Advertisement

அத்தியாயம் 13:

கவர்ந்து சென்றதால் நான்

ராவணன் இல்லையடி!

உன்னை தவிர யாரையும்

மனதால் நினைக்காத

தெரியாத ராமனடி நான்!

தாமோதரனிடம் இருந்து தகவல் வந்த அடுத்த நொடி சஜனும் அருணும் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்… இவர்களுக்கு தகவல் சொல்லிவிட்டு தாமோதரன் சிவப்பிரகாசத்திற்கும் தனுசா கிடைத்த விவரத்தை சொல்ல,

“அப்படியா ரொம்ப சந்தோஷம் சம்மந்தி… நீங்க வீட்டுல இருங்க நாங்க வர்றோம் சேர்ந்து போவோம்…” என்று கூற அவரும் சரி என்பதாய் தாமோதரனும் கூறினார்.

இவர்கள் அங்கு செல்ல, அதே நேரம் சஜனும் அருணும் அங்கு வந்து சேர்வதற்க்கு சரியாய் இருந்தது. அந்த வீட்டில் நுழைந்துது தான் தாமதம் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் ஓடி வந்து தந்தையை கட்டிக் கொண்டாள் தனுஷா.

அங்கு தன் அன்னையுடன் நின்றிருந்தவளை கண்ட அருண் “அனு” என முணு முணுத்துக் கொண்டான்.

கண்ணீர் சுரக்க இருவரும் நின்றிருந்த நிலை அங்கிருந்த அனைவரது மனதையும் கரைக்க, உரிமையோடு நெருங்கவும் முடியாமல், விலகி நிற்கவும் முடியாமல் அனலில் இட்ட புழுவைப் போல் துடித்துக் கொண்டிருந்தான் சஜன்.

ஒருவாறு தனுவை ஆசுவாசப்படுத்தி விட்டு, அங்கிருந்த சாலாவிடம் “ஏம்மா எங்க பொண்ணு எப்படி இங்க வந்தா? இவ்வளவு நாள் எங்க இருந்தா..? உங்ககூட இருந்தாளா அப்படினா நீங்க ஏன் அப்போவே தகவல் சொல்லலை..?” என  தாமோதரன் கேள்விகள் கேட்க,

தனுஷாவை கடத்தியது தன் மகனின் செயல் என்று எப்படி சொல்ல, என தெரியாமல் கைகளை பிசைந்த படி நின்றிருக்க, இப்படி ஒரு தர்மசங்கடமான நிலையில் தன்னை நிறுத்திவிட்டானே என மகனை நினைத்து வேதனை கொண்டது அந்த தாயுள்ளம்.

வீட்டின் முன் நின்ற கார்களை கண்டு புருவம் சுருக்கியவனாய் உள்ளே நுழைந்த இளா அங்கிருந்தவர்களை கண்டு குழப்பம் அடைந்தான் என்றால் அவர்களோடு இருந்த அன்னையை கண்டு பேரதிர்ச்சி அடைந்தான்.

ஒருவாறு சமாளித்து அடுத்த அடி எடுத்து வைக்கும் முன் சரமாரியாக கன்னத்தில் அறைந்தார் விசாலாட்சி. அவரது செய்கை அங்கு கூடியிருந்த அனைவருக்கும் முதலில் சற்று அதிர்வை ஏற்படுத்த, அதன் பின் அவர் கூறியதை கேட்ட பின், அங்கு ஒரு களேபரமே நடந்துவிட்டது.

அன்னை அடித்ததை நம்ப முடியாமல் கன்னத்தில் கை வைத்தவாறே “அம்மா!!!!” என்றழைக்க நா எடுக்க,

“ச்சீ.. உன் வாயால என்னை அப்படி கூப்பிடாத…! நீ இந்த மாதிரி ஒரு காரியம் செய்வனு நான் நினைச்சுக்கூட பார்க்கலை இளா…” என்றார்.

