அத்தியாயம் 12:

இத்தனை நாள் நான்

கண்ட தனிமை நொடியில்

விலகியது பெண்ணே உனை நான்

அள்ளி அணைத்திடுகையில்!

“நீ தான் வேண்டும் நீ மட்டும் தான் வேண்டும்…” என்று அவன் கூறியதில் தனுஷாவின் மனம் திடுக்கிட்டது…. ‘என்ன ஒரு தீரம் அவனது குரலில்’ என்று அவனை எடை போட முயன்ற மனதில் பயம் குடியேற தொடங்கியது.

இருந்தும் ஒருவாறு தன்னை திடப்படுத்திக் கொண்டு “ஹே யார்டா நீ..? ஏதேதோ உளறிட்டு இருக்க…. தைரியமானவனா இருந்தா உன் முகத்தை காட்டுடா…” என்று சத்தமிட,

“கூல் கூல் பேபி… வொய் டென்சன் ஹம்…மாமா முகத்தை பார்க்க அவ்வளோ அசையா இருந்தா சொல்லு… அடுத்த நொடி உன் பக்கத்துல இருப்பேன்… அதை விட்டுட்டு சும்மா சும்மா தெலுங்கு பட வில்லன் மாதிரி கத்திக்கிட்டு போ பேபி” என்று அவன் செல்லம் கொஞ்ச, தனுவிற்கு பத்திக் கொண்டு வந்த்து.

“ஒழுங்கா என்னை விட்டுடு… இல்லை என்ன நடக்கும்னே தெரியாது…. உன் பொறுக்கிதனத்தை எல்லாம் வேற யார்கிட்டையாவது வச்சிக்கோ… என்கிட்ட வேண்டாம்…. ராஸ்கல்..!” என்று கூற,

அவளை உயிருக்கு உயிராய் நேசிக்கும் தன்னை வார்த்தைக்கு வார்த்தை பொறுக்கி என்று சொன்னதும் கோபம் அடைந்தவன் அவளை நெருங்கி “யாரை பார்த்துடி பொறுக்கினு சொல்ற ம்ம்..?  நீ வேணும் உன் காதலும் அன்பும் எனக்கு மட்டுமே சொந்தமாகணும்…. அதே மாதிரி என்னோட காதலையும் அன்பையும் நீ மட்டுமே திகட்ட திகட்ட அனுபவிக்கணும்னு நினைக்குற…. நான் பொறுக்கியா..?” என்றபடி அவளது முகவாய் கட்டையை கன்னத்தோடு சேர்த்து பிடித்து கேட்க,

அவனது கோபத்தில் சற்று அரண்டவள் “யார் தான் இவன் என்னை ஏன் இப்படி அடைத்து வைத்திருக்கிறான்” என யோசிக்க யோசிக்க தலை வலிக்க ஆரம்பித்தது.

அவளது மௌனம் அவன் மனதை கரைக்க, அந்த இருட்டிலும் மருண்ட அவள் விழிகளின் ஒளியில் கவரப்பட்டவனாய் இத்தனை நாள் காத்திருப்பை பூர்த்தி செய்யும் விதமாய் காற்று கூட இடையில் புக முடியாதபடி தனுஷாவை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவனது இந்த செய்கையில் உடல் நடுங்கியவள் முடிந்த மட்டும் அவனை விலக்க முயற்சிக்க, அவளது முயற்சிகள் அனைத்தும் இரும்பில் மோதிய பஞ்சு போல் பயனற்று போனது.

தன்னால் அவனை முழுமையாக விலக்க முடியாமல் போன போதும் முடிந்த வரை தன் உடலை அசைத்து அவனை தள்ளிவிட முயன்றாள். அவளது இப்போராட்டம் அவனுக்கு தொந்தரவாய் இருக்க,

“ஹே சின்னு கொஞ்ச நேரம் ஆடாம இரேன்டி” என்று அவனது அன்பை அவளுக்கு காட்டிவிடும் நோக்கில் அணைப்பை மேலும் அதிகமாக்க,

“விடுடா விடுடா. பொறுக்கி” மீண்டும் தன் இயலாமையை கத்தி வெளிப்படுத்தினாள் தனுஷா.

“சின்னு வேண்டாம் நல்ல பையனா இருக்கணும்னு நினைக்குறேன். இப்படியே உசுப்பேத்துனனு வை அதுக்கு பிறகு நடக்க போறதுக்கு நான் பொறுப்பு இல்லை” என்று கூறியது தான் தாமதம் கப் சிப்பென்று வாயை மூடிக் கொண்டாள் தனுஷா.

