படிப்பு விஷயத்தில் தான் சத்யாவிற்கு பயங்கர திட்டு விழும். “உங்க அண்ணன் எல்லாம் எப்படி படிச்சான் தெரியுமா?” என அடிக்கடி அவனுக்கு வசைவுகள் விழுந்து கொண்டே இருக்கும், தொட்டதற்கும் அழகாண்டாள் பாட்டி, “இதே உங்க அண்ணனா இருந்தா என்ன செஞ்சிருப்பான் தெரியுமா?” என சொல்லிக் கொண்டே இருப்பார். சத்யாவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வரும். “நானும் நல்லா படிப்பேன்…” என வீம்பாக பாட்டியிடம் சொல்லிவிட்டுப் படித்தாலும் ஆதி அளவிற்கு அவனால் மதிப்பெண்கள் எடுக்க முடிந்ததில்லை. தாரா தான் தேற்றுவாள்.
திட்டு மட்டும் தொடர்கதை தான்! பொறுத்துப் பொறுத்து பார்த்தவள், ஒரு நாள் ஆதீஸ்வரன் வந்ததும், “ஆதி மாமா எதுக்கு நீங்க நல்லா படிக்கறீங்க? நீங்க அப்படி நிறைய மார்க் வாங்கிறதால தான் சத்தியை பாட்டி திட்டிட்டே இருக்காங்க. அதுனால கொஞ்சம் அளவா படிங்க” என கண்ணை உருட்டி தீவிரமாக மிரட்டினாள்.
எட்டாம் வகுப்பில் படிக்கும் அவனுக்கு, ஆழாக்கு உயரத்தில் ஒருத்தி வந்து மிரட்டினால் கோபம் வராமல் இருக்குமா? அவள் தலையில் நங்கென்று கொட்டி விட்டு, “உள்ளே ஓடிப்போடி…” என திட்டிவிட்டுப் போய் விட்டான். அவளுக்கு பயங்கர கோபம், ஆனாலும் அவன் இருக்கும் வளத்திக்கு அவனை அடிக்கவா முடியும்?
“ஏதோ வளர்ந்து இருக்கீங்களேன்னு விடறேன்…” என்றாள் சத்தமாக.
சென்றவன், திரும்பி வந்து, “இல்லாட்டி என்னடி பண்ணுவ? ஆளை பாரு அவளையும் பாரு…” என கன்னத்தில் கிள்ளி வைக்க வந்தவன், அவளது இடது காதின் அருகில் கன்னத்து தாடையில் சின்னதாக சிவப்பாக ஒரு மச்சம் இருப்பதைப் பார்த்து, “உனக்கு மட்டும் என்னடி சிவப்பு கலர்ல மச்சம்?” என்று ஆச்சரியமாகக் கேட்டு, “இது மச்சம் தானா? இல்லை பேனா எதுவும் கிறுக்கி இருக்கா?” என கேட்டபடி அது நிஜமாலுமே மச்சம் தானா இல்லை ஏதாவது ஒட்டி இருக்கிறதா என்று அழுத்தமாக துடைத்து ஆராய்ச்சி வேறு செய்தான்.
அவன் அவளது கன்னத்தை குனிந்தபடி அழுத்தி அழுத்தித் தேய்த்ததில், இதுதான் வாய்ப்பென்று தோன்றியது போலும், இவளும், “இங்கே கூட ஒரு மச்சம் இருக்கே மாமா” என தன் கழுத்தை உயர்த்தி காட்டினாள். இவனுக்கோ அதில் ஆர்வம் இல்லை.
“போடி அது கருப்பா தான் இருக்கு. இதுதான் சிவப்பு மச்சம்” என மேலும் கொஞ்ச நேரம் அதெப்படி மச்சம் சிவப்பாக இருக்கிறது, நிஜமாவே மச்சம் தானா என்று ஆராய, கிடைத்த வாய்ப்பில், குனிந்திருந்தவனின் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்துவிட்டு, அவன் சுதாரிப்பதற்குள் திரும்பியும் பாராமல் விறுவிறுவென்று வீடு நோக்கி ஓடி விட்டாள்.
