Advertisement

அத்தியாயம் 2:

கரு மேகம் கூட தன் பாரத்தை

அழுது தீர்த்துக் கொள்ளும்

ஆணாகி போனதாலோ என்னவோ

அழக் கூட முடியாமல் தவிக்கிறேன் நான்!

விடாமல் அடித்துக் கொண்டிருந்த அலாரத்தை எட்டி எடுத்து அணைத்து சோம்பலை முறித்தவாரே எழுந்து அமர்ந்தாள் அனன்யா. பின்னர் தன் உள்ளங்கையை விரித்து அதில் கண்விழித்தவள் நேராக குளியலறை சென்று தன் காலை கடன்களை முடித்து வெளியே வந்து இளமஞ்சள் குர்திக்குள் தன்னை நுழைத்துக் கொண்டவள் அடர் நீல நிற ஜீன்ஸை அணிந்து கொண்டாள்.

நல்ல நிறமும், பூசினாற் போன்ற உடற்கட்டும், கொலு கொலு கண்ணமும் அழகுக்கு அழகு சேர்க்க சுருட்டையாய் கிடந்த முடியை ஹேர் ட்ரையரில் காய விட்டவள் அதை லேசாக சீவி அப்படியே முதுகில் படர விட்டாள்.

முகத்தில் தெரிந்தும் தெரியாதது போல் கறுப்பு நிறத்தில் சிறிய பொட்டு ஒன்றை வைத்துக் கொண்டிருக்கும் நொடியில் “அனும்மா டிபன் ரெடி சாப்பிட வா “என்று அவளது அன்னை விசாலாட்சி அழைக்க “இதோ வர்றேன் மா” என்றபடி ஹேண்ட் பேக்கையும் தனது வெள்ளை நிற கோர்ட்டையும் ஸ்டெதஸ்சையும் எடுத்தவள் தன் அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

அவளை கண்ட விசாலாட்சி “ஏன்டி எத்தனை தடவை சொல்றது முடியை இப்படி விரிச்சு போடாதனு பார்க்கவே சகிக்கலை. ஒழுங்கா சீவி ஒரு பின்னல் போட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்..?”

“கிழிஞ்சது போம்மா. நான் மட்டும் அப்படி போனேன் அப்புறம் எல்லாரும் என்னை அனன்யானு கூப்பிட மாட்டாங்க அறுக்காணினு தான் கூப்பிடுவாங்க”

“அதெல்லாம் யாரும் அப்படி கூப்பிடமாட்டாங்க. சொல்றவங்களை என்கிட்ட கூட்டிட்டு வா நான் கேட்குறேன் அவங்களை”

“என்னனு கேட்ப நிஜமாகவே அப்படியா இருக்குனா? ஏன்மா இந்த கொலைவெறி உங்களுக்கு. இப்போ எல்லாம் இது தான் மா ஸ்டைல்”

“ஹேய் என்னடி காலங்காத்தால கொலை கிலைன்னுட்டு. என்ன ஸ்டைலோ மாய ஸ்டைலு உங்கிட்ட பேசுனா என் தொண்டை தண்ணீ தான் வத்தி போகும் வா வந்து சாப்பிடு”

“ஹாங் அது என்ன செல்ல அம்மா. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்”

“ஒரு வேலை செய்யிறது இல்லை இதுல ஹோட்டல மெனு கேட்குற மாதிரி என்ன ஸ்பெஷல்னு கேள்வி.ஒழுங்கா சாப்பிட்டு இடத்தை காலி பண்ணு”

“என்ன சாலா இப்படி சொல்லிட்ட இன்னைக்கு உன் செல்ல மகன் வரப் போறான்ல அதான் வித விதமா சமைச்சுருப்பியேனு கேட்டேன் இது ஒரு குத்தமா?”

