Advertisement

தூறல் – 25

கண்மணி வருணின் வருகையை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் உடல் நடுக்கத்திலேயே தெரிந்தது. ‘இவனா..’என்ற திகைத்த பார்வை. அவனைக் கண்டதுமே உள்ளமும் உடலும் சேர்ந்தே பதற, இறுக்கமாய் அதிரூபனின் கரத்தினை பற்றிகொண்டாள்.

கிளம்புகிறேன் என்றவள் இதென்ன கையை பிடிக்கிறாள் என்று அதிரூபன் அவளை ஏறிட, அவளின் பார்வையோ எதிரே இருந்த ஒருவன் மீது இருக்க, சடுதியில் அவனுக்குப் புரிந்துபோனது.

“கண்மணி..” என்றபடி அவன் எழுந்துவிட, வருண் மேலும் இவர்களை நோக்கி வந்தான். அவனின் பார்வையோ இருவரின் மீதும் ஒரு ஆராய்ச்சி செய்து அதனின் முடிவையும் எழுதிவிட்டதாய் இருந்தது.     

கண்மணியும் உள்ளே ஓடிய நடுக்கும், அதிரூபனுக்கு நன்கு உணர முடிய ‘நான் இருக்கப்போ கண்மணி பயப்படுறதா??’ என்றெண்ணியவன் “நான் பாத்துக்கிறேன்..” என்று அவளின் கரங்களை மேலும் அழுத்திப் பிடித்தான்.

அவனின் அந்த பிடியும், அவனின் அந்த சொல்லும், எத்தனை பெரும் தைரியம் அவளுக்குக் கொடுத்தது என்று அவளால் மட்டுமே உணர்ந்திட முடியும். வார்த்தைகளால் வடிக்க இயலா உணர்வது. 

இவர்களிடம் வந்த வருணோ  “சோ.. இதனாலதான் இல்லையா?? எல்லாமே…” என்று, ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து கேட்டவன் பார்வையில் ஒருவித வலி தெரிந்தது நிஜம்.

அவன் சத்தமிடவில்லை, சண்டையிடவில்லை. ஆனாலும் கூட அவனின் வார்த்தைகள் எதிரே இருக்கும் இருவருக்கும் ருசிக்கவில்லை. கண்மணிக்கு என்னவோ அவனைப் பார்க்க ஒரு தர்மசங்கட நிலை. அதிலும் அவன் மீது தவறுகள் இல்லாது, இத்தனை நாட்கள் அல்லல் பட்டிருக்கிறான் என்கையில், தன்னால் வேறு ஒருவித மனக்கஷ்டம் என்கையில் எல்லாம் சேர்த்து வருணை நோகடிக்காது பதில் சொல்லவே எண்ணினாள்.

ஆம் பதில் சொல்லித்தானே ஆகிட வேண்டும்..

அப்பா.. அம்மா.. அண்ணன்… அதிரூபன் என்று யார் வந்து அவளுக்கு அரணாய் நின்றாலும், அவளின் பதில் அவள்தானே சொல்லிடவேண்டும்.. மனதில் அந்த நேரத்தில் ஒரு திடம் வந்திருந்தது. பயந்து என்ன செய்ய?? வருந்தி என்ன செய்ய? பதில்கள் சொல்லவேண்டிய நேரத்தில் மௌனியாய் இருந்தும் தான் என்ன செய்ய?? இந்த சூழ்நிலைகள் எல்லாம் கடந்துதானே போகவேண்டும்..

ஆக “நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்லை..” என்று கண்மணி எப்போதும் போல் மெதுவாகவே சொன்னாலும் அவளின் குரலில் அப்படியொரு தெளிவு இருந்தது.

அதிரூபனுக்குக் கூட ஆச்சர்யமே. ஆனால் அவனுக்கோ வருணின் பார்வை கண்மணி மீது இருப்பதை கிஞ்சித்தும் கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. பல்லைக் கடித்தே நின்றிருந்தான்.. வருண் வந்தது ஒருவித அதிர்வு கொடுத்தாலும், அவனுக்கு அவனின் நிலையும் புரிந்தது, கண்மணி மனதளவில் எத்தனை போராட்டம் கொண்டிருப்பாள் என்பதும் புரிந்தது.

இதில் தான் வேறு அவளை கடிந்துகொண்டது எண்ணி வருத்தமாக இருக்க, எதையுமே அவன் முகத்தினில் காட்டிக்கொள்ளவில்லை, அதற்குமேல் கண்மணியை அவன் பேசவும் விடவில்லை, அவனே முன் சென்று “ஹாய் ஐம் அதிரூபன்..” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான்..

அவனின் நீட்டிய கரங்களை ஒருமுறை தயங்கியே வருண் பற்றி “ஐம் வருண்..” என்றவன், திரும்ப கண்மணியைப் பார்க்க,

‘சண்டையில்லாம போகணும்னு நினைச்சாலும் இவன் விடமாட்டான் போலவே..’ என்றெண்ணிய அதிரூபன், கண்களை லேசாய் இடுக்கி “வருண்…” என்றழைக்க,

“ஹா.. டெல் மீ…” என்ற வருணின் குரலில் அப்படியொரு நிமிர்வு..

