Advertisement

சில வருடங்களுக்கு பிறகு:

காலையில் எழுந்த தனுவை எழ விடாமல் தன்னுடன் இறுக அணைத்துக் கொண்ட இளா, அவள் கழுத்தில் முகம் புதைத்தபடி இருக்க “செழியன் விடுங்க நேரமாகுது” என்று சொல்ல,

“ஏன்டி காலையிலயே நொய் நொய்ன்னுட்டு இருக்க கொஞ்ச நேரம் அமைதியா தான் இரேன்” என்று சொல்ல,

“நமக்கு முன்னாடி பாப்பா எழுந்து கீழே போயாச்சு இன்னும் நாம எழுந்துக்காம இருந்தா அத்தை என்ன நினைப்பாங்க” என்று கேட்க,

“பாப்பா எப்பவும் பண்றது தானடி அலார்ம் வச்ச மாதிரி டெய்லி எழுந்து அம்மாகிட்ட போய் படுத்து தூங்குவா அதனால அம்மா ஒண்ணும் நினைக்க மாட்டாங்க” என்றபடி அவனது வேலையை தொடர, ஒரு வழியாக அவனிடமிருந்து விடுபட்டு, குளித்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள் தனுஷா.

அவசர அவசரமாக காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்தபடி “டெய்லி இந்த மனுஷனுக்கு இதே வேலை தான். கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சு ஏன் ஒரு பொண்ணும் பிறந்தாச்சு இன்னும் கனவு கனவுன்னுட்டு என்னை இம்சை படுத்துறான்” என்று முனகியபடி, இட்லிக்கான மாவை தட்டில் ஊற்றி வைத்துக் கொண்டிருந்த நேரம் அங்கு வந்த சாலா “தனும்மா நான் பார்த்துக்குறேன் ஆபிஸ்க்கு நேரமாகுதுல நீ போய் கிளம்பு” என்றார்.

“எல்லாம் பண்ணிட்டேன் அத்தை நீங்க சட்னியை மட்டும் தாளிச்சுடுங்க நான் அந்த குட்டியை குளிக்க வைச்சுட்டு கிளம்புறேன்” என்றதும்,

“பாப்பா எங்கே ஆளைக் காணோம்” என்று கேட்க,

“எங்க போயிருக்க போறா பின்னாடி தோட்டத்துல ஒரு நாய் குட்டி போட்டிருக்கு அதை காலையிலயே போய் வேடிக்கை பார்க்க போயிருப்பா” என்று சொல்ல,

“முதல்ல போய் அவளை கூப்பிட்டு வாம்மா நாய் கடிச்சுற கிடிச்சுற போகுது” என்றவரிடம்,

“சொல்லியாச்சு கேட்டாதானே கடி வாங்கட்டும் அப்போ தான் நாம சொல்றது உறைக்கும்” என்று அத்தையிடம் சொன்னாலும், நாய் கடித்து வைத்துவிடக் கூடாதே என்ற பதட்டத்துடன் தோட்டப்பக்கம் நோக்கி ஓடினாள் தனுஷா.

நாய்க்கு அருகில் முட்டி போட்டு குட்டிகளை கையால் தடவி விட்டபடி அமர்ந்திருந்தவளை “ஏய் ரஷ்மி என்ன பண்ணிட்டு இருக்க? இங்க வா நாய் கடிச்சுற போகுது” என்று சொல்ல,

“போ சின்னும்மா நான் கொஞ்ச நேரம் நாய் பார்த்துட்டு வர்றேன்” என்றாள் இளா தனுவின் புத்திரி ரஷ்மிகா.

“ஹேய் எத்தனை தடவை சொல்றது அம்மானு சொல்லுனு சின்னும்மானு சொல்றது எனக்கு சின்னம்மானு கேட்குது” என்றபடி அவளை கைப்பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் வர, ரஷ்மியோ அவள் சொல்வதை காதில் வாங்காமல் தனுஷாவின் கைகளை பிடித்து தொங்கி கொண்டு ஊஞ்சல் ஆடினாள்.

“எப்போ பாரு விளையாட்டு தான் இங்கேயே நிக்கணும் அம்மா போய் எண்ணெய் எடுத்துட்டு வர்றேன் குளிக்கலாம்” என்று சொல்ல,

“சரி சின்னும்மா” என்று தலை ஆட்டியவளைக் கண்டு, “இவ அடங்க மாட்டா” என்றபடி சென்றவள் திரும்பி வரும் போது அங்கு ரஷ்மி இல்லை.

“ஓடிட்டாளா? இவளோடு தினமும் இதே ரோதனை தான்” என்று முணு முணுத்தவள், “ஏய் ரஷ்மி எங்க இருக்க வாடி குளிக்க ஸ்கூலுக்கு நேரமாகுது பாரு” என்று காட்டு கத்தல் போட, ரஷ்மி வருவதாய் தெரியவில்லை.

ரஷ்மியை தேடிக் கொண்டே வந்தவளின் காதில் அறையிலிருந்து கணவனின் குரலும் மகளின் சிரிப்பு சத்தமும் கேட்க, “காலையிலயே ஆரம்பிச்சாச்சா” என்று நொந்தபடி சாத்தியிருந்த கதவை திறக்க,

அங்கு ரஷ்மி இளா அருகில் அமர்ந்து கொண்டு அவனின் வயிற்றில் ஊதி விளையாட, இளாவும் மகளின் செய்கை தனக்கு கூசுவது போல் பாவனை காட்டியபடி படுத்திருந்தான்.

“என்ன செழியன் இது ஸ்கூலுக்கு நேரமாகுது இன்னும் குளிக்காம அங்கேயும் இங்கேயும் ஆடிட்டு இருக்கா? நீங்க என்னடானா எனக்கென்னனு அவ கூட விளையாடிட்டு இருக்கீங்க” என்று கேட்க,

“இப்போ பாரு எப்படி ஃபைவ் மினிட்ஸ்ல என் செல்லம் கிளம்புவானு இல்லடா தங்கம்” என்று மகளின் கன்னத்தில் முத்தம் வைத்து அவளை இறக்கி விட முயற்சிக்க,

“டாடி நானு நானு” என்று தானும் அவனுக்கு முத்தம் வைப்பதற்காக தன்னை தூக்க சொல்லி கைகளை அவன்புறம் நீட்டியபடி தரையில் குதிக்க,

அவளை அள்ளி எடுத்து “அய் ஜாலி பாப்பா டாடிக்கு உம்மா தரப் போறாங்களே” என்று சிறு பிள்ளையாய் தன்னைப் போல் குதுகலிக்கும் தந்தையை கண்டு, க்ளுக் என சிரித்தபடி அவனது கன்னத்தில் முத்தம் வைக்க, இந்த பக்கம் என்று தன் மறு கன்னத்தையும் காட்ட, அதிலும் முத்தம் வைத்து நிமிர்ந்தாள் ரஷ்மி.

