Advertisement

அத்தியாயம் 30:

நீரானது நிலத்தை விட்டு விலகி

ஆவியாகி போனாலும் மீண்டும் மழையாக

பூமித்தாயின் மடியில் வீழ்வது போல்

உன்னை விட்டு நான் விலகி சென்றாலும்

என் உயிர் என்று உனையே சேரும்!

இளாவின் பார்வை தனுஷாவை ஊடுருவது போல் இருக்க, இதிலிருந்து விடுபட வேண்டுமே என்ற தவிப்பில் “நான் போகணும் வேலை இருக்கு” என்றவளின் குரல் அநியாயத்திற்க்கு குழைந்து இருந்தது. அவளின் குழைவு கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டவன் “போகலாம் அதுக்கு முன்னாடி நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு” என்றான்.

“நாம பேசுனதை கேட்டிருப்பானோ?” என்று நினைத்தவள் “என்.. என்ன? சொல்லணும்” என்று கேட்க,

“நான் வரும் போது போன்ல என்னமோ சொல்லிட்டு இருந்தியே என்ன சொன்ன?”

“ஹப்பாடா பேசுனதை கேட்கலை போல” என்று முணு முணுத்துக் கொண்டவள், “நான் ஒண்ணும் சொல்லலையே வொர்க் பத்தி வெண்பாகிட்ட பேசிட்டு இருந்தேன் அவ்ளோ தான்” என்று சொல்ல,

“ஓ என்ன வொர்க் காக்கி சட்டையை கலர் சட்டையா மாத்துறதா? இல்லை காவி சட்டையா மாறாம இருக்க வைக்குற வொர்க்கா?” என்று புருவம் உயர்த்த,

“திருட்டு பையன் எல்லாத்தையும் கேட்டுகிட்டு பேசிட்டு இருக்கான் பாரு கண்டிப்பா நீ காவி சட்டையே தான்டா” என்று மனதிற்குள் சொல்லிக் கொள்ள,

“என்ன எல்லாம் தெரிஞ்சுட்டே கேள்வி கேட்குறானே கண்டிப்பா இவன் காவி சட்டைனு தான நினைக்குற” என்று அவள் மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்த, “இதெல்லாம் நல்லா ஜேம்ஸ் பான்ட் மாதிரி கண்டுபிடி மத்தபடி ம்ஹூம்” என்று முனகினாள்.

“காவி சட்டை இல்லைனு எப்படி ப்ரூவ் பண்ணலாம்” என்று அவளிடம் கேட்டவனின் பார்வை அவளது இதழில் படிய, அவனது பார்வை நிலைத்த இடத்தை கண்டவளின் இதயம் கிழக்கு கடற்கரை சாலையில் பறக்கும் வண்டிகளின் வேகத்தை மிஞ்சும் அளவிற்கு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

அவளது இதய துடிப்பின் சத்தம் அவனுக்கு தெளிவாக கேட்க, இதழோரம் தோன்றிய புன்னகையோடு அவளை நெருங்க, தனுஷாவோ கண்களை இறுக முடிக் கொண்டு தனது படபடப்பை குறைக்க முயன்று கொண்டிருந்தாள்.

கண்களை இறுக மூடியிருந்தவள் ஒன்றும் நடக்காதை உணர்ந்து மெல்ல கண்களை திறந்து பார்க்க, அங்கு இளா இல்லை. சுற்றும் முற்றும் அவனை தேடி விழிகளை சுழல விட, காக்கி சட்டையில் இருந்து கலர் சட்டைக்கு மாறியபடி மாடியிலிருந்து இறங்கி கொண்டிருந்தான் இளா.

“இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா” என்று  கேலியாக முணு முணுத்துக் கொண்டாலும் அவன் அவளை விலக்கி நிறுத்தியது மனதிற்குள் வலிக்கவே செய்தது.

