அத்தியாயம் ஒன்பது :

சண்டை சச்சரவுகள் இல்லாமல் குருபிரசாத் தமிழரசியின் வாழ்க்கை சென்றது. காரணம் தமிழரசி! ஆம்! தமிழரசி குருவை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. அந்த நான்கு நாட்களாக மூன்று வேளை அல்ல நான்கு வேளையும் நன்றாக உண்டான்.

அதுவே குருவின் மனதிற்கு கஷ்டமாக இருந்தது, “நான் ஈவினிங் சமைக்கிறேன்!” என்று வருபவனிடம், “வேண்டாம் எனக்கு இங்க ஒரு வேலையும் இல்லை! ரொம்ப போரா இருக்கு! இந்த வேலை தான் என்னைக் கொஞ்சம் எங்கேஜ் பண்ணுது, அதுவுமில்லாம உங்க சமையல் கொஞ்சம் கொடுமையா இருக்கு!” என்று சொல்பவளிடம் என்ன சொல்வான்?

என்னவோ செய்து கொள் என்று விட்டு விட்டான்! ஆனால் மனது முழுவதும் ஒரு குற்ற உணர்ச்சி வியாபிக்கத் துவங்கியது, ஏதோ தவறு செய்து விட்டதாக, இன்னமும் செய்து கொண்டிருப்பதாக! என்ன என்று வரையறுக்க முடியவில்லை.

அரசிக்கு என்ன வேலை? குருபிரசாத் வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் அவனைக் கவனிப்பது தான் வேலை. “நான் இங்கே வந்த பொழுது கூட நன்றாக இருந்தானே, இப்போது ஏன் இப்படி இருக்கின்றான்” என்ற யோசனைகள் தான்.

மூன்று நாட்களாக முகம் அவ்வளவு சிந்தனை வயப்பட்டு இருந்தது. முகத்திலும் ஒரு இறுக்கம்.

அதுதான் நான் போறேன்னு சொல்லிட்டேனே ஒரு வேலை சீக்கிரம் நான் போகணும்னு நினைக்கிறானோ என்னவோ என நினைத்தவள், “சீக்கிரம் ஒரு வேலை தேடிக்கணும் அரசி!” என மனதில் உறுதி எடுத்தாள்.

ஏனென்றால் அவளின் முகத்தைக் கூட பார்ப்பதில்லை. எங்கோ பார்த்து ஒன்றிரண்டு மிகவும் தேவையான வார்த்தைகளைப் பேசினான். யாரிடம் பேசுவாள் அரசி? இவன் போனதும் காய்கறி வாங்கப் போகிறேன் என்று செக்யுரிட்டியிடம், அங்கே அபார்ட்மென்ட் கீழே இருந்த கார்டன் மெயின்டெயின் செய்பவரிடம் என்று அறியாதவர்களையும் அறிமுகமாக்கிக் கொண்டு பேசி நாட்களை ஓட்டினாள்.

வெள்ளி மாலை குருவிற்கு அழைத்த அவனின் அப்பா, “உன் மாமனார் ஞாயத்துகிழமை விருந்து வெச்சிக்கலாம் கேட்கறார்! என்ன சொல்லலாம்? என,

“விருந்தா! அதெல்லாம் வேண்டாம்!” என்றான் கடினமாக, இந்த உரையாடல் வீட்டில் இருந்த போது நடக்க, அரசி பார்த்திருந்தாள்.

“அப்படியெல்லாம் சொல்ல முடியாது! நமக்காக அவர் நிறைய விட்டுக் குடுத்துப் போயிட்டார், இப்போ அவர் மாமன் மச்சினர்களுக்கு தனியா கல்யாண விருந்து போட கேட்கும் போது நாம வரமுடியாதுன்னு எல்லாம் சொல்ல முடியாது! நாம போகணும்! மாப்பிள்ளை பொண்ணு இல்லாம விருந்து குடுக்க முடியாது! நாங்க வர்றோம்னு சொல்லிடறேன்!” என்றார் நாதன்.

“ஏன்? ஏன் எல்லோரும் என் உயிரை எடுக்கறீங்க? வாழணும்ங்ற ஆசையே எனக்கு இல்லாம பண்ணிடுவீங்க போல!” என்று கத்தினான்.

