Advertisement

அத்தியாயம் 38 :

ஏற்கனவே பார்த்து பழகியவர்கள் தான் என்றாலும் பெண் பார்க்கும் படலம் நடக்க இருப்பதால் இயல்பான பரபரப்புடன் வீடே அமளி துமளிப்பட்டது. இதற்கும் எனக்கும் துளியும் சம்மந்தம் இல்லை என்பது போல், தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்த தனுஷாவின் இழுப்புக்கெல்லாம் உடன்பட்டு கடனே என அமர்ந்திருந்தாள் அனன்யா.

சிறிது நேரத்திற்கெல்லாம் அருண், தாமோதரன், சிவப்பிரகாசம், கயல், சஜன் தியாவுடன் வந்து இறங்கினான். அனைவரையும் முறைப்படி வரவேற்று உபசரிக்க, எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அருணின் மனம் ஒரு புறம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தாலும் ‘அனு என்ன சொல்வாளோ..?’ என்று ஒருபுறம் யோசித்துக் கொண்டிருந்தது.

பெரியவர்களின் பேச்சு தொடர்ந்து கொண்டே இருக்க, “நான் போய் அண்ணியை பார்த்துட்டு வர்றேன்…” என்றபடி தியா எழப் போக,

“இரும்மா..! அவளை இங்கேயே கூட்டிட்டு வரலாம்…” என்று சொன்ன சாலா தனுஷாவிடம் அனுவை அழைத்து வர சொல்ல, தனுவும் அவளை அழைத்து வந்தாள்.

அருணின் விழிகள் இமை மூடாமல் அனுவையே பார்த்துக் கொண்டிருக்க, அனுவோ குனிந்து தலை நிமிராமல் சபைக்கு முன் வந்து நின்றாள். அவளையும் அங்கு அமர சொல்லி விட்டு கயல் அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“அடுத்த மாதம் வர்ற முகூர்த்தம் ரொம்ப விஷேசம்… அன்னைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாமா?” என்று சிவா கேட்க,

தாமோதரனும், சாலாவும் சரி என்றுவிட, “கல்யாணத்திற்கு முந்தின நாள் நிச்சயமும், கையோட ரிஷப்சனும் வச்சுடலாம் என்ன சொல்றிங்க சம்மந்தி..?” என்று கேட்க, அனைவருக்கும் இந்த யோசனை பிடித்துப் போக ஒரு மனதாக சம்மதித்தனர்.

“என்ன அனும்மா உனக்கு சந்தோஷம் தான?” என்று கயல் கேட்ட மறு நொடி இதற்காகவே காத்திருந்தது போல் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவள் “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை…” என்று சொல்ல,

அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க, அருணோ எதிர்பார்த்திருந்த பூனை வெளியே வந்து விட்டது என்பது போலான பாவனையில் இருந்தான்..

“அனு என்ன பேச்சு இது பெரியவங்க முன்னாடி” என்ற சாலாவின் அதட்டலை கணக்கில் கொள்ளாது,

“எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க… எனக்கு இதுல விருப்பம் இல்லை” என்று விட்டு தன் அறைக்குள் சென்றுவிட,

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் சாலாவிடம் “அத்தை அனுகிட்ட ஒரு ஃபைவ் மினிட்ஸ் பேசலாமா?” என்று அருண் கேட்க,

என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தவர் மகனை பார்க்க, கண்களை மூடி திறந்து போகட்டும் என்பதாய் இளா சைகை செய்ய “சரி தம்பி” என்றதும் அனுவின் அறை நோக்கி நடை போட்டான் அருண்.

தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்த அனுவை ஒரு பார்வை பார்த்தபடி கதவை தாழ் போட்டவன் அவளருகில் சென்று அமர, சட்டென்று எழப் போனவளை கை பிடித்து தடுத்தவன்,

“ ஐ ம் சாரி அனு..! நீ இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைனு சொல்லும் போதே தெரியுது நான் உன்னை எந்த அளவுக்கு காயப்படுத்தியிருக்கேனு” என்று சொல்ல,

அமைதியாக வேறு பக்கமாக திரும்பி நின்றிருந்தவளை கண்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் “ இப்போ நான் இதை சொல்றதால நீ நம்புவியா இல்லையானு தெரியலை ஆனா நான் சொல்றது அத்தனையும் நிஜம்.  என்னோட கோபத்தை உன்கிட்ட காட்டும் போதெல்லாம் நீ கலங்கி போறதை பார்க்கும் போது உன்னை விட நான் உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிருக்கேன்” என்ற போது அவனது குரலும் சற்று உடைந்து தான் இருந்தது.

இவ்வளவு நாளும் கோபம் கலந்த கெஞ்சலில் பேசிய அருணின் இன்றைய குரல் உடைந்து போன பேச்சு அனுவை சற்றே இளக்கினாலும், அதை வெளிக்காட்டாது இருக்க,

“இதுக்கு மேல நான் சொல்றதுக்கு இல்லை ஒண்ணை தவிர இனி எந்த சூழ்நிலையிலும் உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் இது நான் உனக்கு பண்ணி கொடுக்குற சத்தியம். இதை நான் காப்பாத்தாம போறதா இருந்தா அது என் உயிர் போற அன்னைக்கு தான்” என்று கூறி முடித்த மறு நொடி அவனை அணைத்துக் கொண்டு கதறினாள் அனு.

அவள் எதிர்பார்த்தது இதை தானே. அருணிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை என்ன நடந்தாலும் உன்னை விட மாட்டேன் என்று அவன் தரும் உறுதியை தான் எதிர்பார்த்தாள். தன்னை எதற்கும் விட்டு கொடுக்காது இருக்க வேண்டும். இன்னொரு பிரிவையோ இல்லை அவனது தவிர்ப்பையோ சந்திக்கவோ இல்லை தாங்கிக் கொள்ளவோ தனக்கு சக்தி இல்லை என்று தானே இத்தனை நாளாய் அவனிடம் பிடி கொடுத்து பேசாது இருந்தாள்.

தான் தவறு செய்தால், அதை தட்டி கேட்டாலோ இல்லை தண்டித்தாலோ அவள் மறுக்க பொவதில்லை ஆனால் நீ வேண்டாம் என்று ஒதுக்குவது போல செய்யும் சிறு செயலோ ஏன் ஒரு சொல்லை கூட அவள் தாங்கிக் கொள்ள தயாராக இல்லை.

நெஞ்சில் புதைந்து அழுது கரைந்தது கொண்டிருந்தவளின் முதுகை ஆறுதலாக தடவி விட அப்போதும் கொஞ்சமும் குறையாது தேம்பிக் கொண்டிருந்தவளை தன்னிடம் இருந்து விலக்கி “அழாதடி இனி உன்னை எப்போதும் கலங்க விட மாட்டேன்” என்றவனின் கைகளை தன் கன்னத்தில் பதித்துக் கொண்டவள்,

“என்னை மன்னிச்சுருங்க அரு எனக்கு உங்களோட கோபம் நியாயம்னு தெரிஞ்சாலும் ஒரு விஷயம் என் மனசை அரிச்சுட்டே இருந்துச்சு அதுக்காக தான் நானும் உங்களை சில நேரம் கோபப்படுத்தும் படி நடந்துகிட்டேன். இன்னைக்கு உங்க தங்கச்சி லைஃப்ல ஏற்பட்ட பிரச்சனைக்காக என்னை ஒதுக்க நினைச்சு “ என்றவளை முடிக்க விடாமல்

“நீ இல்லாம எனக்கு லைஃபே இல்லைடி என் கோபத்தை எப்படி காட்டனு தெரியாம தான்” என்றவனிடம்,

