அத்தியாயம்- 10
அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும்
புருவத்தாள் – பிறர்
அறிவை மயக்குமொரு கருவ மிருக்குமங்கைப்
பருவத்தாள்
கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த
சொல்லினாள் – கடல்
கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த
பல்லினாள்
- திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)
இருவருக்கும் திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஓடிவிட்டது, ஆதியால் அதை நம்பவே முடியவில்லை… இந்த ஐந்து நாட்களில் இருவரும் அதிகமாக பேசிக் கொண்டதில்லை.
தேவைக்கு மட்டுமே பேசியிருந்தனர், அவர்கள் பேசிய வார்த்தைகளை எண்ணிப் பார்த்து சொல்லிவிடலாம்… இதோ காலையில் சென்னைக்கு வந்தும் இறங்கியாயிற்று…
அவளின் புகுந்த வீட்டில் கால் பதித்தும் ஆயிற்று… அர்ஷிதா இயல்பாக பழகினாள், ஏனோ குந்தவைக்கு தான் அவளிடம் முழுதாக ஒட்ட முடியவில்லை.திருமணம் முடிந்து இத்தனை நாட்கள் ஆகிய போதும் வீட்டில் ஓரிரு உறவினர் இன்னமும் இருந்தனர்.
குந்தவைக்கு சற்றே சிரமமாய் இருந்த போதும் ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டாள். “அக்கா…” என்று அழைத்தவாறே வானவன் வந்து சேர்ந்தான்.
“வாடா…” என்று உடன்பிறந்தானை அழைத்து அமர வைத்தாள். ஆதி உள்ளறையில் இருந்து வெளியில் வந்தான்… “வா வானவா எப்போ வந்த…”
“இப்போ தான் மாமா வந்தேன்… அக்காவை பார்த்து பேசிட்டு போக தான் வந்தேன்…”
“ஹ்ம்ம் பேசுங்க…” என்றவன் “அர்ஷும்மா வானவனுக்கு காபி கொடு…” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
“என்னடா என்ன பேசணும் என்கிட்ட, அம்மா எதுவும் சொல்லி அனுப்பினாங்களா???”
“அம்மா எதுவும் சொல்லலை… உங்க ஆபீஸ்ல இருந்து தான் போன் வந்திச்சு… உன் போன் என்னாச்சு… உனக்கு தான் ஒரு வாரமா போட்டுட்டு இருக்காங்களாம்…”
“உனக்கு போகவே மாட்டேங்குதாம்… எப்படியோ நம்ம வீட்டு நம்பருக்கு போன் பண்ணியிருக்காங்க… நாம ஊருக்கு போயிருந்ததால இன்னைக்கு மறுபடியும் போட்டு பேசினாங்க…”
குந்தவைக்கு அப்போது தான் அவள் கைபேசியை அணைத்து வைத்திருந்தது நினைவிற்கே வந்தது. “அது… அது நான் கல்யாண நேரத்துல ஆப் பண்ணி வைச்சேன்… அப்புறம் மறந்துட்டேன்டா…”
“போன் என் பையில தான் இருக்கு, நான் அதை ஆன் பண்ணவே இல்லை… என்னவாம் எதுக்கு போன் பண்ணாங்க…” என்று பரபரப்புடன் கேட்டாள்.
“ஏதோ ஒரு முக்கியமான பைலாம் அது ரொம்ப முக்கியமானதாம், அதை பத்தி உன்கிட்ட கேட்கணுமாம்… உன்னை இன்னைக்கு ஒரு நாள் ஆபீஸ் வந்து அந்த பைல் எடுத்து கொடுத்திட்டு போக சொன்னாங்க…”
“அதான் இன்னும் ரெண்டு நாள்ல நான் வேலைல திரும்ப சேரப் போறேனே அப்புறம் எதுக்கு இப்போ போகணும்…” என்றாள்…
“ஏன் அக்கா அவங்க தான் சொல்றாங்கள்ள ஏதோ முக்கியமான பைல்ன்னு அப்புறம் என்ன…”
“ஏம்மா அதான் உன் தம்பி சொல்லுதே முக்கியமான வேலைன்னு போய் தான் எடுத்து கொடுத்திட்டு வாயேன்… ஏதோ பெரிய பொறுப்புல நீ இருக்கன்னு சொன்னாங்க…”
“பாருப்பா என் மருமவளை போன் பண்ணி கூப்பிடுறாங்க… எம்புட்டு பெரிய ஆபிசரா இருந்தா இப்படி கூப்பிடுவாங்க…” என்றார் வந்திருந்த உறவினர்களில் ஒருவர்.
