Advertisement

அத்தியாயம் 33:

மலையில் பிறந்து கரடு முரடான

பாதைகளில் ஒடினாலும் இறுதியில்

கடல் அன்னை மடியில் இளைப்பாறும்

நதி போல என் காதல் நதியும் வலிகளில்

உழண்டாலும் கடைசியில் உன் மனமென்னும்

கடலில் சங்கமிக்கும் என்ற நம்பிக்கையில் நான்!

கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்து விட்ட விபத்தில் என்ன செய்வது என்று அறியாமல் அசையாது நின்று கொண்டிருந்த விஷ்வா கீழே விழுந்த இளாவின் “அம்மா ஆஆ” என்ற வலியுடன் கூடிய கத்தலில்  நிதர்சனம் புரிய அவனருகில் ஓடி வந்து அவனை தன் மடியில் கிடத்தி கன்னத்தில் தட்ட இளாவிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லை.

இனிமேலும் தாமதிப்பது சரியல்ல என்று நிலைமையை உணர்ந்தவன் அந்த வழியாக வந்த ஆட்டோவை வழி மறித்து அவனை தூக்கி கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனையை அடைந்தான். தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்த இளாவை ஸ்ட்ரச்சரில் தள்ளிக் கொண்டு போக , “எப்படி சார் அடிபட்டுது” என்று மருத்துவர் விஷ்வாவிடம் கேட்க,

“ஒரு சின்ன ஆக்ஸிடன்ட் சார்” என்று அந்த இரவு நேரத்திலும் உச்சி வெயிலில் அலைந்து திரிந்தவன் போல் பதட்டத்தில் விஷ்வாவிற்கு வியர்த்துக் கொட்டியது.

“ஆக்ஸிடன்டா போலீஸ் கேஸ் ஆச்சே சார் பக்கத்துல இருக்க ஸ்டேஷனுக்கு இன்பார்ஃம் பண்ணிட்டீங்களா?” என்று நடைமுறையில் இருக்கும் சட்டத்தை கூற,

“சார் இன்பேஃக்ட் நாங்களே போலீஸ் தான் சார் நீங்க அவனுக்கு என்னாச்சுனு பாருங்க ஃபார்மாலிட்டி வொர்க் நான் பார்த்துக்குறேன்” என்று கூற “ஓகே சார்” என்றபடி இளாவை கொண்டு சென்ற அறைக்குள் சென்றார் மருத்துவர்.

தலை கல்லில் இடித்துக் கொண்டதில் சற்று அதிகமான இரத்தம் வெளியேறி இருக்க அதை கிளீன் செய்துவிட்டு ட்ரெஸ்ஸிங் செய்த மருத்துவர்,   கையில் எலும்பு முறிவு இருப்பதை கண்டறிந்தவர் அதற்குரிய மருத்துவத்தை செய்துவிட்டு வெளியில் வர,

“டாக்டர் அவனுக்கு இப்போ எப்படி இருக்கு” என்று கவலையோடு கேட்க

“தலையில அடி கொஞ்சம் பலம் தான் இப்போதைக்கு ட்ரீட்மென்ட் பண்ணியிருக்கேன் எதுக்கும் நாளைக்கு ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்திரலாம். கையில எலும்பு ஸ்க்ராச் ஆகியிருக்கு ஒரு மாதத்துக்கு கைக்கு ரொம்ப அசைவில்லாம பார்த்துக்கோங்க” என்று விட்டு நகர்ந்தார்.

இளா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைய, “என்னடா இப்போ வலி எப்படியிருக்கு” என்றவாறு இளாவின் அருகில் சென்று அமர்ந்தான் விஷ்வா.

“ஏன்டா நான் இங்க ஒருத்தன் அடிபட்டு கிடக்குறேன் என்னை எப்படி இருக்கனு கேட்காம வலி எப்படி இருக்குனு கேட்குற எப்படிபட்ட நண்பன்டா நீ” என்று அந்த நேரத்திலும் விஷ்வாவை வம்பிழுக்க,

அவன் சொல்வது உடனே புரியாமல் “என்னடா சொல்ற” என்ற விஷ்வாவிற்கு இளா தன்னை கேலி செய்தது தாமதமாக புரிய, “கொழுப்புடா உனக்கு தலையில அடிபட்டதுக்கு பதிலா வாய்ல பட்டிருக்கனும் அப்போ தான் நீ அடங்கிருப்ப” என்று கூறிக் கொண்டிருந்த நேரம் விஷ்வாவிடம் இருந்த இளாவின் மொபைல் ஒலிக்க அதை எடுத்து பார்க்க தனுஷா தான் அழைத்திருந்தாள்.

