கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்
எந்த கண்ணீரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
காலம் கரைந்தாலும் கோலம்
சிதைந்தாலும் பாசம்
வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே
உன் முகம் பார்க்கிறேன் அதில்
என் முகம் பார்க்கிறேன்
இத்தனை நாள் கழித்து பேத்தியை தன் வீட்டில் பார்த்த உடன்., தாத்தாவிற்கும் பாட்டிக்கும் கண்கலங்கியது.., சற்று நேரத்தில் செண்பகம் அழவே தொடங்கி விட்டார்., வாசலிலே தன் பேத்தியை கட்டி அணைத்து உச்சி முகர்ந்து கண்ணீர் வழிய தன்னோடு அணைத்துக் கொண்டவர்.,
அவளின் கன்னம் வருடி., “உன்னை வருத்தப்பட விட்டது தப்பு தான்., அதுக்காக இப்படி இத்தனை வருஷம் வராமல் இருந்ததுட்டீயே., எங்க நாங்க செத்ததுக்கு அப்புறம் தான் வருவாயோ நினைச்சேன்.., இப்பவாது வந்தியே”., என்று சொல்லி அழ உடன் இருந்தவர்களுக்கும் கண்ணீர் வந்தது.
சரண்யா சப்தமில்லாமல் கண்ணீர் வடித்தாலும்., முதல்முறையாக ‘தவறு செய்து விட்டோமோ’ என்ற எண்ணம் தோன்றியது., ‘அவளை தான் பிடிக்காது, அவள் பேசியது தான் வருத்தம்., என்றால் பெரியப்பா வீட்டிற்கு போகாமல் இருந்திருக்கலாம்., அவளின் மாமா வீட்டிற்கு என்று இல்லை., அவளது சொந்தங்கள் வீட்டிற்கு போகாமல் இருந்திருக்கலாம்., தனது அப்பா பாட்டியையும்., தாத்தாவையும்., தவிக்க வைத்து விட்டோமோ’ என்ற எண்ணம் வந்தது.,
ஏனெனில் திவ்யா இவர்களோடு அந்த அளவு பாசமாக இருக்க மாட்டாள்., எப்போதும் சரண்யா., இவர்களோடு சற்று ஓட்டுதலாக இருப்பாள்., வரும் போதே அசோக்கின் அம்மா இவளிடம் ஏற்கனவே வருத்தப்பட்டு சொல்லியிருந்தார்., “நாங்கள் எல்லாம் இல்லையா உனக்கு., என்று வருத்தப்பட்டு அவர் கேட்டிருந்தது வேறு., ஏற்கனவே மனதில் சின்ன வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.,
இப்போது பாட்டி வாய் விட்டு சொல்லி அழவும் தான்.., ‘பெரிய தவறு செய்து விட்டோமோ’ என்ற எண்ணம் அவளுக்கு வர தொடங்கியது.., ஏற்கனவே பாசமான பெரியவர்கள்., கிராமத்தில் இருப்பதால் அங்கு இருந்து அவர்கள் வேறு எங்கும் வெளியே சென்றது இல்லை., தனியே சென்று வரவும் தெரியாது., அதனால் ஒவ்வொரு முறையும் முரளியும் மங்கையும் வந்துவிட்டு திண்டுக்கல் வரும்போது தான் இவர்களை திண்டுக்கலுக்கு அழைத்து வருவார்கள்., அங்கு வந்து இரண்டு நாள் பார்த்து விட்டு மறுபடியும் முரளி கொண்டு வந்து ஊரில் விட்டு விட்டு தான் திருப்பி வருவார் முரளி.
வயதானவர்களை தவிக்க வைத்து விட்டோமே., என்ற மனவருத்தம் இப்போது சரண்யாவின் மனதில் பாரமாக ஏறியது…
அதன் பிறகு அவர்களுடனே இருக்கும் படி மங்கையும்., ரத்னாவும்., பார்த்துக் கொண்டார்கள்., பெரியம்மாவும் பெரியப்பாவும் வந்து தான் பார்த்து விட்டு சென்றார்கள்..,
அவர்களுக்கு தெரியுமாதலால் அவளை பார்த்து விட்டுச் சென்று விட்டார்கள் ராஜா வும் வந்து எப்போதும் போல பாசமாக பேசிவிட்டு சென்றான்.., அந்த வீட்டில் வித்தியாசமான குணம் திவ்யாவிற்கு மட்டும்தான்.,
மறுநாள் காலை பதினோரு மணி நிச்சயதார்த்தம் என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தான்., வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்., “நான் காலையில் ஆரியங்காவு கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடறேன்” என்று சொன்னாள்.
