விஜய் அவனது பயிற்சியில் சென்று சேர்ந்து விட்டான். தாமரை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வந்துக் கொண்டிருந்தாள். தேவகி , குழந்தைக்கு ஒன்றரை மாதம் இருக்கும் போது , அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார். அங்கு அழைத்துப் போவதாக கூறியும் தில்லை வர மாட்டேன் என்று விட்டாள். வேறு வழியில்லாது ஆயிரம் அறிவுரைகள் கூறியவர் ,
“பாப்பா பச்ச உடம்பு .. செண்பாட்ட சொல்லியிருக்க பேறுகால மருந்து எல்லாம் இன்னும் ரெண்டு மாசத்துக்காவது சாப்பிடணும் சரியா.. அப்புறம்… அப்புறம் … ” எனத் தயங்கியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்ந்தவள் ,
‘ம்மா நீ கிளம்பணும்னு முடிவு பண்ணிட்ட .. அதனால இனி என்னையப் பத்தின கவலைய விட்டுறு… நான் பார்த்துக்கிறேன்.” என்று விட்டாள். “நான் பாட்டுக்கு தாமரைக் கூட இருந்தேன்… புருஷன் கூட இரு இருனு அனுப்பி வச்ச..மாமா ஓவர் நைட்ல சொர்க்கம் இதுதான் காமிச்சுக் கொடுத்துட்டு கிளம்பிட்டாரு…சரி மாமா எப்ப வருவாங்கனு எதிர்பார்த்து இருந்தா , தள்ளியிரு தள்ளியிருங்கிறது … அப்புறம் அப்படி இப்படிங்கிறது… இப்ப இந்த மாமா என்னனா பிட் பிட்டா முத்தம் கொடுத்து என்னைய டென்ஷனாக்குறாரு….” என தனக்குள் புலம்பிக் கொண்டாள்.
தேவகி கிளம்பியதும் , அவளுடைய மற்றும் குழந்தையுடைய பொருட்கள் எல்லாம் ஆதவனறைக்கு வந்தது. குழந்தையோடு தாமரை அறையினுள் படுக்க வந்த தில்லையை,
“இங்க பார் திலோ… சும்மா அது இதுனு எதையாவது சொல்லாத .எனக்கும் எல்லா விவரமும் தெரியும் , நல்ல பிள்ளையா அண்ணா ரூம்ல போய் படுத்துக்கோ..” என தில்லையை ஆதவனறைக்கு அழைத்துப் போக ..
“என்ன உனக்கு எல்லா விவரமும் தெரியுமா… நான் தான் விவரமில்லாம லூசு மாதிரி சுத்திட்டு இருக்கேனா…” என்றவளைப் பார்த்து சிரித்த தாமரை..
” நான் என்ன சொன்னா நீ என்ன சொல்லுற .. உன் வயசு தானடி எனக்கு … நீ குழந்தையே பெத்துக்கிட்ட.. நீ அண்ணன எந்தளவுக்கு விரும்புறனு எனக்குத் தெரியும்… அஃப்கோர்ஸ் எங்கண்ணாக் கூட உங்க ரெண்டு பேர் மேலயும் உயிரையே வச்சுருக்கார் தெரியுமா.. உன் டெலிவரி அப்ப அண்ணன் பட்ட கஷ்டம் பார்த்த எங்களுக்குத்தான் தெரியும்.. கல்யாணம் ஆனதும் ரொம்ப நாள் பிரிஞ்சே இருந்தீங்க… அண்ணன் வந்த பிறகும் அப்படித்தான்… அண்ணன் காலையில கிளம்பினா நைட்டு தான் வீட்டுக்கு வராங்க… சாப்பிடுற நேரம் தவிர உங்க ரெண்டு பேரையும் ஒன்னாவே பார்க்க முடியுறது இல்ல இனியும் அப்படி இருக்க வேண்டாம் திலோ … உங்க ரெண்டு பேருக்கும் தனிமையே கிடைக்கலங்கிற ஃபீல் எனக்கு..” என்ற தாமரையை வாய் பிளந்து தான் பார்த்துக் கொண்டிருந்தாள் தில்லைநாயகி.
” அடிப்பாவி படிப்பத் தவிர எதுவுமே தெரியாதுனு நினைச்சா .இவளுக்கு எனக்கு மேல தெரியுதே.. ஒரு வேளை டாக்டருக்கு படிக்கிறதால இவ்வளவு பேசுறாளோ..” என நினைத்துக் கொண்டுப் பார்த்தவளின் முன் கைகளை ஆட்டிய தாமரை..
