Advertisement

அத்தியாயம் 37:

காற்றோடு நானும் கதை பேசிக் கொண்டே

உன் சுவாசந்தனை என்னுள் வாங்கிக் கொண்டேன்

உன்னுள் நுழைந்து வெளி வந்த வெப்ப காற்று என்னில்

பூங்காற்றாய் இறங்கி நுரையீரலிலும் பூ பூக்கச் செய்ததடா!

நாட்கள் ஓட இதற்கு மேல் தாமதிப்பது சரியல்ல என்று நினைத்த இளா இன்று அனுவை பற்றி பேசியாக வேண்டும் என முடிவெடுத்தவனாய் சாலாவிடம் சென்று,“அம்மா நம்ம அனுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம்னு நினைக்குறேன் நீங்க என்ன சொல்றிங்க” என்று இளா தன் அன்னையிடம் கேட்க,

“இதுல நான் சொல்ல என்ன கண்ணா இருக்கு காலா காலத்துல அவளுக்கு ஒரு நல்லதை பண்ணிட்டா எனக்கும் நிம்மதியா இருக்கும் பார்க்க ஆரம்பிக்கலாம் அனுகிட்ட இதை பத்தி கேட்டுட்டியா?” என்றதும்,

“நேத்தே இதை பத்தி பேசிட்டேன்ம்மா. சரிம்மா எனக்கு வேலைக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்” என்று விட்டு புறப்பட்டவனிடம் வந்த தனு “செழியன் என்னையும் அப்படியே போற வழியில ஆஃபிஸ்ல விட்ருங்க” என்று கேட்க,

“சரி வா போகலாம்” எதற்காக தனு தன்னுடன் வருகிறேன் என்கிறாள் என்று இளாவிற்கு புரிந்தே இருந்தது.

அமைதியாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவனிடம் “அனுக்கு மாப்பிள்ளை பார்க்க போறதா அத்தைகிட்ட சொல்லிட்டு இருந்தீங்க” என்று கேட்க,

“ஆமா எனக்கு தெரிஞ்ச மேரேஜ் ப்யூரோ-ல அன்னைக்கே சொல்லிட்டேன் இன்னைக்கு ஒரு பையனை சொல்லிருக்காங்க அவரை ஈவ்னிங் மீட் பண்ணனும்” என்று சொல்ல,

“எதுக்கு இவ்வளோ அவசரப்படுறிங்க? அனுகிட்ட இதுல விருப்பமானு கேட்டீங்களா? அவளும் அண்ணனும்” என்று தொடங்கியவளிடம்,

“வேண்டாம் சின்னு இதைப் பத்தி நான் எதுவும் பேச விரும்பலை. அனு நான் சொன்னா கேட்டுப்பா?” என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தவன் தனுவை அவளது அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு தனது அலுவலகம் நோக்கி சென்றான்.

அலுவலகத்தை அடைந்து அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது இளாவின் தொலைப்பேசி ஒலிக்க, “ஹலோ” என்று ஆரம்பிக்க,

“இளா நான் அருண் பேசுறேன்” என்று சொல்ல, “சொல்லுங்க அருண்“என்றதும், “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் “என்று அருண் சொல்ல,

“நான் கொஞ்சம் பிஸி என்ன பேசணும் சீக்கிரம் சொல்லுங்க”

“எதை பத்தி பேசப் போறேனு தெரிஞ்சும் எப்படி பேசுறான்” என்று இளாவை காய்ந்தபடி , “போன்ல இல்லை நேர்ல பேசணும் ஈவ்னிங் நீங்க ஃப்ரீயா?”

