எரிமலை நெருப்பென குமுறிய தாராவின் நினைவுகள் கொஞ்சம் நிதானித்தது. இல்லை அவர்களைப்பற்றி விசாரிப்பவர்கள் வேறு யாரோ இல்லை. விசாரிக்க நினைப்பது தன் கணவன், அவன் குணம் அவளுக்கு தெரியுமே! அவனது நேர்மையையும், தவறுக்குத் துணை போகாத உன்னத குணத்தையும், தைரியத்தையும், உழைப்பையும் அவள் ஐயந்திரிபற அறிவாளே! அவனை எப்படி அவர்களைப் பிரிக்க நினைப்பவன் என இவள் சந்தேகம் கொள்ளலாம்.

தன்னையே கடிந்து கொண்டவள், மனதின் கனமும் அழுத்தமும் தாங்காமல் எழுந்து அமர்ந்து விளக்கை உயிர்ப்பித்தாள்.

என்ன செய்வது என்கிற யோசனையுடன் உறக்கம் வராமல் படுத்துக் கொண்டிருந்த ஆதீஸ்வரனும் மனைவி திடீரென்று விழித்ததும், அவளை யோசனையோடு பார்க்க, முகம் கலங்கி, கண்கள் சிவந்து என அவளிருந்த தோற்றத்தில் பதறி எழுந்தான்.

“தாரா… என்ன? ஏன் திடீர்ன்னு ஒரு மாதிரி இருக்க? கெட்ட கனவு எதுவும் கண்டியா என்ன?” பரிவோடு அவளின் தலை முடியை ஒதுக்கிக் கேட்டவனின் தோளில் வேகமாகத் தலை சாய்த்து, இத்தனை நேரம் யோசித்துக் கொண்டிருந்த அலக்கியாவின் நினைவில் மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.

திடீரென்று அவள் அழுதாள் அவனுக்கு என்னவென்று புரியும்? பதறிய குரலில், “என்னன்னு சொல்லு தாரா. திடீர்ன்னு என்னாச்சு?” என அவளது தலையை வருடிக் கொடுத்தபடி கேட்க, அவளுக்கு அழுகை நிற்க மறுத்தது.

சிறிது நேரம் கட்டுப்படுத்த முடியாமல் அழுதவள், “நீங்க என்னோடு ஏதோ விசாரிக்கணும்ன்னு சொன்னீங்களே அது எந்தானு?” என்றாள் சம்பந்தமே இல்லாமல்.

“எதை கேட்கிற நீ?” என்றான் ஆதி புரியாமல்.

“அதுதான் எனக்கு பீவர் கூடுதலாகி அட்மிட்டான அன்னைக்கு சொன்னீங்களே”

“ம்ப்ச்… அது நான் வேற யார்கிட்டயும் விசாரிச்சுக்கிறேன். அதுக்கா அழுவ நீ?” அவளின் கண்களை துடைத்தபடி கேட்டான். அவளைப் பார்க்கவே ரொம்பவும் பாவமாகத் தெரிந்தாள். ஏன் இப்படி அலட்டிக் கொள்கிறாளோ என்றுதான் அவனுக்கு இருந்தது.

தாராவோ விடுவேனா என்று, “இப்ப போன்ல கூட பேசிட்டு இருந்தீங்களே” என அழுதபடி கேட்டதும், இவளுக்கு என்ன புரிஞ்சது அதை என்ன மாதிரி எடுத்துக்கிட்டான்னு புரியலையே என்று எண்ணிக் கொண்டவன்,

“கவனிச்சியா என்ன? அது நான் அலைஞ்சிட்டு இருக்க வேலை சம்பந்தமா தான்…” என தொடங்கியவனிடம், “என்னால எதுவும் உதவி செய்ய முடியுமா? உங்களுக்கு அப்படி தோணிச்சா?” என்றாள் அவனை இடைமறித்து அவசரமாக.

அவளை குழப்பமாகப் பார்த்தவன், “நீ ரெஸ்ட் எடு. எதுக்கு இப்படி அலட்டிக்கிற? எதுவும் வேணும்ன்னா நானே கேட்பேன் தானே” என்றான் சமாதானமாக.

“நான் கேட்கிறதுக்கு சரியா தான் பதில் சொல்லுங்களே” என கரகரத்த குரலில் கேட்டவளிடம் என்னவென்று சொல்வது என அவனுக்குப் புரியவில்லை. இத்தனை நாட்களாக பலரிடம் விசாரித்தும் கிடைக்காத தகவல் இவளிடமிருந்து கிடைக்கப் போவதில்லை தான்! ஆனால், இவள் மூலம் விசாரித்தால் ஏதாவது தகவல் கிடைக்கக்கூடும் என்றாலும், இப்பொழுது அவளின் பதற்றம், கண்ணீர், சோர்வு எல்லாம் அவனை வெகுவாக குழப்பியது.

