Advertisement

அவளின் குரலே சொல்லியது அவளின் மன உணர்வுகளை, இப்படியொரு சூழலை கையாள்வது கடினம்தான். ஆனால் என்ன செய்ய.. கடந்து வந்துதானே ஆகவேண்டும். அதிரூபனுக்கு இதெல்லாம் தெரியாமலும் இல்லை. அவன் வீட்டினில் மஞ்சுளா கொஞ்சம் திட்டுவார் தான் ஆனால் வேறெதுவும் பெரிதாய் இல்லை..

அவனின் எண்ணமெல்லாம் இப்போது சடகோபன் மட்டுமே, அதே எண்ணத்தில்  “உன் அண்ணன் என்ன சொல்றாங்க???”  என்று கேட்க, அவளோ கண்ணனின் நிலையை சொல்ல,

“ம்ம்.. நானும் உங்க அப்பாக்காக மட்டும்தான் யோசிக்கிறேன் கண்மணி..” என்றான் அதிரூபனும்.

“எ.. என்ன??”

“அவரோட ஹெல்த் கண்டிசன்… அல்ரெடி முடியாம போச்சு இல்லையா.. இப்போ கண்ணன் கல்யாணம் வேற இருக்கே.. இந்த டைம்ல அவரைப்போட்டு ரொம்ப டென்சன் பண்ண வேணாம் நினைச்சேன்..” என்றவன் “சரி விடு. பாத்துக்கலாம்..” என,

“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..” என்றாள் அழும் குரலில்..

“ஹேய்… ப்ளீஸ்.. நீ இப்படி அழுதா நான் என்ன செய்ய முடியும்.. என்னோட தைரியம் நீதான் ..” என்று அவளை சமாதானம் செய்தவனுக்கு, இன்னமுமே கூட என்ன செய்ய என்று புரிபடவில்லை..

கண்மணியை பெண் கேட்டு போவது தவிர வேறெந்த வழியும் அவனுக்கு இருப்பதாய் தெரியவில்லை. வருண் இதோடு போய்விடுவான் என்றும் சொல்லிட முடியாது இல்லையா.. இந்த நேரம் பார்த்து அவனுக்கு வேலைகள் வேறு நிறைய இருந்தது. முடிக்கவேண்டிய ஆர்டர்கள் வரிசை கட்டி நின்றன.. எல்லாம் போட்டு அவனை அழுத்த, மறுநாள் வரைக்கும் யோசித்தவன், வேறு வழியின்றி மஞ்சுளாவிடம் வந்து பேசினான்.

“ம்மா நீ மாமா அத்தை எல்லாம் கண்மணி வீட்ல பேசுங்க..” என்று அனைத்தையும் சொல்ல,                       

 “டேய் என்ன விளையாடுறியா??? போன வாரம் அண்ணனும் அண்ணியும் வந்து கேட்டதுக்கு நான் சொல்றப்போ பேசுங்கன்னு சொல்லிட்டு இப்போ வந்து உடனே போய் பேசுங்கன்னு சொன்னா இதென்ன கடைல போய் கத்திரிக்காய் வாங்குற சமாச்சாரமா??” என்று மஞ்சுளா முறைக்க,

“ம்மா அவனே டென்சன்ல இருக்கான் ம்மா..” என்றான் நிவின்.

“அப்போ நான் என்ன ரிலாக்ஸா இருக்கேனா என்ன?? ஏதாவது இதுவரைக்கும் நான் சொல்றதை கேட்டிருக்கானாடா?? எப்போவும் அவன் சொல்றதையே சாதிச்சிடுறான்.. நான் சொன்னப்போவே  போய் பேசிருந்தா இந்நேரம் இதெல்லாம் நடந்திருக்குமா சொல்லு??” என்ற மஞ்சுளாவின் கேள்விக்கு இரு மகன்களிடமுமே பதில் இல்லை.

