இதயத்திலே ஒரு நினைவு – 11
“வாசு இந்த ட்ரெஸ் எனக்கு நல்லாருக்குல டா…” என்று அன்றைய தினம் பத்து முறைக்கும் மேலே கேட்டுவிட்டான் ஜெகந்நாதன்.
“டேய்…!!!” என்று வாசு பல்லைக் கடிக்க,
“சொல்லு டா…” என்றான் ஜெகா.
“நல்லாத்தான் டா இருக்கு…”
“ம்ம்ம்… நல்லாருக்கும்… நல்லா இல்லாம பின்ன என்ன?” என்று தனக்கு தானே கூறிக்கொண்டவன்,
“மைத்தி என்னடா இன்னும் காணோம்…?” என்று அடுத்த கேள்விக்கு ஜெகந்நாதன் போக,
“என்னைய கேட்டா எனக்கென்னடா தெரியும்?” என்றான் பாவமாய் வாசு.
“ம்ம் ஆமால…” என்றவனின் பார்வையோ மைதிலி எப்போதும் வரும் வழியைப் பார்த்து காத்திருக்க, நேரம் கடந்துகொண்டே இருந்ததுதான் மிச்சம், மைதிலி வந்தபாடில்லை.
“என்னடா இன்னும் காணோம்…?” என்று ஜெகா, வாசுவைப் போட்டு படுத்த,
“டேய்… போ டா… போயி நீயே தேடு.. என்னைய ஆள விடு…” என்ற வாசு நடையைக் கட்ட,
“நில்லுடா மாப்ள…” என்று பிடித்து நிறுத்திய ஜெகா, “இன்னும் கொஞ்சம் வெய்ட் பண்ணுவோம்…” என,
“நீ நில்லு. நான் ஏன் நிக்கணும்…?” என்றான் கடுப்பாய் வாசு.
இப்படியே நண்பர்கள் இருவரும் பேசி பேசியே நின்று நேரம் கடத்த, அங்கே மைதிலி இவர்கள் கண்ணில் சிக்காமல் வீடு வந்து சேர்ந்திருந்தாள். அதுவும் மதியம் கடைசி இரண்டு வகுப்புகளை விட்டு.
ஆசிரியரிடம் உடல்நிலை சரியில்லை என்று சொல்லி முன்னரே கிளம்பிவிட்டாள். ரேகா முறைத்தமைக்குக் கூட அவள் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவளுக்குத் தெரியும், இன்னமும் ஒருவாரமே இருக்கிறது எப்படியும் ஜெகா தன்னிடம் பேச முயல்வான் என்று. அவன் அவளிடம் தன் விருப்பத்தைக் கூறுவான் என்று.
அதுவும் இன்று காலையில் இருந்து அவனின் பார்வையே முற்றிலும் மாறுபாடாய் இருந்தது நிஜம். எங்கேயும் மைதிலியின் கண்ணில் படும்படி தான் ஜெகா நின்றுகொண்டு இருந்தான்.
இது ஒரு அவஸ்தையை அவளுக்குக் கொடுத்தது நிஜம்..
எப்படியோ இன்று தப்பித்தாகிவிட்டது என்று நினைத்துக்கொண்டாள்..
______________________________________
மைதிலிக்கு வந்த அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒன்றில் இருந்து இன்னும் வெளிவரவே அவளுக்கு முடியாத போது, புதிதாய் ஒன்றில் அவளது மனது எப்படி ஒன்றும்?!
“அப்பா…” என்றவளுக்கு அதற்குமேல் கேவல் மட்டுமே வந்தது. வார்த்தைகள் பிறக்கவில்லை.
“மைத்தி என்னடா…?!” என்று கேட்ட குமரன் நிஜமாகவே பயந்து போனார்.
பின்னே மகள் இப்படி அழுது அவர் பார்த்தது இல்லையே. சொல்லப்போனால் அவள் அழுதே அவர் பார்த்தது இல்லை. அப்படியிருக்க, ஒரு குரு ஸ்தானத்தில் இருப்பவள், இப்படி அழுகிறாள் எனில்?! குமரனுக்கு மகளை தாங்கள் சரியாய் கவனிக்கவில்லையோ என்று தோன்றிவிட்டது.
“மைத்திம்மா.. நாங்க கிளம்பி வர்றோம்டா…” என்று உடனே சொல்ல, சட்டென்று மைதிலி சுதாரித்து விட்டாள்.