“இன்னைக்கு அவன் ப்ரெண்ட் மதிய சாப்பாட்டுக்கு அவனை வீட்டுக்கு கூப்பிட்டுருக்கானாம். அதனால அவன் நாளைக்கு தான் வருவானு ஃபோன் பண்ணி சொல்லிட்டான்”

“அதான என்னடா வெறும் இட்லியும் சட்னியும் மட்டும் தட்டுல முழிக்குதேனு பார்த்தேன்”

“ஓவரா பேசாதடி. மூனு மாதம் பிள்ளை வீட்டு சாப்பாடு இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டுச்சோ? “

“அய்யோடா இதுக்கு முன்னால் கூட ஹாஸ்டல்ல தான் சார் தங்கி இருந்து படிச்சாரே அப்புறம் என்னவாம் அதெல்லாம் எந்த கடையில் என்ன ஸ்பெஷல்னு உன் புள்ளை மினி டேட்டா ஃபேஸே வச்சிருப்பான்”

“உனக்கு ரொம்ப தான் கொழுப்பு இப்போ பேசாம சாப்பிட போறியா இல்லையா”

“அய்யோ என்னை பெத்த ஆத்தா மலையேறுறதுக்குள்ள மீ எஸ்கேப்” என்றபடி மூன்று இட்லிகளை உள்ளே தள்ளியவள் அன்னையின் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்தவாறு கிளம்பினாள்.

மருத்துவமனை ஊழியர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பில் இருந்து தனது ஹீரோ ஹோன்டாவில் கிளம்பிய அருண் அடுத்த பத்தாவது நிமிடம் அரசு மருத்துவமனையை அடைந்திருந்தான். மாநிறமும், சிரித்த முகமும் சட்டையை மணிக்கட்டு வரை அணிந்து அதற்கு மேல் ஒரு  வெண்ணிற கோர்ட்டுமாய் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் ஒரு மருத்துவனுடைய கம்பீரத்துடன் வலம் வந்தவனை காணும் ஒவ்வொரு கண்ணும் அவனை ரசிக்க தவறியதில்லை.

அனன்யாவுடன் சேர்ந்து அவளது தோழிகளும் அரட்டை அடித்து கொண்டிருக்க ஒரு கண் அவர்களின் பேச்சில் இருந்தாலும் மற்றொரு கண்ணோ தன்னவனை சைட் அடிக்கும் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தது.

இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று

இதுவரை இதுபோலே நானும் இல்லையே

கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று

முழுகிட மனமும் பின் வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது

என்னை விட்டு மெதுவாய் அது போக கண்டேனே

ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்தவனின் காதில் சிரிப்பு சத்தம் விழ சத்தம் வந்த திசையை நோக்கிய போது பேஷன்ட்டுகள் இருந்த அந்த காரிடாரின் ஒரத்தில் கும்பலாய் அரட்டை அடித்துக் கொண்டிருந்த அனன்யா மற்றும் அவளது தோழிகளின் பட்டாளம் கண்ணில் பட,

அவர்களின் அருகில் வந்தவன் “ஹலோ கேர்ள்ஸ் இது தான் நீங்க ட்ரைனிங் எடுக்குற லட்சணமா? பேஷன்ட்ஸ் இருக்காங்க அவங்களை ஓய்வு எடுக்க விடாம இப்படி தான் சத்தம் போட்டு பேசி சிரிச்சுட்டு இருப்பீங்களா? பேஸிக் சென்ஸ் கூட இல்லை நீங்களாம் என்னத்தை தான் படிக்கிறீங்களோ? இந்த லட்சணத்துல இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க பேஷன்டை ட்ரீட் பண்ண போறீங்க? கொஞ்சமாவது பொறுப்போட இருங்க” அனைவரும் தலை குனிந்து நிற்க அனன்யா மட்டும் அவனது கோபத்தை கூட இமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

அதை கண்டும் காணாதது போல் இருந்தவன் அவர்களை பார்த்து “போங்க போய் எதாவது வேலையை பாருங்க” என விரட்ட அனைவரும் கலைந்து சென்றனர். அனன்யா அவனை கடந்து செல்லும் போது அவள் கையை பிடித்து அந்த காரிடாரின் மறைவுக்கு இழுத்து சென்றவன்,

மெல்ல மெல்ல அவள் அருகில் வந்து அவள் காதருகே குனிந்தவன் “என்னை சைட் அடிக்கிறதோட மட்டுமில்லாம கொஞ்சம் வேலையும் பார்த்தா நல்லாயிருக்கும்” என்று கூற

“அடிப்பாவி இதுக்கு தான் இவ்வளோ பில்டப்பா? அனு உனக்கு அதிர்ஷ்டமே இல்லைடி இப்படி ஒரு மக்கு டாக்டரை லவ் பண்ணி தொலைஞ்சிருக்கியே”என்று மனதுக்குள் முணு முணுத்தவாறு அவனை ஏறிட்டு பார்க்க

அவளின் மனதை படித்தவனாய் அவளை பார்த்து கண்ணடித்து காற்றில் உதடு குவிக்க அவனது செய்கையில் வெட்கபட்டவள் ஓட முயற்சிக்க அருணோ அவள் ஓட முடியாதபடி அவளது கைகளை இறுக பற்றியிருந்தான்.

