வீரராகவனுக்கு விஷயம் கசிந்ததில் ஆதீஸ்வரனுக்கு இன்னமும் கொஞ்சம் இறுக்கம் கூடியது. தம்பியின் உடல்நிலையில் முன்னேற்றம் வரும்முன் யாருக்கும் விஷயம் போய்ச்சேர்வதில் அவனுக்கு உடன்பாடில்லை.
சத்யாவின் நண்பர்கள் அவனைப் பின்தொடர்வதைத் தவற விட்டிருந்த காரணத்தால், அவர்களுக்கு விபத்து நடந்தது மட்டும் தான் தெரியுமே அன்றி, அவனாக விபத்தை ஏற்படுத்திக் கொண்டது தெரியாது. அதனால் தான், வீரராகவன் விசாரித்த பொழுது அதை மட்டும் சொல்லியிருக்கிறார்கள்.
விபத்து விஷயம் மேலும் இதுபோல கசிவதில் ஆதிக்கு உடன்பாடில்லை. சத்யாவின் நண்பர்களிடம் சொல்லி விடுமாறு தென்னரசுவுக்கு உத்தரவிட்டிருந்தான்.
அன்று இரவும், மறுநாள் பகல் பொழுது முழுவதும் மருத்துவமனையிலேயே தான் கழிந்தது. சத்யாவிற்கான சிகிச்சைகள் முடிந்திருந்தது. அவன் கண் விழிப்பதற்காக காத்திருந்தார்கள்.
ஆதிக்கு வீட்டிற்குச் செல்லும் எண்ணமே இல்லை. உள்ளே என்னவோ அழுத்தம். இந்த விபத்தை தன்னால் தடுத்திருக்க முடியுமோ என்ற ஆர்ப்பரிப்பு! பெற்றவர்களை இழந்த பிறகு, தம்பியின் பொறுப்பு தன்னுடையது என்று எண்ணி வளர்ந்தவன், அவனை இந்த நிலையில் காண முடியாமல் மிகுந்த மனபாரத்துடன் இருந்தான். குற்றவுணர்வு அவனை அரித்துக் கொண்டிருந்தது.
அந்த இடத்தின் நிசப்தத்தைக் கலைக்கும் விதமாக ஆதியின் கைப்பேசி சிணுங்கத் தொடங்கியது. இருக்கும் மனவுளைச்சல் போதாதென்று இந்துஜாவிடமிருந்து அழைப்பு. ஆதிக்கு அதை ஏற்கவே மனமில்லை.
இந்த மாமா ஏன் இவள் வரை விஷயத்தைக் கொண்டு சென்றார் என்று எரிச்சலாக வந்தது. அவளிடம் பேசும் மனநிலை சுத்தமாக இல்லாததால் அழைப்பைத் துண்டித்து விட்டிருந்தான்.
ஒருவர் புறக்கணிக்கும் போது கொஞ்சம் விலகியிருப்போம் என்ற அடிப்படை நாகரிகம் கூட இல்லாதவளாய் மீண்டும் அழைத்தாள். அழைப்பை ஏற்கும் வரை அவள் விடப்போவதில்லை என்று புரிந்து சலித்தான்.
சரியான டார்ச்சர் என மனதில் நொந்தபடி, வேறு வழியில்லாதவன் போல அழைப்பை ஏற்றான். “அட இவ்வளவு சீக்கிரம் போனை எடுத்துட்டீங்க மினிஸ்டர் சார்…” என்றாள் எடுத்தவுடனேயே போலி மரியாதையுடன்.
சீண்டத் தான் அழைத்திருக்கிறாள் போல என்று அவனுக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது.
எந்த பதிலும் பேசாமல் அமர்ந்திருந்தவனிடம், “நீ வேற ரொம்ப சின்சியர் ஆச்சே உன் தம்பி ஆக்சிடெண்ட் செஞ்சு யாரையும் கொன்னிருந்தா என்ன பண்ணியிருப்ப?” என்றாள் கீழ்த்தரமாக.