“ஈவ்னிங்கா என் சிஸ்டர்க்கு ஒரு அலைன்ஸ் பார்த்துருக்கேன் அந்த மாப்பிள்ளையை பார்க்க வர்றதா சொல்லிட்டேனே. வேணும்னா ஆஃப்டர் செவன் இல்லை அவசரம் இல்லைனா நாளைக்கு பேசலமா?” என்று சொல்லிவிட்டு அருணின் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்க,

“நோ நோ இது ரொம்ப அர்ஜென்ட் ஒரு ஐந்து மணிக்கு மீட் பண்ணலாமா?” என்று பற்களை கடித்துக் கொள்ள,

“ஐந்து மணிக்கா?” என்று இரண்டு நொடி யோசிப்பது போல் தாமதம் செய்தவன் “சரி அப்போ நீங்க நேரா பெசன்ட் நகர் பீச்சுக்கு வந்திடுங்க” என்று இளா சொல்ல,

“ஓகே சி யூ தேர்” என்று அருண் வைத்துவிட, இளாவும் “ஒகே” என்றுவிட்டு அருணிடம் பேச வேண்டியதை நினைவுப் படுத்திக் கொண்டான்.

சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து விட்ட அருண் இளாவிற்காக காத்திருக்க, வேண்டுமென்றே அவனை காத்திருக்க வைத்து விட்டு, சிறிது நேரம் கழித்து அங்கு வந்து சேர்ந்தான் இளா.

“ என்ன அருண் வந்து ரொம்ப நேரமாச்சு போல” என்று கேட்க, அவனது கேலி நிறைந்த கேள்வியில் கடுப்பான அருண் மனதிற்குள் “எல்லாம் என் நேரம்டா” என்று முனகி விட்டு “ இல்லை ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் தான் ஆச்சு” என்று கூற,

“அவ்வளோ நேரம் தான் ஆச்சா? சரி சொல்லு அருண் என்ன விஷயமா என்கிட்ட பேசணும்னு வர சொன்ன?” என்றதும்,

எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் அருண் அமைதியாய் இருக்க, “அருண் அனுக்கு பார்த்திருக்க மாப்பிள்ளையை பார்க்க வர்றதா சொல்லிருக்கேன் நான் போகணும் சோ சொல்ல வர்றதை சீக்கிரம் சொன்னா நல்லா இருக்கும்” என்று விட்டு அருணின் முகம் பார்க்க,

“நீ அவனை பார்க்க போக வேண்டாம்” என்று அருண் சொல்ல,

“என்ன சொன்ன அருண்? கம் அகைன்” என்று கேட்க,

“எவனையோ பார்க்க போறேனு சொன்னல அவனை பார்க்க வேண்டாம்னு சொல்றேன்” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் சொல்ல,

“ஓ அது ஏன்னு நான் தெரிஞ்சுக்கலாமா அருண்?” என்றதும், “இங்க பாரு இளா நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல நானும் அனுவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம் இந்த கல்யாண பேச்சை இதோட நிறுத்திக்கோ” என்றான் அருண்.

“அப்படியா ஆனா நான் வேற மாதிரில கேள்விப்பட்டேன்” என்று நக்கலாய் வினவ,

“அது எங்களுக்குள்ள ஒரு சின்ன மிஸ் அன்டர்ஸான்டிங் அதை நான் சரி பண்ணிக்குறேன். இனி அவளுக்கு மாப்பிள்ளை பார்க்குறேனு சொல்லிட்டு எதுவும் பண்ணி வைக்காத?” என்று சொல்ல,

“பேச வேண்டியது எல்லாம் பேசி முடிச்சாச்சா? எனக்கு தெரியுறவரை தான் அது உங்களுக்குள்ள இருக்க பிரச்சனை எப்போ எனக்கு தெரிஞ்சுதோ அப்போதிருந்து இது என் தங்கச்சியோட பிரச்சனை சோ இதுல ஒரு அண்ணனா நான் சொல்றது தான் அவளுக்கு. இப்போ நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ அனுக்கு நான் பார்த்திருக்க மாப்பிள்ளையோட தான் கல்யாணம் நடக்கும் இதுல எந்த மாற்றமும் இல்ல” என்று கூறியவனின் குரலில் எஃகின் உறுதி வெளிப்பட,