தான் விலகி இருந்த போது அவளை சுற்றி சுற்றி வந்தவன் இன்று தன் நெருக்கத்தை வாய் திறந்து சொல்லாவிட்டாலும் மறைமுகமாக வெளிப்படுத்தும் போது இளாவின் விலகல் ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. இப்பொழுதும் அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று நினைத்தாலே தவிர தான் பேசிய பேச்சின் வீரியத்தையோ அது அவனை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கும் என்பதையோ உணரவில்லை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சஜனை பற்றிய நினைவிலேயே இருந்த தியாவிற்கு அப்போது தான் நாளை மறுநாள் கடைசி எக்ஸாம் என்பது நியாபகம் வர எழுந்து சென்று ரெப்ரெஷ் செய்து கொண்டவள் புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்தாள்.

ஒரு வரி படிப்பதற்குள் ஓராயிரம் முறை சஜனின் செய்கைகள் நியாபகம் வந்து கொண்டிருக்க, “என்னைக்கு தான் புரிஞ்சுப்பான் இப்போ குழந்தையும் வரப் போகுது இப்படியே பட்டும் படாம எத்தனை நாள் வாழ முடியும். அன்னைக்கு அவன் போதையில் மட்டும் இல்லைனா இன்னைக்கு இந்த குழந்தையும் கிடைச்சிருக்காது அந்த வகையில கடவுளுக்கு கொஞ்சமாவது என் மேல இரக்கம் இருக்கே என்று நினைத்து கொண்டவள் இன்னும் எத்தனை நாள் அவனிடம் காதலையும் அன்பான பார்வையையும் எதிர்பார்த்து ஏமாந்து போறது அவன் தவிர்க்குற ஒவ்வொரு நொடியும் நெஞ்சை கசக்கி பிழியிற மாதிரி வலிக்குது” என்று தனக்குள் பேசிக் கொண்டவள்,

“தம்பி உங்கப்பாவுக்கு நீ வந்ததுல கூட சந்தோஷம் இல்லை போலடா என்னை போல நீயும் அவரோட அன்புக்காக ஏங்கணும்னு உன் தலையிலையும் எழுதியிருக்கு போல” என்று கண்ணீர் விட்டபடி தன் வயிற்றை தடவிக் கொண்டாள்.

ஆம் தம்பி பாப்பா தான்! அவள் கருவுற்றிருக்கிறாள் என்று மருத்துவர் சொன்னதுமே அவளுக்கு சஜனின் உருவத்தை அச்சில் வார்த்தாற் போன்று தன் பிஞ்சுக் கை கால்களை உதறிய வண்ணம் இருந்த குழந்தை தான் கண்ணில் காட்சியளித்தது.

அவளுக்கு குடிப்பதற்காக ஜீஸை எடுத்துக் கொண்டு வந்த கயல்விழி அழுது கொண்டிருந்த தியாவை கண்டு பதறியவராய் “ தியாம்மா ஏன்டா அழுகுற? தையல் போட்டது வலிக்குதா? இல்லை வயிறு எதும் வலிக்குதா?” என்று அவள் வயிற்றில் கை வைத்து இருப்பதை கண்டு கவலையாக கேட்க, “இல்லை” என்று தலையை அசைத்தவள் அமைதியாக இருக்க,

“என்னனு சொல்லுடா?” என்றவரின் குரலில் இருந்த பதட்டத்தை கண்டவள் “அம்மா நியாபகம் வந்திடுச்சு நான் உங்க மாடியில படுத்துக்கவா?” என்ற தியாவை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

“உனக்கு நான் இருக்கேன்டா எதுக்கும் கவலைப்படக்கூடாது சரியா? இந்த மாதிரி நேரத்துல எதை நினைச்சும் வருத்தப்படக் கூடாது நம்ம எண்ணங்கள் தான் குழந்தைகிட்டயும் பிரதிபலிக்கும்” என்று கண்ணீரை துடைத்து விட்டவரின் கண்களும் கலங்கி இருந்தது.

அவளது தலையை கோதி விட்டவாறு அமர்ந்திருக்க, சிறிது நேரத்தில் தியாவிடம் இருந்து சீரான மூச்சு வெளிப்பட அவள் தூங்கிவிட்டதை உணர்ந்தவராய் தலையை தலையணைக்கு மாற்றியவர் அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு கதவை அடைத்து விட்டு சென்றார்.

