Advertisement

அத்தியாயம் 32:

அன்றில் பறவையாய் உன் பிரிவு

நேரும் நொடி உயிர் விட ஆசை கொள்கிறேன்

ஆனால் அதிலும் என் விதி சதி செய்ததோ?

அற்ப மனித பிறவியாக அல்லவா மாறிப் போனேன்!

அந்த புகழ்பெற்ற உணவகத்தின் பார்க்கிங் ஏரியாவில் தனது பைக்கை நிறுத்திய வினோத் உள்ளே செல்ல அங்கிருந்த அறையின் கடைசியில் ஒதுக்கு புறமாக இருந்த டேபிபிளில் வெண்பா காத்திருந்தாள்.அவள் அருகில் வந்ததும் “வெண்பா என்ன அவசரம்னு இப்போ என்னை வர சொன்ன?” என்று சற்றே எரிச்சலுடன் கேட்க,

“வந்ததும் வராததுமா எதுக்கு இப்போ கோப்படுறிங்க முதல்ல உட்காருங்க ஏன் உங்களை கூப்பிடக்கூடாதா?” என்று கேட்க,

“கோபப்படாம என்ன பண்ண சொல்ற? கூப்பிட வேண்டாம்னு சொல்லலை வேலை இருக்குனு சொல்லியும் புரிஞ்சுக்காம வந்து தான் ஆகணும்னு அடம்பிடிக்குறப்போ எரிச்சலா இருக்கு” என்று சொல்ல,

“சரி கிளம்பலாம் நீங்க உங்க வேலையை பாருங்க உங்களை டிஸ்டர்ப் பண்ணினதுக்கு சாரி” என்று விட்டு எழ முயற்சிக்க,

“வெண்பா என்ன விளையாட்டு இது? உன் சாரியை கேட்கவா வேலை நேரத்துல நேரம் ஒதுக்கி இவ்வளவு தூரம் வந்தேன் டென்சன் பண்ணாதே! எதுக்கு வர சொன்ன அதை சொல்லிட்டு போ” என்றதும்,

வேறு வழியில்லாமல் அமர்ந்தவள், எதுவும் பேசாமல் இருக்க அவனது கோப பேச்சால் கண்கள் கலங்கி இருந்தவளை கண்டவன் தன்னையே நொந்து கொண்டு அவளுக்கு அருகில் சென்று அமர்ந்தான்.

அவளுடைய கைகளை எடுத்து தன் கைக்குள் பாந்தமாய் அடக்கியவன் “சாரி டி கொஞ்சம் வேலை டென்சன்ல கத்திட்டேன் சொல்லு என்ன விஷயமா வர சொன்ன?” என்று அமைதியாய் கேட்க,

“அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த வாரம் பொண்ணு பார்க்க வர்றதா சொல்றாங்க. அதான் நம்ம விஷயத்தை வீட்டுல பேசலாம்னு இருக்கேன் அதை உங்கிட்ட சொல்லலாம்னு நானும் காலையில இருந்து பேச ட்ரை பண்றேன். நீங்க பிஸியா இருந்தீங்க சரி ஆஃபிஸ் டைம் முடிஞ்சதும் பேசலாம்னு வர சொன்னா கோபப்படுறிங்க நான் என்ன தான் பண்ணட்டும்” என்று சொல்ல,

“இன்னைக்கு கொஞ்சம் வொர்க் ஜாஸ்தி இப்போ ஆன்வல் லீவ்ல அக்கா வேற ஊர்ல இருந்து பிள்ளைங்களை கூப்பிட்டு வர்றா அவளை பிக்கப் பண்ண போகணும் அந்த நேரம் பார்த்து நீயும் வந்தே ஆகணும்னு சொன்னதும் கொஞ்சம் கடுப்பாகிட்டேன். அக்கா சொன்னா வீட்டுல கேட்டுப்பாங்க நான் இன்னைக்கே அவ காதுல விஷயத்தை போட்டு வைக்குறேன் சரியா?” என்றான்.

“சரி நான் கிளம்புறேன்” என்று சொன்னவனளை “ஹேய் அதான் சாரி சொல்லிட்டேன்ல அப்புறமும் முகத்தை இப்படி தூக்கி வச்சுருந்தா நான் என்னதான்டி பண்ண?”