“ஹம் ஹம் அதிரடி செய்கை தான் என் குட்டிமாக்கு ஒத்து வரும் போல” என முணு முணுத்துக் கொண்டு அவளை தானாக விலக்கியவன் “இப்போ நான் யாருனு உனக்கு தெரியணும் அவ்வளோ தான” என்றபடி தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த தொலைப்பேசியை எடுத்து ஒளிர செய்ய,

அதிலிருந்து வெளிப்பட்ட அந்த சிறு ஒளியில் அவனது முகத்தை கண்டவளின் முகம் முதலில் யோசனையாய் சுருங்கி மீண்டும் அவனை ஆராய்ந்தவளின் நினைவடுக்கில் இருந்த தகவல் மூளைக்கு பரிமாற்றபட அதிர்ச்சியாய் அவனை நோக்கி “நீயா” என்ற ஒற்றை சொல்லோடு ஏற்கனவே ஏற்பட்டிருந்த களைப்பு பாதி பசி மயக்கம் பாதியால் மயங்கி சரிந்தாள் தனுஷா.

தன் மேலேயே சரிந்து விழ போனவளை கைகளில் ஏந்தியவன் அங்கிருந்த ஷோபாவில் படுக்க செய்துவிட்டு கீழே சென்றவன் பாலை சூடு செய்து அதை கிளாசில் ஊற்றிக் கொண்டு திரும்பினான்.

தனுஷாவின் கன்னத்தை தட்டி எழுப்ப அசைந்தவள் கண்களை திறக்க முடியாமல் அப்படியே கிடந்தாள். அவளது விழியின் கருமணி அசைவதை கண்டவன் அவளை அப்படியே தன் மார்பில் சாய்த்த வண்ணம் கையில் இருந்த பாலை புகட்ட, இருந்த பசி மயக்கத்தில் மூச்சுவிடாமல் குடித்தாள் தனுஷா.

பசியில் கத்திக் கொண்டிருந்த வயிற்றிற்கு குடித்த பால் சற்று அமைதியை தர அயர்ந்து போய் இன்னமும் அவனின் மார்பில் சாய்ந்து இருப்பதை கூட உணராதவளாய் இருந்தாள் தனுஷா.

காலியான கிளாசை பக்கத்தில் இருந்த மேஜையில் வைத்தவன், அவளது உதட்டின் மேல் மீசை போல் ஒட்டியிருந்த பால் துளிகளை கண்டு புன்னகைத்தவன் தனது டீ சர்ட்டின் நுனி கொண்டு துடைத்துவிட்டு பின் காதல் கள்வனாய் அவளின் பிறை நெற்றியில் மெலிதாய் இதழ் பதித்தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“அம்மா ப்ளீஸ் மா என் செல்லம்ல ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்சியபடி அம்மாவின் பின்னால் அலைந்து கொண்டிருந்தாள் அனன்யா.

“சொன்னா சொன்னது தான் அவ்வளவு தூரம்லாம் போக வேண்டாம்” என்று கறாராக சொல்ல,

“அம்மா நான் என்ன ஊர் சுத்தி பார்க்கவா போறேனு சொல்றேன். கல்யாணத்திற்கு தான போயிட்டு வர்றேன் ப்ளீஸ்மா”

“அப்படி என்ன உனக்கு போகணும் ம்ம் உன் சிநேகிதிக்கா இருந்தாலும் பரவாயில்லை. சொல்லி குடுக்குற வாத்தியார் தங்கச்சி கல்யாணம் அதுக்கு இங்க இருந்து மெட்ராஸ் வரை போகணும்னு சொல்ற. இதெல்லாம் சரிபட்டு வராது”

“அய்யோ இந்த நேரம் பார்த்து போன் எடுக்காம என்னை அறுக்குறானே இந்த அரு. இல்லைனா அவங்ககிட்ட எதாவது ஐடியா கேட்ருக்கலாம். இப்போ என்ன பண்றது” யோசித்தவளின் மனதில் மணி அடிக்க,

“அம்மா நீயும் எங்கூட வாயேன். நாம் சேர்ந்தே போயிட்டு வரலாம். அப்படியே” என்று ஆரம்பித்தவளை முடிக்கவிடாமல்,

“ஹே என்னடி சொல்ற நான் அங்க வந்து என்ன பண்றது. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ ஏன் இவ்வளவு அடம்பிடிக்குற”

“நான் சொல்ல வர்றத முழுசா கேளேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து சென்னைக்கு போகலாம். அப்படியே அண்ணனையும் பார்த்த மாதிரி ஆச்சு. நீ அண்ணன்கூட இரு நான் கல்யாணத்தை அட்டன்ட் பண்ணிட்டு வர்றேன் . அதுக்கு பிறகு இங்க ரிட்டன் வந்திடலாம்” என்று கூற,

மகனை பற்றி சொன்னதும் இளாவை பார்த்தும் நாளானதால் தாயுள்ளம் அவனை தேட “சரி போகலாம்” என்றார்.