அதை எடுக்காமல் விஷ்வா பார்த்துக் கொண்டே இருக்க, “டேய் அதை அட்டென்ட் பண்ணு இல்லை ஆஃப் பண்ணி தொலைடா? ஏற்கனவே அடிபட்டதுல தலை வின் வின்னு தெறிக்குது இதுல இவன் வேற” சலித்துக் கொள்ள,

“ஹேய் உன் போன் தான்டா சிஸ்டர் தான் அப்போதிருந்து கூப்பிட்டுகிட்டு இருக்காங்க” என்று விஷ்வா சொன்னதும்

“அட்டென்ட் பண்ணாதடா அவகிட்ட ஒண்ணும் சொல்ல வேண்டாம்”

“என்னடா பேசுற நீ நாளைக்கு தான் டிஸ்சார்ஜ் ஆக முடியும் அதுவரை நீ வரலையேனு கவலைப்பட்டுகிட்டு இருப்பாங்க நான் விபரத்தை சொல்லிடுறேன்” என்றபடி தனுஷாவிற்கு அழைக்க போக,

“ஹே வேற யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொல்லிடு அவகிட்ட இல்லைனா நல்ல பேர் வாங்குறேனு எல்லாருக்கும் நான் அடிபட்டு இருக்குறதை ஏதோ ஆஸ்கார் வாங்குன மாதிரி எல்லாருக்கும் டெலிகாஸ்ட் பண்ணிட போறா?” என்றான் இளா.

“சரிடா நீ பேசாம படு “என்றுவிட்டு தனுஷாவிற்கு அழைக்க, “ஹலோ செழியன் எங்க இருக்கீங்க அப்போதிருந்து போன் பண்ணிட்டே இருக்கேன் அட்டென்ட் பண்ண மாட்றீங்க” என்று ஒரே மூச்சில் அந்த பக்க பதிலை எதிர் பார்க்காமல் பட படவென பேச,

“ஹலோ சிஸ்டர் கூல் கூல் நான் இளா ப்ரெண்ட் விஷ்வா பேசுறேன்”

“ஓ சாரிண்ணா செழியன் மொபைல் உங்ககிட்ட எப்படி அவர் எங்க?” என்று கேட்க, “இதுக்கு எதுக்கு சிஸ்டர் சாரி சொல்றிங்க? இளாவுக்கு கொஞ்சம் அடிப்பட்டிருச்சு **** ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கேன்” என்ற அவனை முடிக்க விடாமல் “அய்யோ என்ன அண்ணா சொல்றிங்க?” என்று பதறியவளிடம், “ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நீங்க பயப்படுற அளவு ஒண்ணும் இல்லை நான் நைட் பார்த்துக்குறேன் நீங்க மார்னிங் வாங்க” என்று அவன் சொல்ல, அடிபட்டிருக்கிறது என்று சொல்லும் போதே கதவை பூட்டி விட்டு கிளம்பியிருந்தாள் தனுஷா.                                         

காலையில் இருந்தே அருணுக்கு அனுவின் நியாபகமாய் இருந்தது. அன்று தான் தனுஷாவிற்கு அழைத்த போது அவள் எடுத்து எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தது மனதிற்குள் நெருஞ்சி முள்ளாய் குத்தியது. ஒரு முறையேனும் அவளது குரலை கேட்டுவிட வேண்டுமென செவிகள் போராட்டம் செய்தன.

உணர்வுகளை அடக்க முடியாது அவளை அழைக்க மொபைலை எடுத்தான். அவளது நம்பரை கான்டாக்ட் லிஸ்டில் இருந்து எடுத்து விட்டு ஏதோ ஓவியத்தை பார்ப்பது போல அந்த எண்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அழைத்தால் பேசுவாளா? இல்ல அன்னைக்கு மாதிரி பேசாம போயிடுவாளா? என்று யோசித்துக் கொண்டே இருந்தவனின் கைகள் தானாக கால் பட்டனை கிளிக் செய்தது.

