Advertisement

அத்தியாயம் இருபத்தி ஐந்து :  

குருபிரசாத் பாலை எடுத்து டைனிங் டேபிளில் வைத்து கிட்சன் ஒதுங்க வைக்கும் போது, புனிதா டம்ளரை எடுத்துக் கொண்டு வந்தாள்.

வந்தவள் “அண்ணி எங்கே…?” என்று முகத்தை உர்ரென்று வைத்து கேட்டாள்.

அவள் கேட்ட விதத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்தது!

“ம்ம்… கண்டுபிடி…” என்றான் இலகுவாக.

“நீங்க ஏன் அவங்களை அழ வைக்கறீங்க…?” என்று நேரடியாகக் கேட்க வேறு செய்தாள்.

குருபிரசாத் கைகளை கட்டிக் கொண்டு அழுத்தமாய் புனிதாவை பார்த்த பார்வையில், அவளுக்கு பயம் வர வாய் தானாக மூடிக் கொண்டது. அவளின் முகத்தை பார்த்தவன், அவளின் கைகளில் இருந்த டம்ப்ளரை வாங்கி கழுவ போட்டுவிட்டு “போ, போய் தூங்கு…” என்றான் அமைதியாக.

அந்த வார்த்தையை மீற முடியாமல் புனிதா திரும்பிச் சென்றாள்.

“இவளால இந்த குட்டி பிசாசு எல்லாம் என்னை கேள்வி கேட்குது…” என்று அரசியை நொந்து கொண்டு, இருவருக்கும் பால் எடுத்து மேலே வந்தான்.

கீழே படுத்து எதுவும் கலாட்டா செய்வாளோ என்று நினைத்து வந்தவனுக்கு “ஹப்பாடி…” என்று இருந்தது.

அப்படி எதுவும் அவள் செய்யவில்லை. “அரசி எழுந்து பால் குடி…” என்று படுத்திருந்தவளுக்கு அருகில் நின்று கூறினான்.

எழுந்து வாங்கி ஒரே மூச்சில் வேகமாய் குடித்து படுத்துக் கொண்டாள். அவள் குடிக்கும் சூடு தெரிந்து தான் கொண்டு வந்திருந்தான். இவனுக்குச் சூடாய் வேண்டும். இவன் மெதுவாக குடித்து படுக்கையில் அவள் முகம் இருந்த புறம் அமர்ந்தவன், “எதுக்கு அழுத?” என்று கேட்க,

அதற்காகவே காத்திருந்தவள் போல “உங்க வயிறு எனக்கு குப்பை தொட்டியா, நீங்க எப்படி அப்படி சொல்லலாம். சாப்பாடு இருக்க, வேற செஞ்சா நீங்க திட்டுவீங்கன்னு தான் செய்யலை…” என்று அதை சொல்லும் போதே மீண்டும் கண்கலங்கினாள். 

“சாரி…” என்றான்.

“உங்க சாரி ஒன்னும் வேண்டாம்…” என்று சொல்லி கவிழ்ந்து படுத்து தலையணையுள் முகம் புதைத்துக் கொண்டாள்.

“ரொம்ப பசி, நேத்து நைட் சாப்பிட்டது. இங்க வந்து பார்த்தா நீயும் இல்லை. இவங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க. அப்பா சாப்பிடுன்னு சொல்லிட்டு வெளில போயிட்டார். காஃபி கூட குடிக்கலை. நானே போட்டுக்குவேன் தான். ஆனா எனக்குத் தோணலை…”

“நீ இல்லைனா என்னால எல்லாம் பண்ண முடியும்? உனக்குன்னா கூட செய்வேன்… ஆனா எனக்கு செய்யணும்னா நீதான் வேணும் அரசி…” என்றான் ஆழ்ந்த குரலில்.

தலையை மட்டும் உயர்த்தி “நான் தானே சாப்பாடு போட்டேன்…” என்று சொல்லி மீண்டும் தலையணைக்குள் முகம் புதைத்தாள்.

“ஆனா நீ செய்யலை இல்லையா? ரொம்ப ருசியா சாப்பிட்டு பழகிட்டு, என் கொடுமையான சாப்பாட்டை கஷ்டப்பட்டு சாப்பிட்டு, உன்னை தேடி ஓடி வந்தா, உன்னை காணோம். நீ வேணும்னு என்னை அவாய்ட் பண்றன்னு செம கோபம்…”

“ஆனா நீ ஏன் அழுத? சண்டை தானே போடுவ… நீ அழுவன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலை. சாரி…!” என்றான் மீண்டும்.

