ஏனோ இத்தனைநேரம் அவன் நெஞ்சில் எறிந்து கொண்டிருந்த நெருப்பு அவளின் ஸ்பரிசத்தில் அப்படியே அணைய ஆரம்பித்ததோ..!!! கொஞ்சம் கொஞ்சமாக அவன் வேதனை கோபமெல்லாம் மாயமாய் மறைய ஸ்ருதியின் முகத்தையே பார்த்திருந்தான்.. அவள் கன்னத்தை வருடிய கை அவளின் கலைந்திருந்த கூந்தலை சரிசெய்ய ஆபிஸில் இருந்து போன் வந்திருந்தது.. ஒரு ரிங்கிலேயே அதை ஆன் செய்தவன் ஸ்ருதியின் தூக்கம் கலையாதவாறு மெதுவான குரலில்,
“ கணேஷ் இதோ வந்துட்டு இருக்கேன்.. நீங்க எல்லா அரேஜ்மென்ட்டும் செஞ்சிருங்க..” இன்னும் சில டீடெல்ஸ் சொன்னவன் அவளை சீட்டில் சாய்ந்து அமரவைத்து சீட்பெல்ட் போட்டுவிட்டு அழுங்காமல் குலுங்காமல் காரை கிளப்பினான்..
திரும்பி திரும்பி அவளை பார்த்து கொண்டுவர ஸ்ரீக்கும் அவளுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை.. இத்தனை நாட்களாக சூழ்ந்திருந்த அந்த வெறுமை மறைந்து உற்சாகம் பிறக்க மெல்லி சீட்டியொலி தன்னை அறியாமல் வந்திருந்தது.. காரை ஸ்ருதியின் ஹாஸ்டல் வாசலில் நிறுத்தியவன்” ஸ்ருதி ஸ்ருதி “என மெல்லிய குரலில் எழுப்ப அவளை எழுப்ப முடியவில்லை.. எப்போதும்போல,
“ப்பா” என தூக்குவதுபோல கையை நீட்ட,
“ போடி இதே உனக்கு வேலையாப்போச்சு.. என்னால முடியாது.. அப்புறம் தையா தக்கான்னு குதிப்ப.. ஹாஸ்டல்ல என்ன பண்ணுவ நீயாத்தான எழனும்… அதே மாதிரி எழுந்துக்க..??” வாட்டர்பாட்டிலில் இருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளிக்க,
“ஏய் எருமைமாடுகளா என்னை இப்படி எழுப்பாதிகன்னு சொல்லியிருக்கேன்ல.. இன்னைக்கு செத்தீகடி.. “அடிப்பதுபோல் கை ஓங்கியபடி எழ சீட்பெல்ட் போட்டிருந்ததால் அவள் அப்படியே நிற்க அஸ்வின் கையை கட்டியபடி அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்..
“ஹிஹிஹி.. மாமா…நீங்களா நான் என்னோட பிரண்ட்ஸ்ன்னு நினைச்சிட்டேன்.. ??” அவள் முகம் பழையபடி மாறியிருப்பதை பார்த்தவன்..
இவ வாயாவது குறைவதாவது,” ம்ம் அதவிடு உனக்கு ஏன் அடிக்கடி தலைவலி வருது..?”
“நீ ஸாரி கேட்டுட்ட..அப்ப இப்ப உன்னை திட்டினதுக்கு நான் மன்னிப்பு கேட்கனுமா..”
“ச்சூ நீங்கல்லாம் பெரியவங்க ஸாரியெல்லாம் கேட்க வேண்டாம் மாமா.. எங்க அம்மா அப்பாவெல்லாம் என்ன திட்டினா ஸாரியா கேட்கிறாங்க..“ அதற்குள் அவள் தோழிகள் இருவர் வரவும் அவர்களை பார்த்தவள் அஸ்வினை மறந்தபடி காரை விட்டிறங்கி அவர்களுக்கு கைகாட்ட அஸ்வின் அவளுடைய பேக்கை எடுத்து கொடுத்தபடி காரை கிளப்பியிருந்தான்.. இப்போது அவன் முகம் சுட்ட கத்தரிக்காயை போலிருந்தது..
மறுநாளில் இருந்து அவளுக்கு இன்டர்னல், வைவா, எக்ஸாம் என செல்ல ஸ்ருதியும் அதில் ஐக்கியமாகியிருந்தாள்
ஸ்ருதியும் ஊருக்கு கிளம்ப கோகிலாவும் வேறு வீட்டிற்கு கிளம்பியதால் ஆறேழு மாதங்களுக்கு பிறகு கற்பகத்திற்கு தனிமை தெரிந்தது.. அதோடு ஸ்ரீயும் சற்று பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்திருந்தான்.. சந்திரன் அங்கிருந்து அலுவலகத்திற்கு போய்வர வீட்டு வேலை முடிந்து கோகிலாவும் அவ்வப்போது ஸ்ரீயை வந்து பார்த்துச் செல்வார்.. மாலை சீக்கிரம் வந்தால் சந்திரன் தன் பேரனோடு பொழுகை கழிக்க ஆரம்பித்திருந்தார்..
