*** சத்யா, பூஜிதாவின் உறவு மெல்ல மலர்ந்திருந்தது. கனிகா விஷயத்தில் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்திருந்த சத்யாவிற்கு அதிலிருந்து மீண்டு வருவதே பெரிய விஷயமாக இருந்தது!
வெளியேறவே முடியாதோ என்று வேதனையோடு கழிந்த இரவுகள் ஏராளம்! உயிர் பிரியுமளவு வேதனையைச் சுமந்து வந்தவன் மீள வேண்டும் என்று நினைத்தது தன் அண்ணன் ஒருவனுக்காகத்தான்!
பெற்றோரை இழந்து நிலைதடுமாறி நின்றபோது அன்னை, தந்தை இருவரின் இடத்தையும் நிரப்பி, பாசத்தையும் கண்டிப்பையும் ஒருங்கே தந்தவனாயிற்றே அவன்! அந்த பதின்வயதில் தன் சுக, துக்கங்களை மறந்து யாரால் இப்படிப் பொறுப்பேற்றுக் கொள்ள முடியும்?
ஏன் இத்தனை வளர்ந்தும் இந்த நாள் வரையிலும் பொறுப்பென்பதே இல்லாமல், அண்ணனின் நிலையை, பாட்டியின் நிலையை யோசிக்காமல் இவனே இருக்கவில்லையா?
ஆனால், அவனின் அண்ணன்? இந்த இளம் வயதில் தொடும் உயரமா அவன் அடைந்திருப்பது? அப்படியானால் எந்த மாதிரியான கரடுமுரடான வாழ்க்கையை அவன் வாழ்ந்திருக்க வேண்டும்?
அப்படிப்பட்ட அண்ணனுக்காகவேணும் மீண்டு வராவிட்டால் அவன் பெற்றோரின் ஆன்மா கூட தன்னை மன்னிக்காது என்று புரிந்து தான் மெல்ல மெல்ல மீளத் தொடங்கினான். ஆயிரம் வலிகள், வேதனைகள் மனதை அழுத்தினாலும் அதனைப் பேரழகாகத் தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் கடந்துவர பழகினான்.
பூஜிதாவை சந்திக்கும் வரையிலும் மீண்டு வர வேண்டும் என்பதே பெரும் சவாலாக இருக்க, பெண்ணவளை சந்தித்த பிறகு அப்படியொரு தலைகீழ் மாற்றம்! மலையைப் பிரட்டி போடுவது என்பார்களே அதுபோல வாழ்ந்து தான் ஆக வேண்டுமா என்ற வெறுமையான மனநிலையில் இருந்தவனுக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதில் வேகமாக வேரூன்றி பெரும் விருட்சமாய் வளர்ந்து நின்றதில் அவனே அதிசயித்துப் போனான்!
என்றோ ஒரு நாள் அவளை நிராகரித்திருக்கிறான்! அவளின் வயது மட்டும் தான் அன்று அவனுக்கு பெரும் தடை! அதெப்படி இந்த வயதில் இவள் இப்படி கேட்கலாம் என்றொரு கோபம் தான் பெருமளவு இருந்தது. யாரோ ஒருத்தி இல்லையே அவள், இலகுவாக கடந்து போக! தன் கண் முன்னால் தன்னோடு சேர்ந்து வளர்ந்தவளாயிற்றே! அந்த உரிமை கோபத்தைக் கொஞ்சம் அதிகமாகவே தந்து விட்டிருந்தது. அவளை மொத்தமாக புறக்கணித்து விட்டிருந்தான்.
ஆனாலும் அவளின் பார்வை விடாமல் தொடர்ந்தது. ‘அதுதான் வேண்டாம்ன்னு சொன்னேனே! அவளுக்குப் புரியாதா? சரியான அறுந்த வாலு…’ என்று தான் அப்பொழுதும் தோன்றிற்றே தவிர வேறு எண்ணங்கள் வரவில்லை. அவளைக் குழந்தையாகப் பார்த்துப் பழகியதால் எழும் இயல்பான தடுமாற்றம் தான் அவனிடமும்!
பிறகு பெண்ணவளை சந்திக்கும் வாய்ப்புகள் வெகுவாக குறைந்து போயிருக்க, அண்ணன் அவளை மணக்கச் சொன்னபோது இனம்புரியாத உறுத்தல் உள்ளுக்குள் இருந்தாலும் அண்ணனுக்காக ஒப்புக் கொண்டான். ஆனால், ஒப்புக்கொண்ட பிறகு அதில் உறுதியைக் கடைப்பிடிக்காமல் மனம் தடுமாறியது நிச்சயம் அவன் பிழையே!
நம்பிக்கை துரோகம் என்பது பொருந்தும்! பொறுப்பில்லாமல் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றவில்லை என்று சொன்னாலும் பொருந்தும்! ஆனால், அதற்குக் காதல் என்று சாயமிட்டுக் கொண்டவன் இளமையின் தடுமாற்றத்தில் அல்லவா இருந்தான்? அந்த தடுமாற்றத்திற்கான தண்டனையைத் தான் போதும் போதும் என்று அனுபவித்துக் கொண்டிருக்கிறான். ஆம், அப்பொழுது உயிர் நேசமாகத் தோன்றியது, துரோகத்தைப் பற்றிப் புரிந்து கொண்ட பிறகு தண்டனையாகத் தெரிந்தது!