வேதனையை விழுங்குவதும், கண்ணீரை மறைப்பதும் அவளுக்குப் புதிது இல்லையே.
“ப்பா அதெல்லாம் வேணாம்…” என்று பிசிறு தட்டினாலும் மைதிலி சொல்ல,
“ஏன் நீ இப்ப அழுத…?” என்றவர் சுகுணாவிற்கு சைகை செய்துவிட்டு எழுந்து சென்றிருந்தார், தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு. மகளிடம் தனியே பேச. சுகுணாவும் இரண்டொரு நொடியில் எழுந்து கணவர் பின்னே செல்ல, அப்பாவும் அம்மாவும் தான் மகளிடம் பேசினர்.
“அழறாளா?!” என்று கேட்ட சுகுணாவிற்கும் ஆச்சர்யமே.
குமரன் ஸ்பீக்கர் ஆன் செய்ய “நீ.. நீங்க விசேசம் முடிச்சே வாங்க…” என்ற மைதிலியின் குரலில் தெளிவில்லை.
“என்னாச்சு மைத்தி..?” என்று இப்போது சுகுணா கேட்க, மைதிலி கண்டுகொண்டாள் அப்பாவும் அம்மாவும் ஒன்றாய் இருந்து பேசுகிறார்கள் என்று.
“என்னாச்சு? இல்ல எனக்கு என்னாச்சுன்னு கேக்குறேன்…” என்று பேச்சை கோபமாய் மாற்றியவள்
“கல்யாணத்துக்கு போனா, போன வேலையை மட்டும் பார்க்கணும். அதைவிட்டு எனக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்னேனா நான்?” என,
“நீ சொல்லித்தான் நாங்க பார்க்கனுமா?” என்றார் சுகுணா.
“ஆமாம்…” என்று மைதிலி ஆணித்தரமாய் சொல்ல, கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சற்று முன்னே அழுதவளின் குரல் இதுவல்ல..!
“மைத்தி…” என்று குமரன் அழைக்க,
“அப்பா ப்ளீஸ் ப்பா… இப்போ எனக்கு கல்யாணம் எல்லாம் வேணாம்… போன வேலை என்னவோ அதைமட்டும் பார்த்துட்டு வாங்க. நான் மேல படிக்கலாம்னு இருக்கேன் ப்பா…” என,
“என்னடா இது திடீர்னு…” என்றார் தன்மையாகவே.
சுகுணா கணவரை முறைக்க, ‘இரு இரு…’ என்று மனைவிக்கு சைகை செய்தவர் “வேற எதுவும் உனக்கு பிரச்சனையா மைத்திம்மா?” என்று குமரன் கேட்பார் என்று மைதிலி நினைக்கவே இல்லை போல.
“எ.. என்னது?! என்னப்பா சொல்றீங்க?” என்றாள் புரியாது.
“இல்ல திடீர்னு படிக்க போறேன், கல்யாணம்லாம் வேணாம் அப்படின்னு சொல்றியே அதான்…” என்று குமரனும் இழுக்க, மைதிலி பதில் சொல்லாது அமைதியாய் இருக்க,
“ஏய் அப்பா கேக்குறார் தானே.. பதில் சொல்லு…” என்று சுகுணாவின் குரல் காட்டமாய் ஒலித்தது.
“பதில்னு ஒன்னு இருந்தா தானே சொல்ல…”
“என்ன டி உளறிட்டு இருக்க?”
“பின்ன என்னம்மா படிக்கணும், இப்போ கல்யாணம் வேணாம் சொல்றது குத்தமா?” என்று மைதிலியும் சத்தமாய் பேச,
‘விடு பார்த்துக்கலாம்…’ என்று மனைவியிடம் சொன்னவர் “சரிடா நீ டென்சன் ஆகாத.. ரிலாக்ஸா இருக்கு. நாளைக்கு சாயங்காலம் நானும் அம்மாவும் அங்க இருப்போம்…” என்றார் குமரன்.
“இல்லப்பா நீங்க ப்ளான் பண்ணபடியே வாங்க..”
“நாளைக்கு நாங்க அங்க இருப்போம்னு சொன்னேன் மைத்தி…” என்று குமரனும் சொல்லிவிட்டு வைக்க, மைதிலிக்கு அச்சோ என்றானது.