அவள் தயங்கிக் கொண்டே நிற்க ஆதி அங்கு வந்து சேர்ந்தான். “மாமா நீங்களாச்சும் அக்காகிட்ட சொல்லுங்க…” என்று அவனை துணைக்கழைக்க அவனும் “போயிட்டு வரவேண்டியது தானே…” என்றான்.
“அட என்னப்பா நீ போயிட்டு வர வேண்டியது தானேன்னு சொல்ற… உம் பொண்டாட்டியை நீ கூட்டிட்டு போகாம வேற யாரு கூட்டிட்டு போவாங்க…” என்று இன்னொரு உறவினர் சொல்ல ஆதியோ ‘அடடா இனி நான் இவளுக்கு டிரைவர் வேலை பார்க்கணுமா’ என்று எண்ணிக் கொண்டான்.
“ஏம்ப்பா நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க… நாங்க அப்படியே பீச்சுக்கு போயிட்டு அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி எல்லாம் பார்த்திட்டு வர்றோம்…” என்று கிளம்பினர் அவர்கள்.
‘இந்த ஊர்ல இருந்து வர்றவங்களுக்கு வேலையே இல்லையா… எப்போ வந்தாலும் அந்த பீச்சை பார்க்கிறதும் சமாதியை பார்க்கிறதும்’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாலும் வெளியில் அவர்களை சிரித்து வழியனுப்பினான் ஆதி.
கணவனும் மனைவியும் வெளியே செல்ல கிளம்ப வானவனுக்கு காபி கொண்டு வந்த அர்ஷிதாவை பார்த்தான் அவன். “நீங்க மட்டும் வீட்டில தனியா இருந்து என்ன பண்ணப் போறீங்க…”
“நீங்க வீட்டுக்கு வாங்க, வீட்டில அந்த வானரம் வானதி இருக்கா, உங்களுக்கு துணையா இருப்பா… உங்களுக்கும் போரடிக்காம இருக்கும்…”
“இல்லைங்க பரவாயில்லை… எக்ஸாம் வருது நான் படிக்கணும்… நான் வீட்டில தனியா இருந்துக்குவேன்…” என்று மறுத்தாள்.
“அவளுக்கும் எக்ஸாம் இருக்கு… உங்களோட சேர்ந்தாலாவது அவ ஒழுங்கா படிக்கிறாளான்னு பார்ப்போம்… அதுக்கு தாங்க கூப்பிட்டேன்… மாமா எதுவும் சொல்லுவாங்கனு யோசிக்கறீங்களா… நான் மாமாகிட்ட சொல்லிடறேன்…”
“நீங்களும் வானதியும் ஒரே மேஜர் தானே… ரெண்டு பேரும் சேர்ந்து குரூப் ஸ்டடி பண்ணுங்க…” என்று அவன் சொல்லும் போது அதற்கு மேல் அவளால் மறுக்க முடியவில்லை.
சரியென்று தலையாட்டினாள், ஆதி கிளம்பி வந்ததும் “மாமா உங்க தங்கையை நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்… இங்க தான் வீட்டில யாருமில்லையே… வானதியோட சேர்ந்து அவங்க படிக்கட்டும்…”
“நீங்க போயிட்டு வந்ததும் போன் பண்ணுங்க…” என்றுவிட்டு அவன் அங்கிருந்து அர்ஷிதாவை கூட்டிக் கொண்டு கிளம்பினான்.