கோபத்தில் இளாவின் சட்டையை பிடித்த அருண் “ஹே அவளும் என்னை விரும்புறாடா உனக்கு புரியுதா இல்லையா? அதையும் மீறி எதாவது பண்ணுன அவ்வளோ தான்” என்று சொல்ல,

“நான் சொன்னபடி இந்த கல்யாணம் நடக்கும் என்ன பண்ணுவ?” என்று கேட்க,

“நடக்க போற கல்யாணத்தை நிறுத்துவேன்” என்று அருண் சொன்னதும்,

“ஓ அப்போ உன் கல்யாணத்தை நீயே நிறுத்தப் போறனு சொல்ற” என்று இளா சொல்ல,

“ஆமா ஆ.. ஹே என்ன சொன்ன இப்போ?” என்று தான் தெளிவாகத் தான் கேட்டோமா என்ற நினைவில் இளாவிடம் கேட்டான் அருண்.

“மாப்பிள்ளை சாரே கல்யாணத்தை நிறுத்தப் போறிங்களானு கேட்டேன்” என்று கூறிய இளாவின் உதடுகள் மெலிதாய் புன்னகைக்க,

இன்ப அதிர்ச்சியில் இளாவின் சட்டையில் இருந்து தன் கைகளை எடுத்த அருண் அமைதியாய் இருக்க, “நான் செய்ததுக்கு என் தங்கச்சியை நீ காயப்படுத்தினது எனக்கு கோபம் தான் இருந்தாலும் உங்களுக்குள்ள இவ்வளவு நடந்த பிறகும் அனு உன் போட்டோவை பார்த்து ஃபீல் பண்ணிட்டு இருக்காடா, இப்படி இருக்கும் போது நான் எப்பேர் பட்ட பையனை பார்த்தாலும் அவ நிம்மதியா சந்தோஷமா இருக்க மாட்டானு எனக்கு தெரியும்.

சோ என் சைடுல இருந்து நான் உங்க கல்யாணத்தை ஏற்பாடு பண்றேன் அவளை சமாதனப்படுத்த வேண்டியது உன் பொறுப்பு” என்று இளா சொன்னதும், “தேங்க்ஸ் இளா மற்றதை நான் பார்த்துக்குறேன்” என்று அருண் சொல்ல,

“நான் அம்மாகிட்ட இதை பத்தி பக்குவமா பேசுறேன் நீயும் மாமாகிட்ட பேசிட்டு என்னைக்கு எங்க வீட்டுக்கு பேச வர்றிங்கனு சொல்லு” என்றதும், “சரி இளா” என்று விட்டு அருண் அங்கிருந்து நகர “ஹலோ மாப்பிள்ளை சார் இது அனுக்கு தெரிய வேண்டாம் சர்ப்ரைஸா இருக்கட்டும்” என்று சொல்ல, அருண் கட்டை விரலை உயர்த்தி காண்பித்து விட்டு சென்றான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காலையில் வினோத் – வெண்பாவின் திருமணத்திற்கு செல்வதற்காக கிளம்பியவள் கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருக்க அவளை பின்னால் இருந்து அணைத்தான் இளா.

“இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டிருக்கீங்க அல்ரெடி நேரமாகிடுச்சு” என்று கூறியவளை கண்டு கொள்ளாமல்,

“நீ என்னை சீக்கிரம் எழுப்பி விட்டிருக்கணும் இப்போ நேரமாச்சுனு சொன்னா நான் என்ன பண்றது” என்றபடி அவளது பின்னங் கழுத்தில் இதழ் பதிக்க,

“நான் எழுப்பலையா? எழுப்ப வந்தவளையும் இழுத்து படுக்க வச்சுட்டு” என்றவளை இடை மறித்தவன் “அது என்னோட கனவை” என்று சொல்ல வர,

“இருங்க இருங்க நானே சொல்றேன் உங்க கனவை நனவாக்கணும் அதானே. அது என்னைக்கு தான் நனாவாகுமோ கடவுளுக்கு தான் வெளிச்சம்” என்று சலித்துக் கொண்டாலும் அது அவளுக்கு பிடித்தே இருந்தது.