இதை கேட்டுக் கொண்டுருந்தவர்களுக்கு  ஒன்றும் ஒன்றும் இரண்டு என நடந்ததை உணர்ந்து கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. உணர்ந்த பின் இரு உள்ளத்தில் இளாவை கொன்று போடும் அளவிற்கு கோபம்  சுடர் விட்டுக் கொண்டிருந்தது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காலை சென்னை வந்திறங்கிய விசாலாட்சியும், அன்ன்யாவும் வந்துவிட்டதை அறிவிப்பதற்காக இளாவிற்கு அழைக்க, அது பயனற்ற அழைப்பாக அமைந்ததுவிட நேரே அவனது வீட்டிற்கு சென்றனர்.

கொஞ்ச காலம் முன்பு தான் குவாட்டர்ஸ் வசதியாக இல்லாததால் வேறு இடத்தில் வீடு பார்த்திருப்பதாக கூறியிருந்தான் இளா. அந்த வீட்டு முகவரியை ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்ததால் அவ்ர்களுக்கு வீட்டிற்கு செல்ல சிரமம் ஏதும் இருக்கவில்லை. ஒரு வழியாக அந்த முகவரிக்கு வந்து சேர்ந்தனர்.

அப்போது தான் சாவி இல்லை என்ற எண்ணமே வர என்ன செய்வது என யோசித்து நேரம் மின்சார மெயின் பாக்ஸ் அருகில் சாவி இருப்பது அனன்யாவின் கண்களில் பட எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் இளா வாங்கி வைத்திருக்க குளித்து ரெடியாகி தாயும் மகளும் காபி அருந்திக் கொண்டிருந்த போது மாடியில் இருந்த அறையில் இருந்து யாரோ அழைப்பது போன்று கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்.

“அம்மா! மாடியில ஏதோ சத்தம் வருது…”  என அனன்யா சொல்ல,

“ஆமா அனு… எனக்கும் கேட்குது.. வா பார்க்கலாம்..” என்றபடி மேலே செல்ல அந்த சத்தம் இன்னும் துல்லியமாக கேட்டது. அவசர அவசரமாக ஓடி சென்று பூட்டியிருந்த கதவின் பூட்டை உடைத்து திறக்க அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்த்து.

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த தனுவை ஓடி சென்று மாடியில் ஏந்திய விசாலாட்சி , அனுவிடம் கட்டை அவிழ்க்க சொல்ல அதுவரை தூரமாக நின்று கொண்டிருந்த அனு தனுஷாவின் அருகில் வரவும் அவளுக்கு குழப்பம் மேலும் அதிகரித்தது. தனுவிற்கு தான் அன்

அனன்யாவை தெரியாது அனுவிற்க்கு தெரியும் எனவே பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டாள்.

“அருணின் தங்கை நாளை மறுநாள் கல்யாணத்தை வைத்துக் கொண்டு இங்கு எப்படி அதுவும் இந்த நிலையில்” என்று நினைத்து பேயறைந்தார் போல் நிற்க,

“ஹேய் அனு என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க…? அவிழ்த்து விடு…” என்று தன் அன்னையின் அதட்டலில் விரைவாக செயல்பட்டாலும் மனதிலோ ஆயிரமாயிரம் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது.

அவளை விடுவித்து விட்டு கீழே அழைத்து சென்று விவரம் கேட்க அவள் சொன்ன தகவல் சாலா, அனு இருவரது தலையிலும் பேரிடியாக விழுந்தது. அதன் பின் தனுஷாவின் வீட்டிற்கு தகவல் சொல்லி வரவழைத்தனர். வீட்டின் உள்ளே கார் நுழையும் சத்தம் கேட்டதுமே அனன்யா அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள். அருணை பற்றி தான் அவளுக்கு தெரியுமே தங்கைகளுக்கு ஒன்று என்றால் தாங்க மாட்டான். இதில் தங்கையை கடத்தியது அண்ணன் என்று தெரிந்தால் அவ்வளவு தான் அவனை முகத்திற்கு நேராக பார்க்க முடியாது என அறிந்தவளாய் சூழ்நிலையை நினைத்து நொந்து கொண்டாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

விசாலாட்சி கூறி முடித்த அடுத்த நொடி இளாவின் சட்டையை பிடித்திருந்தான் அருண்.

“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணிருப்ப…? ஆனா உன்னை ஒரு விஷயத்துல பாராட்டணும்டா… இவ்வளவு களவானித்தனம் பண்ணிட்டு என்ன அழகா நடிச்ச..?” என்றவன் இளாவை பிடித்து உலுக்க, அவனோ யாரையோ சொல்வது போல் நின்றிருந்தான்.