ஆதி கிளம்பி வரவேற்பறையில் அமர்ந்திருக்க குந்தவை சுடிதார் ஒன்றை போட்டுக் கொண்டு வந்தாள். “போகலாமா…” என்ற அவனின் கேள்விக்கு இம்மென்று பதில் கொடுக்க அவளை அழைத்துக் கொண்டு அலுவலகம் சென்றான்.
அவளை இறக்கிவிட்டு அவன் இறங்கவும் “போயிட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு அவள் தன் போக்கில் வேகமாக இறங்கிச் செல்ல அவளை மனதில் திட்டிக் கொண்டே அவன் அங்கேயே நின்றான்.
குந்தவை அவள் துறையை நாடிச் சென்றாள், பழக்கமில்லாததில் அவ்வப்போது லூசாகி மெட்டி கழண்டு கழண்டு விழ ‘ச்சே… இந்த மெட்டி வேற சும்மா சும்மா கழண்டு விழுது…’ என்று நினைத்தவள் அதை எடுத்து பையில் போட்டவள் மற்றதையும் கழற்றி உள்ளே போட்டாள்.
அவள் உள்ளே செல்லவும் அவளுடன் பணிபுரியும் ரேவதி அவளருகில் வந்தாள். “என்ன தேவி நீங்க… அந்த முக்கியமான கால்குலேசன் எல்லாம் உங்க சிஸ்டம்ல தானே இருக்கு…”
“அந்த போல்டருக்கு பாஸ்வர்ட் போட்டு போயிட்டீங்க போல… உங்களுக்கு போன் பண்ணா ரீச் பண்ண முடியலை… சார் வேற கத்து கத்துன்னு கத்துறார்… அதான் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டியதா போச்சு…”
“சீக்கிரமா அதை ஓபன் பண்ணிட்டு ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துட்டு போய் சார்கிட்ட கொடுத்திடுங்க… நீங்க வந்ததும் அவரை பார்க்காம போகக் கூடாதுன்னு சார் சொல்லிட்டு போனார்…” என்று கடகடவென்று சொல்லிவிட்டு அவள் வேலையை பார்க்கச் சென்றாள்.
குந்தவை அவசரமாக அவள் இருப்பிடத்திற்கு சென்று அவள் கணினியை உசுப்பி தேவையான தகவல்களை எடுத்தவள் அதை எடுத்துக் கொண்டு ரவியின் அறையை நாடிச் சென்றாள்.
அவளைக் கண்டதும் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவன் “ஹேய் தேவி என்னாச்சு உனக்கு… இத்தனை நாளா எங்க போன, போன் கூட பண்ணி பார்த்திட்டேன்…”
“உனக்கு கால் போகவே இல்லை… என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்…” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் அவளருகில் வந்து நின்றிருந்தான்.
அவளோ ஓரடி பின்னால் போக “என்னாச்சு தேவி, எதாச்சும் பேசு… என் மேல கோபமா…” என்றவன் அவள் கையை பிடித்திருந்தான் இப்போது.
“சார் கையை விடுங்க…”
“ஏன் தேவி… நான் இதுக்கு முன்ன உன் கையை பிடிச்சதில்லையா???”
“ஏற்கனவே ஒரு முறை உங்களை தப்பா நினைச்சு ஏதேதோ நடந்திருச்சு… திரும்பவும் ஒரு தப்பு நடக்க வேண்டாம்ன்னு தான் அன்னைக்கு எதுவும் சொல்லலை…”
“அதுவும் இல்லாம அன்னைக்கு நாம இருந்தது கோவில்ல, நான் எதுவும் சொல்லலைங்கறதுக்காக அது சரின்னு நீங்க முடிவு பண்ணிக்க வேண்டாம்…”
“ப்ளீஸ் கையை விடுங்க… என்னை என்னன்னு நினைச்சு நீங்க கையை பிடிச்சீங்க…”
“ஏன் தேவி ஏதோ மாதிரி பேசற???”
அவள் அவ்வளவு சொல்லியும் அவன் பிடித்திருந்த பிடியை விடாததால் வெடுக்கென்று கையை உருவினாள் அவள்.
“நீங்க கேட்டது எல்லாம் இதுல இருக்கு…” என்று மேஜையில் அதை வீசுவது போல் வைத்தவள் அங்கிருந்து வேகமாக கிளம்பிச் சென்றுவிட்டாள்.