அரசி பதில் பேசாமல் இருக்க, “போடா, சொல்ல மாட்டியா…?” என்றான்.

அவனும் எப்படி எப்படியோ பேச்சுக் கொடுக்க, பதிலும் இல்லை! அசைவும் இல்லை!

“நான் எல்லாம் மறந்துடறேன், ஓகே! அரசியை தவிர எதுவுமே ஞாபகம் வெச்சிக்க மாட்டேன், ஓகே…!” என்று சிறு குழந்தையை சமாதானம் செய்வது போல சொல்லிக் கொண்டிருந்தான்.

ம்கூம்! எதற்கும் பதிலில்லை.

அதற்கு மேல தாளாதவனாக அவளை தொட்டே ஆக வேண்டும் என்ற உந்துதல். ஆனால் கட்டிப் பிடித்து கொஞ்சத் தோன்றவில்லை. அவன் வீட்டிற்கு வந்த அடுத்த நாள் இருந்து அவனுக்கு சமைக்கிறாள் விட்டுப் பிரிவேன் என்று சொல்லிய போதும். அப்படி பட்டவளிடம் தான் நடந்து கொள்வது அதிகப் படி என்று தோன்றியது.   

“அது தான் சாரி சொல்றேன் தானே…” என்று சொல்லியவாறு மெதுவாக அவளின் காலை இதமாய் பிடித்து விட்டான்.

கீழே இருந்த காலை வாகாய் எடுத்து அவன் மடி மீது போட்டுக் கொண்டாள்.

அவனும் இதமாய் பதமாய் அழுத்த சிறிது நேரத்திலேயே உறங்கி விட்டாள் என்று அவளின் சீரான மூச்சினில் தெரிய, அவளின் முகத்தை தலையணையிள் இருந்து திருப்பி சௌகர்யமாய் படுக்க வைத்தான். பின் அவனும் அருகில் படுத்துக் கொள்ள, ஒரு வாரமாய் அணுகுவேனா என்றிருந்த உறக்கம் எளிதாய் வந்து விட்டது அத்தனை சண்டைகளுக்கு நடுவிலும்.

காலையில் குருவின் உறக்கம் கலைந்த போது வீடு பரபரப்பாய் இருந்தது. திருமண வீடல்லவா இவர்களின் பக்கம் சில உறவுகள் வந்திருக்க அரசியின் மொத்த குடும்பமும் அங்கே இருந்தது.

அரசி இங்கே தான் இருக்க வேண்டும் திருமணம் முடியும் வரை. உறங்க மட்டும் தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அப்பாவிடம் சொல்லியிருந்தாள்.

“அங்கயும் நம்ம பங்காளி வீடு கண்ணு, நாங்க போகணும்…” என்று அர்த்தனாரி சொன்ன போதும்,

“அதெல்லாம் பின்ன, பொண்ணு வீடா? பங்காளி வீடா? அங்க செய்ய நிறைய பேர் இருக்காங்க. இங்க நானும் அவரும் தான். என்ன செய்யணுமோ உங்க விருப்பம்…” என்று முகத்தை தூக்கியிருக்க,

“என்ன சொல்வர்?” அவர்கள் வந்திருக்க, ராஜாவின் குடும்பமும் இங்கேயே வந்துவிட, பேச்சும் அரட்டை சத்தமும் என வீடு கலகலப்பாய் இருந்தது.

பத்து மணி! “சென்ற முறை அவர்களின் பெண், இன்று நானா? என்ன நினைப்பர்…” என்றபடி வேகமாய் குளித்து வந்தான்.    

அவன் வந்து எல்லோரையும் “வாங்க…” என்று வரவேற்று அவர்களுடன் அமர்ந்து கொண்டான்.

புனிதா வந்து “அண்ணி கூப்பிடறாங்க…” என்று முறைப்பாய் சொல்ல, உடனே எழுந்து வந்தான் குருபிரசாத்.

அவனுக்குக் காஃபியோடு நின்றாள். “அங்க எல்லோரும் இருக்காங்க. உங்களுக்கு மட்டும் எப்படி தனியா குடுக்கன்னு கூப்பிட்டேன். அவங்களுக்கு ஒரு பதினோரு மணி போல கொடுக்கலாம்…” என்று சொல்லி நகரப் பார்த்தாள்.

