Advertisement

அத்தியாயம் 8:

மழையென நீ பொழிவாய்

கடலென நிறைந்து வழிந்தோடலாமென

நான் காத்திருக்க நீயோ இடியென

என்னுள் இறங்கி எனை பொய்க்க

செய்ததேனோ?

பறவைகள் அனைத்தும் தன் வீட்டிற்கு திரும்பும் அந்த மாலை வேளையில் மனிதர்களும் தங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தனர். அவர்களின் அவசரம் அங்கு ஏற்பட்ட வாகன நெரிசலில் தெரிய அதிலிருந்து ஒரு வழியாக தப்பித்து வீடு வந்து சேர்ந்தாள் தனுஷா.

வீட்டிற்கு வெளியே ஸ்கூட்டியின் சத்தம் கேட்டதும் ஓடி வந்து கதவை திறந்த தியா தன் அக்காவின் வாடிய முகத்தை கண்டவள் அவளிடமிருந்த ஹேண்ட் பேக்கை வாங்கி கொண்டு “என்ன அக்கா இன்னைக்கு ரொம்ப வேலையா..? முகம் இப்படி வாடி போயிருக்கு…” என்றாள்.

தங்கையின் அக்கறை கண்டு புன்னகைத்தவள் “ஆமா தியா..! நாளைக்கு ஒரு ஃபங்ஷன் ஆஃபிஸ்ல… அதான் நாளைக்கு உள்ள வேலையையும் இன்னைக்கே முடிக்க வேண்டியது இருந்துச்சு…”

“சரி.. சரி… முதல்ல உள்ள வா..! ஃப்ரஷ்-அப் பண்ணிக்கோ… நான் உனக்கு காஃபி போடுறேன்…“ என்றபடி பேக்கை டேபிள் மீது வைத்தவள் நேரே சமையல் அறையை நோக்கி சென்றாள்.

கை கால் முகம் கழுவிக் கொண்டு ஹாலில் இருந்த ஷோபாவில் அமரவும் தியா காஃபி கொண்டு வர அவளுக்குமே அது தேவையாக இருக்க ஒரே மூச்சில் குடித்து முடித்தவள் அப்போது தான் தந்தை வீட்டில் இல்லாதது உரைக்க “ தியா! அப்பா எங்க ஆளைக் காணோம்..?”

“பக்கத்துல இருக்க பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு வர்றேனு சொல்லிட்டு போனாங்க…. நாளைக்கு உங்க கம்பெனியில என்ன ஃபங்ஷன்..?”

“அது ஒரு அஸைன்மென்ட் சக்ஸஸ் ஃபுல்லா முடிஞ்சிருச்சு… அதுல நல்ல பெனிபிஃட்… அதுக்கு தான் நாளைக்கு ஆஃபிஸ் ஸ்டாஃப் மட்டும் கலந்துக்கிற மாதிரி ஒரு சின்ன செலிப்ரேஷன்…”

“ஆமா..! உங்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன்… உங்க எம்.டி எப்படி? ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா? இல்லை சிரிப்பு போலீஸா..?”

“ஹா ஹா..! ஏன்டி இப்படி..? நான் பார்த்த வரைக்கும் வேலைனு வந்துட்டா ரொம்ப சின்சியரா இருக்காரு…. மத்தபடி அவர் எப்படினு எனக்கு தெரியலை டி”

“நீ சுத்த வேஸ்ட் அக்கா வேலைக்கு சேர்ந்து ஒன் மன்த் ஆகப் போகுது இன்னும் விவரம் தெரியாம இருக்க” என்று தனுவை கிண்டல் செய்ய,

“ஆமாடிம்மா உன் அளவு எனக்கு விவரம் பத்தாது தான். நாளைக்கு எந்த ட்ரெஸ் போடுறதுனு தெரியலை எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு செல்லம்” என்றவாறு அவளை இழுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றாள் தனு.

“தனு சொல்ல மறந்துட்டேன். என் ப்ரெண்ட் லேகாக்கு நெக்ஸ்ட் வீக் மேரேஜ் அவ உன்னையும் இன்வைட் பண்ணிருக்கா நாம போயிட்டு வந்திடலாம் சரியா?”