“என்னடி யோசிக்கிற … ஒரு வருஷமா வெளில போய்ட்டு வந்துட்டு இருக்கிறேன். பலதரப்பட்ட மக்களை பார்க்கிறேன்… நிறைய புத்தக படிப்பும் இருக்கு ,அனுபவ படிப்பும் இருக்கு.. அதனால நீயும் அண்ணனுமா சேர்ந்து இருந்து என் செல்லக் குட்டிக்கு நல்ல அப்பா அம்மா வா இருக்கிறது எப்படினு யோசிங்க…. கூடவே உன் படிப்பும் … தேவா அத்தான் சொல்லிட்டு இருந்தாரு இன்னும் ரெண்டு மாசத்துல உனக்கும் எக்ஸாம் இருக்கும்னு.. குட்டிய கவனிக்கிற நேரம் போக மீதி நேரங்கள்ல படி.. சரியா…” என்றவள்,
“குட்டிப் பையன் தூங்கும் போதே நீயும் தூங்கிரு .. அண்ணன் வர இன்னும் நேரமிருக்கு.. குட்டிய சமாளிக்க கஷ்டமாயிருந்தா அவர் அழற சத்தத்துக்கே நான் ஓடி வந்துருவேன்.. நீ கூப்பிடணும்னே அவசியமில்ல ..குட் நைட்… டி… ” என்றவள் கதவை சாத்திவிட்டுச் சென்று விட்டாள்.
அன்று சற்று தாமதமாகவே வீடு வந்தவன் , கீழே இருக்கும் அறைக்குச் செல்ல … அது காலியாக இருக்கவும் , தங்கை அறையில் மனைவியும் குழந்தையும் இருப்பார்கள் என்ற நினைவில் தான் கதவையே திறந்தது. ஆனால் மெல்லிய இருளில் இருவரின் தரிசனம் கிடைக்கவும் அப்படியொரு நிம்மதி … அவர்களது உறக்கம் கலையாமல் குளித்து உடை மாற்றி வந்து தில்லையின் அருகில் வந்து அவளது நெற்றியில் கைவைத்து விட்டு , மகனையும் தட்டிக் கொடுத்து விட்டு உறங்கினான்.
அதிகாலை குழந்தையின் அழுகைச் சத்தத்தில் விழிப்பு வந்த தில்லைக்கு எழவே சிரமம்தான். கணவனின் கைகளுக்குள் அல்லவா படுத்திருந்தாள்.ஆதவன் நல்ல உறக்கத்தில் இருந்தான். தில்லைக்கும் எழவே விருப்பமில்லைதான். ஆனாலும் வெட்கத்துடன் அவனது கைகளை விலக்கி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்து விட்டாள்.
அவளது வருகைக்காக காத்திருந்தது போல் , தாமரையும் தில்லைக்கு குடிக்க எடுத்துக் கொண்டு வந்தாள். மொத்தத்தில் தோழிகள் இருவருமே ஒருவரை ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு தான் கவனித்துக் கொண்டனர்.
ஒரு ஞாயிறு மாலை ஆதவனுக்கு வீட்டிற்கு அழைத்திருந்தான் விஜய். தொலைப்பேசி அழைப்பின் சத்தத்தை வைத்தே அது தொலைதூர அழைப்பு என்பதை அறிந்து அந்தப் புறம் ஏதோ வேலையிருப்பது போல் ஆதவனிடம் யார் பேசுகிறார் என்பதை உணர்ந்த தாமரை மறுநாள் டெலிபோன் பூத் செல்ல , சரியான நேரத்தில் அழைத்து விட்டான். எடுத்து காதில் வைத்தவளுக்கு எப்போதும் போல் பேச்சே வரவில்லை.
அவன் கேட்டதற்கு எல்லாம் ம்.. ம்ஹூம் என்ற பதில் மட்டுமே… இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வெள்ளிக்கிழமைகளில் கிடைப்பது போல் கடிதம் அனுப்புகிறேன் என்று விட்டான். நாட்களும் வேகமாக ஓடியது.ஆதவன் தொழில் விரிவாக்கம் செய்ய அடிக்கடி வெளியூர் செல்ல நேர்ந்தது. இப்போதெல்லாம் ஆதவன் வரும் வரை காத்திருந்து , அவனுடன் குழந்தையை மையமாக வைத்து பேசி , உணவுப் பரிமாறி விட்டுத்தான் தில்லை அறைக்கு வருவதே ..
இருவருமே காதல் பார்வைகளை பரிமாறி மனதுக்குள் காதலை வளர்த்து மனதில் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனரே தவிர உடல் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இருவரையும் ஏதோ ஒன்று தடுத்து வைத்திருந்தது.