அப்படி ஒரு சப்தம்! அரசி பயந்து விட்டாள். அர்த்தனாரி கூட சத்தம் போடுவார் தான், ஆனால் இது மிக அதிகம்! அவசரமாக வாயில் கதவு மூடியிருக்கிறதா என்றும் பார்த்தாள். “அய்யோடா! இந்தச் சத்தம்! அக்கம் பக்கம் வீட்டினர் என்ன நினைப்பர். ஆனால் இங்கே தான் எல்லோர் கதவும் பூட்டி இருக்கின்றதே! யாருக்கும் கேட்காது!” என்று ஆசுவாசப் பட்டுக் கொண்டாள்.

“என்னால வரமுடியாது! வரமாட்டேன்!” என்று மீண்டும் கத்த, அவனின் கழுத்து நரம்புகள் புடைத்து தெரிந்தது, முகமும் அவ்வளவு கோபத்தில் சிவந்தது.

“அச்சச்சோ! இப்படிக் கத்தினா என்னவாவது ஆகிடப் போகுது!” என்று அரசி இன்னம் பயந்து விட்டாள்.

எதிர்புறம் அவனின் அப்பா என்ன சொன்னாரோ? ஃபோனைத் தூக்கிப் போட அது பாகம் பாகமாக கழன்று சிதறியது.  

அதை எடுக்காமல் கோபமாகப் போய் ரூம் கதவை அறைந்து சாத்திக் கொள்ள, அரசி தான் அதை எடுத்து சேர்த்து வேலை செய்கின்றதா என்று சரி பார்த்தாள். அது ஆகவில்லை!  

திரும்ப எல்லாவற்றையும் பிரித்து பொறுமையாகச் சேர்த்தாள், அப்போதும் ஆகவில்லை. பின்பு சார்ஜ் போட்டு விட்டு ஆன் செய்ய, அது வேலை செய்தது.

எதற்கு இவ்வளவு கோபம் என்று தான் குருவைப் பார்த்து தோன்றியது. அது அவனின் குற்ற உணர்ச்சி கொடுக்கும் கோபம் என்று அரசிக்குப் புரியவில்லை. அதையும் இதையும் தொட்டு நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

“ம்கூம்! அவன் வரவேயில்லை.. கவலையாகிப் போயிற்று, எப்படியோ போகட்டும்!” என்று விட முடியவில்லை.

கதவைத் திறந்து பார்க்கவும் முடியவில்லை, எதோ விருந்து பற்றிய பேச்சு என்பது புரிந்தது. ஆனாலும் வேறு எதுவும் புரியவில்லை. அவளின் அம்மா அவளிடம் சொல்லியிருக்கவில்லை, அவர்களே மதியம் தான் யோசித்திருக்க, உடனே சம்மந்தியிடம் பேச, அவர் மாலை குருவை அழைத்து விட இப்படியாகிவிட்டது.

அப்போதுதான் அரசிக்கு அம்மாவிடம் இருந்து அழைப்பு! “அரசி கண்ணு, தாய் மாமாங்க, அத்தைங்க, எல்லோருக்கும் சொந்தக்கார விருந்து போடணும்! இந்த ஞாயத்துக் கிழமை மாப்பிள்ளைக்கு சௌகரியப்படுமா?” என,

“ஓஹ்! இதைத்தான் அவனின் அப்பா பேசினாரா? இதற்கா இவ்வளவு கோபம்?” என்று நினைத்தவள் அம்மாவிடம், “அவருக்கு ஓகே வான்னு தெரியலை ம்மா! அவர் வெளிய போயிருக்கார்! வந்ததும் கேட்டு சொல்றேன்! அதுவரைக்கும் யாரையும் கூப்பிடாதீங்க!” என்று ஃபோனை வைக்க,

பேச்சின் யோசனைகளில் இருந்ததால் குருபிரசாத் வெளியே வந்ததைக் கவனிக்கவில்லை. குரு தமிழரசி பேசியதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். “வர்றோம்” என்று சொல்லாமல், “கேட்டுச் சொல்கிறேன், என்று சொல்கின்றாளே!” என்று மனது ஆசுவாசப்பட்டது.

ஃபோன் எங்கே என்பது போலத் தேட, அப்போது தான் குருவைப் பார்த்தவள், அதைப் புரிந்து “அங்கே” என்று கைகாட்டினாள். எடுத்துப் பார்த்தான், அது வேலை செய்தது, நிறைய மிஸ்டு கால்கள் அப்பாவிடம் இருந்து, சைலண்டில் போட்டிருந்தால் அரசி.