நான் என்ன தவறு செய்தேன்.. நான் ஏன் தயக்கம்கொள்ள வேண்டும் என்ற நிமிர்வு அது.. அவனின் பார்வையும் அதுவே சொல்ல, அதிரூபனோ “சொல்லுங்க வருண்… என்ன விஷயம்..” என்று நேரடியாய் ஆரம்பித்துவிட்டான்.

“நான் கண்மணிக்கிட்ட பேசணும்..”

தெளிவாய்.. தெள்ளத் தெளிவாய் வருணின் வார்த்தைகள் வந்தாலும் அதிரூபனோ ‘டேய்..’ என்று பல்லைக் கடித்தான்.. ஆனாலும் என்ன செய்ய முடியும்?? அதிரூபன் கண்மணியைப் பார்க்க,

அவளோ, “நீங்க வீட்டுக்கு வருவீங்கன்னு நாங்க யாரும் எதிர்பார்க்கலை.. அதுமட்டுமில்ல, லைப்ல சிலது நம்ம எதிர்பார்க்காதது தானே நடக்கும்… எங்க ரிலேஷன்ஷிப்பும் அப்படித்தான்.. பட் எங்களுக்கு பிடிச்சு நடந்தது.. சிலது உண்மையை ஒத்துக்கணும்…” என்று பேச்சை அத்தோடு முடிக்க எண்ணினாள்.

அதிரூபனோ ‘என்ன இப்படி பேசுறா?? இவன்பாட்டுக்கு வேற எதுவும் பிரச்சனை பண்ண போறான்…’ என்று வருணைப் பார்க்க,

அவனோ “நானுமே கூட இதை எதிர்பார்க்கலை..” என்றான் இவர்கள் இருவரையும் கை நீட்டி..

அவன் சொன்னதில் என்ன இருந்தது என்றே வகையறை செய்ய முடியவில்லை. ஆனால் என்னவோ இருந்தது. அதிரூபனுக்கு மேலே மேலே பேச்சை வளர்க்க பிடிக்கவில்லை. ஒருநிலைக்கு மேலே போனால் கண்டிப்பாய் அவனால் பொறுமையை இழுத்து பிடிக்க முடியாது. பொது இடம் வேறு..  அதிலும் உடன் கண்மணி வேறு இருக்கிறாள். எவ்வித அசம்பாவிதமும் ஆகாது பார்த்துகொள்வது அவனின் பொறுப்பாய் பட்டது..

சட்டையை மடித்து, கைகளை முறுக்கி ‘நீ என்ன பெரிய இவனா?? கேள்வி கேட்கிற??’ என்று ஒருநொடியில் பகையை வளர்த்திடலாம் தான். ஆனால் அதிரூபனுக்கு அவர்களின் வாழ்வு யார் மனதையும் நோகடித்தோ, இல்லை யாரின் துவேசத்தையும் சம்பாரித்தோ தொடங்கிட விருப்பமில்லை..

“வருண்.. உங்களோட உணர்வு என்னால புரிஞ்சுக்க முடியுது.. பட்… இதுல மேல மேல காம்ப்ளிகேசன் வேணாமே..” என்று அதிரூபன் தன்மையாகவே பேசினாலும், அவனின் வார்த்தைகளில் இருக்கும் அழுத்தம் வருணுக்கு புரியாது இல்லை..

மெல்ல நகைத்துக்கொண்டவன் “மேல மேல இதுல என்ன இருக்கு??” என்றுவிட்டு “வேற ஏதாவது ரீசன்னா கூட நான் கண்மணியை கன்வின்ஸ் பண்ணலாம்.. பட்.. இதுல வாட் கேன் ஐ டூ??” என்று தோள்களை குலுக்கிவிட்டு

“அன்னிக்கே சொல்லிருக்கலாமே.. நான் இவ்வளோ தூரம் வந்திருக்கமாட்டேனே..” என்றான் ஒருவித வருத்தத்தில்..

அவன் வருத்தம் வெளிக்காட்ட நினைக்கவில்லை. ஆனாலும் கூட ஒருசில வார்த்தைகளில் நம்மின் உணர்வுகள் வெளிப்படும் இல்லையா?? கண்மணிக்கு இந்த கேள்வியை எண்ணித்தான் மனம் பயந்தது.. அன்றே சொல்லிருக்கலாமே?? இருக்கவேண்டும் தான்.. ஆனால் பெற்றவர்களுக்கே தெரியாதபோது இவனிடம் எப்படி சொல்ல?? பதிலேதும் சொல்லாது வருணைப் பார்க்க,

அதிரூபனோ “சொல்லிருக்கணும்.. பட் சொல்ல முடியாத சூழல்… இப்பவும்கூட.. இவங்க அண்ணன் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்.. அவங்கப்பா ஹெல்த் இஸ்யூஸ்… எல்லாமே சேர்த்து கண்முன்னாடி நிக்குது.. சோ..” என, அதற்குமேல் வருண் எதுவும் சொல்ல முடியாதுதானே.

