கால் டாக்சியின் ஜன்னல் வழியே சாலையை வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்த மைதிலியின் மனதில் இப்படியான பழைய நினைவுகள். இதழில் ஒரு சிறு புன்னகையும் கூட.
கல்லூரி காலம். சந்தோசமான நாட்கள். தன்னைப்போல் இறகு முளைத்ததாய் ஓர் உணர்வு வந்துவிடும். மைதிலிக்கு ரேகா நெருக்கமான சிநேகிதி. மைதிலியின் அப்பாவிற்கு அரசாங்க உத்தியோகம். ஆகையால் அவளின் படிப்புகள் எல்லாம் பல பல ஊர்களில் இருக்கும். ஒருசில வருடம் விடுதி வாசம் கூட உண்டு.
பல ஊர்களில் வாசம் செய்திட நேர்ந்தாலும், அவள் மனதிற்கு மிகவும் நெருக்கமான நாட்கள் என்றால் இதோ இங்கே, மதுரை நாகமலை புதுக்கோட்டையில் வாழ்ந்த நாட்கள் தான். இருந்தது என்னவோ மூன்றாண்டுகள் தான். சரியாய் இளங்கலை படிப்பு அங்கே தான் ஆரம்பித்தும் முடித்ததும்.
பசுமையான நாட்கள். இப்போதும் கூட நெஞ்சில் ஒரு ஜில் ஜிகர்ந்தண்டா பருகிய உணர்வை கொடுக்கும் நாட்கள் அது. இதோ கிட்டத்தட்ட ஆறாண்டுகள் கழித்து அங்கே மீண்டும் பயணிக்கிறாள். இங்கிருந்து சென்ற பிறகு மீண்டும் இங்கு வரும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவேயில்லை.
இளங்கலை மூன்றாமாண்டு படித்துக்கொண்டு இருக்கையில் அவளின் அப்பாவிற்கு வேலை மாற்றல் வர, பரீட்சை முடிந்ததுமே சென்னை பயணம். மேற்கல்வி எல்லாம் அங்கேதான். வேலையும் ஓராண்டு வரை அங்கே ஒரு கல்லூரியில் விரிவுரையாளராய் இருந்தாள்.
என்னதான் பட்டிணத்து வாழ்வு என்றாலும், மனதின் அடி ஆழத்தில் ஒரு மூலையில் மதுரை வாசமும் வீசிக்கொண்டே இருந்தது. அதன் மல்லிகை மனம் போல.
விளைவு, இதோ அவள் படித்த அதே கல்லூரியில் அவளின் அதே துறையில் விரிவுரையாளராய் வந்துவிட்டாள். உத்தியோகத்திற்கான உறுதி சான்றிதல் வரவும், என்னவோ மைதிலிக்கு மிகவும் சாதித்த உணர்வு.
அவளின் அம்மா சுகுணா கூட “கண்டிப்பா போகனுமா?” என்று கேட்க,
அப்பா குமரனோ “என்னடா திடீர்னு அவ்வளோ தூரம்…?” என்று பார்க்க,
“புது இடம் ஒன்னும் இல்லையே. என்னவோ அங்க போகணும் போல இருக்கு…” என்றாள் புன்னகை முகமாய்.
குமரனுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருந்தது பணியில் இருந்து ஓய்வு பெற.
சுகுணாவோ “இப்போ என்ன அப்பாக்கு ரிட்டயர்மென்ட் ஆகவும் அங்கேயே ஒரு வீடு பார்த்துட்டு வந்திடுறோம்…” என,
“நீங்க இங்கயே இருங்க. அப்போதான் லீவ்னா எனக்கு வந்து போக நல்லாருக்கும்…” என்று சொல்லியும்விட்டாள்.
“ம்ம்ம் எல்லாம் இவ வச்சது தான் சட்டம். ஒரு பொண்ணுன்னு நீங்க ரொம்பத்தான் அவளுக்கு இடம் கொடுக்குறீங்க.. இப்போவே லேட். இதுல வேலைக்குன்னு அங்க வேற போறா. அவளுக்கு கல்யாணம் பண்ற எண்ணமே இல்லையா?” என்று சுகுணா குமரனிடம் கடிய மட்டுமே முடிந்தது.