“இந்த ஜென்மத்துக்கு நனவாகாது அதனால நான் டெய்லி அதை நனவாக்க ட்ரை பண்ணுவேன்” என்று குறும்பு மின்ன கூறியவனின் இதழ் அவளது கன்னத்தில் பதிந்தது.

ஒரு வழியாக திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் உள்ளே வர, மேடையில் தாய் மாமன் செய்யும் சடங்கிற்காக அமர்ந்திருந்த வெண்பா சிறு தலை அசைப்பின் மூலம் அவர்களை வரவேற்க, இருவரும் புன்னகைத்துவிட்டு அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.

அந்நேரம் சஜனின் காரும் மண்டபத்திற்குள் நுழைந்தது. வண்டிகள் நிறுத்தும் இடத்தில் தன் காரை நிறுத்திவிட்டு முதலில் இறங்கி தியா இறங்குவதற்காக கதவை திறந்து விட்டவன் அவளை கைத்தாங்கலாக பிடித்துக் கொள்ள, அவன் கைகளை பிடித்துக் கொண்டபடி ஏழு மாத கருவை சுமக்கும் மேடிட்ட வயிறுடன் மெல்ல இறங்கினாள் தியா.

தன் கைப் பிடித்து நடந்து சென்ற சஜனிடம் “சஜூ கொஞ்சம் மெல்ல தான் நடங்களேன் உங்க ஸ்பீடுக்கு என்னால நடக்க முடியலை “ என்று தியா சொல்ல,

“இதுக்கு தான் சொன்னேன் வீட்டுல இருந்து ரெஸ்ட் எடு நான் மட்டும் போயிட்டு வர்றேன் சொன்னா கேட்டாதான உன் ஸ்பீடுக்கு நடந்தா அங்கே கல்யாணமே முடிஞ்சிடும் சாப்பாடு நேரத்திற்கு தான் உள்ளே போக போறோம்” என்றான் சஜன்.

அவனது கேலியில் கோபம் வர “உங்களுக்கு நான் வர்றது பிடிக்கவே இல்லை அதான் காலையில கிளம்பும் போதும் வேண்டாம்னு சொன்னீங்க இப்போ நான் மெதுவா நடந்து வர்றேனு சொல்றிங்க” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,

“ஹய்யோ டாலி உனக்கு கஷ்டமா இருக்குமேனு தான்டா சொன்னேன் நீ அதை இப்படி நினைச்சுகுற. எவ்வளோ மெதுவா நடக்கணுமோ அவ்வளவு மெதுவா போகலாம் சரியா? ஏன் தவழ்ந்து கூட போகலாம்” என்று சொல்ல,

தவழ்ந்து செல்வது போல் கற்பனை செய்த தியாவின் முகம் புன்னகைக்க, “என்ன நான் சொன்னதை இமாஜின் பண்ணி பார்த்தியா?” என்று கேட்க, “ஆம்” என்று சிறு குழந்தை போல தலையாட்டியவளை கண்ட சஜனின் முகத்திலும் புன்னகை தழும்பியிருந்தது.

உள்ளே நுழைந்ததும் தியா அங்கு தனு அமர்ந்திருந்ததை கண்டவள் அவளருகில் சென்று அமர, சஜனும் தியாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

அதற்குள் முகூர்த்த நேரமும் நெருங்கி விட, வெண் பட்டு வேட்டி சட்டையில் அழகனாக வினோத் வந்து அமர, ஐயரின் வழக்கமான “முகூர்த்தத்திற்கு நாழியாறது பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்ற குரலில்,