மூர்த்தியிடம் சடகோபன் தங்களின் முடிவினை சொல்ல, வருணின் பெற்றோர்கள் கூட ‘இதுக்குமேல நம்ம கேட்கிறதும் நல்லாயில்ல..’ என்றுவிட, வருண்தான் ‘ஒன் டைம் நான் கண்மணிக்கிட்ட பேசிட்டு, அவளும் இதான் முடிவுன்னு சொன்னா நான் எந்த தொல்லையும் செய்யமாட்டேன்..’ என்றுவிட்டு தான் வந்திருந்தான்..

கண்மணியின் வீட்டிற்குக் கூட போகவில்லை, அவள் பார்க்கில் நுழையும் போதே பார்த்துவிட்டான். என்ன இவள் இங்கே என்று பார்க்கையில், இவர்கள் இருவரையும் ஒன்றாய் காண நேர, பட்டென்று போய் இருவரின் முன்னே இவனால் நிற்க முடியவில்லை. என்னவோ அந்த நேரத்தில் மனதில் ஒரு பெரும் ஏமாற்றம்.

இதற்குமேல் என்ன செய்ய முடியும்?? இப்போதும் கூட.. கிளம்பிவிட்டான்..

“ஓகே… ஆல் தி பெஸ்ட்..” என்றுசொல்லி அதிரூபனிடம் கை குலுக்கியவன், கண்மணியை மீண்டும் ஒருமுறை பார்க்க, அவளோ அவனின் பார்வையை நேர்கொண்டே தாங்கி நின்றாள். நானும்கூட எந்த தவறும் செய்யவில்லை என்பதாய்..

ஆனால் வருண் கிளம்பிய அடுத்தநொடி, கண்மணி திருப்ப அப்படியே அமர்ந்தவளுக்கு, அப்படியொரு மன அழுத்தம். ஒருப்பக்கம் அதிரூபன் காட்டிய கோபம்.. இப்போதோ வருண் அடுத்து என்ன செய்வான் என்று தெரியாது?? இப்படியே ஒன்றும் செய்யாது விலகிடுவானா, இல்லை வீட்டினில் தேவையில்லாது எதுவும் சொல்லிடுவானா?? ம்ம்ஹும் கணிக்கவே முடியவில்லை.

அவன் சொல்லி வீட்டினில் தெரிவது விட, அவள் சொல்வது நல்லதல்லவா.. இதுவே மனதினில் ஓட, அதிரூபனோடு ஒன்றும் பேசாது அமர்ந்திருந்தாள். அதிரூபனுக்கு அவளின் நிலையை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஆண்கள் எளிதாய் முறைத்துகொள்ள முடியும். ஆனால் பெண்கள் உறவுகளின் பாலம் அல்லவா?? தன் மீது எத்தனை பளு கூடினாலும் அந்த பாலம் உடைந்திடாது இருப்பது என்பது அவர்களின் செயளில்தானே இருக்கிறது. அவள் அப்படி பேச்சற்று அமர்ந்திருப்பது கண்டு கஷ்டமாய் இருக்க, 

“கண்மணி…” என்றான் மெதுவாய்.. ம்ம்ஹும் பதில் இல்லை.

 “சரி சரி.. கண்மணி… ப்ளீஸ் பேசேன்..” என்றான் முற்றிலும் தணிந்துவிட்ட குரலில்.

அவளோ அப்போதும் முகத்தை திருப்பினாள் இல்லை.. இங்கே இத்தனை நேரம் என்ன நடந்தது.. எத்தனை நடந்தது.. அந்த வருண் அப்படியே போய்விடுவானா ?? இல்லை போகிற போக்கில் எதுவும் செய்துவிடுவானா என்றெல்லாம் அவளின் யோசனை செல்ல, வீட்டிற்கு கிளம்பியவள் அப்படியே அமர்ந்துபோனாள்.

ஆனால் அதிரூபனோ, சிறிது நேரத்திற்கு முன்னே அவளை திட்டியது எல்லாம் விட்டு, இப்போது அவளை சமாதானம் செய்ய முயல, கண்மணிக்கு கடுப்பாய் தான் இருந்தது. அது அவளின் முகத்திலும் தெரிய,

“இப்போ ஏன் கண்மணி இவ்வளோ கோவம்??” என்றான் ஒன்றும் அறியாதவன் போல.

‘கோவமா??? எனக்கா??!!’ என்றுதான் பார்த்துவைத்தாள்..

“ஹப்பாடி அனல் அடிக்குது போ..” என்று கைகளை விசிருவது போல் செய்தவன், “சரி.. சரி… தப்புதான்.. ஒரு டென்சன்ல கத்திட்டேன்.. சாரி..” என்றான் அவளின் விரல்களுக்கு சொடுக்கிட்டபடி..

பார்க் தான்.. யாரும் பார்க்க மாட்டார்கள் தான். இருந்தாலும் இவர்கள் வசிக்கும் இதே ஏரியா ஆகிற்றே.. தெரிந்தவர்கள் கண்களில் அதுவும் இப்படி தொட்டுக்கொண்டு பேசிக்கொண்டு பட்டால், அது இருவருக்குமே மரியாதையாய் இருக்காதல்லவா.. கண்மணி கொஞ்சம் தள்ளி அமர்ந்துகொண்டாள் பட்டென்று.

