Advertisement

அத்தியாயம் இருபத்தி ஆறு :

“ம்ம், அப்புறம்…” என்றாள் அரசி பாவனையாக, குருபிரசாத் அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

“பாஸ், அப்புறம் எப்போ ஊருக்கு கிளம்பறோம்…” என்று மீண்டும் ஆரம்பித்தாள்.

“ஊருக்கு கிளம்பறோம், இல்லை கிளம்பறேன்…” என்று குருபிரசாத் சொல்ல,

“நோ, நோ கிளம்பறேன், ஒன்லி கிளம்பறோம்…” என்று அரசி டைலாக் பேசினாள்.

“யாரோ என்னை அடிச்சாலும் உதைச்சாலும் மிதிச்சாலும் வரமாட்டேன்னு சொன்னாங்க. அவங்க யாருன்னு தெரியுமா…?” என்று குரு கேட்க,

“அது நான்தான், நான்தான்…” என்று அவனருகில் அமர்ந்து சொன்னாள்.

“அது யாரோ…!” என்று சொல்லுவாள் என எதிர்பார்த்த குருவிற்கு ஆச்சர்யம்.

“என்ன நீயா?” என்றான் ஆச்சர்யமாக.

“பின்ன…”

“அப்போ அது என்ன ஆச்சு…?”

“அது அப்போ! இது இப்போ! எப்போ கிளம்பலாம்…?” என்று மீண்டும் டைலாக் பேசினாள்.

“என்னவோ நான் அதை பண்ணனும், இதை பண்ணனும், பேசக் கூடாது, யோசிக்கக் கூடாது, மறக்கணும், இப்படி கண்டிஷன்ஸ் எல்லாம் வெச்ச…”

“என்ன இப்போ நான் வரமாட்டேன். அம்மா வீட்டுக்குப் போறேன்னு சண்டை போடணுமா…?” என்று அரசி சீரியஸ் மோடிற்கு மாறினாள்.

“அச்சோ இல்லை அரசி, நீ கேட்கும் போது நான் எப்படி எல்லாம் பதில் சொல்லணும்னு பயங்கரமா யோசிச்சு, நோட்ஸ் எல்லாம் எடுத்து, மனப்பாடம் பண்ணி வெச்சேன். நீ இப்படி எதுவுமே கேட்கலைன்னா அதெல்லாம் வேஸ்ட்டா போகுதில்லை…” என்று குருவும் சீரியசாகவே பதில் சொன்னான்.

ஆம்! அரசியிடம் என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? இல்லை எதையும் யோசிக்க மாட்டேன், எதுவும் இல்லை என் மனதினில், நீ மட்டும் தான் இருக்கிறாய் என்று சொல்ல பலவாறு ஒத்திகை பார்த்திருக்க, அரசி பொசுக்கென்று சமாதானம் ஆகிவிட்டள், அதை பற்றி பேச வேண்டாம் என்று விட்டாள். 

“என் மூளை என்ன குப்பை தொட்டியா, நீ கண்டதையும் நினைச்சு அதை என்கிட்டே புகுத்த?” என்று பாவனையாய் கேட்க வேறு செய்தாள்.

“அம்மாடி, ஜக்கம்மா! இதென்ன பழிக்கு பழியா..?” என்றான்.

“எஸ்…” என்று முஷ்டியை மடிக்கி அவள் காண்பிக்க,

“அரசி, நாளைக்கு காலையில போறேன், திரும்ப அடுத்த நாள் சாயந்தரம் வந்துடுவேன். ஒரு நாள் நைட் தான் அங்க இருப்பேன். அதுக்கு இவ்வளவு கலாட்டாவா…?”

“என்னையும் கூட்டிட்டு தான் போகணும்…”

“விஷேஷமெல்லாம் இருக்கே…”

“அது நாம வந்ததுக்கு மறுநாள் தான். அப்போ பார்த்துக்கலாம். நான் உங்கக்கூட நாளைக்கு காலையில வருவேன்…” என்று கீறல் விழுந்த ரெகார்ட் போல அவள் திரும்ப திரும்ப பேசியபடி இருந்தாள்.

லேப் மூடி வைத்தவன், “கல்யாணம் எல்லாம் சிறப்பா செஞ்சிட்டு, இந்த விஷேஷம் எல்லாம் நல்லபடியா செய்யலைன்னா நல்லா இருக்காது அரசி, நீ இருந்தா இங்க சௌகர்யம்…” என்றான்.

