Advertisement

தூறல் – 24

“கண்மணி நீ உள்ள போ…” என்று கண்ணனும் சொல்ல, அவளோ சடகோபனை பார்த்தாள்.. போகட்டுமா என்று..

மகளின் பார்வை புரிந்த மனிதரோ ‘போ…’ என்று தலையை ஆட்ட,

வருணோ “கண்மணி ப்ளீஸ்..” என்று அவளின் முன்னே வந்து நின்றவன், “இப்படி எல்லாம் ஆகும்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்லை.. யாரோ பண்ண தப்புக்கு நான் பலிகடா ஆகிட்டேன்.. அதுதான் நிஜம்… இந்த ஒரு ரீசனுக்காக என்னை நீ ரிஜெக்ட் செய்யனுமா???” என்று கைகளை விரித்து கொஞ்சம் பாவமாகவே கேட்டான்.

கண்மணிக்கோ அந்த இடத்தினில் நிற்பதே முள்ளின் மீது நிற்பதாய் இருந்தது. அனைவரும் அவளையே பார்த்துகொண்டு இருக்க, வருணோ அவளின் பதிலுக்காக காத்திருக்க, கண்மணிக்கு நா வறண்டு முகமெல்லாம் வியர்க்கத் தொடங்கியது. பேசாமல் இப்படியே கிளம்பி அதிரூபனிடம் சென்றிடலாமா என்றும், அவனை அழைத்து வர சொல்வோமா என்றும் கூட தோன்ற,

“கண்மணி எதுவும் சொல்ல மாட்டா… எதுன்னாலும் நாங்க எடுக்கிற முடிவுதான்..” என்றான் கண்ணன் உறுதியாக..

“வாழப் போறது கண்மணி தானே…” என்று வருண் கேட்க,

மூர்த்தியோ “சடகோபா.. பிள்ளைங்க வாழ்க்கை விஷயம்.. கொஞ்சம் நிதானமா உக்காந்து பேசி முடிவு பண்ணனும்.. வருண் மேல தப்பிருந்திருந்தா கண்டிப்பா நானே இதுக்கு சம்மதிச்சிருக்க மாட்டேன்.. ஆனா பாவம் அவனும் ரொம்ப பட்டுத்தான்..” என்று சொல்ல,

சடகோபனுக்கோ நண்பரின் பேச்சையும் அந்த நேரத்தில் தட்ட முடியவில்லை.. யாரையும் கடுந்தும் பேச முடியவில்லை.. வீடு தேடி வந்து மன்னிப்பும் கேட்பவர்களிடம் அவர் எப்படி முகம் திருப்ப முடியும். ஒருநொடி அமைதி காத்து பின் “எல்லாம் உக்காருங்க..”  என்றார்..

அவ்வளவு தான்  கண்ணனுக்கும் கண்மணிக்கும் முகம் இருண்டு போனது. சியமளாவோ கணவரின் முகம் பார்க்க, அவரோ “குடிக்க எல்லாருக்கும் ஏதாவது கொண்டு வா சியாமி..” என,

கண்ணனோ “அப்பா..!!!” என்றான் மறுப்பாய்.

“நம்ம வீடு தேடி வந்திருக்காங்க கண்ணா…” என்று சடகோபன் சொல்லவும், கண்மணியோ அடுத்த நொடி அங்கே நிற்கவில்லை..  உள்ளே சென்றுவிட்டாள்..

வருணோ அவள் முகம் திருப்பி போனதையே பார்க்க, சடகோபனோ “சொல்லுங்க…” என்றார் பொதுவாய் அனைவரையும் பார்த்து..

வருண் பேசுவதற்கு முன்னே, அவனின் அப்பா “தப்பு எங்க பேர்லையும் இருக்கு. எங்கனால அப்போ வந்து எதுவும் பேச முடியலை.. கேஸ் அது இதுன்னு அலைச்சல்.. ஆனா வருண் மேல எந்த தப்பும் இல்லை.. அவன் வேலைக்கும் இனி எந்த பாதிப்பும் இல்லை.. உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரனும்னா அவனோட ஆபிஸ்ல கூட வந்து கேளுங்க..” என,

அதற்குள் சியாமளா அனைவர்க்கும் டீ போட்டு எடுத்து வந்துவிட, கண்ணனுக்கோ எரிச்சலாய் வந்தது.