அவர் அங்கிருந்து நகர்ந்ததும் கண்களை திறந்து தியா சிறிது நேரம் விட்டத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள். பின் ஒரு முடிவு எடுத்தவளாய் இனி எதையும் எதிர்பார்க்க கூடாது ஏமாற்றமும் வேண்டாம் என்ற முடிவை திடமாக எடுத்த பின்  மனம் சற்றே தெளிவானது போல் இருக்க படிக்க ஆரம்பித்தாள்.

வழக்கத்தை விட அன்று சீக்கிரமாகவே வந்துவிட்ட சஜன் தனதறைக்கு சென்றவன் அங்கு தியா இல்லாமல் இருக்க “எங்க ஆளை காணோம் ஒரு வேளை கிச்சன்ல இருப்பாளோ?” என்று எண்ணிக் கொண்டவன், வேறு உடைக்கு மாறிய பின் கீழே வந்தவனுக்கு கயல் பரிமாற “எப்போதும் சாப்பிடுற டைம் கரெக்டா வந்து எடுத்து வச்சிடுவாளே” என்று நினைத்தவன்,

“அம்மா தியா எங்க?” என்று கேட்க, “அவ ஸ்ட்டி ரூம்ல படிச்சுட்டு இருக்கா? நாளைக்கு மறுநாள் எக்ஸாம்ல அதான்” என்று சொல்லிவிட்டு அவனுக்கு வேண்டியதை பரிமாற, “போதும்மா நீங்க போய் படுங்க சாப்பிட்டு எல்லாத்தையும் எடுத்து வச்சிடுறேன்” என்றான்.

“இருக்கட்டும் டா நீ சாப்பிடு எடுத்து வச்சுட்டே போறேன்” என்றுவிட்டு அவன் அருகில் அமர்ந்து பரிமாறியவர், சாப்பிட்டு முடிந்ததும் பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நகர்ந்ததுவிட, சஜன் ஸ்ட்டி ரூம் நோக்கி சென்றான்.

புத்தகத்தில் கண் பதித்திருந்த தியா கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, அங்கு சஜன் நின்றிருந்தான். அவனை கண்டதும் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாது  மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்துவிட, அவளது செய்கை கண்டு புருவம் உயர்த்தியவன் “ இப்போ பெயின் எப்படி இருக்கு? ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான?” என்று கூற,

“இப்போ பரவாயில்லை” என்று புத்தகத்தில் இருந்து கண் எடுக்காமல் சொல்ல, “ஓகே லேட் ஆயிடுச்சு போய் தூங்கு நாளைக்கு படிச்சுக்கலாம்” என்று கூற,

“தூக்கம் வரலை நான் அப்புறம் படுக்குறேன்” என்றுவிட்டு மீண்டும் புத்தகத்திற்குள் தலையை நுழைத்துக் கொள்ள, அவளது பதிலிலும் செயலிலும் சற்றே எரிச்சல் அடைந்த சஜன் “உனக்கு அன்பா சொன்னா மண்டையில் ஏறாதா?” என்று கோபமாக வினவ,

“இப்போ என்ன படிக்க கூடாது போய் தூங்கணும் அவ்வளவு தானே” என்று புத்தகத்தை மூடி டொம் என்று மேஜை மீது போட்டவள் விறு விறுவென்று அறைக்கு சென்று தலை வரை போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

என்ன சொன்னாலும் மௌனமாக இருப்பவள் இன்று பொரிந்து தள்ளிவிட்டு சென்றதை யோசனையோடு பார்த்தவன் “இப்போ என்ன சொல்லிட்டேனு இந்த குதி குதிக்குறா?” என்று முனகிவிட்டு பின் தானும் அறைக்கு சென்று கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக் கொண்டான்.

இங்கு தியாவோ போர்வையை சற்றே விலக்கியவள் திரும்பி பார்க்க சஜன் முதுகு காட்டி படுத்திருந்தான். “ரொம்ப பேசிட்டோமோ” என்று ஒரு நொடி யோசித்தவள் “வேண்டாம் தியா இதை பற்றி நினைக்காதே” என்று மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டே உறங்கி போனாள்.