வினோத்தின் அக்கா வெண்பாவை அழைத்து வர, மணமகள் அறையில் இருந்து வெளியே வந்ததிலிருந்து தன்னருகே அமரும் வரை வைத்த கண் வாங்காமல் வெண்பாவையே பார்த்துக் கொண்டிருந்த வினோத்தை கண்ட அவனது நண்பர்கள், “டேய் வினோத் ஏற்கனவே சென்னையில வந்த மழையால மக்கள் நனைஞ்சு தண்ணியில் தத்தளிச்சது பத்தாதுனு இப்போ நீ விடுற ஜொள்ளுல வேற நனையணுமா? கொஞ்சம் அடக்கி வாசிடா” என்று அவனுக்கு கேட்குமாறு முணு முணுக்க,

அதை கேட்டு விட்ட வெண்பாவும் க்ளுக் என்று சிரித்து வைக்க, வெண்பாவை பார்த்து முறைத்தவன் நண்பர்களிடம் திரும்பி “துரோகிங்களா அசிங்கப்படுத்துறதுக்கு மட்டும் எங்கே இருந்து தான் வருவீங்களோடா?” என்று பற்களை கடித்துக் கொள்ள,

“மாங்கல்யம் தானம் பண்ணுங்கோ” என்ற ஐயரின் குரலில் அவர் பக்கமாக திரும்பிய வினோத் கைகளில் தரப்பட்ட பொன் தாலியை வெண்பாவின் கழுத்தில் முடிச்சிட்டு திருமண பந்தத்தில் தன்னை இணைத்து கொண்டான்.  

ஒவ்வொருவராய் மணமக்களுக்கு பரிசு பொருள்களை கொடுத்து வாழ்த்திவிட்டு செல்ல, “சின்னு போய் கிஃப்ட்டை கொடுத்துட்டு வந்திடலாமா” என்று இளா கேட்க,

“இருங்க” என்றுவிட்டு தியாவிடம் “நாம ஒண்ணா சேர்ந்து போலாமா?” என்று கேட்டாள் தனு.

தியாவும் சரி என்றுவிட்டு சஜனை பார்க்க அவனோ கம்பெனியில் இருந்து வந்திருந்த மேனஜரிடம் பேசிக் கொண்டிருக்க, “நீ போக்கா அவங்க வந்ததும் நான் வர்றேன்” என்றுவிட, இளாவும் தனுவும் மேடைக்கு சென்றனர்.

தங்களின் சார்பாக இருவருக்கும் மோதிரங்களை கொடுத்து இருவரையும் மாற்றிக் கொள்ள செய்தவர்கள் போட்டோவிற்கு  நின்றுவிட்டு கிளம்ப எத்தனிக்க, தனுவின் கை பிடித்த வெண்பா “ஏன்டி கரெக்ட் டைம்க்கு வந்திருக்கீங்க ஏன் மேடம்க்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர முடியாதோ” என்று கேட்க,

என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியாமல் “திடீர்னு ஒரு வேளை வந்திடுச்சுடி அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு தாலி கட்டுறதுக்குள்ள வந்துட்டோம்ல” என்று சொல்ல,

“என்ன வேலைனு எனக்கு தெரியாதா? புருஷனும் பொண்டாட்டியுமா கொஞ்சிட்டு ஆடி அசைந்து வந்திருப்பீங்க நான் சொல்றது சரிதான” என்று கேட்க,

முகம் சிவக்க “அதெப்படி தெரியும்” என்று உளறிக் கொட்டியவள் வெண்பா முறைப்பதை கண்டு ஹி ஹி என அசடு வழிய “ரொம்ப வழியுது துடைச்சுக்கோ” என்ற வெண்பாவிடம் “நாளைக்கு உனக்கு எப்படினு பார்க்க தானே போறேன். வினோத் அண்ணா அப்போதிருந்து உன்னை வெறிச்சு பார்க்குறதை நான் கவனிக்கலைனு நினைச்சியா?” என்று கேட்க, இப்போது வெட்கப்படுவது வெண்பாவின் முறையானது.

