Advertisement

அத்தியாயம் 14:

காதலித்தவள் மனைவியாகி

விட்டாள் வேறு ஒருவனுக்கு

நான் காதலனாகவே நின்றுவிட்டேன்

அவளின் நினைவுகளோடு!

விசாலாட்சியால் இன்னமும் தன் மகன் செய்ததை நம்ப முடியவில்லை. தன் அருகே நின்றிருந்த அனுவை அழைத்தவர் “அனு போய் பைகளை எடுத்துட்டு வா… கிளம்பலாம்” என்றார்.

என்ன செய்வது அருணை எப்படியாவது சந்தித்து சமாதனப் படுத்தலாம் என்றால் அன்னை கிளம்ப சொல்கிறார்களே என்ற யோசனையில் நின்றிருந்தவளை தன் அண்ணனின் குரல் நினைவுக்கு இழுத்து வந்தது.

“அம்மா ஏன்மா என்னை இப்படி கஷ்டப்படுத்திறீங்க..?” என்ற இளாவின் கண்களில் அடிபட்ட வலி தெரிய,

“இல்லை இளா நாங்க கிளம்புறோம் அது தான் நல்லது. நீ சொன்னியே ஏன் கஷ்டப்படுத்திறீங்கனு உன்னை மேலும் காயப்படுத்திடுவேனோ என்ற பயத்துல தான் கிளம்புறேன்” என்று சொல்ல,

இளாவின் பார்வையில் ஏன் என்ற கேள்வி தொக்கி நிற்க, அவரே தொடர்ந்தார். “இவ்வளவு நேரம் ஒரு பொண்ணா, நானும் பொண்ணை பெத்திருக்கேன்ற இடத்துல இருந்து பேசிட்டேன். அதே சமயம் ஒரு அம்மாவா உன்னை கண்டிக்கிறதுக்காக பேசிட்டேன். என்ன தான் உன் மேல கோபமும் ,வருத்தமும் இருந்தாலும் நீ வேதனைப்படுறதை பார்க்க முடியலைடா. அதான் கிளம்புறோம்” என்றபடி எழுந்தவர்,

“இளா ஒரு தப்பை செய்திட்ட அதை சரி பண்ற பொறுப்பு உனக்கிருக்கு. அதை செய்றதுக்கு முன்னாடி அவங்ககிட்ட மன்னிப்பு கேளு” என்றுவிட்டு அனுவை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

திருமணமும் முடிந்துவிட்டது .சஜனின் நிலையோ சொல்லவே வேண்டாம். மனம் நெருப்பில் நிற்பதை போல உஷ்ணம் தாங்காமல் புழுங்கிக் கொண்டிருந்தது. எவ்வளவு எதிர்ப்பார்த்தேன் இந்த நாளை. எத்தனை கனவுகள் எத்தனை கற்பனைகள் எல்லாவற்றையும் நிமிடத்தில் தகர்த்துவிட்டானே?என்று உளன்று கொண்டிருந்தவனை கலைத்து ஐயரின் குரல்.

“பெரியவாள்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க” என்று சொல்ல,

“சாபம் அடைந்த வாழ்விற்கு ஆசிர்வாதம் ஒரு கேடா “என்று மட்டுமே சஜனால் நினைக்க முடிந்தது. இயந்திர கதியில் அனைத்து சடங்களையும் செய்தான்.

சஜனை கரம் பிடித்து அவனோடான தன் வாழ்க்கையை தொடங்கிய தியாவோ கைகூடிய காதலை கண்டு மகிழ்ச்சி கொள்வதா? இல்லை மாலை சூடியவனின் மனதில் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததை கண்டு அழுவதா? என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

ஆம் தியா உருகியது சஜனுக்காக தான். ஒரு தலை ராகமாய் அவளுள் ஊற்றெடுத்த காதல் இன்று காதலனின் கைகளில் வந்து சேர்ந்ததை நினைத்து நிம்மதி அடைந்தாலும் இப்படி ஒரு சூழலில் அவனை கைப் பிடிப்போம் என நினைத்திருக்கவில்லை.

