Advertisement

அத்தியாயம் 9:

தாமரை இலை நீர்

போல் ஒட்டாமல் நீ

இருந்தாலும் உன் அருகே

நான் இருக்கும் வரமே போதும்

இவ்வாழ்நாள் முழுமைக்கும்!

பார்ட்டியில் தனு பேசியதை கேட்ட பின்பு சஜனின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. அவளிடம் காதலை உரைத்து அவள் சம்மதம் கிடைத்த பின் பெற்றோரிடம் சொல்லி அவளை கரம் பற்றலாம் என அவன் நினைத்திருக்க அதற்க்கு நேர்மாறாக அமைந்தது தனுவின் பேச்சு.

அதன் பின்பும் அவளிடம் போய் தன் காதலை சொல்லி ஒரு வேளை அதை அவள் மறுத்துவிட்டாள் என்றால், என்ன செய்ய முடியும் அவளின் மறுப்பு அவனையல்லவா துடிக்க செய்திருக்கும்.

இதே யோசனையோடு வீட்டினுள் நுழைந்தவனை பிடித்துக் கொண்ட சிவப்பிரகாசம் “சஜன் என்ன முடிவு பண்ணியிருக்க..?” என்று கேட்க,

ஏற்கனவே வேதனையோடு இருந்தவன் அவரின் கேள்வியில் கோபம் கொண்டு “டாட் நேற்றுல இருந்து எதுக்கு இப்படி டார்ச்சர் பண்றீங்க…. மனுஷனை கொஞ்சமாவது நிம்மதியா இருக்க விடுறீங்களா? பேசாம ஆபிஸ்லயே இருந்திருக்கலாம்” என்று சலித்துக் கொள்ள,

“சஜன் என்ன பேச்சு பேசுற..? இப்போ என்ன தப்பா கேட்டுட்டேன்னு இந்த குதி குதிக்குற…? உனக்குனு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கோனு சொல்றது தப்பா? எல்லார் வீட்டிலயும் நடக்குறது தான?”

மகன் அமைதியாகவே  நின்றிருக்க, சிவப்பிரகாசமே தொடர்ந்தார்.

“வீட்டுக்கே வரக்கூடாதுனு நினைக்குற அளவுக்கு அப்படி என்ன நாங்க பண்ணிட்டோம்….? எங்களுக்கு இருக்கிறது ஓரே மகன்… அவன் வாழ்க்கையோட அடுத்த படிக்கு போகணும்னு நாங்க ஆசைப்படுறது தப்பா? இல்லை உன் மேல அக்கறை பட எங்களுக்கு உரிமை இல்லையா..? அப்படினா சொல்லிடுப்பா… இனி உன் விஷயம் எதுலயும் தலையிடலை…” என்றபடி அறைக்குள் சென்றுவிட

தந்தையின் ஆதங்கத்தை கேட்டபின்பு தான் அதிகமாக பேசியது உரைக்க எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றிருந்த சஜன் அவர் சென்றதும் அப்படியே தலை மேல் கை வைத்து உட்கார்ந்துவிட்டான்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவரின் கண்களில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்த சஜன் தென்பட இளக தொடங்கிய மனதை கட்டுப்படுத்தியவர் இவனை இப்படியே அவன் போக்கில் விடுவது சரிவராது என்று உணர்ந்தவராய்,

“கயல் ..! நம்ம மேல நம்பிக்கை இருந்தா டேபிள் மேல போட்டோ இருக்கு… பார்க்க சொல்லு…” என்று மகனுக்கு கேட்கும்படி சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் புகுந்து கொண்டார்.

அவரின் சத்தத்தில் நிமிர்ந்தவன் தளர்ந்த நடையோடு தனது அறைக்கு செல்ல மாடியேற முற்பட அவனருகில் வேகமாக வந்த கயல் “சஜன் பொண்ணு ரொம்ப லட்சணமா உனக்கேத்த மாதிரி இருக்கா எனக்கும் அப்பாவுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு உனக்கும் பிடிக்கும் ஒரு தடவை பார்த்துட்டு சொல்லுப்பா” என்று கண்களில் கனவுடன் நிற்கும் தாயை கண்டு விரக்தி புன்னகை சிந்த அவனது கைகளில் போட்டோ இருந்த கவரை திணித்துவிட்டு சென்றார் கயல்.