அன்று காலை அஸ்வின் தன் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தவன் அறைக்குள் நுழைந்த தாயை பார்க்கவும்” வாங்கம்மா..” ஸ்ரீயோ அங்கு அலமாரியில் மடித்திருந்த துணிகளையெல்லாம் ஒன்றுவிடாமல் கீழே எடுத்து போட்டு ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தான்..
“கண்ணா.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்பா..??”
“உங்க பையன்கிட்ட பேச ஏம்மா இவ்வளவு தயக்கம் சொல்லுங்க..”
“ எவ்வளவு நாள்தான் இப்படியே தனியா பொழுத போக்குவ எனக்கும் முன்ன மாதிரி உடம்பு சரியில்லப்பா..நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க.. உனக்கு வேற பொண்ண பார்க்கவா..??”
அவரை ஒரு பார்வை பார்த்தவன் “..ம்மா.. சும்மா இருங்க.. எனக்கு வேற கல்யாணம் எல்லாம் வேண்டாம்.. நீங்களும் ஸ்ரீயுமே போதும்..” அவன் தன் லாப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருக்க..
“இல்ல கண்ணா உனக்காக இல்லாட்டாலும் ஸ்ரீக்காகவாவது ஒரு பொண்ணை பார்க்கனும்பா..”
“இல்லமா அப்பா இல்லாம நீங்க என்னை நல்லாத்தானே வளர்த்திங்க.. அதே மாதிரி நானும் என்னோட பையன வளர்த்திருவேன்..”
“அதில்ல கண்ணா..??”
“ம்மா எல்லாம் சரியா வரும் நான் கிளம்புறேன்.. ஸ்ரீக்குட்டிய ஏதோ ஆராய்ச்சி பண்றான்.. அவனுக்கு ஹெல்ப் பண்ணுங்க..” அவர் கன்னத்தில் முத்தமிட்டப்படி தன் அலுவலகத்திற்கு கிளம்ப கற்பகமோ இவனை எப்படி சம்மதிக்க வைக்க போறோமோ என்ற கவலையில் ஆழ்ந்தார்..
மறுநாள் கல்லூரியில் ஏதோ பங்சன் பெண்கள் அனைவரும் சேலை, ஆண்கள் அனைவரும் வேட்டி சட்டையில் வர முடிவு செய்திருந்தார்கள்.. ஸ்ருதிக்கு இன்னும் ஒரே ஒரு பரிட்சை அதற்கு இன்னும் ஒருவாரமிருக்க அந்த பரிட்சையை முடித்துவிட்டே ஊருக்கு செல்லலாம் என முடிவு செய்தவள் அந்த பங்சனை நன்றாக என்ஜாய் செய்ய முடிவெடுத்து எந்த சேலை கட்டலாம் எந்த நகை போடலாம் என முடிவு செய்து கொண்டார்கள்..
அன்று முழுவதும் அவிழ்த்துவிட்ட கன்று குட்டிகளை போல சுற்றித்திரிந்தவர்கள் செல்பி ,போட்டோ, குரூப் போட்டோ என எடுத்து குவித்தார்கள்..
பவி “ஏய் ஸ்ருதி உன்னை பார்க்க யாரோ வந்திருக்காங்களாம்.. வரச் சொல்றாங்க..??”
ஸ்ருதி கிரவுண்டை சுற்றிக் கொண்டு நடக்க ஒரு பெரிய மரத்தின் பின்னால் ஏதோ சிறு சத்தம்.”. நீ கவலைப்படாத தியா.. எக்ஸாம் முடிஞ்சதும் அம்மா அப்பாவோட வந்து நிச்சயம் பண்றேன்.. அடுத்து கல்யாணம்தான் எங்க அம்மா அப்பா நான் என்ன சொன்னாலும் கேட்பாங்க..” சந்தியாவும் லோகேஷும் பேசிக் கொண்டிருந்தார்கள்..
“ஏய்… எதுக்கு பேசாம இருக்க என்னை நம்பலையா..??” சந்தியா பேசுவதற்குள் ஸ்ருதி குறுக்கில் புகுந்திருந்தாள்..