காதில் கேட்ட அழைப்பு ஒலியை விட இவனது இதயத் துடிப்பின் சத்தம் அதிகமாக கேட்டது. அன்று மஹியின் திருமணத்திற்கு பிறகு இன்று தான் அவளிடம் பேச போகிறான் அதனாலேயோ என்னவோ மனம் குற்ற உணர்ச்சியில் குறு குறுத்தது.

ரிங் சத்தம் நின்றுவிட, அருணின் தொண்டைக் குழிக்குள் ஏதோ ஒன்று சிக்கி கொண்டது போல் உணர்ந்தான். இரு புறமும் மௌனம் மட்டுமே பேசிக் கொண்டிருக்க, அதை கலைக்க இருவருக்குமே மனம் இல்லாதது போல் அந்த அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

அதற்கு மேல் தன்னால் தாங்க முடியாது என்று உணர்ந்த அருண் “ஹலோ அனு” என்று தங்கள் இருவருக்குமிடையே நிலவிக் கொண்டிருந்த மௌனத்தை கலைத்தான்.

அனுவோ பதில் ஏதும் சொல்லாமல் அமைதியையே கடை பிடிக்க, மீண்டும் ஒருமுறை சற்று உரக்க, “அனு” என்றான்.

“ம்ம்” என்ற ஒற்றை வார்த்தையில் தனது லைன் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை அனு உணர்த்த,

“என்ன சொல்ல என்ன பேசுறதுனே தெரியலை? எனக்கு என்னவோ போல இருக்குடி அனு” என்றான் உரிமை கலந்த குரலில்.

அவனது உரிமை கலந்த குரலில் இளக தொடங்கிய மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள் அவனுக்கு பதிலளிக்காது இருக்க,

“நான் என்ன நினைக்குறேன் எப்படி உணர்றேனு உனக்கு புரியுதா?” என்று கூறிக் கொண்டே இருக்க, அங்கு அனுவின் மனதிற்குள் எதுவோ உடைந்து உருகியது.

“வேண்டாம் மனமே இன்னும் நீ என்ன எதிர்பார்க்குறனு அவனுக்கு புரியவே இல்லை இளாகதே” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்க,

“அனு கேட்குதா” என்றுவிட்டு அவனது இதயத்திற்கு அருகில் மொபைலை வைக்க, அவனது இதயம் துடிக்கும் ஓசை அவளை ஏதோ செய்ய சட்டென்று அழைப்பை கட் செய்தாள் அனன்யா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டைரியின் முதல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த சஜனின் விழிகள் அதிர்ச்சியை வெளிப்படுத்த, அதில் இருந்து மீளாதவனாய் இருக்க, கைகளோ அடுத்த பக்கத்தை தானாக திருப்பியது. இரண்டு வருடங்களுக்கு முன்பு தேதியிட்ட பக்கத்தோடு தொடங்கப்பட்டிருந்தது தியாவின் வாழ்க்கை பொக்கிஷங்கள்.

கண்டவுடன் காதல், காணாமலே காதல் இதை நம் தமிழ் சினிமாக்கள் வெவ்வேறு வகையில் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தாலும் இவெயெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியமில்லை என்றே  நானும் நினைத்திருந்தேன் அவனை காணும் வரை.

நட்டு வைத்ததும் ரோஜா பூத்ததில்லை, வெட்டி எடுத்ததும் பாறை சிற்பமாக சிரித்ததில்லை ஆனால் இதில் விதி விலக்கானது காதல் மட்டுமே முதல் பார்வையிலேயே அவனது முகம் என் மனதில் சிற்பமாக சிரித்தது, நட்டு வைக்காமலேயே ரோஜா பூத்துக் குலுங்கியது.

ஒரு பொன் மாலை பொழுதில் கார்டன் சிட்டி என்றும் சிலிக்கான் வேலி என்றும் அழைக்கப்படும் அந்த பெங்களூர் மாநகரம் பரபரப்போடு இயங்கி கொண்டிருக்க அந்த பரபரப்பிற்கு சற்றும் சம்மந்தமில்லால் ஒரு வித அமைதியான சூழல் நிலவ, மின் விளக்குகளாலும் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்த பாடலினாலும் ஏகாந்த நிலையை தோற்றிவித்துக் கொண்டிருந்தது அந்த புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர உணவு விடுதி. அங்கிருந்த அமைதியை குலைப்பதற்கென அந்த உணவு விடுதியின் வரவேற்பரையை வந்து அடைந்தது கல்லூரி மாணவிகளின் கூட்டம். சென்னையிலிருந்து சுற்றுலாவிற்காக வந்திருந்தவர்கள் வொன்டர்லாவிற்கு சென்று விட்டு அப்போது தான் உணவு விடுதிக்குள் நுழைந்தனர். மூன்றாவது தளத்தில் இருந்த அறைகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது.

