இதயத்திலே ஒரு நினைவு – 13
“என்ன டி மைத்தி இப்படி பண்ணிட்டு இருக்க?” என்று அன்று கல்லூரி முடித்து நேராய் வந்து ரேகா கேட்டாள்.
“நான் என்ன டி பண்ணேன்..?”
“நேத்தும் சீக்கிரம் கிளம்பிட்ட. இன்னிக்கு வரவேயில்ல…”
“எனக்கு முடியலை…”
“பொய் சொல்லாத டி…”
“நிஜம்மா…”
“வீட்ல தனியா இருக்க காலேஜ் வந்திருக்கலாம் தானே…”
“அதான் முடியலை சொன்னேனே…”
“ம்ம் என்னவோ போ.. ஜெகாண்ணா உன்னை கேட்டுச்சு..?” என்றதும் மைதிலிக்கு நெஞ்சம் திடுக்கென்றது.
இருந்தும் அதனை வெளிக்காட்டாது, “கிளாஸ்ல வேறென்ன நடந்தது…?” என்று கேட்க, ரேகா தோழியை சந்தேகமாய் பார்த்தாள்.
“சொல்லு டி…”
“கிளாஸ் வழக்கம் போலத்தான்.. சரி நீ சொல்லு நிஜம்மா உனக்கு முடியலையா?” என,
“சத்தியம் செய்யனுமா என்ன?” என்றாள் கடுப்பாய் மைதிலி.
“சரி அம்மா வர்ற வரைக்கும் என்னோட வந்து இருக்கியா?”
“இல்ல டி. அம்மா வந்திடுவாங்க…” என்று மைதிலி மறுக்க, சிறிது நேரத்தில் ரேகாவும் கிளம்பிவிட்டாள்.
சரியாய் ரேகா அவள் வீட்டுக்குச் செல்கையில் ஜெகந்நாதன் பிடித்துக்கொண்டான். ரேகாவிற்குத் தெரியும் எப்படியும் ஜெகா வந்து பேசுவான் என்று. ரேகாவிடம் விபரம் கேட்டு அறிந்தவன், அடுத்து அழைத்தது மைதிலிக்குத்தான்.
‘போன் அவக்கிட்ட தான் இருக்குண்ணா…’ என்று ரேகா சொல்லவும் இன்று போனிலாவது பேசிடவேண்டும் என்று தான் நினைத்தான்.
மைதிலிக்கும் தெரியும் எப்படியும் ஜெகா ரேகாவிடம் பேசுவான் என்று. அதனால் அவனின் அழைப்பை எதிர்பார்த்தே இருந்தாள். ஒரு முடிவாய் இன்று பேசிவிடவேண்டும் என்று.
ஜெகாவின் அழைப்பு வந்ததுமே தைரியமாய் ஏற்று காதில் வைத்தவளை அவனின் “மைத்தி…” என்ற தவிப்பானதொரு அழைப்பு, மொத்தமாய் வீழ்த்தியது.