காலையில் அவன் எழும் முன்னரே எழுந்து கொண்டவள் கடமைகளை எல்லாம் முடித்துக் கொண்டு ஸ்டடி ரூமிற்க்குள் சென்று ஐக்கியமாகி விட்டாள். மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்சனை முடிந்துவிடும் என்று அறியாது பேதையாக சஜனுடனான தவிர்ப்பு யுத்தத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டாள் தியா.

இதை அறியாத சஜன் வழக்கம் போல தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு, ஹாலில் அமர்ந்து அன்றைய பிஸினஸ் நியூஸை புரட்டிக் கொண்டிருந்தான்.

“சஜன் காபி கொண்டு வரவா?” என்ற அன்னையின் குரலில் நிமிர்ந்தவன் “ ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்து குடிக்குறேன்” என்று சொல்லிவிட்டு சென்றவன், அலுவலகம் செல்ல தயாராகிவிட்டு வர, “என்னப்பா இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட?” என்ற தந்தையின் கேள்விக்கு,

“கொஞ்சம் வேலை இருக்கு டாட்?” என்றுவிட்டு  “டாட் நாம இன்னொரு ப்ராஞ்ச் ஆரம்பிக்கணும்னு லேன்ட் விஷயமா விளம்பரம் குடுத்துருந்தோம்ல இப்போ ஒரு லேன்ட் சேல்க்கு வந்திருக்கு?” என்றான்.

“அப்படியா? யாரு என்ன்னு விசாரிச்சியா? எங்க இருக்கு மெயின் ஏரியா தானா?”

“ஆக்ச்சுவலி அது  ரியல் எஸ்டேட் சீதாராம் இடம் டாட். மெயின் ஏரியா தான் அன்னைக்கு பேசினேன் அவர்கிட்ட! நாளை மறுநாள் லேன்ட் போய் பார்த்துட்டு அப்புறம் டிசைட் பண்ணலாம்னு இருக்கேன் நீங்க என்ன சொல்றிங்க?” என்று கேள்வியை அவர்புறம் திருப்பினான்.

“சஜன் இந்த சீதாராம் பத்தி நல்லவிதமா கேள்விபட்ட மாதிரி இல்லை எதுக்கும் நாம யோசிச்சு தான் பண்ணனும். ப்ராப்ளம் வந்த பிறகு கவலைப்படுறதுல எந்த லாபமும் இல்லை” என்று தன் அபிப்ராயத்தை சொல்ல,

“நானும் அவரை பத்தி விசாரிச்சேன் டாட் எனக்கும் கொஞ்சம் ட்வுட் தான். அவர் சொல்ற இடம் மெயின் ஏரியா பிஸினஸ்க்கு ஏத்த இடம். லேன்ட் பார்ப்போம் பேப்பர்ஸ் எல்லாம் லீகலா கரெக்ட் இருந்தா கமிட் பண்ணுவோம் இல்லைனா அதுக்கு பிறகு என்னனு முடிவு பண்ணிக்கலாம்”

“நீ சொல்றதும் சரி தான் சஜன். எது பண்றதா இருந்தாலும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசிச்சு முடிவெடு. வா சாப்பிட்டு போகலாம்” என்றார்.

டைனிங் டேபிளில் அமர, கயல் விழி தியாவையும் சாப்பிட அழைத்து வர அங்கு சஜன் இருப்பதை கண்டவள்,  நேராக சிவசங்கரின் அருகில் அமர்ந்து கொள்ள, சஜனின் பார்வை யோசனையாய் அவள் மீது படிந்தது.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் அருகில் அமர்ந்து உண்ணுபவள் இன்று இவ்வாறு நடந்து கொள்ள, நேற்றிலிருந்து அவளது பாராமுகம் அவனை சிந்திக்க வைத்தது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இரவு நேரம் கோயம்பேடு பேருந்து நிலையம் சோடியம் விளக்குகளாலும், நிரம்பி இருந்த மக்கள் கூட்டத்தாலும் ஜே ஜே என்று இருக்க விடுமுறைக்கு செல்லும் கல்லூரி மாணவர்களின் கூட்டமும், சொந்த ஊருக்கு செல்லும் குடும்பங்களும், அங்கு எழுந்த இரைச்சலில் மிரண்டு கத்தும் குழந்தைகளும் அவர்களை தூக்கி கொண்டு சமாதனப்படுத்தும் தந்தைகளும், பசியாற்றும் தாய்மார்களும் வேலைக்கு சென்று விட்டு திரும்புவர்களும் சந்தித்துக் கொள்ளும் சந்திப்பு நிலையமாக அது காட்சியளித்தது.

