்கமாக.

“உங்களைத் தாண்டி என்னால என்ன யோசிக்க முடியும்? சத்யா எதுவும் சொன்னானா? அவங்க அம்மா கூட போறேங்கிற மாதிரி, அதுதான் இப்படி உடைஞ்சு பேசறீங்களா? அவன் சின்ன பையன், அவனுக்கு என்ன தெரியும்? அப்படியே அங்கே போனாலும் உங்க மேல இருக்க பாசம் எப்பவும் குறையாது” என்று அவள் சொன்னபோது, அவளை ஆழ்ந்து பார்த்தானே தவிர ஒருவார்த்தை பேசவில்லை.

அமைதியான நீர் நிலையில் கல்லைக்கொண்டு எறிந்துவிட்டு, அதன் பிறகு நீர் மேலே எழும்பி குதிக்கக் கூடாது என்பது முட்டாள்த்தனம் என்பது அவனுக்கும் புரியாமல் இல்லை.

அவள்மீது அவனுக்குப் படர்ந்த பிடித்தத்திற்கு மூல காரணம் என்று எதுவுமே இல்லை. அவளின் நிர்க்கதியான தோற்றம் அவ்வப்பொழுது அவன் மனதை அசைத்துப் பார்க்கும் ஒன்று. அதிலும் பாட்டி ஒருமுறை, “அந்த பூவரசி சொத்து எதுவும் வேண்டாம்ன்னு திருப்பி நமக்கே எழுதி தந்துட்டு ஊரை விட்டே போயிட்டா, இனி இந்த சொத்து சுகமெல்லாம் நமக்கெதுக்கு? இதுனால போன உசுருங்க திரும்பியா வந்துட போகுது” என சொல்லி அழுதார்.

அப்பொழுது அழகாண்டாள் பாட்டியால் இன்னொரு கோணத்திலிருந்து யோசிக்க முடியவில்லை! ஆனால், ஆதீஸ்வரனுக்கு யோசனை படர்ந்தது. இந்த சொத்திற்காகத் தான் தன் பெற்றவர்கள் கொலையானார்கள் என்றால், கணவன் சிறைக்குப் போய் அநாதரவாக நிற்கும் சூழலில் சொத்து வேண்டாம் என்று மனைவி தந்துவிட்டு ஏன் போகிறாள்? என்ற கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

அப்பொழுதிலிருந்தே கோபம் ஒருபுறம் இருந்தாலும், நிஜமாலுமே அவர் தான் கொலை செய்திருப்பாரா என்கிற சந்தேகமும் ஒருபுறம் இருந்துகொண்டே இருக்கும்.

நாளடைவில் பழைய விஷயங்களை எண்ணிப்பார்க்க நேரமின்றி பொறுப்புகள் கூடியது. தம்பியைக் கவனித்துக் கொள்ள வேண்டும், குடும்ப தொழில்களின் நிலையை கவனிக்க வேண்டும், தன் கல்வியைத் தொடர வேண்டும் என்று ஆதீஸ்வரனுக்கு வயதுக்கு மீறிய பொறுப்புகள்.

எல்லாம் சரியாகத் தான் போனது. திருமண வயது வந்து, பாட்டி திருமண பேச்சை எடுக்கும்போது மனதில் நடுநாயகமாக அவள் வந்து நின்றாள். “ஆதி மாமா நல்லா ஞாபகம் வெச்சுக்கங்க, என்னைத் தவிர நீங்க யாரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது. ஜாக்கிரதை” என விரல் நீட்டி எச்சரித்தாள். ஆதி அந்த எட்டு வயது பெண்ணின் முகம் நினைவில் வரவும் விதிர்விதிர்த்துப் போனான்.

மனது தவித்துக் கொண்டே இருக்க, முழு ஈடுபாடு காட்ட முடியாமல் திருமணத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தவனின் வாழ்வில், அவளாக மீண்டும் வந்து நின்றாள். அவளை இழக்க முடியாத தடுமாற்றத்துடன் தன் வாழ்வில் இணைத்துக் கொண்டவனுக்கு அவள் மீது எல்லையற்ற நேசம் நிறைந்திருக்கிறது.

ஆனால், அவளின் நிலை? அவள் இப்படி நிற்பதற்கு தங்கள் குடும்பமும் ஏதோ ஒரு வகையில் காரணம், தாங்கள் பொய்யாகக் குற்றம் சுமத்தியதால் தான் இப்படியொரு நிலை என்று தெரிய வரும்போது, எப்படி அவளால் அவனை மன்னிக்க முடியும்?

ஆதியின் மனதில் பாரமேறிப் போனது. முகம் கசங்க நின்றிருந்தவனை என்ன சொல்லித் தேற்ற என்று தாராவிற்கு புரியவில்லை.

