கண்ணபிரான், அழகாண்டாள் தம்பதி ஈரோடு அருகில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது ஒரே மகன் பிரமானந்தம். அந்த சுற்றுவட்டாரத்தில் அவர் மிகவும் செல்வந்தராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தார்.
கண்ணபிரானின் உடன்பிறந்த தங்கை ஜோதிமணி. அவருக்கும் மாணிக்கம் என்பவரோடு திருமணம் முடிந்து அதே பகுதியில் தான் வசித்து வந்தார். அவர்களுக்குப் பிறந்தவர் தான் ஏழுமலை.
மாணிக்கம் தொடங்கிய தொழில் தொடர்ந்து நஷ்டப்பட்டதன் பயனாக அவர்களின் பல சொத்துக்களை விற்க வேண்டிய நிலை. கஷ்ட ஜீவனம் என்ற நிலை வரவில்லை என்றபோதும் அவர்களது நிலை வெகுவாக தாழ்ந்து போயிருந்தது. அண்ணனாக கண்ணபிரான் தான் தங்கை குடும்பத்திற்கு நிறைய உதவிகளைச் செய்து வந்தார்.
அழகாண்டாளுக்கு நாத்தனார் குடும்பத்திற்குக் கணவர் உதவி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், கண்ணபிரான் தங்கைக்கு வாரி வாரி வழங்க அது அவருக்கு ஒரு கட்டத்திற்கும் மேல் பொறுக்கவே இல்லை.
‘நமக்கும் ஒரு பையன் இருக்கான். இப்படி எல்லாத்தையும் தங்கச்சி குடும்பத்துக்கு வாரி இறைக்கணுமா?’ என்று எரிச்சல் பட்டார். அவர்கள் வாழ்ந்த காலகட்டங்களில் பெண் பிள்ளைகளுக்கு சொத்து கொடுக்கும் பழக்கம் எல்லாம் இல்லை, அதனால் திருமணம் முடிந்து வேறு வீட்டிற்குப் போன பிறகும், பிறந்த வீட்டில் சுரண்டி பிழைக்கும் ஜோதிமணி அவருக்கு மோசமான, நயவஞ்சகமான பெண்ணாகத் தெரிந்தார். ஆனாலும் கணவரைத் தடுக்கும் தைரியம் அவருக்கு இருக்கவில்லை.
கண்ணபிரானும் அவருடைய தங்கை ஜோதிமணியும் எப்படி பாசப்பிணைப்புடன் இருந்தனரோ அவர்களைப் போலவே தான் அவர்களின் பிள்ளைகள் பிரமானந்தமும் ஏழுமலையும் ஒருவர் மீது ஒருவர் பாசத்துடனும், மிகுந்த ஒற்றுமையாகவும் இருந்தார்கள். இருவரும் வீட்டிற்கு ஒற்றை பிள்ளை என்பதும், நெருங்கிய உறவு இருந்ததும் அவர்களின் பிணைப்பிற்கு அடித்தளமாக இருந்தது.
பிரமானந்தம் ஏழுமலையை விடவும் எட்டு வருடங்கள் மூத்தவர். அவரோடே சுற்றித்திரியும் ஏழுமலைக்கு அவர் தான் ரோல் மாடல். எல்லாவற்றிலும் தன் மாமனை காப்பி அடிப்பார். நடை, உடை, பாவனை என எல்லாவற்றையும் அவரை பின்பற்றுவதில் ஒரு அலாதி இன்பம், பெருமை!
காலங்கள் உருண்டோடியது. பிள்ளைகள் வளர்ந்தனர். பிரமானந்தம் வாழ்வில் நண்பனாக வீரராகவன் நுழைந்திருந்தார். செல்வாக்கு மிக்க பணச்செழுமையுடன் இருக்கும் பிரமானந்தம் மீது வீரராகவனுக்குப் பொறாமை நிறைய இருந்தது. அதிலும் பிரமா அந்த காலக்கட்டத்திலேயே நிறைய தொழில்களைச் செய்து கொண்டிருந்தார். எல்லாவற்றிலும் பணம் கொட்டியது. இததனை தொழில்களா? இவ்வளவு பணம் புழங்குகிறதா? என தோராயமாக கணக்கிட்டு நண்பனைப் பார்த்து வயிறு எரிவார்.