மூச்சு வாங்க ஆதி வண்டியை நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தவள் சுற்று முற்றும் பார்த்தாள். ஆதி அவனுக்கு தெரிந்திருந்த யாரையோ பார்க்க சென்றிருந்தான்.
சற்றே ஆசுவாசமாக மூச்சு வாங்கியவள் ‘என்ன தைரியம் இவருக்கு, எப்படி என் கையை பிடிக்கலாம்… அப்போ பேசாம வந்தது ரொம்ப தப்பா போச்சு போல அந்த தைரியம் தான் இப்போ மறுபடியும் என் கையை பிடிக்கிறார்…’
‘ஒரு முறை தப்பா நினைச்சு அடிச்சிட்டோமேன்னு பேசாம இருந்தா இப்படி தான் செய்வாங்களா… என்ன தைரியம் ஒரு கல்யாணம் ஆனா பொண்ணுகிட்ட இப்படி தான் நடந்துப்பாங்களா…’ என்று எண்ணி வேதனையானாள் அவள்.
அப்போது தான் வண்டியில் இருந்த கண்ணாடியில் அவளை பார்த்தவள் திகைத்தாள். ‘எங்க என் தாலி…’ என்று கழுத்தை தடவியவளுக்கு அப்போது தான் ஒன்று புரிந்தது.
அலுவலகத்தில் அவளுக்கு திருமணம் என்பதை அவள் யாரிடத்திலும் சொல்லியிருக்கவில்லை என்பது. அவள் வேலையில் சேர்ந்தே இரண்டு மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை என்பதால் அவளுக்கு யாரும் அதிகம் நட்பாகியிருக்கவில்லை.
அவளும் யாரிடமும் ஒட்டிக் கொண்டு அலையும் ரகமுமில்லை. அதனால் தான் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை அவர்கள் அறிந்திருக்க முடியாது என்பது உரைத்தது அவளுக்கு. அதுவுமில்லாமல் அவள் தான் யாரையுமே அழைக்கவில்லையே…
ஒரு காரணமாய் தானே அவள் அப்படி செய்தாள். நல்லவேளையாக ரவி ஊரில் இல்லை அதனால் அவனுக்கு மேலதிகாரியாய் இருந்த சாந்தி முரளிகிருஷ்ணாவிடம் கூறிவிட்டு அவள் விடுப்பை எடுத்திருந்தாள். அவருக்கு மட்டுமே தெரியும் அவள் திருமண விடுப்பில் சென்றிருக்கிறாள் என்று…
அதுவுமில்லாமல் அன்று அவள் காலர் வைத்து போட்டிருந்த சுடிதார் வேறு அவள் கழுத்தில் அணிந்திருந்த தாலியையும் மற்ற நகைகளையும் மறைத்திருந்தது. காலில் அணிந்திருந்த மெட்டியை வேறு லூசாக இருந்தது என்று கழட்டி வைத்திருந்த மடத்தனத்தை எண்ணி அவளை அவளே குட்டிக் கொண்டாள்.
அப்போது சரியாக அங்கு வந்த ஆதித்யா “என்னாச்சு… எதுக்கு குட்டிக்கற??” என்றான். ‘அய்யோ இவர் என்னை பார்த்திட்டாரா…’ என்று விழித்தவள் “ஒண்ணுமில்லை…” என்றாள்.
“போகலாமா…” என்ற அவனின் கேள்விக்கு வழக்கம் போல் தலையை மட்டும் ஆட்டியவளை மனதிற்குள் திட்டிக் கொண்டான் ‘வாயை திறந்து பேசினா முத்தா உதிர்ந்து போகும்...’
‘என்னை திட்டணும்ன்னா மட்டும் வாய் கிழிய பேசுவா…’ என்று சபித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
மறுநாள் குந்தவையின் வீட்டிற்கு மறுவீடு செல்ல வேண்டும் என்பதால் வந்திருந்த உறவினர்கள் அவன் மாமா குடும்பத்தினர் என்று எல்லோருமாக கிளம்பி குந்தவையின் வீட்டிற்கு சென்றனர்.