சுர்ரென்று கோபம் ஏறியது ஆதிக்கு. வீராவுக்காக பல்லைக்கடித்துப் பொறுத்துப் போனான்.
இப்பொழுதே சத்யாவின் ஆக்சிடெண்ட் கேஸ் பதிவாகித் தான் இருந்தது. சத்யா ஏற்படுத்திய விபத்தில் பாதிக்கப்பட்டது அவனாகவே இருந்தபோதும், தன் கடமையை ஆதி தவறவிடவில்லை. இதில் பாதிப்பு பொதுமக்களுக்கு என்றால் இலகுவாக விடுபவனா அவன்?
அது தெரியாமல் உளறியவள், “இப்பவும் உன் தம்பி மேல கேஸ் போடலாம் தெரியுமா?” என்றாள் மிரட்டும் தொனியில்.
அமைதியை விடுத்து, “போலீஸ் ஸ்டேஷன் நம்பர் வேணுமா? ஓ உனக்கு தான் அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் போய் பழக்கம் இருக்கும் இல்ல… நான் நம்பர் தர வேண்டிய அவசியமே இருக்காது…” என ஆதி பதிலுக்கு நக்கலாக கேட்க, “உன் குறையாத திமிருக்கு தான் இப்படி எல்லாம் அனுபவிக்கிற…” என்று வக்கிரமாகச் சொன்னவள், “இன்னும் அனுபவிப்ப… என்னை வேண்டாம்ன்னு முடிவு பண்ணினதுக்காகவே…” என்றாள் சாபம் போல.
கேலியாக சிரித்தவன், “என்ன உன் ரிலாக்சேஷன் முடிஞ்சது போலவே… அடுத்தவங்களுக்காக எல்லாம் கவலைப்படற அளவுக்கு நேரம் கொட்டி கிடக்கு போல…” என்றான் அவளை எரிச்சலூட்டும் விதமாக.
அடுத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கும் அளவுக்கு வெட்டியாக இருக்கிறாயா என அவன் கேளாமல் கேட்டதில் இன்னும் கடுப்பானவள், “குட் பை…” என்று ஆத்திரமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
இவளை சொல்லி தப்பில்லை… இவ மேல முழு ஆதாரத்தோட அத்தனை குற்றச்சாட்டு இருந்தும் இன்னும் இவளுக்கான தண்டனை தராம, ஏன் முறையான விசாரணையைக் கூட தொடங்காம இருக்கிற நம்ம சட்டத்தோட ஓட்டைகளை பத்தி சொல்லணும் என்று எண்ணி பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
இந்துஜாவிற்கு ஆதீஸ்வரனை கொஞ்சம் சீண்டியிருந்தால் கூட நிம்மதியாக இருந்திருக்குமோ என்னவோ அவன் இவளை சீண்டி விட்டதில், கோபமாக வந்தது. ஆனால், பல் பிடுங்கிய பாம்பின் நிலையில் அவளாலும் என்ன செய்ய முடியும்?
இருந்தாலும் அவளின் மனம் அடங்க மறுத்தது.
ஆதீஸ்வரனின் வீட்டு லேண்ட் லைனுக்கு அடித்தாள். தாரா அப்பொழுது தான் நீண்ட நேரமாக படித்துக் கொண்டே இருந்ததில் உடல் அலுப்பாக இருந்ததால் வெளியில் வந்து அமர்ந்திருந்தாள். மாலை மங்கி இரவு கவிழத் தொடங்கியிருந்த நேரம்.
கணவன் நேற்றிரவு வீட்டிற்குக் கூட வந்திருக்கவில்லை. எப்பொழுது வருவீர்கள் என்று அவள் கேட்டதற்காக இருக்குமோ? வேண்டுமென்றே தவிர்க்கறானோ? என்று கண்ட யோசனைகள் அவளைக் குழப்பிக் கொண்டிருந்தது. நெஞ்சில் முள் தைத்தது போல சுருக்கென்று வலி. இன்று அவன் வந்துவிட வேண்டும் என்றொரு எதிர்பார்ப்பு. அடிக்கடி வாசலைப் பார்த்துக் கொண்டாள்.