“ஹப்பா செம என் ஜாய்மென்ட் இல்லடி வாட்டர் கேம்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது” என்று தோழிகள் கூட்டத்தில் ஒருத்தி சொல்ல,

“ஆமாடி செம ஆட்டம் போட்டாச்சு ரொம்ப டயர்டா இருக்கு போய் ஒரு குளியலை போட்டுட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான்” என்றாள் மற்றொருத்தி.

“ஹேய் கடுப்ப கிளப்பாதிங்கடி நீங்க எல்லாம் தனியா கழண்டுகிட்டு போய் என்ஜாய் பண்ணியிருக்கீங்க ஆனா நாங்க” என்று இழுக்க,

“ஏன்டி உங்களுக்கு என்ன” அவளை விஷயத்தை சொல்ல சொல்லி ஊக்க,

“இந்த ஜொள்ளு சந்தோஷ் இருக்கானே தியா பின்னாடியே சுத்தி சுத்தி வந்து எங்களை என்ஜாய் பண்ணவே விடலைடி. எல்லா கேம்ஸ்க்கும் அவனும் கூடவே வந்து கடுப்பேத்திட்டான் மை லார்ட்” என்று சொல்ல, மற்றவர்கள் கொல்லென சிரித்து வைக்க தியாவிற்கு தான் ஏகத்திற்கும் கடுப்பாகி விட்டது.

“இந்த சந்தோஷ் பக்கி காலேஜ்ல தான் இப்படி டார்ச்சர் பண்ணி என்னை இவளுங்க வாய்க்கு அவலாக்கி விட்டானு பார்த்தா டூர் வந்த இடத்துலயும் எருமை பின்னாடியே சுத்தி வந்து என்னை சுவிங்கம் ஆக்கிட்டான் இவளுங்களும் இது தான் சான்ஸ்னு மென்னு துப்புறாருளுக டேய் பரதேசி சந்தோஷ் இப்போ மட்டும் என் கையில மாட்டுன மவனே செத்தடா நீ” என்று மனதிற்குள் பொரும, கதை கேட்கும் ஆவலில் ஒருத்தி “அப்புறம் என்னாச்சுடி” என்று கேட்க,

“இது இப்போ ரொம்ப முக்கியம் சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க டி சாப்பிட போகலாம்” என்று அந்த பேச்சு வார்த்தையை தியா முடித்து வைக்க முற்பட்டாள்.

அதற்கெல்லாம் அசருபவர்களா இவர்கள்? “நீ வேணும்னா போய் குளிடி நாங்க சந்து வாட்டர் ஃபால்ஸ் இன்னைக்கு பண்ணின கூத்தை கேட்டதுக்கு பிறகு தான் அடுத்த வேலை செய்வோம்” என்று கூற,

“போங்கடிங்” என்றுவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொள்ள, “அவ கிடக்குறா நீ சொல்லுடி என்ன ஆச்சுனு” என்று தொடங்க,

“விளையாட போனது வாட்டர் கேம்ஸ் இதுல பார்த்து தியா சளி பிடிச்சுக்க போகுது, கால் வழுக்கிட போகுது அது இதுனு ஷப்பா முடியலைடி”என்று சந்தோஷ் செய்தவைகளை சொல்லி கேலி செய்ய, தியா குளித்துவிட்டு வரும் வரை அது நீடித்தது.