அதிரூபனோ, தலையை இரு கைகளால் பிடித்து அமர்ந்திருந்தான். பிறரை போல வருடக் கணக்கில் காதலிக்கவில்லை.. ஆனால் அவர்களின் பிணைப்பிற்கு குறையாத பிணைப்பு அதிரூபன் கண்மணியிடம் இருந்தது. இருவருமே திருமண வயதில் இருந்ததினாலோ, இல்லை வீட்டினில் ஏற்கவே திருமண பேச்சுக்கள் சென்றுகொண்டு இருந்ததினாலோ தானோ என்னவோ இப்படியான குழப்படிகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டு இருந்ததுவோ என்னவோ..

“முதல்ல தலைல இருந்து கை எடுடா.. உன் தலை அங்கேயே தான் இருக்கும்.. விழுந்துடாது..” என்று மஞ்சுளா சொல்ல, ‘என்னம்மா இது…’ என்பது போல் பார்த்தான் அதிரூபன்.

“பண்றதெல்லாம் பண்ணிட வேண்டியது.. அப்புறம் ஐயோ அம்மான்னு வந்து நிக்க வேண்டியது…”

“ம்மா ப்ளீஸ் எனக்கு வேற வழி தெரியலைம்மா..” என்றவனின் முகம் பார்த்த மஞ்சுளாவோ “மூஞ்சிய இப்படி வைக்காத.. சகிக்கல..” என்று அதற்கும் ஒன்று சொன்னவர், திட்டியபடியே அவரின் அண்ணனுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல,

அவரோ “நாளைக்கு நேர்ல வர்றேன் பேசிப்போம்..” என்றுவிட்டார்..

சொன்னதுபோலவே சுப்பிரமணியும் சாந்தியும் மறுநாள் காலையில் வந்துவிட, அதிரூபன் அப்போதும் ஒருமுறை நடந்தவைகளை விளக்க, மஞ்சுளா இன்னமும் மகனை முறைப்பதை குறைக்கவில்லை..

“அவனும்தான் என்ன செய்வான்..” என்று சாந்தி சொல்ல, “செஞ்சது எல்லாம் இவன்தான் அண்ணி..” என்றார் மஞ்சுளா.

சுப்பிரமணியோ “இப்போ போய் நம்ம நேரா பேசினாலும் சரியா வராதே ரூபன்..” என்றார் தயக்கமாய்..

“இ.. இல்ல மாமா.. வேற வழியில்லை…”

“தெரியுதுடா.. ஆனா இப்போ இருக்க சூழ்நிலைல நம்ம போய் பேசினாலும் உடனே சரின்னும் சொல்ல மாட்டாங்களே..” என்றவர், கொஞ்சம் யோசித்து “அன்னிக்கே விசாரிச்சேன்.. என்னோட வேலை பார்த்தவர் அந்த ஏரியாதான்.. அவரை வச்சு வேணா முதல்ல பேசலாம்.. நேரடியா போய் பேசுறதுவிட இந்த மாதிரி சூழ்நிலைல மத்தியஸ்தர் ஒருத்தர் இருந்தா நல்லது.. தேவையில்லாத பிரச்னை ரெண்டு பக்கமும் வராது பாரு..” என, அதிரூபனுக்கோ தலை வேகமாய் சரி என்று ஆடியது..

வேறு என்ன செய்வது. மகளுக்கு பார்த்த மாப்பிள்ளை ஜெயில் சென்ற செய்தி கேட்டே மருத்துவமனை போனவர், மகள் தனக்கு தானே ஒரு மாப்பிள்ளை பார்த்துகொண்டால் என்று சொன்னால் எப்படித் தாங்குவார்? அதுவும் இந்த சூழலில்.. சுப்பிரமணி சொல்வதுபோல் தான் முயன்று பார்க்க வேண்டும்.. எப்படியாவது கண்ணனின் திருமணம் வரைக்கும் சமாளித்துவிட்டால் போதும் என்று எண்ணினான்..

