காவியத் தலைவன் – 13
ஆதீஸ்வரனுக்கும் தாரகேஸ்வரிக்கும் இன்னமும் எதுவும் நேர் ஆகியிருக்கவில்லை.
இவள் தன் படிப்பில் முழுக, அவன் தன் வேலையில் மூழ்கிப் போனான்.
இப்பொழுதெல்லாம் அவன் சென்னையில் இருப்பதே அரிது என்பதுபோல வெளி மாநிலங்களில் தான் அவனது ஜாகை. அவன் வேலை தொடர்பாக நிறைய கண்டறிய வேண்டியிருந்தது. நிறைய விசாரணைகள், நிறையத் திட்டமிடல்கள் என கடிகாரம் போல ஓய்வின்றி சுழன்று கொண்டே இருந்தான்.
தாரா மனதளவில் மிகவும் காயப்பட்டாள். கணவன் இத்தனை தூரம் தன்னை தவிர்ப்பதும், ஒதுக்குவதும் அவளுக்கு அதிக வலியைத் தந்தது. ஆனால், அவனிடம் தன் வலியை அவள் ஒருநாளும் வெளிக்காட்டியதில்லை. அவனை எதிர்பார்க்கிறாள் என்று தெரியப்படுத்தியதும் இல்லை. அவனுக்காய் எப்பொழுது தேட தோன்றுகிறதோ அப்பொழுது தேடட்டும் என்று விலகியே தான் இருக்கிறாள். அதற்குத் தகுந்தாற்போல இவனும் சென்னைக்கு அதிகம் வருவதில்லை. வரும்போதிலும் மனைவியைத் தேடியதில்லை.
கூரிய வாள் ஒன்று நெஞ்சை பதம் பார்க்கும் வேதனை தான் பெண்ணவளுக்கு. என்ன முயன்றும் முடியாமல் மனதளவில் தளர்ந்து போனாள். ஒருமாதிரி வீம்பும் வந்துவிட்டது. உனக்கு நான் வேண்டாமெனில் எனக்கும் நீ வேண்டாம் என்று! அவள் உறவெனப் பெரிதும் மதிக்கும், நம்பும் ஒருவன் அவளின் நம்பிக்கையைச் சிதைத்துக் கொண்டே இருந்தான்.
சத்யேந்திரன் கனிகாவிற்கு எந்த தண்டனையையும் வழங்கப் பிரியப்படவில்லை என்பதால், ஆதி அவளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்ட போதிலும், பிரதாபனை அப்படி இலகுவாக விட்டுவிடும் ரகம் இல்லையே அவன்.
ஏற்கனவே பிரதாபன் அரசியலில் செய்த கோளாறுகளை எல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த பெருமைக்குரியவன் ஆதீஸ்வரன் தான்! இப்பொழுது அவன் தனிப்பட்ட விஷயமும் ஆதியின் தூண்டுதலில் தான் பரவியது.
பிரதாபனுடைய கள்ள மனைவிகள், பிள்ளைகள் என மொத்த விவரங்களும் ஆதாரங்களோடு வெளியாகியிருக்க, இப்பொழுது சோசியல் மீடியாக்களில் பெரும் டிரண்டிங்ல் இருப்பதே அவன் தான் என்றளவு ஆதி அவனை சிறப்பாகக் கவனித்து விட்டான்.
பல மீம்ஸ்கள், ட்ரோல்கள் என ஒரு பக்கம் களைகட்ட… முன்பு ஒழுக்க சீலன் போலப் பேசிய மேடைப்பேச்சுக்கள் மற்றும் இன்டெர்வியூ விடீயோக்கள் எல்லாம் வேறு ட்ரோல்கள் இணைக்கப்பட்டு அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதுபோக அவனின் பேமிலி ட்ரீ வேறு மீம்ஸ் கிரியேட்டர்கள் வெளியிட்டு டிரண்ட் செய்து கொண்டிருந்தனர்.
ஏற்கனவே பதவி, மரியாதை இல்லாமல் பல் பிடுங்கிய பாம்பு. இப்பொழுது ஆதியின் தயவால் வீட்டில் கூட பிரதாபனுக்கு மரியாதை இல்லை என்னும் நிலை. மேலும் மேலும் ஆதியுடன் மோதி நடுத்தெருவிற்கு கொண்டுவந்து நிறுத்தி விடப்போகிறான் என்றளவு அச்சம் வந்து விட்டிருந்தது பிரதாபனுக்கு.