“அடியே! அசந்த நேரம் பார்த்து அடிக்கவா செய்யற? என்கிட்டே மாட்டமயா போவ அப்ப கவனிச்சுக்கிறேன்டி உன்னை” என அவன் அங்கிருந்து எப்பொழுதோ சிட்டாகப் பறந்து விட்டவளிடம் கத்திக் கொண்டிருந்தான். அதன்பிறகு அவன் கையில் சிக்கவில்லையே அவள்! அவளை அடித்தோ, கேலி செய்தோ அழ வைக்கும் திறமை வாய்ந்தவனும் அடுத்த வாய்ப்பிற்காக ஆவலுடன் காத்திருந்தான்.
அந்த முறை கோயில் திருவிழாவில் சின்ன சின்ன பிளாஸ்டிக் குடங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் தாராவுக்கு ஆசையாக இருக்க, அதனை தனக்கொன்றும், சத்யாவிற்கு ஒன்றும் வாங்கிக் கொண்டாள்.
அந்த வாரம் முழுவதும் அந்த குடத்தை வைத்துத் தான் விளையாட்டு! வீடு, வாசல் எல்லாம் இவர்கள் செய்த வாலு தனத்தால் தண்ணீரில் நிறைந்திருந்தது. அழகாண்டாள் திட்டி சலித்தார், அவர் அங்கே நிற்கும் வரை நல்ல பிள்ளைகள் போல நிற்பவர்கள் அவருடைய தலை மறைந்ததும் மறுபடியும் தண்ணீரைத் தூக்கி வருகிறேன் என தொடங்கி விடுவார்கள். தெய்வானை தான் இனி தண்ணி எல்லாம் எடுத்து விளையாடக்கூடாது என்று அதட்டி வைத்தார்.
அத்தையே சொன்ன பிறகு அந்த குடத்தோடு என்ன விளையாட? பிறகு என்ன என்னவோ யோசித்து தாராவும், சத்யாவும் குடத்தைத் தலையில் வைத்து கீழே விழாமல் கரகாட்டம் ஆடுகிறேன் என்று அலப்பறை செய்தார்கள்.
தெய்வானைக்கு அவர்களின் செய்கைகளைப் பார்த்து பயங்கர சிரிப்பு. தங்களைத் திட்டிய அத்தையே சிரித்து விட்டார், அப்ப இதுதான் சூப்பர் விளையாட்டு என்று தாராவிற்கு தோன்றிவிட்டது போல, தினமும் அதே விளையாட்டு தான் தொடர்ந்தது.
சத்யாவிற்கு அந்த கலை நுணுக்கம் வரவில்லை பாவம். அவன் குடம் நழுவிக் கொண்டே இருக்க, தினம் தினம் கரகாட்ட விளையாட்டில் வெல்வது என்னவோ தாரா தான்!
ஒரு விடுமுறை தினத்தில் அவள் அப்படி ஆடிக்கொண்டிருக்கும் போது, வெளியே நண்பர்களுடன் விளையாடச் சென்றிருந்த ஆதீஸ்வரன் வந்துவிட, அவளின் முழு நடனத்தையும் பார்த்து விட்டு, “கரகாட்டக்காரி…” என்று கூவினான். கூடவே, “சூப்பர், சூப்பர், இப்படியே ரோட்டுல ஆடினா நிறையா காசு போடுவாங்க… வா வா மாமாவுக்கு செலவுக்கு காசு கம்மியா இருக்கு. ரோட்டுக்கு போயி ஒரு ஆட்டம் போட்டுட்டு வரலாம்” என்று கேலி செய்ய,
“நான் ஒன்னும் கரகாட்டக்காரி இல்லை…” என காலை உதைத்து தாரா ஒரே அழுகை!
“இல்லை இல்லை. நீ தான் அதுக்கு பொருத்தமா இருப்ப” என சொல்லி சீண்டிக் கொண்டிருந்தான். அன்று பார்த்து அவளுடைய நீள முடிக்குத் தெய்வானை பூ வைத்து தைத்து அதை புகைப்படம் எடுத்து வைத்திருக்க, பட்டுப்பாவாடை, பூ தைத்த ஜடை தலையில் குடம் என இருந்தவளை, “அம்மா இப்படியே ஒரு போட்டோ எடுத்து வையுங்கமா” என்றான் ஆதி கேலியாகச் சிரித்தபடி.