“இரண்டு நாள் கழித்து போலாம் டா., எல்லோரும் சேர்ந்து போவோமே” என்று அம்மா சொன்னார்.,
“அப்ப எல்லாரும் சேர்ந்து போகலாம்., இப்போ நாளைக்கு நான் போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.
“இங்கே நாளைக்கு நிச்சயம் இருக்கே மா” என்று பாட்டியும் தாத்தாவும் யோசனையோடு சொன்னார்கள்.
இவள் தான் “இல்ல நான் மாணிக்கம் தாத்தாவும் மட்டும் போயிட்டு வந்துருவோம்., நீங்க இங்க உள்ள பங்க்ஷன் பாருங்க.., கரெக்டா பங்க்ஷன் டைமுக்கு வந்துருவேன்”., என்று சொன்னாள்.
அவள் கோயிலுக்கு போக வேண்டும் என்று சற்று பிடிவாதமாக சொன்னது போல் இருந்ததால் வீட்டின் பெரியவர்களும் சரி., மங்கையும் முரளியுமே., சரி கோயிலுக்கு தானே போகிறேன் என்கிறாள்., “போயிட்டு வரட்டும்” என்று சொன்னார்கள்.
திண்டுக்கல் தாத்தாவுடன் செல்வதாக சொன்னவுடன் மற்றவர்கள் “சரி நாங்கள் இங்கு பார்த்துக்கொள்கிறோம்”., என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அவளும் “சரி பாட்டி கொஞ்சம் இருங்க., நான் போய் குளிச்சுட்டு, டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்”., என்று சொல்லிவிட்டு மாடிக்கு ஓடினாள். அவளுடைய அறைக்கு போய் குளித்து உடை மாற்றி விட்டு வந்து அமர்ந்து பாட்டி கையால் உணவு எடுத்துக் கொண்டாள்.
சிறுபிள்ளையாக இருக்கும் போது அவள் ஊஞ்சல் ஆடிக் கொண்டே இருப்பாள்., பாட்டி ஊட்டி விடுவார்., அது போலவே இன்றும் பின்புறம் இருந்த ஊஞ்சலில் போய் அமர்ந்து கொள்ள., பாட்டி சாப்பாட்டு ஊட்டிவிடத் தொடங்கினார்.
பாட்டியோடு பழைய கதைகளை பேசிக்கொண்டு., தோட்டம் பற்றியும் மற்ற விஷயங்களை பற்றியும் பேசிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்., மற்றவர்கள் உள்ளறையில் அமர்ந்து சாப்பிட பாட்டியும் பேத்தியும் அவர்களுக்கான நேரத்தை தனதாக்கிக் கொண்டார்கள். அதன்பிறகு அவளுக்கு இரண்டு கைகளிலும் மருதாணி வைத்து விட்டு அழகு பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி., அவளுக்கு அந்த மருதாணி வாசம் மிகப் பிடிக்கும் என்பதால் எப்பொழுதுமே மருதாணி தான் வைத்துக்கொள்வாள்..
மறுநாள் காலை இருவரும் கோவிலுக்கு கிளம்பினர்., செங்கோட்டையிலிருந்து புளியரை வழியாக கேரளா செல்லும் வழியில் ஆரியங்காவு கோயில் இருக்கிறது. அது ஐயப்பன் கோயில்., அங்கு ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்., மற்றபடி அங்கு உள்ளவர்கள் எல்லோருமே சென்று வருவார்கள்., சிறிய கோயில் தான் எனவே தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டே கிளம்பினர்…
எப்போதும் போல எம் எஸ் வியின் பாடல் ஓட தாத்தா காரை ஓட்டத் தொடங்கினார்., “வரும்போது நான் தான் ஓட்டுவேன்” என்று சொன்னாள்.