பின்னே பதவியைப் பறித்தான். கட்சியிலிருந்த செல்வாக்கைப் பறித்தான். இப்பொழுது மானம், மரியாதையைப் பறித்திருக்கிறான். இனி அடுத்து என்ன கதி ஆகுமோ என்று கதிகலங்கச் செய்து விட்டான். முன்பே இப்படி விலகியிருந்திருக்க இத்தனை தூரம் வந்திருக்காது என்ற காலங்கடந்த ஞானோதயம்.
ஆதி சத்யாவைத் தொடர அனுப்பியிருந்த ஆட்களிடமிருந்து வந்த அன்றைய அறிக்கைகளை நிதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பூஜிதாவும் சத்யாவும்…
இந்த விஷயத்தை எப்படி மறந்தேன் என்று கண் மூடி சில நொடிகள் அமர்ந்து கொண்டான்.
பூஜிதாவை சத்யாவின் வாழ்வில் ஆதீஸ்வரன் இணைக்க நினைத்த காரணம்… வீரராகவன் என்று தான் சத்யாவிடம் சொல்லியிருந்தான். ஆனால், உண்மையான காரணம் பூஜிதாவின் நேசம்…
பூஜிதா சத்யாவிடம் நேசம் சொன்னதை எதேச்சையாக ஆதி கவனித்திருக்க, அப்பொழுது பயங்கர அதிருப்தி தான். கல்லூரி கூட செல்லவில்லை அதற்குள் வாழ்க்கையைத் தீர்மானித்து, பகிர்ந்து… இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியாகத் தெரிந்தது.
ஆனால், இந்துஜா மீதிருக்கும் பிம்பம் எப்பொழுதும் பூஜிதாவிடம் இருந்ததில்லை. அந்த அளவிற்கு அக்காவிற்கும் தங்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.
படிப்பு, பணிவு, நேர்மை, மேன்மையான குணம் என அனைத்திலும் பூஜிதா சொக்கத்தங்கம் தான்! தன் கண் எதிரில் வளர்ந்த பிள்ளை வேறு… ஆக, அவள் மீது ஆதிக்கு இயல்பிலேயே பாசமும் அக்கறையும் நிறைந்திருந்தது.
சத்யாவும் பூஜிதா வந்து நேசத்தைச் சொன்னபோது கௌரவமாக விலகிப் போயிருக்க, தம்பி பொறுப்பாக நடந்து கொள்கிறான். பூஜிதாவிற்கும் இந்த நிராகரிப்பு நிதர்சனத்தைப் புரிய வைக்கும் என்று தான் ஆதி எண்ணினான்.
சிறு பிள்ளை… அன்னையில்லாத பிள்ளை வேறு… பாவம் மனம் வருந்தி வேதனையில் உழலப் போகிறாள் என்று அச்சம் கொண்டு, பூஜிதாவை அவ்வப்பொழுது கண்காணித்து கொண்டிருக்க, அவள் வருந்துவது அவளின் வதனத்தில் பிரதிபலித்தாலும், எப்பொழுது வாய்ப்பு கிடைத்தாலும் சத்யாவைப் பார்வையால் பின்தொடர்வதை நிறுத்தியதில்லை.
அது அவளின் இயல்புபோல மாறி விட்டிருந்ததோ என்னவோ?
நேசம் கொண்ட பார்வை எவ்வாறு இருக்கும் என்பதை பூஜிதாவின் விழிகளைப் பார்த்து கண்டுகொள்ளலாம். அப்படி நேசம் சொட்டும் அந்த பூவிழிகளில். ஆனால், அவன் நிராகரித்த பிறகு மீண்டும் அவனை அவளாக நெருங்கவில்லை. எதையாவது பேசுவதற்காக கூட!
அதற்காக, நேசத்தையும் மாற்றிக் கொண்டது போலவும் தெரியவில்லை. அவனுக்கான கால அவகாசம் தந்திருந்தவள் போலப் பக்குவமாக நடந்து கொண்டாள்.
நெஞ்சம் நிறைந்திருந்த அவளின் வலியும் வேதனையும் அவளின் இளைத்த வதனத்திலும், மைவிழிகளுக்குள் ஒளிந்திருந்த சோகத்திலும் தான் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
அவ்வளவு நேசம் கொண்ட பெண்ணை தம்பியின் வாழ்க்கையில் இணைக்க எப்படித் தவறுவான் ஆதி? அதற்காகத்தான் தம்பியிடம் அந்த கோரிக்கையை வைத்தான். அதன்பிறகு தான் என்னவெல்லாமோ நடந்து விட்டது.