இப்படிபட்ட ஆரவாரமான இடத்தில் எனக்கென்ன போச்சு என்ற மனநிலையுடன் அங்கு காத்திருப்போர் அமர்வதற்கென வரிசையாக போடப்படிருந்த நாற்காலிகளில் ஒன்றில் இளாவும் தனுஷாவும் அமர்ந்திருந்தனர் அவர்களுக்கு இடையில் லக்கேஜ் வைக்கப்பட்டிருந்தது அது பாதுகாப்புக்காவோ இல்லை அவர்களுக்கு இடையே தடுப்பு சுவருக்காவோ என்பது அவர்கள் மட்டுமே அறிந்த ஒன்று.

கோவை செல்லும் பேருந்து வந்து நிற்க, அவரவர் உடைமைகளை எடுத்துக் கொண்டு முன் பின் தெரியாதவர்கள் போல பேருந்தில் ஏறி தங்களுக்கு ஒதுக்கிப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தனர். ஜன்னல் ஓரமாய் தனுஷா அமர்ந்து கொள்ள அதற்கு அடுத்து இளா அமர்ந்து கொண்டான்.

முன் பின் தெரியாதவர்கள் கூட பயணத்தில் பக்கத்தில் இருக்கும் சகப்பயணியிடம் ஒரிரு வார்த்தையாவது பேசிக் கொள்வார்கள். இருவரிடமும் மருந்துக்கும் சிறு பேச்சு இல்லை.

வாசலில் சத்தம் கேட்டதும் வெளியே வந்த அனு ஆட்டோவில் இருந்து இறங்கியவர்களை கண்டதும் துள்ளி குதித்தபடி “அம்மா அண்ணா அண்ணி வந்தாச்சு” உள்ளே குரல் கொடுத்தபடி அவர்களை நோக்கி ஓடினாள்.

“டேய் தடியா எப்படி இருக்கடா எருமை நம்ம வீட்டுக்கு வர இவ்வளோ நாளா உனக்கு?” என்று கேட்க, தனுஷா க்ளுக் என சிரித்து வைத்தாள். ஒரு முறைப்பான பார்வையை அவளை நோக்கி வீசியவன்,

“ஒரு குரங்கு வீட்டுல இருந்து என் அம்மாவை பிராண்டி எடுக்குது நானும் வந்து ஏன் அதுகிட்ட மாட்டிக்கணும்னு வரலை” என்று பதிலுக்கு அவளை வார,

அதற்குள் அங்கு வந்த சாலா “அனு இந்த ஆரத்தியை எடுத்து அவங்களை உள்ளே வரவிடு அப்புறம் உன் கலாட்டாவை வச்சிக்கோ” என்று விட

ஆரத்தியை எடுத்து விட்டு இருவரும் உள்ளே வந்ததும் நியாபகம் வந்தவளாய் “என்னையவா குரங்குனு சொல்ற? உன்னை” என்று அவனது புஜத்தில் குத்திய அனு “இங்க இருக்க வரை அண்ணி என்கூட தான் இருப்பாங்க அதான் உனக்கு பனிஷ்மென்ட்” என்றாள்.

“ஆமா என்கூட இருந்துட்டாலும் கொஞ்சிட்டு தான் மறுவேலை பார்ப்பா?” என்று மனதிற்குள் முணு முணுத்தவன், “தாரளமா உன் கூடவே வச்சிக்கோ எனக்கு நோ ப்ராப்ளம்” என்று சொல்ல,

“பார்த்திங்களா? அண்ணி இதுக்காவே நீங்க என் கூட தான் தங்குறிங்க?” என்று விட்டு, “சரி டயர்டா இருப்பீங்க போய் குளிச்சிட்டு வாங்க” என்று இருவரையும் அனுப்பிவிட்டு, அனு டி.வியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

குளித்து முடித்து தயாராகி வந்ததும் பூஜை அறையில் தனுஷாவை விளக்கேற்றுமாறு சாலா சொல்ல, “சரி அத்தை” என்று விட்டு விளக்கேற்றி இறைவனை வணங்கிவிட்டு, தனுஷா சாலாவின் காலில் விழப் போக இளாவும் அவளுடன் இணைந்து கொண்டான்.