அடுத்த மாதம் மீனாட்சிக்கு இராமேஸ்வரம் சென்று நீத்தார் கடமைகளைச் செய்து விட்டு வந்து மூன்று நாட்களில் மிகச் சிறப்பாக பெயர் சூட்டு விழா ஏற்பாடு செய்ய தேதி முடிவு செய்யப்படவும் தாமரைக்கு முதலில் அதனை விஜயிற்கு அறிவித்துவிடும் ஆசை வந்தது. அந்த வார வெள்ளிக்கிழமை பூக்கடைக்குச் செல்ல , அவனது கடிதம் தாமரை செல்வி பெயரில் அங்கு இருக்கவும் எடுத்துக் கொண்டவளுக்கு அதனைப் பிரித்துப் படிக்க அத்தனை தடுமாற்றம் . எடுத்துக் கொண்டு கல்லூரி வளாகம் சென்று விட்டாள்.
அழகான ஆங்கிலத்தில் சிறிதும் விரசமில்லாமல் , அவளை நினைத்து உருகுவதாக ஒரு காதல் கடிதம். கடைசியாக அழகிய தமிழில் அவளுக்காக இரு வரிகள் “காத்திரு… உன் கரம் பிடிக்க வருவேன்” என… கண்களில் ஒத்திக் கொண்டவளின் கண்ணீர் அதில் பட … விஜயலெட்சுமி அருகில் வருவது தெரியவும் எடுத்து புத்தகத்தில் வைத்துக் கொண்டாள்.
மீண்டும் ஒரு திங்களன்று அவனது தொலைப்பேசி அழைப்புக்காக அங்கு வர … சரியான நேரத்தில் அழைத்தவனுக்கு தகவல் தரும் விதமாக பூக்கார அம்மாவிடம் தேதியைக் குறிப்பிட்டு , ” லெட்சுமி அம்மா எங்கண்ணன் பையன் பெயர் சூட்டு விழாவுக்கு கட்டாயம் வரணும்…” எனவும் அவர், “உங்க ஊராச்சே சாமி… ” என எப்படி வருவது என புலம்ப ஆரம்பிக்க … அவளுக்கான பதில் விஜயிடம் இருந்து வந்தது.
“உனக்காக வரப் பார்ப்பேன்…” என்று விட்டான். பத்திரிக்கைகள் தயாராகி வர.. ஆதவன் சார்பாக ..தேவராஜன் சார்பாக என ஒவ்வொன்றும் விஜயை சென்று அடைந்தாலும் ,தாமரையின் அழகிய கையெழுத்தில் முதல் பத்திரிக்கையாக பயிற்சி நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. தன் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்பவளுக்காகவே கிளம்புவதற்கான முயற்சிகளில் இறங்கினான் விஜய்.
நாளும் பொழுதும் வேகமாகச் சென்ற ஒரு அதிகாலை வேளையில் ஆதவனும் தில்லையும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். ஏன் குழந்தையும் கூட மூன்று மாதத்தை நிறைவு செய்ய இருப்பதால் இரவில் தில்லைக்கு அதிகம் தொந்திரவு தராமல் நல்ல உறக்கத்தில் இருந்தது. கதவு மெல்ல தட்டப்படும் சத்தம் கேட்கவும் ஆதவனுக்குத் தான் விழிப்பு வந்தது. தில்லையோ நன்கு நெருங்கி அவன் மேல் கைப்போட்டு படுத்திருந்தாள்.
ஆதவனுக்கு உடனே எழுந்திருக்க தோணவில்லை. .. ஆனாலும் கதவு தட்டப்படுகிறதே.. மனைவியின் நெற்றியில் இதமாக இதழ் பதித்து அவள் கரத்தை விலக்கி விட்டு எழுந்து கதவை திறக்க , தாமரை தான் நின்றுக் கொண்டிருந்தாள். தாமரையாக இப்படி கதவைத் தட்டியதில்லை என்பதால் பதற்றத்துடன் , “என்னம்மா..” என்றவனிடம் புன்னகையுடன் , “அண்ணா… எங்கே திலோ அவளை எழுப்புங்க… ” என்ற போதே தில்லையும் பேச்சு சத்தம் கேட்டு எழுந்து வந்திருந்தாள்.