தனது அறைக்குள் சென்று முடங்கியவன் போட்டோ இருந்த கவரை தூக்கி பெட்டில் எறிந்துவிட்டு அப்படியே சரிந்தான். காதலித்தவள் கண்முன் இருக்க பெற்றோர் சொல்லும் பெண்ணை மணந்து எப்படி வாழ முடியும். அது தினமும் செத்து செத்து பிழைப்பதற்க்கு சம்மாக அல்லவா இருக்கும்.

அணு அணுவாய் சாவதற்க்கு முடிவெடுத்த பின் காதல் சிறந்த வழி தான் என்றோ வாசித்த கவிஞரின் வரிகள் நியாபகம் வர இங்கோ காதலை சொல்லவும் முடியாமல் அதை மறக்கவும் முடியாமல் இருப்பது மரணத்தின் பிடியில் சிக்கியதை போல மனதை ரணப்படுத்தியது.

பாறையின் உள்ளே சற்று ஈரம் இருக்குமாம் அதைப் போல இந்த நேரத்திலும் மனதின் உள்ளே எங்கோ ஒரு ஓரத்தில் ஏனென்று தெரியாமல் அவள் தன் அருகிலே இருப்பது போல் தோன்ற , சட்டென்று திரும்பி பார்த்தவனின் கண்களில் போட்டோ இருந்த கவர் பட்டது.

அனிச்சை செயலாய் அதை எடுத்து பார்த்தவனின் கண்கள் கோழி முட்டை அளவிற்கு விரிய அதற்கு எதிர் பதமாக முகத்திலோ லட்சம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்த்து போல் மின்னியது.

இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த பாரத்தை வெளியேற்ற தெரியாமல் சத்தம் போட்டு சிரிக்க தொடங்கினான். சுமையாய் உணர்ந்த நிலை மாறி சுகமான தென்றல் தழுவி தன்னை தாலாட்டுவது போல் உணர்ந்தான்.

உடனே சென்று தன் தாய் தந்தையிடம் இவளை தான் காதலித்தேன் அதை சொல்ல முடியாமல் தான் கல்யாண பேச்சை தவிர்த்தேன் என்று சொல்லிவிட வேண்டும் என்று கால்கள் பரபரத்த நொடி மனதில் மின்னல் வெட்டியது.

“டேய் அவளே காதல் மேல நம்பிக்கை இல்லைனு சொல்றா? இப்போ நீ போய் அப்பா அம்மாகிட்ட சொன்னேன்னு வை … அவங்க ஏதாவது வாய் தவறி அவகிட்ட உளறிட்டா? என்ன பண்றது இப்போதைக்கு இது யாருக்கும் தெரிய வேண்டாம்…. கல்யாணம் முடிஞ்சதும் என் மேல அவளுக்கும் லவ் வந்த பிறகு தான் என் லவ் அவகிட்ட சொல்லணும்… அதுவைர்க்கும் இது அவளுக்கான சஸ்பென்ஸ் கிஃப்டாவே இருக்கட்டும்” என்று முடிவெடுத்துவனாய் தந்தையின் அறை நோக்கி சென்றான்.

“டாட்” என்ற அழைப்புடன் உள்ளே வந்த மகனை ஏறிட்டு பார்த்துவிட்டு தன் பார்வை வேறு புறம் திருப்பிக் கொண்ட தந்தையை கண்டு மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டவன், நேரே அவர் அருகில் சென்று அவரது தோள் மேல் கைப்போட்டு,

“என் மேல கோபமா சிவா? ஐ ம் வெரி சாரி நான் அப்படி பேசிருக்க கூடாது… ஏதோ ஒரு டென்சன்ல சொல்லிட்டேன்… ஐ ம் எக்ஸ்ட்ரீம்லி சாரி” என்றபடி காதில் கைவைத்து பரிதபமாக முழிக்கும் மகனை கண்டவரின் கோபத்தை பாசம் வென்றுவிட,

“சரி சரி நடிச்சது போதும். என் மருமகள் போட்டோ பார்த்தியா?” என்று விடாக் கண்டனாய் தன் பிடியிலே நிற்க,