முறுக்கிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

ஆம்! இப்போது இந்த சண்டைகளும் சமாதானங்களும் தான் அவர்களுக்குள். திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆக, ஐந்தாம் நாளே தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வு வைத்திருக்க, அதற்கு தான் குரு, இரு என்று சொன்னால், அரசி நான் ஊருக்கு வந்து திரும்ப உங்களுடன் வருகிறேன் என்ற பிடிவாதம்.

“உனக்கு கல்யாணத்துக்கு அலைஞ்சது முடியலை, எனக்கு நல்லா தெரியுது. அதனால இன்னும் அலைச்சல் வேண்டாம்…” என்றான் கனிவாக.

இரண்டு நாட்களாக லேசாக காய்ச்சல் வேறு இருந்தது அரசிக்கு. அரசிக்கு அருகில் படுத்தாலும் எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. வெகுவாக சண்டைகள் வந்து கோபித்து, ஊருக்கும் வந்திருக்க, பின்பு சமாதானங்கள் ஆகியதா இல்லையா என்று தெரியாமல், சண்டைகள் வந்து கொண்டே இருக்க, ஆனாலும் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

சண்டைகள் வரக் காரணமே குருவின் வாய் சமாதானங்கள் மட்டுமே, வேறு இல்லை இல்லை என்ற கோபம் தான் அரசிக்கு.

“இவனும் இவன் கட்டுப் பாடும், போடா…” என்று ஏகத்திற்கும் திட்டிக் கொண்டிருந்தாள். இடையில் ஏற்பட்ட சிறு பிரிவு வெகுவாக குருவைத் தேட வைத்தது அரசியை.

“அரசி, நாம கொஞ்சம் பேசுவோமா…?” என்று ஆரம்பித்தான்.

“கொஞ்ச சொன்னா, கொஞ்சம் பேசலாமான்னு கேட்கறான், மை லவ்வபில் இடியட்…” என்று மனதிற்குள் வசை பாடிக் கொண்டு,

“என்ன…?” என்று படுத்த வாக்கில் திரும்பி பார்த்தவளிடம்,

“உன்கிட்ட அப்போ பேசினேன் இல்லையா” என்று அவன் ஆரம்பித்தான். அவன் பிறந்த நாள் அன்று அவன் பேசிய பிரச்சனைகளை மீண்டும் பேச முற்பட்டான். 

அப்படி கடுப்பானது அரசிக்கு.

“உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? எந்த விளக்கமும் தேவையில்லை. அண்ட் உங்களுக்காக நான் எதுவும் பண்ணலை. எனக்காக நான் பண்றேன். எனக்கு உங்களை பிடிச்சிருக்கு பண்றேன். என்னால உங்களை விட்டுட்டு இருக்க முடியாது அதனால பண்றேன். இஸ் தட் ஃபைன். இன்னும் இதை பத்தி பேசின…” என்று வேகமாக பொறிந்து விட்டாள்.

அவள் பேசிய வேகத்திற்கு சிரிப்பு வந்தது, “என்ன பண்ணுவ…?” என்று சீண்டலாய் வினவினான்.

“ம்ம், கடிச்சு வைப்பேன்…” என்று அரசி கோபமாகச் சொல்ல,

“கடி டி…” என்றான் அவளை நெருங்கி.

“தோடா, அதெல்லாம் முடியாது…” என்று சொல்ல தான் நினைத்தாள், குரு விட்டால் தானே!

“சும்மா குழந்தை வேணும்னு சொன்னா போதுமா…” என்ற அவனின் குரல், அவளின் காதில் தேய்ந்து ஒலித்தது.

அப்போதும் காலையில் விழித்த உடனே அவனிடம் சண்டையிட்டாள், “நான் எப்போ வேண்டாம்னு சொன்னேன், நீ பக்கத்துல வராம… குழந்தை வேணும்னு கேட்டா போதுமான்னு என்னை சொல்ற…” என்று சண்டை பிடித்தாள்.

“அதையேன் இப்போ கேட்கற…?”

“அது ராத்திரி சண்டை பிடிக்கணும்னு நினைச்சேன், ஆனா நீங்க பக்கத்துல வந்ததும் மறந்துட்டேன்…” என்று கெத்தாய் சொல்ல,

சிரித்தவன் “அம்மாடி, ஜக்கம்மா தான் டி நீ…” என்றான் சிரிப்போடே.