“வேலைக்குப் போறேன்னு தானே சொல்றா. கல்யாணம் வேணாம்னு சொல்லவே இல்லையே என் பொண்ணு…” என்று குமரனும் சொல்ல,
கல்யாணம் என்ற வார்த்தையை கேட்டதுமே மைதிலி மனதில் ஜெகந்நாதனின் முகம் வந்து போனது.
‘ஜெகா…’ அவனின் நண்பர்களுக்கு, வீட்டினர்களுக்கு.
‘கல்யாணம் ஆகிருக்குமா அவங்களுக்கு..?’ யோசிக்கும் போதே மைதிலிக்கு மீண்டும் கல்லூரி கால நியாபகங்கள்.
அவனின் பார்வை கொடுக்கும் திடுக்கிடலையும், அதிகரிக்கச் செய்யும் இதயத் துடிப்பதையும், குப்பென்று கரங்களும், கழுத்தும் வியர்த்திடும் உணர்வை இப்போதும் அவள் நெஞ்சம் உணர்ந்தது.
சென்னையில் இருந்து மதுரைக்கு ப்ளைட்டில் வந்திருந்தாள். விமான நிலையத்தில் இருந்து நாகமலை புதுக்கோட்டைக்கு கால் டாக்சியில் பயணம். இத்தனை ஆண்டுகள் இடைவெளியில் நிறைய நிறைய மாற்றங்கள் அவள் காண, மீண்டும் அதே கேள்வி அவளுக்குள் “கல்யாணம் ஆகிருக்குமா அவங்களுக்கு…?” என்று.
‘என்ன நம்மள விட மூணு வருஷம் ம்ம்ம் இல்லை ரெண்டு வரும் பெரியவங்களா இருப்பாங்க… ம்ம்ம் ஒரு இருபத்தியொன்பது வயசு இருக்குமா? இருக்கும் இருக்கும். ஒருவேளை கல்யாணம் ஆகியிருந்தா?’ என்று நினைத்தவள்,
‘ம்ம்ச் மைத்தி… நீ இங்க வரணும்னு முடிவு பண்ணது வேலைப் பார்க்க. உன்னோட பழைய பிரண்ட்ஸ் எல்லாம் பார்க்க. அதுமட்டும் தான். இப்போ நீயா தேடிவந்து என்ன ஆகப் போகுது. அவங்க வந்து சொல்றப்போ அப்படி அசால்ட்டா பேசிட்டு போன தானே. இப்போ என்ன அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு…’ என்று தனக்கு தானே குட்டிக்கொண்டாள்.
இவர்கள் எல்லாம் பயின்றது ஒரு தனியார் கல்லூரி தானே. அங்கேயே மாணவிகளின் விடுதியில் மைதிலிக்கும் தங்க ஓர் அறை கொடுத்திருந்தனர். எல்லாம் வருவதற்கு முன்னமே பேசியாகிவிட்டது. அத்துனை ஏன் ரேகாவோடு கூட பேசியாகிவிட்டது.
மதுரையில் இருந்து சென்னை சென்ற பிறகு தினம் தினம் பேசுவார்கள். பின் நாட்கள் சென்று வருடம் கடக்க எப்போதாவது என்றாகி ரேகாவிற்கு திருமணம் முடிந்து இப்போது இரண்டு பிள்ளைகள் என்றாகவும் அதுவும் நின்று போனது.
அங்கே வருகிறேன் என்று சொல்ல அழைத்து மைதிலி பேசவும் “ஏ மைத்தி நிஜமாவா?!!” அப்படியொரு சந்தோஷ ஆர்ப்பரிப்பு ரேகாவிற்கு.
“ஆமா ரேகா…”
“சூப்பர் டி.. அதுசரி எங்க தங்குவ.. எங்க அம்மா வீட்ல மாடி ரூம் இருக்கே.. அங்க கிளீன் பண்ண சொல்லிடவா?” என்று வேக வேகமாய் அடுத்த கட்டம் ரேகா போக,
“டி.. நான் அங்க வேலைக்கு தான் வர்றேன். அதனால காலேஜோட ரூல்ஸ் பாலோ பண்ணனும்…”
“அதானே பார்த்தேன். நீ இன்னும் மாறல. ம்ம் சரி சரி முதல்ல வா..” என்றவள், தன் வீட்டு முகவரி சொல்லி எப்படி வரவேண்டும் என்பதனையும் சொல்லிவிட்டாள்.