“பாப்பா போய் குளிச்சுட்டு வாங்க ஓடுங்க” என்றவனிடம் “நோ டாடி நான் போ மாட்டேன் இந்த சின்னும்மா அடிப்பா” என்று அவன் கழுத்தை கட்டிக் கொண்டவளை, “இப்போ போய் யார் சமத்தா குளிச்சுட்டு ஸ்கூலுக்கு போய்ட்டு வராங்களோ அவங்களுக்கு பெரிய நட்ஸ் போட்ட சாக்லேட் பார் வாங்கி தருவேன்” என்று சொன்னதும்,

“இறக்கி விடு டாடி குளிக்கணும் ஸ்கூலுக்கு நேரமாச்சு நான் குட் கேர்ள்” என்று என்னமோ அவனால் தான் லேட் ஆவது போல் அவன் கைகளில் இருந்து திமிறியவளை “என் செல்லம்” என்று அணைத்தவன் இறக்கி விட சிட்டாக பறந்து சென்றவள் “சின்னும்மா சீக்கிரம் வா குளிப்போம்” என்று சத்தம் போட,

புன்னகைத்தபடி வெளியே செல்ல முயன்றவளை கைப் பிடித்து தடுத்தவன் சுவரில் சாய்த்து இரு கைகளை அவள் புறம் ஊன்றியபடி “ஏன்டி சின்னு பாப்பாவை மட்டும் தான் குளிக்க வைப்பியா?” என்று கிரக்கமான குரலில் கேட்டபடி அவள் இதழ் நோக்கி குனிய,

அவனது கைகளில் நறுக்கென்று தனு கிள்ளியதும் ஏற்பட்ட வலியில் போட்டிருந்த அணைவை விலக்க, அவனிடமிருந்து  இரண்டடி தள்ளி நின்றவளை கண்டு “ஏன்டி இப்படியா கிள்ளுவ? இங்க வந்து பாரு எப்படி சிவந்து போய் இருக்குனு” என்றவனிடம்,

“நான் வர மாட்டேன்ப்பா உங்க பக்கத்துல வந்தா அடுத்து என்ன நடக்கும்னு எனக்கு தெரியாதா? ஆளை விடுங்க போய் குளிச்சுட்டு டூட்டிக்கு கிளம்புற வழியை பாருங்க” என்று அவனை பார்த்து கண்சிமிட்டி விட்டு சென்றவளை புன்னகை ததும்ப பார்த்தபடி நின்றிருந்தான் இளா.

ஒரு வழியாக மகளை குளிக்க வைத்து கிளப்பியவள், கிச்சனுக்குள் சென்று அரைத்து வைத்த தக்காளி தொக்கை சிறு டப்பாவில் போட்டு அடைத்து அதை எடுத்து கொண்டு வெளியே வந்தவள் “ரஷ்மி கௌசிக்கும் நீரஜாக்கும் டொமேட்டோ ஜாம்னா பிடிக்கும் இதை போய் அத்தை வீட்டுல குடுத்துட்டு வாடி” என்று சொல்ல,

“ம்ஹூம் நான் போ மாட்டேன் அந்த நிருக்கு குடுக்க மாட்டேன்” என்று சொல்ல,

“ஏன் குடுக்க மாட்ட? அருண் மாமா எதாவது வாங்கிட்டு வந்தா வாங்கி சாப்பிடுறல அப்போ நாமளும் குடுக்கணும்ல போ போய் குடுத்துட்டு வாடி” என்று சொல்ல,

மாமாவின் பெயரை கேட்டதும், சற்று சமாதனம் ஆனவள் “ நீ என்னை டி சொல்ற நான் போ மாட்டேன்” என்று அடுத்த புகார் வாசித்தாள் ரஷ்மி.

“ஷப்பா முடியலை” என்று முனகிய தனு “பாப்பா போய் குடுத்துட்டு வாம்மா” என்றதும் முகத்தில் நூறு வாட்ஸ் பல்பின் பிரகாசத்துடன் தன் மாமாவின் வீடு நோக்கி நடை போட்டாள் ரஷ்மி.

இளா அருண் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த வீட்டில் தான் இருக்கிறான். அனுவிற்கு திருமணம் முடிந்த பின் எல்லோரும் வேலைக்கு சென்று விட்டால் தனியாக இருக்கும் தன் அன்னைக்கும், தன் மாமானார் தாமோதரனுக்கும் உதவிக்கோ , பேச்சு துணைக்கோ ஆள் வேண்டும் என நினைத்த இளா அருணிடம் இதை பற்றி பேச, ஒரே வீட்டில் இருக்கலாம் என அருண் யோசனை சொல்ல, அது சரிப்படாது என நினைத்த இளா அந்த நேரம் அருண் வீட்டிற்கு அடுத்து இருந்த வீடு விலைக்கு வரவும், கோவையில் இருந்த வீட்டை மட்டும் விட்டு விட்டு எஞ்சியிருந்த நிலங்களை விற்று பணம் புரட்ட, மீதம் தேவைப்பட்ட பணத்திற்கு தனது வேலையை ஜாமினாக காட்டி வீட்டுக் லோனுக்கு அப்ளை செய்தான். அதன் மூலம் இந்த வீட்டை வாங்கி ஒரு நல்ல நாளில் குடி பெயர்ந்தான். சீதாராம் கேஸில் சிறப்பாக செயல்பட்டதற்காக க்ரைம் ப்ரான்ச்சில் கூடுதல் பொறுப்பு என பதவி உயர்வும் பெற்றிருந்தான் இளா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“அம்மா இந்த நிருவை பாரும்மா என் ட்ராயிங் புக்ல கிறுக்கி வைக்குறா” என்று எட்டு வீட்டுக்கு கேட்கும்படி கௌசிக் கத்த,

“ஏய் நிரு அவன் புக்ல எதுக்குடி கிறுக்கி வைக்குற மிஸ் திட்டப் போறாங்க” என்று கிச்சனில் இருந்து மகளை கண்டிக்க,

“ம்மி நான் ஒண்ணும் செய்யலை அவன் தான் நேத்து என் மேத்ஸ் நோட்ல கிறுக்குனான்” என்று தன் பங்குக்கு அவளும் புகார் வாசித்தாள். இப்படி ரகளை செய்து கொண்டிருப்பவர்கள்  வேறு யாரும் அல்ல நம் அருண் – அனுவின் இரட்டை வாலுகளான கௌசிக் மற்றும் நீரஜா.