அப்படித்தான் சடகோபனிடமும் இந்த பேச்சு சென்றது. சுப்பிரமணி கூறிய நபர், அடுத்த இரண்டு நாட்களில் சாதாரணமாய் பேசுவது போல் சடகோபனிடம் பேச்சுக்கொடுக்க, தெரிந்தவர் தானே என்று இவரும் பேசினார்..

“அப்புறம் சடகோபன் சார், கண்மணிக்கு  திரும்ப வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்களா?? ” என்று அவர் கேட்கவும்,

“இல்ல கண்ணன் கல்யாணம் முடியவும் தான்..” என்றான் சடகோபன்..

“ஓ..!! நல்லது.. வரன் பாக்குறப்போ சொல்லுங்க, எனக்கு தெரிஞ்ச குடும்பம்  இருக்கு.. நல்ல பையனும் கூட..” என்று ஆரம்பிக்க, சடகோபனோ வேறு எதோ யோசனையில் இருந்தவர் “அப்படியா யாருங்க??” என்றுவிட்டார்..

இது போதாதா அந்த மனிதருக்கு, அதிரூபன் பற்றிய விபரம் சொல்ல, சடகோபனுக்கோ சியாமளா கண்ணன் சொன்னவைகள் நினைவில் வர, கொஞ்சம் யோசித்தே நின்றிருந்தார்..

“என்ன சார் சமைதியாகிட்டீங்க…”

“ஹா.. ஓ.. ஒண்ணுமில்ல சார்.. நீங்க சொன்னதை பொறுத்து சந்தோசம்தான்.. ஆனா பாருங்க எங்க குடும்பங்கள்ல யாருமே இதுவரைக்கும் பிசினஸ் பண்றவங்களுக்கோ இல்லை இப்படி கடை வச்சு நடத்துறவங்களுக்கோ சம்பந்தம் பண்ணதில்லை… அப்படி கட்டாயமும் இல்லையே.. அதனால கொஞ்சம் பொறுமையாவே போவோமே.. வேற நல்ல இடம், வேலைக்கு போற மாப்பிள்ளை இருந்தா சொல்லுங்க..” என்றவர் நகன்றுவிட, இவ்விசயம் அப்படியே சுப்பிரமணிக்கு செல்ல,

அவரோ “அவங்க பையன் கல்யாணம் முடியட்டும் மஞ்சு.. அடுத்து பேசுவோம்..” என்றுவிட்டு, அதிரூபனிடம் முழு விபரத்தையும் சொல்லிவிட்டார்..

“இதுக்குதான் ரூபன் வேற ஒருத்தரை விட்டு பேச சொன்னேன்.. இதேது நாங்க நேரா போய், அவர் இப்படியொரு பதில் சொல்லிருந்தா மஞ்சுளா அந்த இடத்துலேயே என் மகனுக்கு என்ன குறைச்சல்னு சண்டை போட்டிருப்பா..” என,

அதிரூபனுக்கும் அதுவே தோன்றியது ‘ஏன் எனக்கு என்ன குறைச்சல்..’ என்று.

உண்மையும் அதுதானே. அவனுக்கு என்ன குறை. படித்திருக்கிறான். வெளிநாடு சென்று வேலை பார்த்திருக்கிறான்.. இப்போதோ பத்து பேருக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி அவன்.. பார்க்கவும் நன்றாகவே இருப்பான் நல்ல குடும்பமும் கூட.. அப்படியிருக்கையில் எது குறை??   

சடகோபனின் இந்த பதில் அதிரூபனின் தன் மானத்தை சீண்டியதாகவே பட்டது அவனுக்கு. அவனையும் மீறிய ஒரு கோபம் எழ, அடுத்த நொடி யோசிக்காது அவளுக்கு அழைத்தவன் “நான் உன்கிட்ட பேசணும்..” என்றான் மொட்டையாய்..