வெளியே வந்தவள் இவர்களை முறைத்து விட்டு வீட்டிற்கு பேச மொபைல் வைத்திருந்த வேலட்டை தேட அது கிடைக்கவே இல்லை. தனது ட்ராவல் பேக் என அனைத்திலும் தேட வேலட் கிடைக்காது போக, ரிஷப்ஷனில் வைத்து விட்டோமோ என்ற சந்தேகத்துடன் தோழிகளிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, “ஹே தியா நீ எதுக்கு டி போய் தேடுற சந்துக்கு ஒரு போன் போடு பையன் எங்க இருந்தாலும் பாய்ந்து வந்து தேடிக் கொடுத்துருவான்” என்று சொல்ல,

“எல்லாம் இந்த சந்தோஷால வந்தது” என்று விட்டு லிஃப்டில் ஏறி க்ர்வுன்ட் ப்ளோரை அழுத்திவிட்டு காத்திருந்த நேரம் இந்த வீணாப் போன சந்தோஷ் கூட வச்சு என்னை ஓட்டுறாளுகளே இவளுக ஒரு நல்ல ஃபிகரை வச்சு கிண்டல் பண்ணக் கூடாது” என்று முணு முணுக்க,

“நல்ல ஃபிகரா அப்படினா எப்படி இருக்கணும்” என்று மனசாட்சி குரல் கொடுக்க, தனக்கு பிடித்தவாறு கற்பனை செய்து கொண்டே இருந்தவள் லிஃப்ட் தரை தளத்திற்கு வந்து திறக்கும் போது தான் தன் கனவிலிருந்து மீள மீண்ட நிமிடமில்லாமல் ஆச்சர்யத்தில் உறைந்து போனாள்.

மனதில் எழுந்த கற்பனைகள் உயிர் கொண்டு நிற்பதை போல், நின்றிருந்த சஜனை கண்ட தியா தன்னை மறந்து அவனை திரும்பி திரும்பி பார்த்தபடி வெளியேறினாள்.

ரிஷப்ஷன் டெஸ்கில் இருந்த வேலட்டை எடுத்துக் கொண்டு “எப்படி இது நான் நினைச்ச மாதிரியே இருக்கான்” என்று யோசித்தபடி நடந்தவள் எப்படி அறைக்கு வந்து சேர்ந்தாள் என அவளுக்கே தெரியவில்லை.

அமைதியாக இருந்தவளை நோட்டம் விட்டுக் கொண்டே அவளது தோழிகள் அனைவரும் குளித்து ரெடியாகி விட அப்போதும் ஒரே போஸில் இருந்த தியாவின் தோளை தட்ட, “ஹாங் என்னடி” என்றாள் தியா.

“அடியேய் அப்போதிருந்து காட்டு கத்தல் கத்திட்டு இருக்கோம் நீ என்னடானா இந்த ரியாக்ஷன் குடுக்குற வா சாப்பிட போகலாம்” என்று சொல்ல,

“நீங்க போங்கடி வீட்டுக்கு பேசிட்டு வர்றேன் எதிர்பார்த்துட்டு இருப்பாங்க” என்றபடி மொபைலை கையில் எடுக்க, “சரி சீக்கிரம் வா” என்று விட்டு அவர்கள் தரை தளத்தில் இருந்த டைனிங் ஹாலிற்கு சென்றனர்.

வீட்டிற்கு அழைத்து இன்று சென்று வந்த இடங்களையெல்லாம் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க, அதற்குள் அவளது தோழிகளிடம் இருந்து அழைப்பு வர, அறையை பூட்டி விட்டு பேசிக் கொண்டே மின் தூக்கியின் அருகில் வந்து நிற்க, “சாப்பிட தான்பா போறேன்” என்றுவிட்டு அழைப்பை கட் செய்தவள் லிஃப்டினுள் செல்ல அவளை தொடர்ந்து சஜனும் நுழைந்தான்.

மீண்டும் அவனை கண்டதில் மெல்லிய படபடப்பு அவளுக்குள் ஏற்பட கைகளை பிசைந்தபடி அவனருகில் அவஸ்தையாக நெளிந்து கொண்டிருந்தாள்.

தரை தளம் பொத்தானை அமுக்க இருவரும் முற்பட அவனது விரல் தன் விரலோடு உரசியதில் இன்பமான உணர்வு தியாவினுள் நிகழ ஆரம்பித்தது. அவனோ “எக்ஸ்கியூஸ் மீ” என்றதோடு முடித்துக் கொண்டான்.

அவனது “எக்ஸ்கியூஸ் மீ” என்ற வார்த்தை ஐ லவ் யூ சொல்லியது போல் தித்தித்தது. தனது எண்ண போக்கை கண்டு அதிர்ந்த தியா, அவன் யார் எவரென்று தெரியாது அவன் தன்னை கவனித்தது போல கூட இல்லை பார்த்த ஐந்து நொடிகளில் இது சாத்தியமா? இதெல்லாம் சரிப்படாது பார்க்க ஹேன்ட்ஸம்மா இருக்கான் சைட் அடிக்குறதோட நிறுத்திக்கோ தியா அது தான் சரி என்று சொல்லிக் கொண்டு தோழிகளுடன் இரவு உணவில் கலந்து கொண்டாள்.