“இப்போ அங்கே வந்தேன் அவ்வளவு தான். ரெண்டு பேருக்கும் பூசை வேணுமா ஒழுங்கா புக்ஸ் எடுத்து பேக்ல வைங்க” என்றதும்,

“டேய் கௌசி இந்த ம்மி சரியான ஆட்டம் (atom) டா திடீர்னு வெடிக்குது” என்று நீரஜா தன் சகோதரனிடம் சொல்லி சிரிக்க,

“யூ ஆர் கரெக்ட் நீரு” என்று அருணின் புதல்வன் கௌசிக் தங்கைக்கு ஒத்தூதினான்.

“இந்த அரு எங்க போனான் தனியா கிடந்து அல்லாடுறேனே கொஞ்சமாவது ஹெல்ப் பண்ணணும்னு தோணுதா பாரு” என்று புலம்பியபடி நின்றிருந்தவளின் கழுத்தில் இதழ் பதிந்ததும், சட்டென்று திரும்பி பார்க்க, அவளை பார்த்து கண்சிமிட்டியபடி நின்றிருந்தான் அருண்.

“இங்க என்ன பண்றிங்க அரு” என்று கேட்க, “நான் ஹெல்ப் பண்ணலைனு நீ சொல்லிட்டு இருந்தது காதுல விழுந்துச்சு அதான் வந்தேன்” என்று சொல்ல,

“ஓ அப்படியா என்ன ஹெல்ப் பண்ணப் போறிங்க” என்றதும் அவளை நெருங்கி முகம் முழுதும் இதழ்களால் ஊர்வலம் வர, அவனை விலக்கி தள்ளியவளை கண்டு “என்னடி ஹெல்ப் பண்ணலைனு குற்றம் சொல்ற பண்ண வந்தா இப்படி பிடிச்சு தள்ளுற” என்று கேட்க,

“இதுக்கு பேரு ஹெல்ப்பா?” என்று அவனை முறைத்தவளிடம் “பின்னே இல்லையா வேலை செஞ்சு டயர்டா இருப்பியே எனர்ஜி கொடுக்கலாம்னு செய்யுறது ஹெல்ப் தானே” என்று கண்களில் குறும்பு மின்ன சொல்ல, அவன் கூறிய காரணத்தை கேட்டதும் நாணத்தில் நெளிந்தபடி இருந்தவளை அணைத்துக் கொண்டான் அருண் .

“அத்தை மாமா” என்று குரல் கொடுத்தபடி வீட்டிற்குள் நுழைந்தவளை, எதிர் கொண்ட தாமோதரன் “ரஷ்மி கண்ணா வாங்க வாங்க கையில என்னடா?” என்று கேட்க,

“அது அது வந்து குக் தாத்தா சின்னும்மா டோமேட்டொ ஜாம் குடுத்தாங்க’ என்று சொல்ல,

தக்காளி தொக்கை தான் அப்படி சொல்கிறாள் என புரிந்தவராய் “சரிடா கண்ணு அத்தை உள்ளே இருக்கா போ” என்றதும், உள்ளே ஓடினாள்.

ரஷ்மி தாமோதரனை குக் தாத்தா என்று தான் சொல்லுவாள். ஒரு நாள்  டிவி நிகழ்ச்சி ஒன்றில் செஃப் தாமோதரனின் சமையல் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்க, அதை பார்த்த ரஷ்மி “அய்ய்ய்ய் தாத்தா பேரு” என்று அவள் தாத்தாவே டிவியில் தெரிவது போல் குதுகலித்தவள், அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி அடிக்கடி செஃப் என்ற வார்த்தையை சொல்ல, “செஃப்னா என்ன சின்னும்மா” என்று தன் அன்னையிடம் கேட்க,

“செஃப்னா ஃபுட் குக் பண்றவங்க பாப்பா” என்று அவளுக்கு புரியுமாறு சொல்ல, அன்றிலிருந்து தாமோதரன் குக் தாத்தா ஆகிப் போனார்.

ஷோபாவில் அமர்ந்தபடி டி.வி பார்த்துக் கொண்டிருந்த கௌசிக், நீரஜா அருகில் சென்றவள், நீரஜாவை பார்த்து முகத்தை மேவாயில் இடித்து விட்டு “டேய் கௌசி இந்தா டொமேட்டொ ஜாம்” என்று அவன் கையில் பாத்திரத்தை கொடுக்க,

“ஐய் மை பேவரிட் தேங்க் யூ ரஷ்மி” என்று வாங்கி கொள்ள, “வெல்கம்டா நீ மட்டும் சாப்பிடு வேற யாருக்கும் குடுக்காத சரியா” என்று ஓரக் கண்ணால் நீரஜாவை பார்த்துக் கொண்டே சொல்ல,

“எங்க  அத்தை எங்களுக்கு குடுத்தது நான் சாப்பிட்டுவேன் நீ போடி ரோஸ் மில்க்” என்று நீரஜா சொல்ல,

“உன் அத்தை இல்லை இந்த ரஷ்மியோட சின்னும்மா டி வாட்டர் டேங்க்” என்று சொல்ல,

“ரஷ்மியாம் ரஷ்மி சரி தான் போடி ரோஸ் மில்க் “ என்று நீரஜாவும் வாயாட,

“ரோஸ் மில்க்னு சொல்லாத எனக்கு கோபம் வரும்” என்று இடுப்பில் கை வைத்தபடி முறைக்க,

“அவ கிடக்குறா நீ விடு ரஷ்மி என் புக்ல கூட கிறுக்கி வச்சுட்டா தெரியுமா?” என்று சொல்ல,

“எல்லாம் அந்த பக்கி நிக்கி கூட சேர்ந்து தான் இப்படி பண்ணுது இந்த வாட்டர் டேங்க்” என்றதும்,

“ஹேய் நிக்கியை எதாவது சொன்ன அவ்வளோ தான் அவன் கரெக்டா தான் சொல்லியிருக்கான் நீ ஒரு ரோஸ் மில்க் இவன் ஒரு கௌனு” என்று சொல்ல,

“என்னடி சொன்ன?” என்று நீரஜாவின் முடியை பிடித்து ரஷ்மி இழுக்க, நீரஜாவும் பதிலுக்கு ரஷ்மியின் முடியை பிடித்து அங்கு ஒரு குடுமி பிடி சண்டைக்கு தயாராக, தடுக்க வந்த கௌசிக்கை இருவரும் பிடித்து தள்ளி விட, “டாடி இங்க வந்து பாருங்க” என்று குரல் கொடுத்தான் கௌசிக்.

அருணும் அனுவும் என்னவோ எதோ என்று பதறியடித்தபடி வர, அங்கு சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரையும் விலக்கி, “என்னடா எதுக்கு இப்படி அடிச்சுக்குறிங்க” என்று கேட்க,

“மாமா இவ என்னை ரோஸ் மில்க்னு சொல்றா” என்று ரஷ்மி சொல்ல,

“டாடி இவ தான் முதல்ல என்னை வாட்டர் டேங்க்னு சொல்றா” என்றாள் நீரஜா.