“ஹம் ஹம் பார்த்தேன் பார்த்தேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து செல்ல முயன்றவனின் கை பிடித்து இழுத்து தன் அருகே அமர வைக்க,

“என்ன டாட்” என்று ஒன்றும் அறியாத பிள்ளையாய் முகத்தை வைத்தவனின் காதை பிடித்து திருகிய சிவா “ஏன்டா பொண்ணு பிடிச்சதுனால தான என்னை சமாதன படுத்த வந்த..?” என்று சரியாய் யூகிக்க,

அவரது கேள்வியில் அசடு வழிந்தவன் “ஹா ஹா… டாட்! நீங்க செம ஷார்ப்… எங்க அம்மா கூட இருந்து இருந்து ஓரளவு புத்திசாலி ஆகிட்டீங்க… ஐ ம் வெரி ப்ரவுட் ஆஃப் யூ..!” என்று அவர் தோள்களை தட்டி குடுத்தவனின் முதுகில் செல்லமாக ஒரு அடி வைத்தவர்,

“இதை கண்டுபிடிக்க அறிவு தேவையில்லைடா அனுபவம் இருந்தா போதும்” என்றதும் எப்படி என்ற கேள்வி தொக்கி நின்ற மகனின் முகம் கண்டவர்,

“என்ன அப்படி பார்க்குற நானும் உங்க அம்மா போட்டோ பார்க்குறதுக்கு முன்னாடி இப்படி தான் நடந்துகிட்டேன்…. அப்புறம் இது தான் நமக்கு விதிச்ச விதினு போட்டோவை அரை மனதா திறந்து பார்த்தேன்…. அதுக்கு பிறகு இப்போ நீ பண்ணுனியே இதே தான் நானும் செய்தேன்…. அது ஒரு கனா காலம்” என்றவரை கண்டு கண் சிமிட்ட,

“சரி..! உனக்கு பிடிச்சுருக்கு தான… பொண்ணு வீட்டுக்கு சொல்லி அவங்க சம்மதம் கேட்கட்டுமா..?”

“உங்க இஷ்டம் டாட்..!” என்று கூறியவ னை ஏற இறங்க பார்த்துவிட்டு

“டேய்..! ஒரு நாளைக்கு ஒரு ஷாக் போதும்டா… போ.. போய் கனவு கண்டுகிட்டு இரு… நான் போன் பண்ணி விவரம் சொல்லிடுறேன்…” என்றார்.

அதன் பின் அவர் தனுஷா வீட்டிற்கு போன் செய்து விவரம் சொல்லி தாமோதரன் தங்கள் சம்மதம் சொல்லும் வரை பிங்கர் கிராஸ்ட் என்பது போல தான் இருந்தான் சஜன்.

இரவு தன் அறையில் படுத்து விட்டத்தை நோக்கி கொண்டிருந்த சஜனுக்கு இன்னும் நம்ப முடியவில்லை. காதலித்தவளையே நாளை பெண் பார்க்க போகிறோம் என்று. நூறாவது முறையாக தன்னை கிள்ளி இது நிஜம்தானா என்று உறுதிப்படுத்திக் கொண்டவன் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனான்.

நாளை அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காலையில் இருந்து வீடே ஒருவித பரபரப்புடன் இருந்தது. மூத்த பெண் யாரும் இல்லாததால் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று தடுமாறிக் கொண்டிருந்த தாமோதரனை கண்ட அருண் “அப்பா! எதுக்கு இவ்வளோ டென்சன் ஆகுறீங்க..? கூல்… பொண்ணு பார்க்க தான வர்றாங்க… என்னமோ இன்னைக்கே கல்யாணம் மாதிரி ஏன் இப்படி பதட்டமா இருக்கீங்க…?”

“உங்க அம்மா இருந்தா இந்த டென்சன்லாம் இருந்திருக்காது… நாம ஆம்பிளைங்க என்ன பண்றது ஒண்ணும் புரியலை…. பொண்ணு பார்க்க தான் வர்றாங்க.. இருந்தாலும் கையும் ஓடலை… காலும் ஓடலை..!” என்று பதறிக் கொண்டிருந்த நேரம்,

“ஹலோ அங்கிள்..! ஹாய் அருண் அண்ணா..!” என்றப்டி வந்து சேர்ந்தாள் வெண்பா தன் அன்னை ஹேமாவுடன்.