ஊருக்கு வந்தபிறகு அப்பா அம்மாவிடம் தன்மையாய் வேண்டாம் என்று சொல்லியிருந்தால், நிச்சயம் அவர்களும் சரி என்றிருப்பர். இப்போது சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாய், இவளே கிளறிவிட்டுவிட்டாளே.
‘வந்து என்னன்னு கேட்டா என்ன சொல்றது?!’ என்று தலையை முட்டிக்கொண்டாள் மைதிலி.
‘ச்சே லவ் பண்ணாலும் பிரச்சனை.. பண்ணாம இருந்தாலும் பிரச்சனை…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொள்ள, ஜெகந்நாதனுக்கும் சரி, மைதிலிக்கும் சரி, இவர்கள் இருவரையும் பெற்றவர்களுக்கும் சரி, அந்த இரவு அத்துனை உவப்பாய் இல்லை.
ஒருவித குழப்ப நிலையே அனைவருக்கும்..!
செல்வி அன்று உறங்கும்போதே பாண்டியனிடம் “ஜெகா நாளைக்கு வரலைன்னு சொல்றான்…” என,
“ஏனாம்?” என்றார் அவரும் சாதாரணமாய்.
“என்னவோங்க ஆரம்பத்துல இருந்தே இந்த பையன் அவ்வளோ ஒன்னும் இன்ட்ரெஸ்ட் காட்டல…”
“என்ன சொல்ற நீ… நந்தினி வந்தா வெளிய எல்லாம் கூட்டிட்டு போறானே…”
“ப்ச்.. அது அந்த பொண்ணு வெளிய போகணும்னு ரத்னாக்கா கிட்ட சொன்னா, அவங்க இவன்கிட்ட சொல்லி, அப்படித்தான் கூட்டிட்டு போனான்…”
“ஓ…!”
“என்ன ஓ! இதெல்லாம் நீங்க எங்க கவனிக்கிறீங்க?” என்று சலித்த செல்விக்கு உள்ளூர கோபமே.
பின்னே ஒரே மகன். பாராட்டி சீராட்டி வளர்த்தவன். இப்போது கூட வேறு பெண் பார்க்கிறோம் என்றால் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு தான் வருவர் ஜெகந்நாதனுக்கு பெண் கொடுக்க. ஒழுக்கத்திலும் சரி, பண்பிலும் சரி அவனிடம் யாரும் எவ்வித குறையும் சொல்லிடவே முடியாது.
அப்படிபட்டவன், இத்தனை வருடங்களை மனதில் ஒருத்தியை வைத்து மறுகிக்கொண்டு இருக்கிறான் என்றால், நிச்சயம் அவனுக்கு நல்லதாய் தானே எதுவும் செய்யவேண்டும் என்று தாயாய் அவரின் மனது எண்ணியது.
இருந்தும் எண்ணியதை நிறைவேற்ற அவர் மனதில் துணிவில்லை. அதுவே கணவர் மீது, ஒரு சலிப்பையும் எரிச்சலையும் காட்ட வைத்தது.
“என்ன செல்வி.. இதெல்லாம் இப்போ சொல்லி என்கிட்டே கோபப்பட்டா நான் என்ன செய்றது?”
“உங்கக்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட நான் சொல்றது?!”
“சரி என்ன பிரச்சனை இப்போ?!” என்று பாண்டியன் நேரடியாய் கேட்க,
“அவனுக்கு நந்தினி மேல அவ்வளோ விருப்பம் இல்லை போல…” என்றார் செல்வி பட்டும்படாமல்.
“விருப்பமில்லைன்னா?!”
“ம்ம்ச்… அந்த பொண்ணு மேல அவ்வளோ இஷ்டமில்லை..”
“அது நாளைக்கு கல்யாண புடவை எடுக்க போறப்போ, இன்னிக்கு ராத்திரி தான் சொல்லனுமா நீ?” என்றவர் நெற்றியை தேய்த்துக்கொண்டார்.
“எனக்கே இன்னிக்குத்தானே தெரியும்…”
“என்ன சொல்ற செல்வி…” என்று பாண்டியன், மனைவியைப் பார்க்க செல்வி அன்றைய தினம் நடந்தவைகளை எல்லாம் சொல்ல, பாண்டியனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
இத்தனை தூரம் வந்தாகிவிட்டது. அவர்கள் வீட்டில் பத்திரிக்கை கூட அடித்துவிட்டனர். இதோ நாளை வரும்போது பத்திரிக்கையும் கொண்டு வந்துவிடுவர். இந்த நேரத்தில் இப்படியெனில்?!