“தெரியும் அரு நான் சொல்லி முடிச்சுக்குறேன். நாம வேற வேற இடத்துல இருக்கும் போதே உங்களோட தவிர்ப்பும் ஒதுக்கமும் என்னை ரணப்படுத்தும் போது நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆகி அதுக்கு பிறகு தனு அண்ணி லைஃப்ல எதும் பிரச்சனை வந்தா வராது வரக்கூடாதுனு தான் நான் கடவுளை வேண்டிக்குறேன். ஒரு வேளை அப்படி ஏதும் நடந்திட்டா ஒரே வீட்டுக்குள்ள இருந்துகிட்டு உங்களோட பாரா முகத்தை தாங்கிக்க என்னால முடியாது நான் மூச்சு முட்டியே செத்” என்றவளின் வாயில் கை வைத்து தடுத்தவன் “வேண்டாம்” என்பதாய் தலையசைத்தவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

எவ்வளவு நேரம் அதே நிலையில் நின்றார்களோ, அந்நேரம் கதவு தட்டப்பட நினைவுக்கு வந்த அனு அவனிடம் இருந்து விலக முயற்சிக்க, அவளை விடாமல் தன் அணைப்பை இறுக்கினான்.

“அரு விடுங்க வெளிய எல்லோரும் என்ன நினைப்பாங்க கதவை வேற தட்றாங்க” என்று சொல்ல,

“தட்டுனா தட்டட்டும் இவ்வளவு அழகா நீ பக்கத்துல இருக்கும் போது நான் எப்படி சும்மா இருக்குறது” என்று சொல்ல,

“ஹூம்கும் இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என்று முணு முணுக்க,

“இனிமே உனக்கு எதுக்கு மட்டும் மூச்சு முட்டணும் தெரியுமா?” என்று அவள் காதில் ரகசியம் பேச,

“ச்சீ போங்க அரு” என்று உதடு சுழித்தவளின் இதழ்களை தன் இதழ்களுக்குள் எடுத்துக் கொண்டான் அருண்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இரவும் அல்லாது பகலும் அல்லாது மயங்கி கொண்டிருந்த மாலைப் பொழுதில் சென்னையின் மத்தியில் இருந்த அந்த திருமண மஹால் அலங்கார விளக்குகளால் ஜொலிக்க, வாழை மரங்கள் வாசலில் காவலாக நின்றிருக்க, வெளி வாசலில் இருந்து உள் வாசல் வரை இருந்த பனிரென்டு அடி தூரத்தை தங்க நிற பார்டருக்கு நடுவே சிவப்பு நிற பூக்களை தரையில் கொட்டியிருந்தது போன்று தோற்றமளித்த வரவேற்பு கம்பளம் நிறைத்திருக்க, அந்த இடமே கல்யாண கலை முகத்தில் தெரியும் மணப்பெண்ணை போல் பொலிவுடன் காட்சியளித்தது.

ஒவ்வொருவராக வரத் தொடங்க சிறிது நேரத்தில் அந்த இடமே  உற்றார் உறவினர்களால் நிரம்பியிருக்க, வருவோரை வரவேற்கவென வாசலுக்கு அருகில் போடப்பட்டிருந்த மேஜைக்கு பின் நின்று கொண்டிருந்தாள் பிரகதி.

வினோத்தும் வெண்பாவும் வந்துவிட, அவர்களை தொடர்ந்து வந்த விஷ்வா தனது காரை பார்க் செய்துவிட்டு வாசல் வரை வந்தவன் எலக்ட்ரானி லாக் போட்ட அவனின் ஸ்டைலை ஆர்வமாக ரசித்துக் கொண்டிருந்தது இரு விழிகள்.

உள்ளே நுழைந்தவனை வரவேற்க தூவப்பட்ட பன்னீரின் துளிகளோடு, பன்னீர் தொளிக்க கூடிய உபகரணத்தில் ஒட்டியிருந்த குங்குமமும் அவனது சட்டையில் இருந்த பாக்கெட்டின் அருகில் அடையாளமிட்டது.