“நெக்ஸ்ட் வீக்கா? லீவ் போடணுமே டி சரி பார்க்குறேன் இல்லைனா நீ மட்டும் போயிட்டு வந்திடு”

“என் பேர சொல்லு உடனே லீவ் குடுத்துருவாங்க. அப்படியும் எதாவது ரூல்ஸ் பேசுனா நான் பார்த்துக்குறேன்”

“அடேங்கப்பா இந்தம்மா என்னமோ கம்பெனி ஓனர் மாதிரி இவங்க சொன்னதும் ஒரு நாள் என்ன ஒன்பது நாள் லீவ் எடுத்துக்கோங்கனு சொல்வாங்க பாரு”

“ஹலோ என்னோட வேல்யூ தெரியலை உனக்கு..!  போக போகத் தெரியும் இந்த தியாவின் அருமை & பெருமை புரியும்” என்று பாட ஆரம்பிக்க, தனுவின் முறைப்பில் பாடுவதை நிறுத்தி அசடு வழிந்தவள் “சன்டே தான் மேரேஜ். சோ ப்ராப்ளம் இல்லை நாம் போகலாம் டீல்”

“சரிங்க மேடம் இப்போ கொஞ்சம் கிட்சன்ல வேலை பார்க்கலாமா?” என்றவாறு தியாவின் முதுகில் கை வைத்து தள்ளியபடி சமையலறை நோக்கி சென்றாள்.

கோவிலிற்கு சென்றுவிட்டு திரும்பிய தாமோதரன் யோசனையோடு வீட்டிற்க்குள் நுழைந்தவர் உடனடியாக அருணுக்கு போன் செய்து தனுவிற்கு வந்திருக்கும் வரன் பற்றி கூற தொடங்க,

அதை கேட்ட அருண் “சரிப்பா நானும் கேள்விப்பட்டிருக்கேன் நல்ல குடும்பம் தான்பா அவங்களுக்குனு சொசைட்டியில நல்ல பேர் இருக்கு நம்ம தனுக்கு பொருத்தமான இடம் தான் இதுல யோசிக்க என்னப்பா இருக்கு. பேசாம இதையே பேசி முடிச்சுருவோமா?”

“நீ சொல்றது சரி தான் என் நண்பன் கூட அதை தான் சொன்னான். பையனும் நல்ல குணமுள்ளவன்னு இருந்தாலும் அவங்க..” என்று இழுக்க

“அப்பா அவங்களுக்கு ஏத்த மாதிரி செய்ய முடியாதுனு நினைக்குறீங்களா? எல்லாம் நான் பார்த்துக்குறேன் நீங்க கவலைப்படாம இருங்க”

“ம்ம் சரிப்பா போனை வைக்கட்டா” என்று கேட்க,

“அப்பா தனுக்கிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் அவங்க முதல்ல ஓகே சொல்லட்டும் அப்புறம் அவகிட்ட சொல்லி அவ விருப்பத்தை கேட்போம் சரிங்களாப்பா?”

“இதை நான் மறந்துட்டேன் பாரு நல்ல வேளை நியாபகப்படுத்துன இல்லைனா அவகிட்ட உளறிருப்பேன்… ஒரு வேளை இது கூடி வரலைனா அவளுக்கு தர்மசங்கடமா ஆகிருக்கும்” என்றார்.

“சரிப்பா அவங்க சைடுல இருந்து தகவல் வந்ததும் சொல்லுங்க நான் வர்றேன்” என்றபடி போனை வைக்க,

“அப்பா எப்போ வந்திங்க “என்றபடி தியா அறையினுள் நுழைய,

“இப்போ தான்டா வந்தேன். அப்பாக்கு என்ன வச்சுருக்கீங்க செல்லம்” என்று வாஞ்சையாக அவள் தலையை தடவ,

“ஹம் இப்போதைக்கு உங்களுக்காக நானே செய்த சப்பாத்தி தான் இருக்கு”

“ஓ அப்படியா அப்பாக்கு இந்த ஜென்மத்திற்கு அதுவே போதுமே. வாங்க வாங்க போய் சாப்பிடலாம்” தன் மகளை அழைத்துக் கொண்டு டைனிங் ஹாலை நோக்கி சென்றார்.  

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அடுத்த நாள் ரிதம் கன்ஸ்ட்ரக்ஷனே விழா கோலம் பூண்டிருந்தது.மாலை ஐந்து மணி அளவில் தொடங்கப்பட இருந்த பார்ட்டிக்கு அனைவரும் சற்று முன்னதாகவே வந்து மற்றவர்களுடன் கூடி பேசிக் கொண்டிருந்தனர். தனுஷா, வெண்பா அவர்களும் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டிருந்தனர்.