“ம்ம் சொல்லுங்க..” என்று அவளும் சொல்ல,

“நேர்ல பேசணும்.. எங்க எப்போன்னு நீயே சொல்லு..” என, அப்போதுதான் அவனின் குரலின் வித்தியாசம் புரிந்தது அவளுக்கு..

“ஏன் என்னாச்சு…” என்றாள் வேகமாய்..

“நான் உங்கிட்ட நேர்ல பேசணும்.. அவ்வளோதான்.. எங்கன்னு நீயே முடிவு பண்ணிக்கோ..” என்று திரும்ப அவன் அதையே சொல்ல,

“இ.. இப்போ என்னால வெளிய வர முடியாதே..” என்றாள் தயக்கமாய்..

“அதெல்லாம் எனக்குத் தெரியாது.. நீ வந்துதான் ஆகணும்.. நான் உன் முகத்தைப் பார்த்து பேசணும்.. நீ வரல.. அடுத்து நான் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது..” என்றவன் போனை வைத்துவிட்டான்..

கண்மணிக்குத் தெரியும்தான் இந்தமாதிரி பேசப் போகிறார்கள் என்று. ஆனால் சம்பந்தமே இல்லாது அதிரூபன் இப்போது கோவிக்க, அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘இப்போ என்ன பண்றது???’ என்ற யோசனை ஒருவித பதற்றத்தோடு மனதினுள்ளே ஓட அதனோடே தான் வேலைகள் செய்துகொண்டு இருந்தாள்.

வீட்டிற்கு வந்த சடகோபனோ, சியாமளாவிடம் இதைப்பற்றி பேச, “நானுமே சொன்னேன்..” என்றார் அவரும்.

சடகோபனோ “நீயே யோசி சியாமி, நான் அவங்களை மட்டம்னு சொல்லலை.. ஆனா இந்த நேரத்துல பேசி முடிச்சா, எல்லாம் என்ன நினைப்பாங்க, கண்மணிக்கு ஏற்கனவே பார்த்தது நின்னதுனால அவசர அவசரமா இப்படி கொடுக்குறாங்கன்னு தானே சொல்வாங்க.. நிதானமா இன்னும் நல்ல இடமா பார்த்து கொடுக்கிறதுல என்ன தப்பு…” என்று அவர் அவரின் நியாயத்தை சொல்ல, கண்மணிக்கு அப்போதுதான் புரிந்தது.. இதான் காரணமா என்று..

வீட்டில் இந்த களேபரங்கள் எல்லாம் ஒருபக்கம் நடந்துகொண்டு இருக்க, கண்ணனின் திருமண வேலைகளும் அதுபாட்டில் ஒருபக்கம் நடந்துகொண்டுதான் இருந்தது. அதன்பொருட்டாய் சடகோபனும் சியாமளாவும் வெளியே சென்றிருக்க, அதிரூபனும் இப்படி சொல்ல, கண்மணி கிளம்பி வந்திருந்தாள்.

அதிரூபனிடம் உடனே இதை சொல்லவும் முயன்றால் ஆனால் அவனோ “நீ வா நேர்ல பேசணும்..” என்று உறுதியாய் சொல்லிவிட்டான்.

இருவரும் அவர்கள் ஏரியாவில் இருக்கும் ஒரு பார்க்கில் தான் சந்தித்துக்கொண்டனர். அதுவும்கூட அதிரூபன் ‘நீ வந்து தான் ஆகணும்.. நான் உன் முகத்தை பார்த்து பேசணும்..’ என்று முடிவாய் சொன்னதினால்தான்.. மனதில் அவளுக்குமே ஏகப்பட்ட கவலைகள், பயங்கள் தான். அதெல்லாம் தாண்டி அதிரூபனின் இக்கோபம் அவளை மிகவும் பாதித்தது.

“என்ன கண்மணி பதில் சொல்லு.. கடை வச்சு நடத்தினா அவ்வளோ மட்டமா??” என்று திரும்ப அதிரூபன் அதையே கேட்க,

“இ.. இல்ல.. அப்பா அப்படி சொல்லலை..” என்றாள் வேகமாய்..