இது இன்றோடு முடிந்து விடும் அத்தியாயம் என்று தியா நினைக்க அதுவே இனி தொடரப் போகும் தொடர்கதை என்பது தான் விதியின் விளையாட்டோ?

அடுத்த நாள் மைசூர் பேலஸை சுற்றி பார்த்துவிட்டு மாலை பிருந்தாவன் கார்டனுக்கு சென்றனர். இரவும் பகலும் ஒன்றோடு ஒன்று பிணையத் துடிக்கும் அந்த அந்திப் பொழுதில் வண்ண வண்ண நீருற்றுகள் அங்கு இசைக்கப்படும் பாடலுக்கு ஏற்றவாறு ஆடுவது போல் மிக ரம்மியமாக இருந்தது.

அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த தியா அங்கு வந்து கொண்டிருந்த சஜன் மேல் மோதி நிற்க, நிமிர்ந்து பார்த்தவளின் மனம் “இவனா?” என்று நினைத்து அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, “ஹலோ மிஸ் அக்கம் பார்த்து நடங்க” என்று விட்டு நகர்ந்து செல்ல, “ஹவ் ஸ்வீட்” என்றவாறு போகும் அவனையே வெறித்துக் கொண்டிருந்தாள் தியா.

நாட்கள் அதன் போக்கில் ஓட அதற்கு பின் சஜனை பார்க்கும் வாய்ப்பு தியாவிற்கு கிட்டவில்லை. சந்திக்கும் வாய்ப்புகள் தான் கிடைக்கவில்லையே தவிர மற்றபடி அவனது நினைவுகள் தியாவினுள் வட்டமிட்டுக் கொண்டே தான் இருந்தது.

தியாவிற்கு பண்பலையில் பாடல் கேட்பது மிகவும் பிடிக்கும் என்ன தான் தொழில் நுட்பம் வளர்ந்து மியூசிக் பிளேயரில் நமக்கு பிடித்த பாடல்களை விரும்பும் போது கேட்டுக் கொள்ளும் வசதி இருந்தாலும் பண்பலையில் அடுத்து என்ன பாடலோ நமக்கு பிடித்த பாடல் ஒலிபரப்பப்படுமா? என்ற ஆவலோடு காத்திருப்பது தியாவிற்கு என்றுமே பிடித்தமான ஒன்று.

அன்றும் அப்படித்தான் தனது அறையின் பால்கனியில் இருந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டு பண்பலையை கேட்டுக் கொண்டிருந்தாள் தியா. அன்று  மே தினம் ஆகையால் வளர்ந்து வரும் இளம் தொழிலதிபரின் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அந்த பண்பலையின் பிரபல தொகுப்பாளர் வந்திருக்கும் விருந்தினரை பற்றி சிறிய முன்னோட்டம் கொடுக்க, அதில் பொறுமை இழந்தவள் வேறு அலைவரிசையை மாற்ற முற்படும் போது ஒலித்த அவனது குரலில் அவள் கை அப்படியே நின்றது.

“இது அவனுடைய குரல் போல் அல்லவா இருக்கிறது அவன் தானா? இல்லை எனக்கு தான் அப்படி தோணுதா?” என்று மனம் பட்டிமன்றம் நடத்த, எதற்கு குழப்பம் கூகிள் ஆண்டவர் இருக்கையில் என மூளை தக்க சமயத்தில் கை கொடுக்க, வேக வேகமாக கணினியை உயிர்ப்பிக்க, அது வள்ளலாக அவள் கேட்க நினைத்த தகவலோடு அளவுக்கு அதிகமாய் வாரி இறைத்தது. அவனை பற்றிய தேடல் ஒருபுறம் நடந்தாலும், பண்பலையில் கேட்ட அவனின் குரலை மனம் பதிவு செய்து கொண்டிருந்தது.

எதற்காக இவ்வளவு ஆர்வம், அவனது குரலை கேட்டதும் ஏற்படும் துள்ளல் என்று மனம் அதன் போக்கில் யோசித்துக் கொண்டிருக்க, அவளது கேள்விக்கு பதில் சொல்வது போல் பண்பலையில் பாடல் ஒலித்தது.