“பேசுடா ராஸ்கல்… பேசு… ஏன் இப்படி செய்த? ஹம் சொல்லு..!” என்று கேட்க, அதற்கும் பதில் மௌனம் தான்.

“ஏன்ப்பா இப்படி பண்ணுன சொல்லு..? இந்த மூன்று நாளும் நான் தவிச்ச தவிப்பு உனக்கு புரியாது…? என் பொண்ணை கடத்தி எங்களை தவிக்க விட்ட உன்னை அப்படியே அறையணும்னு தோணுது…. மனசுல கோபம் பொங்குது… ஆனா அதை செய்ய இப்போ என் உடம்புலையும் மனசுலையும் தெம்பு இல்லை…” என தாமோதரன் சொல்ல,

இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சஜனுக்குமே கட்டுப்படுத்த முயன்ற பொறுமை காற்றில் பறக்க அடுத்த நொடி அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

அடுத்த அடி குடுக்க ஓங்கிய சஜனின் கையை பிடித்து தடுத்தவன் “வேண்டாம் சஜன்..! நான் பண்ணினது தப்புனு எனக்கு தெரியும். தெரிஞ்சுதான் வேற வழியில்லாமல் இதை செய்தேன்…. இது மன்னிக்க முடியாது தான்… நான் யார்கிட்டையும் மன்னிப்பை எதிர்ப்பார்க்கவும் இல்லை… அதுக்காக நீ என்னை என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நினைக்காதே..!” என்றபடி கையை உதற,

“சஜன் இந்த பொறுக்கிட்ட நமக்கு என்ன பேச்சு..? நமக்கு கல்யாண வேலை ஆயிரம் வேலை இருக்கு… போகலாம்…” என்று கூறி அவனை அழைக்க,

“யாருக்கு கல்யாணம்..?” என நக்கலாய் இளா கேட்க,

“ஏன்டா அப்படியொரு சந்தேகம் உனக்கு..? எனக்கும் தனுவிற்கும் தான். நான் தான் அவ கழுத்துல தாலி கட்ட போறேன்… அதை நீயும் பார்க்க தான் போற…!” என்று சஜன் கூறியதும்,

“ஹா ஹா குட் ஜோக்…! யார் பொண்டாட்டிக்கு யார் தாலி கட்டுறது…? அப்படி நினைக்குறது என்ன..? கற்பனை கூட பண்ணகூடாது… புரிஞ்சுதா?” என்று சொல்ல,

அனைவருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… இதில் சம்மந்தப்பட்டவளோ தன் கழுத்தை அவசரமாக தடவ கையில் மாட்டியதோ மாங்கல்யம். மனம் ஒரு நிலையில் இல்லாத போது கண் முன் நிற்பது கூட புத்திக்கு எட்டாது என்பது போல தன் கழுத்தில் மாங்கல்யம் இருப்பதை தனு உணரவே இல்லை காலர் வைத்த சல்வார் அணிந்திருந்ததால் மற்றவர் கண்ணிலும் அது தட்டுபடவே இல்லை.

பெரியவர்கள் சூழ அனைவரின் மனமும் நிறைந்திருக்க பொன்னாளில் நடைபெற வேண்டும் என நினைத்திருந்த திருமணம் நடந்ததோ இருட்டறையில் அதுவும் தனக்கே தெரியாமல் என்ன ஒரு கொடுமை!

தான் காதலித்தவளின் கழுத்தில் தாலி அதுவும் வேறு ஒருவனின் கையால்! இயலாமை கோபம் என ஒருங்கே சேர இளாவின் கழுத்தில் கையை வைத்து சுவரோடு சாய்த்த சஜன் “ ஹே யூ உன்னை மாதிரி ஒரு ரோக்கை என் லைஃப்ல நான் மீட் பண்ணதே இல்லை… நண்பன்னு நம்பி உன்னை தேடி வந்து உதவி கேட்ட என் முதுகுல குத்திட்டியே…” என்று கத்த,

“அவன் முதுகுல குத்தலை சஜன்… இது உன்னோட முட்டாள்தனத்திற்கு கிடைச்ச பரிசு…” என்ற தந்தையின் குரலில் இளாவின் கழுத்தில் இருந்து மெல்ல கையை எடுத்தவன் தந்தையை நோக்கி அடிபட்ட பார்வை பார்க்க.