காலை உணவிற்கே அவர்கள் குந்தவையின் வீட்டிற்கு சென்றுவிட்டனர்… காலை உணவு முடிந்து சில மணி நேரம் கடந்திருக்க ஆதி ஏதோ வேலையிருப்பதாகவும் மதிய உணவிற்கு வந்து விடுவதாகவும் கூறிச் சென்றான்.
அவன் அப்புறம் நகர்ந்திருக்க மணிமேகலை குந்தவையின் அறைக்கு வந்தார். “என்னம்மா மாப்பிள்ளை இன்னைக்கும் ஏதோ வேலையிருக்குன்னு கிளம்பிட்டார்… நீயாச்சும் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா…” என்றார்.
‘ஆமா நான் சொல்றதை அப்படியே கேட்டுட்டு தான் அவர் மறுவேலை பார்ப்பாரா என்ன…’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள் அவள்.
“என்னம்மா பேசாம இருக்க??” என்று அன்னை பாசமாக அவளருகில் வந்து தலையை தடவிக் கொடுக்கவும் அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
“ஏம்மா இப்படி பண்ணீங்க??”
“என்னம்மா என்னாச்சு… மாப்பிள்ளை உன்கிட்ட சரியா நடந்துக்கலையா… வேற எதுவும் பிரச்சனையா???”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை… இப்படி கலகலன்னு இருந்த வீட்டில இருந்து என்னை பிரிச்சு, மாமனார் மாமியார் கூட இல்லாத வீட்டுக்கு அனுப்பி வைச்சுட்டீங்க…”
“ஏன்ம்மா எனக்கு எல்லாரும் ஒண்ணா இருந்தா பிடிக்கும் தானே… அது உங்களுக்கு தெரியாதா…”
“அப்புறம் ஏன் என்னை இவருக்கு கட்டி வைச்சீங்க…” என்று அழுதவளை சிரிப்புடன் பார்த்தார் மணிமேகலை.
ஆதியின் கெட்ட நேரம் அவள் ஏன் என்னை இவருக்கு கட்டி வைச்சீங்க என்று கேட்டதை கேட்டுவிட்டான். வெளியே சென்றவன் அவன் கையோடு கொண்டு வந்திருந்த பையை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டான்.
அதை எடுப்பதற்காக வந்திருந்தவன் அவள் சொன்னதை கேட்டு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானான்.
“ஏம்மா, நீ சொல்றதை பார்த்தா அம்மா அப்பா இல்லாதவங்களுக்கு எல்லாம் கல்யாணமே ஆகாது போலயே… உனக்கு என்னடா மாப்பிள்ளை தங்கம் போல இருக்கார்…”
“அப்புறம் என்ன வேணும் உனக்கு சொல்லு…” என்றார்.
“அந்த தங்கத்துக்குன்னு யாராச்சும் கிடைச்சிருப்பாங்க என்னை ஏன் கட்டி வைச்சீங்க…” என்று தொடர்ந்து மூக்கை உறிஞ்சினாள்.
அதற்கு மேல் அவனால் அங்கு நிற்க கூட முடியவில்லை, நல்லவேளையாக அவனுடைய பை வாசல் சோபாவிலேயே இருந்தது. உறவினர்கள் எல்லாம் வீட்டை சுற்றி பார்க்க மாடிக்கு சென்றிருந்ததால் அவன் வந்ததை யாரும் அறியவில்லை.
வந்த சுவடு தெரியாமல் கிளம்பிச் சென்று விட்டான் அவன். அவள் இதுவரை அவமானப் படுத்தியிருக்கிறாள் தான், ஆனால் அப்போதெல்லாம் அது அவனுக்கு அதிகம் வலித்திருக்கவில்லை.
ஆனால் இப்போது அவளின் இந்த உதாசீனமான பேச்சு அவனுக்கு அதிகம் வலித்தது. அன்று யாரோவாக அவமானப்படுத்தியதை விட இன்று மனைவியாக இவனை ஏன் கட்டிவைத்தீர்கள் என்றது பெரும் வலியாக இருந்தது.