‘இந்த அப்பா.. உக்கார வச்சு விருந்து வைப்பார் போல..’ என்று கடுப்பாய் பார்த்துகொண்டு இருந்தான்.

அங்கே அறையினுள் இருந்த கண்மணியோ படபடப்பாய் அமர்ந்திருந்தாள். உள்ளே இருந்தாலும் அவளின் கவனமெல்லாம் வெளியேதான் இருந்தது. மனதிலோ பலவேறு எண்ணங்கள் ஓட, அதிரூபனுக்கு அழைத்து பேசுவோமா என்று யோசித்துக்கொண்டு இருந்தாள்..

ஆனாலும் கூட மனதினில் ஒரு உறுதி இருந்தது எப்படியும் அப்பா இதற்கு சம்மதிக்கப் போவதில்லை என்று. அப்படியே அவர் எதுவும் சொன்னாலும் கூட அண்ணன் விடமாட்டன் என்றும் தெரியும். இதற்கெல்லாம் மீறி எதுவென்றாலும் அவளும் சும்மா இருக்கப் போவதில்லை..

‘இப்போவே போய் சொல்லிடலாமா..’ என்று யோசித்தவள், ‘இல்லை.. எல்லாரும் போகட்டும்… ஆனா கண்டிப்பா இனியும் வீட்ல சொல்லாம இருக்கக் கூடாது..’ என்ற முடிவிற்கே வந்துவிட்டாள்.  

மனதில் ஒரு முடிவு பிறந்துவிட்டாலும், சொல்லிடவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டாலும் கூட, அதை எப்படிச் சொல்ல ஆரம்பிப்பது என்பதில் ஏகப்பட்ட தயக்கங்கள் இருந்தது.  அதிலும் கண்ணன், சடகோபனின் உடல்நிலை பற்றி சொன்னது வேறு அவளை பாடாய் படுத்தியது.. நிச்சயம் அப்பா அம்மாவிற்கு இது ஒரு அதிர்ச்சியை கொடுக்கும்தான். அதிர்ச்சி மட்டுமல்ல ஏமாற்றமும் தான்..  இது யாருக்குமே இருக்கும்தானே.

அதிலும் சியாமளா ஏற்கனவே இந்த பேச்சை ஆரம்பிக்கும் போதுகூட அமைதியாய் இருந்துவிட்டு இப்போது வருண் வீட்டினர் வந்து பேசவும் இப்படியென்று சொன்னால் கண்டிப்பாய் அப்பா அம்மாவின் மனது நோகும் தான். கண்ணன் விசயத்திலேயே ‘முன்னாடியே சொன்னால் என்ன??’ என்றுதானே கேட்டார்கள்..

ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க அவளுக்கு இதய துடிப்பு அதிகரித்துக்கொண்டே போக, அவளால் இந்த சூழலின் கனத்தை தாங்கிடவே முடியவில்லை. வீட்டினில் பேசும் முன்பும் அதிரூபனோடு பேசவேண்டும் என்றெண்ண, ஏனெனில் அவன் வீட்டிலும் தானே இந்த காதல் கல்யாண களேபரங்கள் எல்லாம் நடந்தேரிக்கொண்டு இருக்கின்றன.

‘கடவுளே எல்லாம் ஒரே நேரத்துலையா வரணும்…’ என்று தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள். சியாமளா உள்ளே வந்தவர் “கண்மணி…” என்றழைக்க,

“ம்மா…” என்றாள் திடுக்கிட்டு.

“நீ ஒன்னும் பயந்துக்காத.. உனக்கு பிடிக்காத எதையும் யாரும் செய்ய மாட்டாங்க..” என்று சியாமளா சொல்ல,

‘அம்மாக்கிட்ட சொல்லிடு கண்மணி…’ என்று அவளின் மனம் உந்தத் தொடங்கியது.

‘ம்மா…’ என்று இதழ்கள் முணுமுணுக்க, பார்வையை மட்டும் அவரின் மேலே பதித்தவளுக்கு, ‘சொல்லிடலாமா???’ என்று தோன்றவும், புதிதாய் ஒரு பயம் வேறு எழ,

“அ.. அவங்க எல்லாம் போயாச்சா??” என்றாள் வார்த்தைகளை தேடி.

“இல்ல.. வா… உன்கிட்ட தான் கேட்கனுமாம்.. எல்லாத்தையும் தாண்டி உன்னோட முடிவுதான் முக்கியம்னு சொல்றாங்க..” என,

“யா.. யாரு…??” என்றாள் திடுக்கிட்டு..