அன்னையென தாங்கிய அக்காவின் திருமணம், உரியவனிடம் சொல்லாத காதலுக்காய் கலைக்க மனம் இல்லாமல் உள்ளுக்குள் செத்துக் கொண்டிருந்த அவளுக்கு தான் விரும்பிய வாழ்வு கிடைத்துவிட்டது தான் எப்படி கிடைத்தது? தடம் மாறிப் போன சகோதரியின் வாழ்வின் மூலமாக அல்லவா இதை நினைத்தால் நடந்த நிகழ்ச்சியை மனதார ஏற்க முடியுமா?

துணை நின்று திருமண பந்தத்தை நடத்தி செல்ல வேண்டிய கணவனே சூழ்நிலை கைதியாய் தன்னை மணந்திருக்கும் போது மன வேதனையை யாரிடம் சொல்லி ஆறுதலை தேட முடியும்.

மணமேடையில் சஜனும் தியாவும் அமர்ந்திருக்க, உறவினர்கள் ஒவ்வொருவராய் வந்து வாழ்த்திவிட்டு செல்ல, சஜனின் அப்பா வழி பாட்டி ஒருவர் வர மரியாதை நிமித்தமாய் சஜன் இருக்கையில் இருந்து எழ, அவன் எழுந்த்தும் சட்டென்று தியாவும் எழ முயற்சிக்க புடவை தடுக்கி விழ போனவள் சுதாரித்து சஜனின் கையை பிடிக்க, கையை உதற முற்படும் முன்னே அந்த முதியவர் அருகில் வந்துவிட அமைதியானான்.

அவர் சென்ற பின்பும் சஜன் கைகளை விடாமல் ஏதோ யோசனையில் நின்றிருந்த தியாவை கண்டு கடுப்பானவன் “ஹேய் இப்போ எதுக்கு என் கையை பிடிச்சுட்டு நிற்குற கையை விடு ரெடிகுலஸ்” என்று வார்த்தைகளை அவளுக்கு மட்டும் கேட்குமாறு கடித்து துப்ப, தியா விக்கித்து போய் நின்றாள்.

திருமணம் முடிந்த அடுத்த நொடி மேடையில் இருந்து நகர்ந்து அங்கிருந்த அறையினுள் புகுந்து கொண்டாள் தனுஷா. அவளும் என்ன செய்வாள் காலையில் இருந்து கண்ணில் பட்ட உறவுகளுக்கெல்லாம் பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து போனாள். ஒன்றும் இல்லா விஷயத்திற்கே கண் காது வைத்தும் பேசும் உலகிற்கு அழகான பொம்மை போலான விஷயம் கிடைத்தால் சும்மா விடுவார்களா? தனுவை பொழுது போக்கு அம்சமாக்கி பொழுதை கழித்துக் கொண்டிருந்தார்கள்.

அதையெல்லாம் பல்லை கடித்துக் கொண்டு திருமணம் முடியும் வரை பொறுத்திருந்தாள். திருமண வைபோகம் முடிந்த அடுத்த நொடி அங்கிருந்து சென்று விட்டாள்.

அறையினுள் சென்றவளுக்கு தன்னை இந்த நிலைக்கு தள்ளிய இளா மீது கோபம் எழுந்தது. சஜனுடன் தனக்கு திருமணம் நின்றதை கூட அவள் பெரிதாக நினைத்து வருந்தவில்லை. ஆனால் தன் தங்கை என்ன செய்தாள் அக்காவிற்கு நடக்க இருந்த திருமணத்தில் தான் பணையம் வைக்கப்பட்டது எவ்வளவு பெரிய மனவலி என தங்கையின் காதலை பற்றி அறியாதவளாய் மனதில் புலம்பிக் கொண்டிருந்தாள்.