இதில் இருந்து பின்வாங்க எல்லாம் முடியவே முடியாது.
அதிலும் இப்போது?! கடைசி நேரத்தில் யாரால் என்ன செய்ய முடியும்..
அதையும் தாண்டி, நிரஞ்சனி.. அவளை பற்றி யோசிக்கவேண்டுமே. ரத்னாவிற்கும் சரி நிரஞ்சனிக்கும் சரி இவர்கள் தானே எல்லாம். அப்படியிருக்க, ஜெகாவின் விருப்பம் அவர்களை நிச்சயம் சிரமத்திற்கு உள்ளாக்குமே.
“என்னங்க அமைதியா இருக்கீங்க?” என்று செல்வி கேட்க,
“வேறென்ன செய்ய?” என்றவர் “என்ன சொல்றான் ஜெகா?” என்றார்.
“அவன் என்ன சொல்வான்… எல்லாத்துக்கும் சரின்னு தானே நிக்கிறான். எனக்குத்தான் இப்போ மனசு அடிக்குது. என்புள்ள கடைசி வரைக்கும் சந்தோசமில்லாம வாழனுமான்னு…”
“நீ ஏன் அப்படி யோசிக்கிற? கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டி மேல விருப்பம் வராம போகுமா என்ன? நந்தினியும் நல்ல பொண்ணா இருக்கு. காதலிக்கிறவங்க எல்லாம் அவங்களையேவா கல்யாணம் செய்றாங்க. இல்லையே.. அதெல்லாம் அவன் மனசும் கொஞ்ச நாள்ல மாறும்..”
“அதுக்காக தெரிஞ்சே நம்ம…” என்று செல்வி மேற்கொண்டு பேச வந்தவரை “செல்வி… நீ பண்றது சரியில்லை. அவன் சரின்னு சொல்லித்தானே இருக்கான். இதோட விடு. கல்யாணம் நல்லபடியா நடக்கும். நடக்கணும். அவன் வாழ்க்கையும் நல்லாருக்கும்.. நீ அமைதியா இரு…” என, செல்வி கணவரை முறைக்கத்தான் செய்தார்.
“நிஜம்மா..! எதார்த்தம்னு ஒன்னு இருக்கு. இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து பழகுறாங்களா இல்லைத்தானே.. அதோட விட்டுடு…”
“என்னங்க நீங்க?”
“குடும்பம் நல்லாருக்கணும்னா சில கசப்புகளை ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்..” என்று பாண்டியன் முடிவாய் சொல்லிவிட, அதற்குமேல் செல்வி என்ன செய்ய முடியும்.
புலம்பிக்கொண்டே படுத்திருந்தார்.
விடியல் யாருக்கு என்ன வைத்திருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
பொழுதும் அதன் நேரத்தில் தன்னைப்போல் விடிய, ஜெகந்நாதனின் வீடு ஆட்களால் நிரம்பி இருந்தது. காலை நேரத்திலேயே மாப்பிள்ளை வீட்டில் இருந்தும், நந்தினியின் வீட்டில் இருந்தும் அனைவரும் வந்திருந்தனர்.
நிரஞ்சனி ஆடை அலங்காரம் என்று புது ஜொலிப்பில் இருந்தாள். அந்த ஜொலிப்பு நந்தினியிடம் இல்லை. மிக சாதாரணமாய் இருந்தாள். ஆனால் அதுவே அவளை பேரழகியாய்த்தான் காட்டியது.
ரத்னா கூட “நந்தினி அழகா இருக்கால்ல…” என்று செல்வியிடம் சொல்ல,
“ஆமாக்கா…” என்றவரின் பார்வையும் நந்தினியைத் தான் அளந்தது.
‘ஆண்டவா.. இந்த பொண்ணு எப்படியாவது என் பையன் மனசுல இடம் பிடிச்சிடனும்..’ என்று செல்வி வேண்ட,
கமலாவும் அங்கேதான் இருந்தார் நந்தினியை நோட்டம்விட்ட படி. நந்தினியின் பார்வையோ ஜெகந்நாதனைத் தான் சுற்றிக்கொண்டு இருந்தது. அவனோடு தனியே சிறிதேனும் பேச வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டு இருந்தாள்.