என்றோ ஒரு நாள் அவளின் அறியா வயதில் நேசம் என்று வந்து சொன்னவள், இன்னும் அதே நேசத்தோடு, உரிமையோடு, செல்ல கோபத்தோடு காத்திருக்க, இவளுடைய நேசத்திற்கு எந்த விதத்தில் நாம் தகுதியானவன் என்றுதான் தோன்றிற்று!
அவளின் காத்திருப்பு இனித்தது. முகம் பார்க்கக் கூட மறுத்து அவள் காட்டும் செல்ல கோபம் ரொம்பவும் ரசனையாக இருந்தது. தன் கைப்பேசி எண்ணை ஜொள்ளர்களிடம் எல்லாம் கொடுத்து அழகாகப் பழிவாங்கியவளின் செய்கையில் தலைகுப்புற விழுந்து போனான்!
அவன் தவறு செய்து விட்டான், சிறு பெண்ணென இருந்தபோது புறக்கணித்தவளை வளர்ந்துவிட்ட பிறகு ஒருமுறையேனும் நிதானமாகக் கவனித்துப் பார்த்திருந்திருக்க வேண்டும்! அப்படிப் பார்த்திருக்க, பூஜிதாவைத் தாண்டி இன்னொரு பெண்ணிடம் அவன் மனம் தடுமாறி இருந்திருக்காது. அவள் நேசம் தரும் மயக்கம் தவிர வேறு எந்த மயக்கத்திலும் மனம் மயங்கி இருக்காது!
இப்பொழுது தான் என்ன கெட்டுப் போய் விட்டது? மனதளவில், உடலளவில் அவன் மோசம் போனவன் தான்! அதை சொல்லாமல், அதற்கான உரிய கவனிப்பை, தண்டனையை, மன்னிப்பைப் பெறாமல் அவன் அடுத்த அடியை எடுத்து வைக்க மாட்டான்.
அவனின் மனம் இப்போது நிச்சலனமாக இருந்தது. இதனை காதல் என்று சொல்லும் நிலையில் கூட இல்லை அவன். அவன் மனம் முழு சரணாகதியை நாடுகிறது.
அவனை மன்னித்து மோட்சம் தருவதும், மன்னிக்காமலேயே சுற்றலில் விடுவதும் பெண்ணவளின் கைகளில் தான் இருக்கிறது! எதுவாயினும் யார் தலையீடும் இன்றி அவளாகவே முடிவெடுக்கட்டும்! இது அவளின் வாழ்க்கையும் ஆயிற்றே!
அவளை ஸ்ட்ரீட் டே ஈவண்ட்டில் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அடுத்துப் பார்க்க முயற்சி செய்யவில்லை. அன்று கொஞ்சம் எல்லை மீறிவிட்டோமோ என்று உறுத்தலாக இருந்தது. அவளைப் பார்த்தால் கட்டுப்பாடாக இல்லாமல் துள்ளல், ஆர்ப்பாட்டம் என வேறு மாதிரி மாறிப்போவது புதுமையாக இருந்தது. ஆனால், அது சரியில்லையே! அவளுக்கான கால அவகாசம் தர வேண்டும், அவள் அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் விட்டு இது நிச்சயம் முறையில்லையே!
அன்று பார்த்து விட்டு வந்ததிலிருந்து, தினம் எழுந்து, “தேர்?” என்றொரு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறான். எப்பொழுது பிளாக்கிலிருந்து எடுப்பாள் என காத்திருக்கிறான் என்று சொல்லலாம்.
அவளுக்கு அதற்கு அவகாசம் தேவைப்பட்டது. நிறைய யோசித்தாள். தடுமாறினாள். அவன் எண்ணுக்கு அனுப்பி வைத்த புலம்பல் மெசேஜ் களை எல்லாம் ஒவ்வொன்றாக மீண்டும் கேட்டுத் தான் கடந்து வந்த கடினமான பாதையை மீண்டுமொருமுறை மீட்டிப் பார்த்தாள்.
ஒருதலை காதலைச் சுமப்பதென்பது எத்தனை கொடுமை? அதிலும் அவனைப் பார்க்கக் கூட வாய்ப்பில்லை. எங்கோ இருப்பவனை, எப்பொழுதோ நிராகரித்தவனை எந்த நம்பிக்கையில் இத்தனை நாட்கள் மனதில் சுமந்து கொண்டிருந்தாளோ தெரியவில்லை. சுத்த பைத்தியக்காரத்தனம் தான்! ஆனால், மீண்டு வர முடியவில்லை என்பதை விட, மீளும் எண்ணம் ஒருநாள் கூட அவளுக்கு வந்ததில்லை.