“ஒண்ணும் பண்ண வேண்டாம் ஆளை விடுங்க” என்றவளிடம்,

“உன்னை ஒண்ணும் பண்ணாம விடுறதா எனக்கு ஐடியா இல்லை” என்று கூறி விஷமமாய் சிரித்தான்.

“அப்படியா? என்ன பண்ணுவீங்க” என அவளும் அவனுக்கு சரி சமமாய் வாயடிக்க,                                                                 “ஏன்மா அவசரப்படுற எல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம் சொல்றேன் அதுக்கு முன்னாடி இப்படி கேட்குறது தப்பு கன்னத்துல போட்டுக்கோ” என்று அவளை பார்த்து கண்சிமிட்ட, அதில் வெட்கி சிவந்தாள் வெண்பா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

விஷ்வாவிடம் பேசிவிட்டு உடனே வீட்டிற்கு செல்ல தான் நினைத்தான் சஜன் இருந்தாலும் ஏனோ சிறிது அவகாசம் வேண்டும் என்று மூளை சொல்ல அலுவலகம் சென்றான். தன் மனதை அறிந்து கொண்டதில் ஏற்பட்ட தெளிவும் மகிழ்ச்சியும் முகத்திலும் பிரதிபலிக்க, உற்சாகத்துடனேயே வலம் வந்தவன் அன்றைய தின வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

வந்ததிலிருந்து அவளிடம் பேசுவதற்கு நேரம் அமையாமல் போக அதற்குள் இரவு உணவு உண்ண கயல்விழியிடம் இருந்து அழைப்பு வந்ததும் டைனிங் டேபிளுக்கு செல்ல, கை தானாக உணவை வாய்க்கு குடுத்தாலும் கண்கள் என்னவோ தியா மேல் தான் இருந்தது. எப்படி சொல்வது  என்ன சொல்லி ஆரம்பிப்பது என மனதிற்குள் சிறு விவாத அரங்கமே நடந்தேறிக் கொண்டிருந்தது.

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்ததும், மேலே அறைக்கு செல்ல போனவனை தடுத்த சிவப்பிரகாசம் கம்பெனி விஷயமாக சற்று நேரம் விவாதிக்க, தன் விதியை நினைத்து நொந்து கொண்டவனாய், அவரின் கேள்விகளுக்கு சுரத்தே இல்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். மேலும் சிறிது நேரம் மகனிடம் பேசிவிட்டு செல்ல, சஜன் தன் அறைக்கு செல்லும் போது தியா தூங்கி நடு ஜாமம் ஆகியிருந்தது.

அவள் தூங்குவதை கண்டவன் “ச்சை பேசணும்னு நினைச்சனே இந்த பாழாப் போன மூளை சொன்னதை கேட்காம சீக்கிரமே வந்திருக்கலாம் பத்தாத்துக்கு இந்த டாட் வேற நேரம் காலம் புரியாம மொக்கை போட்டுட்டு இருக்காரு” என்று முணு முணுத்தவன்,

தூங்கி கொண்டிருந்தவளின் நெற்றியில் புரண்டு கொண்டிருந்த முடியை ஒதுக்கி வெற்றிடத்தை உருவாக்கியவன் அதில் தன் இதழை மெல்ல ஒற்றி எடுத்துவிட்டு போய் படுத்துக் கொண்டான் ஆனால் தூக்கம் தான் வந்த பாடாக இல்லை. திரும்பி தியாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள் எப்போது அசந்து முடியதோ அவன் அறியவில்லை.

காலையில் எழுந்ததும் அருகில் தியா இல்லாததை கண்டு சற்று எரிச்சல் வர ஜாகிங் செல்ல கீழே வந்தவன் கிச்சனில் இருந்து தியாவின் பேச்சு குரல் கேட்க “நேற்று பேசலாம்னு பார்த்தா மேடம் சயனத்துல இருந்தாங்க சரி காலையில பேசிக்கலாம்னு நினைச்சா இங்க மாமியார் கூட சேட்டிங் நடக்குது. அங்க போய் கூப்பிட்டா அம்மா என்ன நினைப்பாங்க? இவளுக்கு மனசுல பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செஃப்னு நினைப்பு எப்போ பாரு கிச்சன்லயே கிடக்க வேண்டியது.” என்று முனகிவிட்டு சென்றான்.