“உனக்கு என் நிலைமை புரியுமான்னு தெரியலை தாரா… ஆனா, நீ என்கூட இல்லைங்கிற நிலையைத் தவிர வேற எந்த நிலையா இருந்தாலும் என்னால சமாளிக்க முடியும். என்னைவிட்டு போகணும்ன்னு நீ யோசிக்கும் போது இதை மட்டும் மனசுல வெச்சுக்க பிளீஸ்” என்றிருந்தான்.

“ம்ப்ச் ஏன் ஏதேதோ பேசறீங்க? அப்படி ஒரு நிலை எப்பவும் வராது. நீங்க ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்கன்னு நினைக்கிறேன். வீட்டுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்களேன்” என்று வலியுறுத்தியவளிடம் மறுத்துத் தலையசைக்க, அவளுக்கும் அதற்கு மேல் வற்புறுத்த முடியவில்லை. விவேக் எப்படி இருக்கிறான் என்று தெரியாமல், அவன் கண் விழிக்காமல் இங்கிருந்து செல்ல அவனுக்கு மனம் வராது என்று தோன்றிற்று!

பெருமூச்சுடன், சென்று அங்கிருந்த மற்றவர்களிடம் ஆறுதலாக பேசினாள்.

சத்யா உடைந்து போயிருப்பதைப் பார்த்ததும் அவளுக்கும் கலக்கமாகத்தான் இருந்தது. “அவங்க இருக்க நிலையை யோசிச்சு பாருங்க சத்யா. விவேக் எப்படி இருப்பாங்கிற் கவலை தான் நிறைஞ்சிருக்கும். மகன் சரியாகி வந்துடணுமேங்கிற தவிப்பு மட்டும்தான் மேலோங்கி இருக்கும். இந்த சூழல்ல அவங்க பேசறதை எல்லாம் பெருசா எடுத்துக்க வேண்டாம்” என்றாள் ஆறுதலாக.

“அண்ணி எனக்கு அண்ணனையும் விட்டுக்கொடுக்க முடியலை, அம்மா, தங்கையையும் இழக்க மனசு இல்லை. ரொம்ப வேதனையில் இருக்கேன், என்னால எதுவும் யோசிக்கக் கூட முடியலை அண்ணி” என்றான் கலங்கியவனாக.

ஆறுதலுக்காக அண்ணன் அருகில் வரவில்லை. பூஜிதாவும் அவனை நெருங்கவில்லை. மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்தவன், தாராவின் ஆறுதல் வார்த்தைகளில் உடைந்து போனான்.

“யாரையும் நீ இழக்க வேண்டிய அவசியம் இருக்காது. உனக்கு புதுசா உறவுகள் கிடைச்சிருக்கு அவ்வளவுதான்! இதுனால உன்னோட பழைய உறவுகளை நீ இழக்கவும் மாட்ட, புது உறவுகளைத் தவிர்க்கவும் வேண்டியதில்லை. இப்ப நம்ம எதுவும் பேச வேண்டாம். நிலைமை சரியானதும், எல்லாமே சரியாகும். நீ வருத்தப்படாத” என்றவள்,

“அத்தை கிட்டயும், குட்டி மச்சினிச்சி கிட்டயும் பேசிட்டு வரேன்” என அவனை கொஞ்சம் இலகுவாக்க சொன்னவளால் சுந்தரி அம்மாவிடம் பேசவே முடியவில்லை. அவர் மிகவும் இறுக்கமாக இருந்தார். என் வட்டத்திற்குள் நுழையாதே என பார்வையாலேயே தள்ளி நிறுத்தினார்.

விவேக் சரியாகட்டும் என அவளும் பொறுத்துப்போக வேண்டியதாக இருந்தது. பூஜிதாவும் தன் தந்தையின் செய்கைகளால் குற்றவுணர்வால் தவிக்க, அவளையும் தாரா தான் தேற்ற வேண்டியதாக இருந்தது. ஒற்றை நாளில் இத்தனை விஷயங்களை சமாளிக்க அவளுக்கு மலைப்பாக இருந்தது.

நல்லவேளையாக விவேக் அனைவரையும் அதற்கு மேலும் அச்சுறுத்தாமல் சுயநினைவிற்குத் திரும்பியிருந்தான்.

முதலில் சுந்தரி அம்மாவும், நந்தினியும் மட்டும் போய் பார்த்து வந்தார்கள். அவர்களுக்கு அடுத்ததாகப் போகலாம் என்று காத்திருந்த ஆதியிடம், “பாருங்க தம்பி, என் பையனை போய் நீங்க யாரும் பார்க்க வேண்டாம். எங்களை இப்படியே விட்டுடுங்க” என யாசகம் போல கையேந்தி கேட்டு நின்றார்.