அவளை வினோதமாகப் பார்த்தபடியே ஒரு பெருமூச்சுடன், “திரிபுராவுல ஒரு முக்கியமான பிரச்சினை குறிச்சு விசாரிச்சுட்டு இருந்தப்ப தான் ஒரு பையன் மிஸ்ஸிங் கேஸ் பத்தி தெரிஞ்சது தாரா. அவன் கடைசியா பாட்னாவுல நீ படிச்சியே அந்த ஹாஸ்பிட்டல்ல தான் ஏதோ டெஸ்ட் எடுத்திருக்கான்னு தகவல் வந்தது. திரிபுரா எங்க இருக்கு, பீகார் எங்க இருக்கு. இதுக்கும் அவனுக்கும் அந்த ஊருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அப்பவும் அங்கே வந்து என்ன டெஸ்ட் பண்ணினான்னு தேடினா ஒரு விவரமும் தெரிய மாட்டேங்குது. அதுதான் உன்னால எதுவும் ஹெல்ப் செய்ய முடியுமான்னு கேட்க நினைச்சேன்” என்றவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“என்னடா வேலை பத்தி எல்லாம் இப்படி விலாவாரியா சொல்ல மாட்டான். இப்ப சொல்லறானேன்னு யோசிக்கிறியா?” என்றதும் குழப்பத்துடனேயே ஆம் என்று தலையசைத்தாள்.

“முன்னாடி சத்யாவுக்காக கனிகா பத்தி விசாரிச்சப்பவே இதுதான் நிலவரம்ன்னு உனக்கு புரிய வைக்க தவறிட்டேன். அதை முழுசா சொல்லாம, நீ எனக்கு உதவி செய்யலை அதுனாலதான் என் தம்பிக்கு ஆக்சிடெண்ட்ன்னு…” என்று தொடங்கியவன், என்ன நினைத்தானோ உடனே வேகமாக, “என்ன இருந்தாலும் நான் அப்படி யோசிச்சிருக்கக் கூடாது. அது ரொம்ப தப்புதான். ஆனா அவனை அப்படி பார்த்ததும், அப்படி நானா நினைச்சுட்டு உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். அதுவும் நீ நேர்மையா இருந்த ஒரு விஷயத்துக்காக உன்மேல கோபப்பட்டதுல எந்த அர்த்தமும் இல்லைன்னு இப்ப நிதானமா இருக்கப்ப யோசிச்சா புரியுது. அப்ப இருந்த மனநிலை சுத்தமா வேற…” என்று வருந்தி சொல்பவனின் இதழ்கள் மீது தன் கரத்தை வைத்துத் தடுத்தாள்.

“நான் அன்னே திவசம் சத்யம் பரைஞ்சிருந்தா ஒருவேளை நிங்களுடே சகோதரனுக்கு விபத்து சம்பவிக்கிறதுக்கு முன்னே தடுத்திருக்கலாம். அதைவிட்டு நானும் தொழில் தர்மம், கடமைன்னு யோசிச்சேனே தவிர, நீங்க கேட்டப்ப அதுக்கு பின்னாடி ஏதாவது ஒரு காரணம் இருக்கும்ன்னு யோசிக்காம போயிட்டேன். இப்ப அப்படி யோசிக்கிறேன். அப்ப ஏன் அப்படி யோசிக்காம போனேன்னு தான் தெரியலை” என்றவளை இப்பொழுதும் புரியாமல் குழப்பமாகப் பார்த்தான்.

“உங்களை குழப்பறேன் போல…” என்றவளின் குரல் வெகுவாக சோர்ந்து வந்தது.

அமைதியான குரலில், “என்னால சில விஷயங்களை உன்கிட்ட சொல்ல முடிஞ்சதில்லை. உனக்கும் அதுபோல இருக்கலாம். அதை நான் தப்பா நினைக்க போறதில்லை. காலப் போக்கில் அந்த மாதிரி எந்த ஒழிவு மறைவும் இல்லாம நம்ம வாழ்க்கை பயணிக்க தொடங்கும்ன்னு நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு. அப்பவும் ஏதாவது விஷயத்தை நம்ம ஒதுக்கி வைக்கிற மாதிரி இருந்தா கண்டிப்பா அது நம்ம வாழ்க்கைக்குத் தேவையில்லாத விஷயமா தான் இருக்கப் போகுது” என தத்துவமாகப் பேசியவனை சிறு சிரிப்புடன் பார்த்தாள்.

சோர்ந்து வாடிய முகம் கேலியாகப் புன்னகைக்கவும், அவளின் முகத்தில் உரசிக் கொண்டிருந்த முடிகளைக் காதோரம் ஒதுக்கி விட்டபடி, “புரிஞ்சுடுச்சு போல” என்றான் அவனும் சிரிப்புடன்.

“நான் முழுசா எதுவும் சொல்ல தேவையில்லை. ஆனா தேவையானதை மட்டுமாச்சும் சொல்லணும்ன்னு சொல்லறீங்க. அதுதானே?” என்றாள் புன்னகை விரிய.

“ஆமாம். பின்ன என்னை இப்படி குழப்பி விட்டா, நானே ஏதோ யோசனையில் இருக்கேன். இதுல நீயும் குழப்பினா எனக்கு ஒன்னும் புரிய மாட்டீங்குது” என்று புலம்பினான்.