“சரி இப்ப நான் ஓட்டுறேன்” என்று சொல்லிக்கொண்டு பாடலை போட்டு விட்டு தாத்தாவும் அமைதியாக வந்தார். இவளும் அமைதியாகத் தான் இருந்தாள்.
அவள் மனதில் ஆயிரம் யோசனைகள் ‘இந்த நிமிடம் கோயிலுக்கு கிளம்பும் வரை திவ்யாவை பார்க்க வில்லை., மற்ற யாரைப் பற்றியும் பேசவில்லை., முதல் நாள் மாலை வந்து சேர்ந்தவுடன் தாத்தா., பாட்டியோடு கொஞ்சிக் கொண்டு வீட்டில் இருக்க., திண்டுக்கல் தாத்தா பாட்டி., மங்கை முரளியோடு சேர்ந்து., ஜெ. கே வீட்டிற்கு சென்று வந்தனர்., பெரியப்பா வீட்டிற்கும் சென்று வந்தனர்., அவளுக்கு தெரியும்., ஆனால் இவள் யாரை பற்றியும் கேட்கவும் இல்லை., விசாரிக்கவும் இல்லை.
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை
ஒரு மட மாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை
இது சோதனையா நெஞ்சின் வேதனையா
உன் துணையேன் கிடைக்கவில்லை
உன் துணையேன் கிடைக்கவில்லை…
பாடல் ஏதோ ஒரு வகையில் அவளை தாக்குவதாக இருப்பது போல உணர்ந்தாள். ஆனாலும் எதுவும் சொல்லாமல் தாத்தாவின் முகத்தை பார்த்த படியே., “ஏன் தாத்தா அமைதியா இருக்கீங்க” என்று கேட்டுக்கொண்டே வந்தாள்.
அப்போது தாத்தா “ஒன்னும் இல்லம்மா., ஒரு யோசனை நேத்து பெரியப்பா வீட்டுக்கு போயிட்டு வந்தோம்., நீ எப்படி இருக்காங்க என்ன சொன்னாங்கன்னு எதுவும் கேட்கல., கார்த்திக் வீட்டுக்கும் போய்ட்டு வந்தோம் நீ அப்பவும் எதுவும் கேட்கல.., ஏன்மா யாரும் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியா” என்று கேட்டார்.
“அப்படி இல்ல தாத்தா பெரியப்பா பெரியம்மா வீட்டுக்கு வந்து பார்த்துட்டு போய்ட்டாங்க., அவங்க வீட்டைப் பத்தி நான் பேச அவசியம் இல்லைன்னு எனக்கு தோணுச்சு., அதுமட்டுமில்லாம ஜெ. கே வீட்டை பற்றி நான் எதுக்கு தாத்தா கேக்கணும்., நான் கேட்டேன் தெரிஞ்சாலே திவ்யா சண்டைக்கு வருவா., அது மட்டுமில்லாமல் என்னால யார் வீட்டிலேயும் பிரச்சினை வரக்கூடாது., அப்படிங்கிறதுல எல்லாம் நான் ஸ்ட்ராங்கா இருக்கேன்., அவங்கள பத்தி நான் பேசினேன்., அப்படின்னு தெரிஞ்சாலே தை தை ன்னு குதிப்பா திவ்யா., இப்போ அவ உண்மையிலேயே அந்த வீட்டுக்கு உரிமைக்காரியாகப் போகும் போது., நாம யாரோ மாதிரி வந்துட்டு மூணாம் மனுஷங்க மாதிரி இருந்துட்டுப் போறது தான் நல்லது.., இப்பவும் பாட்டி தாத்தா பீல் பண்றாங்க., அதற்காகவாவது அப்பப்ப வந்து அவங்கள பாக்கணும் அப்படின்னு தோணுச்சு., கண்டிப்பா பார்க்க மட்டும் வருவேன்., மத்தபடி மத்தவங்க எல்லாம் எனக்கு மூணாவது மனுஷங்க தான் , அப்புறம் எதுக்கு தாத்தா அவங்கள பத்தி நான் பேசணும்”., என்றாள்.