நிரஞ்சனி, ரமேஷ் திருமணம் நல்லமுறையில் அன்று நடந்து முடிந்திருந்தது. நிரஞ்சனியும் தன் கணவன் வீடு சென்றிருக்க, அண்ணன் அண்ணியாய் ஜெகந்நாதனும், மைதிலியும் நிரஞ்சனியை ரமேஷ் வீட்டினில் விட்டு வந்திருந்தனர்.
உடன் தங்க வேண்டும் என்றதற்கு ரத்னா வேண்டாம் என்றுவிட்டார்.
“தேவையில்லாம யாரும் எதுவும் பேசினா வம்பு.. என் அண்ணன் அண்ணி அங்க தங்கட்டும். நீங்க வந்திடுங்க…” என, செல்விக்கும் அதுவே சரி என்று பட்டது.
பாண்டியனுக்கு இப்போது தான் பெரும் திருப்தி. இரண்டு திருமணங்களும் எவ்வித இன்னல்களும் இல்லாது சீரும் சிறப்புமாய் நடந்து முடிந்திருந்தது. பதினைந்து நாட்களுக்கு முன்னர் ஜெகா மைதிலி திருமணம். இன்று ரமேஷ் நிரஞ்சனி திருமணம்.
நந்தினி கூட வந்திருந்தாள். அவளாகவே வந்து மைதிலியிடம் பேசினாள்.
“நீங்க தான் மாமாவுக்கு நல்ல ஜோடி..” என, அவளது அந்த மாமாவென்ற அழைப்பு உறவுமுறைக்கு என்று நன்கு புரிந்தது.
“உங்களுக்குத் தான் பெரிய தேங்க்ஸ் சொல்லணும்…” என்று மைதிலியும் சொல்ல, நந்தினி சிரித்தபடி விலகிவிட்டாள்.
ஜெகா இதனை பார்த்தும் பார்க்காதது போல இருந்துகொண்டான். ஒருசில வம்பு வாய்கள் நந்தினியையும் ஜெகந்நாதனையும் நோட்டம் விட்டன தான். ஆனால் ஜெகந்நாதன் மைதிலியோடு மேடையில் நின்றவன் இறங்கவே இல்லை.
புதிதாய் திருமணம் ஆகியிருந்தாலும், மைதிலி பாண்டியன் வீட்டு மருமகளாய், ஜெகந்நாதன் மனைவியாய் அவளின் கடமை பொறுப்புகள் உணர்ந்து அனைத்தையும் செவ்வனே செய்ய, ரத்னா கூட அவ்வப்போது எடக்கு மடக்காய் பேசியவர் அடுத்து ஒன்றும் பேசவில்லை.
செல்வி கூட “நீ போ கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா…” என்று ஏதேனும் சொன்னால் கூட “இருக்கட்டும் அத்தை… இதெல்லாம் நான் எப்போ பழகுறது…” என்று சொல்லிவிட்டாள்.
ஆகமொத்தம் மைதிலி அங்கே அனைவரின் மனதையும் நிறைத்துவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும்.
அந்தமட்டும் ஜெகந்நாதனுக்கு பெரும் பெருமை. அப்படியொரு மகிழ்ச்சி அவனுக்கு. ஒற்றை பிள்ளையாய் வளர்ந்தவள், அத்தனை வேலை செய்தும் பழக்கமில்லை என்று தெரியும். எப்படி சமாளிப்பாளோ என்று நினைத்து செல்வியிடம் கூட சொல்லியிருந்தான்.
ஆனால் மைதிலி எதற்கும் சளைக்கவில்லை. உறவில் கூட ஒருசிலர் “பரவாயில்ல ஜெகா உன் பொண்டாட்டி நல்லமாதிரி தான் தெரியுது…” என, அவனுக்குப் பெருமிதம்.
ஆச்சியோ “முதல்ல உன் மகனுக்கும் மருமகளுக்கு திருஷ்டி சுத்தி போடு…” என்று செல்வியிடம் சொல்லிக்கொண்டே இருக்க, அனைத்து வேலைகளும் முடித்து, சம்பந்தப்பட்ட இந்த இருவரும் தங்களின் அறையில் இளைப்பாறிக் கொண்டு இருந்தனர். அவர்களது பாணியில்.