“பசிக்குது, சாப்பிட்டு குடிச்சிக்கறேன்…” என்றவனிடம்,

“வீட்ல எதுவும் செய்யலை. எல்லாம் ஒரு இடத்துல சொல்லியிருக்கோம், அவங்க சமைச்சு குடுத்து விடறது தான் இப்போ. இட்லி, சேமியா, ஆனியன் தோசை இருக்கு…” என்றாள்.

“எல்லோரும் சாப்பிட்டுட்டாங்களா”

“ஆச்சு! நாம ரெண்டு பேர் மட்டும் தான். நீங்க சாப்பிடும் முன்ன சாப்பிட்டா, எங்க அம்மா திட்டுவாங்க…” என்று அவள் ஏதோ ரோபா போலப் பேச பேச, அடக்கமுடியாமல் சிரித்து விட்டான்!

“என்ன சிரிப்பு?’ என்று பார்த்தவளிடம்,

“நான் சின்ன பையனா இருக்கும் போது டிவில ஒரு சீரியல் பார்த்தேன். ஸ்மால் வொன்டர்ன்னு, ஹிந்தி டப்பிங் சீரியல். ஜீனின்னு அதுல ஒரு குட்டி பொண்ணு, எனக்கு சரியா ஞாபகமில்லை. அது இப்படி தான் பேசும்! அவ ரோபோ வா தேவதையா ஞாபகமில்லை…” என்றவன்,

குரலை தளைத்து “ஆனால் நீ தேவதை..!” என்றான் கவிதையாய். 

அரசி ஒரு எதிர்வினையும் காண்பிக்காது நின்றாள்.

“கண்ட்ரோல் அரசி…” என்று மனதிற்குள் சொல்லி நின்றது அவளுக்குத் தானே தெரியும் அதுவும் குரு பேசப் பேச அவளுக்கு வெட்கம் வந்து விடுமோ என்று அவளுக்கே பயமாய் போய்விட்டது. 

“ஏற்கனவே ஒருத்தி நேத்து இருந்து என்னை முறைச்சு பார்க்கறா. சண்டை போடற மாதிரி பேசறா. என்னை கேள்வி கேட்கறா? இதுல நீ இப்படி இருந்த, கல்யாணத்தை அவங்க என்ஜாய் பண்ண மாட்டாங்க…” என்று சொன்னான்.

இதில் அவளையும் மீறி சிலிர்த்து விட்ட அரசி, “என்னை தவிர யார் உங்களை முறைக்கறது, சண்டை போடறது…?” என்று கிளம்பினாள்.

“என்னை டார்ச்சர் பண்ற மொத்த உரிமையும் உனக்கு தான்…” என்று மீண்டும் அவளைப் பார்த்து குரலை தளைத்து கவிதையாய் சொன்னான் மெல்லிய குரலில்.

“கொல்றான்டா இவன் என்னை…” என்று அரசியின் மனது நினைத்தது.

பின்பு “தோ இவ தான்…” என்று புனிதாவை காண்பித்தான்.

“நான் இல்லை, அண்ணா தான் என்னை திட்டினாங்க…” என்று பதிலுக்கு புனிதா குருவை குற்றம் சொன்னாள்.

அரசி குருபிரசாத்தை “நீ திட்டினாயா?” என்பது போல முறைத்து பார்க்கவும்,

“நான் உன்னை திட்டினேனா?” என்றான் புனிதாவிடம்,

“இல்லை கை கட்டி, என்னை பார்த்தாங்க. எனக்கு பயமாப் போச்சு…” என்று சொல்ல, “நீ என்ன பண்ணின, அதையும் சொல்லு…” என்றான் குரு. 

“உங்களை ஏன் அழ வெச்சாங்கன்னு சண்டை போட்டேன்…” என்று சன்னக் குரலில் சொன்னாள்.

“யார் அழ வெச்சது உங்க அண்ணாவா? நான் அவரை அழ வெக்காம இருந்தா பத்தாது…” என்று கெத்தாக சொன்னவள்,

“இதுக்கெல்லாம் சண்டையா அண்ணாக்கிட்ட” என்று சொன்னாள்.

