தென்னரசுவின் பெயரைப் பார்த்ததும் நொடியில் அவனது உணர்வுகள் அறுபட பரபரப்பாகி எழுந்து அமர்ந்திருந்தான். அந்த அலைப்பேசியின் ஒலியில் பெண்ணவளும் நிதானித்திருக்க, தன்னிலை எண்ணி முகம் சிவக்க அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். அவனையுடைய ஆளுமையில் இத்தனை தூரம் தான் கூட்டுண்டிருந்ததை எண்ணி அவளுக்கு ஒருபுறம் ஆச்சரியமாக இருந்ததென்றால் மறுபுறம் கணக்கே இல்லாமல் பிடித்தும் இருந்தது.
ஆதி அழுத்தத்துடன், “சொல்லு தென்னரசு, நான் சொன்னதை விசாரிச்சுட்டியா?” என கைப்பேசியை உயிர்ப்பித்துக் கேட்டதும், தென்னரசுவிற்கு அங்கே பதற்றம் அதிகரித்தது. ஆதி ஊருக்கு சென்று இத்தனை நாட்களாகியும் இம்மியைக் கூட அவர்களால் நகர்த்த முடியவில்லை. தினம் தினம் அவன் தரும் வேலைகளுக்கு எதிர்மறையான பதிலைத் தந்து அவனது கோபத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றும் அதுபோன்றதொரு பதிலைச் சொல்லும் நிலையில் இருப்பதை எண்ணி மிகவும் அவமானமாக இருந்தது. அதில் மௌனம் காக்க, “ம்ப்ச் என்ன அரசு என்ன ஆச்சு?” என்ற கடுப்பான ஆதியின் குரலில் தாராவின் கவனமும் அவனிடம் பதிந்தது.
“சார் இன்னும் அந்த பையன் என்ன செக்கப்புக்கு வந்துட்டு போனான்னு கண்டுபிடிக்க முடியலை சார்” திக்கித்திணறி அரசு பதில் சொல்லியிருக்க, ஆதியுடைய கோபம் கரையை உடைத்தது.
இரவின் நிசப்தமா இல்லை ஆதி தனக்கு வெகு அருகில் இருந்ததாலா தெரியவில்லை மறுபுறம் தென்னரசு பேசுவதும் சேர்ந்து மிகத்தெளிவாக தாராவின் செவிகளில் விழுந்தது.
“அங்கே அத்தனை பேரு இருந்து என்னத்தை கிழி***? என் வாயில நல்லா வந்துட போகுது… ஏன் இப்படி நிலைமையோட தீவிரம் புரியாம செய்யறீங்க. உங்களையெல்லாம் நம்பி ஒரு வேலை தர முடியுதா?” ஆதி எண்ணையில் விழுந்த கடுகெனப் பொரிந்து கொண்டிருந்தான்.
ஆதி இங்கே வந்தது முதலே இதுதான் நடக்கிறது. தனக்காக வேலையை விட்டுவிட்டும் வந்துவிட்டு அவனது மனமும் அங்கேயே சுற்றி சுழன்று கொண்டிருப்பதை தாராவால் புரிந்து கொள்ள முடிந்தது. அரசியல்வாதி என்றால் ஜம்பமாக இருப்பார்கள் என்கிற அவளின் கணிப்பை ஆதி தினம் தினம் சுக்குநூறாக உடைத்துக் கொண்டிருந்தான்.
இத்தனை முக்கியமான வேலையிலும் தனக்காக இங்கிருக்கிறானே என மனம் அவனின் பால் உருகியது. இனி இதுபோல வேலை நேரத்தில் அவனுக்கு தொந்தரவாக ஒருநாளும் இருந்துவிடக்கூடாது என்று எண்ணிக் கொண்டாள்.
“சார் பாட்னா வந்ததிலிருந்து இந்த எய்ம்ஸ் ஹாஸ்ப்பிட்டல்ல எத்தனையோ வழியில முயற்சி செஞ்சுட்டோம். ஆனா இதுவரை ஒரு பலனும் கிடைக்கலை. நாங்க விசாரிச்ச வரை யாருக்கும் ஒரு விஷயமும் தெரியலை சார்” என தென்னரசு பாவமாக பதில் சொல்ல, இங்கே தாராவின் விழிகள் அவன் சொன்ன மருத்துவமனையின் பெயரைக் கேட்டதும் பெரிதாக விரிந்தது. அது அவள் படித்த மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை!
‘இப்ப கூட உன்கிட்ட விசாரிக்க எனக்கு விஷயம் இருக்கு’ என்று சொன்ன கணவனின் குரல் தான் அந்நேரம் அவளின் செவிகளில் ரீங்காரமிட்டது. அப்படியென்றால் அவன் நிஜமாவே முக்கியமான விஷயம் ஒன்றில் தன்னை விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறான். ஏற்கனவே இதுபோன்ற ஒரு சூழலில் விசாரித்ததில் உண்டான மனஸ்தாபம் காரணமாக அதனை செய்யாமல் விட்டு விட்டிருக்கிறான்.