தங்கைக்காக அவள் யோசித்து நொடியில் தான் சஜனின் நிலையும் அவளுக்கு புரிந்துது. அவன் எவ்வளவு கனவு கண்டிருந்தானோ? இனி அவனுக்கும் தன் தங்கைக்குமான வாழ்வு எப்படி அமைய போகிறதோ? என்று வருந்தினாள்.

அந்த நேரம் அங்கு வந்த கயல்விழி “என்னம்மா தனுஷா இங்க வந்து தனியா உட்கார்ந்திருக்க” என்றபடி தோளை தொட்டு திருப்ப, அவளது கலங்கிய கண்களை கண்டு பதறியவராய் “என்னம்மா நீ இந்த சமயத்துல தான் தைரியமா இருக்கணும். நீ இப்படி இருக்கதை பார்த்தா உங்க அப்பா, அண்ணன் தியா ரொம்ப வருத்தப்படமாட்டாங்களா? சொல்லு. கஷ்டம் தான் இல்லைனு சொல்லலை. கடவுள் மேல பாரத்தை போடு கண்டிப்பா எல்லாம் நல்லபடியா நடக்கும் சரியா கண்ணை துடைச்சுக்கோ. உன் தோழி வெண்பா வெளிய உன்னை தேடிக்கிட்டு இருக்கா வா போகலாம்” என்று அவளை அழைத்து சென்றார்.

தனுஷாவை கண்ட வெண்பா “ஹேய் தனு என்னடி முகம் எல்லாம் இப்படி வாடி போய் இருக்கு. இன்னும் நடந்ததையே நினைச்சுட்டு இருக்கியா?”

அவளை நோக்கி ஒரு விரக்தி புன்னகை சிந்திய தனு “வேற என்னடி பண்ண மறக்குற மாதிரியா எல்லாம் நடந்திருக்கு”

“நீ இப்படி பீல் பண்ணிட்டு இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா? சொல்லு. அங்க பாரு தியா உன்னை தான் பார்த்துட்டு இருக்கா நீ வருத்தப்படுறதை பார்த்தா அவ எப்படி சந்தோஷமா இருப்பா? அக்கா வருத்தப்படுறாளேனு அவ நினைச்சா புது வாழ்க்கையை அவளால சந்தோஷமா ஆரம்பிக்க முடியுமா?“ என்று சொல்ல, தங்கையின் வாழ்வு என்றதும் சற்று தெளிந்தவாறு முகத்தை வைத்துக் கொள்ள முயன்று தோற்றுப் போனாள் தனுஷா.

அங்கு ஒரு ஓரத்தில் இருந்த இருக்கையில் வெண்பாவும் தனுஷாவும் அமர்ந்து கொள்ள, தனுஷாவின் தூரத்துல உறவுப் பெண்மணி அவர்கள் அருகில் வந்தார்.

“என்னடிம்மா தனு உன்னை அப்போதிருந்து தேடிக்கிட்டு இருக்கேன்…? நீ என்னடானா இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்க…” என்று ஆரம்பிக்க,

“ஆஹா கிழவி எதையோ கொழுத்தி போட்டு பத்த வைக்க பார்க்குறாளே முதல்ல கொசு மருந்து அடிச்சு இந்த மாதிரி ஆளுங்களை போட்டு தள்ளணும்” என்றவாறு முணு முணுத்தாள் வெண்பா.