மாந்தளிர் நிற சல்வாரில் அங்காங்கே அரக்கு வண்ண பூக்களை அள்ளி தெளித்தாற் போல் இருந்த உடை தனுஷாவிற்கு பாந்தமாய் இருக்க, வெண்பாவும் கருநீல நிறத்தில் தங்க பார்டர் போடப்பட்டு கற்கள் பதிக்கப்பட்ட சல்வாரில் அம்சமாய் இருந்தாள்.

பார்ட்டிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வந்து கொண்டிருந்த வினோத்தின் விழிகளில் வெண்பா தென்பட அத்துனை நேரம் இருந்த களைப்பு நீங்கி விழிகளில் ஒரு வித சுவாரஸ்யம் குடி கொண்டது.

கண்களால் வெண்பாவின் அழகை பருகி கொண்டிருந்த அவனது ரசனையை தடுத்து நிறுத்தும் வகையில் அமைந்தது சஜனின் வருகை.

சஜனை கண்டதும் தனது ரசிக்கும் வேலையை தற்காலிகமாக நிறுத்தியவன் நேராக சஜனிடம் சென்று தான் செய்துள்ள ஏற்பாடுகளை பற்றி விளக்கி சொல்ல, ஆனால் சஜனோ அதை கேட்கும் நிலையில் இல்லை.

ஆம் ரசிக்கும் வேலையை இப்போது அவன் கையில் எடுத்துக் கொண்டான் அல்லவா!

“சார் எல்லாம் ஓகே தான” என்ற வினோத்தின் குரலில் நிகழ்விற்கு திரும்பியவன், “யா குட்” என்றான் என்ன சொல்வது என தெரியாமல்.

மேலும் வினோத் ஏதோ சொல்ல வர “ப்ளீஸ் வினோத் நீங்களே பார்த்து பண்ணிடுங்க” என்றவாறு தன் கேபினுக்குள் சென்றுவிட, இங்கு வினோத்தோ “என்னாச்சு இவருக்கு என்ன பண்ணினாலும் துருவி துருவி ஆயிரம் கேள்வி கேட்ப்பாரு இன்னைக்கு மனுஷன் ஒன்னும் சொல்லாம நீயே பார்த்துக்கோனு போறாரு” என்று குழப்பத்தில் ஆழ்ந்தான்.

பாவம் அவனுக்கு எப்படி தெரியும் தன் முதலாளி காதால் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று!

அறையினுள் நுழைந்தவன் டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை சுற்றிக் கொண்டே யோசனையில் ஆழ்ந்தான்.

நேற்று வீட்டில் நடந்ததை நினைக்கும் போது அப்பா அம்மாவை எப்படி சமாளிப்பது என்றே தெரியாமல் குழப்பமாக இருந்தது.

நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே செல்ல கிளம்புகையில் சிவப்பிரகாசம் “சஜன் இங்க வாப்பா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கூற,

“வர்றேன் டாட் என்றபடி அவர் அருகில் வந்தவன் “சொல்லுங்க டாட் என்ன பேசணும்”

“இரு உங்க அம்மாவும் வந்துரட்டும் என்றவாறு கயல் இங்க வாம்மா சஜன் வெயிட் பண்றான்” என சமையல் அறை நோக்கி குரல் கொடுக்க,

கயல்விழியும் அவர்களின் அருகில் வந்து அமர்ந்ததும் அவரும் சிவாவும் ஒருவரை ஒருவர் கண்ஜாடை காட்டிக் கொண்டு பேசாமல் அமர்ந்திருக்க இதையெல்லாம் கண்டும் காணாதது போல் சஜன் அமர்ந்திருக்க ஒரு நிலைக்கு மேல் மௌனம் நீடிப்பதை பொறுக்க முடியாதவனாய் “மாம் டாட் என்ன ஆச்சு பேசணும்னு சொல்லிட்டு இப்படி அமைதியாய் இருந்தால் நான் எப்படி எடுத்துக்கிறது ஜஸ்ட் ஸ்பீக் அவுட்”

“சஜன் நானே சொல்றேன் நானும் உங்க அம்மாவும் உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம். அதான் உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்னு சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி பார்க்கலாம்னு தான் உங்கிட்ட அபிப்பிராயம் கேட்குறதுக்காக இருக்க சொன்னோம்”