“அச்ச்சோ சாரிங்க தெரியாம பட்டிருச்சு” என்ற அந்த இனிய குரலின் கெஞ்சல் அவனை ஈர்க்க அப்போது தான் அங்கு நின்றிருந்த பெண்ணை கண்களால் அளவெடுத்தான் விஷ்வா.

“பராவாயில்லை விடுங்க” என்று கூறியவனின் கண்களோ அவளை விட்டு நகராமல் இருக்க,

“அய்யோ நீங்க உள்ளே வரும் போது தான் நினைச்சேன் செம அழகா இருக்கீங்க உங்க வொய்ட் சர்ட் ப்ளூ ஜீன்ஸ் உங்களுக்கே அளவெடுத்த மாதிரி அம்சமா இருக்கேனு பாருங்க என் கண்ணே பட்டுடுச்சு போல” என்றவளின் கண்கள் அந்த குங்கும கறையையே நோக்கி கொண்டிருக்க,

அவனிடம் இருந்து எந்த பதிலும் வராது போகவே சட்டென்று நிமிர்ந்து பார்க்க, அவனது ரசனையான பார்வையை கண்டவளுக்கு அப்போது தான் உளறிக் கொட்டியது புத்தியில் உறைக்க, நாக்கை கடித்துக் கொண்டாள். அவளது ஒவ்வொரு அசைவையும் புன்னகையுடன் மனதில் பதிந்து வைத்துக் கொண்டிருந்த விஷ்வாவின் தோள்களை யாரோ தட்டவும் தான் இருக்கும் இடம் புரிந்து இயல்பான பாவனையோடு திரும்பி பார்க்க அங்கு இளா நின்றிருந்தான்.

“என்னடா இங்கேயே நின்னுட்டு இருக்க வா” என்று அவனை உள்ளே அழைத்து போக, அவனுடன் சென்றான் விஷ்வா.

அப்போது தான் விஷ்வாவின் வெள்ளை நிற சட்டையில் ஒரு ரூபாய் அளவிற்கு இருந்த குங்கும கறையை கண்டவன் “ ஹேய் என்னடா குங்குமம் பட்டிருக்கு என்கிட்ட வேற ஸ்பேர் ட்ரெஸ் இருக்கு மாத்திக்கிறியா?” என்று கேட்க,

சட்டையில் ஒட்டிக் கொண்ட கறையோடு தன் மனதிலும் ஒட்டிக் கொண்டவளை விஷ்வா திரும்பி பார்க்க,

“முகம் சுருக்கி உதடு குவித்து சாரி” என்றவளின் அழகில் தன்னை தொலைத்தவன், இளாவிடம் “வேண்டாம்டா இருக்கட்டும் கொஞ்ச நேரத்துக்கு தான” என்று அதை முடித்து விட்டான்.

அதற்குள் இளாவை சாலா அழைக்க “டேய் இங்க உட்காரு ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல வந்திடுறேன்” என்றுவிட்டு செல்ல, ஒவ்வொருவராய் அவனை வரவேற்று விட்டு போக, சஜனும் விஷ்வாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

அதன் பிறகு அவனும் இப்போது வந்துடுறேன் என்றுவிட்டு நகர, தனியே அமர்ந்திருப்பது போரடித்து போக, வாசலை பார்க்க அங்கு அவள் இல்லை. எங்க போனா? என்று கேள்வி மனதில் எழுந்ததும், அப்படியே மண்டபத்தை ஒரு முறை சுற்றிவிட்டு வரலாம் என நினைத்தவன் நடை போட்டான்.

அங்கு பால்கனி போல் இருந்த பின் வாசலின் அருகில் நின்று ஜிலு ஜிலுவென அடித்த காற்றை உள் வாங்கி கொண்டிருந்தவனை பின்னிருந்து கேட்ட கொலுசொலி கலைக்க திரும்பியவனின் கண்களில் பட்டாள் அவன் எண்ணத்தின் நாயகி.

அவன் அருகில் வந்தவள் “சாரி சார்” என்று சொல்ல, “அய்யோ என்னங்க நீங்க தெரியாம தான பட்டுச்சு அதுக்கு எத்தனை தடவை தான் சாரி கேட்பீங்க” என்றான்.