இது இடத்தை காலி பண்ற வரை நாம தனுவை விட்டு நகரக் கூடாது என்று நினைத்துவளாய் அமர்ந்திருக்க,

அந்த பெண்மணியோ “ஏன்மா கொஞ்சம் அந்த சேர்ல மாறி உட்காரேன் நான் தனுகிட்ட பேசணும்” என்று சொல்ல,

“கிழவிக்கு வசதியா இருந்து கொழுத்தி போட்டா தான் மதியம் சாப்பிட போற சோறு செரிக்கும் போல” என்றுவிட்டு மாறி அமர்ந்த நேரம், ஏதோ ஒரு வேலையாய் அருண் அழைக்க போவதா வேண்டாமா? என்று குழம்பிய நேரம்,

அவளது அவஸ்தையை உணர்ந்த தனு “வெண்..! நீ போ அண்ணன் கூப்பிடுறான்ல என்னனு கேளு..?” என்று கண்களால் சைகை செய்ய “தனு சமாளித்துக் கொள்வாள்” என்று நினைத்தவளாய் அருணை நோக்கி சென்றாள்.

அந்த பெண்மணி மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த இன்னொருவரை “அம்சா அக்கா…! இங்க வாங்க..” என்று தனுஷாவின் வாழ்வில் கும்மியடிக்க அவரையும் கூட்டு சேர்த்தார்.

அம்சா என்ற பெண்மணியும் ஏதோ ஆஸ்கார் விருது குடுக்க அழைத்துது போல் அத்தனை வேகம் அவரது நடையில் “வாம்மா மின்னல்” என்பது போல் அழைத்த மறுநொடி அங்கே பிரசன்னமானார்.

“என்ன கலா அக்கா..? எதுக்கு கூப்பிட்டீங்க..?” என்று ஒன்றும் அறியாதது போல் அவர் அருகில் அமர்ந்தார் அம்சவள்ளி.

“சும்மா தான்..! நம்ம தனு உட்கார்ந்துட்டு இருந்தா அதான் பேசலாமேனு கூப்பிட்டேன்…” என்று தொடங்க போகும் கலகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுவிட,

“தனு நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டோம்…. ஆனா கேட்டது எல்லாம் நம்புற மாதிரி இல்லைடிம்மா..?” என கலா என்பவர் என சொல்ல,

அம்சவள்ளி அம்மாவோ “ஆமாக்கா படத்துல காட்டுன கதையாவுல இருக்கு” என்று அவருக்கு ஒத்தூத,

“சரியா சொன்ன அம்சா…. உங்களுக்குள்ள பழக்கம் ஏதும் இல்லாமையா அந்த பையன் உன்னை கடத்துனான்..?”

“இப்போ உள்ள பிள்ளைகளை நம்ப முடியுறதே இல்லை…. அமைதியா இருக்குதுங்க ஆனா அங்க தான் அத்தனை சேதியும் இருக்கு…” என்று உலகை திருத்த வந்த உத்தமர்களாக கவலைப்பட, தனுவோ பதில் ஏதும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.

தாங்கள் தேடி வந்து பேசியும் தகவல் கிடைக்காத கடுப்பில் “ மூன்று நாள் அந்த பையன் கூட இருந்திருக்க ஒண்ணும் நடக்காமையா இருந்திருக்கும்…. அதான் அவசரமா தாலி கட்டிக்கிட்டியோ..?” என தேள் கொடுக்காக வார்த்தைகளை கொட்ட,

இவ்வளவு நேரம் அமைதியாய் தன்னை கட்டுப்படுத்தி பொறுமையாய் இருந்தவள் கடைசியாக அவர்கள் பேசியதை கேட்ட்தும் கண்களில் முணுக்கென்று கண்ணீர் எட்டி பார்க்க,

“ஏன் ஒண்ணும் நடக்கலைனு சொன்னா நடத்தி வைக்க போறீங்களா..?” என்ற குரலில் மூவரும் திரும்ப அங்கு இளா நின்று கொண்டிருந்தான்.

தன்னை அன்னை சென்றதும் யோசித்தவன் “தப்பு செய்துவிட்டோம். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தனுவை தன்னுடன் அனுப்புமாறு கேட்கலாம். செய்த தப்பை திருத்த முயற்சிக்கலாம்” என்ற முடிவோடு கிளம்பி மண்டபத்திற்கு வந்தான்.