“எப்போதும் சந்தோஷமா இருங்க” என்று வாழ்த்தியவர், “வாங்க சாப்பிடலாம்” என்று அழைக்க, டைனிங் ஹால் நோக்கி நடை போட்டனர்.

“அனு நீ சாப்பிடலையா?” என்று தனுஷா கேட்க, “இல்லை அண்ணி நானும் அம்மாவும் அப்போவே சாப்பிட்டாச்சு நீங்க சாப்பிடுங்க” என்று விட்டு வரவேற்பறையில் இருந்த ஷோபாவில் அமர்ந்து கொள்ள, தனுஷாவின் மொபைல் ஒலிக்க அருண் தான் அழைத்திருந்தான்.

அதை கண்ட அனு “எடுக்கவா? வேண்டாமா? என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க காதல் கொண்ட மனமே இறுதியில் ஜெயிக்க, அதை அட்டன்ட் செய்து காதிற்கு கொடுத்தவள் அமைதியாக இருந்தாள்.

“ஹலோ தனும்மா ரீச் ஆகிட்டியா? அங்க எல்லோரும் நல்லா இருக்காங்கல்ல?” என்று கேட்க,

அனுவோ மௌனத்தையே தொடர பதில் வராமல் இருப்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் “அப்புறம் அ க்கும் அனு எப்படி இருக்கா?” என்று கேட்க, இங்கு அனுவின் கண்களிலோ கண்ணீர் நிறைந்து கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது.

அதற்குள் அங்கு வந்த தனு “அனு யார் போன்ல” என்றபடி அவளை நெருங்க, “அனுவா? ஹலோ அனு” என்ற அருணின் அழைப்புகளுக்கு செவி மடுக்காமல் தனுஷாவிடம் மொபைலை கொடுத்தவள் வேகமாக தனதறைக்குள் சென்று மறைந்தாள்.

அவள் சென்றதையே பார்த்து கொண்டிருந்த தனுஷா, மொபைலை எடுத்து பார்க்க அருண் தான் அழைப்பில் இருந்தான். “ஹலோ அண்ணா சொல்லு” என்று அனுவை பற்றி தவிர்த்து மற்றதை பேசிவிட்டு வைத்தாள்.

அனு தனதறையில் அமர்ந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட அதுவோ ஊற்று நீரை போல துடைக்க துடைக்க வழிந்த வண்ணமே இருந்தது. வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியவில்லை வேண்டும் என ஒட்டிக் கொள்ளவும் முடியவில்லை.

அங்கு அருணோ “ஒரு வார்த்தை கூட பேச தோணலையாடி மூன்றாவது மனுஷங்க பேசினா கூட ஹலோனு பேசி வைப்போம் அதை கூட உனக்கு சொல்ல தோணலை இல்லை. பேசாம போனாலும் நீயும் இப்போ ஃபீல் பண்ணிட்டு தான் இருப்பனு எனக்கு தெரியும். அப்படி என்ன தான் தடுக்குது நான் விலகி போன போதெல்லாம் நெருங்கி வந்த நீ இப்போ ஏன்டி என்னை தவிர்க்குற?” என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

தனுஷா சாலாவுடன் நன்கு பொருந்திவிட்டாள். இருவரும் தோழிகள் போல சகஜமாக பேசி கொள்ளும் அளவிற்கு நெருக்கம் ஆகியிருந்தனர். சாலா மெல்ல தனுஷாவிடம் “கேட்குறேனு தப்பா நினைக்காதம்மா உங்களுக்குள்ள ஒரு பிரச்சனையும் இல்லையே சந்தோஷமா தான இருக்கீங்க” என்று கேட்க,

“நாங்க சந்தோஷமா தான் இருக்கோம் நீங்க கவலைப்படாதீங்க” என்று சொல்ல, அவளின் பதிலில் திருப்தி அடையாதவாறு இருக்க, இவர்களின் உரையாடலை அங்கு வந்த இளா கேட்டு விட,

“அம்மா நாளைக்கு சாகவாசமா உங்க மருமககிட்ட பேசிக்கோங்க இப்போ நான் என் பொண்டாட்டியை கூட்டிட்டு போறேன்” என்று அவளை அழைக்க, அவனது அழைப்பில் மனம் மகிழ்ந்த தனு அதை முகத்திலும் பிரதிபலித்தாள்.