இதோ நேராய் ரேகாவின் வீடு தான் செல்கிறாள் மைதிலி. அங்கே காலை உணவு முடித்து பின் தான் கல்லூரி செல்லவேண்டும் என்பது ரேகாவின் கண்டிப்பான உத்தரவு. டாக்சியில் ஏறியதில் இருந்து பத்து முறைக்கும் மேலே ரேகா அழைத்துவிட்டாள்.
“எங்க மைத்தி வந்துட்டு இருக்க..?” என்று கேட்டு.
மைதிலியும் இடம் சொல்ல “இன்னும் அஞ்சு நிமிஷம் தான்…” என்றவள், அவர்கள் வீடு இருக்கும் சந்தின் முக்கிலேயே வந்து நிற்க, ரேகா சொன்ன அந்த ஐந்து நிமிடங்களும் முடிந்து இதோ ரேகாவின் முன்னம் மைதிலி நிற்க,
“டி மைத்தி…” என்று ரேகா கட்டிக்கொண்டாள்.
“யப்பா எவ்வளோ வருஷம்… சும்மாகூட நீ இங்க வரலை பாரேன்…”
“எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம் டி…” என்ற ரேகாவிற்கு அடுத்து வாய் மூடவில்லை.
இருவரும் வீடு சென்று, வீட்டில் இருப்பவர்களை அறிமுகம் செய்து, மைதிலி குளித்து முடித்து பின் உணவு உட்கொள்ள வர, ரேகாவோ ரெக்கை இல்லாமல் பறந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ரேகாவின் கணவன் செந்தில் கூட “ம்மா மெதுவா.. இது கொஞ்சம் பழைய வீடு. நீ ஓடுற ஓட்டத்துக்கு எங்கயாவது ஓட்டை விழுந்திட போகுது…” என்று கிண்டல் செய்ய,
“உங்களுக்கு என்ன தெரியும்.. நானும் மைத்தியும் எவ்வளோ க்ளோஸ் தெரியுமா?” என்ற ரேகாவிற்கு நிஜமாகவே இன்னும் நம்பிட முடியவில்லை மைதிலி இதோ அவளின் கண் முன் அமர்ந்து, அவள் சமைத்த உணவினை உட்கொள்கிறாள் என்று.
“ரேகா சும்மா சொல்லக் கூடாது டி. நீ இவ்வளோ நல்லா சமைச்சிருக்க…”
“நல்லாருக்கா… அப்போ இன்னும் ரெண்டு பூரி வைக்கிறேன்…” என்று தட்டில் வைக்கப் போக,
“என்ன போதும்? உனக்கு பூரின்னா பிடிக்குமே. ஒழுங்கா சாப்பிடு. ஆனா ஒண்ணு டி, நீ இன்னும் மாறவே இல்லை. இந்த, அளவு சாப்பாடு சாப்பிடுறதுல. உடம்பு கூட இத்தனை வருஷத்துல அவ்வளோ ஒன்னும் போடல…”
“நீ வர்றல.. எனக்கு கொஞ்சம் ப்ரீ வேணாமா?” என்ற ரேகாவை ஒரு சிரிப்போடு பார்த்தவள்,
“இங்கதானே இருக்கப் போறேன். எப்போன்னாலும் பார்க்கலாம்…” என்றவள் உண்டு முடித்து நேரம் பார்க்க, கல்லூரி செல்ல இன்னும் நேரம் இருப்பது தெரிந்தது.
அவள் பார்வை உணர்ந்தே “அவர்ட்ட ஆட்டோ சொல்ல சொல்லிருக்கேன் மைத்தி…” என்று ரேகா சொல்ல,
“ம்ம்ம்…” என்றவள், தங்களோடு பயின்றவர்கள் பற்றி எல்லாம் விசாரிக்க, ரேகாவும் ஒவ்வொருவர் பற்றி சொல்ல,
“ரொம்ப பேர் இங்க இல்லையோ.. எல்லாம் வெளி ஊர்ல.. ம்ம்…” என்று தலையை ஆட்டிக்கொண்டவள்,
“அப்… அப்புறம்.. சீ… சீனியர் எப்படிருக்காங்க..?” என்றாள் சற்று தயங்கியே.
இப்போதும் கூட ரேகாவின் முகத்தில் ‘அதானே பார்த்தேன்…’ என்ற பாவனையே.
“ஹேய்…! சும்மாதான் கேட்டேன்…”
“நீ சும்மா கேட்டியோ இல்ல சுகமா கேட்டியோ, நான் என்ன சொல்ல…” என்று இரு கைகளையும் விரித்தாள் ரேகா.