அதற்கும் ஓவென்று கத்தி அழுதவள், “அத்தை நான் கரகாட்டக்காரி மாதிரி இருக்கிறதால தான் என்னை போட்டோ எடுத்து வெச்சீங்களா?” என ஒரே ஆர்ப்பாட்டம்.
தெய்வானை பதில் சொல்லும் முன்பு, “பாத்தியா பாத்தியா அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு. அதுதான் கரகாட்டக்காரியைப் போட்டோ எடுத்து வெச்சிருக்காங்க” என்று இன்னும் சீண்ட, அவளுக்கோ இன்னும் அழுகை.
தெய்வானை தான், “டேய் சும்மா இருடா, தடிமாடு. குழந்தையை ஏன் அழ வைக்கிற…” என அவளை சமாதானம் செய்யப்போக, “போங்க உங்க கூட பேச மாட்டேன். ஆதி மாமாவை அடிங்க. நீங்க அடிக்கிற சத்தம் எனக்கு கேட்கணும். மாமா ரொம்ப குறும்பு பண்ணறாங்க” என்று புகார் சொல்ல,
இது வழக்கம் தான் என்பதால், ஆதியை அடிப்பது போல தெய்வானை பாவனை காட்ட, அவனும் வலிப்பது போல குய்யோ முய்யோ என்று கத்தி அவளைத் திருப்திப் படுத்தினான்.
ஆனாலும், அவளை அவ்வப்பொழுது சீண்டுவதே, “கரகாட்டக்காரி…” என்று சொல்லி தான்! அவளும் அவன் அப்படி அழைக்கும் போதெல்லாம் அவனை கிள்ளி வைத்துவிட்டோ அடித்து விட்டோ ஓடி விடுவாள்.
எவ்வளவு அடிவாங்கியும் அடங்க மறுக்கிறானே என்கிற கடுப்பில் அவள் இருந்தால் என்றால், இதெல்லாம் எனக்கு ஒரு அடியா என தூசு போல கடந்து சென்று கொண்டிருந்தான் அவளின் ஆதி மாமா.
ஒருநாள் விளையாட்டு சாமான்கள் வைத்து சோறாக்கி விளையாடும் போது, தாரா சத்யாவிடம், “நீ தான் எனக்கு குழந்தையாமா… நான் உனக்கு அம்மா சரியா? நான் இப்ப உன்னை ஸ்கூலுக்கு கிளப்பி விடுவேனாமா?” என சொல்லி விளையாடிக் கொண்டிருந்தாள்.
“அப்படின்னா அப்பா யாரு?” சந்தேகம் கேட்டான் சத்யா.
“அது என்னடா உனக்கு சந்தேகம். ஆதி மாமா தான்” ஆறு வயது தாரகாவுக்கு பதிமூன்று வயது ஆதி விளையாடவே வருவதில்லை என்பதால் அவன் பேரை இப்படி அவ்வப்பொழுது விளையாட்டில் சேர்த்துக் கொள்வாள். அவள் சொன்னதற்கு அர்த்தம் புரியும் வயதும் அது இல்லையே அதனால் தன் இஷ்டத்திற்குச் சொல்லிக் கொண்டாள்.
இவர்கள் விளையாடுவதை அழகாண்டாள் கவனித்து விட, அவ்வளவுதான் அவளை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார். “உன் அம்மா, அப்பா சுரண்டி தின்னா, நீ மொத்தமா முழுங்கி ஏப்பம் விட்டுடலாம்ன்னு இருப்ப போலவே? அப்பனுக்கு புள்ளை தப்பாம பொறந்திருக்க…” என இஷ்டத்துக்குப் பேசி விட,
பாட்டி திட்டியது முழுதாக புரியவில்லை என்றாலும் அப்பாவை பேசியதில் இவளுக்கு ரொம்பவும் கோபம் வந்துவிட்டது. “நீங்க ரொம்ப கெட்ட பாட்டி… இப்படி எல்லாம் எங்க அப்பாவை பத்தி பேசாதீங்க. அப்பறம் எனக்கு ரொம்ப கோபம் வந்துடும்” என்று அழுதுகொண்டே சொன்னாள்.