இவ்வளவு வாழ்க்கையில் குரு சிரித்திருப்பானா. அவனுக்கு தெரியாது என்றெல்லாம் கிடையாது. உண்மையில் கிடையாது. அவளருகில் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசிப்பதாய் மாற்றினாள். 

இதோ அரசியின் கலாட்டா எல்லாம் குறைந்து விட்டது. என்னவோ நிறைவாய் உணர்ந்தாள், அவளுக்கு இப்போது எந்த குறையும் குருவிடம் இல்லை. அவனின் சிந்தனைகள் குறைந்து விட்டன. முற்றிலுமாக இல்லை என்றாகிவிட்டதா என்றால் கிடையாது.

அவ்வப்போது சிந்தனைக்கு போவான், கூடவே இந்த பெண் என் மேல் கொண்ட காதலினால் எல்லாம் செய்கிறாள் என்று எண்ணம் ஸ்திரமாய் அமர்ந்திருக்க, ஏன்? எதற்கு? எப்படி முடியும்? என்ற கேள்விகள் பின்னுக்கு போய் விட்டன.

அரசியும் அவனின் உடல் நலத்தை கவனித்தாலும் அதனை குறித்து அவனை கவலை கொள்ள வைக்க வில்லை. இயல்பாய் எல்லாம் செய்தாள், குருவின் சிந்தனை குறைந்து விட்டதால், மாத்திரையின் பவர் கூட குறைந்து விட்டது.

மொத்தத்தில் குருபிரசாத் ஏன் என்று அரசியைப் பற்றி ஆராய்ச்சி செய்யவில்லை.. அரசியும் குருவின் சிந்தனை ஏன் மாறியது என்று கேட்கவில்லை.

இயல்பாய் உறவுகளை ஏற்பது தான் நலம் என்று அரசிக்கு நன்கு தெரியும். நீ இப்படி இருந்தால் தான் நான் உன்னுடன் இருப்பேன் என்பது வாழ்க்கையின் வெற்றிக்கு உதவாது. எப்படியிருந்தாலும் ஏற்றுக் கொள்வது என்ற வாழ்க்கை துணை கிடைக்கப் பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள்!

குருவிற்கு அந்த வரம் பூரணமாய் கிடைத்திருந்தது.

ஆம்! அவர்களின் சண்டையை குறித்த எந்த விளக்கங்களும் அரசியும் கேட்கவில்லை, குரு சொல்ல வந்த போதும் வேண்டாம் என்று விட்டாள். விளக்கம் கொடுத்து கொடுத்து தக்க வைக்கும் உறவுகளைப் பெற்றவர்கள் அபாக்கியசாலிகள், அப்படி ஒரு நிலை குருவிற்கு வர விடவில்லை அரசி!

அவளின் காதலை கற்றுக் கொடுத்து அவனின் காதலை மறக்க வைத்து விட்டாள்!  

அவளின் அக்காவிற்கு தாமதமாய் குழந்தை உண்டாகியிருக்க, அதனை கொண்டு ஒரே ஒரு கவலை, சீக்கிரம் குழந்தை உண்டாக வேண்டும் என்று. இதோ அந்த கவலையும் அகல, இரண்டு மாதம் இப்போது.

ஜோதியின் திருமணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகியிருக்க, இதோ இது அதற்கு முன்பே உருவாகி விட்டது.

“அந்த பெரியம்மா உன்கிட்ட பேசின போதே நீ கன்சீவ் ஆகிட்ட போல. அது தெரியாம என்னை கூப்பிட்டு விட்டிருக்க…” என்று குரு அவளை வாரினான்.

“தெரிஞ்சிருந்தாலும் கூப்பிட்டு விட்டிருப்பேன்…”

“அது எதுக்கு ஜக்கம்மா…?”

“எதுக்கு சும்மா தான்…” 

“அதுக்கு எதுக்கு சும்மா?” என்று மீண்டும் சீண்டினான்.

“அதுவா எனக்கு உங்களை பக்கத்துல கூப்பிட ஒரு காரணம் வேணுமில்லையா? அதுக்கு, சரியா…” என்று பாவனையாய் சொன்னாள்.