மகனின் உரிமை பேச்சிலும் மருமகளின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியையும் கண்டவரின் மனதில் சற்று நேரம் முன்பு இருந்த சஞ்சலம் நீங்கி விட “நாங்க நல்லா பேசிக்கிறோம்னு உனக்கு பொறாமைடா உன் பொண்டாட்டியை நீயே வச்சுக்கோடா? எங்களுக்கு வேண்டாம்” என்று முறுக்கினாலும் அதற்கு நேர்மாறாய் அவரது இதழ்கள் புன்னகையில் வளைந்திருந்தது

“சின்னு வந்திடு அவங்க மனசு மாறி மறுபடியும் உங்கிட்ட மொக்கை போடுறதுக்குள்ள நாம எஸ்.கேப் ஆகிடலாம்” என்றபடி அவளின்  கைகளை பிடித்துக் கொள்ள,

“படவா? நான் மொக்கை போடுறேனா? உன்னை” என்று அவர் கை ஓங்க, “விடு ஜூட்” என்றபடி தனுவை இழுத்துக் கொண்டு தனதறைக்குள் நுழைந்தான்.அதை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்த சாலா “கடவுளே இந்த சந்தோஷம் எப்போதும் நிலைச்சு இருக்கணும்” என்று வேண்டிக் கொண்டவாறு உறங்க சென்றார்.

அறைக்குள் வந்ததும் அவள கைகளை உதறியவன் “அவ்வளவு தான்” என்பது போல் போய் படுத்துக் கொண்டான். தன் அன்னைக்காக தான் அப்படி நடந்து கொண்டான் என்பது தெரிந்தாலும் அவனின் உதறல் மனதை ரம்பமாய் அறுத்தது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எக்ஸாமிற்கு கிளம்பிய தியாவை ஏற்றிக் கொண்டு சஜனின் கார் வீட்டிலிருந்து புறப்பட்டது. புறப்பட்டதிலிருந்து தெருமுனை வரும் வரை இருவருக்கும் இடையில் கனத்த மௌனமே நிலவியது.

“வண்டியை நிறுத்துங்க” என்று அந்த மௌனத்தை கலைத்தாள் தியா.

“எதுக்கு? காலேஜ்ல போய் விட்டுறேன்” என்ற சஜனின் பதிலை காதில் வாங்காது “ நிறுத்துங்க” என்று மீண்டும் சொல்ல, காரை நிறுத்தியதும் “தேங்க்ஸ் நான் போய்க்குறேன்” என்றவாறு இறங்கி கொண்டாள்.

“ஓகே ஆஃப்டர்நூன் நான் வந்து பிக் பண்ணிக்குறேன்” என்று சொல்ல, “வேண்டாம்” என சொல்ல திரும்ப அதற்குள் சஜன் கிளம்பியிருந்தான்.

அலுவலகம் சென்றவன் வேலைகளை அவசரமாக முடிக்க அவனது அவசரத்தை கண்ட வினோத் “என்ன சார் வெளிய எங்கேயும் போறிங்களா?” என்று கேட்க,

“ஏன் வினோத்” என்று வினோத்தை கேள்வி கேட்க,

“இல்லை அவசர அவசரமா எல்லாம் செய்யுறிங்களேனு கேட்டேன்” என்றதும் “யெஸ் கொஞ்சம் பெர்ஷனல் வொர்க்” என்று சொல்லிவிட்டு வேலைகளை முடித்த போது மணி பனிரெண்டைரை ஆகியிருந்தது. எக்ஸாம் நடக்கும் நேரத்தை கணக்கிட்டவனாய் தியாவின் கல்லூரி நோக்கி காரை செலுத்த, தியாவோ வீட்டில் மெத்தையில் கண் மூடி படுத்திருந்தாள்.

 

Advertisement