இரவு பதினொன்றை நெருங்கிக்கொண்டு இருக்க, மைதிலி அப்போதுதான் குளித்துவிட்டு வந்து படுத்திருந்தாள். ஜெகந்நாதன் கண்கள் மூடி படுத்திருந்தவன், மைதிலியின் அரவம் கண்டு மெதுவாய் அவள்பக்கம் திரும்பியவன் அவளது முகத்தை லேசாய் முகர்ந்து பார்த்து “நடு ஜாமத்துல க்ரீம் பூசுறது நீயாதான் இருப்ப…” என்று கிண்டல் செய்ய,
“என்ன பண்றது என் புருஷன் அப்பப்போ உன் கன்னம் வழுவழுன்னு இருக்கு டின்னு கொஞ்சுறார். அதுக்காகவாது க்ரீம் பூசவேண்டி இருக்கே…” என்று மைதிலி நீட்டி முழக்க,
“எதுவுமே பூசலைன்னாலும் நீ அழகுதான் டி மைத்தி…” என்று ஜெகா செல்லம் கொஞ்சம்.
“இதெல்லாம் என்னோட இஷ்டம் நீங்க தலையிடக் கூடாது. ஸ்கின் ரொட்டீன் பாலோ பண்றது எல்லாம் என்னோட விருப்பம்…” என,
“நீ பண்ணு.. ஆனா உன்னைப் பார்த்து இப்போ எங்கம்மாவும் ஆரம்பிச்சு இருக்காங்க தானே..” என்றவனுக்கு சிரிப்பு கூட வந்தது.
“அதுசரி…” என்று ஜெகா சொல்ல, நிஜமும் அதுதான் மைதிலி ஜெகந்நாதன் திருமணம் முடிந்து மைதிலி இங்கே வந்ததுமே செல்விக்கு மைதிலியோடு பேசுவது என்பது மிகவும் பிடித்த ஒன்று.
என்னவோ பிறந்து வளர்ந்து இதே ஊரில் திருமணமும் செய்து, செல்விக்கு குண்டு செட்டியில் குதிரை ஓட்டுவது போல்தான் இருந்தது வாழ்க்கை. அதனால் மைதிலியும் மைதிலி சார்ந்த எதுவுமே அவருக்கு புதிதாய், வியப்பாய் இருந்தது.
“நீ எப்படி தைரியமா வந்த?!” என்று அடிக்கடி கேட்பார்.
சில நேரம் ஜெகாவை வம்பிழுக்க “இவனைப்போய் தேடி வந்த பாரு…” என்றும் சொல்வார்.
அதிலும் அவள் உபயோகப்படுத்தும் பொருட்கள் எல்லாம் பார்த்து என்ன ஏதென்று கேட்டும் கொண்டவர் “எனக்கு பார்லர் போகணும்னு ரொம்ப ஆசை… ஆனா பாரு உன் புருசனும் என் புருசனும் சம்மதிக்கவே மாட்டாங்க…” என,
“ஏன் அத்தை நான் போறதுக்கு எல்லாம் ஒன்னும் சொல்லலையே அவர்…” என்று மைதிலியும் சொல்ல,
“கொஞ்ச நாள் கழிச்சு பாரு. வாய் திறப்பான்..” என்றவர் “நீ கவலைப் படாத. நானும் நீயும் போலாம்…” என்றதும் மைதிலிக்கு அப்போதே சிரிப்பு வந்தது. ஆனால் அடக்கிக்கொண்டாள்.
ஆனால் அதன்பின் செல்வி மைதிலியிடம் கேட்டு கேட்டு நிறைய அழகு சாதனா பொருட்கள் வாங்கினார். பாண்டியன் கூட ஜெகாவிடம் “என்னடா இது…” என,
“எனக்கொண்ணும் தெரியாதுப்பா…” என்றுவிட்டான்.
ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மைதிலியை கிண்டல் செய்வான். இப்போதும் அப்படி செய்ய, மைதிலியும் பதில் கொடுக்க, அவளின் விரல்களை பிடித்து லேசாய் அழுத்தியபடி “வெளிநாடு போலாம்னு சொன்னா வயநாடு போலாம்னு சொல்ற நீ…” என,
“ம்ம் ஒருதடவ நாங்க பிரண்ட்ஸ் எல்லாம் போனோம். அப்போ நிறைய கப்பிள்ஸ் வந்திருந்தாங்க. அப்போ தோணிச்சு, உங்களோட இங்க வரணும்னு…” என்று மைதிலி சொல்ல, ஜெகந்நாதன் கண்கள் மூடித் திறந்தவன் மெதுவாய் அவளின் நெற்றியில் முத்தமிட்டு,
“உனக்கு என்னைத் தவிர வேற எதுவும் யோசிக்கத் தெரியாதா?” என, புரியவில்லை என்பதுபோல் பார்த்தாள்.