“நீ வா கண்மணி.. இப்படி வந்து உக்காந்து இருக்கிறதுல எந்த பயனுமில்ல.. தைரியமா வந்து உன் மனசுல என்ன தோணுதோ சொல்லிடு..” என்று சியாமளா அவளை அழைக்க, அதற்குள் சடகோபனின் குரலும் கேட்க, இருவருமே எழுந்து போயினர்.

கண்மணி வரவுமே, வருண் எழுந்தவன் “என்னால உன்னோட மைன்ட் செட் புரிஞ்சுக்க முடியுது கண்மணி.. கொஞ்சம் தெளிவா யோசி.. எந்த பயமும் வேணாம்.. உனக்கு சரின்னு எது தோணுதோ அதைமட்டும் சொல்லு.. நான் தப்பானவனா இருந்திருந்தா இப்படி வந்து உங்க எல்லார் முன்னாடியும் நிக்கிற தைரியம் வந்திருக்காது.. எனக்கு எல்லாரோட முடிவையும் விட உன்னோட முடிவு ரொம்பவே முக்கியம்..” என்றவன்,

“போலாம்…” என்றுசொல்லி வெளியே சென்றுவிட்டான். கண்மணியோ அப்படியே நிற்க,

மூர்த்தியோ சடகோபனை அழைத்து தனியாய் பேசிக்கொண்டு இருந்தார்.

ஒருப்பக்கம் வருணைப் பார்க்கவும் பாவமாய் இருக்கிறதுதான். தவறே செய்யாது இத்தனை நாள் அவனும்தானே சிரமம் பட்டான்.. ஆனால் அதற்காக??? அதற்காக இவளால் அவனை திருமணம் செய்துகொள்ள முடியுமா என்ன??

கண்ணனும் சியாமளாவும் சடகோபனோடு நின்றிருக்க, சியாமளா மட்டும் திரும்ப உள்ளே வந்து  “அப்பா யோசிச்சு பதில் சொல்றோம் சொல்லிருக்கார்.. அதுவும் கூட மூர்த்தி அண்ணாக்காக தான். இத்தனை வருஷ பழக்கமில்லையா?? நீ எதுவும் கவலைப்படாத..” என,

“ம்ம்…” என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

“ஹேய்… இங்க பாரு ஏன் இப்போ இப்படி இருக்க.. வாழ்க்கைல நம்ம நினைக்கிறது மட்டும்தான் நடக்குமா என்ன?? ப்ரீயா விடு..” என்று அவளின் முதுகினை வருட,

“ம்மா….” என்றாள் தயங்கி..

“என்ன கண்மணி…” என்றவரின் முகம் பார்த்து அவளுக்கு சத்தியமாய் வார்த்தைகள் வரவேயில்லை ‘நான் காதலிக்கிறேன்..’ என்று சொல்ல,

மகளின் முகத்தில் இருக்கும் தவிப்பு கண்டு “என்ன கண்மணி??” என்று திரும்ப கேட்க,

“அது… அதும்மா…” என்று கண்மணி இழுக்க, “கண்ஸ்…” என்றபடி உள்ளே வந்தான் கண்ணன்..

விட்டால் சொல்லியிருப்பாளோ என்னவோ ஆனால் கண்ணன் வந்துவிட, கொஞ்சமே கொஞ்சம் எட்டிப்பார்த்த ‘சொல்லிடுவோம்..’ என்ற எண்ணமும் அப்படியே வார்த்தைகளோடு சேர்ந்து உள்ளே போய்விட்டது..

“நீ ஏன் இப்போ இப்படி இருக்க.. ப்ரீயா இரு..” என்று அவனும் சொல்ல,  அதற்குள்ளே சடகோபனும் வந்துவிட்டார்.

மகளின் முகம் பார்த்தே அவரால் யூகிக்க முடியாதா என்ன?? ஆனாலும் அவளின் இந்த பதற்றம், ஒருவித பயம், தவிப்பு எல்லாம் கொஞ்சம் அதிகப்படியாகவே சடகோபனுக்குத் தெரிய,

“கண்மணி இங்க வா..” என்றார் அவரின் அருகே..