“இந்தாங்க சார்” என்று மடக்கி வைத்திருந்த தன் கைகளை அவன் முன் விரித்து நீட்ட,

“என்னது இது” என்பதை பார்வையால் வினவ, “பவுடர்” என்று சொன்னதும், “எதுக்குங்க அதை என்கிட்ட குடுக்குறிங்க?” என்று கேட்க,

“குங்கும கறை அசிங்கமா தெரியுதுல்ல அதான்” என்று சொல்ல,

“அதுக்கு” என்று புரியாமல் பார்த்தவனை “ஹய்யோ போங்க சார் உங்களுக்கு ஒண்ணும் தெரியலை” என்றுவிட்டு கைகளில் இருந்த பவுடரை எடுத்து அந்த கறையின் மேல் பட்டும் படாமல் பூச, விஷ்வாவின் இதயமோ எகிறி குதிக்க ரெடியாக விளிம்பில் வந்து நின்று துடித்துக் கொண்டிருந்தது.

நிறைய பவுடர் பட்ட இடத்தில் ஊதி சரி செய்ய அவளின் மூச்சுக் காற்று அவனை ஏதோ செய்தது. மோன நிலையில் லயித்திருந்தவனை “இப்போ ஓகே சார் ரொம்ப தெரியலை” என்றவளின் குரல் அவனை நினைவுக்கு கொண்டுவர, “தேங்க்ஸ்ங்க என் பேர் விஷ்வா. உங்க பேர்” என்றான் விஷ்வா.

“நான் பிரகதி பி.எஸ்ஸி தேர்ட் இயர் படிக்குறேன். அருண் அண்ணா வீட்டுக்கு பக்கத்து வீடு” என்று அவன் கேட்காத தகவல்களையும் அள்ளி கொடுக்க, அவளது கள்ளம் கபடமில்லா குழந்தை மனதில் தன்னை தொலைத்தான் விஷ்வா.

“சரிங்க சார் பவுடர் எடுத்துட்டு வர போயிட்டு திரும்பி வந்தா உங்களை காணோம் அப்போ தான் இந்த பக்கமா நீங்க போனதை பார்த்தேன் அதான் வந்தேன் அங்கே ரிஷப்ஷன்ல ஆள் இல்லை நான் போறேன் பை சார் நைஸ் டூ மீட்டிங் யூ” என்று கை நீட்ட, அவளது கைகளை பற்றி குலுக்கிய விஷ்வா “இந்த கையை கூடிய சீக்கிரம் முழு உரிமையோட பிடிக்குறேன்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

அவள் பின்னாலேயே சென்றவன் ஹாலில் சென்று அமர்ந்து கொள்ள, வரவேற்பு தொடங்கியது. இன்க் ப்ளூ நிறத்தில் கோட் ஷூட்டுடன் அழகிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் ஆணழகனாக தயாராகி இருந்த அருணை பார்த்து புன்னகைத்த இளா “கலக்குற மச்சான்” என்றவன் கைப்பிடித்து அழைத்து வந்து மேடையில் நிறுத்த, அதே நேரம் அங்கு மணமகள் அறையில் பேபி பிங்க் நிறுத்தில் குந்தன் கற்கள் பதிக்கப்பட்ட டிசனர் காக்ரா சோலியில் மின்னிக் கொண்டிருந்தாள் அனு. தனுஷாவும் அனுவை அழைத்துக் கொண்டு வந்தவள் அருணின் அருகில் நிறுத்தி விட்டு அங்கிருந்த இளாவை பார்க்க அவனோ தனுஷாவை பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தான்.

அழகு பதுமையாய் தன்னருகில் நின்றிருந்த அனுவின் அழகை கண்களால் பருகியபடி இருந்த அருண் சற்றே தலை சாய்த்து “காலையில வரை வெயிட் பண்ணனுமாடி இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று அவள் காதில் முணு முணுக்க, அவன் சொன்னதிலும் , அவனது மூச்சுக் காற்று காது மடல்களை உரசியதிலும் சிவந்து போனாள் அனு.