அவளின் மனதில் முட்டி மோதிக்கொண்டு யோசனைகள் உலா போக தான் என்ன மாதிரியாக உணர்கிறோம் என்றே அவளுக்குத் தெரியவில்லை.
“ம்ப்ச் நீங்க சொல்லறது எல்லாம் எப்படி இருக்கு தெரியுமா?” என பல்லைக் கடித்துவிட்டு சில கோபமான வார்த்தைகளை அவர்களிடம் உரைத்தவன், “ஒரு பையன் திரிபுராவுல இருந்து பீகார் வந்து செக்கப் பண்ணுவானா? அதுவும் ரொம்ப கான்பிடென்ஷியலா? எப்படி யோசிச்சாலும் என்னவோ சரியில்லைன்னு புரியுது. உங்களால அதை கண்டுபிடிக்க முடியலையா? எவ்வளவு தூரம் கண்டுபிடிச்சு கொடுத்துட்டு வந்தாலும் ஏன் இப்படி மண்ணு மாதிரி இருக்கீங்க?” என தலையை இருவிரல்களால் அழுத்தி விட்டபடி ஆத்திரம் அடங்காமல் ஆதீஸ்வரன் சீறிக் கொண்டிருக்க, தாராவின் முகம் வியர்த்து விட்டது.
அவளுடைய தோழி அலக்கியாவும் அவனது காதலன் தான்பாபுவும் அவளின் நினைவுகளில் வந்துவிட வேகமாக எழுந்தமர்ந்து விட்டாள்.
ஆக, எனக்கு அவர்களைப் பற்றி ஏதேனும் தெரிந்திருக்கும் என தன் கணவன் யூகித்து விசாரணை என்றானா? இல்லை அந்த மருத்துவமனையில் வேலை செய்தவள் என்கிற முறையில் விசாரிக்க நினைத்தானா? எதுவாக இருந்தாலும் இப்பொழுது அவர்களைப் பற்றி விசாரித்து இவன் செய்யப்போவது என்ன? அவளின் மனம் தடதடத்தது.
அலக்கியா கொட்டிஸா மற்றும் தான்பாபு ரீயேங் இருவரும் ஆந்திரப்பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலத்தவர்கள். மொட்டைத்தலையும் முழங்காலும் போல இரு வேறு மூலைகள் அவர்களின் பிறப்பிடம். அவர்கள் மாநிலங்களுக்கிடையே இருக்கும் மூவாயிரம் கிலோமீட்டர் அளவிலான தூரத்தை அவர்கள் பிணைப்புக்கிடையே இல்லாமல் செய்துவிட்டது காலம் என்னும் மாயக்கோல்!
இதற்கும் அவர்கள் இருவரும் முதல் பார்வையில் காதலில் விழுந்தவர்களோ, முகமறியாமல் சோசியல் மீடியாவில் பழகியவர்களோ இல்லை. காதலிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அவர்களது நட்பு தொடங்கியிருக்கவில்லை. அவர்களையும் மீறி இயல்பாக அவர்களுக்குள் அரும்பியிருந்த நேசத்தை, ஒரு தவிர்க்க முடியாத சூழல் வந்ததும் அவர்களால் எந்த காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாமல் போயிற்று.
அவர்கள் காதல் அரும்பியதிலிருந்து, இனி நமக்கு நாம் மட்டும் தான் என்று அவர்கள் முடிவெடுத்து பிறர் அறியாமல் ஊரை விட்டு சென்றது வரை அவர்களுடன் இருந்தவள் தாரகேஸ்வரி ஒருத்தி மட்டுமே! அவர்கள் இருவரின் நேசத்தின் ஒவ்வொரு நிலையையும் பார்த்தவள் அவள்!
தான்பாபு ஒருமுறை டெல்லிக்கு நண்பர்களோடு சேர்ந்து டூர் வந்தபோது அவன் தங்கியிருந்த அதே ஹோட்டலில் தான் அலக்கியாவும் தாராவுடன் ஒரு மருத்துவ கான்பிரன்ஸுக்காக வந்துவிட்டுத் தங்கியிருந்தாள்.
ஒருநாள் மாலையில் நீச்சல் குளத்தில் தான்பாபு தவறி விழுந்து தத்தளித்தபோது அங்கே கைப்பேசி அழைப்பில் பேசிக்கொண்டிருந்த அலக்கியா கவனித்து அவனை கரையேற உதவி செய்திருந்தாள். அவனுக்கான முதலுதவி செய்து அவனைத் தேற்றியபிறகு தான் தெரிந்தது அவன் போதையின் கைப்பிள்ளையாய் இருந்தது.