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது

கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது

கடலிலே மழை வீழ்ந்தபின் எந்த துளி மழைத்துளி

காதலில் அது போல நான் கரைந்திட்டேன் கண்மணி

அவனையே நினைத்துக் கொண்டிருந்தவள் அந்த வார இறுதியில் தன் தோழிகளுடன் ஷாப்பிங்கிற்காக ஒரு பிரபல துணிக்கடைக்கு சென்றிருந்தாள்.

ரெடிமேட் செக்ஷனில் சல்வார் கமிஸ்களை தனக்கும் , அக்காவிற்கும் செலெக்ட் செய்தவள் அருணுக்கும் ஷர்ட் வாங்கலாம் என்று ஆண்கள் ஆடை பிரிவிற்கு சென்று அங்கிருந்த ஆடைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தவளின் விழி வட்டத்தில் விழுந்தான் சஜன். அதற்கு பிறகு தியாவின் கவனம் ஆடைகளில் இருக்குமா என்ன?

அங்கிருந்த உடைகளில் தன் பார்வையை செலுத்திய சஜனுக்கு எதுவும் திருப்தியாக இல்லாது போக “வேற கலஎக்ஷன்ஸ் இருக்கா?” என்று கேட்க,

சஜன் வாடிக்கையாக வரும் கடை என்பதால் அங்கு அவனுக்கு எப்போதுமே தனி கவனிப்பு உண்டு. நேற்று லோடு வந்தது இருங்க பையனை விட்டு எடுத்துட்டு வர சொல்றேன் என்றவர் அங்கு வேலை செய்யும் நபரிடம் சொல்லி புது கலக்ஷ்ன் ஆடைகளை கொண்டு வந்து தர சொன்னார்.

அதை பார்த்த சஜனுக்கு அந்த யு.எஸ் போலோ நேவி ப்ளூ சர்ட் மிகவும் பிடித்துவிட அதை எடுத்துக் கொண்டு ட்ரயல் ரூமிற்கு சென்றவன் அதை ட்ரை செய்து பார்த்து விட்டு வெளியில் வந்ததும், அவனுடன் வந்த விஷ்வா “டேய் சஜன் இந்த கலர் ட்ரை பண்ணு இது உனக்கு சூட் ஆகும்” என்று தனது அபிப்ராயத்தை சொல்ல,

“ஒகே லெட் மீ ட்ரை” என்றுவிட்டு அந்த நேவி ப்ளூ ஷ்ர்ட்டை நண்பனிடம் தந்துவிட்டு உள்ளே செல்ல, அதற்குள் விஷ்வாவிற்கு போன் வர அவன் அதை எடுத்து பேசியபடி நகர்ந்து சென்றான். அந்த கேப்பில் நேவி ப்ளூ ஷர்டை பில் போட்டு எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள் தியா.

விஷ்வா செலெக்ட் செய்த ஷ்ர்ட்டை ட்ரயல் செய்த சஜனுக்கு இதை விட அந்த நேவி ப்ளூ தான் பிடித்தது அதையே எடுத்துக் கொள்வோம் என்று வெளியில் வந்தவன் விஷ்வாவிடம் “டேய் ஃப்ர்ஸ்ட் ட்ரை பண்ண ஷர்டையே  எடுத்துக்கலாம் அது எங்க குடு” என்று கேட்க,

“இங்க தான் வச்சேன்” என்று அங்குமிங்கும் தேட, அந்த ஷர்ட் கிடைக்கவில்லை. வேறு எதாவது பார்க்கலாம் என்றுவிட்டு டீ-சர்ட்டுகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அதன் பின் ஒருமுறை அவனை உணவகத்தில் பார்த்தது, தன் அக்காவின் பட்டமளிப்பு விழாவில் என அவளது நாட்களின் நிகழ்வுகள் நாட்குறிப்பில் இடம்பெற்றிருக்க, அதன் பின் வந்த பக்கங்களில் எல்லாம் எழுத்துக்களோடு கண்ணீர்த்துளிகளும் அதில் பதியப்பட்டிருந்தன.