எடுத்துப் பார்த்து வைத்து விட்டான். அழைக்கவில்லை. பசிக்கவும் என்ன இருக்கின்றது சாப்பிட என்று பார்க்கப் போனான்.   

அரசி குரு கத்திய பதட்டத்தில், சமைக்கவும் மறந்து, அவனைப் பற்றிய யோசனையில் தான் இருந்தாள். இப்போது அவன் போகவும் தான் அவன் பின் போனவள், “நீங்க கத்துணிங்களா? அந்த பயத்துல இருந்தனா? மறந்துட்டேன் சாரி!” என்று பாவனையோடு சொல்ல,

அவள் சொல்லிய பாவனையில் “நீ பயந்துட்ட! அதை நான் நம்பணும்!” என்று குரு சொல்ல, “நீங்க கத்தினதுக்கு பயந்தேன்! கத்தினதுக்கு பயப்படலை!” என,

புரியாமல் குரு பார்க்க, “நீங்க கத்தும் போது, அப்படியே ரத்தம் எல்லாம் முகத்துக்கு வந்துடுச்சு! அப்படிக் கத்துறீங்க! உங்க கழுத்துல நரம்பு எல்லாம் புடைச்சு நிக்குது! உங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்துட்டேன்!” என்று சொன்னவளைப் பார்த்தான், முகத்தில் உண்மை மட்டுமே!

“ஏன் அப்படி நினைக்கிற? எதாவது ஆகட்டும், என் வாழ்க்கையை இப்படிப் பண்ணிட்டான்! செத்தொழியட்டும்னு ஏன் நினைக்கலை?” என்றான்.

“சே, சே! என்ன பேச்சு இது?” என்று முறைத்தாள், “தப்பு உங்களோடது இல்லை! எங்கப்பாவோடது! நான் வேண்டாம் சொன்னா அவங்க நிறுத்தியிருக்கணும்! அவங்க செய்யலை! இதுல நீங்க என்ன செய்வீங்க” என்றாள்.

அப்படியே நின்று விட்டான்! “தேங்க்ஸ்! இந்த வார்த்தைகளுக்காக! ஆனாலும் தப்பு என்னோடதுதான், மனசு முழுக்க அதுதான் இருக்கு! நானும் நீயும் பிரியப்போறோம், இப்போ விருந்துன்னு வந்து போலியா சிரிச்சு, திரும்ப உன்னை விட்டுட்டுப் போவேனா? மனுஷன் தானே நான்! எவ்வளவு கீழ எனக்கு நானே ஃபீல் பண்றேன் தெரியுமா?” என்று நிறுத்தியவன்.

“என்னோட ஊர் அது! நான் அதிகம் அங்கப் போறதில்லை! ஆனாலும் என்னைப் பார்க்கறவங்க இனிமே எப்படிப் பார்ப்ப்பாங்க! என் தங்கைகளுக்கு கல்யாணம் நடக்கும் போது ஒரு குற்ற உணர்ச்சியில்லாம என்னால சபையில நிக்க முடியுமா? இப்படி எல்லோர் முன்னாலையும் நான் கீழப் போறதுக்கா இப்படிக் கஷ்டப்பட்டேன்!” என்று அவன் சொல்லும் போது குரலே கரகரத்தது.

“நிறைய அப்ராட்ல இருக்குற மாதிரி ஆஃபர் வந்தது. ஆனா நான் போக மாட்டேன்! அப்பப்போ போவேன், வருவேன்! எனக்கு இங்க தான் வேணும்! என்னோட ஊர் தான் வேணும்!”

“ஒரு நாப்பதுல எல்லாம் ஊர்ல உட்கார்ந்துக்கணும், விவசாயம் பண்ணனும்! எத்தனையோ கனவு! எல்லாம் சிதைச்சிட்டார்!” என்று மீண்டும் ஃபோனை எறியப் போக,

“ஐயோ நிறுத்துங்க! திரும்பத் தூக்கிப் போடாதீங்க” என்றாள்.

அதை விட்டு அவளிடம் திரும்பியவன் “ஆமா! நீ ஏன் என்கிட்டே சண்டை போடறது இல்லை இப்போல்லாம்!” என்றான்.

“தெரியலை!” என்று ஒரு புன்னகையோடு தோள் குலுக்கினாள்.