இருவரையும் ஒன்றாக கண்டதும் ,இருவரது கரங்களையும் ஒன்றாகப் பிடித்துக் கொண்டவள் , “இனிய திருமண நாள் வாழ்த்துகள் அண்ணா அன்ட் என் அண்ணியே … இல்லை மதினி ” என புன்னகைத்தவள் அருகில் மேசையில் வைத்திருந்த வட்ட வடிவிலான கேக் தட்டைக் கொடுத்து ,
” உனக்குப் பிடிச்ச ஃபிளேவர் திலோ …நைட் நானே செய்தது. இந்தா இது அம்மா அவங்க மருமகளுக்கு வாங்கி வச்ச புடவை… ” என்றவள் , “ரெண்டு பேரும் ஒன்னா நில்லுங்க..” என்றாள்.இருவருக்குமே அன்றைய நாள் நியாபகத்தில் கிடையாது. ஒரு இக்கட்டான சூழலில் நடந்த திருமணம்.. மீனாட்சியின் நினைவு நாள் நெருங்குவது மட்டுமே நினைவில் நின்றது. எனவே திகைத்து விழித்துக் கொண்டிருந்த இருவரும் தாமரை சொன்னதும் அருகருகே நிற்க , தாமரை சட்டென்று காலில் விழுந்து விட்டாள்.தில்லை பதறி பின்னால் நகர்ந்தவள் ,
“ஏய் என்னடி என் கால்ல போய் விழுந்துட்டு … ” என்றவளிடம்
“திலோ செண்பாக்கா தான்டி சொன்னாங்க அண்ணன் பொண்டாட்டி அம்மாவுக்கு இணைனு… நீ எனக்கு அம்மா தான் டி. இந்த ஒரு வருஷமா அம்மா இல்லாத என்னைய அம்மா போல… இல்ல இல்ல அம்மாவ விட அதிகமா கவனிச்சுக்கிட்டது நீதானடி… உன் கால்ல தாராளமா விழலாம்..என்னைய நீயும் ஆசிர்வாதம் பண்ணு டி… அண்ணா ஆசீர்வாதம் பண்ணுங்க…” தில்லை பேச்சற்று நிற்க…ஆதவன் தான் தங்கையை எழுப்பி ,
” எப்பவும் அம்மாவோட ஆசீர்வாதத்தோட எங்களோடதும் இருக்கும்மா..” எனும் போதே ,உள்ளே சிணுங்க ஆரம்பித்த குழந்தையை தூக்கி கொண்ட தாமரை ,
“இன்னைக்கு சீக்கிரம் கிளாஸ் போகணும் அதான் உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன் … ஃபிரஷ்யாகிட்டு வா.. நான் செல்லக்குட்டிய தூக்கிட்டு போறேன்..” என தில்லையிடம் கூறி குழந்தையை தூக்கிக் கொண்டு கீழே சென்று விட்டாள்..”
ஏற்கனவே மனைவி மீது பித்தாகி இருப்பவன்… இப்போது தங்கையின் வாய்மொழி பாராட்டில் கேட்கவா வேண்டும். கைகளைக் கட்டி தில்லையையேப் பார்த்தான்… அப்போதுதான் எழுந்திருந்ததால் கசங்கிய உடையும், கலைந்திருந்த கூந்தலும் அவளை தேவதையாகக் காட்ட,மென்னகையோடு பார்த்திருந்தான்.
ஆதவன் அவளைப் பார்ப்பான் என்று தெரியும்.. ஆனால் இப்படி இவ்வளவுநெருக்கத்தில் அவளையேப் பார்ப்பது ஏதோ செய்தது.தில்லையின் அருகில் ஆதவன் செல்ல .. தில்லை பின்னால் நகர.. தொப்பென கட்டில் தடுக்கி பின்னால் விழுந்தாள். மிக அருகில் இரு புறம் கையூன்றி குனிந்தவன் மிக அருகில் முகத்தைக் கொண்டு வர… தில்லையின் கண்கள் தானாக மூடிக் கொண்டது.
முத்தாரம் தான் ..கொடு அச்சாரமா
காக்க வெக்காதே.. துணிஞ்சு கேக்க வெக்காதே…
ஆனால் ஆதவனோ அவளது கரம் பற்றி எழுப்பி ,கையினைவிடாமலே , “ஹாப்பி அனிவர்ஸரி… ” என்று விட்டு குளியலறைக்குள் நுழைந்து விட்டான். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காத ஏக்கத்தில் ..
“அட மக்கு மாமா… கல்யாண நாள் பரிசா பொண்டாட்டிக்கு கையா கொடுப்பாங்க..”
“அப்போ வாய கொடுக்கலாமா..” என அருகில் வந்து கேட்ட ஆதவன் , வாய் கொடுத்து விட்டுத்தான் சென்றான். மனதில் பேசுவதாக நினைத்து சத்தமாக பேசிய மனைவிக்கு இதழ் முத்தம் மட்டுமே பரிசாக கொடுத்து விடுவித்தான். இருவருக்குமே தங்கள் காதலின் வெளிப்பாடாக கொடுக்கப்பட்ட.. பெறப்பட்ட…. அந்த இதழணைப்பு , போதுமானதாக நிறைவான திருமண நாள் பரிசாக தான் இருந்தது.