ஆதியின் கண்கள் கலங்கிப் போனது. வேகமாக அவரின் கையை இறக்கி விட்டான். “நான் விவேக் கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் மா. அவனை பார்த்துட்டு மட்டும் வந்துடறேன்” என்று தவிப்புடன் இறைஞ்சுதலாகக் கேட்டான். உடன்பிறந்தவனாயிற்றே! அதுவும் விவேக்கின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம் அவன் அல்லவா? இந்த பிரச்சினைக்காக விவேக்கை அவன் அழைக்காமல் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காதே!

சுந்தரி அம்மா துளியும் இளகவில்லை. “வேணாம் தம்பி, நீங்க எல்லாம் இங்கிருந்து போங்க. என் பையனை நான் எதுக்காகவும் இழக்க விரும்பலை” என்றவரின் குரலில் அத்தனை உறுதி.

ஆதி விக்கித்து போனான். தாரா தான் இதையிட்டு, “நாங்க விவேக்கை பங்கு கேட்கலைம்மா. அவரு நல்லா இருக்காருன்னு பார்க்க மனசு துடிக்குமே, அதுக்காக மட்டும் தான் கேட்கிறாரு. மத்தபடி என்னைக்கும் விவேக் உங்க மகன் மட்டும் தான், அதுல நாங்க எதையும் மாத்தப் போறதில்லை” என்று கேட்டுப்பார்க்க, சுந்தரி அம்மா அசைந்து கொடுக்கவில்லை.

“உங்க பதவி, உயர்வு, செல்வ செழிப்பு எல்லாம் எனக்கு பயத்தை மட்டும் தான் கொடுக்குது. நீங்க யாரும் இங்கே இருக்காதீங்க, என் புள்ளையை காப்பாத்த எனக்கு தெரியும். போங்க இங்கிருந்து” என அப்பொழுதும் அதையே திருப்பி திருப்பி அந்தம்மா சொல்ல, யாருக்கும் என்ன பேச என்று கூட தெரியவில்லை.

வேறு வழியில்லாமல், தன் ஆட்களில் இருவரை அந்த அம்மாவிற்குத் துணையாக நிற்க வைத்துவிட்டு, “உங்களுக்கு வேணுங்கிறதை அவங்க செஞ்சு தருவாங்கம்மா. இந்த உதவியை மட்டும் மறுக்காதீங்க” என ஆதி கையெடுத்துக் கும்பிட்டு விட,

“தம்பி ஏன் இப்படி எங்களை சங்கடப்படுத்தறீங்க” என்ற சுந்தரிக்கு கண்ணில் கண்ணீர் பொங்கியது. “உங்களை மாதிரி பெரிய வசதி படைச்சவங்க மனசு நோக பேசற நிலைமை ரொம்ப கொடுமையா இருக்கு. சரி நீங்க இவ்வளவு சொன்னதால அவங்க ரெண்டு பேரும் இங்க உதவிக்கு இருக்கட்டும்” என்று சொன்னார்.

அவர்களுக்கு வசதி வாய்ப்பு அதிகம் போல என்றுதான் நினைத்தாரே தவிர, ஆதி அமைச்சராக இருப்பான் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை.

அந்த அம்மா இந்தளவிற்கு ஒப்புக்கொண்டதே பெரியது என்று எண்ணியவன் மனபாரத்தோடு மற்றவர்களோடு வீட்டிற்குப் புறப்பட்டான்.

பூஜிதாவிற்கு அத்தனை சங்கடம். இத்தனை அநியாயங்களையும் செய்தவனின் மகளை இவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று வெகுவாக தடுமாறினாள். தாரா தந்த ஆறுதலிலும் நம்பிக்கையிலும் கூட அவளால் தெளிய முடியவில்லை.

குற்றவுணர்வுடன் இருந்தவளை நோக்கி, “பூஜிதா, அப்பா செஞ்ச பாவத்தை மகள் தலையில போடற அளவுக்கு எங்க மனசு இறுகி கிடக்கலைம்மா, நீயும் எங்க கூட நம்ம வீட்டுக்கே வா” என்று ஆதி அழைக்க, சத்யா அவளை அப்பொழுது தான் கவனித்தான். அவள் தயக்கத்தைப் புரிந்து, லூசு என்றொரு பார்வை பார்த்து வைக்க, பாரம் நீங்கியவளாய் அவர்களோடு பயணப்பட்டு வந்தாள்.

சுந்தரி அம்மாவின் அச்சம் நீங்கி, இவர்கள் அனைவரும் இணையும் வாய்ப்பு அமையுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.