வாழ்க்கை என்ன நாம் வைத்த புள்ளிகளை எல்லாம் இணைத்து அழகான கோலத்தை சிக்கலின்றியா போட்டு விடப்போகிறது? அதன் சூட்சமம் என்ன, திட்டம் என்ன என்பதை யாரால் கண்டறிய முடியும்?
ஆதியும் சத்யாவின் விபத்தில் நிலைகுலைந்து போனான். தம்பி மீண்டு விட மாட்டானா என அனுதினமும் உருகித் தவிக்கிறான்.
இப்பொழுது இவர்கள் இருவரையும் மீண்டும் ஒரே இடத்தில் கண்டதும் மனதிற்குள் இனம் புரியா இதம். வாழ்க்கை மீண்டும் இந்த புள்ளிகளை இணைத்திடுமா என்கிற ஆவல். ஆனால், ஏற்கனவே தன்னிடம் முகம் கொடுத்துக் கூட பேச மறுக்கும் தம்பியிடம் மீண்டுமொரு முறை இந்த விஷயம் குறித்துக் கேட்டு நிற்க மனமில்லை. அதோடு ஏற்கனவே தோல்வியின் வலியில் இருப்பவன், அவனாக மீண்டு வரட்டும் என்பது தான் ஆதியின் எண்ணம்.
ஒரு பெருமூச்சுடன் உறங்கச் சென்றான். அவன் படுத்து சில நிமிடங்கள் கூட ஆகிடாத நிலையில் அவனின் கைப்பேசி சிணுங்கியது. இருந்த அலுப்பில் அவனுக்கு முதலில் காதில் விழவே இல்லை. எங்கோ தொலைதூரத்தில் யாரோ அழைப்பது போன்ற மாயை… சட்டென்று கண்விழித்துக் கொள்ள, சென்னை வீட்டில் காவலுக்கு வைத்திருப்பவரிடமிருந்து அழைப்பு.
பதறிக்கொண்டு எடுக்க, தாராவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று மட்டும் சொன்னான்.
ஆதிக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நேரத்தில் அவளுக்கு என்னவென்று? அந்த காவலாளிக்கும் சரியான விவரம் தெரியவில்லை போல…
தனது உதவியாளுக்கு அழைத்து அடுத்து சென்னை செல்லும் விமானத்தில் டிக்கெட் போடும்படி சொன்னவன், அவசரமாகக் கிளம்பிக் கொண்டே சீதாம்மாவிற்கு தான் அழைத்தான்.
அழைப்பை ஏற்றவர், “ஐயா…” என்றார் பதற்றமான குரலில்.
“என்னாச்சு சீதாம்மா?”
“தாராம்மாவுக்கு மதியத்துல இருந்தே நல்ல காய்ச்சல் தான், டாக்டர் கிட்ட போகணும்ன்னு சொன்னேன். நானே டாக்டர் தான் சீதாம்மான்னு சொல்லிட்டு அவங்க கிட்டயே மருந்து இருக்குன்னு சொல்லி எடுத்துக்கிட்டாங்க. அப்பவே கண்ணு எல்லாம் நல்லா சிவந்து இருந்துச்சு. நான் சொன்னா கேட்க மாட்டேன்னுட்டாங்க. நையிட்டும் காய்ச்சல் சரி ஆகலை. அப்ப கேட்டப்பவும் ஒன்னும் பிரச்சினையில்லை கஞ்சி மட்டும் வெச்சு கொடுங்க. மாத்திரை போட்டுக்கிறேன். காலையில சரியாயிடும், பயப்படாதீங்கன்னு சொல்லிட்டாங்க. என் கண்ணு முன்னாடி தான் மாத்திரையும் போட்டாங்க. எனக்கு இருந்தும் மனசே கேட்கலை… உங்களுக்கு போன் பண்ணி சொல்லறேன்னு சொன்னதுக்கும், வேலையா இருப்பாங்க தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லிட்டாங்க ஐயா. நைட் மனசு கேட்காம, முழிப்பு வந்ததும் உங்க ரூமுக்கு போயி பார்த்தா, காய்ச்சல் அதிகமாகி அணத்திட்டு படுத்துட்டு இருக்காங்க… அதுதான் உடனே ஹாஸ்பிட்டல் போயிடலாம்ன்னு போயிட்டு இருக்கோம்…”
எங்கே ஆதியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று வேகமாக மொத்தத்தையும் கொட்டி விட்டவரின் குரலில் அத்தனை பதற்றம்.