“என்னாச்சு ரெண்டு பேருக்கும் எப்போதும் ஒட்டிகிட்டு அலைவீங்க இப்போ கொஞ்ச நாளா சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க” என்று கேட்க,

“அவ தான் என் கூட சண்டை போட்டா” என்று நீரஜாவும், “இவ தான் நிக்கி கூட சேர்ந்துகிட்டு என்னை கிண்டல் செய்யுறா” என ரஷ்மியும் மாறி மாறி புகார் வாசிக்க,

“சரி சரி இனி ரெண்டு பேரும் சண்டை போடக் கூடாது” என்று அருண் சமாதானம் செய்ய, சமாதானம் ஆக வேண்டியவர்களோ சத்தம் வராமல் நீரஜா “ரோஸ் மில்க்” என்று சொல்ல, ரஷ்மி “போடி வாட்டர் டேங்க்” என்று ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டிருந்தனர்.

ஸ்கூலுக்கு நேரமாவதை உணர்ந்து “அரு அப்படியே ரெண்டு பேரோட சாக்ஸையும் தேடி குடுங்க நான் லஞ்ச் பேக் பண்ணிடுறேன்” என்றவளிடம்,

“ஹே என்ன விளையாடுறியா ஹாஸ்பிட்டலுக்கு கிளம்ப வேண்டாமா? எனக்கு நேரமாகுது” என்று சொல்ல,

“நான் மட்டும் ஹாயா உட்காரவா போறேன் நானும் தான் கிளம்பணும். லஞ்ச் பேக் பண்ண வேண்டாமா கொஞ்சம் தேடிக் கொடுங்க”

“நோ வே ஐ ம் கோயிங்” என்றபடி செல்ல போனவனிடம் “ஹோ அப்போ தேடி தர மாட்டீங்கல விடுங்க நானே தேடிக்குறேன் இன்னும் ஒரு வாரத்துக்கு எந்த என்ட்ரன்ஸ் எக்ஸாமும் கிடையாது நியாபகம் வச்சுகோங்க அரு” என்று சொன்னதும் அதிர்ந்தவன்,

“அனு செல்லம் நான் சொன்னதை நம்பிட்டியா சும்மா உலுலாய்க்க்கு சொன்னேன் தேடி தர்றது என்ன நானே போட்டு விட்டுறேன்” என்றபடி சாக்ஸை தேடிக் கொண்டு வந்து தன் மகளுக்கும் மகனுக்கும் அணிவிக்க,

“டாடி எனக்கு ஒரு டவுட்” என்று கௌசிக்கும், நீரஜாவும் கோரசாக கேட்க,

“செல்லம்ஸ் சொல்லுங்க என்ன டவுட்” என்று ஷூவை மாட்டி விட்டுக் கொண்டே கேட்க,

“எக்ஸாம்னா எல்லாரும் வேண்டாம்னு தான சொல்வாங்க அம்மாவே வேண்டாம்னு சொன்னா நீங்க ஹேப்பியாகமா ஷாக் ஆகுறிங்க” என்று கேட்க, “ஆமா மாமா எனக்கும் அதே டவுட்” என்று சேர்ந்து கொண்டாள் ரஷ்மி.

“இது வேற பெரியங்க எழுதுற எக்ஸாம் செல்லம்ஸ்” என்று சொல்லிக் கொண்டிருந்தவனின் தலையில் கொட்டிய அனு “குழந்தைங்ககிட்ட என்ன பேசுறிங்க” என்று சொல்லிவிட்டு, அவர்களை கிளப்பி விட்டு தானும் மருத்துவமனைக்கு கிளம்ப சென்றாள்.

வீட்டிற்குள் நுழைந்துவளை கண்ட தனு “ஏன் பாப்பா போனா போன இடம் வந்தா வந்த இடம்னா இருக்கது உன்னை என்ன சொன்னேன் போய் குடுத்துட்டு வானு தானே சொன்னேன்” என்று அரட்டியபடி அவளுக்கு காலை உணவை ஊட்டி முடித்ததும், கௌசிக் , நீரஜாவை அழைத்துக் கொண்டு வந்த தாமோதரன் ரஷ்மிகாவையும் கூட்டிக் கொண்டு தெரு முனையில் ஸ்கூல் பஸ் வந்து நிற்கும் பஸ் ஸ்டாப்பிற்கு சென்றார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“மாமா நிகி உங்க ரூம்லயா இருக்கான்” என்றபடி சிவப்பிரகாசத்தின் அறைக்குள் நுழைந்த தியா கேட்க,

“இப்போ தான் சாப்பிட வைக்க உங்க அத்தை தூக்கிட்டு போனாம்மா” என்று சொல்ல,

“அப்போ கிச்சன்ல இருப்பான் நான் போய் பார்க்குறேன்” என்று நகர்ந்ததும் கையில் இருந்த புத்தகத்தில் சிவா கவனத்தை திருப்பிக் கொள்ள,

கிச்சனில் கயல் மட்டும் இருப்பதை கண்டவள் “அத்தை நிகி எங்க துணியை காயப்போட்டு வர்றதுக்குள்ள ஆளைக் காணோம்” என்று கேட்க,

“இப்போ தான் சாப்பாடு ஊட்டி விட்டேன் எதோ டி.வியில பார்க்கணும்னு மேல ரூம்க்கு தான் ஓடினான்”

“அவன் என்ன பி.பிஸியா பார்க்க போறான். கார்டூன் சேனலை தான் பார்த்துட்டு இருப்பான் விட்டா டிவிக்குள்ளேயே போயிருவான்” என்று கயல்விழியிடம் சொல்லி விட்டு மகனை தேடி அறைக்கு சென்றாள் தியா.

ஷோபாவில் அமர்ந்து டீ-பாயின் மீது கை வைத்து கன்னத்திற்கு முட்டுக் கொடுத்தபடி போகோ சேனலில் ஒளிப்பரப்ப பட்ட சோட்டா பீமின் சாகசங்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சஜன்– தியாவின் செல்ல மகன் நிகில்.

