அத்தனை இனிய காலைப் பொழுது. அதன் இனிமையை அனுபவிக்க அவகாசமில்லை.. அவசரமாய் கொஞ்சமாய் நெஞ்சில் சேர்த்துக் கொண்டான்.,
ப்ளசன்ட் மார்னிங்.. ப்ரெஷ் பில்டர் காபி போல.. ஸ்கிப் செய்ய மனம் வராதே..!
நேற்றைய வேலையில் கண்கள் கொஞ்சம் எரிச்சலை காண்பிக்க.. தேய்த்துவிட்டுக் கொண்டு நேரத்தைப் பார்த்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
முகத்தில் படிந்த நீர் திவலைகளை துண்டிடம் கொடுத்தபடி வெளியே வர அடுத்து செய்து முடிக்க வேண்டிய வேலைகள் வரிசை கட்டி நின்றிருக்க.. அவன் அலைப்பேசி இசைத்து ஆரம்பித்து வைத்தது.
அழைத்தது அவன் அன்னை அன்னலட்சுமி.
“நேத்து ஏன் கண்ணு பேசல..??”
எடுத்த எடுப்பிலேயே சோர்வாய் ஒலித்தது குரல்.
“நேத்து கொஞ்சம் வேலை அதிகம்மா.. வரவும் லே…” முடித்திருக்கவில்லை மகன்..
“என்ன கண்ணு சொல்ற?? ரொம்ப புழியுறானுங்களா..? நீ ஊருக்கே வந்துரு… போதும் வேலை பாத்தது” உச்சத்தில் அவர் குரல்.
அவன் ஒன்றென்றால் அவர் ஒன்பதை எண்ணிப் பார்த்துவிடுவார். அன்னையை அறிந்தும் வேலை அதிகம், தாமதமாய் வந்தேன் என்றதற்கு தன் தலையில் தட்டிக்கொண்டான்.
“ம்மா அதெல்லாம்..” அவன் மறுமொழியெல்லாம் அவர் செவிகளை சென்றடையவில்லை. அன்னம் ஜெட் வேகத்தில் சென்றிருந்தார்.
அவனுக்கு உதவி புரிய அன்னத்திடம் இருந்து அழைப்பை வாங்கிக்கொண்ட சின்னசாமி,
“தம்பி! நீ கிளம்பு உனக்கு நேரம் ஆவும். உங்க அம்மாகிட்ட சாயங்காலம் பேசிக்கலாம்” என்றிட
“சரிங்கப்பா சாயந்தரம் கூப்பிடுறேன்” என்று வைத்துவிட்டு கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான்.
அதே கணம் கதவு திறக்கப்பட.. காட்சி கொடுத்தாள் ஒரு காரிகை..!
இவன் விழிகளை விலகிடு என கட்டளை இட்டு முடிக்கும் முன்.. தரையில் காத்துகிடந்த பால் பாக்கெட்டை ரிசீவ் செய்தவளின் பார்வை இவனிடம்.
இனி ஒரே அப்பார்ட்மென்ட்.. எதிர்த்த பிளாட்.. இவன் புன்னகை சிந்தவா என்ற சிந்தனையில் இருக்க..
‘எதுக்கு இப்படி பார்க்கிறாங்க..?? ஒரு வேளை அவங்க பால் பாக்கெட்டை எடுத்துட்டோமோ..?’ இவள் சிந்தனை இப்படி.
“பவிம்மா..” அவள் தந்தையின் அழைப்பில் அவனையும் சிந்தனையும் அப்படியே விட்டுச் சென்றாள்.
சின்னாம்பாளையத்தில்…..