அவரும், “இந்த வயசுல என்ன வாயடிக்கிற? வாயை அடக்குடி! உனக்கு என் பேரன் கேட்குதா? அவனை எல்லாம் உனக்கு கட்டி வைக்கவே மாட்டேன். உனக்கேத்த மாதிரி பிச்சைக்காரனை பாத்துக்கோ… உன் குடும்பத்துக்கு அவனே அதிகம்…” என வாய்க்கு வந்ததைப் பேசி சின்ன பெண் என்றும் பாராமல் கன்னத்தில் வேறு அறைந்து விட, இவள் அடி வாங்குவதையும், திட்டு வாங்குவதையும் பார்த்து சத்யா ஒரு பக்கம் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான்.
அவளுக்கு ரொம்பவும் கோபம். அதெப்படி என்னை அடிக்கலாம் என்கிற வீம்பு!
அதுவும் அவர் பேசிய பேச்செல்லாம் அவளுக்கு சரியாகப் புரியும் வயதும் இல்லை. அப்பொழுது அவளுக்கு எட்டு வயது தானே! திருமணம், தகுதி, தராதரம் போன்ற பேச்சுக்கள் எல்லாம் என்ன புரிந்துவிடப் போகிறது? ஆதியை கட்டிக்க உனக்கு தகுதியில்லை என்ற அவரின் பேச்சில் வெகுண்டெழுந்து விட்டாள்.
ஆதி வந்ததும், அவன் சைக்கிளைக் கூட சரியாக நிறுத்தி இருக்க மாட்டான். அவன் முன்னே சென்று, “ஆதி மாமா நல்லா ஞாபகம் வெச்சுக்கங்க… என்னை தவிர நீங்க யாரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாது. ஜாக்கிரதை” அடி வாங்கி அழுததில் தலை கலைந்திருக்க, முகம் சிவந்து மூச்சு வாங்க விரல் நீட்டி பேசியவளைப் பார்த்து அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
அவன் அவளின் தோற்றத்தை ஆராயவில்லை. பதிமூன்று வயதில் இருப்பவனுக்கு அந்தளவுக்கு விவரம் புரியவில்லை. அவள் ஏதோ பாதிப்பில் இப்படி உளறுகிறாள் என்று அனுமானிக்கும் அளவு பக்குவம் இல்லை.
அவள் கண்டதையும் பேசிய கோபத்தில், வயதிற்கு ஏற்ற பேச்சா பேசுகிறாள் என்ற கோபத்தில் அவன் பங்கிற்கு அவள் சின்னவள் என்றும் பாராமல் சப்பென்று ஒரு அறை! ஏற்கனவே அடிவாங்கி சிவந்த கன்னம் இவனின் அடியையும் சேர்த்துத் தாங்கிக்கொள்ள முடியாமல் திணறியது.
கண்ணிலிருந்து நீர் கரகரவென பொழிய, எதிரில் ரூத்மூர்த்தியாய் நின்று கொண்டிருந்தவனை பார்த்து கன்னத்தில் கை தாங்கி எச்சில் விழுங்கினாள். அப்பொழுதே தான் தாராவிற்கும் தான் பேசிய பேச்சின் மடத்தனம் புரிந்தது. திருமணம் பற்றி பேசலாமா அதுவும் ஒரு பையனிடம்? மொழி மறந்த பிள்ளை போல மலங்க மலங்க விழித்தவளுக்கு ரொம்பவும் அவமானமாகிப் போனது.
அவனையே ஓரிரு நொடிகள் வெறித்துப் பார்த்தவள், சிவந்த முகத்துடன் அங்கிருந்து அழுதபடியே சென்றாள். முன்பு போல ஓட்டம் இல்லை, அவள் நடையில் பெரும் தளர்வு! இந்த வீட்டுக்கு இனி நான் வரவே மாட்டேன் என்ற வைராக்கியம் மட்டும் அவளுக்குள். சிறு பிள்ளை வீம்பு குறையவே இல்லை.