அங்கே டைனிங் ஹாலில் “அய்யோ போதும் சஜூ” என்று கெஞ்சிக் கொண்டிருந்த தியாவை சற்றும் கண்டு கொள்ளாது செய்தே ஆக வேண்டும் என்ற தொனியில் அமர்ந்திருந்தவனை முறைத்தவள் “இதுக்கு மேல சாப்பிட்டா பேசும் போது வாயை திறந்தா சாப்பாடு தான் தெரியப் போகுது” என்று சொல்ல,

அதில் மெலிதாக புன்னகைத்த சஜனை கண்டு கொண்ட தியா “ஹப்பா சிரிச்சுட்டீங்களா? எனக்கு போதும் சஜூ” என்றவளை மீண்டும் முறைத்து பார்க்க,

“சரியான விடாக்கண்டனா இருக்கானே” என்று முணு முணுத்தவள் “ஷ் ஹப்பா ஷ்” என்று முனகியபடி மூன்றாவது சப்பாத்தியை உள்ளே தள்ள போராடிக் கொண்டிருக்க,

“சரி டாலி போதும்னா விட்ரு” என்று சொல்ல, “ஹய்யா ஜாலி” என்ற குஷியாகி எழுந்து கை கழுவி வந்தவளை கையில் ஜூஸ் கிளாசுடன் வரவேற்றான் சஜன்.

“நாராயணா இந்த கொசு தொல்லை தாங்கலையே . கத்தியை வச்சு கொலை பண்றதை பார்த்துருக்கேன் இவன் சோறு போட்டு கொல்றானே” என்று அவன் காது பட முணு முணுக்க,

“ஓ நான் கொசு தொல்லையா? இப்போ பாரு” என்றவன் சமையல் அறை நோக்கி “அண்ணா இன்னொரு கேரட் ஜூ” என்றவனின் இதழில் இதழ் பதித்தாள் தியா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காலை சுபயோக சுபதினத்தில் மங்கல மஞ்சள் நூலில் கோர்க்கப்பட்ட பொன் தாலியை பெரியோர்களின் முன்னிலையில் அக்னியை சாட்சியாக கொண்டு அனுவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் பாதியாக்கி கொண்டான் அருண்.

இங்கு ஒரு திருமணம் முடிந்திருக்க, தன் திருமணத்திற்கான வேலையில் ஈடுப்பட்டிருந்த விஷ்வா பிரகதியையே சுற்றிக் கொண்டிருந்தான்.

விஷ்வாவின் விழி துரத்தல்களை கண்டு கொண்டாலும் அதற்கு சற்றும் குறையாத ஓர பார்வையால் விஷ்வாவை கவனித்து கொண்டிருந்தாள் பிரகதி. ஒரு நேரத்திற்கு பிறகு இருவரும் நேரடியாகவே கண்களால் சடுகுடு ஆட தொடங்கியிருந்தனர்.

ஒரு வழியாக எல்லா வேலைகளும் முடிந்த பின் இளா – தனு, சஜன் தியா, வினோ – வெண்பா அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, அவர்களுடன் விஷ்வாவும், பிரகதியும் அமர்ந்திருந்தனர்.

“விஷ்வா அடுத்து உன் ட்ர்ன் தான்டா எப்போ எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடப் போற” என்று இளா கேட்க,

“போடுவோம்டா” என்று விட்டேத்தியாக சொல்ல, “ஏன்டா இப்படி சலிச்சுக்குற சீக்கிரம் குட் நியூஸ் சொல்லு” என்றதும்,

“எனக்கு சொல்லணும்னு ஆசை தான் பொண்ணு கிடைக்க வேண்டாமா?” என்று கேட்க,

“நீ மட்டும் சொல்லு உடனே பொண்ணு பார்த்திடலாம்” என்றதும் விஷ்வாவின் பார்வை பிரகதியை வட்டமிட, அவளோ என்ன சொல்வானோ என்ற எதிர்ப்பார்ப்போடு அவனையே பார்த்திருக்க,