தன்மேலேயே அவனுக்கு சுயபச்சாதாபம் தோன்றியது, ஏனோ அது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் கிளம்பிய வேலையை முடிக்க எண்ணி மனதின் எண்ணத்தை திசை திருப்பினான்.
மதிய உணவு வேளை தாண்டிக் கொண்டிருக்க மணிமேகலை குந்தவையை ஆதிக்கு போன் செய்து வரச் சொல்லச் சொன்னார். ‘அய்யோ அம்மா போன் பண்ண சொல்றாங்களே… அவரோட நம்பர் கூட என்கிட்ட இல்லையே…’
“நீ போம்மா… நான் பண்ணிட்டு சொல்றேன்…” என்றவள் அவள் அன்னை நகர்ந்ததும் வானவனுக்கு அழைத்தாள். “சொல்லு குந்தி வீட்டுக்கு வந்துட்ட போல, இவ்வளோ நேரமா எனக்கு கால் பண்ண…” என்றான்.
“டேய் ஒரு ஹெல்ப்டா உங்க மாமாவோட நம்பர் சொல்லு…”
“என்னது என்ன சொன்ன, திரும்ப சொல்லு…” என்றான் அவன்.
“டேய் நீ சரியா தான்டா கேட்ட, நான் அவரோட நம்பர் தான் கேட்டேன்… என்கிட்டே அவரோட நம்பர் இல்லைடா. ப்ளீஸ் அட்வைஸ் பண்ணாம நம்பர் கொடு…”
“அவர் வெளிய போயிருக்கார் இன்னும் வீட்டுக்கு வரலை அவருக்கு போன் போடணும் அதான் கேட்கிறேன்…”
“நீ பண்ணறது எதுவும் சரியில்லைக்கா… அவ்வளோ தான் சொல்லிட்டேன்… அவர் மேல இருக்கற கோபத்தை எல்லாம் மறந்துட்டு ஒழுங்கா அவர்கிட்ட பேசப்பாரு… தேவையில்லாத பிரச்சனை பண்ணி வைக்காதே…”
“டேய்…” என்று அவள் ஆரம்பிக்கவும்… “போனை வை… உனக்கு நம்பர் மெசேஜ் அனுப்பறேன்…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
அவன் சொன்னது போலவே ஆதியுடைய எண்ணை அவளுக்கு அனுப்பி வைத்தான். அவனுக்கு அவள் போன் பண்ணிக் கொண்டிருக்க சைலன்ட் மோடில் இருந்த அவன் கைபேசி எடுக்கப்படாமலே போனது.
பிற்பகல் மூன்று மணியளவில் அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். “சாரி மாமா… ஒரு முக்கிய வேளை அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு… மன்னிச்சுடுங்க…”
“எனக்காக காத்திட்டு இருக்கீங்களா, சாப்பிட்டிருக்கலாமே…” என்றான் வருத்தத்துடன்.
“அவங்க எல்லாம் சாப்பிட்டாச்சு மாப்பிள்ளை… உங்க பொண்டாட்டி தான் உங்களுக்காக சாப்பிடாம இருக்கா… நீங்க போய் டிரஸ் மாத்திட்டு வாங்க… நேரமாச்சு பசியா இருப்பீங்க…” என்றார் மணிமேகலை.
அவளை பார்த்துக் கொண்டே அவன் உள்ளே சென்று விட்டான். “என்னடி என்னை பார்த்திட்டு நிக்கற, மாப்பிள்ளைக்கு துண்டும் கைலி வெட்டியும் கட்டில் மேல வைச்சிருக்கேன்… எடுத்து கொடு போ மசமசன்னு நிக்காதே…”
“அம்மா கட்டில் மேல தானே வைச்சிருக்கீங்க… அது அவர் கண்ணுக்கு தெரியாமலா போகும்… அதெல்லாம் எடுத்துக்குவார்…” என்றாள்.
மகள் முதுகில் ஒன்று வைத்தவர் “போடி சும்மா பேசிட்டு…” என்று அவளை விரட்டி அனுப்பினார்.
