இதயத்திலே ஒரு நினைவு – 15
ஜெகாவிற்கு அப்படியொரு கோபம். மைதிலியின் வார்த்தைகள் அவனை வெகுவாய் சீண்டிவிட்டது.
அவ்வப்போது அவள் கண்டுகொள்ளாது செல்லும் போதெல்லாம், அவனுக்கு கோபம் வரும்தான். இருந்தும் கட்டுப்படுத்திக் கொள்வான். காரணம் அவனுக்குத் தெரியும் மைதிலிக்கு தன்னை பிடிக்கும் என்று. எப்படியும் பேசி அவளை சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு நிரம்பவே இருந்தது.
ஆனால் மைதிலி தான் பேசும் சந்தர்ப்பத்தைக் கூட கொடுக்கவில்லையே.
ஒவ்வொரு முறையும் அவனே தானே முயன்று முயன்று முன்னே வருகிறான்.
அவளோ விருப்பம் இருந்தாலும், வேண்டாம் என்பதில் திண்ணமாய் இருக்க, இப்போதோ ஜெகாவிற்கு பொறுமை போய்விட்டது.
அவன் ஆசையாய் பேசுகையில், அவள் இப்படி பேசினால், அவனும் தான் என்ன செய்வான்?!
மைதிலி பேசாது அமைதியாகவே இருக்க, “இங்க பார் மைத்தி.. நான் உன்ன நேர்ல பார்த்து பேசணும். அவ்வளோதான்…” என்று ஜெகா உறுதியாய் சொல்ல,
“என்னால முடியாது…” என்றாள் அவளும் அதே உறுதியில்.
“ஏன் முடியாது?”
“எதுக்கு வரணும்?”
“எதுக்குன்னு உனக்குத் தெரியாதா? என்ன டி விளையாட்டு காட்டுறியா?” என்ற ஜெகாவின் குரலில் கோபம் கூடிக்கொண்டே போக,
“இப்போ நீங்கதான் பேசிட்டே இருக்கீங்க. நான் பேசவும் கூட எதுவுமில்லைன்னு சொல்றேன்…” எனும்போதே மைதிலியின் குரல் உடையத் தொடங்க, அதை மறைக்க வெகுவாய் முயன்றாள்.
ஜெகந்நாதனோ அதை சரியாய் கண்டுகொண்டான்…!
“இது ஒன்னு போதாதா மைத்தி…” என, மைதிலிக்கு தன்மீதே கோபமாய் வந்தது.
இந்த ஆசை கொண்ட மனதை என்ன சொல்லி அடக்குவது?!!