“ஏன் டி என்னாச்சு…?” என்றவளுள் ஏதோ ஒரு பரபரப்பு.
“என்ன ஆகணும். இந்த ஜெகாண்ணா எவ்வளோ நல்ல டைப்.. அதுக்கு போய் ஆண்டவன் இப்படியொரு வாழ்க்கை கொடுக்கனுமா?” என,
“ஏய் ரேகா… எதுன்னாலும் புரியுற மாதிரி சொல்லு டி…” என்றாள் தன் நெஞ்சின் படபடப்பு தாளாது.
“ம்ம்ச் வேணாம். நீயே பல வருஷம் கழிச்சு இப்போதான் வந்திருக்க. விடு… இன்னொரு நாள் சாவகாசமா இதை பேசலாம்…” என்றவள்
“அவருக்கு போன் செய்யவா. ஆட்டோ அனுப்ப சொல்லவா?” என, மைதிலியோ பதற்றத்தின் உச்சத்தில் இருந்தாள்.
“ரேகா…!” என்று அவள் கை பற்றி நிறுத்தியவள்,
“பதில் சொல்லிட்டு நீ எதுவும் செய்…..” என,
“அட சொல்ற மாதிரி என்ன இருக்கு டி.. எதுவுமில்ல விடு…” என்று இழுத்தாள்.
“பரவாயில்ல என்ன சொல்லு.. சீ.. சீனியர் நல்லாருக்காங்க தானே…” என்று கேட்டவளுள் ஆயிரம் வேண்டுதல்கள் முளைத்துவிட்டன சடுதியில்.
“ஹ்ம்ம் இருக்காங்க… வாழ்க்கை தான் ஜெகாண்ணா எதிர்பார்த்த மாதிரி அமையல. கடமைக்குன்னு ஒரு வாழ்க்கை…”
“எ.. என்ன சொல்ற… எனக்கு புரியல…”
“அட இவ ஒருத்தி. வந்ததும் வராததுமா கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு. முதல்ல வந்த வேலையை பாரு டி நீ. வா கிளம்புவோம். மத்தது எல்லாம் பின்ன பேசலாம். கையெழுத்து போடுறது நல்ல நேரத்துல போடணும்…” என்று பிடிவாதம் செய்துவிட்டாள் ரேகா.
நேரம் வேறு கடக்க, மைதிலிக்கு கிளம்பவேண்டிய சூழல். வேறு வழியில்லாது அவளும் கிளம்ப, ரேகாவோ ‘அப்பாடி இந்தளவுக்கு விட்டாளே…’ என்று இருந்தது.
‘உண்மை தெரிஞ்சா இவ என்ன நினைப்பா?! பீல் பண்ணுவாளோ?! அதுசரி இப்போ பீல் பண்ணி என்ன செய்ய?’ என்று தனக்கு தானே எண்ணியவள்,
தன் கணவனுக்கு அழைத்து ஆட்டோ சொல்ல, ஆட்டோவும் சிறிது நேரத்தில் வந்துவிட்டது.
மைதிலிக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. என்னவோ என்னவோ என்று யோசித்துக்கொண்டே இருக்க, ஆட்டோ வந்து கிளம்பும் நேரம் கூட அவள் முகம் ஒரு தெளிவில் இல்லை. ரேகாவோ அதட்டி உருட்டிக்கொண்டு இருந்தாள்.
“சாமி கும்பிட்டு கிளம்பனும்…”
“நான் உள்ள எல்லாம் வரமாட்டேன்… நீதான் போகணும்…”
“முகத்தை இப்படி வச்சிருந்தா அப்படியே திருப்பி அனுப்பப் போறாங்க…”
“ஏன் டி நீ நிஜமா வேலைக்குத் தான் வந்தியா?!”
இப்படி அது இதென்று சொல்லி, ஒருவழியாய் இருவரும் கிளம்ப, கிளம்புகையில் அவளின் அம்மாவிற்கு அழைத்து பேசிவிட்டும் கிளம்பினாள் மைதிலி.
“இதெல்லாம் கூட நியாபகம் இருக்கா உனக்கு?” என்று ரேகா வார,
“ம்ம்ச் ரொம்ப ஒரேதா பண்ணாத டி. நீ எல்லாம் சொல்லிருந்தா நான் ஏன் இப்படி குழம்பப் போறேன்…”