பின்னோடு அறைக்கு வந்தவளை என்ன என்பது போல் பார்த்தான். “இல்லை துண்டு… கைலி வேட்டியும் இருக்கு…” என்று கட்டிலின் மீதிருந்து எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.
“அதான் பார்த்தாலே தெரியுதே… நான் எடுத்துக்க மாட்டேனா…”
“நானும் அதைத்தான் சொன்னேன்… அம்மா தான் போகச் சொன்னாங்க…”
‘என்னடா இது ரொம்ப அக்கறையா பேசுறாளேன்னு கொஞ்சம் சந்தோசப்பட்டேன்… இது கூட என் மேல இருக்கற அக்கறையில வரலையா…அம்மா சொல்லி தான் வந்தாளா…’
‘இவளுக்கா எப்போ தான் தோணுமோ… ஏற்கனவே உன்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்லி புலம்பிட்டு இருக்கா.. டேய் ஆதி உன் வாழ்க்கை முழுக்க இப்படியே போய்டுமாடா…’
‘இப்படியே போனா வாழ்க்கையில என்ன சுவாரசியம் இருக்கும்… எனக்கு சந்ததின்னு ஒண்ணு வருமா வராதா… ச்சே ஆதி ஏன் இப்படி தேவையில்லாம யோசிக்கிற… நீ யோசிக்கிறது உனக்கே அதிகமா தோணலை…’
‘அவளை, அவ மனசை மாத்த வேண்டியது உன்னோட பொறுப்பு… எப்படியாவது அவ மனசுல இடம் பிடிக்க ட்ரை பண்ணு…’ என்று ஒரு மனம் சொல்ல மறுமனமோ விதண்டாவாதமாய் ‘என்னை ஏன் அவளுக்கு புரிய வைக்கணும்’ என்று அடம் பிடித்தது.
மனதிற்குள் பெரும் போராட்டமே நிகழ குளித்து முடித்து வந்தவன் இன்னமும் அந்த அறையிலே இருந்த குந்தவையை “என்ன விஷயம்…” என்றான்.
‘அடப்பாவி இவனுக்கு மூளையே கிடையாதா… இப்படி தான் துண்டோட வந்து நிற்ப்பானா…’ என்று மனதிற்குள் திட்டியவள் அவனை பார்த்து முகம் சிவந்து தான் போனாள்.
‘என்னாச்சு இவளுக்கு கேள்வி கேட்டா, முகத்தை கீழ தொங்க போட்டுக்கறா…’ என்று நினைத்துக் கொண்டு மீண்டும் அவளிடம் “என்னன்னு கேட்டேன்… பதில் பேசாம இருந்தா என்ன அர்த்தம்…”
“இல்லை சாப்பிட… சாப்பிட கூப்பிடலாம்ன்னு வந்தேன்…”
“சரி நீ போ நான் இதோ வர்றேன்… ஆனா நீ எனக்காக எதுக்கு காத்திருக்கணும் சாப்பிட்டிருக்கலாமே…”
“பரவாயில்லை…” என்று சொல்லிவிட்டு அவள் கீழே சென்றுவிட்டாள். அவனிடம் பிடித்தம் இருக்கிறதோ இல்லையோ அவனுக்காக அவள் சாப்பிடாமலே இருந்தது அவனுக்கு பெரும் இதமாக இருந்தது.
மறுவீடு முடிந்து அன்றே அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். ஊரிலிருந்து வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் அன்றே ஊருக்கு புறப்பட்டுவிட வீடே அமைதியாக இருந்தது.
வீட்டில் எந்த சப்தமும் இல்லாமல் நிசப்தமாக இருந்தது. நாளையிலிருந்து அர்ஷிதா கல்லூரிக்கு செல்ல வேண்டும், ஆதியும் அலுவலகம் சென்று விடுவான். குந்தவையும் அவள் வேலையில் சேர வேண்டும்.
அவரவர் இயல்பு வாழ்க்கைக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். மறுநாளைய பொழுது மெல்ல விடிந்தது. விடிந்தும் விடியாத இளங்காலை பொழுது, எப்போதும் போல் விழித்துக் கொண்டாள் அர்ஷிதா.