அதிரூபனோ மெல்ல சிரித்தவன் “ஓகே… சரண்டர்… இப்படி காமன் பிளேஸ்ல எப்படி உன்னை சமாதானம் செய்றதுன்னு தெரியலை.. கொஞ்சம் பாத்து பண்ணுங்க எசமான்..” என்று கைகளை உயர்த்தி பேச ஆரம்பித்தவன், பட்டென்று அடுத்து கைகளை கட்டி பணிவாய் பேச, அவன் செய்தது பார்த்து கண்மணிக்கு கோபம் போய் சிரிப்பு வந்துவிட்டது..

“நீங்க இருக்கீங்களே…” என்று அவள் சொல்லி சிரிக்க, “ஹ்ம்ம் கண்மணிக்கு அழகே சிரிப்புதான்..” என்றவன்,  “நீ எதுவும் வொர்ரி பண்ணிக்காத.. சரியா.. இப்போகூட நான் வந்து உங்கப்பாக்கிட்ட பேசட்டா??” என, அவளின் கண்கள் விரிந்தது.. 

“என்ன பாக்குற.. நிஜமாதான் சொல்றேன்.. நீ சரின்னு சொல்லு நான் வந்து பேசுறேன்..” என்றான் உறுதியாய்..

“அ.. அது சரியா வருமா?? நா.. நானே சொல்றதுதானே சரி..”

“ஹ்ம்ம் எல்லாமே எல்லா நேரத்துலயும் சரியா வராதுதான்.. பட் என்னாகுமோன்னு பயந்துட்டே இருக்கிறதுக்கு சொல்லிடலாம் இல்லையா?? நீ இப்படி டென்சனா இருக்கிறது எனக்கு பிடிக்கல.. நான் இருக்கப்போ நீ இப்படி இருக்கக் கூடாது..” என,

“நான் சொல்லிடட்டுமா??” என்றாள் அவனையே பார்த்து..

“நீ எது பண்ணாலும் எனக்கு சம்மதம் கண்மணி.. நீ எப்போ சொன்னாலும் நான் வந்து உங்க அப்பாக்கிட்ட பேசுறேன்..” என,  கண்மணியின் பதற்றம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துகொண்டு இருந்தது..

“ம்ம்..” என்று தலையை அசைத்தவள், “கிளம்பட்டுமா??” என,

“அப்போவே முறுக்கிட்டு போன..” என்றான் கிண்டலாய்..

“சரி இப்போவும் அப்படியே போறேன்..” என்று முறைப்போடு கண்மணி எழ,

“ஹேய்… உடனே…” என்று அவளின் கரங்கள் பற்றியவன், “வா நான் டிராப் பண்றேன்..” என்றான்..

“என்னது??!!!” என்று இவள் அதிர, “யம்மா உன்ன வீட்ல தானே விடறேன்னு சொல்றேன்.. அதுக்கேன் இவ்வளோ ஷாக்??!!” என்றான் அவனும்.

“யாராது பார்த்தா அவ்வளோதான்.. நான் வீட்ல சொல்ற வரைக்கும் கொஞ்சம் கேர்புல்லா இருப்போமே..” என்று கெஞ்சலாய் அவள் கேட்க, “ம்ம் அவனவன் என்னென்னவோ செய்றான்…” என்று முனங்கியவன்,

“போ மா போ.. நீ நடந்து போ உன்ன பாலோ பண்ணிட்டு பைக்க உருட்டிட்டு வர்றேன்..” என்று அவனும் எழ, அவன் சொன்ன விதம் பார்த்து கண்மணிக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.

‘சிரி.. சிரி.. நல்லா சிரி..’ என்று போலியாய் கடிந்தவனோ, அவன் சொன்னதுபோலவே செய்ய, கண்மணி வீட்டிற்குள் செல்லும் வரைக்கும் கூட அதிரூபன் அவள் வீட்டருகே கொஞ்சம் தள்ளித்தான் நின்றிருந்தான்.

வீட்டினுள் வந்தவளோ, வேகமாய் அவளின் அறை பால்கனிக்கு செல்ல, அதிரூபன் அவள் அங்கே வருவாள் என்பது தெரிந்ததுபோலவே நிற்க, அவன் இன்னும் நிற்கிறான் என்பதுகண்டு இவளுக்கு அப்படியொரு சந்தோசம்..

“இன்னும் எவ்வளோ நேரம்தான் நிப்பீங்களாம்..” என்று சலுகையாகவே கேட்டாள், அவனுக்கு போன் செய்து..

“நிக்கவாது செய்றேனே…” என, அப்படியே கொஞ்சம் நேரம் இவர்களின் பேச்சு நீள, வம்படியாகவே கிளம்ப வைத்தாள் கண்மணி அவனை.

அதிரூபனுக்கு மனதில் அழுத்திக்கொண்டு இருந்தவைகள் எல்லாம் மறைந்துவிட, இனி நடப்பது எல்லாம் நல்லபடியாக நடந்திடவேண்டும் என்பதுமட்டுமே மனதில் இருக்க, அலங்கார் போனவன், அவனுக்கான வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு வெகுநேரம் கழித்தே வீடு சென்றான்.