இந்த காதல் தான் எத்தனை விசித்திரமானது?
தான் மீட்டிப்பார்த்த நினைவுகளை எல்லாம் பேக்கப் எடுத்து வைத்தாலும், ஏனோ இன்னும் சத்யாவை அன்பிளாக் செய்ய மனம் வரவில்லை. தினமும் செய்யலாம் என்று யோசிப்பதும், பிறகு வேண்டாம் என்று தூர வைப்பதுமாக அல்லாடினாள். நேசம் கொண்ட மனம் எத்தனை நாட்கள் வீம்பு பிடிக்கும். ஒரு நாள் அவன் எண்ணிற்கான தடை நீக்கப்பட்டது.
“தேர்?”, “தேர்?” என்ற மெசேஜ்கள் தொடர்ச்சியாக வந்தது. தினமும் இதே வேலையாக வைத்திருக்கிறான் போல பூஜிதாவின் இதழ்கள் ரகசியமாகப் புன்னகைத்தது.
ஆசையாக, “ஆல்வேஸ்…” என்று டைப் செய்தாள். பின்னே, இருக்கிறாயா? என்று கேட்கிறானே, இவனுக்காக எப்பொழுதும் இருப்பவள் நான் என தெரியாதா? என்றொரு செல்லமான ஊடல்.
ஆனால், டைப் செய்ததை அப்படியே அனுப்பிவிடும் தைரியம் ஏதாம்?
அதனை அழித்துவிட்டு, “ம்ம்” என்று ரெண்டு எம் மட்டும் டைப் செய்து அனுப்பினாள்.
மெசேஜை பார்த்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. வேகமாகக் கைப்பேசி அழைப்பு விடுத்தான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் தடுமாற்றம்!
அந்த குரலின் கரகரப்பு பெண்ணவளின் மனதைப் பிசைந்தது! பேச்சிழந்து போனாள்.
“ஏதாவது சொல்லணும் போல இருக்குடி. ஆனா சொல்ல தைரியமும் இல்லை” என்றவனின் குரல் உடைந்து போனது.
என்னவோ இப்பொழுது ஓடிப்போய் அவனைக் கட்டிக்கொள்ள வேண்டும், அழாமல் பேசடா என்று தலையில் தட்ட வேண்டும் என்றெல்லாம் பெண்ணுக்கு தோன்றிட, “என்ன சொல்லணும்ன்னு தோணுதோ சொல்லுங்க. வேணாம்ன்னு தோணினா விட்டுடுங்க… அதைவிட்டு இப்படி… இப்படி…” என்றவள் குரலும் தெளிவுடன் இல்லை. மனம் தான் அவள் எல்லையில் இல்லையே!
அன்று தொடங்கிய அவர்களின் பந்தம், பெண்ணவளின் எல்லையற்ற நேசத்தாலும், ஆணவனின் சரணாகதி நிலையாலும் பிரிக்க முடியாத பந்தமாக வலுவாக மாறியிருந்தது.
இதுவரையிலுமான செய்தி வழக்கம்போல ஆதீஸ்வரனுக்கு சேர்ந்து கொண்டே தான் இருந்தது!
எங்கே தம்பி மீளவே மாட்டானோ என்ற கலக்கமும் தம்பியின் வாழ்வில் பூஜிதாவின் வரவால் முடிவுக்கு வந்திருந்தது. கூடவே, இந்துஜாவை மறுக்க நேரிடுகிறதே! அது வீரராகவன் மாமாவிற்கு சங்கடத்தைத் தந்துவிடுமோ என்னும் கலக்கம் இனி இவர்கள் இருவரின் இணைவில் மறைந்துவிடும் என்றும் ஆதி எண்ணினான்.
ஆனால், அவன் எண்ணியது தவறு என்று பொட்டில் அடித்தாற்போல புரிந்தது. நாட்டின் பிரச்சினைக்காக ஓடிக் கொண்டிருப்பவனை, வீட்டின் பிரச்சினையும் நிறைய இருக்கிறது அதற்காகவும் சேர்ந்து ஓடு என தயவுதாட்சண்யம் பார்க்காமல் காலம் துரத்தியது.
ஆம், சத்யேந்திரன் பூஜிதா விஷயம் வீரராகவனுக்கு போய் சேர்ந்திருக்க, ஆதீஸ்வரன் எண்ணியது போல அவர் எண்ணவில்லை. அவருக்கு இவர்களின் காதலில் மகிழ்ச்சி இல்லை, அதனை முழு மனதோடு எதிர்த்தார். அவரது எதிர்ப்பின் வீரியம், அதில் சிதறிய வார்த்தைகள் எல்லாம் ஆதீஸ்வரனை மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைத்தது. என்னதான் நடக்கிறது எங்களைச் சுற்றி என உடைந்து போனான்.
இன்னும் எத்தனையை தான் பார்க்க வேண்டுமோ அவன்? காவியத்தில் தலைவனாக உருப்பெறுவது அத்தனை இலகுவாக நடந்துவிடுமா என்ன?