“இல்ல நீயே என்னை வேணாம் சொல்லிட்டு போயிட்ட தானே. அப்போ உனக்கு கல்யாணம், லைப் இது பத்தி எல்லாம் யோசிக்கிறப்போ வேற மைன்ட் செட் வரலையா?” என,
மைதிலி மெதுவாய் புன்னகை செய்து “எனக்கு கல்யாணம், அது சம்பந்தப்பட்ட எல்லாமே உங்களோட சம்பந்தப்பட்டது. உங்களோட மட்டும். அது நான் உங்களை வேணாம்னு சொன்னாலும் சரி வேணும்னு சொன்னாலும் சரி…” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை ஜெகந்நாதன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.
“தேங்க்ஸ் தேங்க்ஸ் மைத்தி…” என்று பல பல தேங்க்ஸ் சொல்லியபடி அவளை முத்தமிட, மைதிலிக்கு நொடியில் மூச்சு முட்டித்தான் போனது.
“ஷ்..!” என்று மெதுவாய் அவனை அவள் ஆசுவாசப்படுத்த,
“நீ இவ்வளோ சொல்ற, ஆனா பாரேன் நீ மட்டும் வரலன்னா இந்நேரம்…” எனும்போதே, தன்விரல் கொண்டு அவன் இதழ் மூடியவள் “இந்நேரம் ஒன்னும் ஆகிருக்காது மே பி நீங்க என்னை தேடி வந்திருக்கலாம்…” என
“இருக்கலாம் தான்… இருந்தாலும்…” என்று ஜெகா இழுக்க,
“ம்ம்ச் போனது எல்லாம் போகட்டும்…” என்றவள் மெல்ல தலையை தூக்கி அவனின் முகத்தை தனதருகே இழுத்து மெதுவாய் முத்தமிட,
“நீ இருக்க பாரேன்…” என்று அவளின் தலையோடு தலை முட்டியவனுக்கு அவளை விட்டு விலகவே மனதில்லை.
இருந்தும் இந்த நான்கு நாட்களாய் மைதிலிக்கு ஓய்வின்றி வேலை என்று தெரியும். எப்படியும் அவளுக்கு அசதியாய் இருக்கும் என்று புரிந்து, லேசாய் விலகி படுக்க,
“என்னாச்சு?!” என்றாள் கேள்வியாய்.
“செம டயர்ட்….”
“அப்படியா?!” என்றவள் அவன் மீது கால் போட்டுக்கொண்டு படுக்க,
“உனக்கும் தானே?!” என்றான்.
“ஹ்ம்ம் ஆமா… ஆனா சந்தோசமா இருக்கா சோ டயர்ட் தெரியலை…” என்றவள் மேலும் அவனை ஒண்டி படுக்க,
“எனக்கும்தான்…” என்றவனின் கரம் தன்னைப்போல் அவளை அணைக்க,
“தூங்கலாமா?!” என்றாள் அவனின் செவியருகே.
“ஆ!” என்றவன் இமைகள் திறந்து பார்க்க, “சரியான திருடு நீங்க…” என்று அவனின் கன்னம் கிள்ளியவள் சிரிக்க,
“நீதான் டி திருடு…” என்று சிரித்த அவளின் இதழ்களை ஜெகந்நாதன் கிள்ள,
“ச்சோ..! இப்படில்லாம் பண்ணக்கூடாது…” என்றவள் “அப்புறம் இன்னொன்னு நடுராத்திரி கண்ணு முழிச்சா பேசாம தூங்கனும் என்னை எழுப்பக் கூடாது. அடிக்கடி இப்படித்தான் செய்றீங்க…” என,
“அதுசரி… உன்னை டிஸ்டர்ப் பண்ணாம படுத்திருந்தா என்னையும் எழுப்பி இருக்கலாம்ல ஏதாவது பேசிட்டாவது படுத்து இருக்கலாம் அப்படின்னு சொல்றது. இப்போ இப்படி.. வர வர நீ ரொம்ப மோசம்…” என,
“சரி சரி தூங்குவோம்…” என்று மைதிலி ஜகா வாங்க,
“ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டு நீ தூங்கு…” என்றான் ஜெகந்நாதன்.
“வழக்கமா நான் தானே கேட்பேன்…?!”