எழுந்து அவள் சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள், குந்தவையிடம் முன்தினமே அவள் அன்னை படித்து படித்து சொல்லியனுப்பினார்.
இங்கு உறங்கிக் கொண்டிருப்பது போல் உறங்கிக் கொண்டிராமல் காலையில் நேரமாக எழுந்து சமையல் வேலை எல்லாம் பார்க்குமாறு…
என்ன சொல்லி என்ன பயன் அலாரம் வைத்திருந்தவள் அவள் வீட்டின் பழக்கத்திலேயே வைத்திருந்த அலாரத்தை அணைத்துவிட்டு மீண்டும் உறங்கினாள்.
அர்ஷிதா மூவருமே வெளியில் செல்ல வேண்டும் என்பதால் எல்லோருக்குமாய் சமைத்துக் கொண்டிருந்தாள். திடிரென்று குந்தவைக்கு விழிப்பு வர சுயஉணர்வு பெற்றவள் போல சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
‘ஐயோ இன்னைக்கு வேலைக்கு போகணுமே… சமைக்கணுமே, மறந்திட்டேனே… ச்சே இங்க வந்ததுல இருந்து நான் எதுவுமே செஞ்சது இல்லையே…’
‘இப்படி மடத்தனமா தூங்கிட்டேனே…’ என்று புலம்பிக் கொண்டு எழுந்தவள் காலைக் கடன்களை எல்லாம் முடித்துவிட்டு குளித்து முடித்து அவசர அவசரமாக வெளியில் வந்தாள்.
அவர்கள் அறைக்கதவை திறந்து வெளியே வந்தவள் சமையலறையில் இருந்து வந்த சத்தத்தில் அவசரமாக அங்கே சென்றாள். குற்ற உணர்வு மேலிட “எப்போ எழுந்தே… சாரி கொஞ்சம் தூங்கிட்டேன்…” என்றாள் அர்ஷிதாவிடம்.
“அதுக்கென்ன அண்ணி பரவாயில்லை… எனக்கு இது எப்பவும் பழக்கம் தானே, அதான் வழக்கம் போல எழுந்து செய்ய ஆரம்பிச்சுட்டேன்… உங்களுக்கும் செஞ்சுட்டேன் அண்ணி… சாப்பாடு எல்லாம் அந்த புது ஹாட்பாக்ஸ்ல வைச்சிருக்கேன் அண்ணி…”
“என்னோட பாக்ஸ் இருக்கே, நேத்து அதை எடுத்துட்டு வர மறந்துட்டேன்…”
“இது புதுசு தானே அண்ணி, நீங்க இதையே எடுத்திட்டு போங்க…”
“சரி நாளையில இருந்து நானே சமைக்கிறேன்…”
“எனக்கு எந்த சிரமமும் இல்லை அண்ணி… நீங்க உங்க வீட்டில இருக்க போல இருங்க… எனக்கு இது பழக்கம் தான்…” என்றாள் சாதாரணமாக.
“இதுவும் என்னோட வீடு தானே???” என்றாள் வெடுக்கென்று…
“நான் தப்பா சொல்லலை அண்ணி… நாளைல இருந்தே நீங்களே சமைங்க… நான் உங்களுக்கு ஒத்தாசையா இருக்கேன்…” என்றவள் மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
மூவருக்குமாய் காபியை போட்ட குந்தவை ஒன்றை அர்ஷிதாவிடம் கொடுத்து விட்டு அவளும் குடித்துவிட்டு ஆதிக்கு எடுத்து சென்றாள். அவர்கள் அறைக்குள் செல்ல அவனோ இன்னமும் எழுந்திருக்கவில்லை.
‘எப்படி இவரை எழுப்ப…’ என்று யோசித்தவள் அவன் தோளை தட்டி எழுப்பினாள். “எழுந்திருங்க… எழுந்திருங்க…” என்று அவள் அழைக்க ‘என்னடா இது காதுல ஏதோ தேன் வந்து பாயுற மாதிரி இருக்கு என்று யோசித்துக் கொண்டே கண்ணை விழித்தான் ஆதி….