ஜாகிங்கை முடித்துக் கொண்டு வந்த சஜனுக்கு இருப்பு கொள்ளவில்லை மனதில் இருப்பதை அவளிடம் சொல்லிவிட வேண்டும் நான் சொன்னதும் என்ன சொல்லுவா? எப்படி ரியாக்ட் பண்ணுவா? என்று யோசித்துக் கொண்டே குளித்து முடித்து வந்தவன் தியாவை எதிர்பார்த்து காத்திருக்க, ஐந்து நிமிடம் அவனை காத்திருக்க வைத்து விட்டு வந்து சேர்ந்தாள் தியா.

இவ்வளவு நேரம் பேச வேண்டும் என துடித்தவன் இப்போது என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்தான். அவனது தவிப்பை உணராதவளோ அவளது துணிகளை மடிப்பதும் அதை கப்போர்டில் அடுக்குவதுமாய் இருக்க, இதற்கு மேல் தாங்காது பேசிவிடலாம் என்று நினைத்தவன்,“உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று சொல்ல,

ஒரு முறை அவனை ஏறிட்டு பார்த்தவள் பின் தன் வேலையை தொடர, அவள் பார்த்ததையே சம்மதமாய் எடுத்துக் கொண்டு“தியா ஐம் சாரி நேற்று நான் அப்படி பேசியிருக்க கூடாது” என்றுவிட்டு அவள் முகம் பார்க்க,

எந்த சலனமும் இன்றி துடைத்து வைத்தாற் போன்று இருக்க, “சொல்லிட்டிங்களா அவ்வளவு தானே நான் போகலாம்ல” என்று கேட்டுவிட்டு அங்கிருந்து நகரப் போக,

அவளது அலட்சிய போக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், இப்போது அதை வெளிக்காட்டுவது சரியல்ல என்று நினைத்து “தியா உன்னை நான் வார்த்தைகளால ரொம்ப காயப்படுத்திருக்கேன் இல்லைனு சொல்லலை, அது எல்லாம் உன்னை கஷ்டப்படுத்தணும்ன்ற இன்டென்ஷனோட பண்ணலை என்னோட கோபத்தை ஆதங்கத்தை எப்படி வெளிப்படுத்தணும்னு தெரியாம தான் அதை உன் மேல காட்டியிருக்கேன்” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க,

“ஆமா ஏன்னா எனக்கு மனசுனு ஒண்ணு கிடையாதுல அதனால உங்க கோபத்தை என் மேல காட்டுனா எனக்கு எதுவும் இல்லை” என்று நினைத்தவள் “அப்புறம் சொல்றதுக்கு வேற எதுவும் இருக்கா?” என்று கேட்க,

சுள்ளென்று கோபம் தலைக்கேற “நீ ஏதோ மனசுல வச்சுட்டு பேசுற தியா” என்று சொல்ல, அதற்கு அமைதியையே பதிலாய் கொடுக்க,

சஜனின் கோபம் எல்லை கடக்க “என்ன தான் உன் மனசுல இருக்கு சொல்லி தொலையேன். நீ சொல்லாம எனக்கு எப்படி தெரியும்” என்று சீறினான்.

“நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணுமா? நீங்க பண்றது உங்களுக்கே தெரியலைனு சொல்றது காமெடியா இருக்கு” என்று மேலும் அவன் கோபத்தை அதிகரிக்க,

“சுத்தி வளைச்சு பேசுற பேச்செல்லாம் வேண்டாம் எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு”

“அதுவும் சரி தான். உங்களுக்கு நேரடியா பட்டுனு போட்டு உடைக்கிறது தான பிடிக்கும்” என்று அவள் வாயில் வந்ததை எல்லாம் சொல்ல,

“என்ன பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்க” என்று பற்களை கடித்தான் சஜன்.