“ப்ளீஸ்! என்னைத் திட்டு, சண்டை போடு!” என்று அந்த ஆறடி உயர ஆண்மகன் நிற்க,

“ஹ, ஹ” என்று சிரித்தவள், “என்கிட்டே பேசறவங்க எல்லாம் என்னைத் திட்டிடாத சொல்வாங்க! நீங்க மாத்தி சொல்றீங்க! என்ன சொல்ல?”

அவனின் முகம் அவ்வளவு சீரியசாக அரசியைப் பார்த்து இருக்க,

“விடுங்க, பாஸ்! எதுக்கு இவ்வவளவு டென்ஷன்!” என்று புன்னகைத்தவள், கை குலுக்குவது போல குருவை நோக்கி கை நீட்டினாள்.

“என்னடா இவ, திட்டச் சொன்னா கை நீட்டுறா” என்று நினைத்துப் பார்த்திருக்க,  

“அதுங்க பாஸ்! என்கூட இருக்கறவங்களை நான் மட்டும் தான் டென்ஷன் பண்ணனும்! நான் வேற யாருக்கும் அந்த ரைட்ஸ் குடுக்க மாட்டேன்! என் ஃபிரன்ட் ஆகிடுங்க! உங்க பிரச்சனையெல்லாம் நான் சால்வ் பண்றேன்! டீல்! என்ன சொல்றீங்க?” என,

“என்ன பேசுகின்றாள் இவள்?” என்று குருபிரசாத் பார்த்திருக்க,

“கை குடுங்க பாஸ்! இதுக்காக எல்லாம் உங்க வைஃப்ன்னு சொல்லி இங்க தங்கிட மாட்டேன்! என்னவோ உங்க ஃபிரன்ட் ஆகலாம்னு தோணுது!” என்று புன்னகையுடன் கை நீட்டியபடியே நின்றாள்.

மெதுவாக அந்தக் கைகளைப் பற்றி குலுக்க, அரசி அவனின் கையை ஸ்திரமாய் பற்றி குலுக்கினாள். நம்பத் தகுந்த மனிதர்களிடம் இருக்கும் நேர்மையான கைகுலுக்கல். அதே சமயம் கைகளின் மென்மையை உணர்ந்தான். அதுவே சொன்னது எந்த வேலைகளுக்கும் பழக்கப் பட்டவள் அல்ல என்று.

அவனின் முகம் சிந்தனையில் இருக்க “அடடா! நான் பயப்பட மாட்டேன்! தாராளமா சிரிங்க பாஸ்!” என,

குருபிரசாத்தின் முகத்தில் புன்னகை எட்டிப் பார்க்க, “ஆங்! அது! சீரியஸா ஒரு அட்வைஸ் சொல்லட்டா?” என,

“என்ன?” என்று புருவம் உயர்த்தியவனிடம், “சிரிச்சா தான் உங்க முகம் கொஞ்சம் பார்க்கற மாதிரி இருக்கு! இல்லை, பார்க்கவே சகிக்கலை! அதனால கொஞ்சம் சிரிச்ச மாதிரியே வைங்க!” என,

அதற்கும் சீரியசாக “ட்ரை பண்றேன்!” என்றான்.

மிகவுமே காயப்பட்டிருக்கின்றான் என்று புரிந்தது! என்னவோ மீண்டும் காயப்படுத்த மனதில்லாமல், “காலையில நான் சமைச்சேன் தானே! இப்போ நீங்க சமைங்க, வாங்க!” என்று அழைத்துப் போனவள், “இந்தத் தேங்காய் எடுங்க! இதை மிக்சில விடுங்க!” என்று வரிசையாக வேலைகள் வைக்க,

குரு அரசி சொல்வதை எல்லாம் செய்ய, அதற்குள் அவள் தோசை வார்த்திருக்க, எல்லாம் எடுத்து டைனிங் டேபிளில் வைத்து, “நானும் உங்களோட சாப்பிடட்டுமா?” என்று கேட்க,

“கண்டிப்பா!” என்றவன் அமர்ந்து, அவள் புறமும் தட்டை நகர்த்தி, “உனக்கு என் மேல கோபம் வரலையா? என்னோட வாழ்க்கையை இப்படி பண்ணிட்டான்னு நிக்க வெச்சி கேட்கணும் போல!”