கண்மணிக்கோ கால்களை நகட்டவே முடியவில்லை. அண்ணனை ஒரு பார்வை பார்த்தவள், மெதுவாய் எட்டு வைத்து அப்பாவிடம் போக, சியாமளா என்ன நினைத்தாரோ

“என்னங்க.. நேரமாச்சு.. எல்லாருமே பசில இருப்போம்.. சாப்பிட்டு பேசலாமே..” என,

சடகோபன் மணிப் பார்த்தவர், “ம்ம் சரி…” என்றுவிட, அதன் பின் வந்த சாப்பாடு நேரமோ அப்படியொரு மௌனத்தில் கழிந்தது.

கண்மணிக்கோ ஒரு வாய் கூட உள்ளே இறங்கவில்லை. ஒரு அவஸ்தையான உணர்வு. கடினப்பட்டே உள்ளே தள்ளும் உணவும் எல்லாம் வெளி வரவே முயன்றது. சடகோபன் ஒவ்வொன்றையும் பார்த்துகொண்டு தான் இருந்தார். மகளுக்கு இதில் விருப்பமில்லை என்று அவருக்கு புரிந்துபோனது.

‘எனக்கு இதுல இஷ்டமில்லப்பா…’ என்று சொன்னால் போதாதா??

அதற்குமேல் யார் அவளை என்ன சொல்ல போகிறார்கள்??

அதைவிட்டு இதென்ன என்னவோபோல் அவள் இருக்க, மகளிடம் பேசவேண்டும் என்று எண்ணியவர், அதை செய்யவும் செய்தார்.

“நீ என்ன நினைக்கிற கண்மணி??” என்று கேட்க,

“எ… எனக்கு… இ.. இது வேணாம்ப்பா..” என்றாள் தரையில் பார்வை வைத்து.

“ம்ம் காரணம்??? முன்ன நடந்ததா ?? இல்லை வேறெதுவுமா??” என்று சடகோபன் அடுத்த கேள்விக்கு போக, 

 கண்ணனோ “அப்பா அவதான் வேணாம் சொல்றாளேப்பா அதோட விடவேண்டியதுதானே…” என்றான் வேகமாய்.

“வேணாம் சொல்றாதான்.. ஆனா அதுக்கு இதுமட்டும் காரணமா இருக்காதுன்னு தோணுது எனக்கு.. பாரு எப்படி வேர்த்து போய் உக்காந்து இருக்கான்னு.. நம்ம மேல தப்பே இல்லாத விசயத்துக்கு மறுப்பு சொல்ல முகத்துல ஏன் இவ்வளோ பதற்றம்..??” என்று சரியாய் கண்மணியின் பாவனைகளை எடைப்போட்டார் சடகோபன்.

சியாமளாவோ “அவங்களை எல்லாம் பார்த்ததும் டென்சன் ஆகிட்டா போல..” என,

“நம்ம இத்தனை பேர் இருக்கோம் ஏன் டென்சன் ஆகணும்?? நம்மளை தாண்டி கண்மணிக்கு என்ன நடந்திட போகுது??” என்றார் பதிலுக்கு சடகோபனும்..

வீட்டில் எப்போதுமே யாரும் அவரின் பேச்சுக்கு பதிலுக்கு பதில் சொல்லி பேசி பழக்கமில்லை, இன்றோ அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் மிகச் சரியாகவே இருக்க, கண்ணனும் சரி சியாமளாவும் சரி மௌனிகளாகவே நிற்கும் நிலை.

கண்மணியோ வருண் கூறிய ‘எனக்கு கண்மணி பதில் தான் முக்கியம்…’ என்ற வார்த்தைகளில் ஆடிப்போய் அமர்ந்திருந்தாள்.

அப்பா அம்மா இருக்கிறார்கள். அண்ணன் இருக்கிறான். இவர்களை தாண்டி யாரும் அவளை ஒன்றும் செய்துவிட முடியாதுதான். ஆனால் காதலில் விழுந்த இதயமாகிற்றே. கண்டதையும் எண்ணி கலங்கியது.

‘சொல்லிடு சொல்லிடு கண்மணி….’ என்று அவளின் மனம் உந்த,

“அப்பா அவளை கொஞ்சம் ப்ரீயா விடுங்கப்பா..” என்றான் கண்ணன்..

“டேய் நான் எதுவுமே கேட்கலைடா… ஏன் இப்படி இருக்கன்னு கேட்டது தப்பா..??”