“சரியா சொன்னீங்க நான் பைத்தியம்னு. என்னை விருப்பமில்லாம கல்யாணம் பண்ணிகிட்டீங்கனு தெரிஞ்சும் குட்டி போட்ட நாய்குட்டி மாதிரி உங்களையே சுத்தி வந்தேன்ல நான் பைத்தியம் தான். குழந்தை வரப் போற விஷயம் தெரிஞ்சும் சந்தோஷப்படாம உங்க வேலையை செய்துட்டு இருந்த உங்களை எதுவும் சொல்லாம அமைதியா இருந்தேன்ல நான் பைத்தியம் தான். இதுக்கெல்லாம் மேல என்னை உச்ச கட்ட பைத்தியமாக்குனது எதுனு தெரியுமா? வேறொருத்தி நினைப்பில் என்னை தொட்டிங்கனு தெரிஞ்சு அதை வெளிய சொல்ல முடியாம மனசுக்குள்ள புழுங்கிட்டு இருக்கேனே நான் பைத்தியம் தான்” என்று மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி தீர்க்க,

அவள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவன் கடைசியாக அவள் சொன்னதை கேட்டு முகம் கசங்க ”இன்னொரு பொண்ணு நினைப்பில உன்னை தொட்டேனா கேட்கவே அசிங்கமா இருக்கு தயவு செய்து வார்த்தையை விடாதே!” என்று சொல்ல,

“ஆமா என்னை தொட்டது உங்களுக்கு அசிங்கமா தான் இருக்கும் அதான் அன்னைக்கே குற்ற உணர்ச்சியா இருக்குனு சொல்லிட்டீங்களே இதுக்கு மேல என்ன சொல்லணும்” என்று அவன் சொன்னதை தவறாய் புரிந்து கொண்டு பேசிவைக்க,

“தியா வேண்டாம் நீயா எதையாவது பேசி என்னை கோபப்படுத்தாதே எதுக்கும் ஒரு எல்லை இருக்கு” என்று சொல்ல,

அவள் வாயில் சனி வந்து அமர்ந்து விட்டதோ என்னவோ சஜனின் கோபத்தை சிறிதும் கணக்கில் எடுக்காமல் மனதில் இருப்பதை கொட்டி விடும் நோக்கில் “உங்க எல்லையை தாண்ட வேண்டிய அவசியம் இனி வராது நானும் என் குழந்தையும் உங்க வாழ்க்கையை விட்டு போயிடுறோம் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்கோங்க என்னால் போன நிம்மதி உங்களுக்கு திரும்ப கிடைக்கட்டும்” என்று சொன்ன மறுநொடி அவளது கன்னத்தை இறுக பிடித்தான் சஜன்.

“உன்னை சொல்லி தப்பில்லை ஏதோ உலக மகா கல்யாணத்தை தன் பையனுக்கு நடத்தி வச்சுட்டோம்னு சந்தோஷத்துல இருக்காங்களே என் பெத்தவங்க அவங்களை சொல்லணும்” என்றவன் மீண்டும் அவனே தொடர்ந்தான்.

“என்னவெல்லாமோ பேசணும்னு வந்தேன் ஆனா நீயென்ன பேசுறது உனக்கு பதிலா நான் பேசுறேனு வார்த்தைகளை கொட்டிட்ட இனி ஒரு நிமிஷம் நீ இங்க இருக்க கூடாது. நான் திரும்பி வரும் போது என் கண்ணுல பட்ட நான் மனுஷனா இருக்க மாட்டேன் ஜாக்கிரதை” என்றுவிட்டு வெளியேறியவன் கதவை அறைந்து சாத்தியதில் எழுந்த சத்தத்தில் தியாவின் உடல் தூக்கி வாரி போட்டது.