“ஆமா சஜன் அது தான் உண்மை… தனுஷா காணாமல் போனதும் நீ என்ன பண்ணியிருக்கணும்..? என்கிட்ட விஷயத்தை சொல்லியிருக்கலாம்… சம்மந்தி வீட்டுல பொண்ணை காணவில்லை என்ற பதட்டத்துல எதை தின்றால் பித்தம் தெளியும்ன்ற நிலையில் இருந்திருப்பாங்க… ஆனா நீ ஏன் இப்படி கவனக்குறைவா நடந்துகிட்ட? நீயே தேட முயற்சி செய்திருக்க..? நல்ல விஷயம் தான் ஆனா தொலைஞ்சு போனது ஒண்ணும் பொருள் இல்லை தேடுவோம் கிடைக்கும் போது கிடைக்கட்டும்னு நினைக்க, காணாமல் போனது ஒரு பொண்ணு… தொழில்ல முன்னுக்கு வந்தா மட்டும் போதாது… எல்லா விஷயத்திலேயும் நெழிவு சுழிவு தெரிஞ்சிருக்கணும்…” என்றவர்,

இளாவை நோக்கி “தம்பி இவ்வளவு பொறுப்பான பதவியில இருக்கிற உங்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை…. சட்டம் படிச்ச நீங்களே அதை மீறும் போது மற்றவங்க எப்படி அதை மதிப்பாங்க சொல்லுங்க…? இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்த நீங்க ஏன் முன்னாடியே இதை பேசி புரிய வைக்க முயற்சிக்கலை..?”

“நீங்க கேட்பது நியாயம் தான்… ஆனால் இவளுக்கு என் காதலை புரிய வைத்து சம்மதம் வாங்க வேண்டும் என்றால் எனக்கு அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும்… அது கூட வாய்க்குமோ என்னவோ? அவளிடம் பேச வேண்டும் என்று தான் நினைச்சேன்… அன்று மட்டும் சஜன் தன்னுடடைய என்கேஜ்மென்ட் போட்டோவை காட்டியிரா விட்டால் தனுவை இழந்தே இருப்பேன்… காதலை காப்பற்ற இதை தவிர வேறு வழி தெரியவில்லை” என்று கூறியவன் ஒன்றை மட்டும் மறந்து போனான் அது அவன் காதலித்தானே தவிர அவளால் தான் காதலிக்கப் படவில்லை என்று!

“விருப்பமில்லாம கடத்திட்டு வந்து தாலி கட்டுவான்… நாம பேசாம போகணுமா..? தாலியை கழட்டி அவன் மூஞ்சியில எறி தனும்மா…” என்று அருண் கத்த,

“தாலி கட்டுன புருஷன் உயிரோட இருக்கும் போது எப்படி கழட்டுறானு நான் பார்க்குறேன்….” என்று பதிலுக்கு இளா பேச,

இளாவின் தாய் விசாலாட்சியோ “என்னடா தாலி கட்டுன புருஷன் புருஷன்னு அப்போது இருந்து பேசிட்டு இருக்க… எதுடா தாலி ம்ம் சொல்லு எது..? இதோ இந்த பொண்ணுக்கே தெரியாம கட்டிருக்கியே இதுவா? இரண்டு மனது ஒண்ணு சேரும் போது வெறும் கயிறுல கட்டுனா கூட போதும்டா… ஆனா ஒருத்தனோட ஆசை வெறிக்கு கட்டுறது எல்லாம் தாலி ஆகிடாது….” என்று கூற,

தன்னுடடைய காதலை பெற்றவளே ஆயினும் கொச்சைப்படுத்துவதை விரும்பாதவனாய் “அம்மா என்ன பேசுறீங்க..?”