“அய்யோ என்ன நீங்க இப்படிலாம் பண்றீங்க விடுங்க யாராவது பார்த்திர போறாங்க”

“ஏன்டி இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை. இப்படி பண்ணலைனு தான மனசுக்குள்ள எனக்கு அர்ச்சனை பண்ணுன அப்புறம் ஒண்ணும் தெரியாத மாதிரி நல்லா நடிக்குறடி”

நான் மனசுக்குள்ள தான பேசுனேன் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று நினைத்தவாறே “அவ்வளோ சத்தமாவா கேட்டுச்சு “என அவனையே திருப்பி கேட்க

“அடிங்க” என அவன் விளையாட்டாய் கை ஓங்க அந்த கேப்பில் அவனிடமிருந்து கைகளை விடுவித்து கொண்டவள் அவனுக்கு பழிப்பு காட்டியவாறு ஓடினாள். அதை கண்டு புன்னகைத்தவன் தன் வேலைகளை கவனிக்கலானான்.

@@@@@@@@@@@@@@

அந்த புகழ் பெற்ற கல்லூரியின் உள்ளே  நுழைந்தவன் பார்க்கிங் ஏரியாவை நோக்கி தன் காரை செலுத்தினான். அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு திரும்பவும் தனுவும், தியாவும் தங்கள் ஆக்டிவா ஸ்கூட்டியில் உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.

அதற்குள் அவனை வரவேற்க கல்லூரி முதல்வர் வந்துவிட அவர்களுடன் மேடைக்கு சென்றான். மேடையேறியவன் தன்னை போல் அங்கு வந்திருந்த சில விருந்தினர்களிடம் மரியாதை நிமித்தமாய் கை குலுக்கிவிட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தான்.

அமர்ந்திருந்தவனின் மனதில் ஏதோ ஒரு இனம்புரியா உணர்வு மெல்லிய சாரலாய் வீச அதில் லயித்திருந்தவன் கல்லூரி முதல்வர் பேச ஆரம்பித்ததும் நினைவிற்கு வந்தவன் அந்த ஆடிடோரியத்தை ஒருமுறை கண்களால் வலம் வர தொடங்க,

வலம் வந்தவனின் கண்கள் ஒரிடத்தில் நிலைபெற தான் காண்பது கனவா இல்லை நனவா? என மனதிற்குள் போராட்டமே நடக்க நிஜம் தான் என்று தெளிந்தவனின் மனம் குத்தாட்டம் போடாத குறையாய் மகிழ்ச்சியில் பொங்கியது.

அவள் தான் அவளே தான் எத்தனை நாளாய் யாரவள், எங்கே இருக்கிறாள். இனி அவளை பார்ப்போமா? இல்லையா என தவித்திருப்பான். இதோ அவன் தவிப்புகளுக்கு கை மேல் கிடைத்த பலனாய் அவளை பார்த்தே விட்டான். இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தவனின் மனம் அவளை முதன் முதலில் பார்த்த தினத்திற்கு மெல்ல நடை போட்டது.

சஜன் மேலை நாட்டில் தன் முதுகலை படிப்பை முடித்திருந்தாலும்

பெண்களிடம் எல்லையுடனே பழகுவான். அவன் நண்பர்கள் பலரும் குடியும் கும்மாளமுமாய் இருந்தாலும் அதிலெல்லாம் அவனுக்கு நாட்டம் இருந்ததில்லை. பெண்களே வழிய வந்து பழகினாலும் தானும் நெருங்கியதில்லை அவர்களையும் நெருங்க விட்டதில்லை.