காப்பாற்றியவளுக்கு அத்தனை ஆத்திரம்! அவன் முழுதாக மயக்கம் தெளிந்ததும் அவனை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டாள்.
தான்பாபுவிற்கு தன்னை காப்பாற்றி விட்டாள் என்கிற ஒற்றை காரணத்திற்காக இந்த பெண் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்வது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதோடு அவன் யாரிடமும் இதுபோல திட்டு வாங்கியும் பழகியிராதவன். அவள் திட்டத் திட்ட முகத்தை இறுக்கிக்கொண்டு போனவனைப் பார்த்து அதற்கும் திட்டினாள்.
தான்பாபுவிற்கு பதிலுக்குத் திட்டத்தெரியாமல் எல்லாம் இல்லை. தன்னை காப்பாற்றி விட்டாளே என்ற நன்றிக்கடனுக்காகப் பொறுத்துப் போய்விட்டான் போல!
அலக்கியாவிற்கு தைரியம் அதிகம். யார் என்ன என்றெல்லாம் பார்க்க மாட்டாள். தனக்கு சரியென்று தோன்றியதைத் துணிந்து பேசும் பெண். இப்படி போதையில் ஒருவன் தடுமாறி நீச்சல் குளத்தில் விழுந்ததை அவளால் அப்படி இலகுவாகக் கடந்துவிட முடியவில்லை. அதனால் போதியமட்டும் திட்டி தீர்த்தாள்.
இருவரும் அதிருப்தியோடு ஒருவரை ஒருவர் முறைத்தபடி தான் தத்தமது அறைக்கு திரும்பியிருந்தனர். அலக்கியா எல்லா விஷயங்களையும் தாராவிடம் சொல்லிக் குமுறி தீர்த்தாள். அவளை மலையிறக்க முடியாமல் தாரா தான் பாவம் திணறிப் போனாள்.
விதி எங்கிருந்தோ விளையாடியதன் பயனோ என்னவோ அதே டிரிப்பில் இருவரும் ஆக்ராவிற்கு சென்று ஒரே நேரத்தில் தாஜ்மஹால் சுற்றிப் பார்க்கவும் சென்றிருந்தார்கள்.
பாதங்களின் அசுத்தம் கூட படாமல் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் என்பதனாலேயே காலில் காலணி இல்லாமல் நீல வர்ணத்தில் காலுறை ஒன்றை வாங்கி அணிந்தபடி தான் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வேண்டியிருக்கும். நம் மனங்களும் அப்படித்தானோ கண்ட குப்பைகளும் சேர்ந்து அதனை அசுத்தம் செய்யாமல் பாதுகாக்க வேண்டுமோ? நமக்கு நமது மனம் தானே மிகப்பெரிய பொக்கிஷம்!
அன்று வெண்ணிற முட்டி வரையிலான கவுன் ஒன்றில் அலக்கியா வந்திருக்க, அவளின் ஓவர் கோட் நீல வண்ணத்தில் தான் இருந்தது. தலையில் தொப்பியும் வெள்ளையும் நீலமுமாக இருக்க ஏஞ்சல் போல இருந்தாள்.
“நீ மட்டும் என்னடி ரோஜாப்பூ மாதிரி இருக்க… என்னை மட்டும் எதுக்கு இப்படி கலாய்ச்சு தள்ளற” அடர் ரோஜா வர்ணத்தில் இளம் மஞ்சள் பூக்கள் தெளித்த கவுனில் மிளிர்ந்தவளைப் பார்த்து அலக்கியாவும் அதட்டிக் கொண்டிருந்தாள்.
“இருந்தாலும் இன்னைக்கு என்னவோ நீ ரொம்ப ஸ்பெஷலா இருக்க. சம்திங் ஸ்பெஷல்” அடங்குவேனா என்று தாரா அவளை வம்பிழுத்தபடியே வந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் அவள் சீண்டல் பொறுக்காமல் அவளை அடிக்க விரட்டியவளிடமிருந்து தாரா போக்குக்காட்டி ஓடிக்கொண்டிருக்க, அவளை பிடிக்க விரைந்ததில் அலக்கியா மோதியது என்னவோ தான்பாபுவின் லேட்டஸ்ட் டி.எஸ்.எல்.ஆர் கேமராவின் மீது!
அவன் கரங்களிலிருந்த கேமரா தெறித்து விழுந்தது. செய்வதறியாது திகைத்து நின்று விட்டார்கள் தோழிகள் இருவரும்!
(நமக்கு மட்டும் எப்பவும் கதையில இருக்கிற மத்த ஜோடிங்களோட காதல் காவியம் தான் மடை திறந்த வெள்ளம் மாதிரி கொட்டும். இன்னும் இந்த அலக்கி, பாபு காவியம் நீண்டு போயிட்டே இருக்கிறதால அடுத்த எபியில் கன்டினியூ செய்யறேன்)