“வழக்கத்துக்கு மாறாவும் சிலது நடக்கணும் தானே…”
“கேளுங்க கேளுங்க…”
“இன்னிக்கு என்ன நாள்?!” வழக்கமாய் மைதிலி கேட்கும் கேள்வியை ஜெகா கேட்க, மைதிலி என்ன யோசித்தும் அவளுக்கு விடை தெரியவில்லை.
“என்ன நாள்?!” என்று அவனையே திரும்ப திரும்பக் கேட்க,
“நீதான் எல்லாத்தையும் நியாபகம் வச்சு இருப்பல்ல.. சொல்லு…” என்று கெத்தாய் சொன்னான் ஜெகந்நாதன்.
“இல்லையே இன்னிக்கு அப்படி ஒன்னும் இல்லையே…” என,
“இருக்கு இன்னிக்கு என்ன நாள்?!” என்று திரும்பக் கேட்க,
“நிஜமா தெரியலை…” என்று உதடு பிதுக்கினாள் மைதிலி.
“அப்படியா?!”
“ம்ம்ம்…” என்றவள் எழுந்து அமர்ந்து, “நான் எல்லா நாளையுமே சரியா நியாபகம் வச்சிருப்பேன்.. ஆனா இன்னிக்கு?!” என்று பாவமாய் யோசிக்க, ஜெகந்நாதனுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவளை இழுத்துத் தன் மீது போட்டுக்கொண்டவன் “இன்னிக்கு ஒரு நாளும் இல்லை. நான் சும்மா வம்பிழுத்தேன்…” என்று சொல்ல,
“அட..!!!” என்று அவன் மார்பில் குத்தியவள், “நிஜமாவே நான் யோசிச்சேன்…” என,
“அடிக்கடி நான் இப்படி வம்பிழுப்பேன் சோ நிறைய யோசிக்காத…” என்றவன் “தூங்கனுமா?!” என்றான் பாவமாய்.
“தூக்கனும்… ஆனா டயர்டா இருக்கு…” என்று வேண்டுமென்றே அவன் மீது அழுந்தி படுக்க, அடுத்த சில நொடிகளில், அவள் மீது அவன் அழுந்தி படுத்திருக்க,
“நீ இப்படியே என்னை பைத்தியம் ஆக்கிடுவ..” என்று சிரித்தான் ஜெகந்நாதன்.
இது அவர்களுக்குள் அடிக்கடி நடக்கும் ஒன்று. யார்க்கு அலுப்பாக இருந்தாலும், மற்றவர் அழுந்தி படுத்துக்கொள்ள வேண்டும். விளையாட்டாய் ஆரம்பித்த ஒன்று அதுவே அவர்களுக்கு பிடித்தமாகவும் ஆகவிட, இப்போதோ நிஜமாகவே இருவருக்கும் உடலில் அப்படியொரு அசதி இருந்தது நிஜம்.
இருந்தும் மனது விலக சம்மதம் கொடுக்கவில்லை.
“மைத்தி…” என்று ஜெகா கிசுகிசுப்பாய் அழைக்க,
“ம்ம் லைட் எறிஞ்சிட்டே இருக்கு…” என்றாள் மைதிலி.
“நான் ஆப் பண்ணிட்டு வந்தா நீ மறுபடி லைட் ஆன் பண்ண சொல்லுவ…” என,
“நைட் லேம்ப் போட்டுக்கலாம்…” என்று இவளும் சொல்ல,
“ஆனாலும் உனக்கு வாய் ஜாஸ்தி…” என்றவன் அவளது இதழில் முத்தமிட்டவன், அடுத்து கன்னம் கழுத்து என்று முன்னேற, மைதிலி வேகமாய் கண்களை மூடிக்கொண்டாள்.
“கண்ண மூடிட்டா இருட்டா தானே இருக்கு உனக்கு….” என்றதுமே மைதிலி வேகமாய் கண்கள் திறக்க, அப்போது வேகமாய் வேண்டுமென்றே மீண்டும் ஜெகா முத்தமிட, இம்முறை மைதிலி கண்கள் மூடவில்லை.
அவனது தேடல்கள் அவளுக்குத் தெரியும். அவளது தேவைகள் அவனுக்குப் புரியும்.
இருவரும் வேறல்ல என்று உணரும் தருணம்…
அவர்கள் இதயத்தில் ஒரு நினைவுதான்… காதல் தான்…!
அவர்களின் இந்த காதல் பொழுதை அவர்களோடே விட்டு, நாம் வாழ்த்தி விடைபெறலாம்..