எப்பொழுதுமே தனக்குக் கிடைக்காத, தான் மிகவும் விரும்பும் ஒன்று மற்றொருவரிடம் இருந்தால் பொறாமை எழுவது இயல்பு தான்! இங்கோ வீராவிற்கு பொறாமையுடன் சேர்ந்து வஞ்சமும் எழுந்தது. அவரைவிட எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்கிற வெறியோடு, அவருக்கு எப்படி இவ்வளவு கிடைக்கலாம் என்கிற வன்மமும் நிறையவே இருந்தது. காரணமே இல்லாமல் பிரமாவுடன் போட்டிப் போட நினைத்தார். ஏற்கனவே பணம் சம்பாதிக்க எந்த எல்லைக்கும் சென்று கொண்டிருந்த வீரா இன்னும் இன்னும் மோசமான பல செயல்களில் இறங்கி தன் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தார்.
இத்தனை வஞ்சகத்தையும் துளியளவு கூட கணிக்க முடியாத சாந்தமான முகம் வீராவுக்கு. பேச்சில் நற்பண்புகள் கொட்டி கிடக்கும். அவரோடு கொஞ்ச நேரம் பேசினால் கூட, நல்ல மனுஷன்யா என சொல்லிவிட்டு செல்வார்கள், அந்தளவிற்கு பேச்சு சாதுரியம். அதில் தான் பிரமாவும் விழுந்தார் என்று சொல்லலாம். சாதாரணமாக அறிமுகமானவரை அவர் குணம் புரிந்து கொள்ளாமலேயே நண்பர் இடத்திற்கு அனுமதித்தார்.
வருடங்கள் கடக்க பிரமானந்தத்திற்கு தெய்வானையுடன் திருமணம் முடிந்து ஆதீஸ்வரன் பிறந்திருந்தான்.
கண்ணபிரான், மாணிக்கம், ஜோதிமணி என்று மூத்த தலைமுறையினர் ஒவ்வொருவராக உலகிலிருந்து மறைய, அழகாண்டாள் தன் பிள்ளையுடன் இருந்தார். கணவர் மறைந்தும், அவர் தங்கை மறைந்தும் இன்னும் மகன் மூலம் அந்த குடும்பத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி சென்று கொண்டே இருப்பதில் இன்னமும் அழகாண்டாளுக்கு அதிருப்தி தான்!
இதற்கும் ஏழுமலை பிரமாவிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார். அவருக்கு தன் மாமா மீது பாசம் அதிகமாக இருந்ததால், அவரோடே ஒன்றி திரிய, அவர் என்னவோ பணத்திற்காகக் கூடவே சுற்றுகிறார் என்று அழகாண்டாள் அதிருப்தியில் இருந்தார்.
பெற்றவர்கள் இல்லாத ஏழுமலைக்கு பிரமானந்தம் தான் முன்நின்று பூவரசியுடன் திருமணம் செய்து வைத்தார்.