எப்போதுமே எத்தனை நேரமானாலும் இவனுக்காக ஹால் சோபாவில் காத்திருக்கும் மஞ்சுளா இன்று இல்லை. நிவின் வந்து கதவு திறக்க,

“அம்மா எங்கடா??” என்றபடிதான் உள்ளே வந்தான்..

“தூங்கியாச்சு.. ஹாட் பாக்ஸ்ல சப்பாத்தி இருக்கு.. சாப்பிட்டுக்கோ…” என்று நிவின் சொல்ல, “ம்ம்ம் நீங்க சாப்பிட்டாச்சா??” என்றபடியே அவனின் அறைக்குள் போனான் அதிரூபன்.

மஞ்சுளா உறங்கியது அவனுக்கு வித்தியாசமாய் தெரியவில்லை.. நேரமும் கூட நிரம்பவே தாமதம்தான்.. ஆகையால் அதை பெரிதாய் நினைக்காதவன், பிரெஷ் ஆகிக்கொண்டு வந்து உண்டுவிட்டு படுக்க, மறுநாளோ மஞ்சுளா அதிரூபனிடம் ஒன்றுமே பேசவில்லை..

ஏன் ?? என்ன என்று எந்த கேள்வியும் கேட்கவில்லை. அதுவே அவனுக்கு ஒருமாதிரி இருந்தது. அம்மா எப்போதும் இப்படியில்லை. மனதில் ஒன்றும் வைத்துகொள்ளவே மாட்டார்.. நல்லதோ கெட்டதோ கேட்டுவிடுவார்.. ஆனால் இந்த ஒரு ஓரிரு நாட்களாக அவனோடு அளவாகவே வைத்துக்கொண்டார். முதலில் இதை அதிரூபன் உணரவில்லை. அவனுக்கு அத்தனை வேலை இருந்தது. கை கடிகார ஆர்டர்கள் எல்லாம் முடித்து முடித்து அனுப்ப வேண்டும்.

வீட்டிற்கு வரவே நேரமானது.. ஆனால் தினமுமே கூட மஞ்சுளா அவனுக்காக காத்திருக்காது போகவும் தான் அவனுக்கு என்னவோபோல் ஆக,  “ம்மா என்னம்மா??!!” என்றான்.

நிவினுக்கு அம்மாவின் முகத்தூக்கல் தெரிந்துதான் இருந்தது. நிவின் கூட சொல்லி சொல்லி பார்த்தான். ஆனால் அதிரூபனும் சரி மஞ்சுளாவும் சரி தனி தனியே அவனிடம் ‘இதுல நீ எதுவும் பேசாத..’ என்று சொல்லிவிட்டனர்.

காரணம் கண்மணி.. அவளுக்கும் அதிரூபனுக்குமான காதல்..

“ம்மா உன்கிட்டதான் பேசுறேன்.. பேசு..” என்று அதிரூபன் சொல்ல,

‘இதை கேட்க இத்தனை நாள்..’ என்று பார்த்தார்.

“எதுன்னாலும் சொன்னாதானே ம்மா தெரியும்… நீயா இப்படி இருந்தா நான் என்ன செய்ய??” என்று அதிரூபன் பின்னேயே போக,

“ஒழுங்கு மரியாதையா அவங்க வீட்ல பேசி காலாகாலத்துல கல்யாணம் பண்ற வழிய பாரு.. கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல..” என்றார் அடக்கப்பட்ட கோவத்தோடு..

‘என்னாச்சு??!’ என்று அதிரூபன் புரியாது பார்க்க, நிவினும் கூட அப்படித்தான் பார்த்தான். அவனிடமும் கூட மஞ்சுளா ஒன்றையும் சொல்லவில்லை. பெரிய மகன் தானே வந்து கேட்பான் என்றிருக்க, அவனோ இரண்டு நாட்கள் கழித்தே வந்து பேச அதுவுமே அவருக்கு அத்திரம் கொடுத்தது தான்.

“என்னடா பாக்குற…??”

“ம்மா நீ சொல்றது எனக்கே புரியலை.. அவனுக்கு எப்படி புரியும்..” என்று நிவின் நடுவில் வர, “உனக்கு என்ன இங்க வேடிக்கை.. போ.. வேலைக்கு போ..” என்று மஞ்சுளா விரட்ட,

“ம்மா வர வர இந்த வீட்ல எனக்கு மரியாதையே இல்லாம போகுது.. சொல்லிட்டேன் ஆமா..” என்று அவனும் பிகு செய்துகொண்டே தான் கிளம்பினான், “டேய் அண்ணா எதுனாலும் பார்த்து பேசு..” என்று அதிரூபனிடம் சொல்லிவிட்டு.

“ம்மா என்கிட்டே எதுனாலும் ப்ரீயா பேச வேண்டியதுதானே..” என்று அதிரூபன் கேட்க,

“ப்ரீயானா எப்படிடா.. ரோட்ல நின்னுட்டு நீயும்.. பால்கனில நின்னுட்டு கண்மணியும் பேசினது போலவா???” என்று மஞ்சுளா ஒரு போடு போட, “ம்மா..!!!” என்றான் அதிர்ந்து.