அழுது வடிந்த முகத்துடனே கயல்விழியிடம் செல்ல, அவரோ தியாவின் நிலை கண்டு பதறி போய் “தியா என்ன ஆச்சு மா ஏன் அழுகுற?” என்று முகத்தில் கலவரத்தோடு கேட்க,

“என்னை எதுவும் கேட்காதிங்க எனக்கு எங்க வீட்டுக்கு போகணும்” என்று அழுதவளை என்ன சொல்லி சமாதனம் செய்வது என்று தெரியாமல்,

“முதல்ல உட்காரு” என்று அவளை அமர வைத்தவர் கிளாசில் தண்ணீரை கொண்டு வந்து அவளிடம் நீட்டியவர் “குடிம்மா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு அப்புறம் பேசிக்கலாம்” என்று சொல்ல,

“வே.. வேண்டாம் எனக்கு எங்க வீட்டுக்கு போகணும்” என்று முதன் முதலில் பள்ளியில் விட்ட சின்ன குழந்தை சிணுங்குவது போல் சொல்லிக் கொண்டு இருக்க,

இந்த நேரம் பார்த்து அவரும் வீட்டுல இல்லையே என்று நொந்து கொண்டவர், “சரிம்மா போகலாம் நானே கொண்டு போய் விடுறேன் இந்த முதல்ல தண்ணியை குடி இப்படி ஏங்க கூடாது” என்று அவளை ஆசுவாசப்படுத்தியவர், அவளை அழைத்துக் கொண்டு தியாவின் வீட்டிற்கு கிளம்பினார். @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சீதாராம் செய்த செய்து கொண்டிருக்கிற நில அபகரிப்பு குற்றங்களுக்கான ஆதாரத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த இளாவிற்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. இதற்கு முன் இருந்த அதிகாரிகள் சீதாராமிடம் பணம் வாங்கி கொண்டு அவரது செயல்களை கண்டும் காணாமல் இருந்ததும், யாரேனும் ஒருவர் அதை துப்பு துலக்க ஆரம்பித்தால் அவர்களை மிரட்டியும் இதுவரை காரியம் சாதித்து வந்திருப்பதும் தெரிய வந்தது.

சீதாராமை பற்றி விபரங்கள் சேகரிக்க முதல் அடி எடுத்து வைத்தாலே அவருக்கு தெரிந்து விடுகிறது என்றால் அவருக்கு விசுவாசமாக கறுப்பு ஆடு டிபார்ட்மென்டில் இருப்பதை அவன் அறிந்து கொண்டான்.

அதனால் தான் இந்த கேஸில் ஈடுப்பட்டிருப்பது பிறருக்கு தெரியா வண்ணம் பார்த்துக் கொண்டான்.தான் சேகரித்த ஒவ்வொரு தகவல்களையும் விஷ்வாவிடம் கலந்து ஆலோசித்து சீதாராமிற்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவதில் இவர்கள் இருவர் மட்டுமே ஈடுபட்டிருந்தனர்.

இளா ஊருக்கு செல்லும் முன்பே சீதாராம் அடிக்கடி தன்னுடைய டீலிங்கிற்காக வந்து போகும் இடங்களை கண்காணித்து தனக்கு அப்டேட் செய்யும் படி கூறி சென்றிருந்தான். இன்று சென்னைக்கு ஒதுக்கு புறத்தில் அப்படி ஒரு ஹோட்டல் இருப்பது யாருக்கும் தெரியாது அங்கு தான் சீதாராம் யாரையோ சந்திக்க போவதாக தனக்கு தகவல் கிடைத்திருக்கிறது உடனே கிளம்பி வா என்று விஷ்வா அழைக்கவும் அங்கு வந்திருந்தான்.

“வாடா இளா இப்போ தான்டா உள்ளே போயிருக்கான். அந்த பார்ட்டி இன்னும் வரலை போல” என்று சொல்ல,

“நான் சொன்ன மாதிரி எல்லாம் செட் பண்ணிட்டல்ல. யாருக்கும் சந்தேகம் வரலையே” என்று இளா கேட்க,