“சொன்னாலும் கேக்கமாட்டீங்குறான்.. இவன் கஷ்டப்பட்டு தான் நாம சந்தோசமா இருக்கப்போறமா..? இப்போ நமக்கு என்ன இல்லாம கெடக்குது? கடவுள் கொடுத்ததே போதும். அவன் இத்தனை வருசமா வேலை பார்த்ததே போதும்.. இங்கயே வந்துட சொல்லுங்க”
“எப்படிங்க பொறுமையா இருக்க முடியும்!! நமக்கிருக்கிறது ஒத்தப்புள்ள.. அது அங்க என்ன கஷ்டபடுதோ!! நான் கூட இருந்து பார்த்துக்கறமாதிரி வருமுங்களா?? போனமுறை வந்தப்போவே எலும்பும் தோலுமா இருந்துச்சு.. நீங்களும் எடுத்து சொல்லமாட்டீங்குறீங்க..”
மனையாள் மகனை எண்ணி வருந்துகையில் ஒவ்வொரு முறையும் அவரைத் தேற்றுவது கணவரின் கடமையாய் இருக்க.. அவருக்கும் இன்று பொறுமை பறந்திருக்க..
“இந்தக்காலத்துல பொம்பளப் புள்ளைங்களே தைரியமா வெளிநாட்டுல தங்கி வேலைக்குப் போவுதுங்க.. நீ என்னடானா வெளியூருல இருக்குற உன்ர மவன நெனெச்சு அந்நாடும் விசனப்பட்டுட்டு இருக்க.. அவனென்ன கைக்குழந்தையா நீ பக்கத்துலயே வெச்சு தாங்குறதுக்கு.. நம்மளையே பாத்துக்கற அளவுக்கு அவன் வளர்ந்துட்டான்.
நல்லா படிச்சிருக்கான் நல்ல வேலைல இருக்கான்.. என்ன செய்யணும் செய்யக்கூடாதுங்கற அறிவு அவனுக்கு நம்மளவிடவே நெம்ப இருக்கு அன்னம்.. அவன் இஷ்டப்படி விடேன்.. நீ இங்க இப்படி இருந்தா அவன் அங்க எப்படி நிம்மதியா இருப்பான்.?? உம்புள்ள நிம்மதிய நீயே கெடுத்துருவ போல.. போ போய் உள்ளாரா இருக்குற வேலைய பாரு” என்று குரல் கொடுக்கவும் தான் அமைதியாய் கண்களை துடைத்துக்கொண்டு உள்ளே சென்றார் அன்னம்.
சிங்கார சென்னையில்…
நளபாகத்தில் இறங்கிய ஸ்ரீராம் அவர்களுக்கான பிரேக்பாஸ்டை பாஸ்டாக தயார் செய்து டேபிளில் எடுத்து வைத்துவிட்டு அவன் அறைக்குள் சென்றான்.
நொடிமுள் போல் ஓடிக்கொண்டிருந்தவன் கேஸுவலிலிருந்து பார்மலுக்கு மாறி உணவருந்த வர, வந்தவன் திடுக்கிட்டான்.
சுனாமி வந்து சுழற்றியதுபோல் காலியாக இருந்தது அவன் எடுத்து வைத்துச் சென்றதனைத்தும்.
எல்லாம் அவனோடிருக்கும் மாயக் கண்ணனின் வேலை தான். வெண்ணெய்க்கு பதில் அவனது இட்லியையும் காரச் சட்னியையும் களவாடிவிட, இவன் ராமனாயிற்றே..! என்னசெய்வான்.. மன்னித்தருளிவிட்டான்.
காரச் சட்னியை களவாடியதைக் கூட விட்டுவிடுவான் ஆனால்,
‘கரை சட்னில கரம் காமி’ என்று கமெண்ட் எழுதி டேபிளின் மீது வைத்துவிட்டுச் சென்றதை என்ன செய்தால் தகும்..?
கோபிகேஷ் மேட் இன் கேரளா. அதான் தமிழ் தகதிமிதா.
இப்போது இட்லியோடு எங்கு மாயமாகி இருப்பான் என்றும் ஸ்ரீராமிற்கு தெரியும். ஆதலால் அவனை பிறகு பார்த்துக்கொள்வோம் என்று விட்டுவிட்டு இரண்டு ரொட்டித் துண்டுகளை வேகமாய் டோஸ்ட் செய்து வாயில் போட்டுக்கொண்டு லிப்ட்டை நோக்கி கிளம்பினான்.