“நிகில் இன்னும் எவ்வளோ நேரம் தான் டி.வி பார்ப்ப ஸ்கூலுக்கு டைம் ஆகுது பாரு” என்றபடி யூனிபாஃர்மை அவனுக்கு தியா அணிவிக்க, அவனோ “ம்மா டி வி மறைக்குது தள்ளுங்க” என்றபடி அங்குமிங்கும் உடலை திருப்பிக் கொண்டிருக்க,

“டேய் ஆடாம ஒரு இடத்துல நில்லுடா டூ மினிட்ஸ் ட்ரெஸ் போட்டு விடுறேன்” என்று அவனுக்கு உடை மாற்றி விட்டவள் அவனது நாடியை பிடித்து கொண்டு தலை வாரிவிட,

நிகிலோ தலையை டி.வி நோக்கி திருப்பி பார்த்துக் கொண்டிருக்க, “நிகில் இங்க அம்மாவை பாரு” என்று அவனது மேவாயை பிடித்து திருப்ப மீண்டும் டி.வி இருக்கும் பக்கமே திரும்பி நின்றான் நிகில்.

“டேய் படுத்தாதடா இந்த பக்கம் திரும்ப போறியா இல்லையா?” என்று கேட்க,

“ம்மா சோட்டா பீம்ம்மா” என்று சொல்ல, “உனக்கும் வேலை இல்லை அந்த சோட்டா பீம்க்கும் வேலை இல்லை எங்கேயும் ஓடி போக மாட்டான் பேசாம நில்லு” என சொல்லிவிட்டு அவனது தலையை வாரியவள்,

“உட்கார்ந்திரு அம்மா பால் எடுத்துட்டு வர்றேன்” என்றவள் கையில் பால் கிளாசுடன் திரும்ப,

“ம்மா நான் இன்னைக்கு மில்க் ஃபுல்லா குடிச்சா நான் கேட்குறதுக்கு ஓகே சொல்வியா?” என்று பீடிகை போட,

ஏதோ வில்லங்கமாக கேட்க போகிறான் என்று தெரிந்தாலும் “டீல் ஓகே” என்று சொன்னது தான் தாமதம் டம்ளரில் இருந்த பாலை மட மடவென்று குடித்தவன் புறங்கையால் வாயை துடைத்தபடி,

“ம்மா நான் கேட்கட்டா?” என்று கேட்க, “ம்ம்ம் சொல்லு என்ன வேணும்” என்று தியா கேட்க, “அது அது நான் இன்னைக்கு ஸ்கூல் போகலை” என்றான் நிகில்.

“சரி போகாம என்ன பண்ண போறிங்க சார்” என்று தியா கேட்க,

“ப்ரேக் ஃப்ரீ சோட்டா பீம் ப்ரோக்ராம் போடப் போறாங்க அதை பார்க்க போறேன்” என்று கண்களை உருட்டியபடி சொல்ல, அப்போது அங்கு வந்த சஜன் “நிகி இது என்ன புது பழக்கம் ஸ்கூலுக்கு போக மாட்டேனு அடம் பிடிக்குறது “ என்று கேட்க,

எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த நிகியிடம் “உன்கிட்ட தான் பேசுறேன் எத்தனை தடவை சொல்லிருக்கேன் யாரவது நம்மகிட்ட பேசுறாங்கனா அவங்களுக்கு பதில் சொல்லணும்னு” என்று அதட்ட,

“சஜூ நீங்க போங்க நான் பார்த்துக்குறேன்” என்று சொல்ல, “இல்லை டாலி அவன்” என்று தொடங்கியவனை “ப்ளீஸ் நீங்க போங்க” என்று அவனை அங்கிருந்து அனுப்பியவள் மகனிடம்,

“டேய் நிகி ஸ்கூல் போய்ட்டு வந்த நேரம் போக மத்த நேரமெல்லாம் அதை தானே பார்க்குற அப்புறம் என்ன ஒழுங்கா ஸ்கூலுக்கு கிளம்பு” என்றதும் “ம்ம்ம் போகலை” என்று சிணுங்கியவனிடம்,

“சரி அப்போ உன் கப்போர்ட்ல ஒட்டுறதுக்கு பெரிய சோட்டா பீம் ஸ்டிக்கர் இந்த வீக் என்ட் நாம ஷாப்பிங் போகும் போது வாங்கி தரலாம்னு நினைச்சேன் நீ டி.வியிலேயே பார்த்துக்குவ போல அதனால வாங்க வேண்டாம்” என்றதும்,

“நிஜம்மா வாங்கி தருவியாம்மா எவ்வளவு பிக் ஸ்டிக்கர்” என்று கண்களில் ஆர்வம் மின்ன கேட்க,

“உன் சைஸ் பிக் வாங்கலாம் ஆனா அதெல்லாம் நீ ஸ்கூலுக்கு போனா தான்” என்று சொல்ல,

“ஓகேம்மா என்னோட ஷூ டை எல்லாம் எடுத்து தா” என்றவனை கண்டு புன்னகைத்தபடி மகனை அணைத்து முத்தமிட,

“ம்மா பிக் பாய் நான் இப்படிலாம் பண்ண கூடாது” என்றபடி கன்னத்தை அழுந்த துடைத்தபடி ஓட, “இத்தூனுண்டு இருந்துட்டு இது பிக் பாயாம்” என்று சிரித்தபடி அறைக்குள் நுழைந்தவள் முகத்தை தூக்கி வைத்தபடி இருந்த சஜனை கண்டு அவனருகில் சென்றாள்.

“என்னாச்சு சஜூ ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க கம்பெனிக்கு கிளம்பலையா?” என்று கேட்க,

எதுவும் சொல்லாது அமைதியாக இருந்தவனின் அருகில் அமர்ந்தவள் அவன் தோளில் கை வைத்து “என்னாச்சு என் சஜூ குட்டிக்கு” என்று அவனை கொஞ்ச,

“நானும் ஆஃபிஸ்க்கு போகலை டாலி” என்று சொல்ல, நானும் என்றதில் அவன் கொடுத்த அழுத்தத்தில் எதற்காக இவ்வாறு சொல்கிறான் என்று புரிந்து கொண்டவள் “உங்களுக்கும் சோட்டா பீம் ஸ்டிக்கர் வேணுமா?” என்று புன்னகையோடு கேட்க,

“ஸ்டிக்கர் தான் வேணும் ஆனா சோட்டா பீம் ஸ்டிக்கர் இல்லை நிகில் கன்னத்துல குடுத்தியே உன் லிப்போட ஸ்டிக்கர் அது வேணும்” என்று கேட்க,

இதழோரம் தோன்றிய சிரிப்புடன் “பிக் பாய்க்கு குடுக்க கூடாதுனு இப்போ தான் நிகில் சொன்னான்” என்று தியா சொன்னதும்,

“அவனை மாதிரி நான் வேண்டாம்னுலாம் சொல்ல மாட்டேன் டாலி ஹேப்பியா வாங்கிப்பேன்” என்று சிறு குழந்தையாய் கேட்பவனின் அழகில் மயங்கிய தியா சஜனின் கன்னத்தில் இதழ் பதிக்க,

“ஹேய் டாலி இது போங்காட்டம் லிப்போட ஸ்டிக்கர் லிப்ல தான் வேணும்” என்று முரண்டு பிடிக்க,

“இப்போதைக்கு இது போதும் இப்போ கிளம்புனா தான் நிகியை ஸ்கூல்ல விட்டுட்டு கம்பெனிக்கு போக நேரம் சரியா இருக்கும் கிளம்புங்க” என்று விட்டு எழ முயன்றவளை கை பிடித்து “ப்ளீஸ் டாலி” என்றவனின் கெஞ்சல் குரல் தியாவை இளக்கி அவனது விருப்பத்தை நிறைவேற்ற வைத்தது.