அந்த நேரத்தில் தான் வீட்டு அலைப்பேசி சிணுங்கியது. இயல்பாக ஏற்றவள், “ஹலோ…” என்று தொடங்க,
“என்ன உன் புருஷன் இருக்கத் திசை பக்கம் கூட போக மாட்ட போல…” என்ற நக்கல் குரலில், கொஞ்சம் சுதாரித்தாள். இது என்ன யாராக இருக்கும் என்று யோசித்தபடியே, “யார் பேசறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றாள் இயன்றவரை நிதானத்துடன்.
“ஹான்… நான் யாரா? அதுதானே புருஷன் பக்கத்துல நீ இருந்திருந்தா நான் யாருன்னு தெரிய வாய்ப்பு இருக்கும். அவர் எனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெரிஞ்சு இருக்கும். நீ தான் உன் புருஷன் இருக்கத் திசைக்கே போக மாட்ட போலயே. ஒருவேளை ஆதி உனக்கு அப்படியொரு இடத்தையே கொடுக்கலையோ?” என அவளை நோகடிக்கும் வார்த்தைகளை அனாயசயமாக வீச, தாராவின் நெஞ்சு தடதடத்தது.
யாராக இருக்கக்கூடும் என்ற யோசனை ஒரு பக்கம், தங்கள் அந்தரங்கத்தில் அநாகரிகமாக மூக்கை நுழைத்துப் பார்ப்பதில் யாருக்கு லாபம் இருக்கப் போகிறது என்ற கலக்கம் ஒரு பக்கம் என அவள் சில நொடிகள் பெரிதாகக் குழம்பி விட்டாள்.
என்ன யோசித்தும் அவனுக்குத் தெரிந்தவர்களை இவளுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? சீதாம்மா ஒருமுறை சொன்ன இந்துஜா என்ற பெயர் மட்டும் தான் ஒரே துருப்பு சீட்டு. ஆனால் அதையும் நேரடியாகக் கேட்க முடியாதே! நூற்றில் ஒரு பங்காக அவளாக இல்லாதிருந்தால்?
அவள் தானா என்று அறிவதற்காக நக்கலான சீண்டும் குரலில், “ஹாஹா பெரிய கலெக்டர் இவங்க?” என்றாள்.
தாரா எதிர்பார்த்தது போலவே இந்துஜா அதில் சீண்டப்பட்டாள். “நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் கலெக்டர் தான்டி…” என்றாள் ஆக்ரோஷமாக.
ஆக, அவளே தான் என எண்ணிய தாரா, “விளையாடாதீங்க மிஸ் இந்துஜா வீரராகவன். நீங்க கலெக்டரா இல்லையான்னே உங்க மேல விசாரணை கமிஷன் வெச்சு தான் சொல்லுவாங்க…” என்றாள் அழுத்தமாக.
இந்துஜாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. “ஏய்…” என்ற அவள் குரலில் அத்தனை சீற்றம்.
தாரா அவள் கோபத்தைத் துளியும் மதித்தாளில்லை. “உங்களுக்கு என்கிட்ட என்ன பேச வேண்டியிருக்கு?” என்றாள் எடுப்பாக. அவளுக்கும் அவள் கணவனுக்கும் ஆயிரம் இருக்கலாம். அதில் மூன்றாம் நபர் தலையிட விட்டுவிடுவதா என்ன? எங்கள் வாழ்க்கையை அலச இவளுக்கு என்ன அதிகாரம் என்றொரு கோபம்!
இந்துஜாவுக்கு தன் ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை. அவளாகப் பெயரைச் சொல்லாமல் இவள் கண்டுபிடித்ததையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் கலெக்டரா என்று நக்கல் வேறு? என்னிடம் உனக்கென்ன பேச்சு என்று திமிர் கேள்வி வேறு!