“இது நீ சொல்லாமையே எனக்கு தெரியுமே…” என்று குருவும் பாவனையாய் சொல்ல, 

“ஹல்லோ பாஸ்! என்ன இது? ஐ ஜஸ்ட் வான்ட் டு என்ஜாய் திஸ் மொமென்ட். நான் அம்மா ஆகிட்டேன். அதனால் பேசாம என்னை அனுபவிக்க விடுங்க…” என்றவள் அவனின் அருகில் அமர்ந்து தோள் சாய்ந்து கொண்டாள்.

“என்ன அரசி பேச மாட்டாளா?” என்று ஆச்சர்யம் போல குருபிரசாத் வினவ,

ம்கூம், அரசி வாய் திறக்கவேயில்லை! அப்படியே கண் மூடி அமர்ந்திருந்தாள்.

மேக்னா என்ற பெண்ணிற்கு தான் நன்றி கூறியது மனம். திருமணமாகிவிட்டது என்று தெரிந்ததும் உடனே விலகி விட்டாள். அவள் மட்டும் இருந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு சிக்கலாகி இருக்கும் நினைக்கவே பயமாய் இருந்தது.

“ஹே, ஜக்கம்மா, என்ன இது அமைதியாகிட்ட…?”

கண்மூடி தோள் சாய்ந்த படியே “உங்களை ஏன் எனக்கு பிடிச்சதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்…”

“இப்போ ஏன் இந்த யோசனை…?” என்று குருபிரசாத் இலகுவாகப் பேச,

“அப்பா ஆனா மொமன்ட்டை என்ஜாய் பண்ணாம இந்த மரமண்டை தொன தொனன்னு பேசறான்.  இவனை உனக்கு ஏன் பிடிச்சதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்…”

“ம்ம், ஏன் தெரியுமா? ஏன்னா நான் அரசியோட கணவன் அண்ட் அதனால மட்டும் தான் அரசிக்கு என்னை பிடிச்சது…” என்று இலகுவாக சொல்வது போல தோன்றினாலும் ஆழ்ந்த குரலில் சொன்னான்.

“டேய் வாயை மூடுறா…!” என்று அரசி கத்த, “உன் வாயை மூடட்டுமா…” என்றான் சரசமாக.

“ஏன் நீ இப்படி பேசிட்டே இருக்க…?”

“நீ அமைதியா அம்மா ஆன மொமன்ட்டை என்ஜாய் பண்ணு. நான் பேசி பேசி பண்றேன்…” என்று சொல்லியபடி மென்மையாய் அவளின் இதழில் இதழ் பதித்து விலகியவன்,

“தேங்க்ஸ் அரசி..!” என்றான் உள்ளார்ந்து.

“இது எதுக்கு…?” என்றாள் கவலையாக. இவன் பேச்சை நிறுத்த மாட்டானா என்ற பாவனையோடு.

“சும்மா சொல்லணும்னு தோணிச்சு…”

“சும்மா எல்லாம் சொல்லக் கூடாது…”

“சரி, எதுக்குன்னா, நீ என் வாழ்கையில வந்ததுதுக்கா இருக்கலாம், இல்லை நீ என் வாழ்க்கையை விட்டு போகாததுக்கா இருக்கலாம், இல்லை நீ என்னை ரொம்ப லவ் பண்றதுக்கா இருக்கலாம், இல்லை நீ என்னை அப்பா ஆக்கினதுக்கா இருக்கலாம்…” என்று அவன் அடுக்க,

“பாஸ்…” என்று சிணுங்கியவள், “எனக்கு பேசற குருவை விட பேசாம இருக்குற குரு தான் பிடிச்சிருக்கு…” எனப் பாவமாய் சொன்னாள்.

அவனின் பரவச நிலை அவனின் இயல்பையும் மீறி விடாமல் பேச வைத்தது. 

“சரி, ஒரே ஒரு தடவை பேசிக்கறேன்…” 

“இப்போ என்ன…?’ என்று சலிப்பாய் பார்த்தவளிடம், “கொல்றடி என்னை…” என்று எப்போதும் போல சொல்ல,

“போடா…!” என்ற வார்த்தை தானாக அவளின் வாயில் இருந்து உதிர்ந்தது.

பேசிய இருவருமே அடுத்த நொடி கண்களை மூடி அந்த க்ஷணத்தை அமைதியாய் அனுபவித்தனர்.

                    உன் காதலை கற்று

                   என் காதலை மறந்தேன்

                    காதலும் கற்று மற!  

                        ( நிறைவுற்றது )

 

Advertisement