மெயில் செக் செய்தபடியே வந்தவன் லிப்டை நெருங்குவதற்குள் அது மூடச் செல்ல..
“ஹேய்ய்ய்.. வெயிட்!!” என்று கூறியபடி நிமிர.. உள்ளிருந்தது அவள் தான்.
எதிர்த்த பிளாட் அம்மாயி..!
‘ஆர்டரா….? போடா..!’ வேண்டுமென்றே விட்டுச் சென்றாள்.
“ஹேய்…!!!!!!!”
‘காலைல பார்த்தா தானே…? அப்புறம் ஏன்..?’
யோசனையோடு இரண்டு இரண்டு படிகளாய் தாவி இறங்கியவன், கீழே வந்து பார்த்தபோது.. அவள் ஸ்கூட்டியில் மெயின் கேட்டை விட்டு வெளியேறுவது தெரிந்தது.
ரொட்டியை உண்ண வைத்தவன் அல்லவா..? முடியாது என இடவலமாய் தலையசைக்க..
கீழே ஜிம்மியோடு வாக்கிங் சென்றுகொண்டிருந்த கிரிஜா மாமியைப் பார்த்த உடனே கோபிக்கு இட்லி சைஸில் பல்ப் எரிந்தது.
“கிரிஜா மாமி.. அவனை கொஞ்சம் நான் வரவரைக்கும் புடிச்சு வைங்கோளேன்! ஆபிசுக்கு நாழியாகிறது.. என் கார் செர்விஸ்க்கு விட்டிருக்கேன் அதான் ஒரு சின்ன உபகாரம் கேட்டேன் இந்த கடன்காரன் ட்ரோப் செய்யமாட்டறான் மாமி.. நண்பனுக்காக இதுகூட செய்யமாட்டானா!! கொஞ்சம் எனக்காக பேசுங்கோளேன்” என்றான் அங்கிருந்தபடியே.
“ஏன்டா அம்பி அந்த புள்ளயாண்டாலேயும் அழைச்சுட்டு போயெண்டா!!” என்று குரல் கொடுத்தார் மாமி.
மல்லிகைப்பூ இட்லி மாமியிடம் அதன் வேலையை காண்பித்த மகிழ்ச்சியில் கோபி இருக்க,
“எனக்கு டைம் ஆச்சு மாமி.. அவன் கேப் புக் பண்ணிக்குவான்” என்றபடி ஸ்ரீராம் எக்ஸலேட்டரை ரைஸ் செய்ய..
“சின்ன உபகாரம் தானேடா ஸ்ரீராமா.. மனுஷாளுக்கு மனுஷா இத கூட செய்யக்கூடாதா!! பெரியவா சொல்லுக்கு மரியாதையே இல்லையா” என மாமி பஞ்சாயத்து வைக்க..
அதற்குமேல் அங்கிருந்து நகரமுடியாது என்றுணர்ந்து கிளப்பிய யமஹாவை ஆப் செய்து நிறுத்திவிட்டு அதன்மேலே சாய்ந்து மார்புக்கு குறுக்காய் கைகட்டியபடி நின்றுவிட்டான் ஸ்ரீராம்.
கைக்கடிகாரத்தைப் பார்க்க, நிமிடங்கள் கடந்தும் நண்பன் வந்தபாடில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு நிமிர, கோபிகேஷ் ஒருகையில் லேப்டாப்பும் மறுகையில் ஷூசும் முதுகில் மாட்டிய அமெரிக்கன் டூரிஸ்டர்ருடன் ஓடிவந்து கொண்டிருந்தான்.
ஸ்ரீராம் நண்பனின் கோலம் சகியாமல் பார்த்திருக்க..
