இதயத்திலே ஒரு நினைவு – 16
மைதிலிக்கு வெகுவாய் பதற்றமாய் இருந்தது. ஊருக்குச் சென்றிருக்கும் அப்பாவும் அம்மாவும் திரும்ப வருவதற்குள் இந்த ஜெகாவிற்கு ஒரு முடிவினை சொல்லி இந்த பிரச்சனையை இத்தோடு முடித்து விடலாம் என்று எண்ணியிருந்தாள்.
ஆனால் அவனோ நேரில் தான் சந்திக்க வேண்டும் என்று சொல்ல, என்ன செய்வது என்றே தெரியவில்லை.
ரேகாவிடம் பேசினாலோ “இங்கபாரு நீ முடிவா இருந்தா நேராவே சொல்லிடு…” என்றாள்.
நேராய் பார்த்து அவனிடம் எப்படி நீ எனக்கு வேண்டாம் என்று சொல்ல முடியும்.. அதுவும் மைதிலியால்?!
ஜெகாவோ அடிக்காடி போன் செய்துகொண்டே இருந்தான்.
பேசாமல் இருக்கலாம் என்றாலும் முடியவில்லை. ‘நீ போனை எடுக்கலன்னா நான் நேரா உங்க வீட்டுக்குத் தான் வருவேன்…’ என்று ஜெகா மெசேஜ் அனுப்ப, வேகமாய் அதனை அழித்துவிட்டாள் மைதிலி.
போனை ஆப் செய்து வைத்துவிடலாம் என்றாலோ, அப்பா அம்மா கேள்வி கேட்பர்.
யாருக்கு என்ன பதில் சொல்வது?!
நிச்சயம் இந்த காதல் எல்லாம் வீட்டினில் தெரிந்தால், அதுவும் ஏற்கனவே இப்படியொரு பிரச்சனை நிகழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் தெரிந்தால் அவ்வளவு தான். அப்பா என்ன செய்வார் என்றே தெரியாது.
அதற்குமேல் அம்மா..
இதெல்லாம் நினைத்தாலே மைதிலிக்கு மனம் பேதலித்தது.
என்ன செய்வது?!
ஆனாலும் ஏதேனும் செய்து எல்லாவற்றையும் முடிவிற்கு கொண்டு வந்திட வேண்டும் என்ற முடிவில் இருந்தவளுக்கு எப்படி தைரியம் வந்ததோ, ஜெகாவை நேரில் சந்தித்து பேசிடலாம் என்பதை செயல்படுத்தத் தொடங்கிவிட்டாள்.
எப்படி?!
ஜெகாவிற்கே மைதிலி அழைத்து “நாம நேர்ல பேசலாம்…” என,
நேரில் என்றால் எப்படியும் அவளை சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை நிறையவே இருக்க ஜெகந்நாதன் மிக மிக சந்தோசமாய் சரி என்றான்…
—————-