இதை கேட்டதும் சற்றே அதிர்ந்துவன் அன்னையை நோக்க அவரும் ஆமென்பதாய் தலையசைக்க,

“இப்போ என் கல்யாணத்திற்கு என்ன அவசரம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்” என்று விட்டேத்தியாக பதில் சொல்ல,

“இங்க பாரு சஜன் இன்னும் எவ்வளோ நாள் தான் இதே கதையை சொல்லிட்டு இருக்க போற இல்லை உன் மனசுல யாரும் இருக்காங்களா இருந்தா சொல்லு அந்த பொண்ணையே உனக்கு பேசி முடிக்குறோம் சொல்லுப்பா”

“இன்னும் அவகிட்டயே சொல்லலை இதுல நான் உங்ககிட்ட என்னனு சொல்றது டாட்” மனதில் நினைத்துக் கொண்டிருக்க,

“அமைதியா இருந்தா என்ன சஜன் அப்பா கேட்குறாங்கல்ல பதில் சொல்லு”

“அது வந்து. அப்படிலாம் எதுவும் இல்லை. ஆனால் இப்போ கல்யாணம் வேண்டாம்”

“உனக்கு டைம் ரொம்ப குடுத்தாச்சு. காரணமே இல்லாம வேண்டாம் வேண்டாம்னு சொன்னா இதுக்கு தீர்வே கிடையாது உனக்கு ஒரு நாள் டைம் தர்றேன் யோசிச்சு நல்ல முடிவா சொல்லு”

அப்பாவிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்று தெரியாமல் தாயின் ஆதரவை தேடி அவர் முகம் நோக்க அவரும் தன் விருப்பமும் அது தான் என்பது போல் இருக்க,

இப்போதைக்கு நாளை வரை இந்த விஷயத்தை தள்ளி போடலாம் என முடிவெடுத்தவனாய் “சரி டாட் நாளைக்கு சொல்றேன்” என்றபடி தன் அறைக்குள் சென்று முடங்கி கொண்டான்.

வினோத் வந்து பார்ட்டிக்கு நேரம் ஆகிவிட்டதாக அழைக்க வந்ததும் தன் நினைவுகளில் இருந்து மீண்டவன் இன்று எப்படியாவது தனுவிடம் தன் விருப்பத்தை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பார்ட்டி நடக்கும் ஹாலை நோக்கி நடை போட்டான்.

இன்று தான் அவளிடம் சொல்ல போவதில்லை என்று அவன் அறியவில்லை.

ஒருவழியாக பார்ட்டி ஹாலை அடைந்ததும் அனைவரையும் வரவேற்க்கும் விதமாய் உரையாற்றி முடித்ததும் பார்ட்டி  தொடங்கியது.

சிறு சிறு விளையாட்டுகள், அரட்டைகள் என பார்ட்டி கலைகட்ட தொடங்கியது. கொண்டாட்டங்கள் முடிந்து எல்லோரும் அமர்ந்து சாப்பிட்ட்டுக் கொண்டிருக்க வெண்பா “ஹே தனு இந்த வீக் என்ட் ஷாப்பிங் போகலாமா?”

“நெக்ஸ்ட் வீக் போகலாம் இந்த வாரம் ஒரு மேரேஜ் பங்ஷன் இருக்கு தியா ப்ரெண்ட் லேகா அன்னைக்கு கூட பீச்ல வைத்து பார்த்தோம்ல அவளுக்கு தான்”

“ஓ அவளுக்கா சரி சரி அப்போ ஈவினிங் ப்ரீ தான ஷாப்பிங் போகலாம்”

“இல்லைடி அம்பத்தூர் சர்ச்ல தான் மேரேஜ் அவ்வளோ தூரம் போயிட்டு வரணும். வீட்டுக்கு க்ரோசரி ஐயிட்டம்ஸ் வேற வாங்கணும் ஈவினிங் போகலாம்னு நினைச்சிருக்கேன் சோ சாரி மச்சி நெக்ஸ்ட் வீக் போகலாம்”

“ஹோ காதல் கல்யாணமா? சூப்பர்ல எனக்கும் இதே மாதிரி லவ் மேரேஜ் பண்ணனும்னு ஆசைடி தனு. கதைகள்ல வர்ற லவ் ஸ்டோரீஸ் பிடிக்கும் போதே அவ்வளவு சூப்பரா அது நிஜத்துல நடந்தா வாவ். உனக்கு இப்படியெல்லாம் தோணிருக்கா டி” என்றபடி தனுவை பார்க்க,

அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்ற ரேஞ்சில் தன் சாப்பாட்டு தட்டிலேயே மும்முரமாய் இருக்க,

“ஏன்டி எவ்வளவு முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன் நீ என்னடானா குளத்துக்குள்ள தலையை விட்ட கொக்கு மாதிரி உட்கார்ந்திருக்க” அவளின் தோளில் இடிக்க

“இப்போ என்ன சொல்லணும்னு சொல்ற நீ இவ்வளோ நேரம் பினாத்திட்டு இருந்ததை கேட்டுட்டு தான் இருந்தேன்.நீ சொல்றதெல்லாம் கதைக்கு வேணும்னா நல்லா இருக்கும் ஆனா வாழ்க்கைக்கு ஒத்துவருமானு எனக்கு தெரியலை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை”

“என்னடி நீ நூத்துக் கிழவி மாதிரி பேசுற. லவ் பண்றத தப்பா நினைக்க அது என்ன கொலை குற்றமாடி?”

“ஹே தப்பா நினைக்குறேனு எப்போ சொன்னேன். எனக்கு  பிடிக்காதுனு தான் சொன்னேன். மத்தபடி காதலுக்கு எதிரியெல்லாம் இல்லடி நீ பேசுறத பார்த்தா நான் வில்லி மாதிரி போர்ட்ரேட் ஆகுது.”

“இப்படி வேண்டாம் வேண்டாம்னு ஒடுறவங்களை தான் காதல் துரத்தும். நீயும் ஒரு நாள் அகப்பட போற பாரு. அப்போ என்ன சொல்ல போறனு பார்க்குறேன்”

“பாரு பாரு அப்பா அண்ணா யாரை சொல்றாங்களோ அவங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன். கல்யாண விஷயத்துல எனக்குனு தனிப்பட்ட ஆசை எதுவும் இல்லைடி. என்னடா இவ சினிமாத்தனமா பேசுறாளேனு உனக்கு தோணலாம். நீ என்ன எப்படி நினைச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. நாம போடுற ட்ரெஸ்ல இருந்து படிக்குற படிப்பு, பார்க்குற வேலை எல்லாமே நம்ம விருப்படி தான் செய்றோம் ஆனா கல்யாணம் ஒவ்வொரு பெற்றவங்களோட கனவு அந்த கனவை நான் கலைக்க விரும்பலை. அதனால என்னோட கல்யாணம் எங்க வீட்டுல எடுக்குற முடிவு தான்” இதற்கு மேல் இதை பற்றி பேசாதே என்பது போல் முடித்துவிட

“சரி சரி டென்சன் ஆகாத இனி இதை பற்றி பேசலை” என்றபடி இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் வெண்பா.

இதை கேட்டுக் கொண்டிருந்த இரு ஜீவன்களில் ஒன்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டது அது யாரும் அல்ல நம்ம வினோத தான். மற்றொரு ஜீவனான சஜனோ தன் காதலை சொல்லலாம் என்று நினைத்திருக்க இப்படியொரு பதிலை தனுவிடம் இருந்து எதிர்ப் பார்க்காததால் நொடிந்து போனது அவன் மனம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாய் தன்னிடம் பேச வேண்டும் என்று சொன்ன தந்தையை யோசனையாய் பார்த்தபடி அவருடன் சென்றாள் தனுஷா.

“என்னப்பா எதும் முக்கிய மான விஷயமா?” என்று கேட்க,

“ஆமடா என்னோட உடம்பு முன்ன மாதிரி ஒத்துழைக்குறது இல்லை எனக்கும் வயசாகிட்டே போகுது அதான்..” என்று விஷயத்தை சொல்ல வந்தவரை இடை மறித்தவள்,

“உங்க உடம்புக்கு என்ன செய்யுதுப்பா நீங்க எதாவது மறைக்குறீங்களா? வாங்க ஹாஸ்பிட்டல் போயிட்டு வரலாம்” என்றபடி கலக்கத்துடன் கேட்டவளை கண்டு தாமோதரன் புன்னகைக்க,

“அப்பா நானே டென்சன்ல இருக்கேன் இப்போ எதுக்கு சிரிக்ககுறீங்க” என்று அன்பு கலந்த கோபத்துடன் வினவியவளை தன் அருகே அமர வைத்து,