பூவரசிக்கு கணவரின் உறவினர்கள் எல்லாம் நல்ல வசதி வாய்ப்புடன் இருக்க, தாங்கள் மட்டும் வசதி குறைவாக இருப்பதில் பயங்கர அதிருப்தி! அதுவும் பிரமானந்தம் அனுபவிப்பது பூர்வீக சொத்து என்று தெரிந்ததும், தன் மாமியாரும் அவர்கள் வீட்டுப் பெண் தானே, அவர்களுக்கும் உரிமை இருக்கிறது தானே! அவர் குடும்பம் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தால் கூட எல்லா சொத்தையும் இவரே அனுபவிக்கலாம். ஆனால், இப்பொழுது நாங்களே எங்கள் பிழைப்பைப் பார்க்க நாய் படாத பாடாக இருக்கிறது. இந்த சூழலில் அவர் எங்களுக்கு சேர வேண்டியதைக் கொஞ்சம் கூட தராமல் தனியாக அனுபவிக்கிறாரே என்கிற புகைச்சலாக இருந்தது. திருமணமான புதிது என்பதால் எதையும் நேரடியாகக் காட்டிக்கொள்ள முடியவில்லை.
ஆனால், உண்மையில் கண்ணபிரான் தன் தங்கைக்கு நிறையவே உதவி செய்திருந்தார். இப்பொழுது அவர்கள் குடும்பத்திற்கு இருக்கும் வசதி வாய்ப்புகள் பலவும் அவரும், அவர் மகன் பிரமானந்தமும் பெருக்கி வைத்திருப்பது. இது புரியாத பூவரசி தன் எண்ணங்கள் தன் குடும்பத்தையே சிதைக்கும் எனப் புரியாமல் வீண் வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.
என்ன அந்த வன்மம் நாளாக நாளாக அவரது பேச்சிலும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. விவரமாகப் பிரமானந்தம் இருக்கும் போது மட்டும்! நேக்கு போக்காக ஏதாவது சொல்லி அவரிடம் பணம் வாங்குவதை வாடிக்கையாகவே வைத்திருந்தார். இதன் பாதிப்பு பெரிதாக வரவிருக்கிறது எனப் புரியாமல்!
பிரமானந்தம் தன் தொழில்களில் வளர்ந்து கொண்டிருக்க, தங்கள் ஊரில் புதிதாக முளைத்து விஸ்வரூபமெடுத்த பிரச்சினைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்த சுற்று வட்டாரத்தில் நடக்கும் நிறையத் தவறுகளைத் துணிந்து தட்டிக் கேட்டார். கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை எல்லாம் பெருகியிருந்ததில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதை அறிந்து அனைத்தையும் ஒவ்வொன்றாக காவல்துறையினரின் உதவியோடு ஒழித்துக் கட்டினார்.
இதற்கு அனைத்திற்கும் மூல காரணம் தன்னுடனேயே சுற்றித்திரியும் நண்பன் வீரராகவன் தான் என்பதை பிரமா அப்போது அறிந்திருக்கவில்லை.
பிரமாவின் அதிரடியால் வீராவிற்கு நிறைய நஷ்டம். தன் தொழிலுக்கு இடையூறாக வந்து நின்ற நண்பன் பிரமானந்தம் மீது வீரா பயங்கர கோபம். அவர்கள் குடித்து கெட்டழிந்தால் இவனுக்கு என்ன வந்தது என்ற ஆத்திரத்தில் பகையுணர்ச்சியுடன் தக்க சமயத்திற்காகக் காத்திருந்தார். பிரமாவை ஏதாவது செய்து முடக்க வேண்டும், அவன் தொழில்களை எல்லாம் நாசமாக்க வேண்டும் என்று வஞ்சத்துடன் காத்திருக்கப் பிரமாவின் செல்வாக்கிற்கு முன்னால் எதுவும் எடுபடவில்லை.
அழிந்த தொழில்கள் மட்டுமின்றி மோசடி செய்து பணம் சம்பாதிப்பதையும் சேர்த்துத் தான் வீரா பார்த்து வந்தார். சட்டத்திற்கும் மனசாட்சிக்கும் விரோதமாக நடந்து நிறைய பணத்தைச் சேர்த்து வைத்த போதிலும் இன்னும் பணம் சம்பாரிக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் அடங்கவில்லை.