“அந்த ரூமை வேற யாருக்கும் குடுக்கமாட்டாங்களாம் டா அதான் நீ சொன்ன மாதிரி ரூம் சர்வீஸ் பண்ற பையனை ஹோட்டல பத்தி கேட்குற மாதிரி அவனை வெளிய வரவச்சு ஸ்பிரே அடிச்சு பார்க்கிங் ஏரியால ஒரு ஓரமா போட்டுட்டேன். அந்த சி.சி.டி.வி காரனை சர்வீஸ் பையனா போய் கேமரா செட் பண்ண சொல்லிட்டேன். ஆனா இதுக்கே இருபதாயிரம் ரூபாய் கேட்குறான்டா என் பாக்கெட் மணியில இருந்து குடுத்துருக்கேன் ஒழுங்கா எனக்கு ரிட்டன் பண்ணிடு” என்றான் விஷ்வா. “ஹே அல்ப்பை தர்றேன்டா முதல்ல நீ செஞ்சுருக்கது வொர்க் அவுட் ஆகுதானு பார்ப்போம்” என்று இளா சொல்ல,

தனது மொபைலில் டெக்னாலஜி மூலம் அங்கு நடப்பவற்றை இருவரும் பார்த்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் சீதாராம் எதிர்பார்த்த பார்ட்டியும் வந்திருக்க, அவர்கள் பேசிய டீல் அதுமட்டுமில்லாது தனது வீர தீர பராக்கிரமங்களை தன் வந்திருந்தவரிடம் பேசி தான் பெரிய ஆள் என்பதை சொல்லி அவருக்கு தெரியாமலையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருந்தான் சீதாராம்.

தேவையான ஆதாரம் கிடைத்த திருப்தியில் நாளைக்கு எஸ்.பியை பார்த்து அவர்கிட்ட பேசுனதுக்கு பிறகு இந்த சீதாராமனுக்கு இருக்குடா வேட்டு என்ற இளா “தேங்க்ஸ்டா விஷ்வா நீ மட்டும் ஹெல்ப் பண்ணலனா இது சக்ஸஸ் ஃபுல்லா முடிஞ்சுருக்காது” என்றான்.

“உன் தேங்க்ஸை நீயே வச்சுகடா என்னை என் வீட்டுல ட்ராப் பண்ணிடு” என்று இளாவிடம் சொல்ல,

கடைசியாக இவர்கள் பேசியதை அந்த பக்கம் வந்த சீதாராமின் அடியாட்களுள் ஒருவன் கேட்டுவிட, அதை உடனேயே சீதாராமிடம் போய் ஒப்பித்தான்.

வெகுண்டெழுந்த சீதாராம் “நான் யார் என்னனு தெரியாம அவன் போலீஸ் புத்தியை என்கிட்டயே காட்டுறானா?” என்று சீறலாய் கூறியவர், தனது மொபைலை எடுத்து எண்களை அழுத்த அந்த பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டதும் “ஏன்டா எனக்கெதிரா வேலை நடக்குது அதை எனக்கு இன்ப்ஃஃர்ம் கூட பண்ணாம என்னடா அங்க **** புடுங்கிட்டு இருக்க” என எடுத்த எடுப்பிலேயே காய்ச்சி எடுக்க,

“அய்யோ ஐயா அந்த மாதிரி எதுவும் இல்லைங்க உங்களுக்கு யாரோ தப்பா நியூஸ் கொடுத்திருக்காங்க நான் அவனை கண்ணுல விளக்கெண்ணெய் விட்டு கவனிச்சிட்டு இருக்கேன் அன்னைக்கு உங்களை கூப்பிட்டு விசாரிச்சு பிறகு அதை பத்தி அவர் மூச்சு விடலைய்யா” என்று இளாவுடன் பணியாற்றும் சக ஊழியர் சொல்ல,

“நீ விளக்கெண்ணெயே தான் அவன் என்னடானா என் இடத்துக்கே வந்து எனக்கெதிரா எதோ ஆதாரத்தை எடுத்துட்டு போயிருக்கான் நீ கதை சொல்லிட்டு இருக்க முதல்ல போனை வை” என்றவர், தனது ஆட்களிடம் இளாவை தூக்க கட்டளை விடுத்தார்.