“நேத்து வரும்போது அவசரத்துல என் மேனேஜரோட லேப்டாப் மாத்தி எடுத்துட்டு வந்துட்டேன்.. அவன் வேற காலங்காத்தால போனை போட்டு இப்பவே வேணும்கறான்.. நீ வண்டிய எடு.. நான் போக போக ஒன்னொன்னா போட்டுகிறேன்” என்று துரிதப்படுத்தினான்.
“நீ எல்லாம் ஒரு டீம் லீடர்னு வெளிய சொல்லிறாத”
ஸ்ரீராம் எக்ஸலேட்டரை முறுக்கிய வேகத்தில்.. மேலும் பேச ஆரம்பித்த தன் வாய்க்கு வேகத்தடை போட்டுக்கொண்டான் கோபி.
சிறிது நேரம் சுற்றிலும் வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்த கோபிகேஷ் மெல்ல தன் குரல் வளத்தை வெளிக்காண்பிக்க ஆரம்பித்தான்.
“நண்பன் போட்ட சோறு.. தினமும் திண்பேன் பாரு.. நட்பைக் கூட நான்வெஜ் போல எண்ணுவேன்ன்ன்ன்…”
எதை எதோடு ஒப்பிடுகிறது இந்த எருமை என நினைத்த ஸ்ரீராம்
“காரச் சட்னி எப்படி இருந்தது??” என்றான் காரமாய்.
அவன் தொனியை கவனிக்காது
“எனக்கு காரம் கொஞ்சம் பத்தலை.. பட் மாமி லவ்ஸ் இட்” என்று ஒரு ஃப்லோவில் சொல்லிவிட்டு சைட் மிரரில் நண்பன் முகம் காண, அவனோ முகத்தை கடுகடுவென வைத்திருந்தான்.
‘ஸ்.. இவன் சாப்பிடல போலவே! இது தெரியாம மொத்தமா மாமிக்கு கொடுத்துட்டோமே.. சரி சமாளிப்போம்’
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ நீ கேள்விபட்டதில்ல??” என தமிழ் ஆர்வத்தை அங்கு காண்பிக்க,
ஸ்ரீராம் மிருதனாய் மாறிக்கொண்டிருப்பது தெரிந்தது அத்தோடு வெண்புறாவை பறக்கவிட்டு அமைதி காத்துக்கொண்டான் கோபி.
சில நிமிடங்களில் அவன் அலுவலகம் வந்திருந்தது. வண்டியை நிறுத்தியப்பினும் அவன் இறங்காது யோசனையில் இருக்க..
“ப்ச்.. இறங்கறயா இல்லையா” என்ற ஸ்ரீராமின் குரலில், இறங்கி ஓட்டம் எடுத்திருந்தான்.
அவனது செய்கையில் அதரங்களில் தோன்றிய கீற்றுப் புன்னகையுடன் இடவலமாய் தலையசைத்து தனது அலுவலகத்தை நோக்கி வண்டியைக் கிளப்பினான் ஸ்ரீராம்.
பிரதான சாலையிலிருந்து கிளை சாலைக்கு பிரியும் ஒரு திருப்பத்தில் அவன் வண்டியைத் திருப்ப.. அங்கு எதோ கூட்டம் கூடியிருந்தது. அதனால் வாகனங்கள் செல்ல இயலாது போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.
“ப்ச்.. இது வேறயா” என வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு அங்கு சென்று பார்த்தான்.
மார்கெட்டிற்கு வந்தது போன்று சத்தம்…
“ஏம்மா பார்த்து வரமாட்டே நேரா லாரிக்குள்ள வந்து விழற நான் பிரேக் போடாம இருந்திருந்தா என்ன ஆவுறது” என்று லாரி டிரைவர் கத்திக்கொண்டிருக்க..
யாரிடம் குரல் உயர்த்துகிறார் என்று அவன் பார்வையைத் திருப்பியபோது கூட்டத்தின் மையத்தில் தென்பட்டாள் அவள்.