உள்ளே நுழைந்தவனின் கண்கள் தனுவை தேட, ஓரத்தில் அவள் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அருகே வந்தவனின் காதில் அந்த இரு பெண்மணிகளும் பேசியது விழ, அவர்களுக்கு பதில் குடுத்தான்.

அந்த இரு பெண்மணிகளும் யாரிவன் என்ற பார்வை பார்க்க, உரியவளோ அப்பட்டமான வெறுப்பை முகத்தில் காட்டினாள். அதை பார்த்ததும் கண்டு கொள்ளதவனாய் “ என்ன ஓல்டிஸ் இந்த லுக் விடுறீங்க… யாருனு தெரியலையா? இவ்வளவு நேரம் என்னையும் தனுவையும் பற்றி தான பேசிட்டு இருந்தீங்க” என்றவாறு தனு அருகில் சென்று நின்று கொண்டான்.

தனுவை கல்யாணம் செய்தவன் போலீஸ்காரன் என ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்ததால், இப்போது அவனை நேரில் கண்டதும் இயல்பான பயத்துடன் “சும்மா பேசிட்டு இருந்தோம் மாமா….” என்ற ரேஞ்சில் பவ்யமாக நின்றனர்.

“எங்க ஜோடி பொருத்தம் எப்படி..?” என்று அவர்களை நோக்கி கேட்க,

“அம்சமா இருக்கீங்க தம்பி…” என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்ய, தனக்கு மட்டும் சக்தி இருந்தால் பார்வையாலே எரித்துவிடும் அளவிற்கு கண்களில் அனல் வீச நின்றிருந்த தனுவை பார்த்து கண்சிமிட்டி விட்டு “எங்க மாமவை பார்த்துட்டு வந்து அப்புறம் உன்னை பார்க்குறேன் சின்னு” என்றவனாய் தாமோதரனை தேடி சென்றான்.

இவை அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த சஜனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. சூழ்நிலை கருதி அமைதியாய் இருந்தவன் தன் கோபத்தை இருக்கையின் கைப்பிடியில் ஓங்கி குத்தியவாறு குறைக்க முயற்சித்து கொண்டான்.  

சாப்பாட்டு பந்தியை மேற்பார்வையிட்டு விட்டு வெளியே வந்தவர், தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த இளாவை கண்டதும் புருவம் சுருக்கியவராய் நின்றுவிட,

அவர் அருகில் வந்தவன் “சார்..! என் மேல இன்னும் கோபமா இருப்பீங்கனு தெரியும்… ஆனா உங்ககிட்ட நான் தனியா பேசணும்…” என்று கூற,

“புதுசா என்ன பேச போறீங்க தம்பி… நீங்க பண்ணுன காரியம் எதுவரை கொண்டுவந்து விட்டிருக்கு பாருங்க…. சொந்தங்களுக்கு பதில் சொல்லி முடியலை” என்று சொல்ல,

“புரியுது சார்.. ஒரு ஐந்து நிமிஷம் எனக்காக ப்ளீஸ் சார்…. இங்க வேண்டாம் எல்லாரும் வந்துட்டு போய்ட்டு இருக்காங்க… வேற எங்கேயாவது..?” என சுற்றும் முற்றும் பார்த்தவனை கண்டு,

மகளின் வாழ்க்கை அல்லவா என்ன தான் சொல்கிறான் என பார்ப்போம் என்று நினைத்தவராய் அவனை அருகில் இருந்த அறைக்கு அழைத்து சென்றார்.