உள்ளே பொங்கிய எரிமலை சீற்றத்துடன், “அதுதானே உன்கிட்ட உன் புருஷனே பேசாதப்ப நான் என்ன பேச போறேன்?” என்றாள் எள்ளலாக.
தாரா யோசனையாக, “உனக்கெல்லாம் உன் புருஷன் உன்னை சீண்டாதப்பவே இத்தனை திமிரு? இதுல அவன் உன்னை தாங்கிட்டா கேட்கவே வேண்டாம் போல… ஆனா கனவுல கூட அப்படியொரு வாழ்க்கையை யோசிச்சு பார்க்காத. என்னோட ஆதி உனக்கு அந்த இடத்தை எப்பவும் தரமாட்டாரு. அவருக்கு சந்தோஷமோ, கஷ்டமோ எல்லாத்துக்கும் நான் தான் பக்கத்துல இருக்கணும்” என்று கர்வம் பொங்க இந்துஜா சொல்ல,
என்னோட ஆதி என்ற பேச்சில் அப்படியொரு ஆத்திரம் தாராவுக்கு. “எனக்கு புரியலை. நீங்க இப்ப எதுக்காக இதை எல்லாம் என்கிட்ட சொல்லறீங்க? உங்க மனசுல ஆயிரம் விஷயம் இருக்கலாம். உங்க கற்பனையில பல்லாயிரம் கனவு காணலாம். ஆனா நிஜம் நான் மட்டும் தான். நீங்களே என்னை அப்படித்தானே கூப்பிட்டீங்க… மிஸஸ்.ஆதீஸ்வரன்… அப்பவே உங்களுக்குத் தெரியலை என்னோட உரிமை என்னன்னு? உங்க கனவும், கற்பனையும் எனக்கு அனாவசியம். அவர் மனைவிங்கிற அடையாளமும் அதுக்குண்டான மரியாதையும் எனக்கு மட்டும் தான். உங்களை மாதிரி கனவு காண வேண்டிய அவசியமும்… அது தான் உண்மைன்னு மத்தவங்களை நம்ப வைக்க வேண்டிய அவசியமும் எனக்கு எப்பவும் இருக்க போறதில்லை…” என்றாள் உறுதியுடன்.
எந்த வகையிலும் அவளை நோகடிக்க முடியாத ஆத்திரம் இந்துஜாவைத் தன்னிலை இழக்க வைத்தது. அவள் ஆதியுடன் பேசி மூக்கறுப்பு வாங்கியதோடு விட்டிருந்தால் கூட அந்த பேச்சில் சிறிது நேரம் தான் மனம் கொதிப்புற்று இருந்திருக்கும். பிறகு மெல்ல அது அடங்கியும் போயிருந்திருக்கும். இப்பொழுது அவளாக வந்து ஆதியின் நிம்மதியைக் கெடுக்கிறேன் என்று தாராவிடம் பேசி, அதற்கு மற்றவளின் தடாலடியான பதில்களால் தன் நிம்மதியை மொத்தமாக இழந்து கொண்டிருக்கிறாள்.