“ஆமாண்டா தடியா நம்பலை..? அதுக்கு என்ன இப்போ..??” இருவருக்கும் நடுவில் அமர்ந்தவள் கோர்த்திருந்த கைகளில் ஒரு அடியை போட்டு விலக்கிவிட்டு,” ஏண்டி தியா நீயா இது..? உனக்கு லவ்பண்ண வேற ஆளே கிடைக்கலையா..? இந்த தடியன்தான் கிடைச்சானா..??”
லோகேசுக்கு கோபம்” ஏய் ஸ்ருதி எனக்கு என்ன குறைச்சல்..?” அப்படியே ஐயனார் போல் அவள் முன்னிற்க அவனுக்கோ பயம் இத்தனை வருசத்தில இந்த பொண்ணுதான் நம்மக்கிட்ட லவ் சொல்லி இருக்கு அதையும் இந்த குட்டி பிசாசு கெடுத்துரும் போலயே..!!
அவனை மேலும் கீழாக ஒரு லுக்விட்டவள்,” உனக்கு போய் எப்படிடி இவன பிடிச்சிச்சு.. உன்னோட பயத்துக்கும், அமைதிக்கும் இவனோட ரௌடிதனத்துக்கும் ம்ம்ம் இததான் காதலுக்கு கண்ணிலைன்னு சொன்னாங்களோ..??”
சந்தியா தன்னை பார்ப்பதும் பின் லோகேஷை பார்ப்பதும் தரையை பார்ப்பதுமாக இருக்க..” ஏய் நீ எந்த காலத்துல இருக்க விட்டா என் பிரான நாதான்னு பாட ஆரம்பிச்சிருவ போல இவன்கிட்டயெல்லாம் இவ்வளவு அமைதி காட்டதடி.. சொர்ணாக்கா மாதிரி இரு.. பறந்து பறந்து அடி..”
“ஸ்ருதி… கத்தியவன் நீ தியாக்கு எதுவும் அட்வைஸ் குடுக்காம இருந்தாலே போதும் நாங்க எங்க வேலையை பார்த்துக்குவோம்.. அவ இப்படி இருக்கிறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு நீ உன் வேலையை பார்த்துட்டு போ..”
“டேய் இப்படியெல்லாம் சொன்ன நான் உன்னோட லவ் அத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்.. என்னையவே போக சொல்லுவியா..தியா நான் சொல்றத கேட்பியா மாட்டியா..??”
அவனோ,” தியா நான் சொல்றத கேளு..?”
இருவரும் மாறி மாறி சண்டைப்போட்டுக் கொள்ள சந்தியாவுக்கு யாருக்கு சப்போர்ட் செய்வன்றே தெரியவில்லை.. இருவருமே முக்கியமானவர்கள்
ஒருநிலைக்கு மேல் லோகேஷால் ஸ்ருதிக்கு பதில் கொடுக்க முடியாமல் அவளை அடிக்க விரட்ட ஸ்ருதியோ அவன் மண்டையில் நறுக்கென ஒரு கொட்டுவைத்து
“ ம்ம் சரி சரி போய் தொலைங்க ரெண்டு பேரும் ..?” அவள் ஓட ஆரம்பிக்க..
மண்டையில் கொட்டு வாங்கியவனோ,” ஏய் இருடி மரியாதையா ஒரு கொட்டு வாங்கிக்கோ..?”
அவளை விரட்ட அவள் காற்றாய் வந்து கொண்டிருந்தவள் அஸ்வின் மேல் மோதி நிற்க அதற்குள் அவளருகில் வந்திருந்த லோகேஷ் அவளை விரட்ட இவள் அஸ்வினை சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருந்தாள்.. இதுவரை ஸ்ருதியை ஒரு சிறு பெண்ணாகவே நினைத்திருந்தவன் அவளை சேலையில் பார்த்து பிரமித்து போயிருந்தான் அந்த லாவண்டர் நிற சேலையில் ஒரு தேவதை போல் ஜொலிக்க அதற்கேற்ற நகைகள் தலையை தளர பிண்ணி மல்லிகை சரம் வைத்திருந்தாள்..
“ஸார் பிடிங்க அவள..?” அவன் அசையாமல் நின்றிருந்தான்..
ஸ்ருதியோ” மாமா அவன வேணா பிடிங்க..”
“மாமாவா.. லோகேஷ் நின்றவன் அவனை நிமிர்ந்து பார்த்து ஸாரி ஸார் ஏய் வா உள்ளதான வரனும்.. இன்னைக்கு ஒன்னாச்சும் குடுக்காம இருக்க மாட்டேன்..”திரும்பி நடக்க,
“நீ ஒன்னு கொடுத்தா பதிலுக்கு நான் ரெண்டு கொடுப்பேன்டா தடியா..?”