“அண்ணா எப்படீ இருக்கீங்க..? அருண் தம்பி எப்படி இருக்க..? எப்போ வந்தப்பா..?” என்று ஹேமாவும் நலம் விசாரிக்க,

“வாம்மா..! நாங்க நல்லா இருக்கோம்… உங்க வீட்ல எல்லாரும் சௌக்கியமா..?” என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நல விசாரிப்பிற்க்கு பின்,

“நல்ல நேரம் வெண்பா கூட நீயும் வந்தம்மா… எனக்கு ஒரே டென்சனா இருக்கு… என்னவெல்லாம் பண்ணனும்மா..? கொஞ்சம் சரி பார்த்து சொல்லிடு… எதுவும் குறைவா இருந்தாலும் உடனே வாங்கிட்டு வந்திடலாம்….”

“நீங்க கவலைப்படாதீங்க அண்ணா…! நான் பார்த்துகிறேன்…” என்றபடி சொல்லி கொண்டிருக்க,

“அங்கிள்..! தனு,  தியா எங்க..?” என்று வெண்பா வினவ,

“ரெண்டு பேரும் கிட்சன்ல சமையல் பன்ணிட்டு இருக்காங்கம்மா…” என்றதும்

வெண்பாவும் அவள் தாய் ஹேமாவும் உள்ளே செல்ல அவர்களை வரவேற்று காபி போட சென்ற தனுவை தடுத்தவர்,

“நீங்க மூணு பேரும் போய் ரெடி ஆகுங்க… சமயலை நான் பார்த்துக்கிறேன்… “ என்று சொல்ல

“இன்னும் அரை மணி நேரத்துல முடிஞ்சிரும் ஆன்டி… நீங்க ஹால்ல உட்காருங்க… நானும் தியாவும் பார்த்துகுறோம்…”

“தனு..! ஆன்டி சொன்னா கேட்கணும்… நான் பார்த்துகிறேன்… நீங்க போங்க..!“  என்று விடாப்பிடியாக அவர்களை வெளியேற்றிவர் சமையலில் கவனம் செலுத்திலானார்.

வேறு வழியின்றி தங்களின் அறைக்கு சென்ற பின்பு “ஏன்டி தனு..! எந்த கலர் சாரி போட போற..?“என்று தங்களின் உலகிற்க்கு பிரவேசித்தனர்.

“தியா..! ஏன் டல் மேக்கப் போட்ருக்க… இங்க வா… நான் சரி பண்றேன்..” என்று வெண்பா அழைக்க,

“அய்யோ அக்கா..! இன்னைக்கு அக்காவை தான் பொண்ணு பார்க்க வராங்க… நீங்க அக்காவை கவனியுங்க..!”

“யாரு கண்டா மாப்பிள்ளை ப்ரெண்ட்ஸ் யாராவது வந்து உனக்கு செட் ஆனாலும் ஆச்சர்யப்படுறதுகில்லை…. மை கலைஞ்சுருக்கு பாரு..!!” என்றபடி அதை சரிபடுத்த ஒருவாறு அனைவரும் கிளம்பி மாப்பிள்ளை வீட்டினருக்காக காத்திருக்க தொடங்கினர்.

வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் தாமோதரனும் அருணும் நேரே வாசலுக்கே சென்று வரவேற்றனர்.

அவர்க ளை உள்ளே அழைத்து உபசரித்துக் கொண்டிருந்த நேரம் சஜனின் அலைப்பேசி ஒலியெழுப்ப “எக்ஸ்க்யூஸ் மீ..!!” என்றவாறு வெளியே சென்று மொபலை எடுத்து பேசி முடித்ததும் செல்ல எத்தனிக்கையில், இனிமை குரல் இசைக்கும் ஓசை கேட்டு அப்படியே நின்றான்.