அக்காவை பெண் பார்க்க வந்த அந்த நாளில் இருந்த பக்கத்தில் கண்ணீர் துளிகளே முதலிடம் பிடித்திருந்தன. பிருந்தாவன பூங்காவில் அவனை பார்த்ததை நினைவில் கொண்டு அவனை கண்ணனாக மனதில் வரித்து அலைப்பாயுதே கண்ணா பாடலை அன்று வேதனையை வெளியேற்றும் வடிகாலாக பாடி வைத்தாள். அன்றைய தினத்திற்கு பிறகு ஒவ்வொரு நாளையும் எப்படி நெட்டி தள்ளியிருக்கிறாள் என்பதை அறிந்து கொண்ட சஜனின் மனம் கணத்து போனது.  தோழி லேகாவின் திருமணத்தில் தன் காதலை உணர செய்த அதே பாடலை மீண்டும் கேட்டபின் அங்கிருப்பது முள் படுக்கையின் மேல் அமர்ந்திருப்பதை போல கொடுமையாக இருந்தது என்று தியா எழுதி இருந்தாள்.

சஜூ இத்தனை நாளும் உங்கள் நினைவுகளால் எனக்கேற்பட்ட உணர்வுகளை எழுதினேன். நாளை முதல் உங்க பக்கத்துல நான் இருக்க போறேன் நினைக்கும் போதே என் மனம் சிறகில்லாமல் பறக்குது. இனி வரும் ஒவ்வொரு நொடிகளிலும் நமக்கிடையே நடக்க போகும் நிகழ்வுகளை காகிதத்தில் எழுதி நிரப்ப போவதில்லை என் உயிர் கூட்டில் செதுக்க போகிறேன். ஐ லவ் யூ சோஓஓஓஓஓஓஓஒ மச் சஜூ என்று முடிந்திருந்தது அந்த டைரியின் பக்கம்.

தாம்பத்தியத்தின் வெற்றியே ஒருவரின் உணர்வை மற்றவர் புரிந்து கொள்வது தான் சஜன் அந்த படியை கடந்திருந்தான் ஆம் தியா இவ்வளாவு நாளாக மனதில் போட்டு புழுங்கி கொண்டிருந்த வலியை உணர்ந்து கொண்டான். அவள் அனுபவித்த வலிகளை தனக்கே உண்டானது போல் துடித்து போனான்.

டைரியை மூடி வைத்துவிட்டு வினோத்திற்கு அழைத்து “ வினோத் என்னால பார்டிக்கு வர முடியாது நீயே பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு அவனது பதிலை எதிர்பார்க்காது அழைப்பை துண்டித்தவன் மெத்தையில் விழுந்தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அனு தன்னுடன் பேசவில்லை என்ற கவலையில் வீட்டிற்கு வந்த அருண் அங்கு தன் தந்தையின் மடியில் படுத்துக் கொண்டிருந்த தியாவை கண்டதும் உற்சாகத்தை  வரவழைத்துக் கொண்டு “ஹேய் வாலு நீ எப்போ வந்த? சஜன் வந்து விட்டுட்டு போனாரா?” என்று கேட்க,

“நம்மளையெல்லாம் தேடுதுனு ஒரே அழுகையாம் அதான் சம்மந்தியம்மா வந்து விட்டுட்டு போனாங்க” என்று மகளிடம் கேட்ட கேள்விக்கு தந்தை பதில் சொல்ல,

அவர்கள் அருகில் அமர்ந்தவன் தியாவின் தலையை கோதி விட்டபடி “ ஏய் அறுந்த வாலு ஸ்கூல் போகும் போது இப்படி தான் எங்களை தேடுதுனு அழுவ அந்த பழக்கத்தை இன்னும் நீ விடலையா?” என்று அவளது தலையில் கொட்டினான்.

“டேய் அருண் ஐஸ்கிரீம் ஓடி போய்டு இல்லை மகனே உன்னை உருக வச்சுடுவேன்” என்று சொல்ல,

“பார்த்திங்களாப்பா நம்மளையே இந்த பாடு படுத்துறா? பாவம் சஜன் இவளை வச்சு எப்படி தான் சமாளிக்குறாரோ?” என்று அருண் கூற,

“ஆமா ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப் பாவம்” என்று அந்த ‘ரொம்ப’ அழுத்தம் கொடுக்க, அப்பொழுது காலிங் பெல் சத்தம் ஒலிக்க, இந்த நேரத்தில் யார் என்ற யோசனையுடன் அருண் கதவை திறந்து போது அங்கு சஜன் நின்றிருந்தான்.

 

Advertisement