இத்தனை நாட்கள் வெளியிடங்களில் பணத்தை மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தவர், நண்பனிடம் கொட்டிக் கிடக்கும் பணத்திலும் தன் கைவரிசையை காட்டத் தொடங்கினார். கள்ளச்சாராயம் தொழிலில் மாட்டிக்கொண்டது போல, இங்கும் மாட்டிக் கொண்டால் என்கிற பயம் இருக்கவே அந்த சமயத்தில் பிரமாவிற்கு பிறந்த இரண்டாம் மகனை அதே மருத்துவமனையில் அனுமதித்திருந்த சுந்திரியின் மகனோடு மாற்றி வைத்து விட்டார்.
சுந்தரி அந்த ஊர் இன்ஸ்பெக்டர் மதிமாறனின் மனைவி. மதிமாறனுக்கு விரைவில் வேறு ஊருக்கு மாற்றல் கிடைத்திருப்பதால், வீராவின் திட்டத்திற்கு அவர்கள் மகன் மிகவும் பொருந்தி போனார்.
ஏதாவது இக்கட்டான சூழல் வந்தால், ‘உங்க உண்மையான மகன் எங்க இருக்காங்கிற உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும்’ என்று சொல்லி மிரட்டிக் கொள்ளலாம் என்ற கொடூர எண்ணம் வீராவுக்கு!
ஏழுமலையில் மகள் தாரகேஸ்வரிக்கும், பிரமாவின் இளைய மகன் சத்யேந்திரனுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான்! இவளுக்கு எட்டு வயது நடக்கும் போது அவனுக்கு ஏழு வயது. அதனால் இரு பிள்ளைகளும் ஒன்றாகத் தான் விளையாடுவார்கள். அழகாண்டாளுக்கு அவர்கள் குடும்பத்தோடு ஒட்டுவது துளியும் பிடிக்காது என்பதால் தாராவின் மனம் நோக எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்.
தாரா சின்ன பிள்ளை தானே! மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் அவளும் துடுக்காக எதையாவது சொல்லி வைத்து விடுவாள். இப்போதெல்லாம் அது அவளுக்கு ஒரு விளையாட்டு போல மாறிவிட்டது.
பட்டி என்ன பேசினாலும், “சத்தி… சத்தி…” என்று சத்யாவைத் தேடிக்கொண்டு அந்த வீட்டிற்கு வராமல் அவளால் இருக்க முடியாது. அவளுக்கு அவளின் ஈஸ்வர் மாமாவை விடவும், தன்னோடு விளையாடும் சத்தி மீது மிகுந்த பாசம்.
அதுவும் சத்யா அவள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வான். என்னவோ எல்லாம் தாராவிற்கு தான் தெரியும் என்பது போல அவனுக்கு எண்ணம். எந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும், என்ன விளையாட்டு இப்பொழுது விளையாடலாம், வீட்டுப்பாடம் முடிக்க தேவையான உதவி என எல்லாவற்றிக்கும் தாரா வேண்டும் அவனுக்கு. அதனாலேயே அவளுக்கு தன்னால் ஒரு பெரிய மனிதத்தனம் வந்துவிடும். அவன் மீது நிறைய அக்கறை காட்டுவாள். யாராவது சத்யாவைத் திட்டினால் சண்டைக்கு வேறு நிற்பாள்.
தெய்வானைக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள் என்பதால், தாரா மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம். தினமும் அவளுக்குச் சீவி, சிங்காரித்து அழகு பார்ப்பார். அவள் கேட்டதெல்லாம் அவரிடம் கிடைக்கும். அந்த சலுகையும் சேர்ந்து அந்த வீட்டிற்கு வருவதென்றாலே அவளுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி தான்!
பள்ளி முடிந்து வந்ததும், இங்கே ஓடி வந்து விடுவாள். சத்யாவும் அவளும் அமர்ந்து வீட்டுப்பாடம் செய்துவிட்டு விளையாடத் தொடங்கி விடுவார்கள்.