விஷ்வாவை அவனது வீட்டில் இறக்கிவிட்டு விட்டு சிறிது அவனிடம் பேசி விட்டு அங்கிருந்த நகர்ந்த இரண்டாவது நொடி அவன் பின்னால் வேகமாக வந்த கார் அவனை இடிப்பது போல் வர அதை கண்டுவிட்ட விஷ்வா “இளா” என்று கத்த, சட்டென்று சுதாரித்தவன் வண்டியை திருப்ப முயற்சிக்க அதற்குள் அந்த கார் பைக்கின் பின்புறம் இடித்து தள்ள, சறுக்கி கீழே விழுந்தவனின்  நெற்றியை கீழே கிடந்த கல் பதம் பார்க்க, கை அங்கிருந்த மின் கம்பத்தின் தூணில் இடிக்க “ஆ அம்ம்மா” என்ற கத்தலுடன் மயங்கினான் இளா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வீட்டிற்கு போக விருப்பம் இல்லாமல் இருந்த சஜனை வினோத் தான் இன்று மாலை அஷோஷியேஷன் சார்பில் ஒரு பார்ட்டி அரேஞ்ச் செய்திருப்பதாகவும் கம்பெனி சார்பில் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்று அவனை கட்டாயப்படுத்தி தயாராகி வருமாறு அனுப்பி வைத்திருந்தான்.

வீடே அமைதியாக இருக்க காலையில் நடந்த்தை நினைத்தவனின் மனதில் மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் தலையெடுக்க, இறுக்கமான முகத்துடனே உள்ளே நுழைந்தவனை “நில்லுடா” என்ற சிவப்பிரகாசத்தின் குரல் தடுத்து நிறுத்தியது.

“உன் மனசுல என்ன தான் டா நினைச்சுட்டு இருக்க எனக்கு அதுக்கான பதில் இன்னைக்கு தெரிஞ்சே ஆகணும்” என்று கோபமாக கேட்க, “என்ன தெரியணும் டாட்” என்று சளைக்காத குரலில் அவனும் கேட்க,

“பண்றதையும் பண்ணிட்டு என்ன தெரியணும்னு எவ்வளவு அலட்சியமா கேட்குறான் பார்த்தியா கயல்” என்று மனைவியிடம் கேட்க,

“டேய் சஜன் தியாவை என்னடா சொன்ன நீ? வீட்டுக்கு போகணும்னு ஒரே அழுகை எப்போ பாரு அவகிட்ட மூஞ்ச காமிச்சு அவளை அழ வைக்குறதையே ஒரு வேளையா வச்சுட்டு இருக்க? என்ன தான் உனக்கு பிரச்சனைனு கேட்டாலும் வாயை திறக்க மாட்டுற ஏன் டா இப்படி மாறிட்ட?” என்று கயல் மகன் மேல் வருத்தப்பட,

“அதெல்லாம் அவனுக்கு எங்க புரிய போகுது? சரி ஏதோ உனக்கு விருப்பமில்லாம கல்யாணம் நடந்திடுச்சு அதை ஏத்துக்க உனக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்னு தான் ஆரம்பத்துல நீ நடந்துகிட்டதுக்கு நாங்க அமைதியா இருந்தோம். தியா உண்டாகி இருக்கானு தெரிஞ்சதும் சந்தோஷமா வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டனு நானும் உங்க அம்மாவும் எவ்வளவு ஆனந்தப்பட்டோம் தெரியுமா? ஆனா நீ அவ வீட்டுக்கு போகணும்னு அழற அளவுக்கு ஏதோ பேசி இருக்க? அதுவும் அவளுக்கா போகணும்னு தோணுச்சா இல்லை நீ போனு விரட்டுனியானு தெரியலை?” என்று கேட்க,

“நான் யாரையும் போக சொல்லலை அவளா போனா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது” என்றவனுக்கு ஏனோ நான் வரும் போது கண் முன் இருக்க கூடாது என்று தான் சொன்னது அந்த நேரம் மறந்து போனது.

“அம்மா இல்லாத பொண்ணு இந்த மாதிரி நேரத்துல ஏங்கிற கூடாதுனு பக்குவமா பார்த்துக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன் நீ என்னடானா இப்படி பண்ணிருக்க? உனக்குனு ஒரு குழந்தை வரப் போது ஆனா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை இப்போ எல்லாத்தையும் தான் தோன்றித்தனாமா செய்யுற எதையும் பொறுமையா செய்யுற சஜன் எங்கடா போனான்?”