“லவ் தான் பண்ணி தொலைச்சுக்கோ.. கல்யாணத்தை பண்ணி வைக்கிறோம்னு சொல்லியாச்சு.. அதென்னடா கன்றாவி.. ரோட்ல நின்னுட்டு அப்படி ஒரு பேச்சு.. உன்னை க்ராஸ் பண்ணித்தான் நான் போறேன்.. அதுகூட உனக்கு கண்ணுக்குத் தெரியலை..”

“என்னது நீ போனியா??!!!”  அடுத்த அதிர்ச்சி அவனுக்கு..

“நான் மட்டுமில்ல, பக்கத்து வீட்டு பெரிம்மா, எதிர்வீட்டு இந்திரா மூணு பேரும்தான் போனோம்.. இது ரூபன் தானேன்னு இந்திரா தான் கை காட்டினா.. நீ என்னாடான்னா இளிச்சுட்டே பேசிட்டு இருக்க. கன்றாவி கன்றாவி… அந்த நேரம் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..” என்று மஞ்சுளா முறைக்க,

‘அட கடவுளே.. நான்தான் பாக்கல.. இந்த கண்மணி கூடவா பார்த்திருக்க கூடாது..’ என்று எண்ணியவன் ‘அதுசரி நம்மள மாதிரிதானே அவளும்..’ என்று நினைத்துகொள்ள,

“இங்க நான் பேசிட்டு இருக்கேன்..” என்று அவன் முன்னே கையில் இருந்த கரண்டியை ஒரு போடு போட்டார் மஞ்சுளா..

“ம்மா அது..!!!” என்று அதிரூபன் இழுக்க,

“என் பசங்க தங்கம்.. அது இதுன்னு எல்லாரும் பேசும்படியா இத்தனை நாள் இருந்தது.. இப்போ.. இந்த ஏரியா முழுக்க விஷயம் போயிருக்கும்.. பேசணும்னா இப்படிதான் பேசுறதாடா.. அறிவில்ல.. ரோட்ல நின்னுட்டு..” என்று கடிய, அவனால் சொல்ல முடியுமா?? அத்தனை நேரம் பார்க்கில் இருந்தோம் என்று.

‘வேற வழியில்ல திட்டு வாங்கித்தான் ஆகணும்..’ என்று மஞ்சுளாவைப் பார்க்க, “பக்கத்து வீட்டு பெரிம்மா கேட்கிறாங்க, நம்ம ரூபனா இப்படின்னு.. என்னால ஒண்ணுமே சொல்ல முடியலை..” என்றவர், பின் தொய்ந்து போய் “பெத்தவளா என்னையும் கொஞ்சம் நினைச்சு பாருடா..” என்றார் இறுதியாய்..

“ம்மா… என்னம்மா..” என்று அவரின் அருகே வந்தவன் “சா.. சாரிம்மா..” என்றான் நிஜமாகவே உணர்ந்து..

சில விசயங்கள் வீட்டினில் சொல்ல முடியாது. ஆனாலும் மன்னிப்பு என்பது மனதார கேட்க முடியும். பெற்றவர்கள் நிலையில் இருந்து பார்த்தால், அவர்களின் கோபம் சரிதான்.

“நீ சாரி கேட்கனும்னு நான் கோவப்படல.. புரிஞ்சுக்கிட்டா சரி..” என்ற மஞ்சுளா அதன்பின் இதைப் பற்றி பேசவில்லை. ஆனால் அதிரூபனுக்குமே இதற்கெல்லாம் சீக்கிரம் ஒரு முடிவு வராதா என்றுதான் இருந்தது.

இதனை அதிரூபன் கண்மணியிடமும் சொல்லிவிட, அவளுக்கோ மிக மிக சங்கடமாய் போனது.. அந்த நேரத்தில் மஞ்சுளாவிற்கு  எப்படி இருந்திருக்கும் என்பது அவளால் புரிந்துகொள்ள முடியாது போகுமா என்ன..

தீபா கூட கேட்டாள் தான் ‘ஏன் இப்படி ஜவ்வு மிட்டாயா இழுக்கணும்..’ என்று.

இதற்குமேலும் தாமதிக்க கூடாது என்றெண்ணி ஒருநேரம் பார்த்து எப்படியோ சியாமளாவிடம் சொல்லியேவிட்டாள் கண்மணி.. சொல்லும் போது அவளுக்கு அப்படியொரு நடுக்கம் இருந்ததுதான் ஆனாலும் கூட சொல்லிய பின்னே ஓர் நிம்மதியும் இருந்தது..

சியமளாவோ கண்மணி சொன்னதை எல்லாம் நம்ப முடியாதுதான் அமர்ந்திருந்தார். கண் முன்னே எப்போதுமே வீட்டினில் இருப்பவள். பொத்தி பொத்தி வளர்த்த மகள்.. தங்களுக்குத் தெரியாமல்.. அதுவும் தானே கூட மகளுக்கு அவன் பொறுத்தமாய் இருப்பான் என்று சொல்லிய போது கூட மௌனமாய் இருந்தவள், இப்போது வாய் திறக்கிறாள் என்றால்??