“என் செல்ல அம்மா” என்று அவரது கன்னத்தில் இதழ் பதித்தபடி “என்ன சொன்னா மடங்குவீங்கனு எனக்கு தெரியாதா அனுவா கொக்கா” என மனதிற்குள் இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்.

சென்னை செல்வதற்க்கு தேவையானவற்றை பேக் செய்தவள் நூறாவது முறையாக அருணை தொலைப்பேசியில் அழைத்தாள். அருணோ அழைப்பை எடுப்பதாக தெரியவில்லை.

அலைப்பேசியில் ஸ்கிரீன் சேவராக இருந்த அருணின் புகைப்படத்தை பார்த்து “எப்போ தான்டா போனை அட்டன்ட் பண்ணுவ..? நான் ரொம்ப பிஸினு கெத்து காட்டிட்டு இருக்க ஹம் ஹம்…. முழிய பாரு… நாளைக்கு உன்னை நேர்ல பார்க்க போறேன்… உன் ரியாக்ஷன் எப்படி இருக்கும்..? நான் வருவேனு எதிர் பார்த்திருப்பியா..? நீ போய் ஒரு வாரம் ஆச்சு போன அன்னைக்கு பேசுனதோட சரி அப்புறம் சார் ரொம்ப பிஸி…. உன்னை எப்போதும் தவிக்க விட மாட்டேனு சொல்லிட்டு என்னை இப்படி தவிக்கவிடுறியே. ஆனா இது கூட நல்லா தான்டா இருக்கு.” என்று அவனுடன் பேசுவதாய் கற்பனை செய்து நிழற்படத்துடன் முறையிட்டுக் கொண்டாள் அனன்யா.

அருணிடம் தான் வருவதை சொல்ல முடியவில்லை. அண்ணனிற்காவது சொல்லலாம் என நினைத்து இளாவை தொடர்பு கொள்ள போனை அணைத்து வைத்திருப்பதாக பதிவு செய்யப்பட்ட குரல் தான் கேட்ட்து.

“விளங்கும்…. சென்னையில் இருக்கவங்களுக்கு என்ன தான் ஆச்சு ஒருத்தரும் போன் பண்ணா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்றாங்க” அவள் தொடர்பு கொண்ட இருவர் எடுக்காதிருக்க ஒட்டு மொத்த சென்னையை கரித்துக் கொட்டினாள் அனு.

அவளும் தான் என்ன செய்வாள்? நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் என்று வடிவேல் சொல்வது போல் தான் சென்னை வருகிறேன் என்று சொல்லலாம் என நினைக்க ஒருவரும் அதை கேட்க தயாராக இல்லை போலும் அதனால் வந்த கடுப்பு தான் இது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நாளை மறுநாள் திருமணம் ஆனால் இன்னும் தனுவை தான் கண்டுபிடித்த பாடாக இல்லை. தாமோதரனோ உயிரற்ற கூடாக மகள் கிடைத்துவிட்டாள் என்ற செய்தி வராதா என்ற நம்பிக்கையில் காத்திருக்க, தியாவோ மொத்தமாக ஒடுங்கி போயிருந்தாள்.

அன்னை என பார்த்துக் கொண்ட அக்காவை காணாத துன்பம் அவளை அழக் கூட விடாமல் தொண்டையின் நடுவில் எதையோ வைத்து அழுத்தியது போல் பாரமாய் இருந்தது.

சஜனும் அருணும் காலில் சக்கரத்தை கட்டியது போல தனுவை தேடி அலைந்து கொண்டிருந்தனர். குளிக்க மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றனர்.அவர்கள் கிளம்பி சென்று நேரம் ஆகியதால் தகவல் ஏதாவது தெரிந்ததா என அறிந்து கொள்ள தாமோதரன் அருணிற்கு அழைக்க ரிங்க் போய் கொண்டே இருந்த்தே தவிர எடுக்கவில்லை.