“என்ன ஒரு வார்த்தை தப்பா சொன்னா ரத்தம் கொதிக்குதா? அப்படி தான மூன்று நாளா பொண்ணை காணாம அவங்களுக்கு துடிச்சுருக்கும்….? உங்க அப்பா இறந்த போது கூட அவர் இல்லையேனு வருத்தப்பட்டேனே தவிர இனி எப்படி வாழப்போறோமோனு நினைச்சது இல்லை..” என்றவர்

தன் அருகில் நின்றிருந்த மகளை இழுத்து வந்து அவன் முன் நிறுத்தி “உனக்கு அடுத்து இருக்காளே இவளை எப்படி கரை சேர்க்க போறேனோனு கூட வருத்தப்பட்டது இல்லை…. ஏன் தெரியுமா?  மகனுக்கு மகனா என் பொண்ணுக்கு தகப்பனா இருந்து நீ பார்த்துப்பனு நம்புனேன்…. நீ எப்படி அது மாதிரி நினைக்கலாம்னு செருப்பால அடிச்ச மாதிரி சொல்லிட்ட…. நம்ம வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்கு அதுக்கு இது மாதிரினா நீ சும்மா இருப்பியா” என்று கண்ணீர் உகுக்க,

“அம்மா என்னை மன்னிச்சிரும்மா தப்பான எண்ணத்தில் இப்படி செய்யலைமா… நான் அவளை உயிருக்கு உயிராய் நேசிக்குறேன்… அது ஏன் உங்க யாருக்கும் புரிய மாட்டேங்குது..?”

“உனக்கு தான் நிதர்சனம் புரியலை…. அந்த பொண்ணுக்கு உன் மேல அப்படி ஒரு எண்ணமும் இல்லைனு சொல்லும் போது நீ பண்ணினதுக்கு என்ன பேர்? நீயே சொல்லு…” அதற்கு இளாவிடம் பதில் இல்லை.

தாயும் மகனும் இங்கு உரையாடிக் கொண்டிருக்க, அனுவின் கண்களோ மானசீகமாய் அருணின் மன்னிப்பை வேண்டி நிற்க, ஒரு சுட்டெரிக்கும் பார்வையை அவள் மீது வீசிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான் அருண்.

“உன்னால பதில் சொல்ல முடியாது…. ஏன்னா இது தப்புனு மூளைக்கு உறைச்சாலும் உன் மனசுக்கு உறைக்கலை” என்றவர்,

“இந்த தம்பி நிலைமையை யோசித்து பார்த்தியா..? நாளை மறுநாள் கல்யாணத்தை வச்சுட்டு இப்போ நடக்காது தெரியும் போது எவ்வளவு மன உளைச்சல்…?” என்று கூற,

அப்போது தான் அங்கிருந்த அனைவருக்குமே நாளை மறுநாள் எப்படி சமாளிக்க போகிறோம் என்ற விஷயம் பூதாகரமாக தோன்ற,

கயல்விழியின் மனதில் அந்த விஷயம் மின்னல் அடித்தது. தாமதிக்காமல் தன் கணவரிடம் யோச்னையை சொல்ல அவருக்குமே அது சரியென்றே பட்டது.

“சம்மந்தி உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா தியாவை ஏன் சஜனுக்கு பேச கூடாது..?” என்ற நேரடியாக கேட்க,

“டாட்” என்ற சஜனின் அழைப்பை கேட்டு அவனை நோக்கியவர்,

“சஜன் பேசாம இரு… உன் இஷ்டத்திற்கு நீ முடிவு எடுத்ததெல்லாம் போதும்… நான் பேசிக்குறேன்… நீ கொஞ்சம் அமைதியா இரு” என்று கடிந்துவிட்டு,

“நீங்க சொல்லுங்க சம்மந்தி….” என்று சொல்ல, தாமோதரனுக்கோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.

அவர் அமைதி காக்க, அருண் தான் “சார் நான் என் தங்கச்சிகிட்ட பேசுறேன்” என்றபடி தியாவை தனியே அழைத்து கேட்க,அவளோ மௌனித்திருந்தாள்.

“தியா! இது உனக்கு அதிர்ச்சியா தான் இருக்கும்… இல்லைனு சொல்லலை கல்யாணத்தை பற்றி உனக்குனு ஒரு கனவு, எதிர்பார்ப்பு இருக்கும்…. இந்த விஷய்த்துல உன் முடிவு என்ன?  அக்கா இல்லைனா அந்த இடத்துல நானா? அப்படி எதும் நினைக்குறீயா..? உனக்கு விருப்பம் இல்லைனா வெளிப்படையா சொல்லிடு…” என்று கேட்க,

“உங்களுக்கு எது சரினு படுதோ அதையே செய்யுங்க…” என்ற வார்த்தையோடு முடித்துக் கொண்டாள்.