அதெப்படி அவள் பேசுவதைக் கேட்டுத் தான் தோல்வியுற்றுப் போவது என்ற கொதிப்புடன், “கனவும் கற்பனையும் எனக்கில்லை. அது உனக்குத் தான் நிறைய இருக்கு. சொல்லு உனக்கு உன் புருஷனை பத்தி என்ன தெரியும்? அவன் இப்ப எங்க இருக்கான்னு ஆச்சும் தெரியுமா? அதுதானே அதெல்லாம் உனக்கெதுக்கு? நீ அந்த வீட்டுல இருக்க அவ்வளவு தான்… அதுக்கு மேல உனக்கு எந்த உரிமையும் இல்லை. சத்யாவுக்கு ஆக்சிடெண்ட் ஆகி சீரியஸா ஹாஸ்பிட்டல்ல இருக்கான். அதுவாவது உனக்குத் தெரியுமா? நேத்து நைட்ல இருந்து உன் புருஷன் அங்க கவலையோட தனியா அல்லாடறான். ஆறுதலைக் கூட உங்கிட்ட தேடணும்ன்னு தோணலை போல… அதனால தான் இந்த கஷ்டத்துலயும் மனுஷன் என்கிட்ட ஆறுதல் தேடறார் போல? நான் அவர் கூட இருந்தா நல்லா இருக்கும்ன்னு உருகுறார்…” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்து விட,
அவள் பேச்சின் பின்பகுதி பொய் என்று உறுதியாக எண்ண முடிந்தவளால், முன்பகுதியை அப்படி ஒதுக்க முடியவில்லை. கணவனை மட்டுமல்ல தென்னரசுவையும் கூட அவள் நேற்றிலிருந்து பார்க்கவில்லையே… சத்யாவிற்கு என்னவாகி இருக்கும் என மனம் தடதடத்தது. அத்தனை நேரமும் பதிலுக்குப் பதில் பேசியவளால் இப்பொழுது சட்டென்று எந்த பதிலையும் சொல்லிவிட முடியவில்லை. அந்தளவிற்கு மனதில் பாரம் அழுத்தியது.
அவளை வாயடைக்க வைத்துவிட்ட மகிழ்ச்சியில், “சென்னைக்கு அடுத்த பிளைட் எப்பன்னு பார்த்துட்டு இருக்கேன். நான் அங்க திடீர்னு வந்து நின்னா உனக்கு ஷாக் ஆகிட கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணத்துல போனை போட்டா…” என்று அவள் இழுத்து நிறுத்த,
“விருந்தாளிங்களை எப்படி வரவேற்கணும் அப்படிங்கிறதும், அவங்களை எந்த எல்லையில நிறுத்தணும் அப்படிங்கிறதும் எனக்கும் என்னோட கணவருக்கும் நல்லா தெரியும். ஆக, நீங்க வந்து நின்னா எனக்கு எந்தவொரு ஷாக்கும் இருக்க போறதில்லை. எப்ப வேணும்ன்னாலும் வீட்டுக்கு வாங்க…” என்று இயன்றவரை மிடுக்காகப் பேசிவிட்டு அலைப்பேசியின் இணைப்பைத் துண்டித்து விட்டாலும், தாராவிற்கு உள்ளம் முழுக்க அப்படியொரு அந்தரிப்பு.
என்னதான் இந்துஜாவிடம் அவள் பேசியதற்கு எந்த எதிர்வினையும் காட்டாமல் உறுதியுடன் தவிர்த்தபோதிலும் மனம் கொண்ட பாரம் இறங்கி விடுமா என்ன?
இந்த திருமணம் நிஜம் என நம்பும் சாதாரண பெண்ணாகத் தான் இத்தனை நாட்களும் இருந்தாள். கணவனோடு இணக்கமாகப் போக அவள் ஓரடி எடுத்து வைத்தாலும், அவன் ஏதோவொரு மாய எல்லைக்கோட்டை கடைப்பிடிப்பது அவளுக்கும் புரிந்தே இருந்தது.
ஒருவேளை இவ்வளவு விரைவாக ஒன்றிணைய வேண்டாம், இன்னும் கொஞ்சம் புரிதல் வரட்டும் என்று அவன் எண்ணியிருக்கலாம் என்று தான் நினைத்தாள். இயல்பாகப் பேசிப் பழகி என இருந்தாலாவது ஏதேனும் சரியாகக் கணிக்க வாய்ப்பிருந்திருக்கும். இங்கு அதற்கும் வாய்ப்பில்லை.