ஒருவித திகைத்த, நீயா கண்மணி என்ற பார்வை தான் அவளைப் பார்த்தார்..

“ம்மா…” என்று கண்மணி சொல்ல, அவரோ வாய் திறக்கவில்லை.

வீட்டினில் அவரும் கண்மணி மட்டும் இருக்க, இருவருக்கும் இடையில் இருக்கும் மௌனம் என்பது கண்மணியை வெகுவாய் பாதிக்க, “ம்மா ப்ளீஸ் பேசும்மா..” என்றாள் பின்னே போய்..

சியாமளாவிற்கு மனதில் ஒருவழி, இரண்டு பிள்ளைகளையும் தான் சரியாய் கவனிக்கவில்லையோ என்ற எண்ணம்.. அதிலும் கண்மணி.. இங்கேயே தானே இருக்கிறாள்.. தான் என்ன அவளை பார்த்துகொண்டோம் என்று அவருக்கு அவர்மீதே கோபம் வந்தது.

கண்மணியோ பரிதவித்துப் போய் நிற்க, “இவ்வளோதானா வேறேதும் இருக்கா??” என்றார் விரக்தியாய்..

“ம்மா ப்ளீஸ்.. எ.. என்ன தப்பா மட்டும் நினைச்சிடாதம்மா..” என்று கண்மணி அவரின் கைகளை பிடித்துக்கொள்ள, அவளின் கண்களில் இருந்தோ கண்ணீர் வழியத் தொடங்கியது.

மகளின் முகத்தினைப் பார்தவர் என்ன நினைத்தாரோ “அப்பாக்கிட்ட பேசுறேன்..” என்றுவிட்டு அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

விஷயமறிந்த கண்ணன் கூட “ஏன் கண்ஸ்??” என்று கேட்க,        

“இதுக்குமேல என்னால எந்த குழப்பமும் வேணாமே.. உன்னோட கல்யாணம் நான் மட்டுமில்ல வீட்ல இருக்கவங்களும் கூட சந்தோசமா என்ஜாய் செய்யணும்னு நினைக்கிறோம் ண்ணா.. உன் கல்யாணத்துக்கு அப்புறமும் கூட, தீப்ஸ் இங்க வர்றபோ எந்த குழப்பம் வருத்தம் எல்லாம் இல்லாம சந்தோசமா எல்லாமே நடக்கனும்னு நினைக்கிறேன்..” என்று அவனிடம் சொல்லி அவனின் வாயை அடைத்துவிட்டாள்.

வீட்டினில் சொன்னதை அதிரூபனிடமும் கண்மணி சொல்லிட “நான் வந்து பேசவா..” என்றான்

“இல்.. இல்ல… இப்போவேணாம்.. அப்பாவே சொல்லட்டுமே..” என, அவனுக்குமே அது சரியாய் பட்டது. 

அதோ இதொவென நாட்கள் நகர்ந்திட, இன்னும் கண்ணன் தீபா திருமணத்திற்கு ஐந்து நாட்களே இருந்தது. கடைசி கட்ட திருமண வேலைகள் கூட முடிந்திருந்தது. கண்மணிக்கு இப்போது மனதினில் எவ்வித பாரமும் இல்லை என்றாலும், அப்பா தன்னோடு முன்போல பேசாது இருப்பது அத்துனை சங்கடம் கொடுத்தது.

சியாமளா முதலில் கோபித்தவர் பின் ஓரளவு சமாதானம் ஆகிப்போனார். ஆனால் எப்போதுமே பெண் பிள்ளைகளுக்கு அப்பா தானே ஸ்பெசல். அதுபோலவே தானே அப்பாக்களுக்கும். ஆகையால் கண்மணியின் காதல் சடகோபனுக்கும், சடகோபனின் பாராமுகம் கண்மணிக்கும் மன சுணக்கத்தை கொடுக்காது இருக்கவில்லை.

சியாமளா மெதுவாய் அவரிடம் கண்மணி அதிரூபன் காதல் பற்றி சொல்ல, அதனை கேட்டவரோ  ‘இப்படி பண்ணிட்டாளே சியாமி..’ என்று மனைவியிடமே புலம்பினார்..

சியாமளா யாருக்குச் சொல்வார்?? யாருக்குத்தான் சொல்ல முடியும்??

‘என்னென்னவோ நினைச்சிருந்தேன்.. கண்ணன் சொன்னப்போ கூட எனக்கு அது அவ்வளோ பெரிய பாதிப்பா தெரியலை.. ஆ.. ஆனா.. இது..’ என்றவர் வெகுவாய் வருந்திப் போனார்.

கண்மணியின் முகம் பார்ப்பதை கூட அவர் தவிர்க, கண்ணன் கூட “ப்பா கண்மணி பாவம் ப்பா..” என்றான் தங்கையை சார்ந்து பேசி..

கல்யாண வீடு, அதற்கான கலையை இழந்திருந்தாலும், கண்மணி வெளியில் இயல்பாய் இருப்பதுபோல காட்டிகொண்டாலும், தந்தையை காணும்போதெல்லாம் அவளின் கண்கள் கலங்குவது அனைவரும் கவனித்துகொண்டு தான் இருந்தனர்.