“அம்மா சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதிங்க அவ என்ன சொன்னா தெரியுமா? அதை கேட்டுட்டும் என்னால புத்தர் மாதிரி பொறுமையா எல்லாம் இருக்க முடியாது” என்று சொல்ல,

“அப்படி என்ன சொன்னானு இப்படி பண்ணி வச்சுருக்க சொல்லு” என்று சிவா கேட்க,

“ம்ப்ச் விடுங்க எனக்கு ஒரு மீட்டிங்க்கு போகணும் அல்ரெடி லேட் ஆகிடுச்சு” என்று விட்டு விறு விறு வென்று கயல் சிவாவும் அழைப்பதை கூட காதில் வாங்காமல் அறைக்குள் சென்று மறைந்தான்.

தியா இல்லாத அறை வெறுமையாக இருப்பது போல் தோன்ற, அப்போது தான் நான் வரும் போது இங்கு இருக்க கூடாது என்று அவன் சொன்னது நியாபகம் வர, “எப்போடா சொல்லுவான் இங்கிருந்து ஓடலாம்னு நினைச்சுட்டு இருந்திருப்பா போல? நான் ஏன் போகணும் இது என் வீடுனு சொல்றதுக்கு என்ன? தேவையில்லாததை பேச மட்டும் வாய் காது வரை நீளும் என்னால போக முடியாதுனு மட்டும் சொல்ல முடியாது வாயில பசை போட்டு ஒட்டிக்குவா போல போக தெரிஞ்சவளுக்கு வர தெரியாதா? அதுக்கு இவங்க ரெண்டு பேரும் என்கிட்ட சாமியாடுறாங்க” என்று கடு கடுத்தவன் குளித்து விட்டு வந்து பார்டிக்கு செல்வதற்கு போட வேண்டியை உடையை எடுக்க கப்போர்டை திறக்க,

அவசரத்தில் இருந்தால் அண்டாவினுள் கூட கை நுழையாது என்று சொல்வது போல சிடு சிடுப்பில் கப்போர்டை திறக்க அது ஸ்ட்ரக் ஆகி திறப்பேனா என அவனது மன நிலை புரியாது சண்டித்தனம் செய்தது.

“ச்சை இது வேற” என்று எரிச்சலில் ஓங்கி கப்போர்ட் கதவை மிதிக்க, அதில் கதவு திறக்கப்பட, அடுக்கி வைத்திருந்த துணிகள் மள மளவென சரிந்தது. என் கப்போர்டை கூட அவளை மாதிரியே மாத்தி வச்சுருக்கா திறக்குறது இல்லை திறந்தா உள்ளே இருக்க அவ்வளவையும் கொட்ட வேண்டியது என அதற்கும் தியாவை குற்றம் சாட்டியவன்,

தனக்கு வேண்டிய உடையை எடுத்துக் கொண்டு, கீழே விழுந்தவற்றை அள்ளி உள்ளே திணித்து போது அவனது கையில் மாட்டியது தியாவின் டைரி. கப்போர்டை மூடிவிட்டு மெத்தையில் அமர்ந்தவன் அந்த டைரியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த உறையை விட்டு வெளியே எடுக்க ஒரு டைரியை இவ்வளவு ரசனையாக கூட தேர்வு செய்ய முடியுமா என்பது போல் இதய வடிவில் கண்ணை பறிக்கும் நிறத்தில் இருந்தது. திறந்து பார்க்கலாமா வேண்டாமா என தனக்குள்ளே பட்டி மன்றம் நடத்திய சஜனின் மனம் திறந்து பார் ஒரு வழி கிடைக்கும் என்று அசரீரியாக சொல்ல, முதல் பக்கத்தை திறந்தவன் அதிர்ந்து போனான். சஜூ என்ற அவனது பெயரும் தியா என்ற அவளின் பெயருக்கும் இடையே சிவப்பு நிறத்திலான இதயம் ஒட்டப்பட்டு அவனை பார்த்து கண்சிமிட்டி சிரித்துக் கொண்டிருந்தது.                                         

செனோரீட்டா வருவாள்.

Advertisement