“சிரிக்காம என்ன பண்றது நல்லா இருக்குறவனை ஹாஸ்பிட்டல் கூப்பிடுற” என்று சொல்ல

“நீங்க தான சொன்னீங்க என்னால முன்ன மாதிரி முடியலைனு”

“நீ எங்க என்ன முழுசா சொல்லவிட்ட சரி சரி நான் என்ன சொல்ல வந்தேன்னா எனக்கும் வயசாகிட்டே போகுது நான் நல்லா இருக்கும் போதே உங்க கல்யாணத்தை பண்ணிடலாம்னு நினைக்குறேன். உங்க அம்மா இருந்திருந்தா இதெல்லாம் காலகாலத்துல பண்ண சொல்லி சொல்லியிருப்பா. எனக்கு நீங்க இன்னும் சின்ன பிள்ளைகளா தான் தெரியுறீங்க உனக்கு கல்யாண வயசு வந்துருச்சுனு என் நண்பன் உன் பொண்ணுக்கு வரன் எதும் பார்க்கலையானு கேட்கும் போது தான் உரைச்சுது அதான் உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன். நீ என்னமா சொல்ற?”

“அப்பா இதுல நான் சொல்ல என்ன இருக்கு உங்களுக்கு எது சரினுபடுதோ அதை செய்யுங்க. நீங்களும் அண்ணாவும் என்ன முடிவு பண்ணினாலும் எனக்கு சம்மதம் தான். நான் என்ன சொல்லுவேனோனு நீங்க யோசனை பண்ண தேவையே இல்லை” என்று கூற,

இதைவிட ஒரு தகப்பனுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க போகிறது. காலமெல்லாம் தொடற போகிற வாழ்க்கையை தன்னை தேர்ந்தெடுக்க சொல்லும் போது ஒரு தந்தையாக அவருக்கு கர்வமாகவே இருந்தது.

“உனக்கு நல்ல வாழ்க்கை அமையும்மா அதை அமைச்சு குடுக்க வேண்டியது இந்த அப்பாவோட பொறுப்பு சரியா?” என்றபடி ஆதுரமாய் அவள் தலையை தடவியவர் அப்போது தான் நியாபகம் வந்தவராய்,

“இந்தா தனு இதுல மாப்பிள்ளை போட்டோ இருக்கு பார்த்துட்டு பிடிச்சிருக்கானு சொல்லு” என்றபடி போட்டோ இருந்த கவரை அவள் கைகளில் தர,

“அப்பா அதான் சொல்லிட்டேன்ல உங்களுக்கும் அண்ணன்னுக்கும் ஓகேனா எனக்கும் ஓகே அப்புறம் எதுக்கு இந்த பார்மாலிட்டி”

“அண்ணனுக்கு அப்போவே வாட்ஸ்–அப் பண்ணிட்டேன் அவனுக்கும் பிடிச்சுருக்கு எனக்கும் பிடிச்சுருக்கு இருந்தாலும் இந்த அப்பாவோட திருப்திக்காக நீயும் ஒருதடவை பார்த்துட்டேனா நான் சந்தோஷப்படுவேன்” என்று சொல்ல,

“சரி பார்க்குறேன்” என்றபடி கவரை திறந்து பார்த்தவள் சற்று அதிர்ச்சி அடைய, “அப்பா இது …..” என்று இழுத்தவளை,

“நீ என்ன சொல்ல வர்றேனு எனக்கு தெரியும். நானும் முதல்ல தயங்கினேன் அப்புறம் அண்ன்ன் தான் நல்ல இடம் இது கூடி வந்தா இதையே பண்ணிடுவோம்னு சொன்னான். எனக்கும் சரினுபட்டுது. அதான் அவங்க ஓகே சொன்னதும் உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன் இப்பொ தான் கொஞ்ச நேரம் முன்னாடி போன் பண்ணி அவங்களுக்கு சம்மதம்னு சொன்னாங்க. நீங்களும் வீட்டுல பேசிட்டு ஓகேனா சொல்லுங்க நாளைக்கே பொண்ணு பார்க்க வர்றோம்னு சொன்னாங்க. அப்போ நான் நாளைக்கு அவங்களை வர சொல்லலாம்ல”

“சரிப்பா உங்க விருப்படி செய்யுங்க. ஆமா தியா எங்க இன்னும் வரலையா?”

“வர லேட் ஆகும்னு போன் பண்ணி சொன்னாம்மா. நீ போய் ரெஸ்ட் எடு நான் அவங்களுக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்”

செனோரீட்டா வருவாள்.

Advertisement