நிலை பெயராது சிலை போலவே நின்று

நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவது அறியாமலே மிக விநோதமான

முரளிதர என் மனம் அழைப்பாயுதே

கதறி மனமுருகி நான் அழைக்கவோ

இதர மாதருடன் நீ கழிக்கவோ இது தகுமோ?

இது முறையோ? இது தர்ம்ம் தானோ?

அலைப்பாயுதே கண்ணா ஆஆஆஆஆஆ..

குரலில் தெரிந்த உணர்ச்சி பிழம்பில் சிக்குண்டுவனின் மனம் அவளது கண்ணன் நானாக மாட்டேனா? என்னை நினைத்து உருகி அவள் பாட மாட்டாளா? என ஏங்கி தவித்தது.

உள்ளே வந்தவனின் கண்கள் தனுவை தேடி கொண்டிருக்க, பத்து நிமிடம் அவனை காக்க வைத்துவிட்டு பதினோறாவது நிமிடம் தனு தியா வெண்பாவுடன் வெளியே வந்தாள்.

ராமர் பச்சை கலரில் குங்கும நிற பார்டர் போடப்பட்ட பட்டுபுடவை அவள் மேனியை தழுவியிருக்க, முகத்தில் சிறு ஒப்பனையும் சிவப்பு வண்ண பொட்டிற்க்கு மேல் கீற்றாய் சந்தானமும் அழகுக்கு அழகு சேர்க்க தேவதையாய் ஒளி வீசி நின்றாள் தனு.

இவ்வளவு நேரம் தேடியவனின் கண்களோ பசை போட்டு ஒட்டியது போல் அவளிடமே நிலைப் பெற்றிருக்க, தனுவோ அவனை மட்டும் கணாது மற்ற அனைவரையும் கண்டு மென்னகை புரிந்தாள்.

சாந்தமாய் இருக்கும் அவளை சஜனின் பெற்றோருக்கும் பிடித்துவிட, கயல் விழி தனுவை அழைத்து தன் பக்கத்தில் இருத்திக் கொண்டார்… பெண் பிள்ளை இல்லையே என்ற அவரது குறை நீங்கியது போல் தோன்ற தாயில்லாமல் வளர்ந்த அவர்களை காணும் போது ஒரு தாயாய் அவரது அன்பு வெளிப்பட அங்கு ஓரு ஓரத்தில் நின்ற தியாவையும் தன் பக்கத்தில் அமர வைத்தார்.

“அண்ணா..! எதை நினைச்சும் கவலைப்படாதீங்க… நாம எல்லாரும் இனி ஓரே குடும்பம்… எனக்கும் இவங்க பொண்ணுங்க மாதிரி தான்..! “என்று கூற சிவசங்கரும் அதை வழிமொழிந்தார்.

“ரொம்ப சந்தோஷம்…! மத்த விஷயங்களெல்லாம் எப்படி.. என்ன.. ஏதுனு சொன்னிங்கன்னா..? ஏற்பாடு பண்ணிடுறோம்…” என்று கூற

“என்ன இப்படி சொல்றீங்க..? இப்போ தான சொன்னோம் ஓரே குடும்பம்னு… அப்புறம் எதுக்கு இந்த பேச்சு எல்லாம்…? தியாவையும் எங்க வீட்டு  மருமகளா கூப்பிட்டு போகலாம்… அதுக்கு எனக்கு இன்னொரு பையன் இல்லையேனு வருத்தப்படுறேன்…” என்று கூற

அவரது பதிலில் மனம் நெகிழ்ந்து போனது தாமோதரனுக்கு. அவர் தன் மகனை கண்களால் வினவ அவனும் அவர்கள் குணம் பிடித்து போனதாய் சைகை செய்தான்

கயல்விழியின் பதிலில் ஒரு நிமிடம் அதிர்ந்து போன தியா அதன் பின் அவர் ‘இன்னொரு மகன் இல்லை’ என்று வருத்தப்படுகிறேன் என்று சொன்னது மூளையில் உரைக்க சற்று ஆசுவாசமானாள்.

இரு குடும்பத்திற்க்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போக அடுத்து என்ன என்று எல்லோரும் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது தான் சிவசங்கரும் கயல்விழியும் அந்த செய்தியை கூற சஜன் உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

                                                             செனோரீட்டா வருவாள்.

 

Advertisement