அவளின் சம்மதத்தை அருண் எல்லோரிடமும் சொல்லிவிட  தாமோதரனோ என்ன இது என்பது போல் பார்க்க அவர் அருகில் வந்தவன் “அப்பா..! சஜன் ரொம்ப நல்ல மாதிரிப்பா… அவரோட இருந்த இந்த மூன்று நாள்ல நல்லா தெரிஞ்சுக்கிட்டேன்… ஒரு குறை கூட சொல்லமுடியாது…. இப்படி ஒருத்தர் நம்ம வீட்டு மாப்பிள்ளையா கிடைச்சிருக்காரு அதுக்கு நீங்க சந்தோஷம் தான் படணும்…

இதுவே வேறவங்களா இருந்தா நம்ம தனுவையும் தப்பா பேசி நம்ம குடும்பத்தையும் அவமானப்படுத்தி இருப்பாங்க… ஆனா இவங்க ரொம்ப பெருந்தன்மையா நடந்துகிட்டாங்க நீங்களே பார்த்தீங்க தானே..? தியா கண்டிப்பா சந்தோஷமா இருப்பா… என்னை நீங்க நம்புறிங்க தானே..? நான் எடுத்த முடிவு மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா இதுக்கு சம்மதம் சொல்லுங்க…” என்று வீட்டின் மூத்தவனாய் தன் கருத்தை சொல்ல,

மகனது முடிவில் எப்போதுமே சரியாய் தான் இருக்கும் என்ற எண்ணம் தாமோதரனுக்கு உண்டு. எனவே அவரும் இனியாவது எல்லாம் நல்லபடியாய் நடக்கட்டும் என்று சம்மதம் சொல்லிவிட்டார்.

தியா சரி என்று சொல்லுவாள் என எதிர்பார்க்காத சஜனோ “ச்சை..! என்ன பொண்ணு இவ..? அக்காவை கல்யாணம் பண்ணறதா இருந்தானேனு கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாம உடனே சரினு சொல்லிருக்கா….” என்று முதன் முதலாக அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது.

நடந்ததை மாற்ற முடியாது அதற்காக நடக்க போவதையும் அதன் போக்கில் விட்டு விடாமல் சரிப்படுத்த முயற்சிக்கலாமே என அனுபவ  அறிவால் உணர்ந்தவர்களாய் பெரியவர்கள் இதை சுமூகமாக்கிவிட, சிறியவர்களின் மனதிலோ வேறு வேறு சிந்தனைகளில் கட்டுண்டு இருந்தார்கள்.

எல்லோரும் அங்கிருந்து கிளம்பலாம் என்பதாய் ஆயத்தமானதும் அங்கு நின்றிருந்த தனுஷாவின் கையை பிடித்த அருண் “அப்பா..! தனுவை கூட்டிட்டு போகலாம்… இனி என் தங்கச்சி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது…. இதற்கு மேல் இதில் யாரும் தலையிட தேவையில்லை…”  இழுத்துக் கொண்டு செல்ல முற்பட,

“ஹலோ மிஸ்டர்.அருண்..! இப்போ அவ என் வைஃப்… என்கூட தான் இருந்து ஆகணும்…. என்னை மீறி யாரும் அவளை இங்கிருந்து கூட்டிட்டு போக முடியாது… போகவும் விடமாட்டேன்” என்றவாறு அருணை நெருங்க,

அவனை தடுத்த சாலா “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசக் கூடாது… இதுவரை செய்து அவங்களை காயப்படுத்தினது போதும்…. முடிவு அவங்க எடுக்கட்டும்… அவங்களை போக விடு… இது என் மேல சத்தியம..!” என்க,

“அம்மா…!” என்ற இளாவின் அழைப்பு அவரது பார்வையில் தொண்டைக்கு நடுவே சிக்கி நின்றது.

செனோரீட்டா வருவாள்.

Advertisement