அவர்கள் சென்ற பின்பும் வெண்பாவின் முக சிவப்பு சற்றும் குறையாது இருக்க அதை ரசித்துக் கொண்டிருந்த வினோத் வெண்பாவை நெருங்கி நின்று “இப்படிலாம் வெட்கப்பட்டு என்னை உசுப்பேத்தாதடி” என்று அவளின் காதில் முணு முணுக்க, அவனது சூடான மூச்சுக் காற்று அவளை உரச அதில் ஏற்பட்ட சிலிர்ப்பில் வெண்பாவிற்கு காது மடலே சிவந்து போனது. மேலும் அவளை சீண்டிக் கொண்டிருக்க வினோத் நின்றிருந்த பக்கத்தில் இருந்த படியேறி சஜனும் தியாவும் வந்து கொண்டிருந்தனர். அவர்களை கண்டு கொண்ட வெண்பா “வினோ சஜன் சார் வர்றாங்க” என்று சொல்ல,

எப்போதும் போல் தன்னை வம்பிழுக்க சொல்வதாக நினைத்துக் கொண்டு “ வந்தா வரட்டும் அவருக்கு என்ன பயமா?” என்று விட்டு தனது லீலையை தொடர்ந்து கொண்டிருக்க,

“கங்க்ராட்ஸ் விஸ் யூ ஹேப்பி மேரிட் லைஃப்” என்ற சஜனின் குரலில் சட்டென்று அவன் புறம் திரும்பிய வினோத் “வாங்க சார் தேங்க்யூ” என்று அவன் தந்த கிஃப் ட்டை வாங்கி கொள்ள,

“என்ன வினோத் நாங்க வர்றதை கூட கவனிக்காமா வெண்பாகிட்ட ஏதோ தீவிரமா டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்க போல” என்று கேட்க,

“அது அது அப்படிலாம் ஒண்ணுமில்லை சார்” என்று இழுத்தவனை கண்டு “சரி சரி விடு வினோத் சமாளிக்க ரொம்ப கஷ்டப்படாதே” என்று புன்னகைத்து விட்டு அங்கிருந்து நகர,

“இதுக்கு தான் சொல்றதை கேட்கணும்னு சொல்வாங்க” என கூறிய வெண்பா வினோத்தை கேலிப் பார்வை பார்க்க, “நக்கலு இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு நைட் பார்த்துக்குறேன் உன்னை” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு முணு முணுக்க, வெட்கி சிவந்தாள் வெண்பா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“என்ன கண்ணா இதெல்லாம் சரிப்பட்டு வருமா?” என்று இளாவிடம் அருண் அனு கல்யாண சம்மந்தத்தை பற்றி கேட்க,

“இனி இதுல சரிப்படுமா இல்லையானு யோசிக்குறதுக்கு ஒண்ணுமில்லைம்மா” என்று சொல்ல,

“ஏன் கண்ணா அப்படி சொல்ற இந்த பையன் இல்லைனா வேற பார்க்கலாம்” என்றதும்,

“அம்மா அனுவும் அருணும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்புறாங்க” என்று விஷயத்தை சொல்ல,

மகள் காதலிப்பதாக கேள்விப்படும் எந்த தாய்க்கும் முதலில் ஏற்படும் கோபமும், ஏமாற்றமும் சாலாக்கும் ஏற்பட, “அனு இந்த வேலையெல்லாம் பண்ணி வச்சுருக்காளா? இன்னைக்கு வரட்டும் அவ ரெண்டுல ஒண்ணு கேட்குறேன்” என்று கோபமாக பேச,

“அம்மா ரிலாக்ஸ்ம்மா கோபப்ப்டாதீங்க அவ ஒண்ணும் தப்பானவனை தேர்ந்தெடுக்கலையே? இது அவ வாழப் போற வாழ்க்கை அவளுக்கு பிடிச்ச மாதிரி அமைச்சு குடுக்குறது தானம்மா முறை” என்று அவரை சமாதனப்படுத்த முயல,

“அவ சந்தோஷம் முக்கியம் தான் இல்லைங்கலை ஆனா இவ்வளவு வேலை பண்ணிட்டு இத்தனை நாளும் கமுக்கமா தான இருந்திருக்கா?” என்று கேட்க,