“கோபம் வந்தா நிக்க வெச்சு கேள்வி கேட்பனா? வாட் இஸ் திஸ்?” என்று சிரித்தவள்,

“மன்னிப்போம்! மறப்போம்! மனப்பான்மை எல்லாம் எனக்குக் கிடையாது, கோபம் வந்தா ரொம்ப பனிஷ் பண்ணிடுவேன், ஆனா அதற்கான சந்தர்ப்பங்கள் ரொம்ப வந்தது இல்லை”

“ஒரு தடவை என் ஸ்கூல் மேட்க்கும் எனக்கும் சண்டை, என்னை தப்பா ஸ்கூல் சுவர்ல எழுதிட்டான், எனக்கு வந்ததே கோபம், அப்பாக் கிட்ட சொல்லிட்டேன், அவனை விட்டே எல்லோர் முன்னாடியும் சுவரை சுண்ணாம்பு அடிக்க வெச்சார் எங்கப்பா! அப்புறம் தெரிஞ்சவங்களா போயிட்டதால, அவங்க அப்பா அம்மா எல்லாம் மன்னிப்பு கேட்டாங்க!”

“ஆனாலும் என் கோபம் அடங்கலை! இதே பையன் கூட சண்டை போட்டா என்ன செஞ்சிருப்பான்? வேற ஏதாவது தான் செய்வான்! பொண்ணுன்னு தானே சுவர்ல எழுதினான், உடனே ஒன்னும் செய்யலை, ஒரு மூணு மாசம் கழிச்சு என் டாமி வெச்சு அவனைக் கடிக்க வெச்சேன். அப்போ தான் கொஞ்சம் திருப்தி ஆச்சு”

“ஆனா அதுக்கும் ஒரு பெரிய பஞ்சாயத்து ஆகிப்போச்சு, பதிலுக்கு நாங்களும் நாயை வெச்சு கடிக்க விடறோம்னு அவங்க வீட்ல இருந்து கிளம்பி வந்தாங்க!”

“எங்கப்பா என்னை அடிக்கலை, அவ்வளவு தான், ஆனா திட்டுன்னா திட்டு அப்படி ஒரு திட்டு, நான் சொல்லிட்டேன், ஓகே! நாய் வெச்சுக் கடிக்க விடுங்க, ஆனா அவன் என்னைப் பத்தி எழுதின மாதிரி, நானும் உங்க வீட்டு பொண்ணுங்களை, எங்கல்லாம் சுவர் இருக்கோ அங்கல்லாம் எழுதுவேன்னு எல்லோர் முன்னாலையும் சொன்னேன்” 

“அவ்வளவு தான் என் திசைக்கே கும்பிடு போட்டு ஓடிட்டாங்க!” என அவள் ரசித்து சொல்லி, “இந்த மாதிரி நிறைய இருக்கு!” என்றும் சொல்ல.  

“அம்மாடி! இவ பெரிய ஜக்கம்மா தான்!” என்று மனதிற்குள் நினைத்தான்.

அவனையேப் பார்த்தவள், “நீங்க என்னை கல்யாணம் பண்ணின பிறகு இப்படி ஒன்னும் வேற பொண்ணு பின்ன போகலையே! போயிருந்தா தெரியும் சேதி! ஆனா இது அதுக்கு முன்னாடி நடந்தது! அதுவும் நீங்க கல்யாணத்துக்கு முன்ன சொல்லிட்டீங்க. சோ, இதுக்கெல்லாம் கோபப்படறதோ, சண்டை போடறதோ, தப்புன்னு எனக்குள்ள ஒரு எண்ணம். அதுதான் பொழைச்சு போங்கன்னு விட்டுடேன்!” என்று அரசி புன்னகையுடன் சொன்னாள்.

அந்தப் புன்னகை, அந்த சீரிய எண்ணங்கள், எல்லாம் குருவை ஆகர்ஷிக்க, அரசி பின் சொல்லியதை எல்லாம் விட்டு, “உன்னைக் கல்யாணம் பண்ணின பிறகு எல்லாம் வேற பொண்ணை யாரவது பார்ப்பாங்களா? குருடன் கூடப் பார்க்க மாட்டான்!” என்று உண்மையான ஆழ்ந்த குரலில் குரு சொல்ல,

“ம்ம்ம்! எங்கம்மா கூட அப்படித்தான் சொல்வாங்க!” என்று ஈசியாக எடுத்துக் கொண்டவள், “ஆனா பாருங்க! நான் நல்லாப் பேசறேன்ன்றதுக்காக எனக்கு உங்களை பிடிச்சிடுமோன்னு தப்பா எல்லாம் எப்பவும் எடுக்கக் கூடாது, வி ஆர் ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ்!” என்றாள் ஸ்திரமாக நேர் பார்வையோடு.