காரில் ஏறி அமர்ந்ததில் இருந்து “உம்” என்று முகத்தை தூக்கி வைத்திருந்த மகனை கண்டவன், “என்ன சார் அமைதியா வர்றிங்க” என்று கேட்க,

“நான் கோபமா இருக்கேன் பேச மாட்டேன் உங்க கூட டூ” என்று சொல்ல,

“அய்யோ என் க்யூட்டி பை டாடி மேல கோபமா இருக்கானா எதுக்காம்” என்று கேட்க,

“க்யூட்டி பை” என்று சொன்னதுமே நிகியின்  முகத்தில் புன்னகை அரும்ப, அதை வெளிக்காட்டாது “நீங்க என்னை திட்டுனீங்கல அதான்” என்று விட்டு ஜன்னலின் வழியே தெரியாத காட்சியை வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்ய,

“டாடி வேணும்னே திட்டலையே ஸ்கூலுக்கு போக மாட்டேனு கியூட்டி ஃபை சொல்லலாமா தப்பு தானே அதான் திட்டுனேன்” என்று சொல்ல,

அமைதியாக இருந்தவன் ஸ்கூல் வாசலில் காரை நிறுத்தியதும் “ம்ம் இனிமே அப்படி சொல்ல மாட்டேன் டாடி”  என்றபடி இறங்க போனவனை அணைத்து “என் செல்ல க்யூட்டி ஃபை” என்று முத்தமிட, புன்னகையில் விரிந்தது நிகிலின் முகம்.

“அக்ஷூ போய் உங்க அப்பாவை எழுப்புடா நாமெல்லாம் எழுந்து ரெடி ஆகியாச்சு இன்னும் அவருக்கு தூக்கம் வேண்டி கிடக்கு” என்று தன் மகன் அக்ஷத்திடம் வெண்பா சொல்ல,

“ஐய் ஜாலி நான் போய் எழுப்புறேன்ம்மா” என்றபடி அறைக்குள் ஓடியவன் (எதற்கு இவ்வளவு சந்தோஷம் என்று நினைக்குறிங்களா? வினோத் எழாவிட்டால் நம் அக்ஷூ தன் தந்தைக்கு செய்யும் ட்ரீட்மென்ட் அப்படி அதில் அவனுக்கு அலாதியான சந்தோஷம் ஹி ஹி) மெத்தையில் குப்புற படுத்துக் கொண்டிருந்த வினோத்தின் முதுகில் ஏறி அமர்ந்து,

“அப்பா எழுந்திருப்பா எழுந்திரு” என்று அஞ்சலி பட ஸ்டைலில் அவனை உலுக்க,

“டேய் சும்மா இரேன்டா அப்பா தூங்குறேன்ல” என்றபடி கண்களை திறக்காமல் படுத்திருக்க,

“இப்போ நீ எழுந்துக்கலை நான் ஸ்ட்ரிங் விட்டுருவேன்” என்று சொன்னது தான் தாமதம் படக்கென்று கண்களை திறந்தான் வினோத்.

அப்படி எதற்கு இவ்வளவு வேகமாக எழுந்தான் என்று பார்க்குறிங்களா? வேற ஒண்ணுமில்லை நம்ம அக்ஷத் கவின்புல் போல் ஒன்று வைத்திருக்கிறான் அதில் ரப்பரை மாட்டி ஸ்ட்ரிங் போல் இழுத்து அடிப்பதை தான் சொல்கிறான். பல முறை அதில் அடி வாங்கி வினோத்தின் கை முகம் சிவந்து போயிருக்கிறது அந்த பயத்தில் தான் எழுந்துவிட்டான் வினோத்.

குளித்து தயாராகி வந்தவனுக்கு காலை உணவை பரிமாறிய வெண்பா ”டெய்லி உங்களால தான் எங்க ரெண்டு பேருக்கும் லேட் ஆகுது” என்று முணு முணுக்க,

“ஏன்டி எதோ வேர்ல்ட் வார்க்கு போறது என்னால லேட் ஆன மாதிரி சொல்ற? இதோ இவனுக்கு ஸ்கூல் ரெண்டு தெரு தாண்டி இருக்கு. நீ என்கூட தான் ஆஃபிஸ்க்கு வரப் போற அப்புறம் என்னவாம்” என்றவனிடம்,

“அதுவும் நாங்க உங்களை எழுப்பினதால தான் இல்லைனா நல்லா கும்பகர்ணனுக்கு கஸின் ப்ரதர் மாதிரி தூங்கிட்டு இருப்பீங்க முன்னாடிலாம் எப்படி தான் எழுந்து ஆபிஸ் வந்தீங்களோ?” என்று சொல்ல,

“இப்போ  தெரியுதா? கல்யாணத்துக்கு முன்னாடி கரெக்ட் டைம்க்கு ஆபிஸ் போக தெரிஞ்ச எனக்கு இப்போ வர தெரியாதா? என்னம்மோ இந்த அம்மா தான் எல்லாம் செய்யுற மாதிரி ஃபிலிம் காட்ட வேண்டியது இவ இல்லைனா நம்மால எதுவும் செய்ய முடியாதுன்ற ரேஞ்சுக்கு பேச வேண்டியது”

“அப்போ நான் இல்லாட்டாலும் உங்களுக்கு ப்ராப்ளம் இல்லை அப்படி தானே?” என்று கேட்க, அவள் வைக்க போகும் வேட்டு பற்றி தெரியாமல்

“இதை என் வாயால வேற சொல்லணுமா?” என்று நக்கல் சிரிப்பு ஒன்றை உதிர்த்தவனிடம்,

“அக்ஷூ சாயங்காலம் ஸ்கூல் விட்டதும் நாம பாட்டி வீட்டுக்கு போகலாம் சரியா ரெண்டு நாள் அங்க இருக்கலாம் நீ பாட்டி வீட்டுல இருந்து ஸ்கூலுக்கு போ” என்று சொல்ல, “ஐய் ஜாலி சரிம்மா போகலாம்” என்று தலையாட்டிய மகனை கண்டு பல்லை கடித்தவன்,

“பாஸ்ல இருந்து பொண்டாட்டி பிள்ளை வரைக்கும் உன்னை மிரட்டுதுங்க சத்திய சோதனைடா வினோத்” என்று நொந்து கொண்டவன், வெண்பாவை தாஜா செய்ய அவள் பின்னே சென்றான்.