“அனு பாவம்மா என் கல்யாணத்தால அவ தான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டா” என்று அருணின் கோபம், அனுவின் வேதனை என அனைத்தையும் விளக்க,

அவன் சொன்னதும் இளாவின் திருமணத்திற்கு பிறகு எதையோ பறி கொடுத்தது போல் அனு நடந்து கொண்ட விதம் நினைவிலாட ஒரு தாயாய் மகளுக்காக அவரது இதயம் துடித்தது. இந்த திருமணம் நடக்காவிட்டால் மகள் இன்னும் உடைந்து போவாள் என்று நினைத்தவர், “சரிடா எனக்கு இதுல சம்மதம்” என்றுவிட,

“தேங்க்ஸ் மா “என்று அவரை கட்டி அணைத்தவன் “இது அனுக்கு தெரிய வேண்டாம்மா சஸ்பென்ஸா இருக்கட்டும்” என்று சொல்ல சரி என்றார்.

அந்த வார இறுதியில் அனுவை பெண் பார்க்க வருவதாக இருந்தது. பெண் பார்க்கும் தினத்திற்கு முந்தையை நாள் இரவு அனுவின் அறைக்கு வந்த தனுஷா “அனு நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்களாம் உங்க அண்ணன் சொல்ல சொன்னாங்க” என்று விட்டு அவள் முகம் பார்க்க,

அதை கேட்டு அதிர்ந்த முகத்துடன் தனுவை ஏறிட்டு பார்த்தவள் பின்பு என்ன நினைத்தாலோ “சரி அண்ணி எனக்கு ட்யர்டா இருக்கு போய் தூங்குறேன்” என்று விட்டு படுத்துக் கொள்ள,

“என்ன இவ ஒரு ரியாக்ஷனும் காட்ட மாட்டேங்குறா?” என்று நினைத்து குழம்பியபடி அறைக்குள் நுழைந்தவளை கண்ட இளா,

“என்ன சின்னு யோசனையெல்லாம் பலமா இருக்கு என்ன விஷயம்” என்றவனிடம் அனு நடந்து கொண்டதை கூற,

“அவ கண்டு பிடிச்சுருப்பா அதான் சைலன்ட்டா இருக்கா” என்று சொல்ல

“அது எப்படி தெரியும் நீங்க சொல்லீட்டீங்களா?” என்று கேட்டவளின் தலையில் செல்லமாக கொட்டு வைத்தவன், “இந்த முட்டை கண்ணை வச்சு உருட்டி உருட்டி கதை சொல்லிருப்ப” என்றவன் அவளின் இமைகளில் இதழ் பதிக்க,

அவனை விலக்கி முறைத்து பார்த்தவளிடம் “அதுமட்டுமில்லை வேற யாராவது பொண்ணு பார்க்க வர்றதா இருந்தா உன் முகம் இவ்வளவு பிரகாசமாவா இருக்கும் அதை வச்சே கண்டுபிடிச்சுருப்பாடி என் மக்கு பொண்டாட்டி” அவள் நெற்றியில் முட்டியவன் “ஆனா ஒண்ணு நாளைக்கு உங்க அண்ணன் என்ன பாடு படப் போறானோ தெரியலை” என்று சொல்ல,

“அதெல்லாம் அண்ணன் சமாளிச்சுப்பான் எங்க எப்படி நடந்துக்கணும்னு அவனுக்கு தெரியும்” என்று பெருமையாக சொல்ல,

“அப்போ எனக்கு எப்படி நடந்துக்கணும்னு தெரியாதுனு சொல்ற” என்றவனிடம் “ச்ச அப்படிலாம் இல்லை” என்றவள் அவன் முகம் பார்க்க அப்போது தான் அவனது பார்வையின் மாற்றத்தை உணர்ந்து கொள்ள, அங்கு பேச்சு சத்தத்திற்கு வேலையில்லாமல் போனது.

Advertisement