அந்த நேரம் பார்த்து சிவப்பிரகாசம் போன் செய்ய அதை எடுத்தவர் “ சம்மந்தி  என் பொண்ணை பத்தி தகவ்ல் ஏதும் கிடைச்சுதா? மாப்பிள்ளை போன் செய்தாரா? என்று கேட்க,

இவர் என்ன சொல்கிறார்? யாரை காணவில்லை என நினைத்தவர் “என்ன சொல்றீங்க சம்மந்தி யாரைக் காணோம்..? சஜன் எதும் சொல்லலையே…? இப்போ தான் நாங்க சென்னை வந்தோம்…” என்று சொல்ல,

இவருக்கு எதும் தெரியாதா? அய்யோ சஜன் தம்பி சொல்ல்லையா மகன் சொல்லாவிட்டாலும் நீங்க ஏன் சொல்லவில்லை என்று கேட்டால் என்ன செய்வது? மனதிற்க்குள் மருகி கொண்டிருக்க,

“சம்மந்தி..! சொல்லுங்க யாருக்கு என்ன ஆச்சு..?” என்ற அவரது கலவரமடைந்த குரலில் நினைவிற்கு வந்த தாமோதரன்,

“அது வந்து சம்மந்தி..” என தயக்கத்துடன் தொடங்கி நடந்த அனைத்தையும் ஒரு மூச்சில் சொல்லிவிட்டு “மாப்பிள்ளை..! அவரே உங்க்கிட்ட சொல்றேனு சொன்னாரு… அதான் நான் சொல்லலை தப்பா நினைக்காதிங்க சம்மந்தி…” என்று கூற,

“ச்ச தப்பா எல்லாம் நினைக்கலை சம்மந்தி… நீங்க கவலைப்படாதீங்க… தனுஷாவை எப்படியும் கண்டுபிச்சுரலாம்…” என்று தைரியம் சொல்லி போனை வைத்தவரின் மனதிலோ மகனது செய்கை மீது கோபம் கொந்தளித்தது.

“கயல்… கயல்..!” என்று கோபத்தில் அலற அதில் திடுக்கிட்டவராய் ஓடிவந்த கயல்விழி “என்னங்க..! ஏன் இப்படி சத்தம் போடுறீங்க..?” என்று கேட்க,

“உன் மகன் பண்ணியிருக்க வேலைக்கு சத்தம் போடாம நான் என்ன டான்ஸா ஆட முடியும்..?” என்று சொல்ல,

“அப்படி என்ன தான் செஞ்சான்..? அதையாவது சொல்லுங்களேன்…” என்று அவரது கோபம் அறிந்து பவ்யாமாக கேட்க,

விஷயத்தை கூறியதும் கயல்விழிக்கும் முழி பிதுங்கியது.

‘நாளை மறுநாள் திருமணம் இந்த பையன் இவ்வளவு பெரிய விஷயத்தை மறைச்சிருக்கானே இவர் கோபப்படடுறதுல என்ன தப்பிருக்கு’ என்று நினைத்தவர் வெளியில் சொல்லவில்லை… தானும் பையன் செய்தது தவறு என்று சொன்னால் அவர் கோபத்தின் அளவு கூடுமே தவிர குறையாது என உணர்ந்தவராய் அவரால் அமைதியாய் மட்டுமே இருக்க முடிந்தது. சிவப்பிரகாசம் சஜனுக்கு தொடர்ந்து முயற்சிக்க ஆனால் அவனை தொடர்பு கொள்ள தான் முடியவில்லை

சஜன், அருண் சகிதம் இளாவின் அறையில் அமர்ந்திருந்தனர். அனைவரும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்தபடி இருக்க, அடுத்து என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை.

செக்யூரிட்டி கேமிராவில் பதிவான தகவல்கள் எதுவும் உபயோகமாக இல்லை. அங்கிருந்து கிடைத்தது தனுவின் தொலைப்பேசி மட்டுமே. அதை வைத்தும் ஒன்றும் நடக்க போவதில்லை என்று அனைவரும் அறிந்தே இருந்தனர்.