“எப்படி சொன்னாலும் அவர் சொன்னதுக்கு அர்த்தம் அதானே???” என்றவனின் பார்வையில் தெரிந்த உக்கிரம் கண்மணிக்கு மேலும் கலக்கத்தை கொடுக்க,

“ப்ளீஸ்.. கோவம் வேணாமே..” என்றாள் அவனை சரி செய்யும் பொருட்டு..

“கோவமா???!!! இதுக்கு கோவப்படாம.. பின்ன நான் எதுக்கு கோவப்படுறது.. அந்த கடை.. சும்மா வெறும் கடையில்லை.. ஒவ்வொரு நிலைக்கும் முன்னாடி வர நான் எவ்வளோ கஷ்டப்பட்டேன் எனக்குதான் தெரியும்..” என்றான் இன்னும் அடங்கா கோபத்துடன்..

“எ.. எனக்கு புரியுது.. ப.. பட் அப்பாவும் தப்பா சொல்லலை..”

“ஓ..!!! அப்போ வேலைப் பாக்குறவங்கன்னா உசத்தி.. சொந்தமா தொழில் பண்ணா மட்டமா… இது சம்பளம் வாங்குற கை இல்லம்மா.. சம்பளம் கொடுக்குற கை.. மாசா மாசம் பத்து பேருக்கு சம்பளம் கொடுக்கிறதுங்கிறது சின்ன விசயமில்லை.. தெரியுமா??” என்றவனை என்ன சமாதானம் செய்வது என்று கண்மணி பார்த்துகொண்டு நிற்க,

“என்ன பதில் பேசு.. ஒருவார்த்தை பேச முடியலைல உன்னால.. இல்லை எனக்கு ஆறுதலா கூட பேச முடியலைல..” என்று கொஞ்சம் அதட்ட,

“ம்ம்ச் இப்போ என்னை என்னதான் செய்ய சொல்றீங்க??” என்றாள் கண்மணியும் ஒருவித தவிப்போடு..

“ஏன் உனக்கு என்ன செய்றதுன்னு தெரியலையா.. உங்கப்பா வீட்ல அப்படி சொன்னபோ, ஒருவார்த்தை ஏன் ப்பா சொந்த தொழில் பண்ணா தப்பான்னு நீ கேட்டிட்டு இங்க வந்திருந்தா நான் சந்தோசப் பட்டிருப்பேன்..” என்றான் இவனும் பேச்சினை விடாது. 

கண்மணியோ அதிரூபனின் இந்த வார்த்தை தாக்குதலில் வாயடைத்து போய் நிற்க, அவளோ யாருக்கு என்ன சொல்ல முடியும்.. அப்பாவிடம் சென்று அதிரூபனுக்காகவும் பேச முடியாது. இப்போது அதிரூபனிடம் அப்பாவிற்காகவும் பேசமுடியாது. கடைசியில் சண்டை என்னவோ இவர்கள் இருவருக்கும் இடையில்தான்.

“பதில் பேசு கண்மணி..” என்று அதிரூபன் லேசாய் குரலை உயர்த்த,

“எ.. எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை.. நீ.. நீங்க சொல்றதுலயும் தப்பில்லை.. ஆனா அப்பாவும் தப்பா சொல்லலை..” என,

“ஓஹோ..!!! அப்புறம்…” என்றான் நக்கலாய்..