“விடுங்க.. நீங்க நாளைக்குமேல மூர்த்தி அண்ணாக்கிட்ட பக்குவமா சொல்லிடுங்க..” என்ற சியாமளா “கண்மணி நீ போ போய் தூங்கு..” என்று மகளை அனுப்ப, விட்டால் போதும் என்று கண்மணி எழுந்துவிட, 

சடகோபனோ திரும்ப “கண்மணி…” என்றழைத்தார்.

கண்மணியோ திரும்பிப் பார்க்க “வேற எதுவுமில்லையே??” என்ற அவரின் கேள்வியே அவளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் காட்டியது.

அதிரூபனோடு பேசாது இப்போது வீட்டினில் எதுவும் சொல்லவும் முடியாது என்கையில், “இ.. இல்லைப்பா…” என்றாள் நடுங்கும் குரலில்..

அவளின் மீது ஒரு அழுத்தமான பார்வையை சிந்தியவரோ “ம்ம் சரி போ..” என, கண்மணியும் சென்றுவிட, கண்ணனுக்கு அப்போதுதான் நிம்மதியாய் மூச்சு விடவே முடிந்தது.

கண்மணியோ வேறு எதைப்பற்றியும் சிந்திக்காது, அறையின் கதவை தாளிட்டவள், வேகமாய் அதிரூபனுக்கு அழைக்க, முதலில் அவன் எடுக்கவில்லை. அப்போதுதான் கடையில் இருந்து வந்திருந்தான் போல வீட்டிற்கு.

மஞ்சுலாவோடு பேசிக்கொண்டு இருக்க, திரும்ப திரும்ப கண்மணி விடாது அழைக்க, நிவின் தான் “ண்ணா உன் போன் அலறி அலறி உயிர் விட போகுது போ போய் பாரு..” என்றுசொல்ல,

இவனும் சாவகாசமாகவே வந்து பார்க்க, கண்மணியின் அழைப்பு எனவும் வேகமாய் எடுத்தவன் “என்ன கண்மணி ??” என்றான் அதனினும் வேகமாய்..

அவளோ “எங்க போனீங்க இவ்வளோ நேரம்??” என்று படபடக்க,

“ஏன் என்னாச்சு??” என்றான் யோசனையாய்..

“இங்க எவ்வளோ பிரச்சனை தெரியுமா..?” என்றவள் நடந்ததை எல்லாம் சொல்ல, அதிரூபனுக்கோ தலையே சுத்தியது..

ஒருவேளை இதற்குதான் தன் மனம் ஒருநிலையில் இல்லாது தவித்ததோ என்று அப்போது தோன்ற, இனி அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி அவன் முன் வந்து நின்றது. நினைத்த நேரத்தில் போய் பேசும் விசயமில்லை இது. சாதாரணமாகவே காதல் திருமணம் என்றால் அதில் நிறைய நிறைய விஷயங்கள் பார்த்துப் பண்ண வேண்டியது இருக்கும்.. அதிலும் இப்போதோ இடியாப்ப சிக்கல் எழுந்திருக்க, மிக மிக நிதானமாகவே கையாளும் நிலை.

வருணுக்கு கண்மணியை கொடுக்கப் போவது இல்லை என்றாலும், தங்களின் விசயத்தினை இப்போது சொல்வது சரியாய் இருக்குமா என்ற எண்ணமே அவனுக்கு..

“இ… இப்போ என்ன செய்றது??” என்று கண்மணி கேட்க,

அவள் கேட்ட அந்த நொடி அவனுக்கு நிச்சயமாய் என்ன சொல்லவென்று விளங்கவில்லை. பேசாது வீட்டினில் கேட்டபோதே சரி போய் பேசுங்கள் என்று சொல்லியிருக்கவேண்டுமோ என்று தோன்ற, கண்களை மூடி மனதினை ஒருநிலை படுத்தியவன் “எ.. எனக்கு ஒரு டூ டேஸ் டைம் கொடு கண்மணி..” என,

“ம்ம்..” என்றாள் சுரத்தேயில்லாது.

“இங்கயும் நான் பேசணும் இல்லையா…”

“ம்ம்”

“நீ எதுக்கும் பயந்துக்காத என்ன.. கண்டிப்பா என்னை மீறி எதுவும் நடக்காது சரியா??” என்று அவளை சமாதானம் செய்ய, அதற்கும் “ம்ம்..” மட்டுமே அவளின் பதில்..

Advertisement