“நீங்க போனில் பேசின விஷயம் தான் என்னை உறுத்திட்டே இருந்தது” என நேரடியாக விஷயத்தைச் சொன்னவளிடம், புருவங்கள் சுருங்க, “உனக்கு அதுபத்தி எதுவும் தெரியுமா என்ன?” அவளையே கூர்ந்தபடி கேட்டான்.

“நீங்க ஏன் பாபு ப்ரோ மிஸ்ஸிங் கேஸை பத்தி விசாரிக்க தொடங்குனீங்க?” என தாரா கேட்டதும், ‘தான்பாபு…’ என தனக்குள் முணுமுணுத்தவன், “பாபு ப்ரோவா? டூ யூ க்னோ ஹிம்?” என்றான் பார்வை இன்னும் கூர்மை பெற.

“ப்ளீஸ் நான் கேட்டதுக்கு முதல்ல பதிலை சொல்லுங்களேன்” என இறைஞ்சுதலாகக் கேட்டவளிடம் கோபம் கொள்ளவும் அவனால் முடியவில்லை.

இயலாமை அழுத்த, “வீ ஆர் கிளோஸ்லி மானிட்டரிங் யங்ஸ்டர்ஸ் இன் பர்டிகுலர் ஸ்டேட்ஸ் தாரா. என்னவோ தப்பா படுது. அதுதான் விசாரிச்சுட்டு இருக்கோம்” என்றிருந்தான். அவனுக்கு தகவல்கள் தேவையாய் இருந்தது. அடுத்து நகர முடியாமல் தவிப்பது அத்தனை மன அழுத்தத்தைத் தந்தது. தாராவிற்கு அவனுக்கு வேண்டிய விவரம் தெரிகிறது, ஆனால் அதை சொல்ல முடியாமல் அவளை எதுவோ தடை செய்கிறது என்கையில் அதைப் போக்கும் நிலையில் இருந்தான் அவன்.

“அவரைப்பத்தி விசாரிக்கிறது மூலமா அந்த தகவல் அவரோட பேரண்ட்ஸ்க்கு போயிடாதே” என்றாள் கண்ணில் நீர் தேங்க.

யார் அவன்? ஏதோ ஒரு மூலையில் இருப்பவனுக்காக இவள் ஏன் இப்படி உருகுகிறாள்? மனமெங்கும் குழப்ப மேகங்கள் சூழ, “அவன் பேரண்ட்ஸ் மூலம் அவனுக்கு ஆபத்து இருக்கா?” என்று ஆதி கேட்டதும்,

ஆம் என்று தலையசைத்தவள், “பிகாஸ் ஆப் ஹிஸ் லவ்” என்று விம்மினாள்.

“நம்ம ஊரு கௌரவக்கொலை மாதிரியா?” என்று மீண்டும் கேட்டவனிடம், இப்போதும் ஆம் என்று தலையசைத்தாள்.

ஒரு பெருமூச்சை விட்டவன், “அவன் மிஸ்ஸிங்ன்னு தான் கேஸ் பதிவாகி இருக்கு. அவனை கண்டுபிடிக்கும் பொறுப்பு எனக்கில்லை. அவன் மிஸ்ஸான காரணம் தான் தேவையா இருந்தது. இப்ப அது காதல்ன்னு நீ சொல்லறதை பார்த்தா அந்த தகவல் எனக்கு தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்” என்று சொன்னவன், கிடைத்த ஒரு வழியும் அடைபட்டுப் போனதால் இயலாமை மிக இரு கரங்களாலும் முகத்தை அழுந்த துடைத்தான்.

அவனுடைய ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்ததிலேயே இந்த தகவல் அவனுக்கு எத்தனை முக்கியமானதாக இருக்க வேண்டியது என அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனுக்கு உதவ முடியாத தன்னிலை என்னவோ அவளுக்குப் பிடிக்கவில்லை.

அமைதியாக தலை குனிந்தவளிடம், சட்டெனத் தொற்றிய பரபரப்புடன், “ஹே, தான்பாபு ஏன் உங்க ஹாஸ்பிட்டல்ல செக்கப் வந்தான்?” என வேகமாகக் கேட்டான்.

அவளுக்கு அந்த ஒரு கேள்வியில் துக்கம் தொண்டையை அடைத்தது. நெஞ்சை அழுத்தி பிடித்துக் கொண்டு, இதழ்களைக் கடித்து கேவலுடன், “ஹீ வாண்ட் டு டெஸ்ட் ஹெட்ச்.ஐ.வி., அவருக்கு அந்த ரிசல்ட் பாசிட்டிவ்” என்று சொன்னபோது அவள் கண்களில் தெரிந்த வலி, முகத்தில் பிரதிபலித்த வேதனை எல்லாம் மிக மிக அதிகம்.

ஆதீஸ்வரன் அந்த பதிலை எதிர்பாராமல் அதிர்ந்து போய்விட்டான்.