கண்ணன் சொல்ல “உன்னோட வேலையை மட்டும் பாரு கண்ணா..” என்றுவிட்டார்..

“ம்மா அப்பாவ ஏதாவது பேச சொல்லும்மா.. அட்லீஸ்ட் திட்டவாது சொல்லேன்..” என்று சியாமளாவிடம் போய் நிற்க, “அது செய்ய முடிஞ்சிருந்தா செஞ்சிருக்கமாட்டாரா???” என்று சியாமளா சொல்ல, நொறுங்கித்தான் போனாள் கண்மணி..

அவளின் குமுறல்கள் எல்லாம் அப்படியே அதிரூபனிடம் பகிர, அவனோ “நான் பேசுறேன் கண்மணி..” என்றான் திண்ணமாய்..

“நீங்களா??!!!”

“எஸ்.. இதுக்குமேல சும்மா இருக்கிறது தப்பு.. உங்க அப்பாவை போர்ஸ் பண்ண போறதில்ல.. பட்.. நானுமே வந்து ஒன்ஸ் பேசுறதுதான் மரியாதை..”

“ஆனா??!!!!”

“உன்னோட தயக்கம் எனக்கு புரியுது கண்மணி.. நீ சொல்றத வச்சு நான் புரிஞ்ச அளவு உங்கப்பா என்னை மரியாதை குறைவா எல்லாம் பேசமாட்டார்.. அது உனக்கும் தெரியும்.. சோ டோன்ட் வொர்ரி.. நான் பார்த்துக்கிறேன்.. நீ இப்படி கலங்கிப் போய் பேசாத.. சங்கடமா இருக்கு..” என்றவன்  அடுத்து கண்ணனுக்கு அழைத்தான்..

“உங்க அப்பாவோட பேசணும்.. ஏற்பாடு பண்ணுங்க..” என்று..   

அவனோ “இப்போவேவா?? என்ன திடீர்னு..” என்று கேட்க,

“இதுக்குமேல என்னால கண்மணி வருத்தப்படடுறது சகிக்க முடியலை.. சோ ப்ளீஸ்..” என்றான் இதுதான் என் முடிவு என்பதாய்..

“வீட்டுக்கு வருவீங்களா???”

“இல்ல.. அது எங்க வீட்டு பெரியவங்களோட வந்தாதான் முறை.. வெளிய எங்கயாது..”

“ம்ம்ம்ம் அப்பா நாளைக்கு பேங்க் போவார்.. அப்போ நீங்க மீட் பண்ணிக்க முடியுமா??” என்றான் கண்ணன் இன்னமுமே யோசனையாய்.

“கண்டிப்பா.. எந்த பேங்க்??” என்று அதிரூபன் கேட்க, கண்ணனும் சொல்ல, “தேங்க்ஸ் கண்ணன்..” என்று அழைப்பை துண்டித்தவன், சடகோபனோடு என்ன பேச வேண்டும் எப்படி பேசவேண்டும் என்று மனதினில் ஒத்திகைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

நிவின் அவன் அறைக்கு வர, அதிரூபனின் சிந்தனையை பார்த்து “ஹலோ ப்ரோ.. என்ன எந்த கோட்டை பிடிக்க??” என்று கேலி செய்ய,

“எல்லாம் வருங்கால மாமனார் கோட்டையை பிடிக்கத்தான்…” என்று இவனும் சொல்ல,

“ஓ…!!! தைரியமா போ.. ரொம்ப பிகு பண்ணார்னா சடார்னு கால்ல விழுந்துடு.. தப்பில்ல..” என்று நிவின் சொல்ல “டேய்…” என்று அதிரூபன் பல்லைக் கடித்தான்..

“சரி சரி.. விடு… வேணும்னா எனக்கும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போ..” என்று மேலும் அவனிடம் பேசி வசவுகளை வாங்கிக்கொண்டே நிவின் செல்ல, மறுநாளைய பொழுது ஒருவித படபடப்போடே அதிரூபனுக்கு விடிந்தது.

அவனுக்கும் அந்த பேங்கில் ஒருவேளை இருந்ததுதான். இன்னொரு நாள் போகலாம் என்று இருந்தான், ஆனால் இன்றே அங்கே கிளம்ப, சடகோபன் வந்தபாடில்லை. அதிரூபன் அவனின் வேலையை முடித்துக்கொண்டு காத்திருக்க, சடகோபன் அப்போதுதான் வந்தவர், கேஷ் கவுண்டரில் போய் நிற்க, அவருக்காக காத்திருந்தான்.

‘கடவுளே.. எல்லாத்தையும் நல்லபடியா நடத்திக்கோடு..’ இதுமட்டுமே அவனின் எண்ணமாக இருந்தது..

ஒரு பத்து நிமிடத்தில் சடகோபன் திரும்பி வந்து, அவனை கடந்து செல்ல “சார்…” என்றுதான் அழைத்து நிறுத்தினான் அவரை..      

            

    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

          

 

          

Advertisement