சிறிது நேரத்தில் வந்த வெண்பாவிடம் “அம்மா என் டாய்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கோ” என்று சொல்ல,

“அக்ஷூ நெக்ஸ்ட் வீக் போகலாம்டா” என்றதும், “போம்மா” என்று சிணுங்கி கொண்டு செல்ல, இங்கு வினோத்தோ வெண்பாவை காதல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இப்போ எதுக்கு இந்த பார்வை பார்த்து வைக்குறிங்க” என்று கேட்க,

“ம்ம்ம் நீ கொடுத்ததும் நான் வாங்குனதும் எனக்கு பத்தவே இல்லை அதான்” என்று விஷமமாய் கூறி கண்சிமிட்ட, வினோத்திற்கு சற்றும் குறையாத காதல் பார்வை வீசினாள் வெண்பா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அந்த வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை விஷ்வாவின் வீடே கலை கட்டியிருந்தது. இன்று தான் விஷ்வா – பிரகதியின் மகளுக்கு பெயர் சூட்டும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு மிக நெருக்கமான உறவினர்களையும் நண்பர்களையும் மட்டும் அழைத்திருந்தனர்.

குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு வந்தவன், அறையில் புடவை மாற்றிக் கொண்டிருந்த பிரகதியிடம் “பிரகா குட்டிம்மா எங்க?” என்று கேட்க,

அவன் புறம் திரும்பாமல் “இப்போ தான் அத்தை வந்து எடுத்துட்டு போனாங்க” என்று பதில் கூறிக் கொண்டே புடவையின் கீழே ஃப்லீட் வைப்பதில் மும்முரமாக இருக்க, அவளை பின்னிருந்து அணைத்தான் விஷ்வா.

இறுக அணைத்தவனின் விரல்கள் வெற்றிடையில் அழுந்த பதிய, அதில் ஏற்பட்ட குறு குறுப்பில் எடுத்து வைத்திருந்த ஃப்லீட்ஸ் கை நழுவி விழ “என்ன பண்றிங்க விடுங்க பங்ஷ்னுக்கு நேரமாச்சு எல்லோரும் தேடப் போறாங்க” என்று சொன்னவனளின் குரல் அவளுக்கே கேட்காதவாறு இருக்க,

“என்ன பண்றேனு தெரியலையா? இவ்வளோ நாள் கேப் விட்டதால மேடம்க்கு எல்லாம் மறந்து போச்சா? அப்போ மறுபடியும் முதல்ல இருந்து சொல்லிக் கொடுக்கணுமா விஷ்வா உன் பாடு கஷ்டம்டா” என்று சொல்லிக் கொண்டே கழுத்தில் முகம் புதைக்க, அந்நேரம் சிவ பூஜையில் கரடியாக கதவு தட்டப்பட, விஷ்வாவின் பிடியிலிருந்து துள்ளி விலகினாள் பிரகதி.

“பிரகதி கிளம்பிட்டியாம்மா சீக்கிரம் வாங்க ரெண்டு பேரும் ஐயர் வந்தாச்சு” என்று விஷ்வாவின் தாய் குரல் கொடுக்க,

“இதோ வந்துடுறேன் அத்தை” என்றவள், அவர் அங்கிருந்து நகரும் ஓசை கேட்டதும் “உங்களால தான் இப்போ நான் மறுபடியும் ஃப்லீட்ஸ் எடுக்கணும்” என்று சலித்துக் கொள்ள, “நான் ஹெல்ப் பண்றேன்” என்று விஷ்வா உதவிக்கு வர, அவளாய் கட்டியிருந்தால் கூட ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகியிருக்காது. உதவி செய்கிறேன் பேர்வழி என்று விட்டு புடவை கட்ட அரை மணி நேரம் இழுத்து விட்டான் விஷ்வா.

இளா, சஜன், அருண், வினோத் என அனைவரும் அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். பெரியவர்கள் ஒரு பக்கம் இருந்து பேசிக் கொண்டிருக்க, குட்டி சுட்டிகள் தங்களுக்கென்று சங்கம் அமைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் விஷ்வாவும், பிரகதியும் வந்துவிட, இருவரும் வந்திருந்த அனைவரையும் வரவேற்று விட்டு பூஜை அறையின் முன்பு விரிக்கப்பட்டிருந்த போர்வையில் அமர, விஷ்வாவின் தாய் பேத்தியை பிரகதியின் மடியில் கிடத்தினார்.

நல்ல நேரத்தில், விஷ்வா- பிரகதியின் மகளுக்கு “ஜீவிதா” என்று பெயர் சூட்டப்பட, பெற்றோர் இருவரும் அந்த பிஞ்சின் காதில் மூன்று முறை பெயர் சொல்லி அழைத்து, தங்க மோதிரத்தின் நுனியில் தேனை தொட்டு ஜீவிதாவின் நாக்கில் தடவ குழந்தையோ பல் இல்லா தன் பொக்கை வாயை திறந்து நாக்கை அங்குமிங்கும் சுழட்டியது.

விழா சிறப்பாக முடிவடைய, அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு கதை பேசிக் கொண்டிருக்க, இளா தன் அருகில் அமர்ந்திருந்த தியாவிடம் “தியா சஜன் போட்ருக்க ட்ரெஸ் அன்னைக்கு நீ அவனுக்கு தெரியாம பில் போட்ட ட்ரெஸ் தானே” என்று கேட்க,

ஒரு நிமிடம் திகைத்தவள் “அத்தான் உங்களுக்கு எப்படி தெரியும்” என்று கேட்க,

“நானும் அன்னைக்கு அங்கே தான் இருந்தேன். உங்க அக்காவை பத்தி கேட்கணும்னு உன் பக்கத்துல வரும் போது தான் நீ வேக வேகமா ட்ரெஸ் எடுத்துட்டு பில் போட ஓடுன?” என்று சொல்ல,

அதை கேட்டு அசடு வழிந்த தியாவை கண்டு புன்னகைத்தவன் “அப்புறம் காலேஜ் பங்ஷ்ன்ல சஜனையே வைச்ச கண் வாங்காம பார்த்துட்டு இருந்ததையும் பார்த்தேன்” என்று சொல்ல,