அப்படி தனக்கென ஒரு எல்லையுடனும், அதே சமயம் மற்றவர்களிடம் தன் கொள்கைகளை திணிக்காமலும் நட்புடனே பழகுவான். தனது படிப்பை முடித்துவிட்டு இந்தியா வந்தவன் தன் தந்தையின் கம்பெனியில் உதவியாய் இருக்க தொடங்கிய நேரம் அசோஷியன் மீட்டிங்கிற்காக சென்றவன் பெசன்ட் நகர் சிக்னலை கடந்து சென்ற நேரம் ரெட் சிக்னல் விழவே காரை நிறுத்தி காத்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது காரை ஒட்டினாற் போல தன் ஸ்கூட்டியில் வந்து நின்றாள் ஒரு இளம்பெண். அவளை முதலில் கவனிக்காதவன் தன் ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டே இருக்க ஏதோ ஒன்று உந்த விண்டோவின் வழியே அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் அந்த இளம்பெண் பட  ஏனோ அந்த பெண்ணையே உற்று நோக்கி கொண்டிருந்தான்.

பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள் அவள் உதடுகள் முணுமுணுப்பது கண்டு கொண்டுவிட விண்டோவை இறக்கியவனின் காதுகளில்

அழகே அழகே எல்லாம் அழகே

அன்பின் விழியில் எல்லாம் அழகே

மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு

மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு என்று

இனிமையான குரலில் பாடுவது கேட்க அப்படியே கண்மூடி மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தான் சஜன். சிறிது நேரம் கழித்து பாட்டு கேட்பது நின்றுவிட கண்களை திறந்தவனின் பார்வையில் கிரீன் சிக்னல் விழுந்து அவள் அவனை கடந்து சென்று கொண்டிருப்பது தென்பட தன்னுடைய பொருள் ஏதோ ஒன்றை தவறவிட்டது போல் உணர்ந்தான்.

இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருக்க ஒரு வாரம் கழித்து அதே சிக்னலில் சாலையின் மறுபுறம் இருந்த கடையில் இருந்து பொருளை வாங்கி கொண்டு சாலையை கடந்து சென்றவளை கவனித்துவிட்டவன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருக்க காரில் ஒடிக் கொண்டிருந்த மியூசிக் பிளேயரில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடல் ஒலித்தது

யார் இந்த முயல் குட்டி

உன் பேர் என்ன முயல் குட்டி

வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்

வீதி கடக்கவும் துண்டு மேகமாய்

யார் இந்த முயல் குட்டி

உன் பேர் என்ன முயல் குட்டி

அதன் பின்பு ஒவ்வொரு முறை அந்த சிக்னலை கடக்கும் போதும் ஒரு நிமிடம் சுற்றும் முற்றும் பார்க்காமல் வந்ததில்லை ஆனால் அவளை தான் அவனால் காண முடியவில்லை. ஆனால் இன்று பார்த்தே விட்டான்.இப்படி ஒரு சந்தர்பத்தில் அவளை பார்ப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை. தன்னை விருந்தினராக அழைத்த கல்லூரி முதல்வருக்கு மனதில் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்க

கல்லூரி முதல்வர் பட்டமளிப்பு விழாவினை தொடங்கி வைக்க கல்லூரியிலேயே முதல் மாணவியாக வந்த தனுஷா தாமோதரனை மேடைக்கு அழைக்கிறோம் என அவளுக்கு அழைப்பு விடுவிக்க தியா தன் அக்காவை ஒருமுறை கட்டி அணைத்து விடுவிக்கவும் தனுஷா மேடை ஏறினாள்.

மாணவ மாணவிகளின் கரகோஷத்தோடு அவள் மேடையேற இரு கைகள் தன்னையும் அறியாமல் கை தட்டியது. சஜன் அவள் பெயரை பத்தாவது முறையாக ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

அவள் வாங்கி சென்றபின் அவனை பேச அழைத்தது மற்றவர்கள் பேசியது என அனைத்திலும் இயந்திர கதியில் கலந்து கொண்டவன் விழா முடிந்ததும் முதல்வர் அவனை மதிய உணவிற்காய் அழைக்கும் போது தான் நினைவிற்கே வந்தான்.

ஆசியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள், விருந்தினர்கள் என அந்த உணவுக்கூடமே கலை கட்டியிருக்க ஃப்பே முறையில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொண்டு அனைவரும் குழுக்களாக சாப்பிட்டுக் கொண்டிருக்க தனுவும் தியாவும் தங்கள் தோழிகளின் கூட்டத்தில் சங்கமித்திருக்க ஒரு ஓரத்தில் இருந்து இவர்களை வட்டமிட்டுக் கொண்டிருந்தன அவனது விழிகள்.  

செனோரீட்டா வருவாள்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

Advertisement