அறையினுள் நுழைந்துதும் அவரது கால்களில் விழ, திடீரென்று அவன் இவ்வறு செய்வான் என்று எதிர்ப்பார்க்காத தாமோதரன் பதறியவராய் “தம்பி..! என்ன பண்றீங்க எழுந்திருங்க..?” என்று கூறி அவனை எழுப்ப,

“என்னை மன்னிச்சிடுங்க சார்…? நான் பண்ணினது தப்பு தான்… அது எந்த அளவு உங்களை காயப்படுத்திருக்கும்னு என்னால உணர முடியுது… அதே மாதிரி நீங்களும் ஒண்ணு புரிஞ்சுக்கணும்…. நான் தனுவை உயிருக்கு உயிராய் நேசிக்குறேன்… ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை ஐந்து வருஷமா அவளோட நினைப்புல தான் உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன்… இந்த சூழ்நிலையில அவளுக்கு கல்யாணம் நிச்சயமாகும்னு நான் நினைக்கவே இல்லை…. தெரிஞ்சிருந்தா முதல்லயே உங்ககிட்ட வந்து பேசியிருப்பேன்…. அவ இல்லாம என்னால வாழ முடியாதுனு இருக்கப்போ இதை எப்படி தடுக்குறதுனு தெரியாம இந்த மாதிரி ஒரு காரியத்தை பண்ணிட்டேன்…. நான் பண்ணினது வேணும்னா முறையில்லாததா இருக்கலாம் ஆனா என் காதல் பொய்யில்லை சார்…. உங்க பொண்ணை உங்களைவிட என்னால நல்லா பார்த்துக்க முடியும் என்னை நீங்க நம்பலாம்…” என்றுவிட,

அந்த நேரம் எதையோ எடுக்கவென்று உள்ளே நுழைந்த அருண் இளாவை பார்த்த்தும் “நீ எதுக்குடா இங்க வந்த? இன்னும் என்ன பண்ணலாம்னு காத்துக்கிட்டு இருக்க..?” என்றவாறு அவனை பிடித்து உலுக்க,

“அருண் கையை எடுப்பா… வீண் பிரச்சனை வேண்டாம்… அந்த தம்பி மன்னிப்பு கேட்குறதுக்காக தான் வந்திருக்கு…” என்று சொல்ல,

“என்னப்பா நீங்களும் புரியாம பேசுறீங்க….? நெஞ்சை கீறீட்டு மருந்து போடுறேனு சொன்னா சரியாகிடுமா..? சொல்லுங்க…. வெளிய போடா…!” என்று இளாவின் கழுத்தில் கையை வைத்து தள்ள முயற்சிக்க,

“அருண் கையை எடுங்க நான் பிரச்சனை பண்ண வரலை. செய்ததுக்கு மன்னிப்பு கேட்டுட்டு தனுவை கூப்பிட்டு போகலாம்னு தான் வந்தேன்”

“ஓ அந்த ஆசை வேற இருக்கோ…? என் தங்கச்சியை உன்கூட அனுப்பி வைப்பேனு கனவு கூட காணாத… கல்யாண வீட்டுல தகராறு வேண்டாம்னு நினைக்குறேன்… ஒழுங்கு மரியாதையா போயிடு…”

பொறுமை இழந்தவனாய் “நீ அனுப்புனாலும் அனுப்பாவிட்டாலும் அவ என் பொண்டாட்டி தான்… அதை யாரலயும் மாத்த முடியாது…. அவளை எப்படி கூப்பிட்டு போகணும்னு எனக்கு தெரியாம இல்லை… இருந்தாலும் ஏற்கனவே உங்களை கஷ்டப்படுத்திட்டேன்… மறுபடியும் அதை செய்ய விரும்பாம தான் இப்போ போறேன்…” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

“அருண்..! என்னப்பா..? இது தனுவோட வாழ்க்கை அதை எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு பண்ண முடியாது…”

“ப்ளீஸ்…! இனி இதை பற்றி பேச வேண்டாம்… வேலை நிறைய இருக்கு..!” என்று விட்டு சென்றுவிட, தாமோதரன் தான் குழம்பி போனார்.

செனோரீட்டா வருவாள்.

 

Advertisement