“அத்தான் நான் கூட நீங்க என்னவோ சிரிப்பு போலீஸோனு நினைச்சேன் பட் நீங்க செம ஸ்மார்ட் தான்” என்று இளாவிற்கு பாராட்டு பத்திரம் வாசிக்க, அவளை பொய்யாக முறைத்தான் இளா.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த நேரம் கௌசிக், நீரஜா, அக்ஷத் ஓடி வந்து “மாமா ரஷ்மியும், நிகிலும் அங்கே சண்டை போட்டுட்டு இருக்காங்க நிகில் கீழே விழுந்துட்டான்” என்று சொல்ல,இதை கேட்டதும் சஜனும் இளாவும் வேகமாக செல்ல, அங்கு ரஷ்மியும் நிகிலும் ஏதோ கோபமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அருகில் சென்றவர்கள் இருவரையும் விலக்கி “பாப்பா அண்ணனை ஏன் தள்ளி விட்ட” என்று இளா ரஷ்மியிடம் கேட்க,

“டாடி இவன் என்னை ரோஸ் மில்க்னு சொல்றான்” என்று சொல்ல,

“நிகி நீ ஏன் பாப்பாவை ரோஸ்மில்க்னு சொன்ன?” என்று சஜன் தன் மகனிடம் கேட்க,

“டாடி இவ என்னை பக்கினு சொல்ற அப்புறம் உங்களை பேட் பாய்னு சொல்றா?” என்று சொல்ல,

அதை கேட்ட இளா அதிர்ந்து “பாப்பா அப்படி சொன்னியா சித்தப்பா பெரியவங்க அவங்களை அப்படி சொல்லலாமா? தப்பு தானே சாரி கேளு” என்று சொல்ல,

எல்லோர் முன்னாடியும் தந்தை தன்னை சத்தம் போட்டு பேசுவது அழுகையை உண்டு பண்ண உதடு பிதுக்கி இளாவை நிமிர்ந்து பார்த்தாள் ரஷ்மி. அவனோ அவளை கண்டு கொள்ளாது நிற்க,

சஜனின் அருகில் சென்று தன் காதில் கை வைத்து “ஐ ம் சாரி சித்தப்பா” என்று சொல்ல, “இட்ஸ் ஓகேடா பாப்பா ஏன் அப்படி சொன்னீங்க” என்று கேட்க,

“அது அது என் ப்ரெண்ட் கன்னிகா சொன்னா பேட் பாய்ஸ் கூட தான் சரியா பேச மாட்டாங்களாம். நீங்களும் எங்க டாடியும் பேசி நான் பார்த்தது இல்லைல அதான் சித்தப்பா அப்படி சொன்னேன் சாரி” என்று சொல்ல,

குழந்தைகளின் மனதில் இப்படி ஒரு எண்ணம் வரும்படி நடந்து கொண்ட தங்களின் மடத்தனத்தை உணர்ந்து சட்டென்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட இருவரும் கண்களால் சைகை செய்தபடி , ரஷ்மி நிகில் இருவரையும் அருகில் அழைத்து “ நாங்க ரெண்டு பேரும் பேச மாட்டோம்னு தப்பா நினைச்சுருக்கீங்கடா உங்களை மாதிரி நாங்களும் ப்ரெண்ட்ஸ் தான் இல்லடா சஜன்” என்று இளா சஜனை பார்க்க,

“ஆமாம் நாங்களும் ப்ரெண்ட்ஸ் தான் “என்று விட்டு இளாவை அணைத்துக் கொள்ள,

“ப்ரெண்ட்ஸ் தான இப்படி ஹக் பண்ணிப்பாங்க” என்று இளா ரஷ்மியிடம் கேட்க, “ஆமா டாடி” என்று தலையாட்டினாள் ரஷ்மி.

“ஓகே இப்போ நிகி அண்ணாகிட்ட சாரி கேளு” என்று சொல்ல,

“நோ டாடி நான் சொல்ல மாட்டேன்” என்று ரஷ்மி அடம் பிடிக்க,

“பாப்பா அண்ணனை தள்ளி விட்டது நீதானே அடிபட்டிருந்தா என்ன ஆயிருக்கும்? அவனுக்கு வலிக்கும்ல சாரி கேளு” என்று சொல்ல,

“அவன் என்னை ரோஸ் மில்க்னு சொன்னான் அதான் தள்ளி விட்டேன்” என்று நிகில் மேல் புகார் வாசிக்க,.

“இல்ல பெரியப்பா அவ பொய் சொல்றா முதல்ல அவ தான் என்னை பக்கினு சொன்னா அதான் நான் ரோஸ் மில்க்னு சொன்னேன்” என்று நிகிலும் அவன் பங்கிற்கு சொல்ல,

“பாப்பா நீ டாடி பொண்ணு தானே அப்போ சமர்த்தா நிகில்கிட்ட சாரி கேளு” என்றதும்

கால்களை தரையில் உதைத்தபடி “சாரி நிகில்” என்று சொல்ல, அவனும் “மீ டு சாரி” என்றான்.

“குட் கேர்ள்” என்று இளா ரஷ்மியை அணைத்துக் கொள்ள, அதை கண்ட நிகில் சஜனின் சட்டையை பிடித்து இழுத்து “டாடி அப்போ நான்” என்று கேட்க,

“டாடி சொல்லாமலே சாரி கேட்டுட்டீங்களே அப்போ நிகி குட் குட் பாய்” என்று மகனை தூக்கி கொள்ள, சஜனும் இளாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைக்க, அதை பார்த்த அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

கௌசிக்கும், நீரஜாவும் அருணின் கைகளை பிடித்து “டாடி நாங்க” என்று கேட்க, “நீங்க ஃபைட் பண்ணவே இல்லையே சோ த்ரி டைம்ஸ் குட் “ என்று சொல்ல,

“டாடி நாங்க ரெண்டு பேர் சோ சிக்ஸ் டைம் குட் சொல்லுங்க” என்று நீரஜா கேட்க, “குட் குட் குட் குட் குட் குட் போதுமா? அனு ஒரு கிளாஸ் ஜூஸ் கொண்டு வாடி” என்று சலித்துக் கொள்ள,

அக்ஷத் வினோத்தை ஏறிட்டு பார்க்க, “அய்யோ இவன் எத்தனை டைம் சொல்ல சொல்லுவானோ” என்று உஷாரான வினோத் “அக்ஷூ உனக்கு டாடி ஐஸ்கிரீம் வாங்கி தர்றேன்” என்று சொல்ல, அக்ஷூ சந்தோஷத்தில் புன்னகைக்க, அங்கிருந்த அனைவரும் வினோத்தின் முன்னெச்சரிக்கை கண்டு புன்னகைத்தனர்.

இன்று போல் என்றும் காதல் செனோரீட்டா காதலையும் அன்பையும் பாரி வள்ளலாக வாரி வழங்கி இவர்களின் வாழ்வை சிறப்பிக்கட்டும் என வாழ்த்தி விடை பெறுவோம்.

Advertisement