காலையில் அனைவரும் இங்கே விருந்துண்டுவிட்டு, சேலை எடுக்கப் போவதாய் இருந்தனர். செல்விக்கும் ரத்னாவிற்கும் வேலை சரியாய் இருந்தது. ஜெகந்நாதனும் வந்தவர்களை கவனிப்பதில் இருந்தான். நந்தினியிடம் இன்னமும் ஒரு பார்வையை கூட செலுத்தவில்லை.
நந்தினியின் அப்பாவோ “மாப்ள என்ன இப்படி ஓடிட்டே இருக்கீங்க.. வாங்க வந்து உக்காருங்க பேசுவோம்…” என்று ஜெகாவை அழைக்க,
“இருக்கட்டும்… நல்ல நேரத்துல சரியா எல்லாரும் கிளம்பனும்…” என்று நழுவ பார்க்க,
“அட எல்லா நேரமும் நல்ல நேரம் தான் மாப்ள.. வாங்க இப்படி வந்து உட்காருங்க…” என, ஜெகந்நாதனுக்கு தவிப்பாய் இருந்தது.
இதற்குதான் அவன் அப்பாவிடம் அன்றே சொன்னான் “நேரா அவங்கள கடைக்கு வர சொல்லிடுங்க…” என்று.
பாண்டியனோ “ஒரு கல்யாணத்துக்கு ரெண்டு கல்யாணம்டா.. ரெண்டு சம்பந்தம்.. நம்ம கௌரவம் விடாம செய்யனும்..” என்றுவிட்டார்.
இப்போதோ ஜெகந்நாதனுக்கு யாரையும் மரியாதை குறைவாய் நடத்தவும் முடியாது. இந்தத் திருமணம் நடக்கிறதோ இல்லையோ, வீட்டிற்கு வந்திருப்பவர்களை நல்ல முறையில் நடத்திட வேண்டும் அதுதான் அவனின் எண்ணமாய் இருக்க, நந்தியின் அப்பாவோ அவனை பேச அமரச் சொல்ல, சற்று தள்ளி நின்றுகொண்டு இருந்த பாண்டியனைப் பார்த்தான் ஜெகந்நாதன்.
மகனின் பார்வையை உணர்ந்தவர் வேகமாய் அங்கே வந்து “என்ன ஜெகா இன்னும் இங்க நின்னுட்டு இருக்க.. சேலை, தாலி எல்லாம் எடுத்துட்டு நேரா மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய், அம்மன் காலடியில வச்சு வாங்கிட்டுத்தான் மறுவேலை… எல்லாரையும் நீதான் கிளப்பணும். நீயே நின்னுட்டு இருந்தா எப்படி…” என,
“சம்பந்தி நான்தான் மாப்ளைய கூப்பிட்டேன்…” என்று நந்தினியின் அப்பா சொல்ல,
“ஓ..! அப்படிங்களா சம்பந்தி.. ஜெகா ஒருத்தனா என்ன செய்வான்.. கடைக்கு போனா நிச்சயம் இவங்க எல்லாம் லேட் செய்வாங்க…” என்று பெண்களை காட்டியவர் மகனுக்கு ‘போ…’ என்று சைகை செய்ய, நந்தினியும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.
ரத்னா எத்துனை சொல்லியும் ஜெகா வரமாட்டேன் என்றுவிட்டான். அது இப்போது வரைக்கும் நந்தினி வீட்டாருக்குத் தெரியாது. கடைசி நேரத்தில் வேலை என்று சொல்லிக்கொள்வோம் என்று அனைவரும் இருக்க, நிரஞ்சனிக்கு பார்த்த மாப்பிள்ளையோ
“மச்சா சீக்கிரம் ரெடியாகுங்க…” என்று ஜெகந்நாதனின் அறைக்கே வந்துவிட்டான்.
“இல்ல மச்சான் அது…” என்று ஜெகா தயங்க,
“அட சீக்கிரம்.. அவங்க எல்லாம் முன்னாடி சேலை எடுக்க போகட்டும். நம்ம நாலு பேரும் ஒரே கார்ல பின்னாடி மெதுவா போகலாம்…” என, இதென்னடா சோதனை என்றானது ஜெகந்நாதனுக்கு.