அவளது மனதை அறிந்து கொண்டவனாய் “கூடிய சீக்கிரம் நானே என் வருங்கால வொய்ஃபை உங்களுக்கு காட்டுறேன்” என்றவன் பிறர் அறியாமல் பிரகதியை பார்த்து கண் சிமிட்டினான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சம்பிரதாய சடங்குகள் எல்லாம் முடிந்துவிட, இரவும் வந்தது. என்ன தான் பழகியிருந்தாலும் இயல்பாக ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பயத்துடனும் உடல் நடுக்கத்துடனும் உள்ளே நுழைந்த அனு கதவை தாழிட்டு விட்டு மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க, அவளது தயக்கம் புரிந்து கொண்டவனாய் அவளருகில் சென்ற அருண் “என்ன அனு ரூம் வாஸ்து பிரகாரம் கரெக்ட்டான அளவில் கட்டியிருக்கானு பார்த்துட்டு இருக்கியா?” என்று கேட்க, அவனை முறைத்து பார்த்தவளை தோளோடு தோள் சேர்த்து அணைத்தவாறு நடத்தி வந்து மெத்தையில் அமர்த்தினான்.

அருகில் அமர்ந்தவன் அவள் கைகளை தன் கைகளுக்குள் அடக்கி கொண்டபடி “சாரி அனு ரொம்ப படுத்திட்டேன்ல” என்று கேட்க,

“எத்தனை தடவை தான் கேட்பீங்க நம்ம கல்யாணத்துக்கு இருந்த இந்த ஒரு மாத கேப்ல உங்க சாரி புராணம் கேட்டு கேட்டு ஏன் இயர் ட்ரம் கிழிஞ்சது போச்சு” என்று அவனை கேலி செய்ய,

“வந்த வேலையை பார்க்காம எதுக்குடா சாரி கேட்டு டைம் வேஸ்ட் பண்றனு சொல்ற அதுவும் சரி தான்” என்று அவளை பார்த்து கண்சிமிட்ட, விட்டு போன நடுக்கம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது போல் உணர்ந்தாள் அனு.

“எனக்கும் கார்டியாலஜி பத்தி படிச்சு கிளாஸ் எடுத்து போரடிச்சுருச்சு இப்போ அனாடமி கிளாஸ் எடுக்கலாம்னு நினைக்குறேன் நீ என்ன சொல்ற அனு” என்று விஷமமாய் கேட்டு புன்னகைக்க,

“அய்யோ என்ன அரு இது” என்று வெட்கத்தில் நெளிந்தபடி கேட்க,

“கவலைப்படாதம்மா தியரி கிளாஸ் இல்லை ப்ராக்” என்று சொல்ல வந்தவனின் வாயில் கை வைத்து தடுத்தவளின் கையில் முத்தமிட, அதில் ஏற்பட்ட குறு குறுப்பில் கைகளை விலக்கி கொண்டாள் அனு.

“என்னடி என்ட்ரன்ஸ் எக்ஸாம்லேயே இப்படி ஃபெயிலாயிட்டு நிக்குற” என்றவனை புரியாமல் பார்க்க,

“எதாவது சொல்லும் போது வேண்டாம்னா இப்படி கையால லாக் போடக் கூடாது இப்படி போடணும்” என்றவன் அவள் இதழ்களை சிறையெடுக்க அங்கு ஒரு அழகான இல்லறத்திற்கு அடித்தளம் போடப்பட்டது.

இதுக்கு மேல நாம் இங்கே நின்னா இந்த அருண் கோபத்துல நம்மளை கடிச்சு குதறினாலும் குதறிடுவான் சோ ப்ரெண்ட்ஸ் நாம எஸ்.கேப் ஆகிடலாம்

                                                         

 

Advertisement