ஆம்! குருவை யாரிடமாவது விட்டுக் கொடுப்பாளா என்ன அரசி. இப்போதும் குரு கை கட்டி புனிதாவை ஒரு பார்வை பார்த்தான். பார்வையின் தீவிரம் அதிகம்.

“சாரிண்ணா…” என்று சொல்லிச் சென்றாள்.

“ஏன் இப்படி?” என்று அரசி வாய் விட்டு கேட்டாள்.

“நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல யாரும் வரக் கூடாது, அண்ட் அவளோட பேசும் போது நீயும் வரக் கூடாது!” என்றான் அதிதீவிரமாய்.

அரசி அவனை ஒரு பார்வை பார்க்கவும், “என்ன உன் மைன்ட் வாய்ஸ்?” என்றான்.

“அப்படியே நீங்க பேசும் போது, பேசுவியா… பேசுவியான்னு… வாய் மேல கொடுக்கணும் போல தோணுது…” என்று சொல்லி விட்டு டிஃபன் எடுத்து வைக்கச் சென்றாள்.

இப்படியாக திருமண வேலைகளுக்கு நடுவில் இருவருக்கும் அப்படி முட்டிக் கொண்டது. ஆனால் வேலைகள் சிறப்பாய் நடந்தது.

“நைட் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு, இப்போ என்ன நீங்க பெரிய கெத்து காட்டறீங்க…” என்று பொறுக்க முடியாமல் கேட்க,

“தோடா…!” என்றான் அவளைப் போல.

பின் அவளை பார்த்து “நான் கால் தான் அமுக்கி விட்டேன், ஒன்னும் கால்ல விழலை…” என்றான் கெத்தாக. 

“உடம்புல பல இடம் இருக்கு. அது ஏன் காலை பிடிச்சு அமுக்குணீங்க. கால்ல மரியாதையா விழுந்தீங்கன்னு சொல்லுங்க…” என்று அவள் பேசப் பேச, குருவின் முகத்தில் புன்னகை உதிக்க, அவனின் பார்வையும் அவளை கபளீகரம் செய்ய, 

“அரசி…!” என்று அவளுக்கு அவளே தலையில் தட்டிக் கொண்டு ஓடியே போய் விட்டாள்.

இப்படியாக மணமக்களை விட இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களும் அறியாமல், மற்றவரும் அறியாமல் சைட் அடித்துக் கொண்டனர் என்பது தான் உண்மை.

திருமணம் முடிந்து இதோ பெண்ணை தாரை வார்த்துக் கொடுக்க அரசியும் குருபிரசாத்தும் தான் நின்றனர். அர்த்தனாரிக்கு அவ்வளவு பெருமை மருமகனை குறித்து. இந்தக் காலத்தில் யார் இப்படி அவர்களுடைய உழைப்பை சுய சம்பாத்தியத்தை அசால்டாய் தூக்கி குடும்பத்திற்கு கொடுக்கின்றனர்.

ஒரு சிலரே! அதில் குருபிரசாத்தும் ஒருவன் என்பதில் அப்படி பெருமை.  அதுவும் அவனின் தோற்றம், நடை, உடை, பாவனை, பேச்சு என்று அவரின் பார்வை மருமகனை கர்வமாய் தொட்டுத் தொட்டு மீண்டது.

“உங்கப்பா ஏன் என்னை இப்படி பார்க்கறார். நேத்து இருந்து நானும் கவனிக்கறேன்…” என்று குரு சந்தேகம் கேட்க,

“அவர் பார்க்காமையே பேசாமையே தேடிப் பிடிச்ச மருமகனில்லையா, அதான் எப்படி இருக்கீங்கன்னு ஒரு வருஷத்துக்கு அப்புறம் சைட் அடிக்கறார்…” என்று அரசி சிரிக்காமல் சொல்ல,

குரு சிரித்து விட்டான்!

“ஷ்! என்ன பண்றீங்க? எல்லோரும் நம்மையே பார்க்கறாங்க…” என்று அரசி அதட்ட,

“பாரும்மா உன் பொண்ணு, சிரிக்காம பேசி மாப்பிள்ளையை சிரிக்க வெச்சிட்டு இருக்கா…” என்று கலை பூமாவிடம் சொல்ல. அருகில் குழந்தையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த ராஜாவிற்கு மனது எப்போதும் போல ஆசுவாசமானது.

Advertisement