அந்த நேரம் அருணின் தொலைப்பேசி ஒலிக்க எடுத்து பார்த்தவன் தந்தை தான் மறுபடியும் மறுபடியும் அழைக்கிறார். இதற்கு மேல் எடுக்கவில்லை என்றால் சரிவராது என உணர்ந்தவனாய் “எக்ஸ்கியூஸ் மீ… “ என்றவாறு வெளியே சென்றவன் போனை எடுத்து “ அப்பா சொல்லுங்க…” என்று சொல்ல,

அவர் கூறிய செய்தியில் அதிர்ச்சி அடைந்தவன் “என்னப்பா சொல்றீங்க? உண்மை தானா? சரி.. சரி… ஒரு ஐந்து நிமிஷத்துல வந்திடுறோம்…” என்று போனை வைத்துவிட்டு,

ஓட்டமும் நடையுமாய் இளாவின் அறைக்குள் நுழைந்தவன் “சஜன் குட் நியூஸ் தனு கிடைச்சிட்டா…. அப்பா தான் இப்போ போன் பண்ணினாங்க… சீக்கிரம் வாங்க..!” என்றான்.

அதை கேட்ட சஜனுக்கு அப்போது தான் போன உயிர் திரும்ப வந்தது. “வாவ் தட்ஸ் கிரேட்… இது நிஜம் தானா???” என சந்தேகமாய் கேட்ட சஜனின் தோளை தட்டிய அருண்,

“உண்மை தான் மாப்பிள்ளை…. நாளைக்கு கல்யாணத்திற்கு ரெடியாகுங்க…“ என்றபடி அவனை தழுவிக் கொண்டான்.

தனுஷாவை காணாத இந்த மூன்று நாட்களும் சஜன் பட்ட பாடும் , அதே சமயம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் உறுதுணையாய், ஆறுதலாய் இருந்த பாங்கும் அருணுக்கு சஜன் மேல் இருந்த மரியாதை கலந்த அன்பு ஒரு படி கூடியது என்றே சொல்ல வேண்டும்.

தன் மனபாரம் லேசானதால் சஜனும் அருணை ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டான்.

அதன் பின் இருவரும் இளாவிடம் “தேங்க்ஸ் இளா…! எங்களுக்காக உங்க வேலைக்கு மத்தியிலும் அன் அஃபீஸியலா தனுவை தேட ஹெல்ப் பண்ணினதுக்கு தேங்க்ஸ் மச்…” என்றபடி கை குலுக்க,அவனும் பதிலுக்கு கை குலுக்கி விடை கொடுத்தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

செம்பிழம்பாய் கதிரவன் ஒளிவிட புலர்ந்து அந்த காலைப் பொழுதில் அந்த திருமண மண்டபமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. சிவப்பிரகாசத்தின் செல்வச் செழிப்பை அங்கிருந்த அலங்காரங்களும் தோரண விளக்குகளும் பறைசாற்ற, அவரின் மன செழிப்பை அங்கு கூடியிருந்த மனிதர்களின் கூட்டம் பறை சாற்றியது.

உறவினர் கூட்டம் ஒருபுறமும், நண்பர்கள் கூட்டம் ஒருபுறமும் அலை மோதிக் கொண்டிருக்க, குழந்தைகளின் குதூகல குரல்களும், சிணுங்கல்களும் சங்கீதமாய் மிதந்து வர, வேத சாஸ்திரி மந்திரங்கள் ஓத ஒரு கல்யாணத்தில் இருக்க வேண்டிய அனைத்து அமசங்களும் நிறைந்திருக்க,

எல்லா படங்களிலும் சொல்வது போல் வேத சாஸ்திரி “ நாழியாகிறது… பொண்ணை மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ…!” என்ற அவரின் குரலில் உறவினப் பெண் ஒருத்தி மணமகள் அறை நோக்கி விரைந்து சென்று அழைத்து வர,அதே நேரம் அருண் மணமகனை அழைத்து வர இருவரும் ஒரே நேரத்தில் மணமேடை ஏறினர்.

நாதஸ்வரங்களும், மத்தளங்களும் மங்கல இசை வாசிக்க, பொன்னால் கோர்க்கபட்ட மங்கல நாணை கொண்டு மூன்று முடிச்சிட்டு திருமண உறவை உறுதி படுத்தினான் சஜன்.

“இந்த குங்குமத்தை வச்சுவிடுங்கோ…!” என்று சாஸ்திரி கூறியதும் நுனி விரலால் தொட்டு உச்சியில் வைக்க சென்றவனின் கண்கள் தனுவை நோக்க, கழுத்தில் மஞ்சள் கயிறு பளபளக்க இருந்தவளை கண்டு கண்களை ஒரு முறை இறுக மூடி திறந்தவன் தன் அருகில் இருந்த தியாவின் நெற்றியில் குங்குமத்தை வைத்தான்.

செனோரீட்டா வருவாள்.