இப்பொழுது மனம் தன்போல அச்சம் கொண்டது. இந்துஜா பேசிய எல்லா விஷயங்களையும் அவள் கண்ணை மூடிக்கொண்டு புறந்தள்ளத் தயார். அவள் சொல்வது போல அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதேனும் இருந்திருந்தால், நிச்சயம் அதனைத் திருமணத்தில் இணைத்திருக்கும் வல்லமை படைத்தவன் தான் ஆதீஸ்வரன் என அவள் அறிவாள். ஆனால், சத்யா குறித்து இந்துஜா சொன்னது?
அதை எப்படி பொய்யென்று ஒதுக்குவது? சத்யாவிற்கு விபத்து என்று பொய் சொல்வதில் இந்துஜாவிற்கு என்ன லாபம் இருக்கப் போகிறது?
இந்துஜா சொன்னது பொய்யென்றும் ஒதுக்க முடியாமல், அது உண்மையாக இருப்பின் என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை அந்தளவிற்குத் தான் வேண்டாதவளா என்ற எண்ணத்தையும் தவிர்க்க முடியாமல் தலை பாரத்துடனும் மனம் முழுக்க தவிப்புடனும் அமர்ந்திருந்தாள்.
மருத்துவமனையில் சத்யா கண்விழிக்க மேலும் இரண்டு நாட்கள் வரை ஆகலாம் எனத் தகவல் சொல்லியிருக்க, ரெப்ரஷ் செய்வதற்காக ஆதீஸ்வரன் அப்பொழுது தான் வீட்டிற்கு வந்திருந்தான்.
அவன் வந்த அரவம் கேட்டு தாரகேஸ்வரி வேகமாக நிமிர்ந்து பார்த்தாள். அவள் விழிகள் ஆராய்தலோடு அவன் தலை முதல் பாதம் வரை தன்போல பயணித்தது.
நேற்று அணிந்து சென்ற அதே உடை! நலுங்கிய தோற்றம், முகத்தில் பொலிவு சுத்தமாக இல்லை மாறாக டென்ஷன் மட்டும் நிறைய இருந்தது. ஊன்றிப் பார்த்ததால் அவனது நடையில் தெரிந்த தளர்வும் உறுத்தியது. மனதில் பாராமேறி கிடக்காமல் இந்த தோற்றம் சாத்தியம் இல்லை.
அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள். அவள் ஒருத்தி அங்கு இருக்கிறாள் என்பதைக் கூட கவனிக்காதவன் போல வேகமாக மாடியேறினான். அவனின் செய்கையில் பெரிதாக அடி வாங்கினாள்.
எப்பொழுதும் அவன் வந்தால் அவனோடு பேசுகிறாளோ இல்லையோ அவன் பின்னேயே அறைக்குச் சென்று விடுவாள். இயன்றவரை அவன் கண்பார்வையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வாள். இன்று ஏனோ மனம் எதற்கும் ஒத்துழைக்க மறுத்தது.
தன்னை புறக்கணித்த அவனைப் புறக்கணிக்கும் வேகம் அவளிடம். ஆனால், மனம் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தது. உண்மையில் சத்யாவிற்கு ஏதாவது என்றால், அதை நினைக்கவே மனதில் அப்படியொரு படபடப்பு. தன்போல பயம் நெஞ்சைக் கவ்வியது.
காலையில் பாட்டி பேசும்போது இதுக்குறித்து எதுவுமே பேசாததால், சத்யாவுக்கு அப்படி எதுவும் நேர்ந்திருக்காது என்ற நம்பிக்கையை இழுத்துப் பிடித்தபடி தான் கணவனை நாடி சென்றாள்.
ஆனால், அவளின் நம்பிக்கை உடைந்ததோடு மட்டுமல்லாமல், ஆதீஸ்வரன் தனக்கிருக்கும் கோபம் முழுவதையும் அவள் மீது கொட்டி, தம்பியின் இந்த நிலைக்கு அவளும் ஒரு காரணம் என்பது போல சாடிவிட்டு செல்ல, அவள் மொத்தமாக நிலைகுலைந்து போனாள்.