அவனின் இந்த நக்கல் கண்மணிக்கு எரிச்சலைக் கொடுக்க, “ம்ம்ச் இப்போதைக்கு இந்த பேச்சே வேணாம்.. எதுன்னாலும் அண்ணன் கல்யாணம் முடியட்டும்.. அதுவரைக்கும் வீட்ல நான் சமாளிக்கிறேன்..” என்றவளைப் பார்த்து,

“சரி.. எனக்கு இதுக்கு மட்டும் பதில் வேண்டும்..” என்றவன் “கடை வச்சு நடத்தினா மட்டமா??!!” என்றான் திரும்ப,

அவனின் உழைப்பை அங்கே மட்டம் தட்டியதாய் இருந்தது அவனுக்கு. அதன்பொருட்டே இத்தனை பிடிவாதமும் கோபமும்.. கண்மணிக்கோ ‘மறுபடியுமா…’ என்றிருக்க,

“நான் தான் சொல்றேனே..” என்றாள் ஒருவித தவிப்பாய்..

“இந்த கேள்விக்கு இப்போவரைக்கும் நீ பதில் சொல்லவேயில்லை..” என்றவனை பார்த்தவள் “கண்டிப்பா மட்டமில்லை தான்.. நான் அப்படி நினைப்பேனா??” என,

“அப்போ ஏன் உங்கப்பா அப்படி சொன்னாரு..” என்றான் அடுத்து..

அவளுக்கோ ‘ஐயோ.. கடவுளே..’ என்று தோன்ற “அ.. அது அவர் எதோ சொல்லிட்டார் எனக்காக விடக்கூடாதா..??” என,

“அப்.. அப்போ நீ ஏன் எனக்காக அவர்க்கிட்ட அப்போ பேசலை..??” என்று அடுத்துப் போனான்..

கண்மணிக்கு சத்தியமாய் இப்போது ஒன்றும் சொல்ல முடியவில்லை.. அதிரூபன் என்னவோ ஒருவித மன வேதனையில் இப்படி பேசுகிறான் என்பதுமட்டும் புரிய,

“நீங்க இது எதுவுமே நினைக்கவேணாம்.. யார் என்ன சொன்னாலும் நீங்க எனக்கு எப்பவுமே உசத்திதான்.. இதுக்குமேல நம்ம பேசினா கண்டிப்பா நமக்குள்ள சண்டைதான் வரும்.. அது எனக்கு பிடிக்காது.. சோ ப்ளீஸ்.. கொஞ்ச நாள்.. கொஞ்சமே கொஞ்ச நாள் எல்லாமே செட்டில் ஆகட்டும்..” என்றவள்,

அவன் அமைதியாய் இருப்பதை கண்டு “நேரமாச்சு.. கிளம்பலாம்..” என்று சொல்ல,

“நீ போ..” என்றான் வெறுமெனே,

“அப்.. நீங்க??!!”

“எனக்கு வந்துக்க தெரியும்..” என்றவனின் முகத்தில் இன்னமும் அதே பிடிவாதம் தெரிய, இப்போது மேற்கொண்டு பேசினால் சண்டைதான் வருமென்று எண்ணி,

“ம்ம்ம்… ரிலாக்ஸ் ஆகுங்க .. ப்ளீஸ்.. நா.. நான் கிளம்புறேன்..” என்றவள் ஒருமுறை அவன் முகத்தைப் பார்க்க, அவனோ எதுவுமே சொன்னானில்லை.

கண்மணிக்கு நிச்சயமாய் கிளம்பும் எண்ணம் இல்லைதான்.. ஆனால் வேறு என்ன செய்ய. அவனோ பேசாது இருக்கிறான். பேசினால் இப்படி பேசுகிறான். இவள் எத்தனை நேரம் அங்கேயே இருக்க?? முடியாதில்லையா..

“ஹ்ம்ம்…” என்று ஒரு பெருமூச்சு விட்டு, அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்து திரும்ப, இவர்களுக்கு சற்று தள்ளி, இவர்களையே பார்த்தபடி பார்க்கில் இருந்த பெஞ்சில் அமார்ந்திருந்தான் வருண்..

அவனைக் கண்டதுமே, கண்மணி அடுத்த நொடி யோசிக்காது, அதிரூபனின் கரத்தினை வேகமாய் பற்றிக்கொண்டாள்.        

      

Advertisement