இதயத்திலே ஒரு நினைவு – 17
“நீயும் என்னோட வா டி ரேகா…” என்று மைத்தி அவளை அழைத்துக்கொண்டு இருக்க,
“நானா? நான் எதுக்கு?!” என்றாள் ரேகா.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது நீ என்கூட வரணும்…” என,
“நான் வந்தா ஜெகாண்ணா திட்டும்…” என்றாள் ரேகா.
“வரலன்னா நான் பேசவே மாட்டேன்…” என்று மைதிலி பிடிவாதம் செய்ய,
“எப்படியோ என்னை மாட்டிவிட போற நீ…” என்ற ரேகா அவளோடு வருவதாய் ஒத்துக்கொண்டாள்
எல்லாம் வேறெங்கே, மதுரை திருமலை நாயக்கர் மகால் செல்லத்தான்.
ஆம்! அங்கேதான் ஜெகாவும் மைதிலியும் சந்திப்பதாய் முடிவாகி இருந்தது.
குமரனும் சுகுணாவும் அன்றைய தினம் இரவே வந்திருக்க, அன்றைய தின இரவெல்லாம் மைதிலிக்கு உறக்கமே இல்லை. பெற்றவர்களும் உறங்கவில்லை. பேசிக்கொண்டே இருந்தனர்.
குமரன் தன் அண்ணன் மற்றும் அண்ணன் மகளை எண்ணி நிறைய நிறைய வருந்தி பேச, சுகுணாவோ “நான் ஆரம்பத்துலயே சொன்னேன் யார் கேட்டா… உங்க அண்ணி கடைசியில நீயும் ஒரு பொண்ணு பெத்து வச்சிருக்கன்னு சொன்னாங்க. இப்போ என் பொண்ணா லவ் பண்ணிட்டு வந்து நிக்கிறா…” என்று பேச,
அதெல்லாம் மைத்தி அப்படியே மனதில் வாங்கிக்கொண்டு இருந்தாள்.
‘நம்ம லவ் பண்ணா அப்போ அம்மா அப்பாவும் எவ்வளோ பேருக்கு பதில் சொல்ல வேண்டி வரும்?’ என்று தோன்ற, ஜெகாவை எத்தனை பிடித்திருந்தாலும், அத்தனைக்கு அத்தனை வேண்டாம் என்று சொல்லும் எண்ணமும் திடம் பெற்றது.
ஆனால் அப்பாவும் அம்மாவும் இப்படியொரு மனநிலையில் இருக்கையில், திருமலை நாயக்கர் மஹால் செல்ல வேண்டும் என்று கேட்டால் நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள். ஆனாலும் நாளை எப்படியாவது சென்றே ஆகவேண்டும் என்று மைதிலி யோசிக்க, வேறு வழியே இல்லை விடிந்ததுமே
“ம்மா ரேகா வீட்டுக்கு போயிட்டு வர்றேன்…” என்று நின்றாள்.
“எதுக்கு?”
“அதும்மா… நேத்து காலேஜ் போகலைல.. அதான் என்ன நடத்தினாங்கன்னு கேட்க…” என,
“அதை போன்லயே கேளு…” என்றார் சுகுணா.
“ம்மா…”
“ம்ம்ச்… இருக்குற டென்சன் போதாதுன்னு நீ வேற ஏன் டி…”
“போயிட்டு உடனே வர்றேனே மா…”
“சரி.. போனோமா வந்தோமான்னு இருக்கணும்…” என்ற சுகுணாவின் குரல் கண்டிப்புக்கு மாற, இதோ ரேகா வீட்டிற்கு வந்து அவளை வர சம்மதிக்க வைத்துவிட்டு
“சரி நீ வந்து எங்கம்மாக்கிட்ட கேளு.. எங்க சித்தி பொண்ணுங்க எல்லாம் வந்திருக்காங்க.. எல்லாரும் நாங்க மஹால் போறோம். மைதிலியை கூட அனுப்புங்கன்னு…” என, ரேகா திருட்டு முழி முழித்தாள்.
“என்ன டி முழிக்கிற?!”
“என்ன டி இப்படி வாய் கூசாம பொய் சொல்ல சொல்ற?”
“ம்ம்ச் எனக்கு வேற வழி தெரியலை டி. ப்ளீஸ்.. எனக்கு இந்த டென்சன் எல்லாம் தாங்கவே முடியலை ரேகா… உன் அண்ணன் அதுக்கு மேல.. போன்ல அவ்வளோ சொல்றேன், நேர்ல பார்த்துத் தான் பேசணும்னு பிடிவாதம் செய்றாங்க…” என,
“ஹ்ம்ம் லவ்வரோட வெளிய போகத்தான் எல்லாம் வீட்ல பொய் சொல்லிட்டு போவாங்க.. நீ வேணாம்னு சொல்றதுக்கே பொய் சொல்லிட்டு போகணும்னு நிக்கிற…”
“என் நிலைமை அப்படி…”
“உனக்குத்தான் புடிச்சிருக்கே டி.. பின்ன என்ன? ஜெகாண்ணாக்கிட்ட எல்லாம் எடுத்து பேசினா கண்டிப்பா புரிஞ்சுக்கும். ஒரு பிரச்சனைன்னு வந்தா கூட அது தைரியமா எல்லாம் பார்க்கும்…” என்று ரேகா சொல்ல,
“அவங்க பார்ப்பாங்க.. ஆனா எங்க குடும்பத்துல இப்போதான் ஒரு பெரிய பிரச்சனை நடந்திருக்கு. அதுவே இன்னும் எத்தனை வருசத்துக்கு கஷ்டம் கொடுக்குமோ தெரியலை. இதுல நானும் லவ் பண்றேன்னு போய் நின்னா அவ்வளோதான்..
அதையும் தாண்டி, நீ சொல்றியே பிரச்சனைன்னு வந்தா ஜெகாண்ணா பார்த்துக்கும்னு, அது அவங்களுக்குமே எவ்வளோ கஷ்டம். அவங்க வீட்ல என்ன நினைப்பாங்க.. இதெல்லாம் யோசிக்கணும் ரேகா. லவ் வரும் தான் இந்த வயசுல. ஆனா அதுக்காக எல்லாம் லவ் பண்ணிட்டு இருக்க முடியுமா?” என, மைதிலியின் இந்த பேச்சு பாதி புரிந்தும் புரியாதது போல இருந்தது ரேகாவிற்கு.